தி பியானோ டீச்சர்


உளவியல் சார்ந்த கதைகளைத் திறம்பட எடுப்பதில் கைதேர்ந்தவர் ஆஸ்திரிய திரைப்பட இயக்குனர், திரைக்கதையாசிரியரான மைக்கேல் ஹெனகே. இவரது படங்கள் யாவும் நவீன உலகத்தில் தனிநபர்கள் அனுபவிக்கும் பிரிவின் உணர்வுகளையும், அது கொடுக்கிற வலிகளையும் சித்தரிக்கின்றன. கான் திரைப்பட விருதுகளுக்கு மைக்கேல் ஹெனகே மிகவும் பிரபலமானவர். 2009-ல் வெளியான தி வொய்ட் ரிப்பன், 2012-ல் வெளியான அமொர், என இவர் இயக்கிய படங்கள் கான் திரைப்பட விழா மட்டுமல்லாமல், உலகின் சிறந்த பல திரைப்பட விழாக்களிலும் விமர்சன ரீதியாகவும், அங்கீகரிப்பின் வாயிலாகவும் பல பரிசுகளை வென்றிருக்கிறது. இவர் இயக்கத்தில் 2001-ல் வெளியான படம்தான் ‘தி பியானோ டீச்சர்’.

மனித மனங்கள் எப்பொழுதும் பலவிதமான சிந்தனைகளைத் தனக்குள் செலுத்திக்கொண்டு உள்ளும் புறமுமாக தனக்குத் தானே பல வேதனைகளைத் தருவித்துக்கொள்கின்றன. தான் இத்தனை காலமும் எதை அடைவதற்காக ஏங்கினோமோ, அது ஒரு கட்டத்தில் கிடைத்தபோதும், அதை அனுபவிக்க முடியாத மனநோய்க்கு ஆட்படுகிற, மிகச்சிக்கலான உளவியல் சார்ந்த பிரச்சினைகளை ’தி பியானோ டீச்சர் படம்’ பேசுகிறது. எரோட்டிக் சைக்கலாஜிக்கல் டிராமாகவாக உருவாகியிருக்கிற இத்திரைப்படம், 1983ஆம் ஆண்டு எல்ஃப்ரீட் ஜெலினிக் (Elfriede Jelinek) இதே பெயரில் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது.  

Image result for the piano teacher elfriede jelinek"

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் எல்ஃப்ரீட் ஜெலினிக்கின் சர்ச்சைக்குரிய நாவல்தான் ‘தி பியானோ டீச்சர்’. இது உளவியல் ரீதியாக மிக ஆழமான தொடர்பை வெளிப்படுத்துவதால்தான் இப்படத்தை இயக்குவதற்கு ஒப்புக்கொண்டதாக மைக்கேல் ஹெனகே சொல்கிறார். மேலும், ஒரு நாவலிலிருந்து திரைப்படத்தை எடுக்கும்பொழுது, நாவல் ஏற்படுத்திய உணர்வின் தாக்கம் திரைப்படத்தில் சிதைந்துவிடக்கூடாது என்ற எண்ணம் இருக்கும். ஆனால், மக்களிடம்தான் தன் கதையைச் சொல்கிறோம் என்ற ஒரு பொதுமைப்பண்மைத் தவிர்த்துப் பார்த்தால், நாவல் என்பது தனி ஊடகம், அதேபோல சினிமாவும் தனி ஊடகம். இரண்டுமே கதை சொல்லலைத்தான் முன்னெடுக்கின்றன.

ஆனால், படிப்பது - பார்ப்பது என இரண்டுமே மக்கள் மனதில் தோற்றுவிக்கிற உணர்வு வேறுபடுகிறது. ’தி பியானோ டீச்சரைப் பொறுத்தவரை கதையின் கட்டமைப்பு மிகவும் நேர்க்கோட்டுடன் இருப்பதால், இது சினிமா பதிப்பிற்கு ஏற்றதாக இருக்கிறது. ஆனால், நாவலின் மொழியியல் வடிவம் சினிமாவிற்குப் பொருந்தாது. ஆனால், முரண்பாடாக எல்ஃப்ரீட் ஜெலினிக்கின் இலக்கியத்தின் சாராம்சம் என்பது அவர் சொல்கிற கதைகளில் இல்லை, அந்தக் கதையைச் சொல்ல எடுத்துக்கொள்கிற கதை வடிவத்தில்தான் உள்ளது.

ஒரு கதையை எப்படிச் சொல்கிறோம் என்பதில்தான் ஜெலினிக் தனித்துவமடைகிறார். ஜெலினிக் கதையை வெளிப்படுத்துகிற மொழியில்தான் தன் ஆளுமையைச் செலுத்துகிறார். ஆனால், அதே கதையை நாம் திரைப்படமாக எடுக்க வேண்டுமானால், அந்த மொழி வளத்தை, நம் திரைப்படத்தில் பயன்படுத்தமுடியுமா? எப்படி அந்த மொழி நடையை நம் திரைப்படத்திற்கு மடைமாற்றுவது? நிச்சயமாக நாவலின் அந்த எழுத்துமொழி மாற்றத்தக்கதல்ல. ஆனால், நாவலின் கம்பீரம் எல்லாமே, அந்த கதையின் வடிவத்தில், அதாவது கதையை எப்படிச் சொல்கிறோம் என்கிற மொழிநடையில்தான் உள்ளது. எனவே, அதே கதையை திரைப்படம் வழங்கும் வழிமுறையுடன் சொல்ல வேண்டும். எனவே நான் அந்தப் புத்தகத்திற்கான திரைப்படப் பதிப்பை உருவாக்கவில்லை – கதையைச் சொன்னேன். அந்த வகையில் பார்த்தால், இது ஒரு இலக்கியப்படைப்பின் திரைப்பதிப்பு அல்ல” என்கிறார் இத்திரைப்படத்தின் இயக்குனர் மைக்கேல் ஹெனகே. மேலும், இத்திரைப்படத்தை எடுக்க யாரோ என்னைப் பரிந்துரைத்தமையும், இரண்டாவதாக, இந்தக் கதை சமுதாயத்தைப் பற்றிய சிக்கலான அவதானிப்புகள் அவை தனிப்பட்ட தொடர்புறவுகளுக்கு இட்டுச் செல்லும் மனப்போக்கு போன்றவற்றைக் குறித்துப் பேசுவதால், முன்னணிக் கதாபாத்திரத்தில் ஐரோப்பாவில் மட்டுமல்லாது, உலகளவில் சிறந்த நடிகையான இசபெல் ஹப்போர்ட்டை நடிக்க வைக்கவும், விரும்பியதால் படம் இயக்க முடிவெடுத்தேன். மேலும், இது கூட்டமாக இயங்கி, சமூகத்தோடு இணைந்து வாழ்பவர்களைப் பற்றியல்லாமல், தனித்து தனிமையில் இருக்கிறவர்களைப் பற்றிய படமென்பதாலும் இக்கதையின் மேல் கூடுதல் கவனம் செலுத்தவைத்தது. மேலும், நாவலில் இருந்த மொழி, உரையாடலில் மட்டுமே பயன்படுத்தப்பட்டது, நாவலில் இல்லாத சில காட்சிகளையும் படத்தினுள்ளாக வைத்திருப்பதாகச் சொல்கிறார் ஹெனகே.

Image result for the piano teacher elfriede jelinek"

Figure 1
இசை எல்லாவற்றையும் ஆற்றுப்படுத்தும் என்று சொல்வார்கள். ஆனால், மனதினுள் ஓடும் குழப்பமான சிந்தனைகளுக்கும், அது ஒரு கட்டத்தில் மட்டுமீறிய அளவில் அதிகரித்துவிட்டபோதும், அந்த இசையால் கூட, அவர்களின் மனதைச் சாந்தப்படுத்த முடியாது. ஏனெனில், அந்த இசைக்குச் செவிசாய்க்கும் எண்ணம் கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு இருக்காது. படத்தின் மையக்கதாபாத்திரம், தலைப்பில் உள்ளதுபோலவே, ‘பியானோ டீச்சராக’ வருகிறார். மாணவர்களுக்கு பியானோ இசைப்பதைப் பற்றிக் கற்றுக்கொடுக்கிற திருமணமாகாத ஆசிரியை எரிகா கோஹுட். வியன்னா ம்யூசிக் கன்சர்வேட்டரியில் பணிபுரிகிற நடுத்தர வயது பெண்மணியான இவர், ஆதிக்கம் செலுத்தும் மனப்பாங்கு உள்ள தன் தாயுடன் குடியிருப்பில் வசித்து வருகிறார். 

படத்தின் ஆரம்பக் காட்சியே, மனதளவில் அவ்விரு கதாபாத்திரங்கள் பற்றிய புரிதலையும் வழங்கிவிடுகிறது. பெரும்பாலும், ஒரு மையநீரோட்ட சினிமாவிற்கும், இதுபோன்ற கலைத்தன்மை கொண்ட படங்களுக்கும் உள்ள வேறுபாடாக எல்லோரும் சுட்டிக்காட்டுவது, விருது வாங்குகிற படங்கள் மெதுவாக நகரும் தன்மையுடன் இருக்கும் என்பார்கள். ஆனால், மைய நீரோட்ட சினிமா போல, வெறும் கதையாக மட்டுமே நகராமல், கதையின் அடித்தளத்தில் உள்ள சிற்சில மெல்லிய உணர்வுகளையும் கூட, பார்வையாளர்களுக்குக் கடத்தும்பொருட்டு அதற்கான திரை நேரத்தையும் உள்வைத்தே இதுபோன்ற படங்கள் உருவாகின்றன. 

திரைப்படம் துவங்குகிறது, முதல் காட்சியில் தாய்க்கும், மகளுக்குமிடையேயான வாக்குவாதம். ஒருவருக்கொருவர் பேசுகிறபொழுதே, விவாதம் தீவிரமடைகிறது. மகள், தாயை அடித்துவிடுகிறாள். இங்கு, அந்த மையக்கதாபாத்திரம் சார்ந்த சில முன்னறிவுப்புகள் நமக்குக் கிடைக்கின்றன. ஆனால், சற்று நேரத்திற்கெல்லாம் தாயும் மகளும் சமாதானம் ஆகிவிடுகின்றனர். அடிபட்ட காயத்தை வாஞ்சையோடு தடவிக்கொடுக்கிறாள். தந்தை மன நல விடுதியில் நீண்ட காலமாக இருந்து இறந்துபோனவர். தாய்க்கு மகளும், மகளுக்குத் தாயும்தான் ஆறுதலாக உள்ளனர். இருப்பினும், அவர்களுக்கிடையேயான வாழ்வும்கூட, முரண்பாடுகளும் மோதலுடனும்தான் நகர்கிறது. 

எரிகாவின் ஒதுங்கிய தனிமைப்படுத்தப்பட்ட வாழ்வு, திருமணமாகாத நிலை எல்லாம் சேர்ந்து அவளுக்கு பாலியல் சார்ந்த இச்சைகளை அதிகமாகத் தூண்டுகிறது. அது நியாயமான பாலியல் தேவைகள் என்பதைத் தாண்டி அளவுகடந்து செல்கிறது, என்பதை அவளே அறியவில்லை. பாலியல் திரைப்படங்களைப் பார்ப்பதற்கான ஒரு கடையில், எரிகா நுழைகிறாள். சுற்றிலும் ஆண்கள்தான். ஆண்கள் பெண்களின் அந்தரங்கங்களைப் பார்க்கிற குறுகுறுப்பில் அந்த இடத்திற்குள் வருகின்றனர். பெண்களுக்கு இது தேவையில்லை என்று நினைக்கையில், எரிகா அதுபோன்ற ஒரு கடையில் நுழைந்தவுடன், அனைவரும் அவளையே ஆச்சரியத்தோடு பார்க்கின்றனர். எரிகா தன் தேவையை மட்டுமே முக்கியமாகக் கருதுகிறாளே தவிர, தன்னைப் பற்றி யார் என்ன நினைப்பார்கள்? என்பதைப் பற்றி பொருட்படுத்தாமல், ஒரு அறையினுள் நுழைகிறாள். அங்கு, கட்டணத்தைச் செலுத்தினால் நீலப் படங்களைப் பார்க்கலாம். எரிகா அந்த நீலப்படத்தைப் பார்ப்பதோடு, குப்பைத்தொட்டியில் கிடந்த, ஆண்களின் விந்தணுக்கள் நிறைந்த காகிதங்களையும் முகர்ந்துபார்க்கிறாள். இது திருமணம் ஆகாத, ஒரு சாதாரண பெண்ணின் பாலியல் இச்சை எனும் அளவில் மட்டும் சுருக்கிவிடமுடியாது. மறைக்கப்பட்ட அல்லது மறுக்கப்பட்ட பாலியல் வேட்கைகள் அவளுள் கட்டுக்கடங்காத அளவு வெளிப்படுகின்றன. காரில் ஆணும் பெண்ணும் கலவிகொள்வதை மறைந்திருந்து வேடிக்கை பார்ப்பது ஒரு நிலையென்றால், முயக்கத்தின் உச்சியில் அந்த முனகலுக்கு மயங்கியபடி, அந்தக் காரின் அருகிலேயே சிறுநீர் கழித்தபடி, இன்பம் அனுபவிப்பது, நிச்சயம் உளவியல் பிரச்சினைதான். அதைத்தான் எரிகா அனுபவிக்கிறாள். இது ஒருகட்டத்தில் தன்னையே சிதைத்துக்கொள்ளும் அளவிற்கு வெளிப்படுகிறது. குளியல் அறையில், தன் பெண்ணுறுப்பை அறுத்துத் தன்னைக் காயப்படுத்திக்கொள்வது என அவளது மனச்சிக்கல் குரூரமாக வெளிப்படத்துவங்குகிறது. ஆனால், இந்நோயெல்லாம், இயற்கையான பாலியல் தேவை தீர்ந்தவுடன், அதுவாகவே மறைந்துவிடும் என்று தோன்றலாம்.

Image result for The piano teacher" 

எரிகாவிற்கான சரியான துணை, அவளைக் காதலிக்கக் கூடிய துணை, அவளுக்குக் கிடைக்கவில்லை, அதனால்தான், இத்தகைய உளவியல் சித்திரவதைகளுக்குத் தன்னைத்தானே ஆட்படுத்திக்கொள்கிறாள், என்று நினைக்கலாம். ஆனால், அப்படியும் இல்லை. ஏனெனில், எரிகா, பியானோ கற்றுக்கொடுக்கிற இளம் மாணவனுக்கு எரிகாவின் மீது காதல். அவனும், எரிகாவுடன் கலவிகொள்வதில் மிகுந்த ஈடுபாட்டோடுதான் இருக்கிறான். அவன் பெயர் வால்டர் க்ளெம்மர். விருந்து நிகழ்வொன்றில் இருவரும் சந்தித்துக்கொள்கின்றனர். எரிகாவின் க்ளாசிக்கல் இசையின் திறமையை அவன் வியந்து பாராட்டுகிறான். அவனுக்கும், இசையைக் கற்றுக்கொள்ள வேண்டுமென்பதில் பெரிய ஆர்வம் இருக்கிறது. எனவே, எரிகா பணிபுரிகிற ம்யூசிக் கன்சர்வேட்டரிக்கு விண்ணப்பிக்கிறான். 

அங்கு, விண்ணப்பிக்கிற எல்லா நபர்களையும் மாணவர்களாகச் சேர்த்துக்கொள்கிற வழக்கமில்லை. எனவே, ஆடிஷன் நடக்கிறது. விண்ணப்பித்தவர்கள் முறையே ஒவ்வோருவராக வந்து, பியானோ வாசித்துக் காண்பிக்கின்றனர். அங்கிருந்த மற்ற இசை பேராசிரியர்கள், வால்டரைத் தேர்வு செய்தாலும், எரிகா, வால்டருக்காக வாக்களிக்கவில்லை. இருப்பினும், வால்டர், பியானோவை இசைத்த விதம் எரிகாவிற்குப் பிடித்திருக்கிறது. ஆனால் ஏனோ வாக்களிக்க மறுக்கிறாள். இத்திரைப்படத்தைப் பொறுத்தவரை, மனிதர்கள் எந்தளவிற்கு மறைமுகமாக உளவியல் சார்ந்த பிரச்சினைகளில் சிக்கிக்கொண்டிருக்கிறோம் என்பதை மிக நுட்பமாகத் தெரியப்படுத்திக்கொண்டேயிருக்கிறது. ஒரு கட்டத்தில் வால்டர்,
எரிகாவிற்கு முத்தம் கொடுக்க வரும்போதும், அவள் முகம்கொடுக்க மறுக்கிறாள். இசை பிடித்திருந்தபோதும் வாக்களிக்காத நிலையைத்தான், இந்தத் தருணம் வெளிப்படுத்துகிறது. ஆரம்பம் முதல் முடிவு வரை ஒரு இறுக்கமான மனநிலையில் எரிகாவின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பவர் இசபெல் ஹப்பர்ட் (Isabelle Huppert) என்ற பிரெஞ்சு நடிகை. ஒரு கதாபாத்திரத்தின் மனநிலையை படம் முழுவதும் தக்கவைத்திருக்கிறார். இவரது நடிப்பிற்காக சிறந்த நடிகைக்கான கான் திரைப்பட விருது, இப்படத்திற்காகக் கிடைத்திருக்கிறது. அதேபோல வால்டராக நடித்த பெனாய்ட் மாகிமெல் (Benoît Magimel) சிறந்த நடிகருக்கான கான் விருது பெற்றார்.

Image result for The piano teacher"

Figure 2 இசபெல் ஹப்பர்ட் (Isabelle Huppert)
 
திரைப்படத்திற்கு வருவோம். எரிகா, வால்டருக்கு வாக்களிக்கவில்லையாயினும், வால்டர், எரிகாவின் மாணவராக அனுமதிக்கப்படுகிறார். இதேபோல விண்ணப்பித்த மற்றொரு மாணவி அன்னா ஸ்கோபர், தன்மேல் நம்பிக்கையில்லாமல் எப்பொழுதும் அழுதுகொண்டேயிருப்பாள். ஏனெனில், தன் தாயின் வற்புறுத்தலால் அவள் பியானோ வாசிக்க வருகிறாள், எனவே, அவள் எப்போதும் பதட்டத்துடன் போராடுகிறாள். இப்படம் பார்த்து முடித்த பின்பு, கதையில் வருகிற ஒவ்வொரு கதாபாத்திரம் சார்ந்த உளவியல் சிந்தனைகளையும் பிரித்துப் பார்க்கத் தோன்றுகிறது. சிலருக்கு, அவர்களது உளவியல் பிரச்சினைகள் கட்டுக்குள் உள்ளதாகவும், அதைத் தன்னால் பக்குவப்படுத்திக்கொள்ள முடியும் என்றும் நினைக்கிறார்கள், ஆனால், அதுவோ எல்லைமீறிய நிலையில், அந்த உளவியல் பிரச்சினைகளுக்குள்ளேயே இருந்துகொண்டு வெளியேவரமுடியாமல் தவிக்கின்றனர். 

அன்னா ஸ்கோபர், கூட்டத்தைக் கண்டு அச்சப்படுகிறாள், எல்லோர் முன்னிலையிலும் எப்படி வாசிப்பது என்று நடுங்குகிறாள், எனவே, வால்டர், அன்னா ஸ்கோபருக்கு ஆதரவாகயிருக்கிறான். இவ்விருவரும் வயதில் ஒத்தவர்கள். இவர்களோடு ஒப்பிடுகையில் எரிகாவிற்கு வயது அதிகம். இத்தகைய தன்னைத் தானே ஒதுக்கிக்கொள்ளும் தன்மை, தன் மீதான சுய தாழ்வுணர்ச்சி மதிப்பீடு எல்லாம் சேர்ந்து, எரிகாவை, அன்னா ஸ்கோபரைத் தண்டிக்கத் தூண்டுகிறது. வால்டரும், அன்னா ஸ்கோபரும் மேடையில் இசைத்துக் கொண்டிருக்கும்பொழுது, அது பிடிக்காமல் அங்கிருந்து வெளியே செல்கிற எரிகா, ஒரு கண்ணாடிக் கோப்பையை உடைத்துச் சில்லுகளாக்கி, அன்னா ஸ்கோபரின் கோட் பாக்கெட்டிற்குள் போட்டுவிடுகிறாள். பியானோ இசைப்பவர்களுக்கு தனது விரல்கள்தான் முக்கியம், என்பதை நன்குணர்ந்துதான், எரிகா இதுபோன்று செய்கிறாள். அவள் நினைத்தது போலவே, கண்ணாடிச் சில்லுகள் அன்னா ஸ்கோபரின் கைகளைப் பதம்பார்த்து விடுகின்றன. அவள் வலியால் துடிக்கிறாள். எதிர்வரும் ஜூபிலி இசைக் கச்சேரியில் பங்கேற்கமுடியாததை நினைத்து அன்னா ஸ்கோபரும், அவரது தாயும் மனவேதனை அடைகின்றனர். இதெல்லாம், எரிகாவை எந்தளவும் பாதிக்கச்செய்வதில்லை. அன்னாவின் இடத்தில் வேறொரு ஆள், அல்லது தானே பியானோவை வாசிக்க வேண்டியிருக்கும்.

Image result for The piano teacher"

Figure 3 படப்பிடிப்பில் மைக்கேல் ஹெனகே

அன்னா ஸ்கோபரைக் காயப்படுத்திய உடனேயே, எரிகா கழிப்பறைக்குள் சென்றுவிடுகிறாள். வால்டர் அவளைப் பின்தொடர்கிறான். கழிப்பறைக் கதவு திறந்ததும் எரிகாவை வால்டர் முத்தமிடுகிறான். படத்தில் இது மிக முக்கியமான காட்சியாக இடம்பெறுகிறது. ஏனெனில், நாம் முன்பே பார்த்தபடி, எரிகா இத்தனை நாளும் இத்தகைய பாலியல் சார்ந்த ஏக்கங்களில்தான், வக்கிரமமான செயல்களில் ஈடுபடுகிறாள் என்று நினைத்திருப்போம். அத்தகைய தேவை, ஒரு ஆணின் ஸ்பரிசம் எல்லாம் கிடைத்தபோது, எரிகாவிற்கு வேண்டியது கிடைத்தது, வால்டருடன் தன் ஆசையைத் தீர்த்துக்கொள்ளலாம் எனும் அடிப்படையில்தான் கதை நகர்ந்திருக்க வேண்டும். ஆனால், அப்படியல்லாமல், ஒரு பெண்ணின் உளவியல் பிரச்சினைகளை, அவள் எத்தகைய மனச் சிதைவுகளில் சிக்கிக்கொண்டிருக்கிறாள் என்பதை இந்த இடம்தான் வெளிப்படுத்துகிறது. வால்டருக்கு சுய-மைதுனம் செய்துவைப்பதிலும், அப்படிச் செய்கிறபொழுது வால்டர் தன் குறியைப் பார்க்காமல், தன் கண்களை மட்டுமே பார்க்க வேண்டும் என்பதாகவும் எரிகா கட்டளையிடுகிறாள்.

உணர்ச்சி மிகுதியில் எரிகாவை, வால்டர் கட்டியணைக்க வந்தாலும், அதை முற்றிலுமாகத் தடுக்கிறாள். எரிகா, வால்டரை மீண்டும் மீண்டும் அவமானப்படுத்துகிறாள். கலவியில் ஒரு பெண்ணைக் கட்டியணைக்காமல், முத்தம் கொடுக்காமல் ஒரு இயந்திரம் போல, இருப்பது வால்டருக்கு ரண-வேதனையைக் கொடுக்கிறது. எனவே, வால்டர், எரிகாவின் கட்டுப்பாடுகளுக்குச் சிக்க மறுக்கிறான். அப்போது, வால்டருக்குச் சுயமைதுனம் செய்துவிடுவதை, எரிகா நிறுத்துகிறாள். அடுத்த சந்திப்பில், நீ என்னிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று  ஒரு கடிதம் கொடுப்பதாக, எரிகா கூறுகிறாள். இப்போது வால்டரின் நிலைமைதான் பரிதாபம். இருப்பினும், அவனுக்கு எரிகாவின் மீதான ஆசை குறையவில்லை. 

Image result for The piano teacher"

எரிகாவுடன், தனது பாலியல் உறவைத் தொடங்குவதற்கான தனது விருப்பத்தில் விடாப்பிடியாக இருக்கிறான், எரிகாவின் வீட்டிற்கே சென்றுவிடுகிறான். தனிமையான இடம், இதுதான் கலவிக்கான சரியான இடம் என எரிகாவை, வால்டர் நெருங்கும்பொழுது, ‘நான் கொடுத்த கடிதத்தைப் படித்தாயா?’ என்று கேட்கிறாள். ”நீயும் இங்கு இருக்கிறாய், நானும் இங்கு இருக்கிறேன், நாம் இருவரும் பேசிக்கொள்வோம், எதற்காக கடிதத்தைப் படித்து, உன்னைப் பற்றி நான் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறாய்?” என்பது வால்டரின் வாதமாக இருக்கிறது. ஆனால், தன்னுடைய மசோஸ்டிக் கற்பனைகளைப் பூர்த்தி செய்தால் மட்டுமே, தொடர்ந்து நாம் சந்திக்கமுடியும் என்கிறாள் எரிகா. ஆனால், வால்டர் அத்தகைய விபரீதமான ஆசைகளுக்கு இணங்க மறுக்கிறான். அந்தளவிற்கு, எரிகாவின் ஆசைகள் பித்துநிலையில் வெளிப்படுகின்ற ஒன்றாகயிருக்கின்றன. 
பின்பு அடுத்தநாள், வால்டர் விளையாட்டுப் பயிற்சி மேற்கொள்கிற இடத்திற்கு எரிகா செல்கிறாள், அவனோடு கலவியில் ஈடுபடுகிறாள், இருப்பினும் முழுமையாக ஈடுபடமுடியவில்லை, ’கலவியில் இருக்கிறபொழுது யாரேனும் இந்த அறைக்குள் வந்துவிடுவார்கள் என்பது வால்டரின் பயமாக இருக்கிறது, ஆனால் உள்ளே யார் வந்தாலும், எனக்குக் கவலையில்லை என்பது எரிகாவின் உள்ள வெளிப்பாடாக உள்ளது.” நேற்று நடந்த விஷயங்களுக்கு மன்னிப்பு கேட்கிற எரிகா, அங்கிருந்து செல்கிறாள். 

அன்றிரவு பிற்பகுதியில் , மூர்க்கத்தனமாக வால்டர், எரிகாவின் வீட்டுக்கதவைத் தட்டுகிறான். எரிகா கடிதத்தில் ‘தன்னைத் தாக்கிச் சித்திரவதை செய்ய வேண்டும், பின்பு அனுபவிக்க வேண்டும்’ என்றெல்லாம் எழுதியிருப்பாள். அதுபோலவே, வால்டர் செய்கிறான். எரிகாவின் அம்மாவை ஒரு அறையில் பூட்டிவைத்துவிட்டு, எரிகாவையும் ரத்தம் வரும்வரை அடித்துப்போட்டு, பின்னர் அவளோடு பாலியல் வல்லாங்கு செய்கிறான். ஒருவேளை, எரிகாவின் விருப்பம் நிறைவேறுகிறபொழுது, இந்தப் பிரச்சினைகள் சரியாகிவிடும் என்று இப்போதும் தோன்றுகிறது. 

அடுத்தநாள், இசைக்கச்சேரியில் அன்னா ஸ்கோபரின் இடத்தில் வாசிப்பதற்காக வருகிறாள். ஆனால், கையில் ஒரு கத்தியுடன் வருகிறாள். அது யாரைக் குத்துவதற்காக, யார் உயிரைப் பறிப்பதற்காக என்பதெல்லாம் கதையில் சஸ்பென்ஸாக நகர்கிறது. திட்டமிட்டபடி இசைக்கச்சேரிக்கு வால்டர் தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வருகிறான், ஒரு முறையான புன்னகையுடன் எரிகாவை எதிர்கொண்டபடி, அவன் இசைக்கச்சேரி நடக்கிற இடத்திற்குச் செல்கிறான். இசைக்கச்சேரி துவங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக, எரிகா தன் தோளை, அந்தச் சமயலறைக் கத்தியால் குத்திக்கொண்டு, அந்தக் கட்டிடத்தைவிட்டு வெளியேறி, தெருவழியே நடந்துசெல்கிறாள்.

Image result for The piano teacher" 

கிட்டத்தட்ட ’சைக்கோ’ போல உலாத்துகிற இந்தப் பெண்ணை அவளது இடத்திலிருந்து அணுகினால் மட்டுமே புரிந்துகொள்ள இயலும். திரைப்படத்தின் கதாபாத்திரங்களை நாம் புரிந்துகொள்ள, அவர்களுக்கு இருக்கிற பிரச்சினைகளை எரிகா கதாபாத்திரம் போன்று ஆழமான முறையில் அலசியிருக்க வேண்டும். கதாபாத்திரத்தின் உணர்வுநிலை வெளிப்பாடுகள் சரியாக அமையாதவரை, நம்மாலும் அக்கதாபாத்திரங்களோடும், அக்கதைக் களன்களோடும் சரியாக ஒட்டமுடியாத நிலையே ஏற்படுகிறது. அத்தகைய அபாயகரமான சூழ்நிலை ‘தி பியானோ டீச்சருக்கு’ நேரவில்லை.