திரைக்கதை – புலப்படாத எழுத்து (பிரைன் மெக்டொனால்ட்)ஒரு சிறந்த கதைக்கு ஏழு எளிதான படிநிலைகள்:

முன்னொரு காலத்தில்…
ஒரு நாள் வரையில்…
இதன் காரணமாக…
இதன் காரணமாக…
இறுதியாக…
அன்றிலிருந்து இன்றுவரை….

ஒரு சிறந்த கதை உருவாகத் தேவையான ஏழு படிநிலைகள் பற்றி விரிவாகப் பார்ப்போம்:


சொல்லப்போனால் கதைகள் சிக்கலானவை அல்ல. உண்மையில் அவை நம்மை
ஏமாற்றுமளவிற்கு எளிமையானவை. ஆனால், பார்ப்பதற்கு எளிமையாகத் தோன்றும்
ஏதொன்றையும், உருவாக்குவதுதான் மிகவும் கடினம். மிக எளிமையானக் கதையாகத்
தோன்றும், ஆனால் ஒரு கதையை எளிமையாக உருவாக்குவதில்தான் பல சிரமங்களை
எதிர்கொள்ள நேரிடும். லூயிஸ் கரோலை இது நினைவூட்டுகிறது என்பதை நான்
உணர்கிறேன், ஆனால் என்னைக் கேளுங்கள்.

எழுதும்பொழுது நாம் அனைவரும் நம்மை நாமே தூக்கிலிட்டுக்கொள்கிற ஒரு விஷயம்
என்னவென்றால், நாம் எழுதுவது படிப்பவர்களுக்கு அவ்வளவு எளிதில் புரிந்துவிடாதவாறு
அல்லது ஒரு எளிமையான கதையில் இன்னும் கூடுதல் சிக்கல்களைச் சேர்க்க வேண்டும்
என்று ஆசைப்படுகிறோம். இதுதான் சிறப்பானதாக இருக்கும் என்றும் நாம் நினைக்கிறோம்,
ஆனால் ஒருபோதும் அது அப்படியில்லை. அப்படியான வேலைகள் சேறும் சகதியையும்தான்
உருவாக்கும்.

”குறைவானதே அதிகம்” என்று மக்கள் சொல்வதை நான் அடிக்கடி கேட்கிறேன். ஆனால், அது
அவர்களின் வேலையில் பிரதிபலிப்பதை நான் கண்டதில்லை. பின்வருவது அனைத்து
கதைசொல்லல் முறைகளையும் சிறந்ததாக உருவாக்கும் ஏழுபடிநிலைகள். மாட் ஸ்மித்(Matt
Smith) என்ற எழுத்தாளர் / ஆசிரியரால் நான் கற்பிக்கப்பட்டேன். அவரோ, ஜோ குப்பி (Joe
Guppy) என்றவரிடமிருந்து இதனைக் கற்றுக்கொண்டார். நீங்கள், அவர்களை என்னிடமிருந்து
கற்கிறீர்கள்.

படிநிலைகள்:

1.) முன்னொரு காலத்தில் ____________________________________________________
2.) மேலும் ஒவ்வொரு நாளும் _____________________________________
3.) ஒரு நாள் வரையில்_________________________________________________
4.) மேலும் இதன் காரணமாக_________________________________________
5.) மேலும் இதன் காரணமாக____________________________________________
6.) இறுதியாக __________________________________________________
7.) அன்றிலிருந்து இன்றுவரை________________________________

இந்தப் படிகள் ஒருவகையான ‘புலப்படாத எழுத்திற்கான’ அடையாளங்கள். நீங்கள்
நிச்சயமாக இவற்றை அங்கீகரிப்பீர்கள் என்பதில் உறுதியாக உள்ளேன். அவைகள்
அர்த்தமுள்ளவையாக இருக்கின்றன, இல்லையா? ஏன் அவற்றை நீங்கள் முன்னமே
அறிந்துகொள்ளவில்லை?உங்களுக்குத் தெரியும். ஆனால், நீங்களோ இதைவிடச் சிக்கலாக
இருக்கும் ஒன்றையே நினைத்தீர்கள்.

முன்னொரு காலத்தில்…

கதையில் மூன்று – செயல் கட்டமைப்பை (three-act structure) விளக்கும் பல புத்தகங்கள்
உள்ளன, அவற்றை நீங்கள் படிக்கமுடியும், எனவே, இங்கு ‘ஏழு படிநிலைகள்’ அவற்றை ஒரு
வார்ப்புருவாகப் பயன்படுத்தி சுருக்கமாக இங்கே பொருத்துகிறேன்.
இப்போது நாம் முதல் இரண்டு படிநிலைகள் குறித்துப் பார்ப்போம்: முன்னொரு காலத்தில்
மற்றும் தினந்தோறும் (அதாவது ஒவ்வொரு நாளும்). மூன்று – செயல் கட்டமைப்பில், இவை
உங்கள் செயல் ஒன்று. செயல் ஒன்றின் நோக்கம் என்ன? இனிவரப்போகிற கதையைப்
பார்வையாளர்கள் பின்தொடர்ந்து புரிந்துகொள்வதற்காக, கதை சார்ந்து அவர்களுக்குத்
தெரிந்திருக்கவேண்டிய அனைத்தும் ஆக்ட் 1-ல் சொல்லப்படுகின்றன.
ஒரு சிறந்த செயல் ஒன்றின் (ஆக்ட் 1) முக்கியத்துவத்தைப் பற்றி புகழ்பெற்ற திரைப்பட
இயக்குனரான பில்லி வைல்டர் (Billy Wilder) என்ன கூறுகிறார் என்பதைப் பார்ப்போம்:
”மூன்றாவது செயலில் ஏதேனும் தவறுகள் இருந்தால், அது உண்மையில் முதல் செயலில்
நிகழ்ந்தது.”
நகைச்சுவையின் ஆக்ட் 1-ன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வதில் நம்மில்
பெரும்பாலோர்க்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. யாரோவொருவர் ஒரு மோசமான
நகைச்சுவைத் துணுக்கைச் சொல்லும்பொழுது, நாம் சிரிப்பதில்லை, அதற்காக அந்த
ஜோக்கின் ஒரு முக்கியமான பகுதியை அந்நபர் மறந்துவிட்டார் என்று அர்த்தமில்லை, ஒரு
ஜோக்கின் பஞ்ச்லைனை வெளிப்படுத்துவதற்கு முன்னால் இருந்த செட்-அப்பை(set - up)
அவர் சரியாகச் சொல்லியிருக்கவேண்டும். அந்த செட்-அப்தான் பஞ்ச்லைனை
நகைச்சுவையாக்குகிறது.
எனவே, இதிலிருந்து ஒரு நகைச்சுவைக்கு நாம் சிரிப்பதென்பது, அந்நகைச்சுவையில்
இருக்கிற பஞ்ச்லைனைப் பொறுத்தது அல்ல, அந்த நகைச்சுவையை அமைக்கும் விதம்,
அதாவது செட்-அப்பைப் பொறுத்தே அமைகிறது.
ஒரு நகைச்சுவையைப்(ஜோக்கை) போலவே, ஒரு கதையின் அமைப்பும் (செட்-அப்பும்)
பார்வையாளர்களுக்குக் கதையைப் புரிந்துகொள்ள, அவர்கள் தெரிந்துவைத்திருக்க வேண்டிய
விஷயங்கள் அனைத்தையும் சொல்லவேண்டும்.
பார்வையாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? உங்கள் குழந்தைப் பருவ
கதைப்புத்தகங்கள் பற்றிச் சிந்தியுங்கள்:
முன்னொரு காலத்தில் மூன்று கரடிகள் காட்டில் தங்கள் சொந்த வீட்டில் ஒன்றாக வாழ்ந்து
வந்தன. அப்பா கரடி, அம்மா கரடி மற்றும் இவர்களுக்குப் பிறந்த குழந்தை கரடி. அவர்கள்
ஒவ்வொருவரும் தாங்கள் சாப்பிடுவதற்கு ஏற்ற உணவு வைத்திருந்தனர். குழந்தை கரடியின்
உணவு சிறியது, அம்மா கரடிக்கு ஒரு நடுத்தர அளவிலானது, அப்பா கரடியின் உணவு
இவ்விருவரைக் காட்டிலும் சற்று பெரியது.
இந்தச் சில வாக்கியங்களிலிருந்து நாம் தெரிந்துகொள்ள பல விஷயங்கள் உள்ளன. ஆம்,
இந்தக் கதையில் மூன்று கரடிகள் உள்ளன என்பது நமக்குத் தெரியும். குறைந்தது மூன்று
பிரதான கதாபாத்திரங்கள் உள்ளன என்பதையும், அந்த மூன்று கதாபாத்திரங்களுக்கும்
ஒருவருக்கொருவர் என்ன உறவுநிலை என்பதையும் நாம் அந்த வாக்கியங்களிலிருந்து
அறிந்துகொண்டோம். இந்தக் கரடிகள் மனிதர்கள் போல நடந்துகொள்கின்றன என்பதையும்
நாம் அறிகிறோம். அது முக்கியம். கரடிகள் விலங்குகள் போல நடந்துகொள்ளும் கதையை
நீங்கள் கேட்டிருக்க முடியும். ஆனால், இங்கு கரடிகள் சாப்பிடுவதற்கு உணவுகள் (அல்லது

கஞ்சி) வைத்திருக்கின்றன. எனவே, இந்தக் கதைக்கான உலகத்தில், கரடிகள் விலங்குகள்
போல அல்லாமல், மனிதர்கள் போல நடந்துகொள்கின்றன.
ஞாபகம் இருக்கட்டும், நீங்கள் ஒரு கதையை உருவாக்கும்பொழுது, உங்கள் கதையின்
யதார்த்தத்தை பார்வையாளர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். இதுதான் உங்கள் உலகம்.
இதிலிருந்துதான் கதை சொல்லப் போகிறேன் என்பதை அவர்களிடம் வெளிப்படுத்திவிட
வேண்டும்.
“ஒரு வாத்து மதுபான விடுதிக்குள் நுழைந்து, ரம்மும் கோக்கும் கொண்டுவருமாறு
கட்டளையிடுகிறது.” இந்த ஜோக் (நகைச்சுவை) உங்களுக்கு ஒரு பிரதான கதாபாத்திரத்தை
அறிமுகம் செய்வதோடு, அந்த நகைச்சுவைக்கான யதார்த்த உலகத்தைத்
தெரியப்படுத்துவதன்மூலம் துவங்குகிறது. ஒவ்வொரு கதைக்கும் ஒரு கதையுலகு உள்ளது.
அதை முன்பே வாசகர்களுக்கு/ பார்வையாளர்களுக்கு வெளிப்படுத்திவிட்டோமானால்,
அவர்களிடமிருந்து வருகிற குழப்பமான கேள்விகளைத் தவிர்த்துக்கொள்ள முடியும்.
ஒரு வாத்து மதுபான விடுதிக்குள் நுழைகிறது, என்பதுடன் ஒரு நகைச்சுவையை
ஆரம்பிக்கிறபொழுது, இதைக் கேட்டுக்கொண்டிருக்கிற யாரும், “இது அபத்தம்!” என்று
சொல்வதில்லை, என்பதைக் கவனியுங்கள். மாறாக, அவர்கள் அதை ஏற்றுக்கொள்கிறார்கள்.
ஏனெனில், அவர்களுக்குச் சொல்லப்பட்ட முதல் விஷயத்தை அவர்கள் அங்கீகரிக்கின்றனர்.
உங்கள் “பேசும் வாத்து” எதுவாக இருந்தாலும், கதையின் ஆரம்பத்திலேயே மக்களுக்கு
அதைத் தெரியப்படுத்துங்கள். ஏனெனில், அப்பொழுதுதான் மக்கள், அந்த பேசும் வாத்துகள்
நிறைந்திருக்கிற கதையுலகின் யதார்த்தத்திற்குள் செல்வார்கள்.


ஸ்பீல்பெர்க்கின், ரைடர்ஸ் ஆஃப் தி லாஸ்ட் ஆர்க் திரைப்படத்தின் துவக்கக் காட்சிகள்
சிறப்பானவொன்றாகப் பேசப்படுகின்றன, ஏனெனில் இது பரபரப்பான காட்சிகளுடன்
துவங்குகிறது. ஆனால், இந்தத் துவக்கக் காட்சிகளில் நாம் கவனிக்க வேண்டியது, “பரபரப்பு”
என்ற ஒன்று மட்டுமல்ல, அதைவிட அதிகமான விஷயங்கள் உள்ளன. கதையின்
துவக்கத்திலேயே பல அற்புதமான, வியக்கத்தக்க சம்பவங்கள் நடப்பதால்,

பார்வையாளர்களுக்கு அந்தக் கதையின் உலகத்தைப் பற்றிய சில அத்தியாவசிய தகவல்களை
அறிந்துகொள்ள முடிகிறது.
துவக்கக் காட்சிகளிலேயே கதைக்கான யதார்த்த உலகம் சிறப்பாக அடிக்கோடிடப்படுகிறது
என்பதை நாம் கண்டுகொள்கிறோம் – இது வியட்நாம் போருக்குப் பிறகு ஒரு இராணுவ வீரன்
தனது வாழ்க்கையை எப்படிச் சமாளித்து வாழ்கிறான் என்பது பற்றிய கதையாக
இருக்கக்கூடாது, ஏனெனில் கதையின் துவக்கம் அதற்கேற்ற காட்சிகளோடு அமையவில்லை.
ரைடர்ஸ் ஆஃப் லாஸ்ட் ஆர்க் என்பது, 1936ஆம் ஆண்டில் நடக்கிற ஒரு கற்பனைக் கதை,
மற்றும் வீர தீர சாகசங்கள் நிறைந்த உலகம் அதற்குள் இருக்கிறது. இந்தக் கதை
உலகிலிருந்து, தொல்பொருள் ஆராய்ச்சி என்பது, களிமண் பாண்டங்களைத்
தோண்டியெடுப்பதை விடவும் அதிகம் என்பதை நாம் அறிவோம். ஃபெடோராவில் இருக்கிற
அந்த முக்கிய கதாபாத்திரம் (ஜோன்ஸ்), சவுக்கைக் கையாள்வதில் திறமைசாலி மற்றும்
அவனது வேலையில் மிகச் சாதுர்யமாகச் செயல்படக்கூடியவன் என்பது ஆரம்ப காட்சிகளைப்
பார்க்கும்பொழுதே தெரிகிறது. மேலும், அவர் அச்சமற்றவராகவும், புத்திசாலியாகவும்
தோன்றுகிறார். அதேசமயம் அவர் திட்டமிட்ட அனைத்தும், அப்படியே நடந்துவிடுவதும்
இல்லை, அதிலும் தடங்கல்கள் வருகின்றன, ஆனால் அவர் அதைச் சமாளிக்கிறார்.


பிறகு, இண்டியானா ஜோன்ஸின் பரம எதிரியான பெல்லோக்கை நாம் சந்திக்கிறோம், இங்கு
நாம் அவர் ஒரு இரக்கமற்ற வணிக வியாபாரி என்பதைத் தெரிந்துகொள்கிறோம், மேலும்
அவர் தேடும் மதிப்புமிக்க கலைப்பொருட்களுக்காக எவரையும் கொலைசெய்யவும்
தயங்கமாட்டார் என்பதும் தெரியவருகிறது.
கதாபாத்திரங்கள் சுவாரஸ்யமாக அமைய, அதற்குரிய பலவீனங்களும் வேண்டும், முழுக்கவும்
ஒரு கதாபாத்திரத்தை சூப்பர் ஹீரோபோல வடிவமைத்து, அவரால் எதையும் சாதிக்க முடியும்
என்பதுபோலக் காண்பித்தால், அதில் எந்த ஆர்வமும் இருக்காது. சூப்பர்ஹீரோவே
ஆனாலும், அவரை எதிர்க்கக்கூடிய வலிமையான எதிரி ஒருவர் வேண்டும், அந்த சூப்பர்
ஹீரோ சமாளிக்க முடியாத அளவிற்குத் தடங்கல்களும், பிரச்சினைகளும் கதையில் இருக்க
வேண்டும். மேலும், அந்த சூப்பர் ஹீரோ பலசாலியாகவே இருந்தாலும், அவருக்கும் சில

குறைகள்(பலவீனங்கள்) இருக்க வேண்டும். அப்படியாக, இந்தக் கதையில் இண்டியானா
ஜோன்ஸிற்கு எதில் பயம் என்பதையும் நாம் தெரிந்துகொள்கிறோம்: பாம்புகள். இந்தியானா
ஜோன்ஸும் சாதாரண மனிதர்தான். சூப்பர் ஹீரோ அல்ல. அவரும் பாம்புகளைக் கண்டால்
அதிகளவு பயப்படக்கூடியவராக இருக்கிறார். அவருக்கான பலவீனங்களையும் நாம்
தெரிந்துகொண்டோம்.


இது கதையில் வேறொன்றைக் கொண்டுவருகிறது. நமக்குச் சில விஷயங்கள் தெரியும்,
ஏனெனில் அவை நம்மை அறியாமலேயே நமக்குள் வரையறுக்கப்படுகின்றன. இந்தியானா
ஜோன்ஸ் திறமைசாலியாக இருக்கலாம், ஆனால் அவருக்கு மந்திர சக்திகள் இல்லை. இல
இடங்களில், மந்திர சக்திகளின் பயன்பாடு பொதுவானவை, ஆனால் இதில் இல்லை.
பேரழிவு என்றால் என்ன என்பதைக் காட்டுகிற மற்றொரு ஸ்பீல்பெர்க் படம் உள்ளது,
ஆனால் இதன் முதல் ஆக்ட் மிக மோசமானது: 1980களின் மத்தியில், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்
“அமேசிங் ஸ்டோரீஸ்” என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியைத் தயாரித்தார். இதில் ஒரு
குறிப்பிட்ட அத்தியாயமான “தி மிஷன்” கதையை, ஸ்பீல்பெர்க்கே இயக்கியிருந்தார்.
இந்தக் கதை, இரண்டாம் உலகப்போரின் போது பி-17 குண்டுவீச்சுத் தாக்குதல்
சம்பவங்களைப் பற்றிப் பேசுகிறது. பி-17ல் பத்து பேர் இருந்தனர். விமானத்தின்
அடியிலிருந்து வரும் எந்த அச்சுறுத்தலுக்கும் எதிர்வினையாக தனது இயந்திரத்
துப்பாக்கியைச் சுட அந்தப் பணியாளர்களில் ஒருவர் விமானத்தின் வயிற்றின் கீழ் ஒரு
ப்ளெக்ஸிகிளாஸ் குமிழியில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்தக் கதையில், மற்ற பணியாளர்களால் ” பெல்லி கன்னர் (belly-gunner)”
என்றழைக்கப்படுகிற இவர், அனைவராலும் விரும்பப்படுகிற மற்றும் திறமையான நபர்,
தனது குழுவில் பணியாற்றுகிறவர்களைக் கேலிச்சித்திரங்களாக வரைந்துகாட்டும்
தன்மையினால் அனைவரையும் ஈர்க்கிறார், அவர்களை மகிழ்ச்சிப்படுத்தி, கேளிக்கைக்கு
கொண்டுவருவதால், அனைவருக்கும் பிடித்தமான நபராகிறார் இந்த ‘பெல்லி கன்னர்’.
அவருக்கு வால்ட் டிஸ்னி ஸ்டுடியோவில் பணியாற்றவேண்டும் என்பதுதான் கனவாக
இருக்கிறது.

அந்த விமானம், ஒரு குண்டுவீசும் விபத்தில் சிக்கி மோசமாக சேதமடைந்துவிடுகிறது. பெல்லி
– கன்னர் தனது குமிழியிலிருந்து வெளியேறி விமானத்திற்குள் செல்ல முயற்சிக்கிறார், ஆனால்
முடியவில்லை, ஏனெனில் விமானம் கடுமையாகச் சேதமடைந்திருப்பதன் காரணமாக, அவர்
விமானத்தின் அடியிலேயே சிக்கிக்கொண்டிருக்கிறார்.
குழுவினர், அவரை வெளியே கொண்டுவர முயற்சிக்கிறார்கள், ஆனால் முடியவில்லை. எந்தப்
பிரச்சினையும் இல்லை; அவர்கள் தரையிறங்கும்பொழுது அவரை வெளியே எடுக்க முடியும்.
அச்சமயத்தில், தரையிறங்கும் கியர் (லேண்டிங் கியர்) சரியாக வேலை செய்கிறதா? என்பதைச்
சரிபார்க்குமாறு குழுவினரில் ஒருவர் பரிந்துரைக்கிறார் – கியர் வேலை செய்யவில்லை.
லேண்டிங் கியர் இல்லாமல், விமானச் சக்கரங்கள் கீழேயிறங்காது. அப்படி விமானச்
சக்கரங்கள் கீழே இறங்கவில்லை என்றால், விமானத்தின் வயிற்றுப் பகுதியில் மோதியும்,
உராய்ந்து சென்றும்தான் விமானம் தரையிறங்க வேண்டும். வேறுவழியில்லை. எனவே,
சக்கரங்களின் உதவியில்லாமல், விமானம் அதன் வயிற்றில் தரையிறங்க, உதவிசெய்ய
ஆளில்லாத அந்த பெல்லி கன்னர், தரையிறங்கும்பொழுது நசுக்கப்படுவார்.


குழுவினர் தங்கள் நண்பரை அப்படியே விட்டுவிட விரும்பவில்லை, அவரை முடிந்தளவிற்குக்
காப்பாற்றக்கூடிய முயற்சியை அதிகரிக்கின்றனர். எதுவும் வேலை செய்யவில்லை.
அந்த மனிதன் இறந்துவிடுவான் என்பது உறுதி, விமானம் தரையிறங்கும்பொழுது ஒரு
பாதிரியாரையும் அங்கே இருக்குமாறு, விமானப்படை அழைக்கிறது.
விமானம் தரையிறங்கும்பொழுது, அந்த பெல்லி கன்னர் இறக்கப்போகிறார், அவருக்கு
உதவிசெய்ய எதுவுமே அங்கு இல்லை என்பது வலிமிகுந்த உண்மை. குழுவில் உள்ள
ஒவ்வொருவரும், விமானத்தின் அடிப்பகுதியில் உள்ள குமுழியில் கையை வைத்து, தன்
நண்பனைக்கு விடைகொடுக்கும் பொருட்டு, ‘குட்-பை’ சொல்கின்றனர். அந்தக் குமுழியின்
மேல் உள்ள சிறிய திறப்பில் கையைவைத்து அவனுக்குப் பிரியாவிடை கொடுக்கின்றனர்.
குழுவினர் பெல்லி கன்னரின் தலையைத் தடவும்பொழுது அல்லது அவரது கையைத்
தழுவும்பொழுது அவர்களும் கண்ணீருடன்தான் இருக்கிறார்கள்.
எப்படியும் விமானம் தரையிறங்குபொழுது, அதன் வயிற்றுப்பகுதி கடுமையான சேதாரத்திற்கு
உள்ளாகும். அப்போது, அதன் வயிற்றுப்பகுதியில் இருக்கிற பெல்லி கன்னரும் கடுமையான
சித்திரவதைகளுக்கு ஆளாவான், துடிதுடித்து இறந்துபோவான். எனவே, பெல்லி கன்னருக்குத்
தெரியாமலேயே, அவரது அனுமதி இல்லாமலேயே, அவனைத் துப்பாக்கியால் சுட முடிவு
செய்கின்றனர். எனவே, விமானம் தரையிறங்கும்பொழுது, நசுக்கப்பட்டு துடிதுடித்து
இறந்துபோகும் வேதனையை பெல்லி கன்னர் அனுபவிக்கமாட்டான் என்று நினைக்கின்றனர்.


மெதுவாக, அந்தக் குழுவில் இருந்த ஒருவர் தனது கைத்துப்பாக்கியை இழுத்து, சுடுவதற்குத்
தயாராக வைத்து, சந்தேகத்திற்கிடமில்லாத வகையில் தனது நண்பரின் தலைக்குத்
துப்பாக்கியைக் குறிபார்க்கிறார்.
அந்தப் பரிதாபத்திற்குரிய பெல்லி கன்னர், நான் வால்ட் டிஸ்னி ஸ்டுடியோவில்
வேலைசெய்ய வேண்டும், எனவே, நான் இறக்க விரும்பவில்லை என்று அழுகிறான்.

திடீரென, பி-17ஐப் போன்றே ஒரு கார்ட்டூனை வரைகிறார் பெல்லி கன்னர். பி-17னின்
கார்டூன் மாதிரியை அவர் பரபரப்பாக வரைந்துகொண்டிருக்கையில், ஒரு துப்பாக்கி அவரது
தலையை நெருங்குகிறது. அவர் இப்போது கிட்டத்தட்ட தன்னுணர்விழந்த நிலையில்
இருக்கிறார். இருப்பினும், அவர் விமானத்தின் அடிப்பகுதியில் பெரிய, கார்ட்டூன்
சக்கரங்களை வரைகிறார்.
அவர்கள் தரையிறங்கும் இடத்தை மிக அண்மையில் நெருங்கும்பொழுது, விமான ஓட்டி,
தரையிறங்கும் கியர் வேலை செய்கிறதா? என்று கடைசியாக ஒருமுறை சோதித்துப் பார்க்க
முடிவு செய்கிறார். விமானத்தின் குறிகாட்டிகள் (இண்டிகேட்டர்ஸ்), சக்கரங்கள் கீழே
இறங்கிவிட்டன, என்று காட்டுகின்றன.
இப்போது உண்மையான விமானத்தின் அடிப்பகுதியிலிருந்து, பெரிய அளவிலான கார்ட்டூன்
சக்கரங்கள் வெளிப்படுகின்றன. அவை மெல்லிய பலூனின் ஒலியை உண்டாக்குகின்றன
மற்றும் கார்ட்டூன் சக்கரங்களின் இணைப்பு பூர்த்தியாகின்றன.


இந்த கார்ட்டூன் சக்கரங்களின் உதவியால் விமானம் தரையிறங்குகிறது, மேலும் அந்த
மனிதன் (பெல்லி கன்னர்) காப்பாற்றப்படுகிறான்.
இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்ட இரவு, இந்நிகழ்ச்சியைக் காண என்னுடன் நண்பர்கள்
குழுவும் இருந்தது. இந்நிகழ்ச்சியின்பொழுது தொலைக்காட்சித் திரையிலிருந்து நாங்கள்
கண்களை விலக்கவேயில்லை என்று உங்களுக்குச் சொல்லவேண்டும். இந்த இக்கட்டான
சூழ்நிலையிலிருந்து அவர்கள் எப்படி வெளியேறப்போகிறார்கள் என்று நாங்கள்
யோசித்துக்கொண்டே இருந்தோம். ஒவ்வொரு நிமிடமும் பதற்றமும் எதிர்பார்ப்பும்
அதிகரித்துக்கொண்டே இருந்தது.
ஆனால், கார்ட்டூன் சக்கரங்களின் உதவியால் விமானம் தரையிறங்கியதைப் பார்த்ததும்
நாங்கள் அனைவரும் ஏமாற்றத்துடன் சிரிக்க ஆரம்பித்துவிட்டோம். எனவே,

இந்நிகழ்ச்சியைப் பார்த்த அமெரிக்காவின் மற்ற பகுதியில் உள்ளவர்களின் எதிர்வினைகளும்
இவ்வாறே இருந்திருக்கும்.
இந்த எபிசோட் ஒளிபரப்பானபொழுது பார்வையாளர்கள் எவ்வளவுதூரம்
ஏமாற்றமடைந்தார்கள் என்பதை என்னால் சொல்லமுடியாது. எனக்கு இன்னும் நன்றாக
நினைவிருக்கிறது, அடுத்த நாள், அலுவலத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தவர்கள்
எல்லாம் இந்த எபிசோடின் க்ளைமேக்ஸ் எவ்வளவு மோசமாக இருந்தது என்பதைக் குறித்தே
பேசிக்கொண்டிருந்தனர். இந்த முழு எபிசோடும் அபத்தமானது என்று அவர்கள்
நினைத்தார்கள்.


கார்ட்டூன் சக்கரங்கள் அம்மனிதர்களைக் காப்பாற்றக்கூடிய ஒரு யதார்த்த உலகத்தை
ஸ்பீல்பெர்க் கதையில் அமைக்கவில்லை. அதே சமயம், இதுபோன்ற காட்சிகளுக்குச்
சாத்தியமான யதார்த்த உலகங்களும் உள்ளன: உதாரணத்திற்கு, ரோஜர் ரேபிட்டைக்
கட்டமைத்த விதம்…
இந்த எபிசோடில், கதையின் முதல் பகுதியில் ஸ்பீல்பெர்க் மிக நுட்பமாகவும், சிறப்பாகவும்
காட்சிகளை உருவாக்கியிருந்தார், எனவே, அதைப் பார்க்கிற பார்வையாளர்களாலும், காட்சி
ஏற்படுத்துகிற படபடப்பை உணரமுடிந்தது, பார்வையாளர்களாகிய நாங்களும் அந்தப்
பிரச்சினைக்குரிய மோசமான சூழ்நிலைக்குள் சிக்கிக்கொண்டது போன்ற
உணர்விலிருந்தோம், அதிலிருந்து எப்படி மீண்டு வெளியே வரப்போகிறோம் என்ற தவிப்பும்
முதல் பாதியில் இருந்தது. எனவே, கதை மற்றும் அந்தக் கதைக்குரிய கதையுலகு
போன்றவற்றை நாங்கள் ஈடுபாட்டுடன் ஏற்றுக்கொண்டோம். அந்தக் கதைக்குரிய உலகத்தில்
நாங்கள் சஞ்சரித்திருக்கிறபொழுது, கார்ட்டூன் டயர்கள் நாம் அறியாத புதிய
கதையுலகிலிருந்து வந்ததுபோலத் தோன்றியது. நாம் பழக்கப்பட்ட கதையுலகிலிருந்து,
பரிச்சயப்படாத கதையுலகிற்குள் சென்றுவிட்டதுபோன்ற உணர்வே இருந்தது.
பில்லி வைல்டர் (Billy Wilder) சொல்வதுபோல, ”மூன்றாவது ஆக்டில் (திரைக்கதையின்
மூன்றாம் பகுதி) ஏதேனும் தவறுகள் இருந்தால், அது உண்மையில் முதல் ஆக்டில்தான்
(திரைக்கதையின் கதையின் முதல் பகுதி) இருக்கிறது, எனவே உங்களது ”முன்னொரு

காலத்தில்” என்பது உங்கள் கதைக்கான யதார்த்த உலகம் மற்றும் பிரதான
கதாபாத்திரங்களை அமைப்பது குறித்து இருக்கட்டும்.
எது ஏற்கனவே கட்டமைக்கப்பட்டிருக்கிறதோ, அதை ”ஒவ்வொரு நாளும்…” எனும் புள்ளி
ஆதரிக்கக்கூடியதாக உள்ளது. இது ஒரு வடிவத்தை நிறுவுகிறது. உடைக்க வேண்டிய ஒரு
வடிவ முறை…
(தொடரும்…)