கனவு வாரியம்

இயக்குனர் அருண் சிதம்பரத்துடனான நேர்காணல்


கனவுகளை கட்டுப்படுத்தும் சமூகத்தில் கனவுகளை உருவாக்கம் செய்து பயன்படுத்தி முதன்முதலாக இந்திய அளவில் இரண்டு ரெமி விருதுகளையும், 7 சர்வதேச விருதுகளையும் , 15 ஹானர்ஸ்சும் இத்திரைப்படம் பெற்றுள்ளது. மின்சாரத்தை தற்சார்பாக தயாரிக்கும் கிராமத்து இளைஞனின் போக்கில் இயற்கை விவசாய தூண்டுகோலாகவும் திரைப்படம் அமைந்துள்ளது. சரியான பகடிகளை சரியான இடத்தில் பேசி சிரிக்க வைக்கவும் செய்தது. அறிமுக இயக்கம் குறித்தும் திரைப்பட உருவாக்கம் குறித்தும் இயக்குநரிடம் உரையாடியதிலிருந்து:


தமிழகத்தில் பல்வேறு பிரச்சனைகள் இருக்கும் பொழுது மின்வாரியப்பிரச்சனையை பற்றி பேச காரணமென்ன?

மக்கள் எந்தக் கதையுடன் ஒன்றிக்கொண்டு தங்களை ஒப்பிட்டுக்கொள்ள முடியுமோ அந்தக்கதை மக்களால் இரசிக்கப்படும். மக்களின் பிரச்சனையை பேசும்போதுதான், மக்களால் எளிதாக வரவேற்கப்படும். முதலில் நம்பிக்கை விதைக்கும் கதையை உருவாக்க நினைத்தேன். பிறகு அதில் புதியதாக எதை பேச முடியும்? விளையாட்டு, கல்வி அரசியல் போன்ற பலவற்றை பேச முடியும். இவையெல்லாம் கடந்த காலத்தில் திரைப்படங்களாக உருவாக்கப்பட்டிருந்தன. மேலும் முழுக்க முழுக்க அறிவியல் சார்ந்த திரைப்படங்கள் தமிழில் நான் அறிந்த வரையில் வெளி வரவில்லை. அறிவியலை வேறு வேறு கதைகளுக்கு பயன்படுத்தியுள்ளார்கள். ஆனால் அறிவியலை மையப்படுத்தி வெளிவரவில்லை எனத்தோன்றியது.

அறிவியல் சார்ந்து யோசிக்கும்பொழுது ஏதோவொரு கண்டுபிடிப்பை நோக்கியிருக்க வேண்டும். இந்த சமூகத்தின் அறிவியல் பிரச்சனை மின்வெட்டாக தெரிந்தது. அப்பொழுது மின்தட்டுப்பாட்டை சரி செய்ய ஒரு இளைஞன் புதிய முயற்சிகளை செய்கிறான் என கதையை உருவாக்கினேன்.

உதவி இயக்குனாராக பணிபுரியாத சாப்ளின், டோரண்டினோ போன்ற உலக இயக்குனர்களிடம் என்ன கற்றுக்கொண்டீர்கள்?

இவர்களைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். யார் எதை நினைத்தாலும் தேடித்தெரிந்து கொள்ள இயலும். வெளிப்படையாக விசயங்கள் கொட்டிக்கிடக்கின்றன. யாரிடமும் உதவி இயக்குனராக கற்றுக்கொள்ளக்கூடாது என கூறவில்லை. ஆனால், அப்படி கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. நான் திரைப்படம் எடுக்கவேண்டும் என முடிவு செய்யும்போது எனக்கென மனைவி குழந்தைகள் என குடும்பம் இருந்தது.
ஆரம்பம் முதல் இறுதிவரை உதவி இயக்குனராக ஒரு திரைப்படத்திற்கு வேலை செய்வதானால் முழுமையாக ஒரு வருடம் தேவைப்படும். அதற்குப்பிறகு தனியாக நான் படம் செய்யும் பொழுது அதற்கும் ஒரு வருடம் தேவைப்படும். ஒட்டுமொத்தமாக இரண்டு வருடங்கள் உதவி இயக்குனராக பணிபுரிய போதிய நேரம் இல்லை. அதுவரை சேமித்து வைத்திருந்த பணத்தை வைத்து குறுகிய காலத்திற்கு சமாளிக்கலாம். குடும்பச்சுமையை சமாளிப்பதும் கடினமாகும். அதனால் தனியே படம் செய்யக்கூடிய முடிவிற்கு வந்தேன்.

உலக திரைப்படங்களின் இயக்குனர்கள் மட்டுமல்லாமல் தமிழ் திரைப்படங்களிலிருந்தே நிறைய கற்றுக்கொள்ளலாம். நான் பார்த்த திரைப்படங்களின் ஒவ்வொரு இயக்குனருமே எனக்கு குருவாகத்தான் பார்க்கிறேன். ஏனேன்றால், அவர்கள் எப்படி படம் எடுக்கவேண்டும் அல்லது எப்படி படமெடுக்கக்கூடாது என கற்றுக்கொடுக்கிறார்கள். இன்னும் நான் கற்றுக்கொண்டே இருக்கிறேன், அது உலக திரைப்படங்களின் இயக்குனராக இருக்கலாம் அல்லது அறிமுக இயக்குனராக இருக்கலாம்.

மின்சாரப்பிரச்சனையும் இயற்கை விவசாயமும் இணையக்காரணமென்ன?
ஒரு கிராமத்து இளைஞன் மின்தீர்வை கொண்டுவர போராடுகிறான். இன்னொருபக்கம், நான் ஐடி வேலையைவிட்டு சினிவாற்கு வந்தது போல ஐடி-யை விட்டு விவசாயம் செய்யவரும் கதாபாத்திரம். இரண்டு கதாபாத்திரங்களையுமே அந்த ஊர்மக்கள் ‘கிறுக்கன்’ எனதான் வரையறுக்கும். என்னையும் கிறுக்கன் என்றுதான் கூறினார்கள். இவையாவுமே ஒன்றாக அமைந்ததால் வசனங்களும் சிரமமாக இருக்கவில்லை. கதைக்கு என்ன தேவையோ அதுதான் கதையில் இருக்கும். இதற்கிடையில் நிறைய சொலவடைகள் இருக்கும். ‘வேகாத சோத்துக்கு விருந்தாளி ரெண்டுபேரு’ போன்றவை.

ஒரு ஊரில் கதாநாயகன் மட்டும்தான் நல்லவனா? அவன்மட்டும் மாற்றம் வேண்டும் என நினைப்பவனா? யதார்த்த சூழ்நிலையில் அப்படியிருக்க வாய்ப்புகள் இல்லை. எல்லோருமா அவனுக்கு எதிராக இருக்க முடியும். வில்லன் என்பதும் சூழ்நிலையும் ஊர்மக்களின் உதாசீனப்படுத்துதலும்தான். அதனால் ஒருகதாபாத்திரம் ஐடி-யை விட்டு விவசாயம் செய்ய நினைக்கிறது. அந்த விவசாயம் சார்ந்த காட்சிகளுக்கும் தகவல் சேகரித்திருக்கிறேன். நிறைய விவசாயிகளை சந்தித்துள்ளேன். அதில் ஒருவரை இசைவெளியீட்டு விழாவிற்கும் அழைத்து கௌரவித்துள்ளோம்.

அறிவியல் செய்முறை பயிற்சியின்போது பன்னாட்டு குளிர்பானம் CoCo - Cola பயன்படுத்தப்பட்டது ஏன்?
கோகோ கோலா என்பது ஒரு வாயு. அதை மென்டோசுடன் சேர்க்கும் பொழுது என்ன மாதிரியான எதிர்வினை ஏற்படும் என்ற செய்முறைதான் அது. அதில் வரும் நுரை பார்ப்பதற்கு காட்சியாக, குழந்தைகளுக்கு பிடிக்கும் என்பதுதான் காரணமே தவிர வேறேதுவுமில்லை.

வட்டார சொலவடைகள் பயன்படுத்தப்பட்டது குறித்து?
இந்த சொலவடைகள் யாவுமே என் அப்பத்தா, கிராம மக்கள் என வளர்ந்த சூழ்நிலைகளிலிருந்து கேட்டவை. கதை என்னுடன் ஒன்றிப்போவதால் எனக்குள் இருந்த சொலவுகளும் (சொலவடைகள்) கதையுடன் சேர்ந்து கொண்டன. சிலபேர் இத்திரைப்படத்தில் பேசும் தமிழ் புதியதாக, கேட்காதது போல இருந்தது, ஒலிப்பதிவு ஒலிக்கலவையில் கூட வசனங்கள் வித்தியாசம் கொண்டுள்ளன என்றார்கள். ஆனால் எனக்கு அப்படி ஏதும் புதியதாக தெரியவில்லை.

இன்னொன்று நமது ஊரில் எல்லாவற்றுக்கும் பழமொழி இருக்கிறது. அப்பா வாத்தியாராக இருந்து மகன் சரியாக படிக்கவில்லையென்றால் 'வாத்தியார் பிள்ளை மக்கு' என்பார்கள். அதுவே மகன் நன்றாக படித்தால் 'புலி எட்டடி பாஞ்சா, குட்டி பதினாறடி பாயும்' என்பார்கள். அவரவர் தேவைகேற்ப பழமொழிகளை உருவாக்கிக் கொள்வதுதான்.

இக்கதையை எழுதி முடிக்கும்பொழுது காதல் கதாபாத்திரம் இப்படித்தான் இருந்ததா?
முதலில் எழுதிய கதாநாயகி கதாபாத்திரம் இப்படி இருக்காது. நான் முதலில் எழுதிய திரைக்கதையில் காதல் காட்சிகள் குறைவு. திரைப்படத்திலும் குறைவுதான். முதல் திரைக்கதையில் கதாநாயகி பாத்திரம் திரைப்படத்தின் இடைவேளையிலேயே முடிந்துவிடும்.

அதற்குபிறகு சினிமாவை ரசிக்கும் சராசரி பார்வையாளர்களை அழைத்து கதையைச் சொல்லும் போது எந்த இடத்தில் ரசிக்கிறார்கள், எங்கே சோர்வடைகிறார்கள், கொட்டாவி விடுகிறார்கள் என்ற நுணுக்கங்களை சேகரித்தபோது கதாநாயகி இடைவேளையில் முடிவடைந்தால் பார்த்த முகங்களை பார்த்தே கதையை சோர்வடைய வைக்கும். பெண்கள் கதாபாத்திரமே இரண்டுதான். அம்மா மற்றும் கதாநாயகி. அதனால் கதையின் போக்கிற்காக இரண்டாம் பாதியில் பாத்திரத்தை புதியதாக எப்படி பயன்படுத்த முடியுமென யோசித்து சேர்க்கப்பட்டது.


மின்தட்டுப்பாடு, மின்சாரவாரியம் குறித்து சேகரித்த தகவல்கள் என்ன?

அடிக்கடி அல்லது வருடமொரு முறை நான் கிராமங்களுக்கு செல்வேன். அங்கே ஏற்படும் பிரச்சனைகளை கிராம மக்களிடம் விசாரிக்கும்பொழுது மின்தட்டுப்பாட்டைப்பற்றி கூறுவதுண்டு. கிராம மக்கள் அளவிற்கு இல்லையென்றாலும் நானும் மின்தட்டுப்பாட்டை சந்தித்துள்ளேன். 'போன மாசம் கரண்டு இருந்துச்சி கட்டுணோம், இந்த மாசம்தான் கரண்டேயில்லயே அப்றம் எதுக்கு மாச மாசம் ஆயிரம் ரூவா கட்டணும்' என்ற வசனம் சென்னையில் பேசப்பட்டதுதான்.

ஏதாவதொருநாள் மின் வெட்டு இல்லையென்றால் விசாரிக்கும்போது அமைச்சர் வீடுகளில் திருமணம் என்று தெரிய வரும். அப்படி எதிரெதிராக சந்தித்த விசயங்களில் தெரிந்து கொண்டேன். அதைத்தவிர நிறைய EB நிலையங்களுக்குச் சென்றேன், EB ஆய்வாளர்கள், வேலை செய்பவர்களென சந்தித்து பேசி நிலவரங்களை சேகரித்தேன்.

மின்சாரவாரியத்தை குறித்த தவறுகளை அப்படியே காட்சிப்படுத்தியிருந்தால் படம் வேறொரு பார்வையை தந்திருக்குமே?
இல்லை. என்னுடைய பார்வையில் நான் செய்தது சரியே. மாற்றத்திற்காக திரைப்படம் எடுப்பது வேறு. அப்படி எடுக்கும்பொழுது திரைப்படம் வெளிவரவேண்டும். ‘ஈபி ஆபிஸ்ல வந்து கரண்டு கேக்கறாங்க’ என்ற வசனத்தை கேட்டு நிறைய பேர் சிரித்தார்கள். திரைப்படத்தை வரிவிலக்கு மற்றும் தணிக்கை செய்யும்போது அவர்களும் ரசித்து சிரித்தார்கள். இதே வசனத்தை வேறு கதைகளத்தில் பயன்படுத்தியிருந்தால் தணிக்கை செய்யப்பட்டிருக்கும்.

திரைப்படத்தில் பேசாத எதார்த்த நிலவரங்கள் ஏராளமுள்ளன. அதை அப்படியே திரைப்படத்தில் பேசினால் பிரச்சனைகள் வரும். மின்சார பிரச்சனையை பேசும்போது உணர்ச்சிவசப்பட சூழ்நிலையிருக்கும். எதை பேசலாம் எதை பேசக் கூடாதென தீர்மானிக்க வேண்டும்.

திரைப்படம் பேச வருவது இங்கே யாரும் யாரையும் குறை கூற வேண்டாம் என்பதுதான். அரசை சார்ந்து வாழ தேவையில்லை. நமது தேவைகளை நாமே பூர்த்தி செய்துகொள்ள வேண்டுமென்பதே படம் பேசுகிறது. இதில் மற்ற விசயங்களை போட்டு குழப்பவேண்டியதில்லை. இந்தியா இப்படித்தான் இருக்கும், அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அது ஒரே நாளில் அமெரிக்கா ஆகவிடவேண்டும் என ஆசைப்படுவது என்பது முட்டாள்தனம்.

'தொழிற்சங்கம் பேசுது' என்ற வசனம் எதை சொல்ல வருகிறது?
இப்பொழுதிருக்கிற அரசு அலுவலகங்கள் எப்படி வேலை செய்கிறது என்பதை வெளிக்கொணரும் காட்சி அது.
பொதுவாக திரைப்படம் எல்லா விசயங்களையும் தொட்டுச் சென்றிருக்கும். முன்பெல்லாம் பணிநேரம் ஆரம்பிக்கும் போது கையெழுத்து போட்டுவிட்டு உள்ளே செல்வார்கள். இப்பொழுது பயோமெட்ரிக் அமைப்பு வைக்கப்பட்டுள்ளது. எத்தனை மணிக்கு உள்ளே வருகிறோம், வெளியே செல்கிறோம் என குறித்துக்கொள்ளும். அதற்கேற்றாற்போல் சம்பளம் பிடிக்கப்படும். இதற்கெதிராக தொழிற்சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றன. சில விசயங்கள் அரசு நியாயமாக பேசும்போதும், எதற்கு போராட்டம் செய்யவேண்டும் வேண்டாம் என்ற தெளிவு வேண்டும். சங்கங்களை வைத்து சிலரால் எதிர்வேலைகளும் செய்யப்படுகிறது. சங்கங்களால் சில விசயங்கள் சரியாகவும் நடக்கிறது தவறாகவும் நடக்கிறது.

திரைக்கதை உருவாக்கத்தில் உங்களது அனுபவம் எப்படியிருந்தது? உதவிய புத்தகங்கள்?

திரைக்கதை சார்ந்து புத்தகங்கள் எதுவும் படிக்கவில்லை. பத்து வருடங்களுக்கு முன்பு சுஜாதா எழுதிய திரைக்கதை எழுதுவது எப்படி? போன்ற சில புத்தகங்களை வாசித்திருக்கிறேன். திரைப்படங்கள் பார்ப்பதுதான். பார்வையாளனாக இந்தபடம் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுமா? படாதா? என்பது என்னால் தீர்மானிக்க முடிந்திருக்கிறது. மக்கள் எந்த இடத்தில் சிரிக்கிறார்கள், எந்த இடம் சுவாரஸ்யமாக இருக்கிறது போன்றவற்றை நேரடியாகப் பார்த்து தெரிந்து கொள்ள முடியும். என்னைப் பொறுத்தவரை ஒரு திரைப்படம் சுவராஸ்யமாக பேசவந்த விசயங்களை பேசவேண்டும். வெறும் விசயங்களை வைத்து நிரப்பினாலும் மக்களிடம் போய் சேராது.

பின்தயாரிப்பில் நிறைய வலுசேர்க்கமுடியும். முன்தயாரிப்பில் என்ன படபிடிப்பு செய்ய வேண்டும் என்பதில் தெளிவு வேண்டும். படபிடிப்பில் ஒவ்வோரு நொடியும் பணம்தான். தெளிவாக எதை எழுதினோமோ அதை தெளிவாக எடுக்க வேண்டும். படப்பிடிப்புத்தளத்தில் குழப்பங்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற தெளிவிருந்தது.

பெரும்பாலும் அப்பாவை பெரும்வில்லனாக காட்டித்தான் திரைப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கும். இந்த கதாபாத்திரம் நண்பனைப்போல அமைய அப்பாவும் காரணமா? அம்மா கதாபாத்திரம்?

நிஜமாகவே அப்பா அப்படி இல்லையென்றால் இந்த திரைப்படமே எடுத்திருக்க முடியாது. நான் குறும்படம் எடுத்ததில்லை. யாரிடமும் உதவியாளராக வேலை செய்யவில்லை. என் மீதான நம்பிக்கையில் அப்பாவும் அண்ணனும் திரைப்படம் எடுத்தார்கள். எனக்கும் என் மீதான நேர்மறை விசயங்கள் எதிர்மறைவிசயங்கள் தெரியும்.
என்னுடைய அம்மா திரைப்படத்தில் வருவதுபோல் அல்ல. சுவராஸ்யத்திற்காக உருவாக்கியதுதான். "அரசாங்கத்தாலயே முடியலயாம் சுண்டெலி சிலம்பம்புடிச்சி யானைய செயிக்க போகுதாம்" போன்ற வசனங்கள் தன்னுடைய மகனின் மீதிருக்கும் அக்கறையின் வெளிப்பாடுதான்.

இக்கதை திரைக்கதையாக மாற்றும் பொழுது திரைப்படமாக உருவாக்க எடுத்த முயற்சிகள் குறித்து?

இந்த திரைப்படம் ஒரு எளிமையான திரைக்கதைதான். வேகமான திருப்பங்கள் முடிச்சுகள் இல்லாமல் நேரடியான கதை. ஆனால் திரைக்கதையில் புதிய யுத்திகள், புதின வசனங்கள், காட்சிக்கு காட்சி கொண்டுசென்ற முறை வித்தியாசமாக இருக்கும். உதாரணமாக, இந்த கதையில் எந்திரம் வாங்க 30,000 ரூபாய் தேவைப்படுகிறது. பொதுவாக அதை சம்பாதிக்க எந்த நிறுவனத்திடமும் வேலைக்கு போகலாம், பட்டறைக்கு போகலாம், பையை தூக்கிக்கொண்டு கிராமத்திலிருந்து நகரத்திற்கு வரலாம்.பொதுவாக ஒரு நான்கு மாத சம்பளத்தில் 30,000 ரூபாய் சம்பாதித்து அந்த எந்திரத்தை வாங்கி ஆராய்ச்சியை தொடர முடியும். ஆனால் கதாநாயகன் அப்படிச் செய்யவில்லை. அவன் புத்திசாலி. கையில் இருப்பதை வைத்துக்கொண்டு எப்படி ஜெயிக்கலாம் என யோசிப்பான். யாராவது பண உதவி செய்திருந்தால், கடன் கொடுத்திருந்தால் அது வழக்கமான கதை. அவன் தொழிலை ஒட்டிய தொலைபேசியில் தங்கம் இருக்கிறது. அதன் மூலம் எந்திரத்தை வாங்குகிறான். பார்வையாளர்களுக்கு அந்தபணம் எப்படியும் கிடைக்கும் என தெரியும் ஆனால் எப்படி சாம்பதிக்க வைப்பது என்பதுதான் புத்திசாலித்தனம். இது உண்மையா என நிறைய பேர் கேட்டிருக்கிறார்கள். இந்த திரைப்படத்தில் காட்டப்பட்டவையனைத்தும் உண்மையே. இதற்கான செய்திகளெல்லாம் எங்கேயோ எப்பவோ எதற்காகவோ தேடியிருப்போம் அவை இந்த இடத்தில் தேவைப்படும்.

ஒளிப்பதிவு, ஒலியமைவு, இசை எல்லாவும் அவரவரின் சுதந்திரத்திலிருந்து எனக்கு தேவையானதை பெற்றுக்கொண்டவையே. இந்த காட்சி கதைக்கு எப்படி தேவைப்படும் என கலந்துரையாடி பிறகு அதில் தேர்ந்தெடுத்து பதிவாக்கப்பட்டது.


பள்ளியை விட்டு வந்த பிறகு நூலக அறிவுதான் எழில் கதாபாத்திரத்தை உயர்த்துகிறது. பள்ளிகளை விட நூலகம் சிறந்தது என குறிப்பிடலாமா?

நான் சொல்ல வருவது என்னவென்றால் பள்ளிக்கூடங்கள் சரியில்லை என்பதை விட பள்ளிக்கூடங்கள் இப்படி இருக்கலாம் என்பதுதான். பள்ளிக்கல்வி சுவாரஸ்யமாக சொல்லித்தந்தால் மாணவர்களுக்கு ஆழமாக பதியுமே என்பதுதான். அதை செய்முறையோடு பயில வைக்கலாம். இன்று வலைதளங்களில் வானொலி முதல் தொலைக்காட்சி வரை எவ்வாறு இயங்குகிறது எப்படி பழுதுபார்ப்பது என காணொளிகள் உள்ளன. அதை பள்ளியில் ஒவ்வொரு மாணவனுக்கும் கையில் கொடுத்து அதனை பயிற்றுவிக்கலாமே. கதாநாயகன் நூலகத்தில் உள்ள புத்தகங்களைப் படித்து மின்சார செய்முறைகளை செய்துபார்க்கும் பொழுது இப்படியெல்லாம் சொல்லிக்கொடுத்திருந்தால் பள்ளியை விட்டே வந்திருக்க மாட்டேனே என்பான். பள்ளிக்கூடத்தை விடு என்று சொல்லவில்லை. இதைப் பார்த்த ஆசிரியர்கள் இதுபோன்ற செய்முறைகளில்தான் பயிற்றுவிக்கிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

அறிவியல் சார்ந்த பாடலொன்றில் வரும் செய்முறைகளை சில பேர் அமெட்சுராக இருக்கிறது என்றார்கள். அவர்கள் பெரும்பாலும் சிபிஎஸ்சி கல்வித்திட்டத்தில் படித்திருக்கலாம். ஆனால் பொறியியல் படித்து முடிக்கும் வரையிலுமே நான் புரிந்துபடிக்கவேயில்லை. எம் எஸ் படிக்கும்போதுதான் புரிந்து படித்தேன். நான் மெட்ரிக்குலேசனில் படிக்கும்போதும் புரிந்து படிக்கவில்லை. வேண்டுமானால் 15 % புரிந்து படித்திருக்கலாம். படிக்கும் போதே மூளையில் காட்சிப்படுத்தி உடனே செயல்படுத்தி பார்க்கும் வாய்ப்பில்லை. இப்பொழுது அதன் செயல்பாடு புரிகிறது. ஆனால் அப்பொழுது புரியவில்லை. செய்முறைக்காட்சிகள் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்திருந்தது.

இதில் வரும் சிலகாட்சிகள் காட்சி வழியாகவே உணர்வை சிறப்பாக கடத்தியிருக்கும். உதாரணமாக மீண்டும் ஆராய்ச்சி தொடங்க வேண்டும் என போகும் பொழுது தடையாகப் போட்டிருந்த கோட்டை அழித்துக் கொண்டிருப்பார். அதைப் பற்றி?
சினிமா காட்சி வகைப்பாடுதானே. அதனால் அந்த இடங்களில் வசனமே வைக்கவில்லை. திரைக்கதை எழுதும் போது அப்படித்தான் எழுதியிருந்தேன். அதேபோல இறுதிகாட்சியிலும் வசனங்கள் வைக்கக்கூடாதென்று நினைத்தேன். வசனங்களே அந்த இடத்திற்கு தேவையில்லை என்று நினைத்தேன். ஒருசில வசனங்கள் மட்டும் இருக்கும். அதுவும் அந்த காட்சிக்கு தேவையில்லாததுதான். 'எம்புள்ளேய என்னமோ நினைச்சேன், சாதிச்சிட்டான்' என்ற வசனமும் அம்மாவின் தன் உணர்தலுக்காக மட்டுமே வைக்கப்பட்டது.

இக்கதையில் இராட்டினம் முக்கிய பங்கு கொண்டுள்ளது. அதைப் பற்றி?
கதாநாயகன் செய்யும் காற்றாலையின் மூலம் ஊருக்கே வெளிச்சம் வருகிறது என்பதற்காகத்தான் இராட்டினம் வைக்கப்பட்டிருந்தது. அதையே அவன் வீட்டிற்கு மட்டும் வெளிச்சம் வருவதுபோல காட்டியிருந்தால் மிகவும் எளிமையாக இருந்திருக்கும். அந்த இராட்டினத்தால் திருவிழாவே நடக்காதது போல ஊர்மக்கள் பேசுவார்கள். அதே ராட்டினத்திற்கு தனது காற்றாலையின் மூலம் இயங்க வைப்பது கதையை ஊக்கப்படுத்தும் காரணமே!

இக்கதையில் நடிக்க கூத்துப்பட்டறை என்ன மாதியான பயிற்சிகளை தந்தது?
இந்தக்கதை யார்வேண்டுமானாலும் நடிக்கிற கதைதான். தன்னை மெருகேற்றி நடிக்கவேண்டிய தேவையிருக்கவில்லை. நீங்கள் நீங்களாக இருந்தாலே கதைக்குப் பொறுத்தமாக அமையும். இந்த கதையே என்னைச் சார்ந்து இருந்ததினால் சுலபமாக இருந்தது. நான் நடிக்கவேண்டுமென நடிக்காமல் இருந்தால் போதும் என்பதுதான் கூத்துப்பட்டறையில் நான் தெரிந்து கொண்டவை.

முதல் பகுதியில் பள்ளியை விட்டு நூலகம் செல்லும் காட்சி, இறுதியில் மீண்டும் பள்ளிக்கே திரும்ப காரணமென்ன?

அந்த பள்ளியில் வைக்கப்பட்டிருந்த கட்டகட்டமான கரும்பலகையின் எல்லா கட்டங்களிலும் குழந்தைகள் தங்களது கனவுகளை எழுதியிருக்கும். ஒருகுழந்தைக்கு எழுத இடமில்லை. அக்குழந்தை நினைத்திருந்தால் அதில் ஒரு கட்டத்திற்குள்ளேயே கோடிட்டு எழுதியிருக்கலாம். ஆனால் அந்த குழந்தை எதுவும் எழுதாத சுவர் கரும்பலகையில் 'பசி ஒழிய வேண்டும்' என்று எழுதுகிறது. சுவர் கரும்பலகையில் எப்படிப்பட்ட கற்பனையையும் விரிவாக எழுதலாம் வரையலாம். கனவு வாரியம் என்ற பெயர் மின்சார கனவைமட்டும் கொண்டதல்ல. அதைத் தாண்டி பெரிய கனவான பசி ஒழிய வேண்டும் என்ற கனவை விதைக்கிறது. வட்டியில்லா வங்கி வேண்டும், ஆணழகனாக வேண்டும், ஒழுகாத வீடு வேண்டும், பத்தாயிரம் ரூபாயில் டிராக்டர் வேண்டும் என ஒவ்வொரு தேவையையுமே கனவாக எழுதப்பட்டிருக்கும்.


இத்திரைப்படத்தினை உலகளவில் பல விழாக்களுக்கு அனுப்பிய போதும், இந்திய விழாக்களுக்கு அதிகம் அனுப்பாதது ஏன்?
இப்படம் முதல் இந்திய படமாக இரண்டு ரெமி விருதுகள் வாங்கியுள்ளன. ஏழு சர்வதேச விருதுகள், பதினைந்து ஹானர்ஸ் வாங்கிருக்கிறது. சர்வதேச அளவில் ஒரு அறிமுக இயக்குனருக்கு இவ்வளவு ஊடக வரவேற்பும் விருதுகளும் கிடைத்ததில்லை. வார்னர் ப்ரதர்ஸின் முதல் தென்னிந்திய வெளியீடு இது. இதன் வரவேற்பை நான் எதிர்பார்க்கவில்லை. மொழி தெரியாமல் பார்த்தவர்கள் கூட நிறைய பாரட்டியுள்ளார்கள். இவையாவுமே ஆண்டவனுடைய அருள்தான்.


Goverment of india நடத்தும் National Science Film Festival -லில் Special Jury விருதை இத்திரைப்படம் பெற்றுள்ளது. உலக சர்வதேச விருதுகளுக்கு சென்றபிறகு இங்கு வந்தால் அங்கீகாரம் கிடைக்கும் என்பதால் அனுப்பவில்லை. உலக விழாக்களுக்கு போய் வந்த பிறகு திரைப்பட வெளியீடுகளின் பணிகளால் இங்குள்ள பலவிழாக்களுக்கு அனுப்பவில்லை.

மின்சார தயாரிப்பு குறித்து சேகரித்த தகவல்கள் என்ன? படத்தில் காற்றாலை மூலம் தயாரிக்க காரணமென்ன?

மணல், நீர் காற்று போன்றவைகள் போல எண்ணற்ற வகைகளில் மின்சாரம் தயாரிக்க முயற்சிகள் நடத்தப்பட்டுவருகிறது. இரண்டுமணி நேர சைக்கிள் பெடல் செய்வதன் மூலம் ஒரு வீட்டிற்கு தேவையான மின்சாரத்தைப் பெறலாம் என நண்பர் ஒருவர் படம் திருவிழாக்களுக்கு போய் வந்த பிறகு கண்டுபிடித்தார். இங்கே மணலின் விலையதிகம். தண்ணீரைப் பொறுத்தவரை ஏற்கனவே நமது ஊரிலேயே தண்ணீர் பிரச்சனை உள்ளது. அதனால் காற்று ஒன்றுதான் இலவசமாக கிடைக்கக்கூடியது. கதையில் கிராமத்தின் ஆற்றல் வாரியமாக காற்றை மையமாக எடுத்துக்கொண்டேன். மேலும் ஒரு மின் காற்றாலை செய்ய ஒரு கோடி முதல் ஒன்றரை கோடி வரை ஆகும். ஆனால் கதைப்படி 30 லட்சத்திலும் காற்றாலை செய்யக்கூடிய சாத்தியங்களும் உள்ளன. அதேபோல காற்றலையின் பின்புறம் சூரிய சக்தி சேமிக்கக்கூடிய கலன்களை பொறுத்தி ஒரே தண்டில் இருபுறமும் மாறி மின்சாரம் பெறலாம் என்பது படப்பிடிப்புக்கு பிறகு தெரிந்த தகவல்.திரைக்கதையிலும் திரைப்பட உருவாக்கத்திலும் நிகழ்ந்த தவறுகள் என்ன?
நூறு சதவீத திரைப்படம் என்ற ஒன்று இல்லவேயில்லை. எல்லா படங்களிலும் இருப்பது போல இந்த படத்திலும் நிறைய தவறுகள் உள்ளன. இது எல்லாமே முழுமையான சினிமாவை கற்றுக்கொள்ளக்கூடிய முதல்படி தான். இந்திய அளவில் பேசப்படக்கூடிய இயக்குனர்கள் இயக்கும் இன்றைய படங்களிலேயே நிறைய தவறுகள் இருக்கின்றன. அவர்களுக்கு தெரியாத விசயங்கள் இல்லை. ஆனாலும் தவறுகள் உள்ளன. கனவு வாரியம் தவறுகளே இல்லாத படமென்று சொல்லவில்லை. இதை பார்ப்பவர்களை ஊக்கப்படுத்தும், கனவுகளை துரத்த வேண்டும் என்ற நம்பிக்கையை விதைக்கும். என்னுடைய பார்வையில் எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் இதுவரை செய்தவையே மிகப்பெரியசாதனை. நெட்ப்ளிக்ஸ் சில இந்திய மற்றும் தமிழ் படங்களை மட்டுமே வாங்குகிறது. அதில் கனவு வாரியமும் ஒன்று. இன்றும் கனவு வாரியத்திற்கான பாராட்டுகள் வந்த வண்ணமே உள்ளன. பள்ளிக்குழந்தைகளுக்கு இத்திரைப்படம் போட்டுக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், இங்குள்ள குடும்ப மக்களுக்கும் குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்குமே படம் பிடித்திருந்தது. வாழ்க்கையில் நானும் இதைப்போல சாதிக்கணும் என்ற உந்துதலையும் இந்தப்படம் வழங்கியிருக்கிறது. ஒரு பிரிவினருக்கு படம் திருப்திப்படுத்தவில்லை. அதுவும் எனக்குத்தெரியும். மாஸ் படங்களை எதிர்பார்க்கும் சாராருக்கு இந்த படம் பிடிக்கவில்லை. எல்லோரையும் திருப்திபடுத்தக்கூடிய படத்தை யாராலும் தரமுடியாது. 80% மக்களுக்கு படம் பிடித்திருந்தால் அதுவே மிகப்பெரிய சாதனை.