இலங்கைத் தமிழ் சினிமாவின் கதை

மலையகத்தில் வத்தேகமவில் உள்ள ஒரு தமிழருக்கு எஸ்டேட்டும், பல தொழில்களும் சொந்தமாக இருந்தன. சினிமாவைத் தன் வாழ்நாளில் பார்க்க விரும்பாத இந்தத் தந்தை, தன் தொழிலின் நிர்வாகத்தைப் புதல்வர்களுக்குக் கொடுத்தார். புதல்வர்களுக்கு சினிமா மீது தனிப்பிரியம்.

இந்தப் புதல்வர்கள் ஒரு சிங்களப் படம் தயாரிக்கலாமா? என்று எண்ணினார்கள். ஆனால், தேசிய தமிழ்த் திரைப்பட வரலாற்றுக்கு முதலில் தமது பங்களிப்பைச் செய்யலாம் என்று பின்பு தீர்மானித்தார்கள். அதன்படி ‘காத்திருப்பேன் உனக்காக’ என்ற பெயரில் தமிழ்ப் படம் ஒன்றைத் தயாரிக்கலாம் என்று முடிவு செய்தார்கள். அப்படி முடிவு செய்த சகோதரர்கள்தான், எம். ஜெயராமச்சந்திரன், எம். தீனதயாளன், எம். ஜெயராஜ் ஆகியோராவர்.

படத்துக்கான கதை தம்பி ஜெயராஜிடம் ஏற்கனவே தயாராக இருந்தது. அது ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. கலைத்துறையில் இவர்களது குருவான நவாலியூர் நா. செல்லத்துரை இம் மூலக்கதைக்கான திரைக்கதையையும், வசனங்களையும், பாடல்களையும் எழுதினார்.

இந்த மூன்று சகோதர்களின் உறவினர் துரைபாண்டியன். இவர் சினிமா உலகில் அனுபவப்பட்டிருந்தார். இயக்குநர் பொறுப்பை இவரிடம் கொடுக்கலாம் என்றால், அவர் திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் தன் பெயரைப் பதிவு செய்திருக்கவில்லை. எனவே, இப்பொறுப்பு எஸ்.வி. சந்திரன் என்ற இளைஞருக்கு வழங்கப்பட்டது.


இளைஞர் எஸ்.வி. சந்திரன் நீண்ட காலமாகவே சிங்களப் பட உலகில் எடிட்டராகவும், உதவி இயக்குநராகவும் பணியாற்றியவர். ‘குத்துவிளக்கு’ திரைப்படத்தின் எடிட்டரும் இவரேதான். ‘துப்பத்தாகே ஹித்த வத்தா’ என்ற சிங்களப் படத்தின் மூலம் முதன் முதலாக டைரக்டராக அறிமுகமானவர். துரை பாண்டியன் இப்படத்தின் இணை இயக்குநராகக் கடமையாற்றினார்.

உதவி டைரக்டராக மூனாஸ் தெரிவுசெய்யப்பட்டார். நிதி மேற்பார்வைப் பொறுப்பை எஸ்.வி. பாலசுப்பிரமணியம், வி. தர்மலிங்கம், பி. சுப்பையா ஆகியோர் பொறுப்பேற்றார்கள்.

பல வருடங்களுக்கு முன் கண்டியிலிருந்து ‘செய்தி’ என்ற பத்திரிகை வெளிவந்தது. அதன் ஆசிரியர் நாகலிங்கம். அவர் மகன் சிவராம், நல்ல அழகான இளைஞன். இவரே இப்படத்தின் கதாநாயகனாக நடித்தார்.

கொழும்பைச் சேர்ந்த கீதாஞ்சலி என்ற பெண் கதாநாயகியாக நடித்தார். கண்டி விஸ்வநாதராஜா நாடகங்களில் அனுபவப்பட்டவர். ஏற்கனவே ‘நிர்மலா’வில் நடித்தவர். இவருக்கும் இப்படத்தில் ஒரு பாத்திரம் வழங்கப்பட்டது. ரவி செல்வராஜ் பிரதான உபபாத்திரத்தில் நடித்தார்.

ஏ.எம்.லதீப் மேடை நாடகங்கள் பலவற்றில் நடித்து அனுபவப்பட்டவர். இவர் இப் படத்தில் தந்தை பாத்திரத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார். நா.செல்லத்துரையும், தர்மலிங்கமும் கலைத் தாகமுள்ளவர்கள். இவர்கள் இருவரும் இப்படத்தில் முக்கியமான உப பாத்திரங்களாகத் தெரிவுசெய்யப்பட்டார்கள்.

மற்றும் சந்திரகுமார், மித்திரகுமார், குலேந்திரன், பாலகிருஷ்ணன்,
கிருஷ்ணராஜா, ருக்மணிதேவி, ஸ்ரீதேவி, கிருஷ்ணகுமாரி, சந்திரா, ஜெயதேவி, நிர்மலா, ரத்னகலா, வசந்தி ஆகியோர் நடிக்க ஒப்பந்தமானார்கள்.

இது எம். முத்துசாமி இசை அமைத்த 5வது தமிழ்ப்படம். ஆரம்பத்தில் திலகநாயகம் போல் பின்னணி பாடினார். அது வானொலியிலும் ஒலிபரப்பப்பட்டது. பின்பு அவர் பாடிய பாடல்களை ஜோசப் ராஜேந்திரன் பாடினார். சுஜாதா அத்தநாயக்காவும் பாடினார்.

ஜெய்ந்திரா மூவிஸ் ‘காத்திருப்பேன் உனக்காக’ படத்தின் ஆரம்ப விழா 6.9.76இல் மாத்தளை முத்துமாரியம்மன் கோவிலில் நடைபெற்றது. ஆரம்பப் படப்பிடிப்பு அங்கேயே தொடங்கியது. படப்பிடிப்பு தொடர்ந்து கொழும்பு, கண்டி, தெஹிவளை மிருகக்காட்சிசாலை போன்ற இடங்களில் நடைபெற்றது.

9 மாதங்களின் பின் படம் சம்பூர்ணமாகியது. 24.06.77 இல் இலங்கையின் பல நகரங்களிலும் 7 தியேட்டர்களில் திரையிடப்பட்டது.

ராஜாவை, ராஜி காதலிக்கிறாள். ஆனால், ராஜாவோ அத்தை மகள் சாந்தாவைக் காதலிக்கிறான். ராஜியின் சகோதரனான கண்ணன் ராஜாவின் தங்கையான வனிதாவைக் காதலிக்கிறான்.

ராஜா, சாந்தா திருமணம் நடைபெற இருந்த சமயத்தில், வனிதாவைக் கெடுத்துவிட்டுத் தனது தங்கை ராஜியின் கழுத்தில் தாலி ஏறினால் வனிதாவுக்கு வாழ்வளிப்பேன் என்கிறான்.

தங்கைக்கு வாழ்வு கொடுப்பதா? அல்லது சாந்தாவை மணந்து வாழ்வதா? என்ற சிக்கலில் விழுகிறான். முடிவில் தன் தங்கைக்காகக் காதலியின் சம்மதத்துடன் ராஜியைத் திருமணம் செய்ய முன்வருகிறான் ராஜா. இதுதான் ‘காத்திருப்பேன் உனக்காக’ திரைப்படத்தின் கதைச் சுருக்கமாகும். எல்லாம் சரிதான் கதையின் முடிவுதான் சிறந்ததாக அமையவில்லை.

1977ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் இலங்கையில் ‘கீதா’ என்ற சினிமா பத்திரிகை வெளிவந்துகொண்டிருந்தது. இதன் ஆசிரியர் தமிழ்நெஞ்சனாவார். இவருக்கு உதவியாக ஜெயசீலனும் அதே பத்திரிகையில் இருந்தார். இந்த ‘கீதா’ இலங்கையின் தமிழ்த் திரைப்பட வளர்ச்சியில் அதிக பங்களிப்புச் செய்திருக்கிறது. மற்ற தேசிய பத்திரிகை செய்யாத அளவுக்கு அதிகமாகவே உதவியிருக்கிறது.

இந்த ‘கீதா’வும் அப்பொழுது ‘காத்திருப்பேன் உனக்காக’ படத்துக்கு விமர்சனம் எழுதியது.


‘… ஒருகாதல் கதை, கருத்துள்ள குடும்பக் கதையாகவும் அமையும் என்பதை இப் படம் நிரூபித்திருக்கிறது. வசனத்தின் சிறப்புகள் படம் முழுவதும் பரவி இருந்தாலும் முக்கிய நடிகர்களின் வாயிலிருந்து வெளிப்படும்போது உயிர்ப்பு பெறுகிறது…. கதாநாயகன் சிவராமின் நடிப்பு சிறப்பாக அமைந்திருக்கிறது. விஸ்வநாத ராஜாவின் நடிப்பு அருமை. செல்வராஜின் துடிப்பு வெகுசிறப்பாக இருக்கிறது. கீதாஞ்சலி காதல் காட்சிகளைவிட, சோகக் காட்சிகளில் எடுபடுகிறார். ஸ்ரீதேவி வசனங்களை அழுத்தாமல் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். கிருஷ்ணகுமாரி கோபப்படும்பொழுது சிறப்பாக இருக்கிறது. செல்லத்துரை, லதீப், தர்மலிங்கம் ஆகியோர் தந்தைகளுக்குரிய தாக்கமான நடிப்பினைச் சிறப்பாகவே வெளிப்படுத்துகிறார்கள். சந்திராவின் தாய்மை நடிப்பிலும் தரம் இருக்கிறது. ருக்மணிதேவி, தான் ஒரு பழம்பெரும் நடிகை என்பதை நிரூபிக்கிறார்.

ஆர். முத்துசாமி பாடல்களுக்கு ஏற்றவகையில் இசை அமைத்திருந்தார். ஒளிப்பதிவாளர் எஸ். தேவேந்திரா தனது தனித்திறமையை நிரூபித்திருக்கிறார். எடிட்டராகவும் டைரக்டராகவும் கடமையாற்றி சிறப்பான ஒரு படத்தை நமக்கு அளித்திருக்கிறார் எஸ்.வி. சந்திரன்.

‘இலங்கையில் ஒரு தரமான தமிழ்ப்படம் தயாரிக்கவேண்டுமென்ற இலட்சிய வேட்கையில் பல இலட்சங்களை வாரி இறைத்து ஒரு படத்தைத் தயாரித்து இருக்கின்றனர் ஜெயேந்திரா மூவீஸார் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது’ என்று தயாரிப்பாளருக்கு ‘சப்போட்’ பண்ணி விமர்சனம் எழுதியது.

வீரகேசரியில் (03.07.77) ‘கண்ணன்’ என்பவர் விமர்சனம் எழுதியிருந்தார். …உள்நாட்டுத் திரைப்பட வளர்ச்சியில் ‘காத்திருப்பேன் உனக்காக’ ஒரு புதிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எம். ஜெயராஜின் இக் கதை சிறுகதையாக இருந்தபோதிலும் நவாலியூரானின் திரைக்கதை தொய்வில்லாமல் விறுவிறுப்பாக ஓடத் துணைசெய்கிறது. சிவராம் சர்வ லட்சணமுள்ள கதாநாயகனாக விளங்குகிறார். காதல், சண்டை, சோகக்காட்சிகளில் தனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தை நன்றாகப் பயன்படுத்தியிருக்கிறார். கதாநாயகி கீதாஞ்சலி சோகக்காட்சிகளில் தனித்துப் பிரகாசிக்கிறார். வில்லனாக நடிக்கும் செல்வராஜ் சோடைபோகவில்லை. விஸ்வநாதராஜாவின் நடிப்பை எவராலும் மறக்கமுடியாது. அவர் நகைச்சுவையிலும் சோகத்திலும் இணையற்று நிற்கிறார். ஸ்ரீதேவியும் கிருஷ்ணகுமாரியும் இலங்கையில் நடிகைகள் பஞ்சத்தை நீக்குவார்கள் என நம்பலாம். நா.செல்லத்துரை ஒரு பண்பட்ட குணச்சித்திர நடிகர் என்பதை நிரூபித்துவிட்டார். லத்தீப் தன் பாத்திரத்தை உணர்ந்து நன்றாக நடித்துள்ளார்.

ஆர். முத்துசாமியின் இசையில் உருவான ‘பட்டுப்புல்மேனி’ என்று சுஜாதா பாடும் பாடல் இனிமையாக இருக்கிறது. எஸ். தேவேந்திராவின் கமரா பளிச்சென்று தன் ஒளிப்பதிவைக் காட்டுகிறது…’ என்று பொதுவாக எழுதியது.

இலங்கைத் தமிழ் மக்களோடு இணைந்த சில பொருட்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று ‘மெய்கண்டான்’ கலண்டராகும். அந்த மெய்கண்டான் கொம்பனியினர் ‘கலாவல்லி’ என்ற சஞ்சிகையை வெளியிட்டு வந்தனர். அந்தச் சஞ்சிகையில் ‘கோவிலூர் செல்வராஜன்’ விமர்சனம் எழுதினார்.

‘….தமிழகத்தைப்போல் இலங்கையிலும் தரமான படத்தைத் தயாரிக்கமுடியும் என்று சவால்விட்டிருக்கும் எஸ்.வி. சந்திரனுக்கு ஒரு சபாஷ். கண்ணுக்கினிய கோணங்களில் படமாக்கியிருக்கும் எஸ். தேவேந்திராவின் கமரா நுணுக்கங்களைப் போற்ற வேண்டும். படத்தின் கடைசியில் இடம்பெறும் சுடலைக்காட்சி நெஞ்சத்தை உருக்குகிறது’ என்று குறிப்பிட்டிருந்தார்.

சிந்தாமணியில் (03.07.77) ‘நக்கீரர்’ நன்றாகப் புகழ்ந்து விமர்சனம் எழுதினார்.

‘…படப்பிடிப்பு சில இடங்களில் தென்னிந்தியப் படமோ என்று பிரமிக்க வைக்கிறது. பாடல்கள் தனியாக ஹிட் ஆகாவிட்டாலும் படத்தில் ரசிக்கக்கூடியதாக இருக்கிறது. இதுவரையில் வந்த இலங்கைத் தமிழ்ப் படங்களின் கதாநாயகர்களுக்குச் சவாலாக நடித்துள்ளார் சிவராம்.

செல்வராஜ் இணை நடிகராக ஈடுகொடுத்து நடித்துள்ளார். படத்தின் டைரக்டர் சந்திரனே எடிட்டர் என்பதால், படத்தின் சில கட்டங்களில் குறிப்பாகக் காதல் காட்சிகளில் மிகவும் நுண்ணியமாகக் கை வைத்துள்ளார்.! ‘காத்திருப்பேன் உனக்காக’ ஒரு வெற்றிப்படமாகவே தயாரிக்கப்பட்டுள்ளது.’ என்று தூக்கி எழுதியது சிந்தாமணி.

1984ஆம் ஆண்டுக் காலத்தில் ரூபவாஹினி தொலைக்காட்சி இலங்கைத் தமிழ்ப்படங்கள் பலவற்றை வாரா வாரம் தொடராகக் காட்டியது. அவ்வாறே ‘காத்திருப்பேன் உனக்காக’ திரைப்படமும் 13.11.84 முதல் காண்பிக்கப்பட்டது. அதைப் பார்த்துவிட்டும் ‘சிந்தாமணி’ விமர்சனம் எழுதியது. அது எப்படி என்று பாருங்கள்.

‘….இப்படத்தில் குரல் டப்பிங் படுமோசம். வாயசைப்பும் உச்சரிப்பும் வேற்றுமொழி டப்பிங் படத்தைப் பார்ப்பதுபோல் இருக்கிறது. பல இடங்களில் வசன உச்சரிப்பில் தமிழ்க் கொலை சகிக்க முடியாதபடி இருக்கிறது. ஒரு சில கட்டங்களில் தோன்றினாலும் காலஞ்சென்ற பிரபல நடிகை ருக்மணிதேவியின் நடிப்பைத்தான் நன்றாக ரசிக்கமுடிகிறது…’ என்று இறக்கி எழுதியிருந்தது. இந்தச் சில வருட இடைவெளிக்குள் இப்படி வித்தியாசமான விமர்சனம் எழுதியதன் காரணம் என்னவோ தெரியவில்லை.

ஒருவேளை ஆரம்ப கால விமர்சனம் ஊக்குவிப்பு விமர்சனமாக இருக்கலாம்.

இப்படம் திரையிடப்பட்டபோது மத்திய கொழும்பில் (செல்லமஹால்) 24 நாட்களும், தென் கொழும்பில் (பிளாசா) 21 நாட்களும் ஓடியது. இப் படம் யாழ்ப்பாணத்தில் மட்டும் அதிக நாட்கள் ஓடியது. அங்கு (வின்ஸர்) 42 நாட்கள் தொடர்ந்து ஓடியது. மட்டக்களப்பில் (ராஜேஸ்வரா) 15 நாட்களும், திருகோணமலையிலும் (ராஜ்), பதுளையிலும் (லிபர்ட்டி) தலா 11 நாட்கள் ஓடியது. கட்டுகஸ்தாட்டையில் (சீகிரி) 10 நாட்கள் மட்டுமே ஓடியது.

முதலில் இப் படம் திரையிடப்பட்டபோது, அதிக ரசிகர்கள் பார்க்காவிட்டாலும் ரூபவாஹினியில் காட்டப்பட்டபோது பலரும் பார்த்தார்கள். பாராட்டினார்கள்.

பொருளாதார ரீதியில் இப் படம் வெற்றி பெறவில்லை. பொதுவாக ரசிகர்கள் ‘நல்ல படம்’ என்று சொல்லும் அளவுக்குச் சிறந்து விளங்கியது. அந்த வகையில் இப்படத்தைத் தயாரித்த சகோதரர்களான எம். ஜெயராமச் சந்திரன், எம். தீனதயாளன், எம். செல்வராஜா ஆகியோர் பாராட்டப்படவேண்டியவர்களே.

- தொடரும்…