கினோ 2.0 க்றிஸ்டோபர்கென்வொர்தி

அத்தியாயம் – 2

பதற்றத்தை அதிகரித்தல்

(உரையாடல் காட்சிகளை எந்தெந்த நுட்பங்களில் படம்பிடிக்கலாம் என்று
பார்த்துவருகிறோம். அதன் தொடர்ச்சியாக அத்தியாயம் இரண்டில், உரையாடல்
காட்சிகளுக்குள்ளேயே ஒருவித பதட்ட உணர்வை எப்படிக் கொண்டுவருவது என்று
பார்க்கப்போகிறோம்.)

2.1 உரையாடலில் வட்டமிடுதல்

நாம் எடுக்கிற திரைப்படத்தின் காட்சிகளின் வாயிலாக பார்வையாளர்களுக்கு என்ன
உணர்வுகளைக் கடத்துகிறோம் என்பதுதான் முக்கியம். அடுத்து என்ன நடக்கப்போகிறது?
என்பதையறியாமல் இருவர் பேசிக்கொண்டிருக்கிற காட்சியில் பதற்றத்தை ஏற்படுத்த
வேண்டும். இதுபோன்ற காட்சிகளில் பதற்றம் என்பது வெளிப்படையாகத் தெரிவதைக்
காட்டிலும், அது காட்சியின் அடுக்குகளில் ஒன்றாக, மேற்பரப்பிலிருந்து மறைக்கப்படுவது,
பதற்றத்தின் தன்மையை இன்னும் அதிகரிக்கும். ஒரு பதற்றமான சூழ்நிலை அந்தக்
காட்சிக்குள் இருப்பதைப் பார்வையாளர்களுக்குத் தெளிவுபடுத்தும் வகையில் நீங்கள்
படம்பிடித்திருக்க வேண்டும், அதேநேரத்தில் கதாபாத்திரங்களும் தன் பங்கைச் சரியாக
செய்கின்றன, நன்றாக நடித்திருக்கின்றன என்பது அந்தக் காட்சியை நம்பத்தகுந்ததாக
உருவாக்குகிறது. இங்க்ளோரியஸ் பாஸ்டர்ட்ஸ் (Inglourious Basterds) திரைப்படத்திலிருந்து
எடுக்கப்பட்ட இந்தக் காட்சி, இரண்டு அசைவற்ற (அசைவியக்கம் இல்லாத)
கதாபாத்திரங்களை கேமரா எவ்வாறு வட்டமிடுகிறது என்பதைக் காட்டுகிறது, இரு
கதாபாத்திரங்களுமே பேரழிவைப் பற்றி அறிந்திருந்தபொழுதும், காட்சியில் அவை
அமைதியாகவே தோன்றுகின்றன.


அந்த இரு கதாபாத்திரங்களையும் சுற்றி கேமரா அரைவட்டமடிக்கிறது. அவர்களைச் சுற்றி
நடைபெறுகிற இந்தக் கேமராவின் நகர்வானது, காட்சியில் நேரத்தை நிரப்புவதற்கான

வழிகளில் ஒன்று என்று கூறலாம் அல்லது அழுத்தமான உரையாடல் நிரம்பிய காட்சிக்கு,
காட்சியியல் ரீதியாகவும் விறுவிறுப்பைக் கூட்டுவதற்காக கேமராவை நகர்த்தியிருக்கலாம்,
ஆனால் இங்கு நாம் பார்க்கிற உதாரணத்தில் கேமரா நகர்வின் பயன்பாடு என்பது அதைவிடச்
சிறப்பான ஒன்று. அவர்களை அந்த இடத்தில் வைப்பதன்மூலம், அவர்கள் உடலில் எந்தவித
அசைவுமற்று, மிகவும் சாந்தமாகப் பேசுகிறார்கள், கிட்டத்தட்ட கிசுகிசுப்பது போல
பேசிக்கொள்கிறார்கள் என்பதை இயக்குனர் வலியுறுத்துகிறார்.
கேமராவின் இந்த நகர்வு என்பது பார்வையாளர், இரு கதாபாத்திரங்களில் ஒரு
கதாபாத்திரத்தின் கண்களை நேரடியாகப் பார்க்கும் ஒரு சுருக்கமான (குறைந்தளவிலான)
தருணம் என்பதையும் குறிக்கிறது. அவர் அதை மறைக்க முயற்சித்தாலும், அவரது பயம்
தெளிவாகத் தெரிகிறது. முதலில் பார்வையாளர்கள் அவரது கண்களில் உள்ள பயத்தை
உணர்கின்றனர். எனவே இது, மற்ற கதாபாத்திரமும் அவரது பயத்தை உணரக்கூடும்
என்பதை பார்வையாளர்களுக்குக் கடத்துகிறது, இதனால் இதுவொரு நுட்பமான கதையின்
திருப்புமுனை (Plot) வெளிப்பாடு ஆகும்.



(Inglourious Basterds. Directed by Quentin Tarantino. Universal Pictures, 2009)
இதில், இரு கதாபாத்திரங்களும் ஒன்றுக்கொன்று எதிரெதிரே அமைந்திருப்பதையும்,
மேலும் அவர்கள் ஒருவர் மீது மற்றவர் தன் கவனத்தை வைத்திருப்பதையும், இந்த கேமரா
நகர்வு அழுத்தமாகப் பதிவுசெய்கிறது. அவர்கள் எந்தளவிற்கு மிகச் சாதாரணமாக
நடிக்கிறார்கள் என்பது முக்கியமல்ல, அவர்களில் ஒருவர் மற்றவர் சொல்லும் சொற்களை
முழுக்கவனத்தோடு கேட்பதை நோக்கமாகக் கொண்டுள்ளனர்.

இதுபோன்ற ஒரு கேமரா நகர்வினைப் படம்பிடிக்க, வளைந்த தண்டவாளங்களில்
செல்வதுபோன்ற டாலி (dolly) உங்களிடம் இருந்தால் உதவியாக இருக்கும், இருப்பினும்
வெறும்கைகளால் (handheld) கேமராவைத் தாங்கியபடியும் (இந்தப் புத்தகத்தில் உள்ள
அனைத்து ஷாட்களையும் போல) இதுபோன்ற காட்சியை எடுக்கமுடியும். நீங்கள்
வெறுமனே அந்த மேசையைச் சுற்றிவந்தால், கேமராவின் பாதி நகர்விலேயே
கதாபாத்திரங்கள் கேமராவிற்கு நெருங்கி வந்துவிடும், இது ஒட்டுமொத்த விளைவையும்
பலவீனப்படுத்தும். எனவே, நீங்கள் கதாபாத்திரங்களை நெருங்குவதுபோன்று
கேமராவை நகர்த்தக்கூடாது. இந்தக் காட்சியை அப்படிச் சரியாக எடுப்பதற்கான ஒரு
தந்திரம் என்னவென்றால்¸ கதாபாத்திரங்களுக்கும் கேமராவிற்கும் இடையேயான தூர
இடைவெளியானது, கேமராவின் அந்த அரைவட்ட நகர்வு முடியும்வரை ஒரே அளவில்
சீரானதாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும். கேமராவை ஒரு மென்மையான, சீரான
வளைவில் வைத்திருப்பதோடு, கேமராவிற்கும் கதாபாத்திரங்களுக்கும் இடையேயான
தூர இடைவெளியும் சம அளவில் பின்பற்றப்படுவது, இந்தக் காட்சியைச் சரியாக
எடுத்துமுடிக்க வழிவகுக்கும்.



சினிமாவின் வாயிலாக நாம் உணர்வுகளையே கடத்துகிறோம். ஒரு பதற்றமான
உணர்வை வெளிப்படையாகத் தெரியும்படி பிரகடனப்படுத்தாமல், இதுபோன்று
கதாபாத்திரங்கள் அமைதியாகத் தங்களுக்குள் கிசுகிசுப்பதன் வாயிலாகவும், அதற்கேற்ற
கேமராவின் அரைவட்ட நகர்வும், காட்சியின் உள்ளுக்குள் பதற்ற உணர்வைக்
கட்டியெழுப்பும். சப்தமாக உரக்கப் பேசுவதன் மூலமாக மட்டும் பதற்றத்தை ஏற்படுத்த
முடியும் என்றில்லை. மேலெழுந்தவாரியாகப் பார்க்கிறபொழுது, அவர்கள்
சாதாரணமாகப் பேசுவதுபோன்று உணர்ந்தாலும், உங்களையறியாமலேயே அந்தப்
பதற்றமான உணர்வை நீங்கள் இந்தக் காட்சியின்மூலம் அடைவீர்கள். அவர்கள்
ஒருவரையொருவர் நேருக்குநேர் பார்த்துக்கொள்ளும் கண் பார்வை, அதிகமான உடல்
அசைவுகளைத் தவிர்த்து நடிப்பது, உரையாடலில் இருக்கிற அழுத்தங்கள் எல்லாம்
இணைந்து, இதையொரு மிகச்சிறந்த காட்சியாக உருவாக்குகிறது. கதாபாத்திரங்களின்
முன்னாலிருந்து அரைவட்டமடிக்கத் துவங்குகிர கேமரா, இறுதியில், சரியாக
அவர்களுக்குப் பின்னால் வந்து நிற்கிறது.

2.2 நெருக்கமான இடத்தில் அதிகரிக்கும் பதற்றம்

மியூனிச் (Munich) திரைப்படத்திலிருந்து உதாரணமாகக் கொடுக்கப்பட்டிருக்கிற இந்தக்
காட்சி, பதற்றத்தை எவ்வாறு அதிகரிப்பது என்பதைக் காட்டுகிறது, அதே நேரத்தில்
நம்பிக்கையின் சாத்தியத்தைத் திறக்கக்கூடிய இரு நபர்களையும் காட்சிப்படுத்துகிறது.
இருவேறுபட்ட உணர்வுகள் இந்தக் காட்சியின்மூலம் கிடைக்கின்றன. அதாவது ஒரு
பக்கம் பதற்றம் அதிகரிக்கிறது, பின்பு நம்பிக்கையின் சாத்தியக்கூறு எனும் நேர்மறைக்
கருத்திற்கும் செல்வதற்கு வாய்ப்புள்ளது. இதுபோன்ற மாறுபட்ட கருத்துக்களையும்,
உணர்ச்சிகளையும் பயன்படுத்தும்பொழுது அது காட்சிக்கு பெரும் தாக்கத்தை
ஏற்படுத்துவதற்கென சில நேரங்கள் உள்ளன. அவர்கள் வெறுமனே ஒருவர் மீது மற்றவர்
அவநம்பிக்கை கொண்டிருந்தார்களா? அல்லது ஒருவர் சொல்வதை மற்றவர் வெறுமனே
கேட்கிறார்களா? என்பதை விட இது மிகவும் ஆழமாகப் பங்காற்றுகிறது. இந்த
முரண்பாடுதான் காட்சியில் பதற்றத்தை உண்டாக்குகிறது, பார்வையாளர்களான நம்மை
அவர்கள் உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தையின் மீதும் கவனிக்கவைக்கிறது.



Figure 1 Munich படப்பிடிப்புத்தளத்தில் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்

முதலாவதாக, இந்தக் காட்சி ஒரு சுவாரஸ்யமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது, இரு
கதாபாத்திரங்களில், ஒரு கதாபாத்திரம் மற்றொன்றைவிட உடல்ரீதியாக மிக உயரமான
இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதாவது, இது ஒரு மாடிப்படியில் நடக்கிற
காட்சியாதலால், ஒரு கதாபாத்திரம் கீழே நிற்க, மற்றொரு கதாபாத்திரம் படிக்கட்டுகளின்
மேலே நிற்கிறது. உடல்ரீதியாக இரு கதாபாத்திரங்களுக்கான வேறுபாடுகள் இந்த ஒரு
ஷாட் வாயிலாகவே காட்சிப்படுத்தப்படுகிறது. இன்னும் முக்கியமாக உடல் ரீதியாக
மட்டுமல்லாமல் யார் வலிமையானவர்கள் என்பதைக் கூட இந்தக் காட்சியில்
கதாபாத்திரங்கள் நிற்க வைக்கப்பட்டுள்ள நிலையானது, நமக்கு
அடையாளங்காட்டுகிறது. மேலே நிற்கிற நபர், முதல் நபர் எனக்கொண்டால், காட்சியின்
பொழுது, அவர், கீழே நிற்கிற இரண்டாவது நபரை நோக்கி வருகிறார். அதேநேரத்தில்,
இரண்டாவது கதாபாத்திரமும், அவரை (மேலேயிருக்கிற முதல் நபரை) நோக்கி

நெருக்கமாக நகர்கிறது. அவர்கள் உண்மையில் மற்றும் அடையாளப்பூர்வமாக
இருவரையும் பிரிக்கும் அந்தப் பெரிய கோட்டைக் கடக்கின்றனர்.
ஒருவர் பாலஸ்தீனியர் மற்றவர் இஸ்ரேலியர், இருவருக்குமான நிலையை அவர்கள்
நிற்கும் இடத்தை வைத்து மிக நுட்பமாக உணர்த்துகின்றனர். இருவருமே ஒருவரை
நோக்கி மற்றவர் நெருங்கி வருவதால் காட்சியில் பதற்றம் அதிகரிக்கிறது. அதேநேரத்தில்
இருவருக்குமிடையில் நம்பிக்கை தரக்கூடிய விஷயங்கள் நடப்பதற்கான எதிர்பார்ப்பும்
கூடுகிறது. இருவருமே ஒருவரை நோக்கி ஒருவர் நெருங்குவதால்,
இருவருக்குமிடையேயான, அவர்களைப் பிரித்துவைக்கும் அந்தக் கோட்டினை
இருவருமே கடந்து உரையாடுகின்ற சூழல் உருவாகிறது.
இந்த உணர்வுகளை அழுத்தமாகப் பதியவைக்கவும், மிகைப்படுத்திக் காட்டவும் விரும்பிய
இயக்குனர், இந்தக் காட்சியின் துவக்க ஷாட்களை வைட் லென்ஸ்களின் (wide lenses)
மூலம் படமாக்குகிறார். நடிகர்கள் (அதாவது இரு கதாபாத்திரங்களும்) நெருங்க நெருங்க
லாங்கர் லென்ஸ்கள் (longer lenses) பயன்படுத்தப்படுகின்றன. பின்பு அந்த இரு
கதாபாத்திரங்களும் மிக அருகில் இருக்கும்பொழுது, எல்லாவற்றிலும் மிக நீளமான
(longest lenses) லென்ஸ்கள் பயன்படுத்தப்படுகின்றன. காட்சிக்கிடையேயான
ஒவ்வொரு வெட்டும் (cut), கதாபாத்திரங்கள் ஒருவரையொருவர் நெருங்கி
வருவதற்கேற்ப, தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த லென்ஸ் தேர்வுகள், அழுத்தமாக அவர்களின்
நகர்வினைக் காட்சியில் வலியுறுத்திப் பதியவைக்கின்றன.
நீங்கள் இந்தப் படத்தைப் பார்த்தால், காட்சி இன்னும் வைடர் லென்ஸுடன் (wider lens)
துவங்கப்பட்டு, இருவரையுமே மேலேயிருந்து காட்சிப்படுத்தி, அவர்களுக்கிடையிலான
பிரிவினையை உறுதியாக நிலைநிறுத்துவதை நீங்கள் காண்பீர்கள். இரு
கதாபாத்திரங்கள், அவர்களுக்கிடையிலான தூரம், அவர்களைப் பிரிக்கும் இடைவெளி
என அனைத்தையும் காட்சிக்குள் கொண்டுவர வைட் லென்ஸ்கள்(wide lens) சிறந்த
தேர்வாக அமைந்திருக்கின்றன.


(Munich. Directed by Steven Spielberg. DreamWorks SKG, 2005.)

அடுத்து இந்த மாறுகிற ஃப்ரேம்களைப் பார்க்கும்பொழுது, இதுவொரு பாரம்பரிய
கோணம்/ தலைகீழ் கோணம் (traditional angle/reverse angle) கொண்ட காட்சி என்று
நீங்கள் கூறலாம், ஆனால் உயரம், தூரம் மற்றும் லென்ஸின் தேர்வு ஆகியவற்றில்
செய்யப்பட்ட சிறிய மாற்றங்கள் அதை நாடகீயத் தருணத்திற்குள் கொண்டுசெல்கின்றன.
ஒரே காட்சிதான் என்றாலும், அதன் ஒவ்வொரு ஷாட்டிற்கும், லென்ஸ் முதற்கொண்டு
மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதால், காட்சியின் உணர்வுகளை இன்னும் நம்மால்
அழுத்தமாக உணரமுடிகிறது.

2.3 மிகைப்படுத்தப்பட்ட உயரம்

ஒரு கதாபாத்திரம் மற்றொரு கதாபாத்திரத்தைப் பயமுறுத்துவதை, நீங்கள் காட்சிப்படுத்த
விரும்பினால், அதற்கு மிகவும் வெளிப்படையான நுட்பங்கள் பயனுள்ளதாக இருக்கும்.
மிகவும் பலம் வாய்ந்த கதாபாத்திரத்தை உயரமாக வைப்பது மற்றும் அந்நபர்
பாதிக்கப்படுகிற நபரை தாழ்ந்த பார்வையில் பார்ப்பது, பயமுறுத்தும் தொனியை
வரவழைப்பதில் நன்றாக வேலை செய்கிறது.
ஒரு சுருக்கமான எக்ஸ்டாபிளிஸ்மெண்ட் ஷாட் (establishing shot), அவன், அவளது
கைகளை உயர்த்த முயற்சிக்கிறார் என்பதைக் காட்டுகிறது, இதனால் அவர் அவற்றை
சோதிக்கிறார். ஷாட், கட்(cut) செய்யப்படுகிறது. இயக்குனர், அடுத்த ஷாட்டில், அவர்கள்
முகத்தையும் காட்சிப்படுத்தும் பொருட்டு, இரண்டு ஷாட்கள் (டூ ஷாட்ஸ்) வைக்கிறார்.

அவளைப் பார்த்துக்கொண்டிருக்கும், அவனது ஷாட், அவன் உடலின் பாதியிலிருந்து
எடுக்கப்படுகிறது, இதனால் பார்வையாளர்கள் அவனை மிகைப்படுத்தப்பட்ட
கோணத்தில் பார்க்கிறார்கள். அந்தப் பெண்ணின் மேல்நோக்கிய முகமும், அவனின்
கீழ்நோக்கிய பாதி உடலும் இரண்டாவது ஷாட்டில் பதிவாகியிருக்கின்றன. மேலும்,
இயக்குனர் இந்த ஷாட்டில், அவனுடனான, அவளது எதிர்வினையையும் முக
பாவனைகளின் வழியாகக் காட்டுகிறார், அது பக்கவாட்டிலும், அவுட் ஆஃப்
ஃபோகஸிலும் இருந்தாலும், அந்த முக பாவனைகளும் மிரட்சியைக் கடத்துகின்றன. இந்த
இடத்தில் அந்த ஆண்தான் ஆதிக்கம் செலுத்துபவனாக இருக்கிறான், பெண்
செய்வதறியாது திகைத்திருக்கிறாள். இதைக் காட்சிகளின் வாயிலாக உணர்த்துவதற்கே
இந்தக் கேமரா கோணமும், கதாபாத்திரங்களின் நிலையும், அதற்குரிய லென்ஸும்
தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை கேமரா சற்று பின்னால் நகர்த்தி
வைக்கப்பட்டிருந்தால் அல்லது தலை உயர மட்டத்திற்கு கேமரா பொருத்தப்பட்டிருந்தால்,
அவனது ஆதிக்கத்தின் உணர்வானது குறைந்துவிடும்.

(Twin Peaks: Fire Walk with Me. Directed by David Lynch. New Line Cinema, 1992.)

(Twin Peaks: Fire Walk with Me. Directed by David Lynch. New Line Cinema, 1992.)
அவனது பாய்ண்ட் ஆஃப் வியூ ஷாட் தோள்பட்டை உயரத்திலிருந்து எடுக்கப்படுகிறது.
எனவே, இது அவனைக்காட்டிலும், அவளது முகத்திற்கும், அவனின் செயலுக்கு அவளது
எதிர்வினையிலும் கவனம் செலுத்துகிறது. இங்கு பார்வையாளர்கள் அவளுடன் தன்னை
அடையாளப்படுத்திக்கொள்கின்றனர், ஏனென்றால் ஷாட்கள், அவனைவிட,
நிலைமையைப் பற்றிய அவளது கருத்தையே வெளிப்படுத்துகின்றன. அவனின்
செய்கைகளைக் காட்டிலும், அவளது முக பாவனைகளுக்கும், அவளது எதிர்வினைகளைக்

காட்சிப்படுத்துவதற்குமே கேமரா கோணம் வைக்கப்பட்டிருப்பதால், பார்வையாளர்கள்
அவளது நிலையையே அதிகம் உணர்கின்றனர்.
இந்தக் காட்சியில், அவர்கள் இருவருமே மீண்டும் மீண்டும் அந்தக் கைகளைப்
பார்க்கிறார்கள், பின்னர் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொள்கிறார்கள். இந்தச்
செய்கைகள்தான் காட்சியில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகின்றன, நகர்வுகளை
அளிக்கின்றன, மேலும் அந்த அமைப்பிற்கு பல்வேறு கோணத்தை வழங்குகின்றன,
இல்லையெனில் இந்தக் காட்சி தட்டையானதாகத் தோன்றலாம்.
இதுபோன்ற காட்சிகளைப் பயன்படுத்துவதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மேலும் இதுபோன்ற காட்சிகளை அதிகமாகவும் பயன்படுத்தக்கூடாது, ஏனென்றால்
அவை விரைவிலேயே கேலிக்குரியதாகவும் மாறிவிடும். அந்த ப்ளாட் (plot) அல்லது
காட்சியின் தேவைகளால்தான் பயன்படுத்தப்படும் நுட்பங்களும் நியாயப்படுத்தப்பட
வேண்டும்.
- தொடரும்…