கினோ 2.0

க்றிஸ்டோபர் கென்வொர்தி

சினிமா உருவாக்கத்தை, இயக்குனரின் பார்வையிலிருந்து அணுகிய ’கினோ’ புத்தகம் பரவலான வாசகர்களைச் சென்றடைந்திருக்கிறது. எனவே, அதன் தொடர்ச்சியாக, ’கினோ 2.0’ என்ற தலைப்பின்கீழ், க்றிஸ்டோபர் கென்வொர்தியின் ‘மாஸ்டர் ஷாட்ஸ்’ புத்தகத்தின் இரண்டாம் பாகம் பேசாமொழி இணையதளத்தில் தொடராக வெளிவரவிருக்கிறது. 
 உரையாடல் காட்சிகளை எந்த விதத்திலெல்லாம் படமெடுக்க முடியும் என்பதைத்தான் இந்த இரண்டாம் பாகம் தன் கருப்பொருளாக எடுத்துக்கொண்டிருக்கிறது.

கேமராவைவையும், நடிகர்களையும் எப்படி இயக்க வேண்டும் என்பதில்தான், ஒரு திரைப்பட இயக்குனரின் முழு வெற்றியும் அடங்கியிருக்கிறது. அதைத் தெளிவுற விளக்குவதில்தான் இப்புத்தகம் தனித்து நிற்கிறது. ஒரு காட்சியில் துவக்கம், நடுப்பகுதி, இறுதி எல்லாம் இருப்பது போலவே, ஒரு உரையாடல் பகுதியிலும் துவக்கம், நடுப்பகுதி, இறுதி, சஸ்பென்ஸ், எதிர்பார்ப்பை அதிகரித்தல், அழுத்தத்தைக் கூட்டுதல் என எல்லாமும் அடங்கியிருக்கிறது. 

அடிப்படையில் சினிமா ஒரு காட்சி மொழி. அதில் உரையாடல் பகுதிகளுக்கு இரண்டாம் பட்சமான இடமே! ஏனெனில், காட்சி மொழி உலகளாவிய மொழியாக இருப்பதனால், உலகில் எந்த மூலையில் இருக்கும் மொழி புரியாதவரும், அந்தப் படத்தைப் பார்த்து புரிந்துகொள்ள முடியும். அதே நேரத்தில், ஒரு படம் என்பது முழுக்க முழுக்க உரையாடல் பகுதிகளைத் தவிர்த்து, காட்சியாக மட்டுமே நகர்ந்துகொண்டிருக்க வேண்டுமா? என்றால் அதுவும் ஒரு கட்டத்தில் செயற்கையாகவே இருக்கும். ஆனால், இதில் ஒரு விஷயத்தை மட்டும் மிகவும் உறுதியாகச் சொல்லலாம். அதாவது உரையாடல் பகுதியும் காட்சி ரீதியாக இடம்பெற வேண்டும். அந்தப் புரிதலை இந்தப் புத்தகம் நிச்சயமாக உங்களுக்கு வழங்கும். ஒரு திரைப்படத்தை முழுக்க முழுக்க உரையாடலின் துணைகொண்டு நகர்த்திச் செல்கிற இயக்குனர்களும் இருக்கிறார்கள். முழுக்கவும் காட்சி ரீதியாக நகர்த்திச் சென்று கதை சொல்கிற இயக்குனர்களும் உள்ளனர். இதில் எது சரி? எது தவறு? என்பது அவரவர் விருப்பம். கலைகளிலேயே மிகவும் இளைய கலை, சினிமாதான். எனவே, அதனை ஒவ்வொருவரும் தனக்கேற்றபடி பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதில், ஒருவரை இந்த வழியில்தான் படம்பிடிக்க வேண்டும், என்று நமது கருத்தை அவர்மேல் திணிக்க முடியாது. ஆனால், படத்தைக் காட்சிகளால் நகர்த்துபவர்களும், உரையாடல்களால் நகர்த்துபவர்களும் ஏற்றுக்கொண்ட ஒரு உண்மை உள்ளது. அது என்னவெனில், உங்கள் படம் பரவலான பார்வையாளர்களைச் சென்றடைய வேண்டுமானால், அவர்களால் புரிந்துகொள்ளப்பட வேண்டுமானால், அது காட்சிப்பூர்வமாக இருந்தால் மட்டுமே சாத்தியம். 

உரையாடல்களுக்குள்ளேயே முரண்கள் உருவாகின்றன, மோதல்கள் உருவாகின்றன, விவாதத்தில் யாருக்கு வெற்றி? என்ற போட்டி நிகழ்கிறது, யார் தனது சக்தியை நிலைநாட்டப் போகிறார்கள் என்ற சஸ்பென்ஸ் கூடுகிறது, கதாபாத்திரத்திரங்களோடு ஒரு தொடர்புநிலை அதிகரிக்கிறது, சில உண்மைகள் மறைக்கப்படுகின்றன, சில ரகசியங்கள் வெளிப்படுகின்றன, உள்ளார்ந்த உணர்வு தூண்டப்படுகிறது, உணர்ச்சிப்பூர்வமான பிணைப்பு சாத்தியமாகிறது, காதல் பிறக்கிறது, மன முறிவும் நிகழ்கிறது, கலவரங்களும் உண்டாகின்றன, இரு நபர் அல்லாமல் குழுவினருக்கிடையே நடக்கிற உரையாடல்களிலும் இதெல்லாமே உள்ளார பிணைந்திருக்கின்றன.

உரையாடல் என்ற ஒரு காட்சி உருவாக்கத்தை மட்டும் எடுத்துக்கொண்டாலே, இத்தனை உணர்வு வெளிப்பாடுகள் அடுத்தடுத்து நகர்கின்றன. இதையெல்லாம் பார்வையாளர்களுக்குச் சரியான விகிதாச்சாரத்தில் பரிமாற வேண்டுமானால், அதற்கேற்ற கேமரா இயக்கமும், நடிகர்களின் பாவனைகளும் அவசியப்படுகின்றன. காதல் பிறப்பதற்கும், மன முறிவு நிகழ்வதற்கும் அவசியமில்லாமல் ஒரே வகையான கேமரா இயக்கத்தை நாம் மேற்கொள்வோமாயின், அது பார்வையாளர்களிடத்தில் என்னவிதமான உணர்ச்சிநிலை மாற்றத்தைக் கொண்டுவரும் என்று யோசித்துப்பாருங்கள். நமது கேமரா இயக்கத்தின் மூலம் படம் பார்க்கிற பார்வையாளர்களை இயக்குகிறோம். கதையை நீங்கள் எந்தக் கோணத்தில் பார்க்க வேண்டும் என்ற உரிமையை வழங்குவது இயக்குனர்தான். அவரே, பார்வையாளர்களின் கண்களையும், மனதையும் இயக்குகிறார்.  

Image result for கினோ

மேலும், கினோ-வின் முதல் பாகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது போலவே, இதில், உரையாடல் காட்சிகளைப் படமாக்குவதற்கான 100 சிறந்த காட்சியியல் ரீதியிலான படப்பிடிப்பு வழிமுறைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அத்தோடு அத்தகைய தொழில்நுட்ப நகர்வுகளை எளிமையாக உள்வாங்கிக்கொள்ளும் பொருட்டு, அந்தந்த வழிமுறைகளுக்கு ஏற்ப புகைப்பட உதாரணங்களும் தரப்பட்டிருக்கின்றன. இப்புத்தகம் மீண்டும் ஒருமுறை சினிமா என்பது காட்சியியல் ஊடகம் என்பதை அழுத்தமாகப் பதியவைக்கிறது. 
இப்புத்தகத்தின் வாயிலாக யாரேனும் பலனடைந்தாலோ, அவர்கள் எடுக்கிற படத்தில் காட்சிரீதியிலான சிந்தனையைத் தூண்டுவதற்கு இப்புத்தகங்கள் உதவினாலோ, அந்தப் பெருமை அப்புத்தகத்தின் மூல ஆசிரியருக்கே சென்று சேரும்.

பலமான நகர்வு:

திரைக்கதையில் எப்போதும் பார்வையாளர்கள் எதிர்பார்ப்பதுபோலவே நடக்காது. அதில்தான் பார்வையாளர்களுக்கான சுவாரஸ்யம் அடங்கியிருக்கிறது. திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரம் மற்றொரு கதாபாத்திரத்தை பயமுறுத்தவோ, அச்சுறுத்தவோ விரும்பும் நேரங்கள் வரக்கூடும். இதை எப்படிக் காட்சிப்படுத்துவீர்கள்?

காட்சியில் கதாபாத்திரங்கள், ஒவ்வொருவரும் பேசிக்கொண்டிருக்கும்பொழுதே, மற்ற கதாபாத்திரத்தின் இடத்தினை நோக்கி நகர்த்துவதன் மூலம், இதைச் செய்யலாம். கேமராவின் நிலை மற்றும் லென்ஸ் தேர்வில் ஒரு நுட்பமான வேறுபாடு இந்த விளைவை எவ்வாறு திரையில் உருவாக்குகிறது என்பதை டிஃபியன்ஸின் (Defiance) திரைப்படத்திலிருந்து உதாரணமாகக் கொடுக்கப்பட்டிருக்கிற இந்த காட்சிகள் எடுத்துரைக்கின்றன. இதிலிருந்து ஒரு காட்சியின் உணர்வை வெளிப்படுத்த, கேமராவின் நிலை மட்டுமல்ல, எந்த வகையான லென்ஸைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பதும் மிக முக்கியம் என்பதை அறிந்துகொள்கிறோம். 

லோ கேமரா ஆங்கிளில் (low camera angle) இருந்து ஆரம்பிக்கிற இந்த ஷாட், சற்று மேலே tilt up ஆகிறது. ஆனால், இதற்கடுத்து வருகிற ஷாட், முற்றிலும் இதற்கு நேர்மாறான ஒன்றாக, முரண்பாடாக வெளிப்படுகிறது. ஏனெனில், இரண்டாவது ஷாட்டில், கேமராவானது கதாபாத்திரத்தின் தலை மட்டத்திற்கு வைக்கப்பட்டிருக்கிறது. நாம் ஏற்கனவே பலமுறை இதுகுறித்துப் பார்த்துள்ளோம். அதுவும், கினோ முதல் பாகம் புத்தகத்தில் இதுகுறித்து நிறையவே பேசியுள்ளோம். அதாவது, கேமரா எந்த இடத்தில் வைக்கப்படுகிறதோ, அதற்கு ஒரு அர்த்தம் இருக்கிறது. டிஃபியன்ஸில் இப்படியாகக் காட்சியமைக்கிற விதம்தான், முதல் கதாபாத்திரம் வலுவானது, அல்லது அதிக ஆதிக்கம் செலுத்துகிறது என்ற உணர்வை உருவாக்குகிறது, ஏனெனில் அவர் கீழே பார்த்துக்கொண்டிருக்கிறார். 

முதல் ஷாட் ஒரு குறுகிய லென்ஸால் (Shorter lens) எடுக்கப்பட்டிருக்கிறது, இதனால் நடிகர் இரண்டு அடிகள் முன்னோக்கி நகரும்பொழுது, அவரது இயக்கம் மிகைப்படுத்தப்பட்டு, அச்சுறுத்தும் அளவில் அவர் முன்னோக்கித் தோன்றுவார். கேமராவும் அதற்கேற்றாற்போல tilt up செய்யப்படுவதால், திரையில் அவரை இன்னும் அதிகப்படியான ஆதிக்கம் செலுத்தும் நபராகத் தோன்றச் செய்கிறது. குறுகிய லென்ஸ், கேமராவின் இந்தச் சாய்வினை (tilt) மேல்நோக்கி பெரிதுபடுத்துகிறது. 


இங்கு இந்தக் காட்சியில் இரண்டு நடிகர்களுக்கிடையேயான விவாதம் தான் காட்சிப்படுத்தப்படுகிறது. மேலும் இவ்விருவருக்குமிடையேயான வேற்றுமையையும், முரணையும் நாம் காட்சியியல் ரீதியாக பார்வையாளர்களுக்கு உணர்த்த வேண்டும். எந்தெந்த வழிகளிலெல்லாம் நாம் இவ்விரு கதாபாத்திரத்திற்குமிடையே வேறுபாட்டைக் கொண்டுவரலாம் என்று யோசியுங்கள்!

ஆம்., 

லென்ஸில் மாற்றம் செய்வதன் மூலம், கதாபாத்திரங்களுக்கிடையேயான தோற்றத்தில் வித்தியாசத்தைக் கொண்டுவரலாம். முதல் கதாபாத்திரத்தினை நாம் குறுகிய லென்ஸ் கொண்டு பூதாகரமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறோம். எனவே, இங்கு இரண்டாவது கதாபாத்திரத்தையும் குறுகிய லென்ஸ் கொண்டு படம்பிடித்தால், இருவருக்குமிடையேயான வித்தியாசத்தை உருவாக்க முடியாது. இருவருக்கும் ஒரே வகையான லென்ஸ் தேர்வினை மேற்கொண்டால், கதாபாத்திரங்களுக்கிடையேயான வித்தியாசம் அங்கு இருக்காது. எனவே, இங்கு மேலே விவரிக்கப்பட்டுள்ளபடி முரண்பாடுகள் செயல்படுகின்றன, அதே சமயம், இந்த லென்ஸ் தேர்வுகள் யார் ”நல்லவர்” மற்றும் யார் ”கெட்டவர்” என்பதை நிறுவவும் உதவுகிறது. ஒரு லென்ஸ் தேர்வின் மூலம் நாம் ஒருவரை நல்லவராகவும், மோசமானவராகவும் காட்டிவிட முடியும் என்பது ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? அது எப்படிச் சாத்தியம் என்பதை தர்க்கப்பூர்வமாகப் பார்ப்போம். 

ஒரு குறுகிய லென்ஸ் (shorter lens) கொண்டு படம்பிடிக்கப்படும் கதாபாத்திரம் பயமுறுத்துகிற தோற்றத்தில் தோன்றுகிறது, அதே நேரத்தில் ஒரு நீண்ட லென்ஸ் (Long lens) கொண்டு படம்பிடிக்கையில், அது அவர்களை மிகவும் கவர்ந்திழுக்கும் வகையில் அமைகிறது. இதன்படி படத்தில் ஒரு முக்கியமான தருணத்தில் மாறுபட்ட லென்ஸ்கள் பயன்படுத்துவதன் மூலம், யார் நல்லவர், யார் கெட்டவர் என்பதை உங்கள் பார்வையாளர்களுக்கு முடிந்தவரை தெளிவாகக் கூறுங்கள். 

இந்தக் காட்சியை முழுமையாகப் பார்த்தீர்களேயானால், அவர்கள் இரண்டாவது கதாபாத்திரத்தினை லோ ஆங்கிளில், குறுகிய லென்ஸ் கொண்டு படம்பிடித்திருப்பதையும் நீங்கள் கவனிக்கலாம், ஆனால் அது அரிதாகவே பயன்படுத்தப்படுகிறது, காட்சிகளை இணக்க மட்டுமே அவை உள்ளன. துவக்கத்திலேயே திட்டமிடப்பட்டதைவிட, இங்கு விவரிக்கப்பட்டுள்ள விளைவு எடிட்டிங் அறையில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம் என்று இது அறிவுறுத்துகிறது. 

நீங்களும் ஒரு உரையாடல் காட்சியை இதே வழியில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருந்தால், மூன்று வகையான மாறுபாடுகளை இணைப்பதுதான், இந்த விளைவை உருவாக்குகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவையாவன. 

(1)ஒரு கேமரா அசையாமல் இருக்கும், மற்றொன்று மேல்நோக்கி tilt ஆகும். 

(2)ஒரு கதாபாத்திரத்தை வைட் (wide) ஷாட்டிலும், மற்றொரு கதாபாத்திரத்தை லாங் (Long) ஷாட்டிலும், காட்சிப்படுத்த வேண்டும். 

(3)ஒரு கதாபாத்திரத்தை லோ ஆங்கிளிலும் (low angle), மற்றொரு கதாபாத்திரத்தை அவரது தலை மட்டத்திற்குக் கேமராவை வைத்தும் படம்பிடிக்க வேண்டும். 
இந்த மூன்று வடிவங்களையும், படத்தொகுப்பில் அடுத்தடுத்து இணைப்பதன் மூலம்தான் முழு விளைவும் உருவாகிறது.  

இக்காட்சியை உருவாக்குவதற்கான கேமரா மற்றும் நடிகர்களின் இயக்கத்தை கீழ்க்காணும் உதாரணங்களிலிருந்து அறிந்துகொள்ளலாம். 


தொடரும்…