கொரிய சினிமா - 1

ஒட்டுண்ணி மனிதர்கள் - பாரசைட

நஃபீஸ் அகமது & ப்ரூக் ஹெய்ன்ஸ்

புகழ்பெற்ற இயக்குனர் போங் ஜுன் – ஹோவின் புதிய படம் ‘பாரசைட்’, இயக்குனராக போங்கின் வாழ்க்கையில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த கொரிய சினிமாவிலும் இது குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இருக்கிறது. இப்படம், திரைப்பட விழாவின் தலைசிறந்த பரிசைக் கைப்பற்றியிருக்கிறது. இந்தப் புகழ்பெற்ற தென்கொரியத் திரைப்படம், கேன்ஸ் 2019-ல் புகழ்பெற்ற பாம் டி’ஓர் விருதினைப் பெற்றிருக்கிறது. பாம் டி’ஓரை வென்ற முதல் தென்கொரியத் திரைப்படமாக, வரலாற்றில் அது தன் இடத்தைப் பிடித்துக்கொண்டது. கொரிய சினிமாவின் 100வது ஆண்டு விழாவுடன் ஒத்துப்போகும் இந்த சாதனை உறைக்கக்கூடியதாய் உள்ளது. 

ஆனால், இது எதிர்பாராமல் நிகழ்ந்தவொன்று என, படத்தின் இயக்குனர் போங் ஜுன் - ஹோ சொல்கிறார். 
”நான் கேன்ஸ் திரைப்பட விழாவிற்குச் சென்றபொழுதும் கூட, உண்மையில் இதை எதிர்பார்க்கவில்லை, என் வீட்டில் அந்த வெற்றிப்பதக்கத்தைப் பார்த்தபோது, ”ஓ., அது ஏன் இங்கேயிருக்கிறது? (சிரிக்கிறார்) என்றுதான் நினைத்தேன்.” என்று போங் கூறுகிறார். 


திரைப்பட ஜானர் மற்றும் அவரது நிரந்தர உலகளாவிய முறையீடு:

இம்முறை, இயக்குனர் போங், தென் கொரியாவில் நிதி மற்றும் சமூக சமத்துவமின்மையை படத்தின் குறிக்கோளாய்க் கொண்டு செயல்பட்டிருக்கிறார். ஒரு குறைந்த வர்க்கக் குடும்பத்தின் கதையின் மூலம் படம் ஆரம்பமாகிறது. அவர்கள், செல்வந்தர்களின் வாழ்க்கை முறைகளில் ஊடுருவ, கவர்ச்சிகரமான வாழ்க்கைமுறையில் வாழும் பார்க் குடும்பத்தினரைக் கவனித்துக்கொள்ளும் வேலைகளில் ஈடுபடுவதைக் காட்டுகிறது. 

கேன்ஸின் சிறந்த பரிசை வென்றெடுக்கும்பொழுது, போங் போன்றவர்கள் அதுவரையில் குறைந்த அளவிலான வெற்றியையே பெற்றுள்ளனர். கேன்ஸ் அங்கீகாரம் மற்றும் ஜானர் வகைத் திரைப்படத் தயாரிப்பின் இந்த அசாதாரண சந்திப்பை பிரான்ஸ் மற்றும் தென் கொரியாவில் அதன் நிதிசார்ந்த வெற்றிக்கான ஒரு காரணியாக போங் காண்கிறார். மேலும் இந்தப் படம் உலக பாக்ஸ் ஆபீஸில் அதிக வசூல் செய்த பாம் டி’ஓர் விருது வென்ற திரைப்படமாக இருக்கிறது
”நான் ஜானர் அடிப்படையிலான, திரைப்படங்களையே எடுக்கிறேன், மற்றும் இத்தகைய ஜானர் திரைப்படங்களுக்கு அவற்றின் சொந்த எதிர்பார்ப்புகள் உள்ளன. இது பார்வையாளர்களை ஈர்க்கும் என்று நான் நினைக்கிறேன்.” என்று போங் கூறுகிறார். ”நீங்கள், கேன்ஸின் பாம் டி’ஓர் விருது வென்ற படங்களின் பட்டியலைப் பார்க்கிறபொழுது, பல்ப் பிக்‌ஷன் போன்ற திரைப்படங்களைத் தவிர, பலவகை ஜானர் திரைப்படங்கள் இல்லை, எனவே, இது அதிக பாக்ஸ் ஆபீஸ் வசூலுக்குப் பங்களிப்பு செய்திருக்கிறது.” என்கிறார். மேலும், படத்தின் கதை மற்றும் கதைமாந்தர்கள் குறித்து, இயக்குனர் போங் ஜுன் – ஹோவுடன் நடத்திய நேர்காணல்:

படத்திற்கு ’பாரசைட்’ என்று தலைப்பு வைத்திருப்பதற்கான அர்த்தம் என்ன?

முதலில், பாரசைட் (ஒட்டுண்ணி) ஒரு உயிரினத் திரைப்படமாகவோ அல்லது எஸ்.எஃப் படமாகவோ இருக்கும் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். இன்னும் அதிகமாக படத்தின் தலைப்பு, என் முந்தைய படமான ஹோஸ்டுடன் (The Host) ஒரு தொடர்பை உருவாக்குகிறது. ஆனால், இந்தப் படத்தின் கதாபாத்திரங்கள் நிஜ உலகில் வாழும் ஒரே குடும்ப உறுப்பினர்கள். சக வாழ்வு அல்லது கூட்டாகச் சேர்ந்து வாழும் உறவிலும், மற்றவர்களுடன் சேர்ந்து வாழும் வாழ்வை நம்புகிறவர்களாகவும் அவர்கள் இருக்கிறார்கள், ஆனால், அது நடைமுறை வாழ்வில் சாத்தியப்படாமல் போகவே, அவர்கள் இந்த ஒட்டுண்ணி உறவுக்குள் தள்ளப்படுகிறார்கள். நீங்கள் ஒரு வளமான வாழ்க்கையை ஒன்றாகச் சேர்ந்து வாழ விரும்பும்போது எழும் நகைச்சுவை, திகில் மற்றும் சோகத்தைச் சித்தரிக்கும் செயல், அதுவொரு சோகமான முடிவைக் கொண்டிருக்கிறது என்று நம்புகிறேன். இது உங்களுக்கான வாழ்க்கை அல்ல. இது உங்களுக்கு விதிக்கப்பட்ட யதார்த்தமான வாழ்க்கை அல்ல. முற்றிலும், நீங்கள் யதார்த்த வாழ்க்கைக்கு எதிராக ஓடுகிறீர்கள், அதுதான் நாம் கனவுலக வாழ்க்கை வாழ்வதில் எவ்வளவு கஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதை உணர்த்துகிறது. எனது முந்தைய திரைப்படத் தலைப்பான Memories of Murder போன்று, அசல் கொரியத் தலைப்பாக அல்லாமல், ’பாரசைட்’ என்பது முரணான தலைப்பு. மெமரீஸ் ஆஃப் மர்டர் என்பதில், “சூடான, இனிமையான நினைவுகள்” என்ற பொருளையும் அது தன்னகத்தே கொண்டுள்ளது. ஒரு கொலையின் சூடான, நாஸ்டாலஜிக் நினைவுகளை ஒருவர் எப்படி வைத்திருக்க முடியும்? அவ்வாறு செய்வது தவறா? ஹ்வாசோங் தொடர் கொலை வழக்கின்மூலம், ஒரு சகாப்தத்தின் நினைவுகளைப் படம் சித்தரிக்கும் அதேவழியில், ’பாரசைட்’ அதன் தலைப்பில், ஒரு முரண்பாடான நுணுக்கத்தைக் கொண்டிருக்கிறது. 


’பாரசைட்’ படத்திற்கான ஜானரை, எவ்வாறு வகைப்படுத்தலாம்?

இதுவொரு ஹ்யூமன் ட்ராமா, ஆனால், சமகாலத்துடன் வலுவாக ஊக்குவிக்கப்பட்ட ஒன்று. படத்தின் மையம், தனித்துவமான மற்றும் தனிப்பட்ட சூழ்நிலைகளின் ஒரு மையச்சரடைக் கொண்டிருந்தாலும், இது உண்மையான உலகில் மிகச்சிறப்பாக நடக்கக்கூடிய ஒரு கதை. செய்தி அல்லது சமூக ஊடங்களில் இருந்த ஒரு சம்பவத்தை அப்படியே எடுத்து திரையில் வைத்துவிட்டது போன்ற பிரமையை ஒருவர் அடையலாம். எனவே, அந்தவகையில், இது மிகவும் யதார்த்தமான நாடகம், ஆனால், இதே படத்தை, வேறு சிலர், க்ரைம் ட்ராமா, காமெடி, சோகமான மனித நாடகம் (Sad Human Drama), அல்லது இதுவொரு பயங்கரமான த்ரில்லர் வகைத் திரைப்படம் என்று பிரித்துப்பார்த்தாலும், நான் அதை எதிர்க்கமாட்டேன். ஏனெனில், பார்வையாளர்களின் எதிர்பார்ப்புகளை முறியடிக்க நான் எப்போதும் முடிந்தவரை முயற்சிக்கிறேன், மேலும் ’பாரசைட்’ இந்த வழியில் வெற்றிபெறுகிறது என்றே நம்புகிறேன். 

’பாரசைட்’ படத்தில் மையமாக உள்ள குடும்பத்தவர்கள் யார்?

அவர்கள் ஒரு குறைந்த வர்க்க குடும்பம், ஒரு அரை- அடித்தளக் குடியிருப்பில் வசிக்கிறார்கள். அவர்கள் ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள், அவர்கள் வாழ்வில் சிறப்பான விஷயம் என எதுவுமில்லை. எனினும், கிடைத்த அந்த வாழ்க்கையைத் தொடர்ந்து வாழ்வது கூட கடினமாக உள்ளது. தந்தை, ஏராளமான தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு, அனைத்தையும் தோல்வியில் முடித்து, அதிகப்படியான வணிகத் தோல்விகளைச் சந்தித்தவர், ஒரு விளையாட்டு வீரராகப் பயிற்சி பெற்ற தாய், ஒருபோதும் தன் வாழ்வில் ஒரு குறிப்பிடும்படியான வெற்றியைப் பெற்றிருக்கவில்லை, அத்தகைய பெற்றோர்களின் மகனும் மகளும், பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் பல சந்தர்ப்பங்களில் தோல்வியடைந்துள்ளனர். இது ஒருவகைக் குடும்பம். ’பாரசைட்’ படத்தில் இரு வகையான குடும்பங்கள் காட்டப்படுகின்றன.


இரண்டாவது குடும்பம், அப்படியே இதற்கு நேர்மாறான வாழ்க்கையை வாழ்ந்துவருகிறது. அது, ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை அதிகாரியாகப் பணிபுரியும் மிஸ்டர்.பார்க் குடும்பம் (கொரியாவில் சேபால் போன்ற எந்தவொரு பெரிய வணிக நிறுவனங்களுடனும் இது தொடர்புபடுத்தப்படவில்லை.) திறமையானவர், புதிய பணக்காரக்குடும்பம். மிஸ்டர். பார்க் வேலைபார்க்கக்கூடியவர். அவரது அழகான இளம் மனைவி, இவர்களுக்கு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் வயது கொண்ட பெண் மற்றும் சிறுவயது மகனும் உள்ளனர். நவீன நகர்ப்புற உயர்தர வர்க்க மக்களிடையே, அவர்கள் ஒரு சிறந்த நான்கு உறுப்பினர்கள் கொண்ட குடும்பமாக மதிக்கப்படுகிறார்கள்.


இந்தப் படத்தில் நடிப்பதற்கான, கதாபாத்திரங்களை எப்படித் தேர்வுசெய்தீர்கள் என்பதனையும், அக்கதாபாத்திரத்தைத் தேர்வுசெய்ததற்கு, அதற்குப் பின்னணியில் உள்ள பிரத்யேகக் காரணங்கள் குறித்தும் சொல்லுங்கள்…

இந்தப் படத்தைப் பொறுத்தவரை, ஒரு கால்பந்து அணியில் இருப்பதுபோல, ஒவ்வொரு நடிகருமே சிறப்பாகப் பங்காற்ற வேண்டியிருந்தது. ஒரு கால்பந்து அணிபோலவே, ஒருவருக்கொருவர் நன்றாக விளையாடுவதற்கு, சிறந்த நடிகர்களை ஒன்றிணைத்து ஒரு குழுவாக - சிறந்த குழுவாக உருவாக்குவது மிக முக்கியமான செயல்முறை. முதல் பார்வையிலேயே, ஒரு குடும்பத்தின் வாசத்தை அவர்கள் அனுபவிக்க வேண்டியிருந்தது, எனவே, அதுகுறித்து நான் நிறைய சிந்தித்தேன். SONG Kang Ho-தான் நான் இப்படத்திற்காக முதன்முதலாகத் தேர்ந்தெடுத்த நபர், பின்பு நான் ஓக்ஜா (Okja) படப்பிடிப்பில் இருந்தபோது, CHOI Woo Shik-ஐ, SONG Kang Ho-வின் ஒல்லியான மகனாக நடிக்க வைப்பது வேடிக்கையாக இருக்கும் என்று நினைத்தேன். அதன் பிறகு, இதேபோன்ற தோற்றமுடைய PARK So Dam, சிறந்த நடிப்புத்திறனைக் கொண்டிருப்பவர், மற்றும் ஒரு தனித்துவமான, யதார்த்தத்தின் மீது தெளிவற்ற உணர்வைக் கொண்டிருப்பவர், அவரது சகோதரியாக நடித்தார். படத்தில் ஒரு குடும்பம் என்று ஒரு நான்கு பேரைக் காண்பிக்கிறோம். நமக்கு அவர்கள் தனித்தனி நடிகர்களாகவும், கதாபாத்திரங்களாகவும் இருந்தாலும், படம் பார்ப்பவர்களுக்கு அதுவொரு குடும்பம் என்ற தோற்றத்தைத் தரவேண்டும். எனவே, குடும்ப உறுப்பினர்களிடையே உடல்ரீதியான தொடர்பை, தோற்றத்தில் ஒருவித ஒத்த தன்மையை, வெளிப்படுத்த உண்மையில் அவர்கள் ஒருவருக்கொருவர் உடலளவில் ஒத்திருப்பது அவசியம். நடிகை CHANG Hyae Jin-ஐ பொறுத்தவரை, The World of Us படத்தில், அன்றாட வலிமையை வெளிப்படுத்துவதைவிட, திட்டமிடப்பட்ட அளவில் குறைவான வலிமையை வெளிப்படுத்திய விதத்தை நான் விரும்பினேன், எனவே, நான் அவரை SONG Kang Ho-வின் பலசாலியான மனைவியின் கதாபாத்திரத்தில் நடிக்கவைத்தேன். 

பார்க் குடும்பத்தைப் பொறுத்தவரை, கொரிய தொலைக்காட்சி நாடகங்களில் நீங்கள் காணும் உயர் வர்க்கத்தின் க்ளிஷே சித்தரிப்பை நான் விரும்பவில்லை. எனவே, அதற்குப் பதிலாக, எனக்கு ஒரு பண்பட்ட மற்றும் கனிவான பிம்பத்தை முன்வைக்கும் நடிகர்கள் தேவைப்பட்டனர். LEE Sun Kyun-னின் பன்முகக் கவர்ச்சியால் நான் எப்போதும் ஈர்க்கப்படுவேன், எனவே, அவர் மிஸ்டர். பார்க்காக நடித்தார். CHO Yeo Jeong-ஐ பொறுத்தவரை, நம்பமுடியாத ஆழமான வைரச்சுரங்கத்தின் தன்மையை ஒத்திருப்பவள், அவர் நடிப்பால் என்னைத் தாக்குகிறார், அது இன்னும் முழுமையாக ஆரயப்படாத வைரச்சுரங்கம், எனவே, அதில் ஒரு பகுதியை இதில் வெளிப்படுத்தும் நம்பிக்கையில் அவரை நடிக்க அழைத்தேன். இது ஒரு கதாநாயகன் கொண்ட படம் அல்ல, மையக்கதாபாத்திரம் என ஒருவரை மட்டும் தனித்து அடையாளம் காட்ட முடியாது. எனவே, நடிகர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் எதிர்வினையாற்றி நடித்தவிதம் முக்கியமானது. முடிவில், நன்கு ஒருங்கிணைந்த கால்பந்து அணியைப் போல, ஒவ்வொருவரும் தங்கள் பங்கை சிறப்பாக விளையாடியதற்கு நான் அவர்களுக்கு மிகவும் நன்றி தெரிவிக்கிறேன். 

இந்தப் படத்தின் வாயிலாக, நடப்புகால சமூகத்தின் எவ்வகையான பிம்பத்தைக் காட்ட முயற்சித்தீர்கள்?

நமது சமூகத்தில் தொடர்ச்சியாக நிகழும் சமத்துவமின்மையைச் சித்தரிக்க ஒரு வழி, ஒரு சோகமான நகைச்சுவையைக் கையாள்வது என்று நினைக்கிறேன். முதலாளித்துவம் ஆளும் ஒரு சகாப்தத்தில் வாழ்கிறோம், எங்களுக்கு வேறு மாற்று இல்லை. இது கொரியா மட்டுமல்ல, முழு உலகமும் முதலாளித்துவத்தின் கொள்கைகளைப் புறக்கணிக்கமுடியாத சூழ்நிலையை எதிர்கொள்கிறது. யதார்த்த உலகில், படத்தில் வரும் நமது நான்கு வேலையற்ற கதாநாயகர்கள் மற்றும் செல்வச்செழிப்புமிக்க மிஸ்டர்.பார்க் குடும்பம் போன்ற இவ்விரு குடும்பங்களின் பாதைகளும் எப்போதும் கடக்க வாய்ப்பில்லை. ஒன்று உயர்தரம், மற்றொன்று குறைந்த வகுப்புப் பிரிவினர். இவ்விரு வகுப்புகளுக்கிடையே வேலை வாய்ப்பு விஷயங்கள் என்று வரும்பொழுது, ஒன்றோடொன்று இணைகிறது. ஒரு உதாரணம், யாரோ ஒரு ஆசிரியராகவோ, வீட்டுப் பணியாளராகவோ பணியமர்த்தப்படும்போது வகுப்புகளுக்கிடையிலான பாதை கடக்கப்படுகிறது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், ஒருவரது மூச்சுக்காற்றை மற்றவர் உணருகிற வகையில், இவ்விரு வர்க்கங்களும் நெருங்கிவரக்கூடிய தருணங்கள் வாய்க்கின்றன. இந்தப் படத்தில், இருபுறமும் எவ்வித மோசமான உள்நோக்கங்களும் இல்லையென்றாலும், எதிர்பாராவிதத்தில் நிகழ்ந்த சிறு சறுக்கல்கள் இரு வகுப்புகளுக்குமிடையிலான பிளவுகளுக்கும் வெடிப்புகளுக்கும் வழிவகுக்கும் சூழ்நிலைக்கு இழுக்கப்பட்டு விடுகின்றன.
இன்றைய முதலாளித்துவ சமுதாயத்தில் கண்ணுக்குத் தெரியாத வர்க்கப்பிரிவினைகளும், அணிகளும் சாதிகளும் உள்ளன. நாம் அவர்களுக்கு மாறுவேடமிட்டு, பார்வைக்கு வெளியே வைத்திருக்கிறோம், வர்க்க வரிசைகளை கடந்த காலத்தின் நினைவுச்சின்னமாக மேலோட்டமாகப் பார்க்கிறோம், ஆனால் உண்மை என்னவென்றால், கடக்கமுடியாத வர்க்கக் கோடுகள் எப்போதும் உள்ளன. இரண்டு எதிரெதிர் துருவமுனைகளில் வாழும் வர்க்கங்கள் இன்றைய சமுதாயத்தில், ஒருவருக்கொருவர் எதிராக துலக்கும்போது தோன்றும் தவிர்க்கமுடியாத விரிசல்களை இந்தப்படம் சித்தரிப்பதாக நான் நினைக்கிறேன்.


இந்தப் படத்தைப் பார்த்த பார்வையாளர்கள், இதிலிருந்து எந்தவொரு விஷயத்தைக் கற்றுக்கொள்வார்கள் என்று நினைக்கிறீர்கள்?
இது பார்வையாளர்களுக்குச் சிந்திக்கத் தூண்டும் நிறைய விஷயங்களைத் தருகிறது என்று நம்புகிறேன். இந்தப் படத்தின் வேடிக்கையான, பயமுறுத்தும் மற்றும் சோகமான பகுதிகளைக் கலவையாக உள்ளடக்கியிருக்கிறது. ஒரு பானத்தை மற்றொருவருடன் பகிர்ந்துகொள்வது போன்ற உணர்வை இது பார்வையாளர்களுக்கு ஏற்படுத்தினால், படம் பார்க்கும்பொழுது கிடைத்த யோசனைகள் குறித்து அவர்கள் ஒருவருக்கொருவர் விவாதித்துக்கொண்டால், அதுவே போதும், அதற்குமேல் அத்தகைய பார்வையாளர்களிடமிருந்து நான் எதையும் எதிர்பார்க்கவில்லை. 


நன்றி: highonfilms