நிறவெறிக்கு எதிரான கதை – Skin


இந்தியாவில் எப்படி சாதி, சமூகத்தோடு பிணைந்திருக்கிறதோ அதுபோல, அயல் நாடுகளில் நிறவெறியும், இனவெறியும் இன்னும் சிலரிடம் மறைமுகமாகவேணும் அவர்கள் மனதில் இன்னும் அழியாமல் உள்ளது. குடும்பங்கள் சாதியின் கட்டமைப்பைக் காப்பாற்றுகின்றன. தன்னைப் போலவே, தன்னைத் தொடர்ந்து வருகிற சந்ததியினரும் இந்தச் சாதியின் படிநிலையைக் கடைப்பிடிக்க வேண்டுமென போராடுகின்றன. உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற இல்லாத தரவரிசையை இன்னும் மனதில் வைத்துக்கொண்டு போராடுவதால், ‘சாதி ஒரு மனநோய், சமூகத்தைப் பிடித்திருக்கிற நோய்க்கூறு’ என்றெல்லாம் சொல்வது பொருத்தமானதாகவே இருக்கிறது. நம் சமூகம் இன்னும் அந்த அழுகல் புற்றை மூடி மறைத்துக்கொண்டுதான், ஒரு ஆரோக்கியமான சமூகம் போல நடித்துக்கொண்டிருக்கிறது. 

சாதி அல்லது நிறவெறிக்கு எதிரான படங்களை எடுக்கிறபொழுது, அதை மிகவும் எச்சரிக்கையாகக் கையாள வேண்டிய தேவையுள்ளது. நம் சொந்த விருப்பு வெறுப்புகளை அந்தக் கதைக்குள் திணிக்கிறபொழுது, அது கலையாக மாறவேண்டிய தருணங்கள் பறிபோகின்றன. இன்னும் இதைத் தெளிவாகக் கூறவேண்டுமானால், திரைப்பிரதியானது ஒரு உரையாடலையோ, சிந்தனைத்தளத்தையோ திறந்துவைக்காமல், பழிவாங்குதல், வஞ்சம் போன்றவற்றை படத்தின் கருத்தாக முன்வைக்குமானால், அது சமூகத்தில் மோசமானதொரு விளைவையே உண்டாக்கும். உண்மையான கலை, அவ்வாறு செய்வது ஏற்புடையதல்ல. 

ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட, 2018ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வெளியான ‘the skin’ குறும்படம், நிறவெறிக்கு எதிரான கதையை மிகவும் புரிந்துணர்வு ரீதியில் அணுகியிருக்கிறது. தன் மகனுக்கு, முடிவெட்டி விடும் காட்சியிலிருந்து இப்படம் துவங்குகிறது. வெள்ளை நிற முகம். தாய், தந்தை, மகன், மற்றும் அவர்களது நண்பர்கள் என அனைவரும் வெள்ளையினத்தவர்கள். தந்தைதான், மகனை உருவாக்குகிறார். அவனது சிகையலங்காரத்தை நிர்ணயிப்பதிலிருந்து, தன் மகன் இப்படியெல்லாம் வளரவேண்டும், என்று தயார்படுத்துகிறார். கதையின் ஆரம்பத்திலேயே ஒரு தந்தை மற்றும் அவரது சிறு வயது மகனுக்குமிடையேயான பாசப்பிணைப்பு காட்சிப்படுத்தப்படுகிறது.

Related image

சிறிதுநேரத்தில் காரில் ஒரு குழு அங்கு வருகிறது. எல்லோரும் ஒரு குறுஞ்சுற்றுலாவுக்குச் செல்வதுபோல காரில் இசை அதிர பயணிக்கின்றனர். இருபுறமும் புல்வெளிப் பிரதேசங்களுக்கு நடுவே, அதிரும் இசையுடன் அந்தக் கார் செல்கிறது. இசைக்கு எல்லோரும் ஆர்ப்பரிக்கின்றனர். அவர்களது உணர்ச்சியை தூண்டிவிடுவதுபோன்ற இசையை, சிறுவனும் தன் தலையை அசைத்து அனுபவிக்கின்றான். 

பின்பு ஒரு பரந்தவெளி நிலப்பரப்பில், உருக்குலைந்த காரின் மீது பீர் பாட்டில்களை அடுக்கி வைத்து, துப்பாக்கியால் அதைச் சுட்டு வீழ்த்தி சந்தோஷப்படுகின்றனர். காருக்குள் அவர்கள் கேட்கிற அதிரடி இசையும், பரந்தவெளி நிலப்பரப்பில் துப்பாக்கியால் பீர் போத்தல்களைச் சுட்டுக்கொண்டு விளையாடுவதும், அவர்கள் மனதில் உறைந்துபோயிருக்கிற வன்முறைக்கான வடிகால்களாகவே பார்க்கத்தோன்றுகிறது. சிறுவன் முதலில், இந்தக் குழுவுடன் இல்லாமல், ஏரிக்கரையோரம் ஊர்ந்துசெல்கிற மலைப்பாம்பைப் பிடித்து விளையாடிக்கொண்டிருக்கிறான். குழுவினர் அதைப் பார்த்து, பாம்பை கீழே விட்டுவிடும்படிச் சொல்லவும், அந்தப் பாம்பிற்கு ஒரு முத்தம் கொடுத்து அதனைக் கீழே விட்டுவிடுகிறான். பிற்பாடு, பிரகாசிக்கும் வண்ணத்தோடு இருப்பவை, நச்சுத்தன்மை வாய்ந்தவை என்று சொல்லிக்கொடுக்க, இந்தக் காட்சி ஒரு தூண்டுதல் சம்பவமாகத் திரைக்கதையில் வைக்கப்பட்டிருக்கிறது. சிறுவன் அந்தக் குழுவின் வன்முறைக்கு இன்னும் முழுதாகப் பழக்கப்படவில்லை. எல்லாவற்றையும் நேசிக்கத்தெரிந்தவனாகத்தான் அச்சிறுவன் காண்பிக்கப்படுகிறான். ஆனால், தந்தைக்கு, தன் வாரிசாக அவனை உருவாக்கவேண்டிய தேவையிருக்கிறதல்லவா? அவன் விளையாடட்டும், ஆனால், அவன் துப்பாக்கியுடன் தான் விளையாட வேண்டும் என்று தந்தை நினைக்கிறார். 

Image result for the skin shortfilm

இந்தச் சிறுவன், இலக்கை குறிபார்த்து பாட்டிலை நொறுக்கிவிடுவான் என்று தந்தை மற்றவர்களிடம் பந்தயம் கட்டுகிறார். தாய் முதலில் பதறுகிறாள், ஏதும் காயம்பட்டுவிடும் என்று தடுக்கிறாள். ஆனால், தந்தையின் பேச்சே அங்கு செல்லுபடியாகிறது. அந்தப் பிஞ்சுக் கைகள், துப்பாக்கியைப் பிடித்து குறி பார்க்கிறது. தந்தைதான் முழுவதுமாக அவனுக்குப் பயிற்சியளிக்கிறார். தந்தை நினைத்ததுபோலவே, பீர் போத்தலை சிறுவன் சுட்டுவிடுகிறான். கூட்டத்தில் இருந்தவர்களெல்லாம் ஆர்ப்பரிக்கின்றனர். தந்தை, அச்சிறுவனை காரின் மேல் ஏற்றிவைத்து, “இவன் தான் அடுத்த தலைமுறை” என்கிறான். மிகவும் அரசியல் பொதிந்த வார்த்தைகள். தந்தைக்கு, தன் அடுத்த தலைமுறையை இப்படியான ஒரு வன்முறையோடு உருவாக்கி விட்டதில் அளவில்லா மகிழ்ச்சி. பந்தயம் கட்டியதில் பணமும் கிடைக்கிறது. அதை மனைவியிடம் கொடுத்துவிட்டு, மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொள்கிறான். ஏதோவொரு வகையில், சிறுவன் மெல்ல மெல்ல வன்முறையிடம் செல்வதற்கு அவன் குடும்பமும் ஒருவகைக் காரணம் என்பது புலப்படுகிறது. 

பின்பு அந்தக் குடும்பம் ஷாப்பிங் மாலுக்குச் செல்கிறது. குதூகலத்தோடு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டிருக்கிறது. கட்டணம் செலுத்துகிற இடத்தில், ஒரு கறுப்பின நண்பரும் காத்திருக்கிறார். அவர் கைகளில் ஒரு பொம்மை உள்ளது. சிறுவனுக்கு அந்த பொம்மையின் மீது ஒரு ஈர்ப்பு. எனவே, அந்தக் கறுப்பின நண்பரைப் பார்த்துச் சிரிக்கிறான். அவரும், இந்தக் குழந்தைக்கு விளையாட்டு காட்டுகிறார். சிறுவன் அந்தத் தருணங்களைச் சிரிப்பால் கடக்கிறான். தந்தைக்கு தன் மகனிடம் ஒரு கறுப்பினத்தவன் விளையாடுவது பிடிக்கவில்லை. இருவருக்குமிடையேயான பேச்சு ஒரு கட்டத்தில் சண்டையாக முடிகிறது. ஒரு கறுப்பினத்தவன் தன்னை அவமானப்படுத்தியதைத் தாங்கிக்கொள்ள முடியாத தந்தை, தன் குழுவினருடன் இணைந்துகொண்டு, அவனை அடித்துத் துவைக்கிறான். காருக்குள், அந்தக் கறுப்பின நண்பரின் குடும்பம் செய்வதறியாது இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கிறது. கையறுநிலை. கறுப்பின நண்பருக்கும், அச்சிறுவனின் வயதையொத்த ஒரு மகன் இருக்கிறான். தன் தந்தை துன்பப்படுவதைத் தாங்கிக்கொள்ள முடியாமல் தவிக்கிறான். வெள்ளையினத்தவர்கள், அந்த இடத்தையே துவம்சம் செய்துவிட்டு, முடிந்தவரை அவரைக் காயப்படுத்திவிட்டு அங்கிருந்து சென்றுவிடுகின்றனர்.

பின்னர் ஒரு உணவு நேரத்தின்பொழுது, வெள்ளையின தந்தை, தன் மகனிடம் பேசிக்கொண்டிருக்கையில், நிறம் அதிகமாக இருப்பவர்கள் அதிகமான விஷத்தன்மை உள்ளவர்கள் என்ற கருத்தைத் தன் மகனுக்குப் போதிக்கிறார். அடிபட்ட கறுப்பின நண்பரும், ஒரு மனிதர், அவருக்கும் நண்பர்கள் குழு என எல்லாமும் இருக்கும். எனவே, அவர்கள், இந்த வெள்ளையினத் தந்தையை அடித்து இழுத்து, தன் இருப்பிடத்திற்குக் கூட்டிச் செல்கின்றனர். வயதையொத்த இரு சிறுவர்களும் ஒரே ஃப்ரேமில் காட்சிப்படுத்தப்படுகிறார்கள்.

பழிவாங்குதல் என இந்த மோசமான உணர்வு இரு குழந்தைகளுக்குள்ளும் ஏற்படுகிறது. வெள்ளையினத்தவர்கள் மோசமானவர்கள் என்று கறுப்பினச் சிறுவனுக்கும், கறுப்பினத்தவர்கள் மோசமானவர்கள் என்று வெள்ளையினச் சிறுவனுக்கும் எண்ணம் வலுக்கிறது. குழந்தைகளின் மனதில் விஷங்கள் இப்படியாகவே பாய்ச்சப்படுகின்றன. 

Image result for the skin shortfilm

வெள்ளையினத் தந்தையை கடத்திச் சென்ற கறுப்பினத்தவர்கள், அவனது உடல் முழுவதும் பச்சை குத்துகிறார்கள். அதாவது, அந்த வெள்ளை நிறம் முற்றிலும் மறைந்து கருப்பு நிறமாக மாறுவது வரை அந்தச் செயல் தொடர்கிறது. என் வண்ணம்தான் உனக்குப் பிரச்சினையாக இருக்கிறது. எனவே, மீதி வாழ்நாள் முழுவதும், நீ என் வண்ணத்தில் இருந்து, நான் படும் கொடுமைகளையும், இன்னல்களையும் புரிந்துகொள் என்ற பழிவாங்கும் உணர்ச்சியில் இந்தச் செயல் நடந்தேறுகிறது. 

இக்குறும்படம் ஒருவேளை இத்தோடு முடிந்திருந்தால், பழிவாங்குதல் என்ற ஒற்றைக் கருப்பொருளோடு, கலையாக இது மிளிராமல் போயிருக்கும். நாம் இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் பார்த்ததுபோல, ஒரு படம் பார்வையாளர்களைச் சிந்திக்க வைக்க வேண்டும். பார்வையாளர்கள் எதிர்பார்ப்பிற்கு மாறான ஒரு திருப்பத்துடன் கதை முடிகிறது. 
உடல் முழுவதும் கருப்பாக மாறியபின்னர், முழு நிர்வாணமாக அவன் நடுத்தெருவில் இறக்கிவிடப்படுகிறான். தன் உடலின் வண்ணத்தை நீர் கொண்டு கழுவி, சுத்தப்படுத்த முயற்சிக்கிறான். பலனில்லை. தட்டுத்தடுமாறி கதறிக்கொண்டே வீட்டிற்குள் செல்ல நினைக்கிறான். ஆனால், ஏற்கனவே, தன் கணவன், கறுப்பினத்தவர்களால் கடத்திச்செல்லப்பட்டிருக்கிற இந்நிலையில் தனக்கும் தன் மகனுக்கும் ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்துவிடுமோ என்ற அச்சத்தில் இருக்கும் தாயானவள் துணைக்கு ஒரு துப்பாக்கியை வைத்துக்கொள்கிறாள். யாரேனும் முன் பின் அறிமுகமில்லாதவர் தன் வீட்டிற்குள் வந்தால், அவர்களைச் சுட்டுவிடுவது என்பதுதான் தற்போதைய திட்டம். தன் மகனிடமும் இதைத் தெளிவுபடுத்துகிறாள். கதையில் மிக சுவாரஸ்யமான பகுதியாக இது அமைந்துவிடுகிறது. வெள்ளையினத்தவன் முற்றுலும் கறுப்பாகத் தன் வீட்டிற்குள் வருகிறபொழுது, தன் மனைவியால் அடையாளம் கண்டுகொள்ளப்படுவானா? அல்லது தன் மனைவியின் கைகளாலேயே சுட்டு வீழ்த்தப்படுவானா? என்ற கேள்வி மிகப்பெரும் சஸ்பென்ஸாக நிற்கிறது.

 Related image
Figure 1 இஸ்ரேலிலிய இயக்குனர் கை நாட்டிவின் (Guy Nattiv) ’ஸ்கின்’ குறும்படம் சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படத்திற்கான விருதை வென்றபோது...

இருள் சூழ்ந்த வீட்டிற்குள் படிப்படியாக கணவன் முன்னேறி வருகிறான். மனைவி அவனை எச்சரிக்கிறாள். “it’s me, it’s me” என்று அழுதுகொண்டே கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சத்தை நோக்கி முன்னேறுகிறான் கணவன். மனைவிக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. தன் கணவன்தான் இப்படி முழுவதும் கறுப்பாக வந்திருக்கிறான் என்பதை அறிந்துகொள்ளும் அதேவேளையில், பின்னாலிருந்து மகனாலேயே, தந்தையானவன் சுட்டுக்கொல்லப்படுகிறான். 

தன் சந்ததியினருக்கு, நாம் என்ன கற்றுத்தருகிறோம் என்பது மிகவும் முக்கியம். நிறவெறியின் அடிப்படையில், அதிக பிரகாசிக்கும் வண்ணம் ஆபத்தானது என்றும், வன்முறையின் பக்கம் இழுத்துச்செல்லும் பயிற்சிகளையும் அளித்து தயார்படுத்தும்பொழுது, அது தன்னைத்தான் முதல் பலியாகக் கேட்கிறது. எனவே, இங்கு கதையானது, பழிவாங்குதல் என்பதாக அல்லாமல், ஒரு தத்துவ விசாரணை என்கிற ரீதியில் முடித்துவைக்கப்பட்டிருக்கிறது. இயக்குனர் Guy Nattiv-இன் இக்குறும்படம், இணையத்தில் இலவசமாகவே பார்க்கக் கிடைக்கிறது.