கினோ 2.0 உரையாடல் காட்சிகளைப் படம் பிடிக்கும் முறைகள்


க்றிஸ்டோபர் கென்வொர்தி

1.2 வாசற்படியில் நிகழும் உரையாடல்…

திரைக்கதையில் எப்படி ஆரம்பம், நடுப்பகுதி, முடிவு, சவால்கள், மோதல்கள் போன்ற தொனி உள்ளனவோ, அதேபோலத்தான் உரையாடல் காட்சிகளும் ஒரே அளவீட்டில் சராசரித்தன்மையுடன் நகராமல், எதிர்பார்ப்பைத் தூண்டும் விதத்தில் ஏற்ற இறக்கங்களோடு அமைக்கப்பட்டிருக்க வேண்டும். முரண்பாடுகள் எப்போதும் காட்சியின் மீதான ஆர்வத்தைத் தூண்டுகின்றன, ஆனால் காட்சியில் கதாபாத்திரங்கள் உண்டாக்குகிற மோதலும், முரண்பாடுகளும் தற்செயலாக அமைந்ததுபோன்று இருத்தல் அவசியம். அல்லது உரையாடல் பகுதியில் எதிர்பாராத கதாபாத்திரம் ஒன்று தற்செயலாக உள்ளே நுழைவதில் மற்றவர்களுக்கு அதிர்ச்சி. கதை மற்றும் முக்கிய கதாபாத்திரங்களின் நடவடிக்கைகளிலும், அந்தப் பாத்திர வார்ப்பிலும் கவனம் செலுத்தும் வகையில் இந்த காட்சிகளை நீங்கள் படமாக்க வேண்டும்.

தி இண்டர்நேஷனல் (The International) படத்திலிருந்து ஒரு உதாரணம் இங்கே கொடுக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தின் உரையாடல் காட்சிகள் வடிவமைக்கப்பட்ட விதத்தை இங்கே அலசிப் பார்க்கப்போகிறோம். அடுக்குமாடிக் குடியிருப்பில் நிகழும் இந்தக் காட்சியில் கதாபாத்திரங்களின் செயல்கள் யதார்த்தமாக நடப்பது போல உள்ளன. உரையாடல் படிப்படியாக நகர்ந்து மெல்ல அதுவே சுருக்கமான மோதல்களாக மாறுகின்றன. இருந்தாலும், இந்த மோதலுக்கு மற்ற கதாபாத்திரங்கள் எவ்விதமாக எதிர்வினை செய்கின்றன என்பதில் நாம் தொடர்ந்து கவனம் செலுத்தும் வகையில் காட்சியை அமைத்துள்ளனர். இதில் உரையாடல் வாசற்படியில் நிகழ்கிறது. ஒரு கதாபாத்திரம் எதிர்பாராத விதமாக, தற்செயலாக உள்ளே வருகிறது. அதற்கு மற்ற கதாபாத்திரங்களின் எதிர்வினைகள் எப்படியிருக்கின்றன? என்பதைக் கீழ்க்காணும் புகைப்படங்களிலிருந்து கண்டுகொள்ளலாம்.(The International. Directed by Tom Tykwer. Columbia Pictures, 2009. )

ஒரு சுருக்கமான மாஸ்டர் ஷாட் மூலம் இந்தக் காட்சி துவங்குகிறது. காட்சியின் ஆரம்பத்திலேயே மாஸ்டர் ஷாட் பயன்படுத்தப்படுவதால், கதாபாத்திரங்கள் கதவிலிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறார்கள்? ஒவ்வொரு கதாபாத்திரங்களும் கதவின் நிலையிலிருந்து எங்கிருக்கிறார்கள்? கதாபாத்திரங்களுக்கு இடையே எவ்வளவு தூர இடைவெளி உள்ளது? போன்ற விபரங்கள் பார்வையாளர்களுக்குக் கடத்தப்பட்டுவிடுகின்றன.

அடுத்து க்ளைவ் ஓவனுக்கு (Clive Owen) ஒரு ஓவர் ஷோல்டர் ஷாட் (over-the-shoulder shot) கட் (cut) ஆகிறது. நாம் முன்பே பார்த்தபடி கேமராவை எங்கு வைக்கிறோம்? என்பதிலிருந்தும், ஒரு கதாபாத்திரத்தை எந்தக் கோணத்திலிருந்து காட்சிப்படுத்துகிறோம்? என்பதிலிருந்தும், காட்சியில் அக்கதாபாத்திரத்தின் நிலையைப் பற்றி பார்வையாளர்களுக்குப் புரியவைத்துவிட முடியும். அதன்படிதான், இங்கு க்ளைவ் ஓவனுக்கு, சற்று லோ ஆங்கிளில் வைத்து கேமராவில் படம்பிடித்திருக்கிறார்கள். அவர்தான் இந்தக் காட்சியின் ஹீரோ என்பதை வலியுறுத்தவே கேமரா இங்கே சற்று லோ ஆங்கிளில் வைத்து, அவரைத் திரையில் காட்டுகிறது. இதனால், அவர் மற்ற கதாபாத்திரங்களைக் காட்டிலும் அதிக முக்கியத்துவமானவராக இருக்கிறார்.

காட்சியின் சூழலும், அமைப்பும், கதாபாத்திரங்கள் நிற்கிற நிலையும் ஆரம்பத்திலேயே நன்கு நிறுவப்பட்டிருப்பதால், எவ்வித குழப்பமும் இன்றி கதவின் இருபுறமும் உள்ள காவல் அதிகாரிகளுக்கு அடுத்த ஷாட்டினைக் கட் செய்ய முடிகிறது. மேலும், ஷாட்டின் ஃப்ரேம் கட்டமைக்கப்பட்ட விதத்தினைக் கவனியுங்கள். குறிப்பாக மூன்றாவது ஃப்ரேம். இதில், கேமராவிலிருந்து தொலைவில் உள்ள மூன்றாவது கதாபாத்திரம், தெளிவாகத் தெரியும்படி ஃபோகஸில் உள்ளது. மற்ற இரு கதாபாத்திரங்களும் அவுட் ஆஃப் ஃபோகஸில் உள்ளன. எனவே, இந்த ஷாட்டைப் பொறுத்தவரை, மூவரில் நாம் யாரை மையமாக வைத்து காட்சியைப் பின்பற்றுகிறோம்? அல்லது இந்த ஷாட்டில் யார் முக்கியமானவர்? என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

யார் ஷாட்டின் மையமாக இருக்கிறாரோ, யார் பேசுவது முக்கியமாக இருக்கிறதோ, அவரை தெளிவாகக் காட்சிப்படுத்தி, மற்றவர்களை அவ்வளவு முக்கியத்துவத்துடன் காண்பிக்காமல் தவிர்த்திருக்கின்றனர். தொழில்நுட்ப ரீதியில், இந்த shallow depth of field-னை உருவாக்க லாங் லென்ஸ்கள் உதவுகின்றன, மேலும் இதனால் கேமராவிலிருந்து தொலைவில் உள்ள கதாபாத்திரத்தின் எதிர்வினைகளை மிகக்கச்சிதமாகப் படம்பிடிக்க முடிகிறது.

தற்செயலாக உள்ளே நுழைந்த கதாபாத்திரத்தின் பார்வையிலிருந்து போலீசார் இருவரும் தங்கள் கவனத்தைத் திருப்புகிறார்கள், இது இந்தக் காட்சி உண்மையில் திரைக்கதையில் திருப்புமுனைப் புள்ளி வெளிப்பாடுகளுக்குப் பதிலாக, கிளைவ் ஓவனின் தன்மையையும், அவன் தனது அதிகாரத்தை நிலைநிறுத்துவது பற்றியது என்பதையும் மேலும் வலியுறுத்துகிறது.

வாசற்படிகள், கதவுகள் அல்லது கடக்க வேண்டிய வாசல்கள் எப்போதுமே இயக்குநர்களுக்குச் சுவாரஸ்யமானவை, ஏனென்றால் அவை தடைகளாகச் செயல்படுகின்றன. வீட்டிற்குள் வந்து எதிராளியைப் பிடித்துவிட்டாலும் கூட, யாரும் தங்களைத் தொந்தரவு செய்துவிடாதபடி, அந்த எதிராளியுடன், வாசற்படியைக் கடந்துவிடுவதுதான், பார்வையாளர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன. வங்கியில் கொள்ளையடிக்கிற காட்சியைக் காட்டிலும், கொள்ளையடித்த பணத்துடன் எப்படி அவர்கள் அந்த வாசற்படியைக் கடந்துபோகிறார்கள்? என்பதில்தான் சுவாரஸ்யம் அதிகம். எனவே, வாசற்படிகள் எப்போதுமே கண்காணமுடியாத அரூபமானத் தடைகளாகத்தான் தோன்றுகின்றன. அதிலிருந்து எதிர்பாராவிதமாக, யார் எப்போது நுழைவார்கள்? தங்களது திட்டங்களைத் தவிடுபொடியாக்குவார்கள்? தங்களை ஆச்சரியத்திற்குள் தள்ளுவார்கள்? என்பது திருப்புமுனையின் முடிச்சுகள். ஆனால், இங்கு இந்த காட்சியைப் பொறுத்தவரை, அது திருப்புமுனைக்காகப் பயன்படுத்தப்படாமல், கதாநாயகனின் எதிர்வினையைப் பதிவுசெய்வதற்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. திரைக்கதையின் ஒரு நுணுக்கத்தை எப்படி, எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும் என்பது அந்தப் படைப்பாளியின் சுதந்திரம். மேலும், இந்த நுட்பம் சரியாக வேலை செய்திருப்பதால்தான், அது குறித்து இங்கே விவாதிக்கிறோம்.

இந்த வாசல்களில் நடத்தப்படுகிற உரையாடல்கள் எப்போதுமே குழப்பமானவை, நம்பிக்கையூட்டி அதை அடையவிடாமல் ஏங்கவைக்கிற தருணங்கள், ஏனென்றால் அதிகார சமநிலை எந்த வழியில் விழும் என்று யாருக்கும் உறுதியாகத் தெரியவில்லை. இரண்டு கதாபாத்திரங்கள் வாசல் வழியாக உள்ளே வந்து, பின்னர் அறைக்குள் சென்று அரட்டையடிப்பதை விட, இந்த வகை படப்பிடிப்பு முறை மிகவும் சுவாரஸ்யமானது.

எனவே, இதிலிருந்து ஒரு காட்சியை எந்த இடத்தில் வைத்து எடுக்கிறோம், என்பதும் மிக மிக முக்கியம் என்பதை உணர்ந்துகொள்கிறோம். தன் வருகையை வெறுக்கிற நண்பரின் பெற்றோர் உள்ளனர். ஒரு நாள் நண்பரின் பெற்றோர்கள் வெளியே சென்றுவிடுகின்றனர். உடனே நண்பன் உங்களை அழைத்து, ஏதோ சொல்ல விரும்புகிறான். பெற்றோர்கள் இல்லாததால் நீங்களும் அங்கு செல்கிறீர்கள். இருவரும் பேசிக்கொண்டிருக்கின்றனர். இதுதான் காட்சி என்றால், இக்காட்சியை வீட்டின் எந்த இடத்தில் வைத்து எடுக்கிறபொழுது பார்வையாளர்களுக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். நண்பர்கள் இருவரும் ஒரு அறையில் பாதுகாப்பாக பேசிக்கொண்டிருக்கின்றனர். இதில் பாதுகாப்புணர்வு இருக்கிறது. ஆனால், அவ்விரு நண்பர்களும் வீட்டின் கதவருகில் நின்று பேசிக்கொண்டிருக்கிறபொழுது, வெளியே சென்ற பெற்றோர் எப்போது வேண்டுமானாலும், வாசல் வழியே உள்ளே வரக்கூடும் என்ற நினைப்பானது, தங்களையறியாமலேயே பார்வையாளர்கள் மனதில் பதிந்து, காட்சியில் ஒரு சுவாரஸ்யத்தை அதிகரிக்கிறது. அதேதான், தி இண்டர்நேஷனல் படத்திலும் நடக்கிறது. வாசற்கதவருகே நடக்கிற உரையாடலில், எதிர்பாரா விதமாக உள்ளே யாராவது வந்துவிடுவார்களோ! என்ற பதற்றமும், அப்படி வந்ததினால் கதாபாத்திரங்களுக்கிடையே ஏற்படுகிற எதிர்வினைகளையும் சுவாரஸ்யமாகப் பதிவுசெய்ய முடிகிறது. ஒரு காட்சியை வெறுமனே நீங்கள் வாசற்கதவருகே வைத்து எடுக்கிறபொழுது, யார் எப்போது உள்ளே நுழையப்போகிறார்களோ! என்ற ஆர்வம் தானாகவே எழுகிறது.

இந்த வகையான காட்சியைப் படமாக்குகிறபொழுது, நடிகர்கள் அல்லது கேமராவில் சிறு அசைவுகள் இருக்க வேண்டும். அதுவே காட்சியின் உணர்வான படபடப்பை மேலும் துரிதமாக வெளிப்படுத்தும். மற்றபடி மிகவும் அடிப்படையான கேமரா செட்-அப்பே இதில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. நடிகர்களின் கவனத்தைச் செலுத்தும் விதத்தில் நீங்கள் அவர்களை வழிநடத்தும் விதம், இந்த ஷாட் கட் செய்கிறபொழுது அது எவ்வாறு இயங்குகிறது என்பதற்கான திறவுகோலாகும். நடிகர்கள் தங்கள் கதாபாத்திரத்திற்கான மனநிலையைத் தொடர்ந்து தக்கவைத்திருக்க வேண்டும். அப்போதுதான், அடுத்தடுத்த ஷாட் கட் செய்கிறபொழுதும், அந்த உணர்வுநிலையானது அறுந்துவிடாமல் தொடர்ந்து பார்வையாளர்களுக்கு உணர்ச்சியின் மனநிலையைக் கடத்த உதவும். எனவே, நடிகர்களுக்கு அதைத் தெளிவாகப் புரியவைத்து, உணர்வின் மனநிலையையும், காட்சியின் மையப்புள்ளி மீதான கவனத்தையும் வழிகாட்டுவது இயக்குனரின் கடமை.

கீழே கொடுக்கப்பட்டுள்ள உதாரணத்தின்வழியே, கேமராவின் நிலை மற்றும், கதாபாத்திரங்களின் நிலையை இன்னும் தெளிவாக உணர முடிகிறது.

1.3 குழு உரையாடலில் ஈடு செய்தல்.

மிகவும் நுட்பமான, நுண்ணிய உணர்வுகளைக் கடத்தும் உரையாடல் முரண்பாடுகளைக் காட்சிப்படுத்த, உங்கள் கேமரா வேலைசெய்யும் விதமும் மிகவும் நுணுக்கமாகச் செயல்பட வேண்டும். காட்சியின் உணர்வுநிலைக்கு ஏற்பதான் கேமராவின் செயல்பாடுகளும் அடங்கும். காட்சியில் எல்லாவகையான உணர்வுகளையும், நாம் உரையாடலின் வழியே அப்பட்டமாக வெளிப்படுத்த முடியாது. சிலவற்றை நுணுக்கமாகப் பார்வையாளர்களே உணர வேண்டும். எல்லாவித செய்திகளையும், வார்த்தைகளால் வெளிப்படுத்துவது நல்ல சினிமாவிற்கான அடையாளம் அல்ல. அதன்படிதான், சில நுணுக்கமான உணர்வுகளைப் பார்வையாளர்கள் புரிந்துகொள்ள கேமரா அங்கு உதவி செய்கிறது. கேமரா மற்றும் கதாபாத்திர நிலையை வைத்து நாம் எவ்வித நுட்பமான செய்திகளையும் உணர்த்திவிட முடியும்.

ஒரு உரையாடலில் எல்லா கதாபாத்திரங்களும் அதே ஈடுபாட்டோடு கலந்துகொள்ளும் என்று உறுதியாகக் கூற முடியாது. சில கதாபாத்திரங்கள் ஆர்வத்தோடு பங்கேற்கையில், இன்னும் சில கதாபாத்திரங்களோ அந்த உரையாடலில் கடைசிவரை ஒட்டாமல், விலகி நிற்கும். ஒருவேளை அவருக்குப் பிடிக்காத, உரையாட விரும்பாத தலைப்பில், மற்ற கதாபாத்திரங்கள் பேசிக்கொண்டிருப்பதால், உரையாடலில் போதிய ஆர்வமின்றியே அந்நபர் இருப்பார். இதை நாம் வெளிப்படையாக வார்த்தைகளால் உணர்த்த வேண்டிய தேவையில்லை. அவர் உரையாடலில் இருந்து விலகியிருக்கிறார், என்ற நுட்பமான உணர்வை, நடிகர்களின் நிலையை வைத்தும், கேமராவின் இயக்கத்தை வைத்தும் உணர்த்துகிறோம். உங்கள் கதாபாத்திரம் உரையாடலில் இருந்து விலகியிருப்பதை நீங்கள் உணர்த்த விரும்பினால், நடிகர்கள் மற்றும் கேமராவின் எளிய செட்- அப்கள் நீங்கள் விரும்பிய விளைவை உருவாக்கும்.

லாஸ்ட் இன் ட்ரான்சிலேஷன் (Lost in Translation) படத்திலிருந்து ஒரு காட்சி இங்கே உதாரணமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த ஃப்ரேமில் கதாபாத்திரங்கள் நின்று பேசுகிற நிலையைக் கவனியுங்கள். கதாபாத்திரங்களின் நிலை ஒரு முக்கோண வடிவத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றன. அவையனைத்தும், ஒன்றுக்கொன்று சமமான தொலைவில் நிற்கின்றன, இருந்தாலும் இது மூவருக்கும் இடையிலான சமத்துவ உணர்வை உருவாக்குவதைக் காட்டிலும், அவர்களுக்கிடையிலான (ஆற்றல் அல்லது சக்தி அடிப்படையிலான) ஏற்றத்தாழ்வுகளை உருவாக்குகிறது. ஏனென்றால், அவர்கள் மூவரும் ஒரு முக்கோண வடிவில் நின்றிருந்தாலும், அதில் இருவர் இன்னும் நெருக்கமாக உள்ளனர், ஒரு ஜோடியாக நிற்கின்றனர், அநேகமாக அவர்கள் இருவரும் ஒன்றாகவே இணைந்து வந்திருக்கிறார்கள், மூன்றாமவரைக் காட்டிலும், அவர்கள் இருவரும் இன்னும் சற்று நெருக்கமானவர்கள் என்ற ஏற்ற இறக்கங்கள் உள்ளன.

(Lost in Translation. Directed by Sofia Coppola. Focus Features, 2003.)

இந்தக் கருத்தை நிறுவுவதற்காக, துவக்க ஷாட் அந்த ஜோடியின் பின்னாலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. இதனால், தன் சொந்த ஆதாய நோக்குடன் தலையிடும் நபர் கேமரா சட்டகத்தில் கிட்டத்தட்ட மையத்தில் இருக்கிறார். இத்தகைய காட்சியமைப்பு, அவரைப் பார்வையாளர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவராகத் தோன்றச்செய்வதோடு, மேலும் அந்நபர் அவர்களுக்குரிய பிரதேசத்தை/ தனிப்பட்ட இடத்தை ஆக்கிரமிக்கிறார் என்பது தெளிவாகிறது. தம்பதிகள் இணைந்து வெளியே செல்கையில், இன்னொரு நபர் இவர்களூடாக வருவதை, இந்த ஷாட் அமைப்புகள் உணர்த்துகின்றன.


அடுத்த ஷாட்டைக் கவனியுங்கள். இதில் ஸ்கார்லெட் ஜோஹென்சனை (Scarlet Johansson) சட்டகத்தின் மையத்தில் வைத்திருக்கிறார்கள். யாரையாவது சட்டகத்தின் மையத்தில் வைப்பது பற்றி இதற்குமுன்பு கூறப்பட்ட கருத்தைப் பொறுத்தவரை, இது அவளை ஆதிக்கம் செலுத்தும் பாத்திரமாக மாற்றும் என்று நீங்கள் நினைப்பீர்கள். ஆனால், இந்நேரத்தில் ஒரு லாங்கர் லென்ஸ் பயன்படுத்தி, இந்த ஷாட்டை எடுத்திருக்கிறார்கள். நடிகர்களுக்கு நெருக்கமாக அந்த லென்ஸை வைத்துப் படம்பிடித்திருக்கின்றனர்; இதன் அர்த்தம், அவர்கள் பேசும்போது, அவர்களின் முகங்கள், அவளைச் சட்டகத்திற்குள் வடிவமைக்கின்றன. அவள் இப்போது உரையாடலிலிருந்து விலகி, மற்ற இருவரும் பேசிக்கொள்வதை, ஒரு கதாபாத்திரத்திலிருந்து மற்றொரு கதாபாத்திரமென மாறி மாறி கவனிக்கிறாள்.

அவளே பார்வையாளர்களின் மையமாக இருக்கிறார், ஆனால் மற்ற இரண்டு கதாபாத்திரங்களின் மையமாக இல்லை. அவ்விரு கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தவளாக அவள் இல்லை. ஏனென்றால், இவளைப் பொருட்படுத்தாது, அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் மிகத் தீவிரமாகப் பேசிக்கொண்டிருக்கின்றனர்.
இது, அந்த பெண் உரையாடலிலிருந்து விலகியிருப்பதை உணரவைக்கும் அதே வேளையில், மையக்கதாபாத்திரமான அப்பெண் மீது நம் கவனத்தை தொடர்ந்து குவித்து வைத்திருக்கச் செய்யும் மிகப் புத்திசாலித்தனமான வழிமுறை.
அடுத்து, இந்தக் காட்சியமைப்பின்பொழுது நடிகர்கள் மற்றும், கேமராவின் நிலை எப்படி அமைக்கப்பட்டிருக்கவேண்டும் என்பதைக் கீழ்க்காணும் உதாரணத்திலிருந்து அறிந்துகொள்ளலாம்.


⦁ தொடரும்….