கினோ 2.0:  க்றிஸ்டோபர் கென்வொர்தி

1.5 தடை

கதாபாத்திரங்கள் மிகவும் தீவிரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கும்பொழுது, அவர்களுக்கிடையே ஏதோவொரு பொருள் குறுக்கீடாக நிற்கிறது. உதாரணத்திற்கு, முரண்பாட்டில், மோதலில் ஈடுபட்டிருக்கிற கதாபாத்திரங்களைப் பிரிப்பது போல ஒரு சுவர் நடுவே இடம்பெறுகிறது. இதுபோன்று அவர்களுக்கிடையே ஒரு தடையை வைப்பதன்மூலம், இந்த யோசனையை வெளிப்படையாகப் பயன்படுத்துகிறோம். சில தடைகள் மனதளவில் உருவாகும், சில தடைகளை உண்மையிலேயே வெளியில் தெரியும்படி பருப்பொருளாகப் பயன்படுத்துவோம். இதில் இரண்டாவது வகையைத்தான் இங்கு நடைமுறைப்படுத்துகிறோம். அவர்களுக்கிடையே என்ன தடையிருக்கிறது? என்பது பார்வையாளர்களுக்கு வெளிப்படையாகவே தெரிகிறது. இரு கதாபாத்திரங்களுக்கிடையேயுள்ள மனத்தடை, இந்த சுவரின் மூலம் வெளிப்படுவதாகவும், அது அவர்களுக்கிடையேயான முரண்பாட்டினை இன்னும் அதிகரிப்பதாகவும் எடுத்துக்கொள்ளலாம். அந்தத் தடையானது மேசை, நாற்காலி என எந்தப் பொருளாகவும் இருக்கலாம், அல்லது இந்த உதாரணத்தில் கொடுத்துள்ளபடி சுவர் மற்றும் சன்னலாகவும் இடம்பெறலாம். ஆனால், அவர்களுக்கிடையே குறுக்கே ஒரு பொருள் தடையாக உள்ளது என்பதை உணர்த்துவதே முக்கியம். இது காட்சியியல் ரீதியாகவும் அவர்களுக்கிடையேயிருக்கிற தடையை வெளிப்படுத்துகிறது. 


பொதுவாக சண்டை, சச்சரவுகளில் இருக்கும் கதாபாத்திரங்கள் சத்தமாகக் கத்திப்பேசும் தன்மையோடு செயல்படக்கூடும். அப்போதுதான், காட்சியிலும் படபடப்பு அதிகரிக்கும். ஏனெனில், கதாபாத்திரம் கத்துகிறபொழுது, அவர் அதிகக் கோபத்துடன் இருக்கிறார்? அடுத்து என்ன நடக்கும்? போன்ற பதைபதைப்பு பார்வையாளர்களுக்கு உண்டாகிறது. ஆனால், ஒரு கதாபாத்திரம் காரணம் ஏதுமின்றி சத்தமாகக் கத்துவதைவிட, இதுபோல அவர்களுக்கிடையே ஒரு பொருள் தடையாக உள்ளது எனவும், அதனால்தான் இரு கதாபாத்திரங்களுமே விவாதத்தில் சத்தமாகப் பேசுகின்றன என்ற நியாயத்தை நாம் காட்சியில் சேர்க்கமுடியும். அடுத்து, அந்தத் தடையானது, கதாபாத்திரத்தின் கோபத்தை இன்னும் அதிகப்படுத்துகிறது. எனவே, வெளிப்படையாகக் காணப்படும் தடை, கதாபாத்திரங்கள் கூச்சலிடுவதற்குண்டான அதிக நியாயத்தை வழங்குகின்றன. குறிப்பாக இது ஒரு சுவராக இருந்து, மோதல் வலுவாக இருந்தால், அது உங்கள் காட்சிக்கு இன்னும் யதார்த்தத்தைச் சேர்க்கிறது. கதாபாத்திரங்களுக்கிடையில் வாதங்கள் பெரும்பாலும் சிறிது இடைவெளிவிட்டு தூரத்திலிருந்தே துவங்குகின்றன, மேலும் இதற்கு ஒரு வெளிப்படையான தடை உதவக்கூடும். 

ஆனால், அவ்விரு கதாபாத்திரங்களும் விவாதங்கள் முடியும்வரை, சுவருக்கு (தடைக்கு) அப்பாலிருந்தே பேசவேண்டும் என்று பொருளல்ல. எச்சரிக்கையாக இருங்கள், விவாதத்தின் தீவிரம் அதிகரிக்கும்பொழுது, அநேகமாக அந்தத் தடையைக் கடந்துவிடுவர். ஸ்டான்லி குப்ரிக்கின் தி ஷைனிங் (The shining) படம் பார்த்தால் தெரியும். அதில், ஒரு கதவுக்கு அப்பால், ஜாக் நிக்கல்ஸன் இருப்பார். மறுபுறம் அவர் ஏற்று நடித்திருக்கிற கதாபாத்திரத்தின் மனைவி கதவைப் பூட்டிக்கொண்டு உள்ளேயிருப்பார். இங்கு இருவருக்குமிடையே சிறு உரையாடல் நடக்கிறது. கதவை, இங்கு ஒரு தடையாக எடுத்துக்கொள்ளலாம். பின்பு, ஒரு கட்டத்தில் காட்சியின் தீவிரத்திற்கேற்ப, ஜாக் நிக்கல்ஸன் கதாபாத்திரம் அந்தக் கதவைக் கோடாரியால் உடைத்து உள் நுழைகிறது. இப்போது, காட்சியின் படபடப்பை அதிகரிக்க உதவிய கதவு, மோதலின் தீவிரத்தால் உடைக்கப்படுகிறது. இதற்காகத்தான் சொல்கிறோம், தீவிரம் அதிகரிக்கும்பொழுது, அநேகமாக அந்தத் தடை கடக்கப்படும். உதாரணமாகக் கொடுக்கப்பட்டுள்ள இந்தக் காட்சியில், கதவை உடைக்காமலேயே அவர்களிருவரும் பார்த்துக்கொள்ளக்கூடிய சூழல் உருவாகிறது. 

Image result for The shining axe

இங்கு கதாபாத்திரங்களின் மோதலின் உணர்வை அதிகரிக்க முற்றிலும், ஒருவருக்கொருவர் பார்த்துக்கொள்ள முடியாதவாறு இருக்கிற தடையைக் காட்சிக்குள் பயன்படுத்தலாம். நீங்கள் கதாபாத்திரங்களை முற்றிலுமாகப் பிரிக்கிற தடைகளைப் பரிசோதித்துப் பார்க்கலாம். ஒருவருக்கொருவர் பார்த்துக்கொள்ள முடியாது. இதைக் காட்சியியல் ரீதியாக இன்னும் அழகாக வெளிப்படுத்த முயல்வோம். சுவரில் ஒரு சன்னல் உள்ளது. அதன் வழியாக அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள முடியும். அவர்கள் இருவரும் பேசுவதைக் கேட்பதற்கும், அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்வதற்கும் அந்தக் கண்ணாடிச் சாளரம்தான் ஒரே வழி. அந்தக் கண்ணாடியும் பனியால் மூடியிருக்கிறது, அல்லது அதிக அடர்த்தியுடன் உள்ளதால், எதிரேயிருப்பவரைத் தெளிவாகப் பார்க்கமுடியாமல், அவர் நிற்கிற நிலையைமட்டும் மங்கலாக, நிழலுருவாகப் பார்ப்பது போல, இந்த உரையாடல் காட்சியை அமைத்தால், அது அழகியல் ரீதியாகவும், காட்சியியல் ரீதியாகவும் மிகச்சிறப்பாக இருக்கும்.

பொதுவாக ”சினிமா ஒரு காட்சி மொழி” என்பது அனைவரும் ஏற்றுக்கொண்டதே! அதில் உரையாடலுக்கு இரண்டாம் பட்சமான இடம்தான். அதேநேரத்தில், இரு கதாபாத்திரங்கள் விவாதத்தில் ஈடுபடுகின்றன, என்பதை நாம் கண்டும் காணாமல் கடந்துவிடுவது, யதார்த்தமாக இருக்காது. ஆனால், இங்கு அந்த உரையாடலையும் காட்சியியல் உணர்வுடன் சொல்லமுடியும் என்பதற்கு மேலே குறிப்பிட்ட காட்சி நல்ல உதாரணம். கதாபாத்திரங்கள் என்ன பேசுகிறார்கள் என்பதன் மூலமாகவும் காட்சி நகர்கிறது, காட்சியியல் ரீதியாகவும் கண்ணாடிச் சன்னல் ஏற்படுத்துகிற தடை மூலமாகவும் காட்சி நகர்கிறது. எனவே, இங்கு உரையாடல் காட்சியில் கூட, காட்சியியல் ரீதியாகக் கதைசொல்கிறோம். உரையாடலின் உணர்வை, அந்தக் காட்சியின் மூலமாகக் கடத்துகிறோம். கண்ணாடிச் சன்னலின் வழியே தெரிகிற, ஸ்தூலமான உருவங்களைப் பார்த்தபடி, கதாபாத்திரங்கள் பேசிக்கொள்கின்றன, இதன் பொருள் என்னவென்றால், தங்களின் கவனத்தை எங்கு திருப்புவது? என்பது அவர்களுக்குத் தெரிகிறது. தான் எங்கு பார்த்துப் பேச வேண்டும்? என்பது மட்டும் புரிகிறது. 

இதுபோன்ற ஒரு பார்வை இருப்பதால், அது கண்ணாடியால் சிதைந்திருந்தாலும், கதாபாத்திரங்களில் ஒன்று மற்றொன்றிலிருந்து விலகிச்செல்லும்போது அதை அதிக சக்திவாய்ந்ததாக ஆக்குகிறது. உதாரணத்திற்கு கணவன், மனைவிக்கு இடையே சண்டை என்று வைத்துக்கொள்வோம். கணவனின் பார்வைக்குப் படாதவாறு மனைவி முகத்தைத் திருப்பிக்கொள்வது, மேலும் மோதலை அதிகரிக்கிறது. விவாதத்தின் தீவிரத்தைக் கூட்டுகிறது. இந்தக் காட்சியின் பெரும்பகுதியில் அவள் கோபத்தில் அவனிடமிருந்து விலகி, அவர்களுக்கிடையேயான மோதலை இன்னும் அதிகரிக்கிறாள். ’தி ரீடர் (The reader)’ திரைப்படத்திலிருந்து கொடுக்கப்பட்டுள்ள உதாரணத்தை ஒருமுறை பார்த்துவிட்டீர்களேயானால், இது சரியாகப் புரிந்துவிடும். 


அந்தப் பையன், கேட் வின்ஸ்லெட் கதாபாத்திரத்திடம் பேச முயற்சிக்கிறான். ஆனால், அவர் அவனின் பார்வைக்குத் தெரியாதபடி கண்ணாடியின் பின்னால் திரும்பி நிற்கிறார். 


இடையே தடை உள்ளதால், சத்தமாகக் கத்திப் பேசுகிறார். இது அவர்களுக்கிடையேயான மோதலை அதிகப்படுத்துகிறது.


இங்கு, அந்தச் சுவரும் கண்ணாடியும் இல்லையென்றால் இந்தக் காட்சி இவ்வளவு உணர்வுப்பூர்வமாக வெளிப்பட்டிருக்காது. ஒரு இயக்குனரின் வேலை, எப்படி ஒரு காட்சியின் உணர்வு சிதையாமல் பார்வையாளர்களுக்குத் தரப்பட வேண்டும் என்பது குறித்துதான் இருக்க வேண்டும். இதை இப்படத்தின் இயக்குனர் ஸ்டீபன் டால்ட்ரி சரியாகவே செய்திருக்கிறார். 

கேமராவை எங்கு வைத்து, இந்தக் காட்சியைப் படம்பிடித்திருக்கிறார்கள் என்று இப்போது பார்ப்போம். கேமரா செட்-அப் மிக எளிமையாகவே செய்திருக்கிறார்கள். ஒரே அறையில், முழு காட்சியையும் கைப்பற்ற முயற்சித்திருக்கிறார்கள், எனவேதான், முதல் ஷாட்டில் அந்தப் பையனை மிகவும் தெளிவாகப் பார்க்கிறோம், அதே ஷாட்டில், அந்தப் பெண்ணை மங்கலானத் தோற்றத்துடன் பார்க்கிறோம். இரண்டாவது கேமரா வைக்கப்பட்டுள்ள நிலையை, இரண்டாவது ஷாட்டின் மூலமாகத் தெரிந்துகொள்ளலாம். இரண்டாவது கேமரா, அந்தப் பெண்ணை மட்டுமே காட்சிப்படுத்துகிறது. அவள் சத்தம் போடுகிறாள். அவள் மீண்டும், அறைக்குள் இருக்கிற அந்தப் பையனைப் பார்க்க விரும்பவில்லை. அவள் திரும்பி நிற்கிறாள். 

இதே காட்சியைக் கொஞ்சம் மாற்றிப் பயன்படுத்துவோம். அதாவது, இருவருக்கிடையே சண்டை நிகழ்கிறது. ஆனால், இது அன்பினால் நிகழ்கிற சண்டை. அல்லது சண்டையின் முடிவில் அன்பு வெளிப்படுகிறது. ஒருவர் மீது ஒருவருக்கு அன்பு இருக்கிறது. இருப்பினும் ஏதோவொரு மனக்கசப்பில் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். அதுபோன்ற சந்தர்ப்பத்தில், திரும்பி நிற்கிற அந்தப் பெண், மீண்டும் திரும்பி அந்த ஆணைப் பார்க்கிறாள் என்றால், அவர்களுக்கிடையே நிற்கிற தடையானது, அவர்களைப் பிரிப்பதற்குப் பதிலாக, அவர்களின் அன்பை இன்னும் கூட்டுகிறது என்பதை உணரமுடியும். இதை ஒரு எளிய உதாரணத்தின் வழியே பார்க்கலாம், தான் இவனுக்குச் சரியான பொருத்தம் அல்ல என்று அந்தப் பெண் நினைக்கிறாள். ஆனால், அவளுக்கு அவன் மீது காதல் இருக்கிறது. ‘இனிமேல் என்னைப் பார்க்க வரவேண்டாம்” என்று திரும்பிநின்று கத்துகிறாள். அவனை நேராகப் பார்த்துச் சொல்லமுடியாமல், அதற்கான தைரியம் இல்லாமல் திரும்பி நின்று பேசுகிறாள். ஒரு கட்டத்தில், அந்த ஆண், அவளைவிட்டுத் திரும்பிப்போக நினைக்கிறான். இருப்பினும் ஒரு பரிதவிப்பில் அங்கேயே நிற்கிறான். இப்போது அந்தப் பெண் திரும்பிப் பார்க்கிறாள். கண்ணாடியின் வழியாக அந்த ஆணின் உருவம் மங்கலாகத் தெரிகிறது. இங்கு, இருவருக்கிடையே பிரிவை அதிகரிக்க வேண்டிய தடையானது, அன்பைக் கூட்டுகிறது.


மீண்டும் ’தி ரீடர்’ படத்துக்கு வருவோம், அந்தப் பையன் மெத்தையில் அமர்ந்திருக்கிறான். ஒருவேளை, அவனே எழுந்து தடையை நோக்கி வந்திருந்தால், பெண் புறக்கணிக்கிறாள், ஆனால் அந்தப் பையனுக்கு அந்தப் பெண் மீது ஈர்ப்பு இருக்கிறது என்று பொருள் தருகிறது. மாறாக, அவன் ஏதொரு முன்னெடுப்பும் செய்யாமல் இருந்தால், அவனுக்கும் அந்த பெண் மீது ஈர்ப்பு இல்லை என்ற பொருள் வரக்கூடும். கேமராவின் நிலை மட்டுமல்ல, கதாபாத்திரம் நிற்கும், உட்காரும், செயல்படும் என எந்தவொரு செயலை வைத்தும், அதற்குள்ள மனநிலையை நாம் புரிந்துகொள்ள முடியும். அல்லது அந்தச் செயல் மறைமுகமாகக் காட்சியின் உணர்வில் பாதிப்பு செலுத்துகிறது.  

 இங்கு உதாரணத்தில் அந்த ஆண், எழுந்து தடையை நோக்கிச் செல்கிறான். அது அந்தப் பெண் மீது கொண்ட அன்பாக இருக்கலாம், அல்லது எல்லையற்ற கோபமாக இருக்கலாம். ஆனால், எதுவாகயிருந்தாலும், அதைப் புறக்கணிக்கவேண்டும் என்ற எண்ணத்தில், அந்தப் பெண் திரும்பிநிற்கிறாள்.  அந்த வசனங்களின் ஒலியை அணைத்துவிட்டு, காட்சியை மட்டும் பார்த்தால் கூட, அவர்களுக்கிடையேயுள்ள உணர்ச்சியின் தீவிரம் நமக்குப் புரிந்துவிடும். 

தொடரும்…