கொரியன் சினிமா – மதர்

தான் பெற்ற பிள்ளைகளை ஒரு குறிப்பிட்ட வயதுவரை வளர்க்க வேண்டிய பொறுப்பு
பெற்றோர்களுக்கு உள்ளது. மனிதர்கள் மட்டுமல்ல, இயற்கையின் சங்கிலியில் இணைந்துள்ள
அனைத்து உயிரினங்களுக்குமே இந்த ‘தாய்மை’ என்ற விஷயம் பொதுவானது. ’காதல்’ என்ற
உணர்வு கூட, தன் குழந்தைகளைக் கவனமாகப் பாதுகாக்க வேண்டும் என்றதொரு
உணர்வின் மறைமுக வெளிப்பாடு எனவும் சொல்லப்படுகிறது. பிறக்கும் குழந்தை ஆண்,
பெண் என இரு உயிர்களின் சங்கமம். எனவே, அக்குழந்தையைப் பராமரித்து
வளர்க்கவேண்டியது இருவரின் பொறுப்பாகிறது. அப்படி, அந்த ஆண், பெண் இருவரையும்
இணைத்துவைக்கும் மன்மதப் பசைதான் ‘காதல்’ என உளவியலாளர்கள் கூறுகின்றனர்.
தாய்மை என்ற அன்பிற்குமுன் உலகத்தில் எதுவுமே ஈடு இணையாகாது என்று கவிஞர்கள்
முதல் அனைவரும் பாடியுள்ளனர். ஆனால், அதே, அளவுக்கு மீறிய தாய்மையின்
அரவணைப்புதான், தன் தாயின் கட்டுப்பாட்டை மீறி சிந்திக்கமுடியாதவர்களாக, கடைசிவரை
அந்த தாயின் கட்டுக்குள்ளேயே தன்னை அடக்கிக்கொள்பவர்களாகவும் ஆக்கிவிடுகிறது.
இதிலிருந்து விலங்கினங்கள் சற்றே மாறுபடுகின்றன. தான் பெற்ற குட்டிகள், கடைசி வரை
தன்னுடனேயே இருக்கவேண்டும் என்று அவை ஆசைப்படுவதில்லை. அந்தக் குட்டிகள்
வளர்ந்து தானே இரைதேடும் வரையில், அவற்றிற்கு அனைத்தையும் கற்பிக்கும் தாய்ப்பறவை,
ஒரு கட்டத்தில் அவற்றைப் பிரித்து அனுப்பிவிடுகின்றன. அல்லது, தாயிடமிருந்து சேய்கள்
பிரிந்து தனக்கான வாழ்க்கையை வாழத்துவங்கிவிடுகின்றன. அதுவே, இங்கு மனிதர்கள்
தாய்மை என்ற பெயரில், கடைசி வரை அந்தப் பிள்ளைகள் தன் கட்டுப்பாட்டிலேயே
இருக்கவேண்டும் எனவும், தன் சொல்லை மீறி எதுவும் அவர்கள் செய்துவிடக்கூடாது எனவும்,
அவர்களுக்கான துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமைகூட, பெற்றோர்களான எங்களுக்கே
உண்டு என, அந்த தாய்மை என்ற அன்பை, அறியாமையால் வன்முறைக்கருவியாக
உபயோகிக்கத் துவங்கிவிடுகின்றனர். தாய்மையின் மட்டுமீறிய அன்பு, இறுதியில் தங்கள்
நிம்மதிக்கே கேடாக முடிகிறது. ஆம், எல்லை மீறிய தாய்மையின் அன்பானது எது சரி? எது
தவறு? என்று நீதியின் அடிப்படையில் யோசிக்கும் தன் அறிவுக் கண்ணையும் மறைத்துவிடும்
என்பதற்கு உதாரணம்தான் போங் – ஜுன் – ஹோவின் ‘மதர்’ திரைப்படம்.


போங் – ஜூன் – ஹோ(Bong Joon-Ho), என்ற தென்கொரிய திரைப்பட இயக்குனரின் பெயர்
ஏற்கனவே, சினிமா ரசிகர்கள் மத்தியில் வெகு பிரபலம். தி ஹோஸ்ட்(the host), மெமரீஸ்
ஆஃப் மர்டர் (Memories of Murder), ஓக்ஜா (Okja) மற்றும் கடந்த வருட கான் திரைப்பட

விழாவில் பரிசு பெற்ற பாரசைட்(Parasite) போன்ற திரைப்படங்களை எடுத்த போங் – ஜுன் –
ஹோவின் ‘மதர் (Mother)’ திரைப்படம் 2009ஆம் ஆண்டு வெளியானது. ”கண்மூடித்தனமான
அன்பு, அது தனக்கு வேண்டாதவர்களைக் கொல்லும் அளவிற்குத் தீவிரமானதாக இருக்கிறது”
என்பதைத்தான் இப்படம் நமக்கு உணர்த்துகிறது. இந்தக் கருத்தை படத்தின் மைய இழையாக
எடுத்துக்கொண்டால், போங் – ஜுன் - ஹோ , இந்தக் கருத்தை ஒரு சினிமா எனும் காட்சி
ஊடகத்தின் வாயிலாக, பார்வையாளர்கள் முன் எப்படிப் படைக்கிறார் என்ற விதத்தில்தான்,
அவர் ஒரு தேர்ந்த இயக்குனர் என்பதை நமக்கு உணர்த்துகிறார்.
இத்திரைப்படத்தின் கதையோட்டத்தில் பல கதாபாத்திரங்கள் வருகின்றன. ஆனால், பிரதான
கதை, தாய் – மகன் என இருவருக்குள்தான் நடக்கிறது. இந்த இருவரின் கதையையும்
சுவாரஸ்யமான நடையில் சொல்வதற்காகத்தான் மற்ற கதாபாத்திரங்கள் இணைகின்றன.
சிந்திக்கும் திறன் குறையுடைய, அதாவது கிட்டத்தட்ட ஆட்டிஸம் (autism) போன்று ஒரு
குறைபாட்டால், பாதிக்கப்பட்டவனான யூன் – டூ -ஜூன் (Yoon Do-Joon) எனும் இளைஞன்
மீது அளவுகடந்த அன்பு செலுத்தி, அவனைத் தன் உயிருக்கும் மேலாகப் பாதுகாத்து வருகிற
தாய், இவர்களுக்கிடையான கதையை, துப்புறியும் புனைகதை பாணியில், ஒரு
கொலைக்கான மர்மத்தை விடுவிக்கும் சஸ்பென்ஸோடு நகர்த்தியிருக்கிறார் இயக்குனர்.
பொதுவாக தாய் – மகன் பாசம் என்பது அதிகமான நாடகீயத் தருணங்களால் நிரப்பப்பட்டு,
டிராமா என்ற சினிமா வகைப்பாட்டிற்குள் சென்றுவிட வாய்ப்புள்ளது. ஆனால், இப்படமோ,
போங் – ஜூன் – ஹோவின் படங்களுக்கேயுரிய த்ரில்லர் வகைபாணியில்
கதைசொல்லப்பட்டிருக்கிறது.


தான் செய்த செயல்களையே எளிதில் மறந்துவிடக்கூடிய குணம் கொண்டவன் யூன் – டூ –
ஜூன். இவன் செய்யாத தவறுகளுக்காகக் கூட, இவன் நண்பன் இவனை சில நேரங்களில்
சிக்கவைத்துவிடுகிறான். ஆனால், அந்தத் தவறு குறித்து யோசித்து, அதை நான்
செய்யவில்லை என்று சொல்லக்கூடிய மனநிலையில் யூன் – டூ – ஜூன் இல்லை. எனவே,
அந்நிலையில் தன் மகனைக் காக்கக்கூடிய இடத்தில் அந்தத் தாய்தான் இருக்கிறார். தாய், தன்
மகனை கிட்டத்தட்ட ஒரு பிறந்த குழந்தையைப் போலக் கவனித்துக்கொள்கிறார். அவன்
சிறுநீர் கழித்துவிட்டு சென்ற பின்பு, அந்த இடத்தை சுத்தப்படுத்துவது, உணவு ஊட்டிவிடுவது
என அனைத்தையும் அவரே செய்கிறார். மேலும் அந்த தாய், அக்யூ – ஃப்ரஷர் மருத்துவ
சிகிச்சை முறையில் கைதேர்ந்தவர். அத்தோடு, தன் கடையில் இயற்கையான
பொருட்களையும், மூலிகைகளையும்கூட விற்பனை செய்கிறார். ஆரம்பக் காட்சியில்,
சாலைக்கு அந்தப்புறமாக ஒரு நாயுடன் விளையாடிக்கொண்டிருக்கிற தன் மகனைப்

பார்த்துக்கொண்டே, காய்ந்த மூலிகை போன்ற ஏதோவொன்றை நறுக்கொண்டிருக்கிறார்
தாய். அந்நேரத்தில் சாலையில் வேகமாகச் சீறிப்பாய்கிற பென்ஸ் கார் ஒன்று, மகனை
இலேசாக உரசிச்சென்று விடுகிறது. பதறிப்போய் சாலையைக் கடந்து மகனின் உடம்பில்
ஏதேனும் அடிபட்டிருக்கிறதா? என்று பார்க்கிறார். தன் கைகளால், மகனின் உடல் தொட்டு
பரிசோதிக்கிறாள். ரத்தக்கறைகள் தெரிகின்றன. மகனின் உடம்பிலிருந்து ரத்தம் வருகிறது
என்று தாய் பதறுகிறாள். தாய் மற்றும் மகன் இருவருக்குமான பாசப்போராட்டம்தான்
மொத்தப் படமும், எனில் அதை திரைக்கதையின் விதிப்படி படம் ஆரம்பித்த முதல் சில
நிமிடங்களிலேயே பார்வையாளர்களுக்கு வெளிப்படுத்திவிட வேண்டும். அப்படி, இங்கு மகன்
அடிபட்டதைப் பார்த்துத் துடிக்கிற தாயைக் காட்சிப்படுத்தியிருக்கின்றனர். இங்கு, அந்தத்
தாயின் பாசம் சிறப்பாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. எப்படியெனில், கார், யூன் – டூ –
ஜூனை இலேசாகத்தான் உரசிச்சென்றிருக்கிறது, அவனுக்குக் காயங்கள் ஏதும் படவில்லை.
அதேநேரத்தில் மகனை வேடிக்கை பார்த்துக்கொண்டே மூலிகைகளை நறுக்கிக்கொண்டிருந்த
தாய், மகன் அடிபட்டது தெரிந்ததும் அந்தப் பதற்றத்தில் தெரியாமல், தன் விரல்களைத்
தானேக் கத்தரித்துவிடுகிறார். அந்த இரத்தம்தான் மகனின் உடலில் பட்டு வெளித்தெரிகிறது.
ஆனால், தாயோ, அது மகனின் உடலிலிருந்து வருவதாக மேலும் கலக்கமடைகிறாள். எனவே,
தன் உயிரைக்கூட பொருட்படுத்தாது, தன் மகனின் உயிர் மீது அளவு கடந்த அன்பு
வைத்திருக்கும் தாயாக, கதையின் ஆரம்பத்திலேயே அவரை நாம் அடையாளம்
கண்டுகொள்கிறோம். அவர் தன் மகன்மீது எத்தகைய பாசம் வைத்திருக்கிறார் என்பது
தெளிவாகவே புரிந்துவிடுகிறது. அப்படிப்பட்ட மகன் மீது, கொலைப்பலி விழுந்தால் அந்தத்
தாய் என்ன செய்வாள்? மனநலம் சரியில்லாத அந்த மகனை, கொலை செய்திருக்கிறான்
என்று சொல்லி காவலர்கள் கைது செய்து, சிறையில் அடைத்தால், தன் மகனை மீட்பதற்காக
அந்தத் தாய் எவ்வளவு தூரம் செல்வாள்? உண்மையான கொலையாளி யார் என்பதை
எப்படிக் கண்டுபிடித்து தன் மகனை மீட்கப்போகிறாள்? கொலையாளியை நேரில் பார்த்த
ஒருவன் தன் மகன் மட்டுமே, ஆனால் அவன்கூட தன் ஞாபகத்திறன் குறைவால்
கொலையாளியை மறந்துவிடுகிறான், சூழ்நிலை இப்படியிருக்க தன் மகனை நிரபராதி என்று
அந்தத் தாய் எப்படி நிரூபிப்பார்? இந்தக் கேள்விகளுக்கான பதில்தான் மீதித் திரைப்படம்.


பள்ளி மாணவியைக் கொலை செய்து, மாடியில் எல்லோருக்கும் வெளியில் தெரியும்படி,
தலையும், பாதி உடலும் கீழே தொங்குவதுபோல அந்தப் பிணத்தை, கொலையாளி
தொங்கவிட்டுச் சென்றுள்ளான். கொலை செய்யப்படுவதற்கு முன்பு, அந்தப் பெண்ணைப்
பின்தொடர்ந்து வந்தவன் யூன் – டூ – ஜூன்தான் என்பதற்கான ஆதாரங்களின்
அடிப்படையிலேயே அவன் கைது செய்யப்பட்டிருக்கிறான். அந்தப் பெண்ணை கடைசியாகச்
சந்தித்தபொழுது என்ன நடந்தது? என்பது குறித்து அவன் எவ்வளவுதான் யோசிக்க
முயன்றாலும், எதுவும் நினைவுக்கு வரவில்லை. இரு நெற்றிப் பொட்டின் பக்கமும், தன்
கைவிரல்களை வைத்துச் சுற்றிப்பார்க்கிறான். அவனுக்கு ஏதேனும் மறந்துவிட்டால், அதை
ஞாபகத்தில் கொண்டுவருவதற்காக, தன் இரு கைகளையும் நெற்றிப்பொட்டில் வைத்துச்
சுற்றுவதே அவன் வழக்கம். அந்தப் பழக்கம் அவனுக்குச் சில சமயங்களில் கைகொடுக்கவும்
செய்திருக்கிறது. சிறு வயதில் தன் தாயே, தனக்கு விஷம் வைத்து கொல்ல முயன்றது, என தன்
ஐந்து வயதில் நடந்ததைக் கூட, ஞாபகத்தில் கொண்டுவந்துவிடுகிறான். இதனால், இனிமேல்
தன் தாயைப் பார்க்கப்போவதில்லை என்று, சிறையில் முடிவுசெய்கிறான். அந்த ஞாபகத்தை
அழித்துவிடுவதற்கு அக்கு ஃப்ரஷர் மூலம் முயற்சிக்கிறார் தாய், ஆனால், மகன் அதற்கு
இணங்காமல் சிறைக்குள் ஓடிவிடுகிறான். விஷம் கொடுத்து குடிக்கச் சொன்னது
உண்மைதான், ஆனால், அதை உனக்கும் கொடுத்து, நானும் குடித்து, இருவருமே நம் உயிரை
மாய்த்துக்கொள்வோம், இந்த உலகம் நமக்கு வேண்டாம் என்று நான் எடுத்த முடிவு, உன்னை
மட்டும் கொலை செய்வதற்காக அப்படி நான் செய்யவில்லை, என்று அழுது புலம்பினாலும்,
யூன் – டூ -ஜூன் கேட்பதாகயில்லை.
அதேபோல, முன்பொரு சமயம், தன்னை உரசிச்சென்ற பென்ஸ் காரின் கண்ணாடியைத் தன்
நண்பன் உடைத்துவிட்டு, அந்தப் பழியை யூன் டூ ஜுன் மேல் போட்டுவிடுகிறான். பென்ஸ்
கார் வைத்திருப்பவர்களை கோல்ஃப் விளையாட்டு மைதானத்தில் வைத்து மிரட்டி, அவர்கள்
வைத்திருக்கிற கோல்ஃப் மட்டையைக் கூட தெரியாமல் எடுத்து வந்துவிடுகிறான் நண்பன்.
காவலர்கள் கேட்கிறபொழுது, ‘நான் தான் கார் கண்ணாடியை உடைத்தேன்’ என்று குற்றத்தை
ஒப்புக்கொள்கிற யூன் டூ ஜூன், பிற்பாடு கொலைப்பழியில் சிறையில் இருக்கையில், அந்த

பள்ளி மாணவி குறித்து ஏதாவது யோசித்துப் பார் என்று தாய் வற்புறுத்த, தன் தலையில் கை
வைத்து யோசிக்கிறேன். ஞாபகம் வருகிறது. தாய் பரவசப்படுகிறாள். ஆனால், அவன்
சொல்லும் பதில்தான் நமக்கு ஏமாற்றமளிக்கிறது. ‘அந்தக் கார் கண்ணாடியை நான்
உடைக்கவில்லை, இப்போதுதான் அது ஞாபகம் வருகிறது’ என்கிறான். என்றோ நடந்தது,
இன்றைக்கு அவனுக்கு ஞாபகம் வருகிறது. இதுதான், யூன் – டூ- ஜுனின் பிரச்சினை.


கார் கண்ணாடியை உடைத்துவிட்டு, தன் மகன் மீது பழிபோட்டவன் ஒருவேளை இந்தக்
கொலையைச் செய்திருக்கலாம், அதைத் தன் மகன்மேல் போட்டிருக்கலாம் என்று சந்தேகித்து,
நண்பன் வீட்டில் யாருமில்லாதம்பொழுது, அவன் வீட்டிற்குள் நுழைகிறார். துணி
அலமாரியில் மறைத்துவைக்கப்பட்டிருந்த கோல்ஃப் மட்டையில் இரத்தக்கறையைப்
பார்த்ததும், இவன்தான் கொலைசெய்திருப்பான் என்று, கோல்ஃப் மட்டையைக் கை
படாதவாறு பாலித்தீன் பையால் சுற்றியபடி, அங்கிருந்து வெளியே செல்ல முயற்சிக்கையில்,
தன் காதலியுடன் உள்ளே நுழைகிறான் நண்பன். காதலிக்கும், அவனுக்குமான
கூடல்காட்சிகளெல்லாம் முடிந்தவுடன், இருவரும் மெய்மறந்து உறங்கிக்கிடக்கையில்,
அவர்களை எழுப்பிவிடாதவாறு, பூனை போல மெல்ல அடியெடுத்து அந்த வீட்டிலிருந்து
வெளியேறி விடுகிறார் தாய். வெற்றிப் பெருமிதத்தோடு கோல்ஃப் மட்டையைக் காவல்
நிலையத்தில் ஒப்படைக்கிறார். ஆனால், இந்த மொத்த மெனக்கெடலும் வீண்
என்பதுபோலத்தான் முடிவு கிடைக்கிறது. ஏனெனில், அது இரத்தக்கறையே அல்ல.
காதலியின் உதட்டுச்சாயக் கறை. காவலர்கள் விசாரித்து, அவன் குற்றமற்றவன் என்பதையும்,
அதற்குரிய செல்போன் வீடியோ ஆதாரங்களையும் சரிபார்க்கின்றனர். இப்போது, அந்த
நண்பன், தாயாரைப் பார்க்கிறான். தான் இல்லாதபொழுது, தன் வீடேறி வந்து, இப்படித்
தன்னைக் காவல்நிலையம் வரை இழுத்துவிட்டிருக்கிற அந்த தாயைப் பார்க்கிறான். தாய்
தலைகுனிகிறாள். பின்பு, அந்தத் தாயின் மனநிலையைப் புரிந்துகொண்டு, ஒரு அசரீரி போல,
’காவலர்கள் கண்டுபிடிக்காவிட்டாலும், உன் மகனை விடுவிக்க, உண்மையான
குற்றவாளிகளை நீயே கண்டுபிடி’ என்று பிற்பாடு அவன் சொல்கிற வார்த்தைகள்தான், அந்த
தாய்க்கான உந்துதலாக உள்ளது. மீண்டும், கொலையாளியைத் தேடும் படலம் தொடர்கிறது.
முதிய பருவத்தில், கொலையாளிகளைத் தேடுகையில், அதற்குரிய உடல் பலமும் வேண்டும்.
அந்த உடல் பலமாக இருக்கிறான் அந்த நண்பன். அவனும் இந்தத் தாய்க்கு உதவுகிறான்.
பிடிபடுகிறவர்கள், சந்தேகத்திற்குரியவர்களை அடித்து உதைத்து ஆதாரங்களைச்
சேகரிக்கிறான். அது அந்தத் தாய்க்கு உதவியாக இருக்கிறது. கொலை செய்யப்பட்ட அந்த
பள்ளி மாணவியின் செல்போன், தாயாரின் கைகளில் கிடைத்துவிடுகிறது. அதில், தான்
உறவுகொண்டவர்களின் புகைப்படங்களை அந்தப் பெண் படம்பிடித்து வைத்திருக்கிறாள்.
ஆகவே, இவர்களில் எவரேனும் அந்தப் பெண்ணைக் கொலைசெய்தவனாக இருக்கலாம்,
என்று, அந்த செல்போனுடன் தன் மகனைப் பார்க்கச் செல்கிறார். யூன் – டூ – ஜூனும்
ஒவ்வொரு புகைப்படமாகப் பார்க்கிறான். அன்று அந்த பள்ளி மாணவியைப் பின்தொடர்ந்து
செல்கையில், அந்தக் கட்டிடத்தில் ஏற்கனவே ஒருவர் அங்கிருந்தார் என்பது அவனுக்கு
ஞாபகம் வருகிறது. அவரது முகம் கொஞ்சம் வயதான தோற்றத்துடன் இருந்தது என்று
சொல்ல, செல்போனில் இருக்கிற வயதானவர் ஒருவரின் புகைப்படத்தை எடுத்து மகனின்
முன்னால் காட்டுகிறார். மகன் தன் மனக்கண்ணில் ஞாபகப்படுத்தியதும், செல்போனில்
இருந்ததும் ஒரே முகம்தான் என்று ஊர்ஜிதமாகிறது. இதைவிட முக்கியமானது, அந்த வயதான
நபரை, இந்தத் தாய் ஏற்கனவே பார்த்திருக்கிறார்.


ஒருமுறை குடையின்றி மழையில் நனைந்து செல்கையில், பழைய பொருட்களை
ஏற்றிக்கொண்டு, வண்டியை இழுத்துச்சென்றவரிடமிருந்து, பழைய குடையொன்றை
வாங்கினார். அவரின் முகம்தான், இப்போது செல்போனில் பார்த்த முகம், யூன் – டூ – ஜூன்
அந்தக் கட்டிடத்தில் பார்த்ததாகச் சொல்கிற முகம். தாய், அந்தக் காயலாங்க் கடையை
நோக்கிச் செல்கிறார். தன் ஆயுதமாக அக்யூ ஃப்ரஷர் ஊசிகளையும் எடுத்துச் செல்கிறார்.
ஆபத்து எனில், ஊசிகளின் மூலம் அந்தக் கொலையாளியை மூர்ச்சையடையச் செய்துவிடலாம்
என்றும் ஒரு எண்ணம் வைத்திருக்கிறார். ஆனால், அந்தத் தாயார் எதிர்பார்த்ததற்கு முற்றிலும்
மாறான பதில்தான் அந்த முதியவரிடமிருந்து வருகிறது. இதைச் சற்றும் எதிர்பாராத அந்தத்
தாய், இதுவரையிலும் தாய்மையினால் பாசப்போராட்டம் நடத்திய தாய், மிக வன்முறையாக
நடந்துகொள்கிறாள். கதையின் இறுதி முடிச்சு, மற்றும் எதிர்பார்ப்புகள் உடைபடும் தருணம்
அதுவாகவே இருக்கிறது. எனவே, திரைப்படத்தின் சுவாரஸ்யம் கருதி அதை இங்கு
சொல்லவில்லை. இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்னதுபோல, அளவு கடந்த
கண்மூடித்தனமான அன்பு, எப்படி வன்முறையாக மாறுகிறது என்பதற்கு யூன் – டூ – ஜூனின்
தாயாரது செயல்களும் ஒரு உதாரணம். பிற்பாடு, அந்த ஞாபகங்களை மறக்க, தன்
உடலிலேயே அந்த அக்கு ஃப்ரஷர் ஊசிகளைச் செலுத்திக்கொண்டு, ஆனந்தக் கூத்தாடும்
அந்தக் கூட்டத்தோடு கரைந்துபோகிறார் தாயார்.
- தொடரும்