திரைக்கதை – புலப்படாத எழுத்து

ஒரு நாள் வரை…

அதுவரை சாதாரணமாக நகர்ந்துகொண்டிருந்த திரைக்கதை ஒரு ”தூண்டும் சம்பவம் (inciting incident)” மூலம், கதைக்குள் இன்னும் ஆழமாக நுழைகிறது. குறிப்பிட்ட இந்த, கதையைத் தூண்டும் சம்பவம் நிகழ்கையில், அதுதான் உங்கள் கதையின் உண்மையான ஆரம்பம் . அதுவரையில் ஒரு கதைக்கான அடித்தளத்தை மட்டுமே அமைத்துக்கொண்டிருந்தீர்கள். அதற்கே, திரைக்கதையின் முதல் பதினைந்து நிமிடங்கள் செலவாகிட்டன எனலாம். ஆனால், கதையைத் தூண்டும் சம்பவம் நிகழ்கிறது, இப்பொழுதுதான் கதையின் உண்மையான ஆரம்பம் நிகழ்ந்திருக்கிறது. பெரும்பாலும், கதையின் களம், கதாபாத்திரங்கள், கதை உலகு போன்றவற்றை அறிமுகப்படுத்தியபிறகு, கதையைத் தூண்டுவதுபோல ஒரு சம்பவம் நிகழும். அதுதான், கதையின் ஆரம்பப்புள்ளி.

உதாரணத்திற்கு, உங்கள் கதை ’கள்ளத்தொடர்பு’ வைத்திருக்கிற ஒரு ஜோடியைப் பற்றியது என்றால், அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்ளும் புள்ளியை ‘தூண்டுதல் சம்பவம்’ நிகழும் புள்ளியாக வரையறுக்கலாம். அல்லது அவர்கள் ஏற்கனவே ஒருவரையொருவர் சந்தித்து அறிமுகமாகியிருந்தால், அவர்களுக்கிடையேயான நெருக்கம் ஒரு உறவாக மாறும் புள்ளியை ‘ தூண்டுதல் சம்பவம்’ எனக்கொள்ளலாம். ஏனெனில், இந்தப் புள்ளியிலிருந்துதான் கதையே துவங்குகிறது. அதற்கு முன்பு வரையில், அந்த ஜோடிகள் யார்? அவர்களது அலுவல்கள், தனிப்பட்ட வாழ்க்கை போன்றவற்றைத்தான் அறிந்திருப்போம். அதாவது கதைக்கான அறிமுகம் மட்டுமே அங்கு நிகழ்ந்திருக்கிறது. ஆனால், அவர்களுக்கிடையில் அந்த நெருக்கமான உறவு ஆரம்பிக்கும் புள்ளிதான், கதைக்குள் செல்லும் புள்ளி. அந்தப் புள்ளிதான், கதையைத் தூண்டுகிறது. அதிலிருந்து அந்தக் கதையைப் பார்வையாளர்கள் “அடுத்து என்ன நடக்கும்?” என்ற எதிர்பார்ப்புடன் பின்தொடர்கிறார்கள்.

கதையில் மோதல் துவங்கும் இடம் இதுதான் என்று உங்களுக்குச் சிலர் சொல்லக்கூடும், ஆனால் அது அப்படியிருக்க அவசியமில்லை. முரண்களும் மோதல்களும் (conflict)தான் ஒரு திரைக்கதையைத் தொடர்ந்து சுவாரஸ்யமாக வைத்திருக்க உதவுகின்றன. பெரும்பாலும் திரைக்கதையின் ஆரம்பத்திலேயே இந்த மோதல்கள் நிகழ்வதுபோல எழுதுவது குறைவு. எனவே, எப்பொழுது அந்த மோதல் ஆரம்பிக்கிறதோ, அதுதான் கதையைத் தூண்டும் சம்பவம் என்று சிலர் கணிக்கிறார்கள். ஆனால், எப்போதும் அப்படியிருக்கவேண்டிய அவசியமில்லை.

காமிக் – புத்தக எழுத்தாளரும் எடிட்டருமான ஜிம் ஷூட்டர் (Jim Shooter) தனது அனுபவத்தின் அடிப்படையில், திரைக்கதையின் இரண்டாம் பகுதி (second act) மோதல் அல்லது வாய்ப்புடன் துவங்கப்படலாம் என்பதைக் கவனித்துள்ளார். கதை முதல் பகுதியிலிருந்து இரண்டாம் பகுதிக்குச் செல்லும்பொழுது மோதலுக்கான கட்டமைப்பின் வழி நகரலாம், அல்லது பிரதான கதாபாத்திரத்திற்குக் கிடைக்கிற ஒரு நல்ல வாய்ப்பினைப் பற்றிக்கொண்டு அடுத்த கட்டத்திற்கு நகரலாம். உதாரணமாக, கதையின் முதல் பகுதி (first act)யில், மிகவும் ஏழ்மை நிலையில், கஷ்டப்படுகிற ஒரு இளம் பெண்ணைப் பற்றிய கதையை நீங்கள் வைத்திருக்கிறீர்கள். அவளால் தன் வாடகைப் பணத்தைக் கூட செலுத்தமுடியாத நிலையில் காலம் தள்ளுகிறாள் என்றால், இந்தத் திரைக்கதையின் முதல் ஆக்ட்-ஆனது அந்தப் பெண்ணின் கண்களில் ஒரு மில்லியன் டாலர் பணம் தென்படுவதுடன் முடியலாம். அல்லது ஏதோவொரு வழியில் அந்தப் பெண் ஒரு மில்லியன் டாலர் பணத்தைக் கண்டுபிடிக்கிறாள், அத்துடன் அந்த முதல் ஆக்ட்- முடிவுக்கு வருகிறது.


Figure 1Jim Shooter

திரைக்கதையில் இந்தப் புள்ளி, மிக முக்கியமான கட்டம். எனினும், திரைக்கதைக் கட்டமைப்பில் முக்கியமான இந்தப் புள்ளி, பல பெயர்களால் அழைக்கப்படுகிறது:

• ஆக்ட் ப்ரேக் (act break)
• ப்ளாட் பாய்ண்ட் (plot point)
• திருப்பு முனை (turning point)
• திரைச்சீலை (curtain)

முதல் ஆக்டையும், இரண்டாவது ஆக்டையும் பிரிக்கும் புள்ளியாக இது அமைகிறது. இந்த ‘தூண்டும் சம்பவம்’ பல பெயர்களால் அழைக்கப்பட்டாலும், இந்த வரிசையில் கடைசியாக உள்ள ‘திரைச்சீலை’ என்ற பதத்தைப் பயன்படுத்தவே அதிகம் விரும்புகிறேன். ஒரு நாடகம் நடந்துகொண்டிருக்கும்பொழுது, ஒரு முக்கியமான திருப்புமுனைப் புள்ளியில், அந்நாடகத்தில் நடித்துக்கொண்டிருந்த கதாபாத்திரங்கள் அனைவரும் ஆச்சரியப்படுவார்கள், இதனைப் பார்த்துக்கொண்டிருந்த பார்வையாளர்களும் ”அடுத்து என்ன நடக்கும்?” என்ற ஆர்வத்தோடு, நாடகத்தைக் கவனிப்பார்கள், ஆனால் அந்நேரத்தில் நாடக அரங்கின் குறுக்கே திரைச்சீலை வந்து மறைத்துக்கொள்ளும். எனவே, இப்போது நடிகர்கள் அடுத்த பகுதிக்குள் நுழையப்போகிறார்கள், என்பதை உணர்த்தவே இந்த திரைச்சீலை, பார்வையாளர்களுக்கும், கதாபாத்திரங்களுக்கும், மேடையில் குறுக்காக விழுகிறது. நாடகத்திற்கு திரைச்சீலையின் பங்களிப்பினை புரிந்துகொண்டாயிற்று, திரைக்கதையில் ‘தூண்டும் சம்பவமும்’ ஒருவகையில் நாடகத்தில் ‘திரைச்சீலையின்’ செயல்பாட்டையே ஒத்திருக்கிறது.
சரி, நான் இந்த இடத்தில் ’திரைச்சீலை’என்ற வார்த்தையை அதிகம் விரும்புவதற்கான காரணம், அது தியேட்டரிலிருந்து (மேடை நாடகங்களிலிருந்து) வருகிறது, மேலும் நாடகத்தின் ஒவ்வொரு ஆக்ட்-களுக்கும் இடையில் அந்த திரைச்சீலை இறக்கப்படுகிறது. லைவ் தியேட்டரில், நாடகத்திற்கு நடுவில் சிறு இடைவெளி விடுகிறபொழுது, அதுவரை நாடகம் பார்த்துக்கொண்டிருந்த பார்வையாளர்கள், இடைவேளையைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு அப்படியே வீடு நோக்கிச் சென்றுவிடக்கூடாது. இன்னும் நாடகம் மீதமிருக்கிறது என்பதை ஞாபகம் வைத்துக்கொண்டு, பார்வையாளர்கள் அந்த இடைவேளைக்குப் பிறகும், வந்து தங்களது இருக்கைகளில் அமரவேண்டும். அந்த உத்தரவாதத்தைஅந்நாடகம் இடைவேளைக்காகத் தேர்ந்தெடுத்திருக்கிற காட்சி தரவேண்டும். அதன்படிதான், மிக உணர்ச்சிகரமான கட்டத்தில், அல்லது பார்வையாளர்களை அதிக எதிர்பார்ப்பிற்கு இட்டுச் சென்று, அதே கேள்வியுடன் காட்சியை முடித்து, திரைச்சீலை இறக்கப்படுகிறது. எனவே, நாடகத்தில் ‘அடுத்து என்ன நடக்கப்போகிறது?’ என்ற ஆர்வத்தில் பார்வையாளர்கள் மீண்டும் வந்து காத்திருக்கின்றனர். திரைப்படமும் இதுபோன்றுதான். தமிழ்த் திரைப்படங்களில் இடைவேளைக்குத் தேர்ந்தெடுத்திருக்கும் காட்சியைத் ‘திரைச்சீலை’ என்ற பதத்துடன் நாம் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ள முடியும். இடைவேளை முடிந்தும் மக்கள், மீண்டும் திரையரங்கில் வந்தமர்ந்து தொடர்ந்து படம் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடுதான், இடைவேளைக்குரிய திருப்புமுனைக் காட்சிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. ‘தூண்டும் சம்பவங்கள்’ திரைப்படங்களில் இப்படி அப்பட்டமாகத் தெரிய அதிக வாய்ப்பில்லை. அதுவே, மேடை நாடகங்களில் ‘திரைச்சீலை’, மேடையை மறைப்பதை தெளிவாகக் காணலாம். என்னைப் பொறுத்தவரை, கதையில்’தூண்டும் சம்பவத்திற்கான’ புள்ளி வந்தவுடன், ஒரு திரைச்சீலை விழுகிறது என்பதைக் கற்பனை செய்துகொள்கிறேன், அதுதான் அதற்கடுத்து திரைக்கதை இன்னும் வீரியமடையப்போகிறது என்பதை நினைவில் வைக்க உதவுகிறது.நகைச்சுவை எழுத்தாளர் ஜீன் பெரெட் (Gene Perret), காமெடி ரைட்டிங் ஸ்டெப் பை ஸ்டெப் (Comedy Writing Step by Step) எனும் தனது புத்தகத்தில், இதனை, “ஓஹ்-ஹோ காரணி” என்று குறிப்பிடுகிறார். அதாவது நம்மை ஆச்சரியத்தில் இதுபோல சப்தமெழுப்ப வைக்கக்கூடிய காரணி.நன்கு வடிவமைக்கப்பட்ட பிம்பத்தில், கதாபாத்திரம் மற்றும்/அல்லது சூழ்நிலை நிறுவப்பட்ட பின்னர், எதிர்வினை தேவைப்படுவதுபோல ஏதாவதொரு சம்பவம் நடக்கும்.
சோப் ஓபராக்களுக்கு அடிமையாகிவிட்டதன் காரணமாக, அதிலிருந்து வெளிவரும் பொருட்டு, மருத்துவமனை மனநல வார்டில் சிகிச்சை பெற்று, விடுவிக்கப்பட்ட ஒரு பெண்ணாக கரோல் (Carol) நடிக்கும், ஓல்ட் கரோல் பர்னட் ஷோவிலிருந்து (old Carol Burnett Show) ஆசிரியர் ஒரு உதாரணத்தைப் பயன்படுத்துகிறார். நான் பூரண குணமடைந்துவிட்டேன் என்று பறைசாற்றுகிறார் அந்தப் பெண். மேலும் அவர், ”ப்ரூஸ், வாண்டாவை திருமணம் செய்துகொண்டாலும், இல்லாவிட்டாலும் எனக்கு எந்தக் கவலையும் இல்லை” என்கிறார். அப்பொழுது அவளது நண்பர், அவளிடம் “ப்ரூஸ் இறந்துவிட்டார்” என்று பதிலளிக்கிறார். திரு.பெரெட் அதை விவரிக்கையில், இந்தச் செய்தியைக் கேட்டு கரோலின் கண்கள் விரிவடைகின்றன, இதனைப் பார்க்கிற பார்வையாளர்கள், ”ஓஹ்-ஹோ அவள் மீண்டும் சோப் ஓபராக்களுக்கு அடிமையாகிவிட்டாள்” என்ற முடிவுக்கு வருகிறார்கள்.மேடை நாடகங்களுக்கு இந்த “ஓஹ்-ஹோ” தருணம் உள்ளது. ஷேக்ஸ்பியரின் கிங் லியரில், ராஜா, தனது மூன்று மகள்களில் யார் ஒருவர் தன்னை அதிகம் நேசிக்கிறார்கள் என்பதை நிரூபிக்கிறாரோ, அவருக்கு தனது செல்வம் முழுவதையும் தர உறுதியளிக்கிறார். எப்போதாவது ஒன்று இருந்தால், அதுதான் ‘ஓஹ்-ஹோ’ தருணம். அந்தப் புள்ளியிலிருந்து கதை சூடுபிடிக்கிறது. இதில் இன்னொன்றையும் நீங்கள் கவனிக்க வேண்டும். கதையின் மையமும் அதற்கேற்ற வகையில் சுவாரஸ்யமான ஒன்றாக அமைந்திருக்க வேண்டும். இல்லையேல், சரியான நேரத்தில், சரியான தருணத்தில் இந்த ‘கதை தூண்டுதல் சம்பவங்கள்’ நிகழ்ந்தாலும், அது பார்வையாளர்கள் மனதில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது.
அதனால்தான், பார்வையாளர்கள், அப்படி ஏதாவது அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, நாடகத்தைப் பார்ப்பதை நிறுத்திக்கொள்ள முடியும்.

- தொடரும்…