கினோ 2.0 புத்தக அறிமுகம்

க்றிஸ்டோபர் கென்வொர்தி

தமிழில்: தீஷா

பட்ஜெட் அதிகமாக உள்ள திரைப்படங்கள்தான், திரையில் பார்ப்பதற்கு ‘சினிமாட்டிக்’ஆக இருக்குமென்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், ‘கினோ’வின் தொடர் வரிசைப் புத்தகங்கள் மூலம், நான் வெளிப்படுத்த விரும்புகிற விஷயம் என்னவென்றால், ஒரு திரைப்படத்தைக் காட்சியியல் தோற்றத்தில் சினிமாட்டிக்காகத் தெரிய வைப்பதற்கு, பணம் தேவையில்லை, உங்கள் அறிவு நுட்பத்தைப் பயன்படுத்தினாலே போதும். நீங்கள் கேமராவை எங்கு வைக்கிறீர்கள்? நடிகர்களை ஃப்ரேமில் எந்த இடத்தில் நிலைநிறுத்துகிறீர்கள்? அவர்களை எப்படி இயக்குகிறீர்கள்? போன்றவைதான் ஒரு வலுவான காட்சியமைப்பை உருவாக்குகிறது. அதுதான் திரையில் பார்ப்பதற்கு சினிமாட்டிக்காகத் தெரிகிறது. இது உரையாடல் காட்சிகளைப் படமாக்குவதற்கும் பொருந்தும்.

இந்த ’கினோ 2.0’ புத்தகத்தின் வாயிலாகக் கற்றுக்கொள்ளும் நுட்பங்களைக் கொண்டு, நீங்கள் எடுக்கிற உரையாடல் காட்சியைத் தகுந்த அளவிற்கு வலிமையாக்க முடியும். இதன்மூலம் கதைக்களத்தின் ஒவ்வொரு திருப்புமுனைப் புள்ளியும், காட்சியின் ஒவ்வொரு உணர்வும், நுட்பமான அர்த்தமும் தெளிவாக வெளிப்படும். இதற்கு நடிகர்களின் ஒத்துழைப்பும் அவசியம்.

’மாஸ்டர் ஷாட்’ புத்தகம் முதலில் வெளியானபோது, அது உடனடியாக வாசகர்களிடமிருந்து பலமான விமர்சனங்களைப் பெற்றது மற்றும் விரைவிலேயே அது சிறந்தமுறையில் விற்பனையான புத்தகமாகவும் மாறியது. படப்பிடிப்புத் தளத்தில் ஒரு காட்சியை எப்படி அமைக்க வேண்டும்? என்பது தொடர்பாக, இப்புத்தகம் தங்கள் கண்களைத் திறந்துவிட்டதாகக் கூறுகிற, திரைப்பட இயக்குனர்களிடமிருந்து எனக்கு எண்ணற்ற மின்னஞ்சல்கள் வந்தன. ”ஒரு ஷாட்டை அமைப்பதற்கு முன்னால், இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதென்று, இதற்கு முன்புவரை எங்களுக்குத் தெரியாது” என பலர் சொன்னார்கள். ஒன்றிற்கு மேற்பட்ட கேமராக்கள் கொண்டு படம்பிடிப்பதுதான் எளிய வழிமுறை, மற்றும் அதன்மூலம் தான், சிறந்த காட்சியமைப்புகளை உருவாக்க முடியும் என்று நினைத்துக்கொண்டிருந்ததற்கு மாறாக, ஒரே கேமரா செட்-அப் வைத்து எடுக்கப்படுகிற காட்சிகள் கூட, காட்சிமொழி ரீதியில் பல நிலைகளில் வேலை செய்யுமென்று கண்டுகொண்டதாக இன்னும் சிலர் சொன்னார்கள். இதையெல்லாம் கேட்கும்போது, திரைப்பட இயக்குனர்கள் தங்கள் கலையில் முன்னெப்போதையும்விட, துறை சார்ந்து ஆழமாக ஆராய்வதற்குத் தயாராகயிருக்கிறார்கள் என்பதை அறிந்துகொண்டது மகிழ்ச்சியாக இருந்தது.


சில மாதங்களுக்குள் திரைப்படப் பள்ளிகளிலும் இப்புத்தகம் பரவலான வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் புத்தகத்தில் உள்ள அறிவுரைகளால், மேம்படுத்தப்பட்ட பல மாணவர்கள் எடுத்த குறும்படங்களை, திரைப்படங்களை, வெகுவிரைவிலேயே பார்க்க நேர்ந்தது. விருதுகளைப் பெற்ற திரைப்பட இயக்குனர்கள், மாஸ்டர் ஷாட்ஸ் புத்தகம், திரைப்படமெடுப்பதில் எப்படித் தங்களுக்கு உதவிகரமாக இருந்தது என்பதைச் சொல்லி எழுதினார்கள். இதையெல்லாம்விட, எனக்கு மிகவும் ஆச்சரியமாகயிருந்த விஷயம் என்னவென்றால், ஒரு சில ஹாலிவுட் இயக்குனர்கள் (பல தசாப்தங்களாக என்மீது பாதிப்பைச் செலுத்தியவர்கள்)கூட, இந்தப் புத்தகம் தங்களுக்கு எப்படியெல்லாம் உதவியது என்பது குறித்து எனக்கு எழுதினார்கள். மற்றொரு இயக்குநர், இந்தப் புத்தகம் கையில் இல்லாமல் படப்பிடிப்புத் தளத்திற்குள் செல்லமாட்டேன் என்று சொன்னார். சினிமாவில் இயக்குநராக வரவிரும்புகிறவர்கள், நகலெடுக்கக்கூடிய 100 உத்திகளை மட்டும் இந்தப் புத்தகம் வழங்கவில்லை. இது சிறந்த காட்சியியல் ரீதியிலான சினிமாட்டிக் விளைவுகளை அடைய, திரைப்பட இயக்குனர்களின் கண்களைத் திறக்கிறது. இந்த உத்திகளை அப்படியே பயன்படுத்தாமல், அவர்களின் சொந்த கேமரா நுட்பங்களாக, இதிலிருந்து ஒன்றை உருவாக்க அவர்களை ஊக்குவிக்கிறது.

இருந்தபோதிலும், மக்கள் எனக்கு கடிதங்கள் எழுதும்போது, ஒரு கருப்பொருளைக் குறித்து மட்டும் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டேயிருந்தார்கள். கிட்டத்தட்ட அவர்கள் எல்லோரும் கேட்ட ஒரே கேள்வி என்னவென்றால், ”உரையாடலைப் படம்பிடிக்க சிறந்த வழி எது?” என்பதுதான். உங்கள் திரைப்படங்கள் நல்ல உரையாடல் காட்சி இல்லாமல் வேலை செய்யாது. எனவே, இந்த கினோ 2.0 தொகுதி, உரையாடலை உயிர்ப்பிக்கத் தேவையான கேமரா நுட்பங்களை நோக்கி உங்களை அழைத்துச் செல்கிறது.

இதற்கு முந்தைய புத்தகமான ’கினோ’வில் பல அத்தியாயங்களில் உரையாடல் காட்சியை எப்படிப் படம்பிடிக்க வேண்டும் என்பது தொடர்பாக பல உத்திகளை விளக்கியிருந்தாலும், அது பிரத்யேகமாக உரையாடலுக்கென்றே தயாரிக்கப்பட்ட புத்தகம் அல்ல. பின்னர் ’கினோ’ புத்தகத்தை எழுதியதிலிருந்து, நான் ஒரு திரைப்படத்தை இயக்கியுள்ளேன் மற்றும் பல புரொஜக்ட்களில் பணிபுரிந்திருக்கிறேன். மேலும் சுவாரஸ்யமான வழிகளில் உரையாடல்களைப் படமாக்குவதிலும் ஆர்வமாக இருந்தேன். மிக முக்கியமாக, திரைக்கதையின் சாராம்சத்தை, அதன் உணர்வைப் பிரதிபலிக்கும் வகையில், உரையாடலைக் காட்சிப்படுத்தும் முறைகளைக் கண்டறிய விரும்பினேன். இந்தப் புத்தகத்திற்காக, நூற்றுக்கணக்கான திரைப்படங்களைப் பார்த்து ஆய்வு செய்தேன். அந்த உழைப்பினால்தான், இந்தப் புத்தகத்தில் உரையாடல் காட்சிகளைப் படம்பிடிப்பதற்கான நூறு உத்திகள் தேர்வுசெய்து கொடுக்கப்பட்டுள்ளன. இங்கு உதாரணமாகக் கொடுக்கப்பட்டிருக்கிற ஒவ்வொரு திரைப்படமும், நல்ல உரையாடல் காட்சிகளைக் கொண்டுள்ளன, மேலும் அவையனைத்தும், இந்த உத்திகள் குறித்து விலாவாரியாகப் புரிந்துகொள்ள, நீங்கள் முழுமையாகப் பார்க்கவேண்டிய திரைப்படங்கள்தான்.

துரதிர்ஷ்டவசமாக, கமர்ஷியல் ப்ளாக்பஸ்டர் திரைப்படங்களில் உள்ள பல காட்சிகள், திரைக்கதையில் எழுதப்பட்ட உரையாடல்களை அதிகம் பயன்படுத்துவதில்லை. கேமரா மேலே உயரும் ஒரு அழகான மாஸ்டர்ஷாட் மூலம் காட்சி ஆரம்பிக்கிறது, பின்னர் எல்லாமே ஒரு நிலைக்கு வந்து நின்றுவிடுகிறது. கேமரா ஒரே இடத்தில் நிற்கிறது, நடிகர்களும் அசையாமல் ஒரே இடத்தில் நின்று, ஒருவரையொருவர் பார்த்து, வசனம் பேசத் துவங்கிவிடுகிறார்கள். திரைப்படங்களில் வருகிற பல உரையாடல்கள் இதைப்போலவே, மந்தமான முறையில்தான் படமாக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அவை அப்படியிருக்க வேண்டிய தேவையில்லை. சிறந்த இயக்குனர்கள், காட்சியை முழுமையாக ஆராய்ந்து வெளிப்படுத்தும் வகையில், கேமராவை எங்கு வைப்பது, நடிகர்களை எவ்வாறு அமைப்பது, காட்சியின் உணர்வை வெளிப்படுத்தும் வகையில், நடிகர்களின் இயக்கத்திற்கேற்ப கேமராவை எவ்வாறு நகர்த்துவது போன்றவற்றை அறிந்து வைத்திருக்கிறார்கள்.

திரைப்படங்களில் வழக்கமாக உரையாடல் காட்சிகளைப் படம்பிடிக்கப் பயன்படுத்துகிற கேமரா செட்-அப் தான், கீழ்க்காணும் இந்த வரைபடத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. உரையாடலின்போது இரு நடிகர்களும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்கின்றனர், இருவரும் ஒரே தூரத்திலிருந்தும், ஒரே கோணத்திலிருந்தும் படமாக்கப்படுகிறார்கள். இந்தப் புத்தகத்தில் நான் இந்த கேமரா செட்-அப்பை கோணம் / தலைகீழ் (எதிர்) கோணம் என்று குறிப்பிட்டிருக்கிறேன்.


இந்த கோணம் / தலைகீழ் கோண அமைப்பு (angle/reverse angle) என்பது, படப்பிடிப்பிற்கான கால அவகாசம் குறைவாக இருக்கும்போது அல்லது உடன் பணியாற்றுகிறவர்கள் சோர்வாக இருக்கும்போது அல்லது இயக்குனர் உரையாடல் காட்சியை கிரியேட்டிவ்வாக எடுப்பதற்கான யோசனை ஏதும் இல்லாதபோது நிகழ்கிறது. மேலும் இந்தக் காட்சியமைப்பை எளிதாக அமைத்துக்கொள்ள முடியும். இது பரவாயில்லைதான், மேலும் இது பயன்படுத்தப்பட்ட நோக்கத்திற்கேற்ப நியாயமான முறையில் வேலை செய்கிறது. ஆனால், இது தொடர்ந்து பல திரைப்படங்களில் பார்த்துப் பார்த்துப் பழக்கப்பட்ட காட்சியாதலால், அதைத் திரையில் மீண்டும் பார்ப்பதற்கு மந்தமாகயிருக்கிறது அல்லது சலிப்புத்தட்டுகிறது. பல இயக்குனர்கள் அந்த வழக்கமான கூட்டத்திலிருந்து, அந்த வட்டத்திலிருந்து வெளியே நிற்க முயற்சி செய்கிறார்கள், ஆனால் அவர்கள் கூட, தங்கள் திரைப்படங்களில் உரையாடல் காட்சியைப் படமாக்க வரும்போது, இந்த வழக்கமான காட்சியமைப்பைத்தான் தேர்வு செய்கிறார்கள்.

ஆம், இந்த வழக்கமான உரையாடல் காட்சியமைப்பு, பல காரணங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. இது வேகமாகப் படம்பிடிக்கக்கூடிய அணுகுமுறையைக் கொண்டிருக்கிறது, இதற்கான காட்சியமைப்பில், கேமராவை நிலைநிறுத்துவதும், நடிகர்களை ஃப்ரேமில் அமைப்பதும் மிக எளிது, விரைவாகச் செய்துமுடிக்கக் கூடியது, மேலும் நீங்கள் லைட்டிங்க் சார்ந்து அதிகமாகக் கவலைப்பட மாட்டீர்களென்றால், நடிகர்களின் இரு திசைகளிலும் இரண்டு கேமராக்களைப் பயன்படுத்தி, ஒரே நேரத்தில் இந்த ஷாட்டை எடுத்து முடித்துவிடலாம். நேரம் உங்களுக்குப் பெருமளவு மிச்சமாகும். உடனே அடுத்த காட்சியைப் படம்பிடிக்கும் வேலையை நோக்கி நகரத்துவங்கி விடலாம். மேலும், உரையாடல் பகுதி சுவாரஸ்யமாக இருக்கும்வரை, பெரும்பாலான பார்வையாளர்கள் இந்தக் காட்சியமைப்பு குறித்து குறைகூற மாட்டார்கள். இந்த வகைக் காட்சியமைப்பைத் தவிர, உரையாடலுக்கு வேறு எதையும் பயன்படுத்தாத பல புகழ்பெற்ற திரைப்படங்கள் உள்ளன, பின்பு ஏன் நீங்கள் மட்டும் கடினமாக முயற்சி செய்ய வேண்டும்? என்று யோசிக்கலாம்.


உரையாடல்களை ஆக்கப்பூர்வமான வழியில் படமாக்க நினைக்கும் இயக்குனர்கள், உண்மையில் திரைக்கதையின் நுணுக்கங்களைத்தான் ஆழமாக ஆய்வு செய்கிறார்கள். அதன்படியே (அந்த உணர்வின் அடிப்படையிலேயே) கேமரா நகர்வையும், நடிகர்களின் நகர்வையும் தீர்மானிக்கிறார்கள். கண் கவரும் காட்சியை உருவாக்கும் நோக்கத்தில், உங்கள் கேமராவை நகர்த்தவோ, நடிகர்களை மாற்றியமைக்கவோ கூடாது (பொதுவாக அழகான காட்சிகள் சுவாரஸ்யம் ஏற்படுத்துவதாக இருந்தாலும்), ஆனால், காட்சியின் ஆழமான அர்த்தத்தை, உணர்வை வெளிப்படுத்தவும், வலுவான தாக்கத்தை உருவாக்கவும், நீங்கள் புத்திசாலித்தனமான காட்சியமைப்பை, ஸ்டேஜிங்கைப் (staging) பயன்படுத்தலாம். இந்தப் புத்தகத்தில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள திரைப்படங்களைப் பாருங்கள். உரையாடலை ஆக்கப்பூர்வமான வழியில் படம்பிடிக்க கேமராவைப் பயன்படுத்தும்போது, காட்சிகள் எவ்வளவு சிறப்பாக வெளிப்படுகின்றன என்பதைக் காண்பீர்கள்.

உங்கள் காட்சியை நீங்கள் நன்றாக ஸ்டேஜிங் செய்திருந்தாலே, ஒரு வழக்கமான, அடிப்படையான படப்பிடிப்பு அணுகுமுறையைவிட, கூடுதலாக முயற்சிக்கிறீர்கள் என்று அர்த்தம். இதன் வழி நீங்கள் காட்சியின் ஒவ்வொரு தருணத்தின் அர்த்தத்தையும், உணர்ச்சியையும், நாடகீயத் திருப்பங்களையும் எதிரொலிக்கிறீர்கள். இது உரையாடலைக் காட்டிலும் முக்கியமானதல்ல. ஒரு காட்சியை கேமரா நகர்வோடு மாஸ்டர் ஷாட்டில் துவங்கிவிட்டு, அடுத்து உரையாடலைப் படம்பிடிப்பதற்கான கோணம் / தலைகீழ் கோண ஷாட்களோடு (angle/reverse angle) நின்றுவிடுவதை, பல இயக்குனர்கள் எவ்வித புகாருமற்று ஏற்றுக்கொள்வது வருத்தமளிக்கிறது. நீங்கள் அதைவிடவும் சிறப்பாகச் செய்யமுடியும்.

இந்த வழியில் படம்பிடிக்க, சில சவால்களையும் நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். நடிகர்கள் மற்றும் கேமராக்கள் நகர்வில் இருக்கும்போது, அந்நடிகர்களுக்கான க்ளோஸ் அப் (அண்மைக் காட்சிகள்) கவரேஜ்கள் வேண்டுமென ஒலிப்பதிவாளர் உங்களை நிர்ப்பந்திக்கக்கூடும். அவர் கேட்டுக்கொண்டதன்படி நிச்சயமாக நீங்கள் அதைச் செய்யலாம். ஆனால், உண்மையிலேயே நீங்கள் விரும்புகிற ஒன்றைப் படம்பிடிக்க உங்களுக்குத் தைரியம் வேண்டும்.

கேமரா இயக்கத்தில் இருக்கும்போது, நடிகர்களைத் தெளிவாக ஃபோகஸில் படம்பிடிக்க வேண்டியது முக்கியம். எனவே, நீங்கள் காட்சி நடக்கக்கூடிய இடத்தில், நடிகராக அவர் எங்கு வந்து நிற்க வேண்டும் என்றெல்லாம் குறிப்புகள் கொடுப்பீர்கள். சிலநேரங்களில் தரையில் அந்த அடையாளம் குறிக்கப்பட்டிருக்கும். நீங்கள் கேமரா நுட்பங்களை முக்கியத்துவப்படுத்தும்போது, சில நடிகர்கள் “வசனமும் பேசிக்கொண்டு, நடித்துக்கொண்டு, நீங்கள் குறித்திருக்கிற அடையாளங்களிலும் சரியாக வந்து நிற்க வேண்டுமா?” என்று புகார் செய்யக்கூடும். உங்கள் கேமரா நுட்பங்களுடன் ஒத்துழைத்துப் பணிபுரிய, நடிகர்களாகிய அவர்களை ஊக்குவிக்கும் வழிகளைக் கண்டறிந்து, இந்தக் குறிப்பிட்ட காட்சியைக் காட்சிப்படுத்த இதுவே சிறந்த வழி, என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள். அவர்கள், தங்களது சிறந்த நடிப்பை வெளிப்படுத்த இதுவே தருணம், மேலும் அந்நடிப்பிற்கு நியாயம் செய்வதாகவே கேமரா நகர்வும் அமைந்திருக்கிறது என்பதைப் புரியவைய்யுங்கள்.

நல்ல செய்தி என்னவென்றால், இந்தப் புத்தகத்தில் உள்ள அனைத்து கேமரா நகர்வுகளையும், எந்த கேமரா உபகரணங்களைக் கொண்டும் எளிதாகப் படம்பிடிக்க முடியும். இந்த உத்திகளை உங்கள் திரைப்படங்களில் பயன்படுத்துவதற்கென, எந்தவொரு பெரிய கேமரா கருவிகளோ, உபகரணங்களோ தேவையில்லை. பெரும்பாலும் ஹேண்ட்ஹெல்ட் மூலமே இந்தக் காட்சிகளை எடுத்துவிடலாம். அல்லது மிக அடிப்படையான டாலி (dolly), கிரேன்கள் மற்றும் ஸ்டெபிலைசர்களே, இந்த நுட்பங்களைச் சாத்தியப்படுத்துவதற்குப் போதுமானது.

இந்தப் புத்தகத்தில் கொடுக்கப்பட்டிருக்கிற நூறு கேமரா உத்திகளில், ஏதேனும் ஒன்றை எடுத்து, உங்கள் சொந்தப் படத்திற்கு நீங்கள் நேரடியாகப் பயன்படுத்தலாம். ஆனால், அதைவிட, இந்த உத்திகளை இன்னும் ஒரு படி மேலே எடுத்துச்சென்று, உங்கள் யோசனைகளையும் இதில் இணைத்து, உங்கள் திரைப்படத்தின் காட்சிகளுக்கு ஏற்ற வகையில் அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு, கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் இந்த ’கினோ 2.0’ புத்தகத்தைப் படித்து முடிக்கிறபோது, கேமரா சட்டகம் மற்றும் நடிகர்களின் நகர்வில் ஏற்படுத்துகிற சிறுசிறு மாற்றங்கள் கூட, காட்சியின் உணர்வுநிலையில், அதன் காட்சியியல் பரிமாணத்தில் எத்தகைய தாக்கங்களைக் கொண்டுவருகிறது என்பதைக் கண்கூடாகப் புரிந்துகொள்வீர்கள். இது இறுதியில், திரையில் வரக்கூடிய காட்சிகளுக்கு, முன்கூட்டியே உங்கள் தனிப்பட்ட பார்வையைக் கொண்டுவருகிற ஆற்றலை வழங்குகிறது. எந்தவொரு இயக்குநரும் தனிப்பட்ட திரைமொழியைக் கைக்கொள்ளவே விரும்புவர். அதற்கு இந்தப் புத்தகம் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

இந்தப் புத்தகத்தைப் பயன்படுத்தும் முறை

’கினோ 2.0’வின் எந்த அத்தியாயத்திலிருந்தும், அதில் கொடுக்கப்பட்டிருக்கிற கேமரா நுட்பங்களிலிருந்தும், எந்த நேரத்திலும் உங்கள் காட்சிக்குத் தேவையான, மிகவும் பொருத்தமான ஒரு ஷாட்டைத் தேடிக் கண்டடையலாம். எவ்வாறாயினும், நீங்கள் முழு புத்தகத்தையும் படிக்கவேண்டுமென்று பரிந்துரைக்கிறேன். ஏனென்றால், இதன்மூலம் நிரூபிக்கப்பட்ட பல்வேறு கேமரா நுட்பங்களைப் பற்றி நீங்கள் நன்கு அறிந்துகொள்ள முடியும்.

உண்மையிலேயே, இதில் கொடுக்கப்பட்டிருக்கிற 100 கேமரா உத்திகளையும், முழுமையாகப் புரிந்துகொள்ள, முதலில் நீங்கள் அந்த கேமரா உத்தி விளக்கப்பட்டிருக்கிற அந்த விளக்கவுரையைப் படிக்க வேண்டும், பின்பு உதாரணத்தில் கொடுக்கப்பட்டிருக்கிற படங்களைக் கவனியுங்கள், அடுத்து அந்த ஷாட்டை நீங்கள் எப்படிப் பயன்படுத்துவீர்கள்? உங்கள் காட்சிக்கு ஏற்றவாறு அதை எப்படி மாற்றுவீர்கள்? என்று கற்பனை செய்து பாருங்கள். எனவே, உங்கள் படம் முன் தயாரிப்பில் (pre-production) இருக்கும்போதே, ’கினோ 2.0’ புத்தகத்தை நீங்கள் படித்து முடித்திருக்க வேண்டும்.

நீங்கள் எடுக்கப்போகிற ஷாட்கள் குறித்து திட்டமிட்டவுடன், இந்தப் புத்தகத்தை படப்பிடிப்புத் தளத்தில் உடன் வைத்திருங்கள். இதன் மூலம் நீங்கள் அந்த ஷாட்டின் காட்சியமைப்பு குறித்து மாற்று யோசனைகளைக் கண்டறியலாம் அல்லது அந்தக் காட்சியில் திரைமொழி சார்ந்து, கூடுதலாக ஏதோவொன்றைச் சேர்க்கலாம். நீங்கள் செய்யக்கூடிய சிறந்த விஷயங்களில் ஒன்று, ஒரு காட்சியில் பல நுட்பங்களை இணைத்து முற்றிலும் புதிய ஒன்றை உருவாக்குவதுதான். இந்த உத்திகளை அப்படியே பயன்படுத்தாமல், உங்கள் பாணியில் ஒன்றை உருவாக்குங்கள்.

நீங்கள் எவ்வாறு வேலை செய்கிறீர்கள் என்பதையும், நீங்கள் இலக்காகக் கொண்டிருக்கிற காட்சிரீதியிலான திரைமொழியைப் பற்றியும், உடன் வேலை செய்பவர்களும், நடிகர்களும் புரிந்துகொண்டால், அவர்களும் இந்த நுட்பங்களுடன் இணைந்து பணிபுரிய அதிக விருப்பத்துடன் செயல்படுவார்கள்.


முடிவாக…

கினோ 2.0 புத்தகத்தில் கொடுக்கப்பட்டிருக்கிற இந்த உத்திகளை, உங்கள் படங்களில் பயன்படுத்தும்போது சில சவால்களைச் சந்திப்பீர்கள். கேமரா தொழில்நுட்ப நகர்வுகளில் சிக்கிக்கொள்ள விரும்பாத நடிகர்களிடமிருந்தோ அல்லது நீங்கள் வேகமாக வேலைசெய்ய வேண்டும் என்று விரும்புகிற வினியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடமிருந்தோ இந்தப் பிரச்சனைகள் வரலாம். ஒரு உத்தி நன்றாக வேலை செய்வதென்பது, அதில் பங்காற்றுகிற நடிகர்கள், ஒளிப்பதிவாளர், இடச்சூழல் என அனைத்தையும் சார்ந்திருக்கிறது. கேமரா நகர்விற்கேற்ப ஒரு நடிகர், நடிக்க வேண்டுமென்றால், அவர் கொஞ்சம் தயங்கவே செய்வார். வெறுமனே, கொடுக்கப்பட்ட வசனத்தைத் தன் உடல்மொழியில் வெளிப்படுத்துவதென்பது, நடிகர்களுக்குச் சற்று எளிதான காரியம். ஆனால், கேமரா நகர்வையும் மனதில் வைத்துக்கொண்டு, அவர் நடிக்கவேண்டுமென்றால், அது இன்னும் சவாலானது. இந்தச் சவாலை ஏற்க விரும்பாத நடிகர்கள்தான், கேமரா உத்திகளுக்கு ஒத்துழைப்பு தர மறுக்கின்றனர். ஆனால், யதார்த்தம் என்னவெனில், ஒரு நல்ல கேமரா தொழில்நுட்ப உத்திகளோடு, நடிகரின் நடிப்பும் இணைந்தால், அது அந்தக் காட்சியை வேறு ஒரு தளத்திற்கு முன்னேற்றிச் செல்லும். அடுத்து, தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து வைக்கிற குற்றச்சாட்டுகளுக்கு வருவோம். கேமரா உத்திகளுக்கு அதிக நேரம் செலவழிப்பது, படப்பிடிப்புக் காலத்தை நீட்டிக்கும், அது இன்னும் கூடுதல் பட்ஜெட்டிற்கு வழிவகுக்கும் என்று நினைக்கின்றனர். உண்மை என்னவென்றால், படைப்பாக்கப்பூர்வமாக வேலை செய்வது அதிக நேரம் எடுக்காது. மேலும் நீங்கள் ஒரு இயக்குநராக நல்ல முன்தயாரிப்புடன் இருக்கும்போது, அது நடிகருக்கு முட்டுக்கட்டையாகவும் அமையாது.

ஷாட் எப்படி எடுக்கப்பட வேண்டும் என்பதற்கான திட்டங்களை முன்கூட்டியே செய்துகொள்ளுங்கள். பின்பு படப்பிடிப்புத் தளத்திற்குச் சென்று, காட்சி நடக்கக்கூடிய இடத்தைப் பார்த்தவுடன், அவற்றை மீண்டும் திட்டமிடுங்கள். காலை நடைப்பயணத்தில் கூட, அதற்கான யோசனைகளில் ஈடுபடலாம். முடிந்தால், ஒளிப்பதிவாளரையும், நடிகரையும் வைத்துக்கொண்டு, சிறு ஒத்திகைகள் கூட செய்துகொள்ளலாம். நீங்கள் இந்த வழிமுறையில்தான் வேலைசெய்கிறீர்கள், இதுதான் உங்கள் பாணி என்று உங்கள் குழு அறிந்துகொண்டவுடன், அவர்கள் உங்களுக்குத் தரக்கூடிய ஒத்துழைப்பை அதிகப்படுத்துவார்கள்.
தயாரிப்பு வடிவமைப்பு போன்ற கிரியேட்டிவ் பிரிவுகள், அவர்கள் வேலையை, நீங்கள் உங்களது படமாக்கல் முறையின்மூலம், மேம்படுத்தித்தான் காட்டுகிறீர்கள் என்பதைப் புரிந்துகொண்டால், அவர்களது ஒத்துழைப்பும் அதிகமாகும்.

இந்தப் புத்தகம், படப்பிடிப்புத் தளத்தில் உரையாடல் காட்சிகளை, எப்படி கிரியேட்டிவ்வாக படம்பிடிப்பது என்பதைப் பற்றியது. எனவே, அந்த உரையாடலைப் பேசுகிற நபர்களிடமிருந்துதான், உங்களுக்கு எதிர்ப்புகள் வரலாம். யாரைச் சொல்கிறேன் என்பது புரிந்திருக்கும். ஆம், நடிகர்கள். திரைப்பட உருவாக்கத்தைப் பொறுத்தவரை, ’நடிகர்களுக்கான இயக்குநர்’,’கேமராவிற்கான இயக்குநர்’ என இரு பிரிவுகள் இருக்கின்றன என்று பரவலாகவே நம்பப்படுகிறது. நல்வாய்ப்பாக, மிகச்சிறந்த இயக்குனர்கள், திரைப்பட உருவாக்கத்தின் இந்த இரண்டு பிரிவுகளிலும் எப்படி வேலைசெய்வது என்று நன்கு தெரிந்துவைத்திருப்பதால், இந்த ’புரட்டு’ இப்போது மதிப்பிழந்துவிட்டது. இருப்பினும், இயக்குநராக நீங்கள், காட்சிப்பூர்வமாக ஒரு சிக்கலான கேமரா நகர்வைத் திட்டமிட்டால், நடிகரின் நடிப்பின் மீது உங்களுக்கு நம்பிக்கையில்லை, என்று நினைக்கும் சிலர் இன்னும் இருக்கிறார்கள்.

உங்கள் நடிகர்களிடம், அவர்களது நடிப்பின் நுட்பத்தை இன்னும் மேம்படுத்திக்காட்டத்தான், இந்த கேமரா நகர்வுகளைப் பயன்படுத்துகிறோம் என்று உறுதியளித்து, அவர்களின் ஒத்துழைப்பை நீங்கள் பெற வேண்டும். முடிந்தால், படப்பிடிப்புத் துவங்கிய முதல் நாள் அல்லது இரண்டு நாட்களுக்குப் பிறகு, அவர் நடித்த காட்சிகளை, அவருக்குக் காண்பியுங்கள். கேமரா நகர்வு, நடிகரின் நடிப்பை எந்தளவிற்கு சீர்தூக்கிக் காட்டுகிறது என்பதைப் புரியவையுங்கள். பின்பு அவர், உங்கள் படப்பிடிப்புப் பாணிக்கு மாறுவார்.

உங்கள் நடிகர்களிடம் இதைச் சொல்லாமல் இருப்பதும் நல்லதுதான், ஆனால், அந்நடிகர்களிடமிருந்து சிறந்த நடிப்பைப் பெறவேண்டுமென்றால், இதையெல்லாம் செய்ய வேண்டியிருக்கும். எல்லா நடிகர்களும் தன்னுணர்வுடன் இருப்பார்கள். தனது நடிப்பு திரையில் சரியாகப் பிரதிபலிக்குமா? பார்வையாளர்களிடம் சரியாகப் போய்ச்சேருமா? என்ற எச்சரிக்கையுணர்வுடன் இருப்பார்கள். அதிகமான சுய பிரக்ஞையில் இருக்கிற அவர்களிடம், இந்த கேமரா உத்திகளின் மதிப்பைப் புரியவைத்துதான், நடிப்பைப் பெறவேண்டும். அவர்களும் இதைப் புரிந்துகொள்கிற பட்சத்தில், உங்களுக்கு ஒத்துழைப்புத்தர தயங்கமாட்டார்கள்.

இந்த நடிப்புத்துறையிலேயே பல காலமாக இருப்பவர்கள், சிறந்த நடிகர்கள்கூட, படப்பிடிப்புத்தளத்தில் ஏதோவொரு அச்சவுணர்வால் பாதிக்கப்படுகின்றனர். ”இந்தக் காட்சியில், தான் எப்படி நடித்தோம்?, இந்நடிப்பில் ஏதேனும் மாற்றங்கள் செய்யவேண்டுமா? காட்சி திருப்தியாக வந்திருக்கிறதா?” என்று படக்குழுவினரின் எதிர்வினைக்காக, இயக்குநரிடமிருந்து வருகிற பதிலுக்காகக் காத்திருக்கிறார்கள். எனவே, ஒரு இயக்குநராக நீங்கள், நடிகர்களின் அந்த எதிர்பார்ப்பை பூர்த்திசெய்ய வேண்டும். முடிந்தால், ஒவ்வொரு காட்சி முடிந்ததும், நடிகர்களின் உழைப்பிற்கு மரியாதை கொடுத்து, அக்காட்சி குறித்து அவர்களுடன் பேசுங்கள். அவர்களது நடிப்பு எப்படியிருந்தது? என்று உங்கள் பார்வையைச் சொல்லுங்கள். இதெல்லாமே, படப்பிடிப்புத் தளத்தில் ஒரு ஆரோக்கியமான சூழலை உருவாக்கும்.

ஒருவேளை அவர்களது நடிப்பு நன்றாகயில்லை, இந்தக் காட்சிக்கு ஏற்றதாகயில்லை, இதை அவர்களிடம் சொல்லமுடியாதபோது, அவர்களின் நடிப்பை மேம்படுத்த, நீங்கள் உதவ வேண்டும். அதற்கான குறிப்புகளைக் கொடுக்க வேண்டும். நீங்கள் அந்தக் காட்சியில், அந்நடிகரிடமிருந்து எதிர்பார்ப்பது என்ன என்பதை விளக்க வேண்டும். அவர்களுடைய அச்சவுணர்வைக் குறைப்பதன்மூலம், அவர்களிடமிருந்து உங்களுக்குத் தேவையான நடிப்பைப் பெறமுடியும். ஒரு ஷாட்டில், நடிகர்கள் செய்வதற்குப் பல வேலைகள் உள்ளன: அவர்கள் காட்சியில் பேசப்போகிற வசனங்களை ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும், அவர்கள் மனதில் திட்டமிட்டு வைத்திருந்த, நடிப்பைக் காட்சியில் செயல்படுத்திக்காட்ட வேண்டும், இயக்குநராக நீங்கள் அவருக்குக்கொடுத்த குறிப்புகளை, திருத்தங்களைப் பின்பற்ற வேண்டும், காட்சியில் சரியாக அவர்கள் எந்த இடத்தில் நிற்க வேண்டும் என்று நீங்கள் குறித்து வைத்திருக்கிற அடையாளத்திற்கு, அவர்கள் நடித்தபடி வரவேண்டும், இன்னும்பல இருக்கின்றன. ”தான் எப்படி நடித்திருக்கிறோம்?” என்பது குறித்துக் கவலைப்படுவதற்கு, அவர்கள் தங்கள் மூளையில் தனியிடத்தையே ஒதுக்கியிருக்கின்றனர், இதுகூட ஒரு நல்ல காட்சி உருவாக்கத்தைக் கெடுத்துவிடும். இவ்வளவையும் கடந்துதான் அவர்கள் நடிக்கின்றனர்.

நீங்கள் இன்னும் அவர்களது ஃபெர்பார்மன்ஸ் தொடர்பாக ஒரு விஷயத்தைக் கொடுத்தால், நீங்கள் அவர்களை மிகவும் பரபரப்பாக மாற்றலாம், இது அவர்களை தன்னிச்சையாகவே செயல்படவைக்கும். இதன் விளைவு தன்னிச்சையாகச் செயல்படுவதைத் தவிர வேறொன்றுமில்லை. உங்கள் நடிகர்கள் தனது நடிப்பை கேமராவுக்கு ஏற்றவாறு மெருகேற்றுவதைவிட, இது மிகவும் யதார்த்தமானதாகவும் உண்மையானதாகவும் இருக்கும். எனவே அவர்களது கைகளால் ஏதாவது ஒரு செயலைச் செய்யவைப்பது, அல்லது ஒரு குறிப்பிட்ட கோணத்தில் தலையைத் திருப்புவது, நீங்கள் குறித்து வைத்த மற்றொரு இடத்திற்கு சரியாக வந்து நிற்பது, இவ்வாறெல்லாம் செய்யச்சொல்லும்போது, நடிகர்களிடமிருந்து எதிர்ப்புகள் வரலாம். நீங்கள் தவறாகச் சொல்கிறீர்கள் அல்லது அந்தக் கதாபாத்திரம் அப்படிச் செய்யாது என்று அவர்கள் உங்களிடம் சொல்லலாம். ஏனெனில், ஒரே நேரத்தில் இவ்வளவு செயல்களையும் திட்டமிட்டுச் செய்வது குறித்து அவர்கள் கவலைப்படுகிறார்கள், பீதியடைகிறார்கள். இதுவொரு நல்ல அறிகுறிதான். ஏனென்றால், இதன்மூலம் அவர்கள் தன்னுணர்வு இல்லாமலேயே செயல்படக்கூடிய (நடிக்கக்கூடிய) இடத்திற்கு அவர்களைத் தள்ளுகிறீர்கள். மென்மையாக, ஆனால்
அதேநேரத்தில் அவர்களை அந்த எல்லைவரை தள்ளுங்கள்.

நல்ல உரையாடல் இல்லாமல் ஒரு நல்ல கதையைச் சொல்வது கடினம். காட்சியியல் ரீதியாகக் கதைசொல்லும் இயக்குநராக, ஒவ்வொரு காட்சியையும் கதாபாத்திரத்தை வெளிப்படுத்தும் விதத்திலும், கதையை ஒரு படியாவது முன்னேற்றும் விதத்திலும் படம்பிடிப்பதே உங்கள் வேலை. இந்தப் புத்தகத்தில் கொடுக்கப்பட்டிருக்கிற ஷாட்களை எடுத்து, அவற்றை மாற்றியமைத்து, அதில் இன்னும் சிலவற்றைச் சேர்த்து, அவற்றை உங்கள் சொந்த பாணியின் வாயிலாக வெளிப்படுத்தும் விதத்தைக் கண்டுபிடித்து, அவற்றை உங்கள் திரைப்படங்களில் பயன்படுத்துங்கள். இந்த உத்திகளை நீங்கள் தன்வயப்படுத்திக்கொண்டு, அவற்றை உங்கள் சொந்த நடையில் பயன்படுத்துவதற்கான புதிய வழிகளைக் கண்டுபிடிக்கும்போதுதான், நீங்கள் ஒரு உண்மையான இயக்குநராக மாறுகிறீர்கள்.