கோஸ்டா காவ்ரஸின் ஸ்டேட் ஆஃப் சீஜ் (State of Siege)

தொகுப்பு: தினேஷ்

படத்திற்குள் செல்வதற்கு முன், முதலில், கோஸ்டா காவ்ரஸ் – இல்மஸ் குணே இருவருக்குமிடையேயான நட்பு பேசப்பட வேண்டிய ஒன்று. இல்மஸ் குணேவின் தாக்கத்தில் கோஸ்டா காவ்ரஸ் படங்கள் எடுத்திருக்கிறார். இருவரும் தேர்ந்தெடுக்கிற கதைக்களனில் காணப்படுகிற ஒற்றுமையும் இதை உணர்த்துவதாக இருக்கிறது.

நாம் முதலில் அரசியல் என்றால் என்ன? என்பது பற்றிய வரையறையைத் தெரிந்துகொள்வது நல்லது.  கட்சி சார்ந்த அரசியல், இயக்கம் சார்ந்த அரசியல்,  கழகங்கள் சார்ந்த அரசியல், என ஒரு சித்தாந்தம் கோட்பாட்டைச் சார்ந்திருப்பதும், இயங்குவதும்தான் அரசியல் என்று நினைக்கிறோம். ஆனால், உண்மையில் அரசியல் என்பது அப்படியானது அல்ல. அரசியல் என்பது தனிமனிதனுக்கும் அவனுடைய உறவுகளுக்கும், அவனது உறவுகளின் பகுதியான சமூகத்திற்கும், அந்தச் சமூகத்தை வழிப்படுத்துகிற, நெறிப்படுத்துகிற அல்லது கட்டுப்படுத்துகிற இந்த அரசுக்குமான உறவுநிலையைத்தான், அரசியல் என்று வரையறுக்கலாம். அரசியல் என்பது ஒருவகையில் நிர்வாகம். நிர்வாகம் என்பது ஒரு சமூகம் கட்டமைத்துக்கொள்வது, அது மனிதர்களுக்கிடையேயான உறவு, அதன்படி அவரவர்களுக்கு இருக்கும் வேறுபட்ட கருத்துக்களுக்கிடையே ஒரு இணக்கத்தை உருவாக்குவது. இதுதான் அரசு மற்றும் அரசியல்.

இதில் சார்புகளும், அவரவர் சார்ந்திருக்கிற அரசியல் நிலைப்பாடுகளும் உண்டு. முக்கியமாக, இந்த அரசியல் நிலைப்பாடு என்பது கட்சி சார்ந்து மட்டுமே இருக்கவேண்டியதில்லை. அல்லது ஒரு இயக்கத்தின் சார்பாக மட்டுமே இருக்கவேண்டும் என்கிற அவசியமும் இல்லை. நம் எல்லோருக்குமே, சில நெறிமுறைகளும் நியதிகளும் இருக்கின்றன. உதாரணத்திற்கு எல்லோர் மீதும் அன்பு கொண்டிருத்தல் வேண்டும் என்கிறோம். களவு செய்யக்கூடாது, பிற மனிதர்களைத் துன்புறுத்தக்கூடாது, பிற மனிதனை ஒடுக்கக்கூடாது, பிற மனிதனை ஒதுக்கக்கூடாது என்று சொல்கிறோம். இதுபோன்ற அறங்கள் இருக்கிறதல்லவா, இந்த அறத்தின் பக்கம் நின்று, இந்த சமூக நீதியில் சார்பு எடுப்பதைத்தான் அரசியல் என்கிறோம். இதுபோன்ற அரசியல் சார்ந்து, கருத்தியல் சார்ந்து, அற ரீதியிலான சார்பு எடுப்பதுதான் அரசியல்.

இந்தப் பார்வையிலிருந்துதான் கோஸ்டா காவ்ரஸும், அவர் எடுக்கிற படங்களும் எந்த அளவிற்கு முக்கியமானவை என்று பார்க்க வேண்டும். கோஸ்டா காவ்ரஸ் இயக்கியுள்ள அனைத்துப் படங்களுமே அரசியல் திரைப்படங்கள்தான். அவர் இயக்கத்தில் வெளியான Betrayed (1988), missing (1982), புகழ்பெற்ற அவரது திரைப்படமான Z (1969), The Confession (1970), சமீபத்தில் க்ரீக் நிதி அமைச்சரின் நினைவுகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட Adults in the Room (2019), என இந்தப் படங்கள் எல்லாவற்றிலுமே அவர் ஒரு உரையாடலை நிகழ்த்துகிறார். ‘அரசியல்’ பற்றிச் சொன்னதுபோல, நீதி சம்பந்தமான, அறம் தொடர்பான உரையாடல்களைத் தன் திரைப்படங்கள் வழி நிகழ்த்துகிறார் காவ்ரஸ். உரையாடலை அரசாங்கத்தோடு நிகழ்த்துவது. உரையாடலை அரசாங்க நிர்வாகிகளோடு நடத்துவது. அதிகாரம் யாரிடம் உள்ளதோ, அவர்களோடு உரையாடலை நிகழ்த்துவது. ராணுவத்தோடு, காவல்துறையோடு, உரையாடல் நிகழ்த்துவது. அதாவது மனிதனையும், சமூகத்தையும், யார் கட்டுப்படுத்துபவர்களாக இருக்கிறார்களோ, யார் நெறிப்படுத்துகிறோம் என்று தங்களைக் கோரிக்கொள்கிறார்களோ, தங்களைப் பிரகடனப்படுத்திக்கொள்கிறார்களோ, வர்களோடு நடத்துகிற இந்த உரையாடல்தான் கோஸ்டா காவ்ரஸின் படங்களாக இருக்கின்றன.
அவருடைய படங்கள் பெரும்பாலும், காலனியாதிக்கத்திற்கு எதிராகப் போராடிய விடுதலைப் போராளிகளின் உரையாடலாக இருக்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போராடிய தென்னமெரிக்க மக்களின் உரையாடலாக இருக்கிறது. அதேபோல அவர் வாழ நேர்கிற, க்ரீஸில் உள்ள அந்த சமூக அமைப்பில் ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிராகப் போராடிய மக்களின் உரையாடல்களைப் பதிவு செய்கிறது. ஐரோப்பிய நாடுகளை, ஐரோப்பிய யூனியன் கட்டுப்படுத்துகிறது, தங்கள் நாடுகளின் இறையாண்மையே, ஐரோப்பிய யூனியனின் அதிகாரத்தினால் கேள்விக்குள்ளாகிறது. க்ரீஸில் இதுதான் நடந்தது. க்ரீஸில் பெரும்பான்மையான மக்கள்,” தங்கள் மீது கடன் சுமை அதிகமாகயிருக்கிறது. தங்கள் மீதிருக்கிற கடன் தொகையை முழுமையாக எங்களால் கொடுக்கமுடியாது, ஆகவே எங்களுக்கு விலக்கு அளிக்கவேண்டும்” என்ற கோரிக்கையை எழுப்பினர். முழு மக்களும் வாக்களித்து, இந்தக் கோரிக்கையை ஐரோப்பிய யூனியன் முன்பு வைத்தார்கள். ஆனால், ஐரோப்பிய யூனியன் அவர்களை நிராகரித்தது. எனில், இங்கு மக்களின் இறையாண்மை என்பது என்ன? மக்களின் விருப்பம் என்பது என்ன? இங்கே மக்களின் நலன் என்பது என்னவாகயிருக்கிறது? என்பதைத்தான் சமீபத்தில் வெளியான அவரது Adults in the Room படத்தில் விவாதித்திருக்கிறார்கள்.

கோஸ்டா காவ்ரஸ் தொடர்ந்து, தனது படங்களின் வழி உரையாடலை நிகழ்த்துகிறார். அதிகாரத்திற்கு எதிராக, அதிகாரம் இல்லாத மக்கள் தங்களுடைய உரிமைவேண்டி செய்கிற போராட்டங்களைத்தான், அவர் தன் படங்களில் உரையாடலின் வழியே கட்டமைக்கிறார். அவருடைய இயக்கத்தில் வெளியான அனைத்துப் படங்களும் இதைத்தான் செய்கிறது. ஒரு திரைப்பட இயக்குனராக அவருடைய நேர்மையே, அதிகாரத்தை வைத்திருப்பவர்களுக்கும், அதிகாரமற்றவர்களுக்கும் இடையிலான உரையாடலை நீதியின் பக்கம் நின்று, பேசுவதுதான். இதுவே, திரைப்படங்கள் மீதான அவரது அடிப்படையான அணுகுமுறை.

இல்மஸ் குணே, ஒரு குர்திஸ் திரைப்பட இயக்குனர். துருக்கிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். அவர் துருக்கிய கம்யூனிஸ்ட் பார்ட்டியில் இருந்தவர், துருக்கிய மாவோயிஸ்ட் இயக்கத்தில் இருந்தவர், இதனால் துருக்கிய அரசாங்கம் அவரை வேட்டையாடியது. துருக்கிய அரசாங்கத்தின் கொலைத் தண்டனையிலிருந்து தப்பி, இல்மஸ் குணே ஃப்ரான்சிற்கு வந்தார். எனவேதான், அவர் இயக்கிய The Wall (1983) உட்பட, பல படங்கள் ஃப்ரான்சில்தான் உருவாக்கப்பட்டன. ஃப்ரான்சின் கைவிடப்பட்ட கட்டிடத்தில் ஒரு சிறையை உருவாக்கி, அதை அடிப்படையாக வைத்து அவருடைய The Wall படத்தை இயக்கினார். இல்மஸ் குணே மூன்றாம் உலக நாடுகளைச் சார்ந்த இயக்குனராதலால், அந்த மூன்றாம் உலக நாடுகளின், ஒடுக்குமுறை அரசுகளை எதிர்த்துப் போராடிய கலைஞன். அவர் அந்த நாட்டினுடைய அடக்குமுறையிலிருந்தும், கொலைத் தண்டனையிலிருந்தும் தப்பித்து ஃப்ரான்சிற்கு வருகிறார். அப்படி வருகிறபொழுது, ஐரோப்பாவிலிருக்கிற கலைஞர்களுக்கு ஒரு பொறுப்பு இருக்கிறதென அவர் நினைக்கிறார்.
”ஐரோப்பாவில் இருக்கிற இடதுசாரி கலைஞர்களுக்கு, ஐரோப்பாவில் சமூக நீதிக்காக போராடுகிறவர்களுக்கு, ஐரோப்பிய காலனியாதிக்கம்தான் இந்த மூன்றாம் உலக நாடுகள் சந்தித்து வருகிற பெரும்பான்மையான பிரச்சினைகளுக்கும் காரணம் என்று கருதுகிறவர்களுக்கு ஒரு கடப்பாடும், பொறுப்புணர்வும் இருக்கிறது” என்கிறார். இந்த கடப்பாடுள்ள படைப்பாளிகளின் பரம்பரை, ஐரோப்பிய வரலாறு முழுக்கவுமே இருக்கிறது. தியோ ஆஞ்சலோபெலாஸ், கென் லோச், கோஸ்டா காவ்ரஸ், கோதார்த் அல்லது க்ரிஸ் மார்க்கரை எடுத்துக்கொண்டாலும், இவர்கள் எப்போதுமே மூன்றாம் உலக நாடுகளின் கலைஞர்களையும், படங்களையும் ஐரோப்பாவிற்கு தொடர்ந்து அறிமுகம் செய்கிறார்கள். இந்தப் படங்கள் யாவும், ஐரோப்பாவில் பரந்துபட்ட மக்கள் பார்த்து ரசிப்பதற்கான திரையிடல்களையும் ஏற்பாடு செய்கின்றனர். மூன்றாம் உலகின் கலைஞர்கள், தொடர்ந்து படங்களை எடுப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுக்கிறார்கள்.

இப்போது மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள், தென்னமெரிக்காவைச் சேர்ந்த கலைஞர்கள் அல்லது ஹாலிவுட்டைச் சார்ந்த கலைஞர்கள் மீது, அதிக தாக்கம் செலுத்தியவர்களாக இருக்கின்றனர். மூன்றாம் உலக நாடுகளில் உருவாக்கப்படுகிற படங்கள், இவர்களின் ஆதர்சமாக இருக்கிறது. உதாரணமாக காலனியாத்திற்கு எதிராகப் போராடுகிற ஒரு அமைப்பு சம்பந்தமான அரசியலை எடுத்துக்கொண்டால், அதனுடைய அழகியலில், முழு உலகிற்கும் தாக்கம் செலுத்திய படம் என்றால் அது கில்லோ பொன்டெகோர்வோவினுடைய தி பேட்டில் ஆஃப் அல்ஜியர்ஸ் (Gillo pontecorvo's the battle of algiers (1966)). அதேபோல ஒரு குறிப்பிட்ட அமைப்பிற்குள் ஒரு அரசு, அந்த அரசிற்குள் ஏற்படுகிற சிதைவு, அந்தச் சிதைவை விசாரணை செய்கிற பண்பு, இதை ஒரு இன்வெஸ்டிகேட்டிவ் ஜர்னலிஸ்ட் அல்லது ஒரு செயற்பாட்டாளரின் பார்வையிலிருந்து சொல்வதென்றால், கோஸ்டா காவ்ரஸின் இஸட் திரைப்படம் ஒரு இலக்கண புத்தகம் போல விளங்குகிறது. எனில், பேட்டில் ஆஃப் அல்ஜியர்ஸும், இஸட் திரைப்படமும், சமூகநீதி கோருகிற மற்ற நாட்டின் கலைஞர்கள் மிகப்பெரிய தாக்கம் செலுத்துகிறது. இதே தாக்கம்தான், இல்மஸ் குணே மீதும் நடக்கிறது. எப்படி கோஸ்டா காவ்ரஸும், பொன்டெகோர்வோவும் மூன்றாம் உலக நாடுகளின் கலைஞர்கள் மீது தாக்கம் செலுத்துபவர்களாக இருக்கிறார்களோ, அதேபோல இல்மஸ் குணே போன்றவர்கள் ஐரோப்பிய நாடுகளின் கலைஞர்களுக்கு ஒரு நட்புணர்வை கொடுக்கக்கூடிய கலைஞர்களாக இருக்கிறார்கள். கோஸ்டா காவ்ரஸுக்கும் இல்மஸ் குணேவுக்கும் இடைப்பட்டதும் இந்த அளவிலான ஒரு தோழமையுணர்வுதான்.

ஸ்டேட் ஆஃப் சீஜ் (State of siege -1972), திரைக்கதை பாணி, க்ளைமேக்ஸிலிருந்துதான் கதை ஆரம்பிக்கிறது. கதை சொல்லும் விதத்தில் காவ்ரஸின் மற்ற படங்களிலிருந்து இந்தப் படம் எப்படி வித்தியாசப்படுகிறது?

ஒரு பிரச்சினை இருக்கிறது, அந்தப் பிரச்சினை ஒரு உச்சத்தை அடைந்துவிட்டது. அந்தப் பிரச்சினையின் உச்சத்திலிருந்து, அந்தக் கொந்தளிப்பிலிருந்து உள்ளே சென்று, அதனுடைய ஆதாரங்கள் என்ன? அதனுடைய வேர்கள் என்ன? என்பதையெல்லாம் ஒரு பயணத்தின் வழி தேடிக்கண்டடைவது என்பதாகத்தான் கோஸ்டா காவ்ரஸின் பெரும்பாலான படங்களின் பாணிகள் அமைகின்றன. கோஸ்டா காவ்ரஸின் எல்லா படங்களிலுமே ஒரு புலனாய்வுப் பயணம் இருக்கும். ஒரு குற்றம், கொலை, காணாமல் போதல், அரசுக்கு வருகிற தகவல்களை மறைத்துவைத்தல், அல்லது அரசு செய்யவேண்டிய காரியங்களை மறைத்துவைத்தல், இது தொடர்பான ஆய்வுகளைத் தேடி, பாதிக்கப்பட்ட ஒரு நபரோ, ரிப்போர்ட்டரோ பயணம் மேற்கொள்கின்றனர் அல்லது இதில் உண்மை காணவேண்டும் என நினைக்கிற ஆக்டிவிஸ்ட் ஒரு பயணம் மேற்கொள்கிறார் அல்லது தங்களுடைய நீதிக்காகப் போராடுகிற போராளிக்குழுக்கள் ஒரு பயணம் மேற்கொள்கிறார்கள். அதேபோல, இந்த ஸ்டேட் ஆஃப் சீஜ் படத்திலும் ஒரு பயணம் இருக்கிறது. 
படத்தின் கதை, 1970களில் தென்னமெரிக்காவில் பராகுவே நாட்டில் நிகழ்ந்த ஒரு உண்மைச் சம்பவம். அதாவது பராகுவே நாட்டில் துபமாரோஸ் (Tupamaros) என்ற ஒரு போராளி இயக்கம் மூன்று பேரைக் கடத்துகிறார்கள். அந்த மூன்று பேரில் ஒருவர் அமெரிக்காவின் யு.எஸ்.எய்ட் (U.S. aid - United States Agency for International Development), அதாவது மூன்றாம் உலக நாடுகளுக்கு, அமெரிக்கா அல்லாத நாடுகளுக்கு, அமெரிக்காவின் நிதி உதவி வழங்கும் யு.எஸ்.எய்ட் என்று சொல்லப்படுகிற ஒரு அமைப்பினுடைய நிர்வாகி. அந்த நிர்வாகியைத்தான் போராளிகள் (Tupamaros) கடத்துகிறார்கள். அவரோடு சேர்ந்து அந்நாட்டினுடைய அரசிலிருந்து செயல்பட்ட அரசியல்வாதிகள் இருவரையும் கடத்துகிறார்கள். இந்த மூன்று பேரையும் கடத்தி, அதில் ஒருவரைக் கொலை செய்கிறார்கள். யு.எஸ்.எய்ட் நிர்வாகி கொலை செய்யப்பட்டது துபமாரோஸ் போராளிக் குழுக்களின் வரலாற்றின் ஒரு பகுதியாகவே இருக்கிறது.

இதற்கடுத்ததாக அந்த யு.எஸ்.எய்ட் நிர்வாகியுடன் கடத்தப்பட்ட, மற்ற இருவரும் விடுதலை செய்யப்படுகிறார்கள். மூன்று பேரைக் கடத்தி, அதில் ஒருவர் கொல்லப்படுகிறார், இரண்டுபேர் விடுதலை செய்யப்படுகிறார்கள். குற்றம் என்று போராளிக்குழுக்கள் எதைக் கருதுகிறார்களோ, அந்தக் குற்றத்தோடு நேரடித் தொடர்பில்லாதவர்களை அவர்கள் விடுதலை செய்கிறார்கள். குற்றச்செயல்களில் ஈடுபடுகிற ஒரு கும்பலைப்போல போராளிக்குழு செயல்படுவதில்லை. இதற்கு ஒரு காரணம் இருக்கிறது. படத்திலேயே கூட இதற்கான ஒரு உரையாடல் நிகழ்வு வருகிறது. There’s no rules and sentiments, there’s nothing in sentiments, this is politics, இதே வார்த்தைகளை, அந்த யு.எஸ்.எய்ட் நிர்வாகியும் ஒரு இடத்தில் சொல்வார், No sentiments, It is part of my life, It is part of my job, it is part of my profession, it is part of depend Christian civilisation , it is just politics. அதாவது, அரசியல் என்று வரும்போது அதற்கும் சில நியதிகள் இருக்கிறது. சில வரைமுறைகள் இருக்கிறது. இப்போது ஐக்கிய நாடுகள் சபை, மனித உரிமைகளுக்கான வரையறைகளைக் கொண்டுவருகிறது. அதேபோல போரில் ராணுவம் கடைப்பிடிக்கவேண்டிய நியதிகளையும், நெறிமுறைகளையும் அவை சொல்கின்றன.    காலனியாதிக்கத்திற்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில், விடுதலை இயக்கங்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில நெறிமுறைகளை சர்வதேச நீதிமன்றங்கள் பரிந்துரைக்கின்றன. ஆகவே ஒரு போராட்டத்தில் போராளிகளுக்கென சில நெறிமுறைகளும் சில நியதிகளும் அது சார்ந்த அறங்களும் இருக்கிறது.

 ஒடுக்குமுறையாளர்கள் அமைப்பினுடைய ஒரு பகுதியாகத்தான் இயங்குகிறார்கள். அவர்களுக்கு அதைப் பற்றி எந்த குற்றவுணர்வுகளும் இருப்பதில்லை. இந்தப் படத்திலேயே கூட பார்த்தீர்களேயானால், யு.எஸ்.எய்ட் நிர்வாகி, தான் பிற நாட்டிற்குச் சென்று உளவறிவதையோ, அந்நாட்டில் போராடுகிறவர்களைத் தொகையாகக் கொலை செய்வதையோ, அவர்களைக் கடத்துவதையோ, அவர்களைச் சித்திரவதை செய்வதையோ குறித்து, எந்தவித குற்றவுணர்வும் அடையவில்லை. அதைப்போலவே, தங்களுடைய நாட்டின் மக்கள் நலனுக்காகப் போராடுகிறவர்கள், தங்கள் மக்களின் விடுதலைக்காகப் போராடுகிறவர்கள், தங்கள் ஒட்டுமொத்த நாட்டின் நலனுக்காகப் போராடுகிறவர்கள் தங்களை ஒடுக்குகிறவன் தங்களை அழிப்பான் என்றால் அம்மாதிரியான ஆட்களை அழிப்பதென்பது தங்கள் சித்தாந்தத்தின் ஒரு பகுதி என்றுதான் போராளிகளும் சொல்கிறார்கள். இதுதான் அரசியல். அரசியலில் செண்டிமெண்ட்ஸ்க்கு இடமில்லை. In politics there’s no sentiments. It is like logic, way of life. அமைப்பினுடைய ஒரு பகுதியாகத்தான் ஒடுக்குமுறையும் இருக்கிறது, ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுகிற மக்களும் இருக்கிறார்கள், ஆகவே இந்த அமைப்பை மாற்றுவதன் மூலம்தான் ஒடுக்குமுறையாளர்களையும் விடுதலை செய்யமுடியும். இதுதான் சாதாரணமாக விடுதலைப்போராளியின் இடம், இதுதான் மார்க்சியம் சொல்கிற போராட்டம் தொடர்பானதும். இதைத்தான் கோஸ்டா காவ்ரஸ் ஸ்டேட் ஆஃப் சீஜ்(state of siege) படத்தில் முன்வைக்கிறார். 

இந்தப்படம் எடுக்கப்பட்டதற்கான பின்னணி?

சேகுவேரா, ஃபிடல் காஸ்ட்ரோ போன்றோர் பங்கெடுத்துக்கொண்ட ஆயுதப்போராட்டத்தின் மூலம் கியூபா 1959-ல் விடுதலையடைகிறது. இதற்குப் பிறகு 60, 70களில் முழு லத்தீன் அமெரிக்கக் கண்டத்திலும் சேகுவேராவினுடையதும், ஃபிடல் காஸ்ட்ரோவினுடையதும் ஆதரவுக் குழுக்கள் முழு லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் தோன்றுகின்றன. இந்தச் சந்தர்ப்பத்தில், சோவியத் யூனியனில் புரட்சி வெற்றிபெற்றதிலிருந்தே, அதன் தாக்கம் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் பரவுகிறது. பின்னர் அது மூன்றாம் உலக நாடுகளிலும் பரவியதையடுத்து, மூன்றாம் உலக நாடுகளில் குறிப்பாக தென்னமெரிக்க நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகளையும், விடுதலைப் போராளிகளையும், விஞ்ஞானிகளையும், கலைஞர்களையும், எழுத்தாளர்களையும், விடுதலைக்காகப் போராடுகிற பெண்ணிலைவாதிகளையும் தேடிக்கொல்வதை அமெரிக்க அரசாங்கம் ஒரு திட்டமாக முன்வைக்கிறது. இதற்குப் பெயர்தான் ஆபரேஷன் காண்டோர் (Operation condor).

ஆபரேஷன் காண்டோர் என்ற பெயரில் அமெரிக்கா, அதன் வெளியுறவுக் கொள்கையென ஒரு திட்டத்தை முன்னெடுக்கிறது. அந்தத் திட்டம் என்னவென்றால், ராணுவ ஆட்சியில், தென்னமெரிக்காவில் இருக்கிற எல்லா நாடுகளுக்கும் தங்களுடைய உளவாளிகளை அனுப்புவது, அந்த நாட்டின் ராணுவத்திற்கு அமெரிக்க ராணுவம் வந்து பயிற்றுவிப்பது. எதற்காக பயிற்றுவிக்கிறது? முக்கியமாக போராளி அமைப்புகளை அழிப்பதற்காக. செயற்பாட்டாளர்களைத் தேடிக்கொல்வதற்காக. செயற்பாட்டாளர்களைக் கடத்துவதற்காக. செயற்பாட்டாளர்களைச் சித்திரவதை செய்வதற்காக. செயற்பாட்டாளர்கள் நடத்துகிற தெருமுனைக் கூட்டங்களிலும், கலந்துரையாடலிலும் வெடிகுண்டுகளை எப்படி வைப்பது என்பதைப் பயிற்றுவிப்பதற்காக அமெரிக்கா, ஆபரேஷன் காண்டோர் என்ற பெயரில் எல்லா நாடுகளுக்கும், அமெரிக்காவின் ராணுவ ஆலோசகர்களை அனுப்பியது. அமெரிக்கா, மக்களின் நலனுக்காகச் செயல்படுகிறது என்ற பெயரில் யு.எஸ்.எய்ட் என்ற போர்வையில் அதிகாரிகள் அந்த நாடுகளுக்குச் செல்கிறார்கள்.

அது ஒரு தொண்டு நிறுவனம் என்று சொன்னால், யு.எஸ்.எய்டின் அலுவலகம் எங்கு இருக்கவேண்டும்? அது அதற்கென ஒரு தனியான அலுவலகத்தைக் கொண்டிருக்க வேண்டும். அதன் செயல்பாடுகள், பூகம்பத்தில் பாதிக்கப்பட்ட மக்கள், புயலில் பாதிக்கப்பட்ட மக்கள் அல்லது வறுமையில் பாதிக்கப்பட்ட மக்கள், இல்லையேல் பட்டினியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யக்கூடியதாக இருக்கவேண்டும். இதுதான் தொண்டு நிறுவனத்தினுடைய பணி. ஆனால், மாறாக, யு.எஸ்.எய்ட் அதிகாரிகள் பெரும்பாலும் தென்னமெரிக்க நாடுகளில் ராணுவ ஆட்சி இருக்கிற அல்லது காவல்துறை அலுவலகம் இருக்கிற வளாகத்திற்குள் இருப்பார்கள். அதேபோல ராணுவ தலைமையகங்களின் அதிகாரங்களில் ஒன்றாகவும் இது இருக்கும். யு.எஸ்.எய்டின் முக்கியமான வேலையே, அந்த நாடுகளில் இருக்கிற இடதுசாரிகள், புரட்சியாளர்கள், போராளிகளைத் தேடிச் சித்திரவதை செய்வது, கொலை செய்வது, குண்டு வெடிப்பின் மூலம் அழிப்பதுதான். இதைத்தான் அமெரிக்கா செய்கிறது. இந்தப் பின்னணியிலிருந்துதான் ஸ்டேட் ஆஃப் சீஜ் (state of siege) உருவாகிறது. போராளிக்குழுக்கள், அதிகாரிகளைக் கடத்திச் செல்கிறார்கள், கடத்திச்செல்லப்பட்டவர்களின்பால் போராளிக்குழுக்கள் எந்தவிதமான வன்முறையையும் ஏவவில்லை. சாப்பிட உணவு கொடுக்கிறார்கள், தேநீர் கொடுக்கிறார்கள், அவர்களைத் தன்மையாக உட்காரவைத்து, விசாரணை செய்கிறார்கள். மிகக் கண்ணியமாக நடந்துகொள்கிறார்கள். போராளிகள், கடத்தப்பட்டவர்கள் மீது எந்தவிதமான வன்முறைகளையும் செலுத்தவில்லை. இந்தப் படத்தின் கதையை எடுத்துக்கொண்டால், கடத்தல், அந்தக் கடத்தல் ஏன் நிகழ்ந்தது? அந்தக் கடத்தலுக்கான காரணம் என்ன? என்பதைப் பற்றியெல்லாம் ஆய்வுசெய்யும்பொழுதுதான், ஆபரேஷன் காண்டோர் தொடர்பான விவாதங்களும் வெளிவருகிறது. இந்த விஷயங்களை, கோஸ்டா காவ்ரஸ் படத்தின்வழி மிக அழகாக வெளிப்படுத்துகிறார். இதுதான் அவரது அழகியல்.

கோஸ்டா காவ்ரஸ், உரையாடல் வழி உணர்வைக் கடத்துகிறார். இந்தப் படத்தையே எடுத்துக்கொண்டாலும், அவர் காட்சிகளைக் காட்டிலும் உரையாடலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார். எனினும் அது கதைக்கு அவசியப்படுகிறது. சிறைபிடிக்கப்பட்டவர், சிறைபிடித்தவர்கள் இவர்களெல்லாம் ஒரு அறைக்குள் தங்கியிருக்கிறபொழுது, தானாகவே அங்கு உரையாடல் எழும். எனவே, உரையாடல் வழி கதைசொல்லலுக்கு இது பொருந்துகிறது. இதுபோல, சினிமாவை அணுகும் பாணியில் உள்ள அவரது பிற அழகியல் பரிமாணங்கள்.

அவருடைய திரைப்படங்கள் மிக வேகமான கட்(cut)-களைக் கொண்டிருக்கின்றன. ஸ்டேட் ஆஃப் சீஜ் படத்திலேயே கூட, துவக்கத்தில், போராளிக்குழுக்கள் அதிகாரிகளைக் கடத்துவதைக் காட்சிப்படுத்தும்பொழுது, அதுவொரு அற்புதமான த்ரில்லர் படத்தின் அழகியலைக் கொண்டிருக்கும். மனிதர்கள் ஆங்காங்கே நிற்கிறார்கள். கார்கள் சாலைகளில் முன்னும் பின்னும் போய்க்கொண்டும், வந்துகொண்டும் இருக்கின்றன. கட்டிடத்திற்கு முன்னால் கார் வருகிறது, பின்னர் மார்க்கெட்டிற்கு முன்னால் கார் வந்து நிற்கிறது, அங்கங்கே கார்களை நிறுத்தி, கடத்திச் செல்கிறார்கள். அதில் கார் டிரைவர்கள் சிலபேர், “நாங்கள் உங்களுக்கு உதவி செய்கிறோம், உங்களை ஆதரிக்கிறோம், எங்களை ஏன் அழைத்துச்செல்கிறீர்கள்? நாங்களும் உங்களுக்கு உதவுகிறோம் என்று போராளிகளின் செயல்களுக்கு உதவ முன்வருகிறார்கள். இன்னும் சிலர், போராளிகளுக்கு அறிவுரை சொல்கிறார்கள், “வன்முறையிலெல்லாம் ஈடுபடாதீர்கள், உங்கள் நடவடிக்கைகள் சரிதான், ஆனால் அதை முன்னெடுத்துச் செல்கிற உங்கள் வழிமுறைதான் தவறு” என்று அறிவுறுத்துகிறார்கள். ஏழு, எட்டு கார்களைக் கடத்துகிறார்கள். இந்தக் கடத்தப்படும் காட்சியானது மிக வேகமான கட்-களால் காட்டப்படுகிறது. பின்பு அந்த எல்லா கார்களும் ஒரே இடத்தில் வந்து நிற்கிறது. அங்கு சிலர் பத்திரிக்கைகள் படித்துக்கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே காருக்குள் இருந்தவர்கள் டிரைவர் முதற்கொண்டு இறங்கிச் சென்றுவிடுகிறார்கள். கார் மட்டும் தனியாக அப்படியே நிற்கிறது. பின்பு அங்கு பத்திரிக்கைகள் படிப்பவர்கள் போல நின்றுகொண்டிருந்தவர்கள் காருக்குள் சென்று அமர்ந்துகொள்கின்றனர். பின்பு அந்தக் கார் கிளம்புகிறது. இப்படி படத்தின் முப்பதிலிருந்து நாற்பது நிமிடங்கள் வரையில் பார்த்தீர்களேயென்றால், மிகவேகமான கட்-கள். ஆக, எந்தவொரு த்ரில்லர் படத்திலேயும் நிகழக்கூடிய ஒருவித ஃபாஸ்ட் கட் இந்தப் படத்திலும் இருக்கிறது. இந்த ஃபாஸ்ட் கட் மூலம் காவ்ரஸ் கதை சொல்கிறார், இதுதான் திரைப்படத்தில் த்ரில்லிங் என்ற உணர்வைக் கொடுக்கக்கிறது.

 ஏன் போராளிகள் கடத்தப்பட்டவர்களைச் சித்திரவதை செய்வதில்லை. எப்படி இவர்கள் அதிகாரிகளை நிதானமாகக் கையாள்கிறார்கள்? எப்படி பொறுப்புணர்வோடு செயலாற்றுகிறார்கள்? எப்படி அறிவார்ந்த முறையில் நடந்துகொள்கிறார்கள்? நிறைய படித்தவர்களாக இருக்கிறார்களே, அதுவும் இருபத்தைந்து முப்பது வயதிற்குள் இருக்கிற யுவன்களும் யுவதிகளுமாக இருக்கிறார்களே, என்ற கேள்விதான் பார்வையாளர்களிடத்தில் உருவாகிறது. 

படத்தில் மிக முக்கியமான பகுதி, அந்த உரையாடல் நடக்கிற இடம். இரு தனி நபர்களுக்கிடையேயான உரையாடல். மேலும் இரு மாறுபட்ட சித்தாந்தங்களுக்கிடையேயான விவாதம். யு.எஸ்.எய்ட் அதிகாரி ஒரு ஜெண்டில்மென் போன்ற தோற்றத்தில் இருக்கிறார், அவருக்கென ஒரு குடும்பம் உள்ளது, அன்பான மனைவி, அன்பான குழந்தைகள் உள்ளனர். அந்தக் குடும்பத்தையும் படத்தில் காட்டுகிறார்கள். விமானத்திலிருந்து இறங்கும்பொழுது, அவர் மனைவி, அவர் குழந்தைகளும் அவருடன் இறங்கி வருகிறார்கள். அன்பு நிறைந்த ஒரு வாழ்க்கையைத்தான் அவர் வாழ்ந்துகொண்டிருக்கிறார். ஒரு குடும்பத்தலைவன் போல, நல்ல மனிதனாக வாழ்கிறார். ஆனால், அவருக்கும் ஒரு சித்தாந்தம் இருக்கிறது. அமெரிக்கச் சித்தாந்தத்தின் பணியாளாக அவர் இருக்கிறார். யு.எஸ்.எய்ட் அதிகாரிக்கும் போராளிக்குழுவின் ஒரு உறுப்பினருக்கும் இடையே நிகழ்கிற விவாதம். இது இரு மனிதர்களுக்கிடையேயான விவாதம். அதேநேரத்தில் இரு கருத்தியல்களுக்கிடையே நிகழ்கிற விவாதமும்கூட. அந்த யு.எஸ்.எய்ட் அமைப்பைச் சார்ந்த அதிகாரி ஒரு வில்லன்போலச் சித்தரிக்கப்படவில்லை., மாறாக அவர் ஒரு அரசாங்கத்தினுடைய பணியாள். ஒரு குடும்பத்தலைவன். அவருக்கென ஒரு அன்றாட வாழ்க்கை இருக்கிறது. ஒரு அலுவலகத்திற்குச் செல்வதுபோல, காலையில் எழுந்து, எட்டு அல்லது ஒன்பது மணிக்குள் தயாராகி, காரில் சென்று, அலுவலகம் வந்து வேலைபார்த்து வீடு திரும்பக்கூடிய ஒருவர். அவருக்கென ஒரு குடும்பம் இருக்கிறது, அவருக்கென ஒரு வேலை இருக்கிறது. அவருக்கான சம்பளத்தை அரசாங்கம் தருகிறது. இப்படித்தான் அவரை நமக்கு நேரடியாகத் தெரியும். அவரும் தன்னை அப்படித்தான், இதுபோன்ற தோற்றத்தில்தான் முன்வைத்துக்கொள்கிறார்.

ஆனால், அவருடைய வேலை, அமெரிக்க அரசாங்கத்தினுடைய பகுதியாக, தென்னமெரிக்க நாட்டிற்கு நிதி தருகிறோம், அந்த நாட்டைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில், அந்த நாட்டிலே இருக்கிற வறிய மக்கள், அந்த நாட்டிலே இருக்கிற ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடுகிற போராளிகளையும், செயற்பாட்டாளர்களையும், மக்களின் நலனுக்காகப் போராடுகிற சிந்தனையாளர்களையும், கலைஞர்களையும் கடத்துவது, அவர்களைச் சித்திரவதை செய்வது, பின்னர் அதெற்கென திட்டங்களைத் தயாரிப்பது, அந்தச் சித்திரவதைகள் தொடர்பான கருத்தரங்கங்களை உருவாக்குவது, அதேபோல போராளிகள் மக்கள் கூடுகிற மீட்டிங்கில் அல்லது தெருமுனைக் கூட்டங்களில் குண்டு வைப்பது, எவ்வாறு ஆட்களைக் கொலை செய்வது என்பது தொடர்பான கல்வியைக் கற்பிப்பது. இதை ஒரு தொழிலாகவே முன்னெடுக்கிறார்கள்.
அமெரிக்க நலனின் பொருட்டு, மூன்றாம் உலக நாடுகளை அழிப்பது, குலைப்பது என்பது அதன்படி பணியில் அமர்த்தப்படுகிறவர்களுக்கு இது ஒரு வேலை. எல்லாவற்றையும் போல இதுவும் சம்பளம் கிடைக்கக்கூடிய ஒரு வேலை. இது ஒன்று. இன்னொரு பக்கத்தில் பாருங்கள். ஒரு மனிதனாக, அவருக்கென ஒரு அறத்தைப் பின்பற்றுகிறார். அந்த அறத்தை, அவர் செய்கிற வேலையும், அவர் நம்புகிற அரசியலும் தடுக்கிறது. அது என்ன அறம் என்று பார்த்தீர்களேயானால், கிறிஸ்டியானிட்டி. கிறித்துவ கலாச்சாரம். மேற்கத்திய கலாச்சாரம் என்றால், அது என்னவென்று பார்த்தீர்களேயானால், காலனியாதிக்கம்தான் மேற்கத்தியர்களின் கலாச்சாரம். வெள்ளையினத்தவர்கள் மேலானவர்கள், வெள்ளையினம் அல்லாதவர்கள் கீழானவர்கள் என்பதுதான் வெள்ளையினத்தவரின் கலாச்சாரம். அதேபோல, அடிமை வியாபாரம் என்பது வெள்ளையினத்தவரின் கலாச்சாரம். இதற்கு மாற்றாக எந்த மக்களும் தங்கள் கருத்தை முன்வைக்கக்கூடாது, போராடக்கூடாது, இதற்கெதிராக எந்தப் பிரச்சினைகளையும் மற்றவர்கள் ஏற்படுத்தக்கூடாது என்று நினைக்கிறார்கள். இதைப் பாதுகாக்க வேண்டிய கடமை, தனக்கு இருக்கிறது, தன்னுடைய மனைவிக்கு இருக்கிறது, தன்னுடைய குழந்தைக்கு இருக்கிறது, தன்னுடைய அரசாங்கத்திற்கு இருக்கிறது, அதைப் பாதுகாக்கும் கருத்தியலுக்கும் இருக்கிறது என்று நம்புகிறார்கள்.

விசாரிக்கிறவர் (போராளி) கேட்கிறார், ”நீங்கள் பராகுவே நாட்டில் மாத்திரமல்லாமல், பக்கத்திலிருக்கிற தென்னமெரிக்க நாடுகளுக்கெல்லாம் போனீர்கள், அங்கு உண்மையில் என்ன செய்தீர்கள்?” என்று கேட்கிறபொழுது, அதிகாரியின் மறுமொழி, “நான் ஒன்றும் செய்யவில்லை, சும்மா அலுவலகத்தில்தான் இருந்தேன்” என்பதுபோலச் சொல்கிறார். அந்த அலுவலகம் எங்கு இருந்தது? அந்த அலுவலகம் போலீஸ் ஹெட்குவார்ட்டஸில் இருந்தது. அடுத்து, அந்த அலுவலகம் ராணுவத்தின் தலைமையகத்தில் இருந்தது. சரி, அங்கு நீங்கள் என்ன செய்தீர்கள்? கருத்தரங்குகளை நடத்தினீர்கள். கருத்தரங்குகளில் என்ன விவாதித்தீர்கள்? அந்தக் கருத்தரங்குகளில் வன்முறையில்லாமல் எப்படி அமைதியாக இருப்பது என்பது பற்றியெல்லாம் சொல்லிக்கொடுத்தீர்கள். உண்மையிலேயே இப்படித்தான் சொல்லிக்கொடுத்தீர்களா? என்று போராளிக்குழு உறுப்பினர் ஆவணங்களையெல்லாம் எடுத்துக் காண்பிக்கிறார். துண்டறிக்கைகள், பிரசுரங்கள், கோப்புகள் முதலான ஆதாரங்களையெல்லாம் எடுத்துப் பரப்புகிறார். அதில் பார்த்தால், குண்டு வைப்பது, சித்திரவதை செய்வது, கடத்துவது, இப்படிச் சித்திரவதை செய்து தகவல்களைக் கொண்டுவருவது, விடுதலைக்குப் போராடுகிற இயக்கங்கள் எங்கெங்கு இருக்கிறது என்று உளவு பார்ப்பது, இதைத்தான் அந்த அதிகாரிகள் செய்திருக்கிறார்கள். எனில், தொண்டு நிறுவனம் என்று சொல்லிக்கொள்கிற உங்கள் பணி இதுதானா? என்று போராளிக்குழு கேட்கிறது. இப்படிக் கையும் களவுமாகப் பிடிபடுகிறபொழுதுதான் அவர் சொல்கிறார், ”க்றிஸ்டியன் சிவிலைசேஷனைப் பாதுகாப்பது, மேற்கத்திய கலாச்சாரத்தைப் பாதுகாப்பது என்னுடைய கடைமை” என்கிறார். அவரைப் பொறுத்தவரை, தான் கொல்லப்படப்போகிறோம் என்பது அவருக்குத் தெரியும். போராளிகள் அரசாங்கத்தோடு பேரம் பேசுகிறார்கள், ”நீங்கள் எங்கள் போராளிகளில் பலபேரைப் பிடித்து வைத்திருக்கிறீர்கள், அவர்களை விடுதலை செய்யுங்கள், பதிலுக்கு இந்த அதிகாரிகளையும் நாங்கள் விடுதலை செய்கிறோம்” என்கிறார்கள். ஆனால், அரசாங்கத்தரப்பிலிருந்து, “அப்படியெல்லாம் முடியாது, உங்களால் முடிந்ததைச் செய்துகொள்ளுங்கள்” என்று மறுமொழி வருகிறது. அப்போது இந்த போராளிக்குழு, “எங்களுக்கு வேறு வழியில்லை, நீங்கள் எங்கள் போராளிகளைக் கடத்தியிருக்கிறீர்கள், அவர்களைக் கொலை செய்திருக்கிறீர்கள், அவர்களைச் சித்திரவதை செய்திருக்கிறீர்கள், எங்களுடைய கலைஞர்களையும், எழுத்தாளர்களையும், செயற்பாட்டாளர்களையும், எங்களுடைய மக்களின் உரிமைக்காகப் போராடுகிறவர்களை நீங்கள் அழித்திருக்கிறீர்கள். இது சந்தேகமற நிரூபிக்கப்பட்டிருக்கிறது. நீங்களும் இதை ஒத்துக்கொண்டீர்கள். எங்களுக்கு உங்கள்மேல் தனிப்பட்ட முறையில் எந்தக் கோபமும் இல்லை. நாங்கள் உங்களைக் கொலை செய்யவும் விரும்பவில்லை. ஆனால், எங்களுடைய தோழர்களை அவர்கள் விடுவிக்க மாட்டேனென்று சொல்கிறார்கள். ஏற்கனவே எங்கள் தோழர்களில் பலரை நீங்கள் கொன்றிருக்கிறீர்கள். இப்போது நீங்கள் சிறையில் பிடித்துவைத்திருக்கிற தோழர்களையும், அழித்தொழிக்கப் போகிறீர்கள்.       எனவே, எங்களுக்கு வேறு வழி கிடையாது” என்ற விஷயத்தை மட்டும்தான் போராளிக்குழுக்கள் சொல்கிறார்கள். அப்போதுதான் தான் இறப்பதுதான் ஒரே வழி என்று புரிகிறது. ஏனெனில், சாதாரணமான ஒரு ஆளுக்காக, ஒரு அரசாங்கம், சிறைக்கைதிகளாகப் பிடித்துவைத்திருக்கிற போராளிக்குழுக்களைச் சார்ந்தவர்களை, விடுதலை செய்யாது. ”ஒரு உயிர்தானே போகிறது” என்று அரசு கண்டும் காணாமல் போய்விடும். இதனால்தான் தான் கொல்லப்படப்போகிறோம் என்பதில் அந்த அதிகாரி உறுதியாக இருக்கிறார். இது ஒன்று.

 மற்றொன்று. அரசாங்கத்தோடு பேரம் பேசுகிற போராளிக்குழுக்கள் எப்படிச் செயல்படுகிறார்கள் என்பதைக் கவனியுங்கள். போராளி அமைப்பு ஒரு செண்ட்ரல் கமிட்டி வைத்திருக்கிறது. செண்ட்ரல் கமிட்டி கூடுவதற்கு இடமில்லை. ஏனெனில், அரசு இவர்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் ஒரு குறிப்பிட்ட பேருந்தில் அவர்கள் பயணிக்கிறார்கள். அந்தப் பேருந்தில் செண்ட்ரல் கமிட்டி உறுப்பினராகயிருந்தவர்கள் ஒவ்வொருவருவராகப் ஏறுகிறார்கள். அப்படித்தான் அந்தப் பேருந்திற்குள்ளேயே அவர்களுக்கிடையே சந்திப்பு நடைபெறுகிறது. அந்தச் செண்ட்ரல் கமிட்டியில் ஒருவர் ராணுவத்தில் இருப்பவர். அப்பொழுது அந்தச் சமூகம் தழுவிய, போராளிக்குழுக்களும் செண்ட்ரல் கமிட்டியில் இருக்கிறார்கள். அதில் ஒவ்வொருவரிடமும் அபிப்ராயம் கேட்கிறார்கள். Its nothing to do with sentiment என்றே சொல்கிறார்கள். It’s only about justice and Politics என்கிறார்கள். இதைப் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று ஒரு சனநாயகரீதியிலான தேர்வை முன்வைக்கிறார்கள். அந்த செண்ட்ரல் கமிட்டியில் இருப்பவர்கள் ஒவ்வொருவரிடமும் ”அந்த அலுவலரைக் கொலை செய்யலாமா? அல்லது விட்டுவிடலாமா?” என்று கேட்கிறார்கள். ஆனால், அதில் பெரும்பாலானவர்கள் அவரைக் கொலை செய்யலாம் என்றுதான் தங்கள் கருத்தைக் கூறுகிறார்கள். ”நம் மக்களுக்காகப் போராடுகிறவர்கள் தங்களுக்காகவும் தங்கள் மக்களுக்காகவும் கொல்லப்படுகிறார்கள். அந்த அமெரிக்க அரசின் கையாளாகத்தான் இவர் வந்திருக்கிறார். எனவே, நேரடியாகச் சம்பந்தப்பட்டிருக்கிற இவரை நாம் கொலை செய்யலாம், தவறில்லை” என்கின்றனர்.
சமகாலத்தில் பாராளுமன்றத்தில் என்ன நடக்கிறது…? மக்களுக்குத் தெரியாமல் அதிகாரிகளும், இந்த நாட்டில் இருக்கிற அரசாங்கத்தைச் சார்ந்தவர்களும், அமைச்சர்களும், ராணுவமும் நமது நாட்டிற்கு எதிராக, நமது நாட்டு மக்களைக் கொல்வதற்காக அமெரிக்க ராணுவத்தை உள்நாட்டில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது. ஆக, இது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. எனவே, இது தொடர்பான கண்டனத் தீர்மானத்தை அவர்கள் கொண்டுவருகிறார்கள். இந்த அரசாங்கம் வெளியேறவேண்டும் என்று போராளிகள் நிர்ப்பந்திக்கிறார்கள்.

அமெரிக்க அரசாங்கத்தின் நடவடிக்கைகள் என்பது, வன்முறையில் நிகழ்கிறது. அங்கு சனநாயகச் செயல்முறை என்பதற்கே வேலை இல்லை. ஆனால், போராளிகள் சனநாயக ரீதியில் முடிவுகள் எடுக்கிறார்கள். ஆகவே, ”அரசியலில், thers’s no rules and sentiments. Politics is politics. இந்நபர்தான் யு.எஸ்.எய்ட் உடன் நேரடியாகச் சம்பந்தப்பட்டிருக்கிற நபர். அந்நியர். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கையாளாக அவர் வந்திருக்கிறார். ஆனால், மற்ற இருவரும் இதில் நேரடியாகச் சம்பந்தப்படவில்லை. இவர்கள் அரசாங்கத்தினுடைய சாதரண அதிகாரிகள். அரசாங்கம் சொல்வதைச் செய்யக்கூடிய அதிகாரிகள். ஆகவே, இவர்களை நாங்கள் விடுதலை செய்வோம்” என்கின்றனர். மற்ற இருவரில் ஒருவர் தப்பித்துச் செல்கிறார், இன்னொருவர் விடுதலை செய்யப்படுகிறார். ஆக, எப்படி ஒரு அறம் சார்ந்த மதிப்பீட்டினை அந்தப் போராளிக்குழுக்கள் கொண்டிருக்கின்றன என்பதற்கான காட்சிகள் படத்தில் நிறைந்திருக்கின்றன.

அதிகாரம் கொண்டிருப்பவர்கள் நீதிக்கு எதிராக வன்முறையைப் பிரயோகிக்கிறார்கள். அவர்களிடம் அறம் சார்ந்த பார்வையும் இல்லை. ஆனால், போராளிகள் முரட்டுத்தனமாக வன்முறையைப் பிரயோகிப்பதில்லை. நேரடியாக வன்முறையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு அரசியல் காரணங்களுக்காக அந்த அழித்தொழிப்பைச் செய்கிறார்கள். ஆனால், சம்பந்தப்படாத சாதாரண அதிகாரிகள் விடுவிக்கப்படுகிறார்கள். போராளிகள்தான் சனநாயகப்பூர்வமாக முடிவெடுக்கிறார்கள். இதுமிக அற்புதமான அழகியல் விஷயமாக, படத்தினுள் இருக்கிறது. இங்கு யாரும் கதாநாயகன் கிடையாது. எல்லோரும் மனிதர்கள். இங்கு இருவேறுபட்ட கருத்தியல்களுக்கு இடையில்தான் போராட்டம். அரசியலில் எந்த நிலைப்பாட்டின் பக்கம் நிற்பது என்பதற்கான சண்டை. அதுதான் இந்தப் படத்தின் அழகு. யு.எஸ்.எய்ட் அதிகாரியாக நடித்திருக்கிற Yves Montand படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் கோஸ்டா காவ்ரஸின் பெரும்பாலான படங்களில் தொடர்ந்து நடித்து வருபவர். இதிலும் அவர் மிக நிதானமான நடிப்பை வழங்கியுள்ளார்.
படத்தில் இரு காட்சிகள் ஒரே மாதிரி படம்பிடிக்கப்பட்டிருக்கும். கொல்லப்படப்போகிற யு.எஸ்.எய்ட் அதிகாரி விமானத்திலிருந்து இறங்குவார். பின்னர் அவர் மனைவி, அடுத்து குழந்தைகள் அடுத்தடுத்து இறங்குவர். இதை விமான நிலையத்திலிருக்கிற நான்கைந்து பேர் பார்த்துக்கொண்டிருப்பார்கள். இவ்விரு காட்சிகளையும் இடைவெட்டிக் காண்பிப்பார்கள். அடுத்து, இறுதிக்காட்சியிலும், அதேபோல விமான நிலையத்திலிருந்து கணவன், மனைவி, குழந்தைகள் என மூவரும் இறங்குவார்கள். மக்கள் பகுதியிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கிற போராளிக் குழுக்கள் இவர்களைப் பார்த்துக்கொண்டிருப்பார்கள். இவ்விரு காட்சிகளும் இடைவெட்டிக் காண்பிக்கப்படும். உண்மையாகவே நீங்கள் ஒரு விஷயத்தைத் தேடிக்கொண்டுப் போகும்பொழுது, புலனறியும் ஜர்னலிஸ்டுகளைப் பாருங்கள், பயங்கர கொந்தளிப்பான மனநிலையில்தான் அவர்கள் செயல்படுவார்கள். அவர்களுக்குள் பதற்றம் இருக்கும். அந்தப் பதற்றத்தை ஃப்லிம்மேக்கிங்கில் கொண்டுவருவார்கள். போராளிக் குழுவில் உள்ள உறுப்பினரும், அமெரிக்காவிற்காக வேலை செய்யும் அதிகாரியும் பேசிக்கொள்கிற காட்சியிலும் அந்தப் பதற்றம் தொடர்ந்து தக்கவைக்கப்படும். இதுபோன்ற ஃப்லிம்மேக்கிங்கைத்தான் கோஸ்டா காவ்ரஸ் கைக்கொள்கிறார். ஒரு காட்சியிலிருந்து இன்னொரு காட்சியைத் தொடர்புபடுத்துவதையும் நாம் பார்க்க வேண்டும். அரசியல் என்பதும், உண்மை காண்பது என்பதும் அதைத் தேடிச்செல்வது என்பதும் ஒரு த்ரில்லிங்கான அனுபவம். ஆனால், இந்த த்ரில்லிங் என்பது வெறுமனே ரசனைக்கானதும், பொழுதுபோக்கிற்கானது மட்டுமேயல்ல. இந்த த்ரில் என்பது உண்மை காண்பதற்கான த்ரில். ஹாலிவுட் மைய நீரோட்ட சினிமாக்களில் வருவதுபோன்ற பொழுதுபோக்கு த்ரில் அல்ல. சட் சட்டென துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு எதிர்ப்படுபவர்களையும், எதிரிகளாக நினைப்பவர்களையும் சுட்டுத் தள்ளுவது போன்ற த்ரில் பாணியை காவ்ரஸின் படங்களில் பார்க்க முடியாது. ஸ்டேட் ஆஃப் சீஜ் (state of siege) படத்திலேயே கூட, துப்பாக்கி வெடிக்கும் காட்சிகள் குறைவு. இது ராணுவத்தைப் பற்றிய படம். இது போராளிகளைச் சித்திரவதை செய்வது தொடர்பான படம். வெகுமக்கள் கொல்லப்படுவது தொடர்பான ஒரு படம். மக்கள் மீது அடக்குமுறையைச் செலுத்துகிற காவல்துறையைப் பற்றிய படம். ஹாலிவுட்டில் பயன்படுத்துகிற எந்தவித மலினமான த்ரில்களும் இல்லாமல், அந்த த்ரில் என்ற அர்த்தம், உண்மை காண்பதற்கான, உண்மையைத் தேடிச்செல்வதற்கான அந்தப் பாதையில், போராளிகள் எதிர்கொள்கிற, மனிதர்கள் எதிர்கொள்கிற, த்ரில், இதில் துப்பாக்கிச் சப்தம் குறைவாகவே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆம், இது உண்மை காண்பதற்கான த்ரில். காவ்ரஸ், திரைப்படத்தையே ஒரு பயணம் போல கொண்டுசெல்கிறார். இந்த அழகியல் இவர் படங்களில் இருப்பதன் காரணமாகத்தான், இன்றைக்கு அரசியல் சினிமா எடுக்கிற பலரும் இவர் மூலமாக தாக்கம் பெற்றவர்களாக இருக்கிறார்கள். உதாரணத்திற்கு ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், காவ்ரஸினால் தாக்கம் பெறுகிறார். அதேபோல க்வண்டின் டரண்டினோ இல்மஸ் குணேவினால் தாக்கம் பெற்றவர்.

ஒரு கலைஞன் எப்படி பிறர் மீது தாக்கம் செலுத்தமுடியும் என்றால் தன்னுடைய உக்கிரமான வாழ்வை வாழ்ந்து, அதே வாழ்வை தான் எடுக்கிற திரைப்படங்களிலும் உக்கிரத்தோடு பதிவுசெய்யும்பொழுதும், மிக நேர்மையாக முன்வைக்கும்பொழுதும், இது சாத்தியப்படும். மனிதர்களுக்கிடையிலான போராட்டம் என்பது வெவ்வேறு கருத்தியல்களுக்கிடையிலான போராட்டம். அரசியல்களில் நடக்கிற வர்க்கப்போராட்டம், சாதியப் போராட்டம், பால் ரீதீயிலான போராட்டம், அப்படி போராட்டங்களை இன்னொரு தளத்திற்கு எடுத்துச் செல்கிறார் காவ்ரஸ்.

வழக்கமாக படங்களில் பின்பற்றப்படுகிற, வில்லன் – கதாநாயகன் மரபு. வன்முறையை வெறுமனே ரசனைக்காகப் பயன்படுத்துவது, அல்லது காட்சியில் த்ரில்லைக் கூட்டுவதற்காகப் பயன்படுத்துவது என்றில்லாமல், இதை மானுட அவலம், மானுட விடுதலைக்கான தற்காலிக நிறைவேற்றமாக இருக்கும், தத்துவார்த்தரீதியிலான பார்வையுடன் முன்வைக்கிறார். இந்த பார்வைதான் பொன்டெகோர்வோ, இல்மஸ் குணேவின் பார்வை. கோஸ்டா காவ்ரஸின் பார்வையும் இதுதான். இதனால்தான் இவர்கள் எல்லோருமே தங்களுடைய எல்லா படங்களையும் ஒடுக்குமுறை செய்பவனுக்கு எதிராகவும், ஒடுக்கப்படுகிற மக்களுடைய சார்பு நிலையிலிருந்தும் முன்வைக்கிறார்கள்.

சிறைபிடிக்கப்பட்டவரின் முகம்தான் இறுதியில் நினைவில் நிற்கிறதே தவிர, எந்தக் கொரில்லாவின் முகமோ, போராளிகளின் முகமோ நினைவில் இல்லை. இதற்கு வேகமான ’கட்’கள் உதவியிருக்கின்றன. யு.எஸ்.எய்ட் அதிகாரி மட்டுமே க்ளோஸ் அப்பில் அதிகமாக முகம் காண்பிக்கிறார். இது கோஸ்டா காவ்ரஸின் கதை சொல்லல் பாணியின் அழகியல் கூற்றில் ஒன்று என எடுத்துக்கொள்ளலாம். எதிராளியின் முகம் மட்டுமே அழுத்தமாக பதியவைக்கப்படுகிறது. போராடுகிற கொரில்லா வீரர்கள், அவர்தம் தலைவர், என இந்தப் போராளிகளின் முகங்களை அதிகமாக கோஸ்டா காவ்ரஸ் முக்கியத்துவப்படுத்தவில்லை. அவர்கள் தங்கள் முகங்களைத் துணியால் மறைத்திருக்கிறார்கள் என்பது ஒருபுறம், ஆனால், போராளிக்குழுவில் தனிமனிதர்களுக்கு முக்கியத்துவமில்லை, போராட்டமும், அந்த ஒட்டுமொத்த குழுவும்தான் முக்கியம் என்று நினைக்கிறேன். தனிநபர்களைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டிய அவசியமில்லை.

யமுனா ராஜேந்திரன்: இந்தப் படத்தில் ஒரு காட்சி வரும். யு.எஸ்.எய்ட் அதிகாரியும் பக்கத்து அறையிலேயே பராகுவே நாட்டிலிருக்கிற அமைச்சரவையிலிருந்து யு.எஸ்.எய்டிற்காக பணியாற்றிய ஒரு நபருக்கும் இடையிலான உரையாடல். They are so keen, not reveal themselves. அதாவது, தாங்கள் யார் என்பதை வெளியில் அடையாளம் காண்பிக்கக்கூடாது என்பதில் அவர்கள் தெளிவாகயிருக்கிறார்கள். ஏனென்றால், இவர்கள் இருவருடனும் பேசும்பொழுது பார்த்தீர்களேயானால், போராளிக்குழுவில் இருப்பவர்கள் எல்லோருமே முகமூடி அணிந்தபடியேதான் இருக்கிறார்கள். எந்தக் காட்சியிலுமே அவர்களது முகம் பார்வையாளர்களுக்கு நினைவில் இருப்பதில்லை. அந்தளவிற்கு குறைவான நேரமே அவர்களின் முகங்கள் காட்டப்படுகின்றன. இதற்கு இரு பரிமாணங்கள் உள்ளன. ஒன்று, அந்த அரசுக்கும், இது தொடர்பாக விசாரணை செய்கிற ஆட்களுக்கும் தாங்கள் யார் என்பது வெளியில் தெரியக்கூடாது என்பதற்காக தங்கள் முகங்களை மறைத்துக்கொள்கிறார்கள். ஆனால், அதே சமயத்தில் அந்தப் போராளிக் குழுவிற்குள் இருப்பவர்கள் யாருக்கும் தனித்த முக்கியத்துவம் இல்லை. இவர் தலைவர், இவர் செயலாளர், இவர் முக்கியமானவர் போன்ற தனிநபர் முக்கியத்துவங்களுக்கு அங்கு இடமில்லை. பொதுவாகவே, வரலாற்றில்,  போராளிக்குழுவில் இருப்பவர்கள் யாருக்குமே இதுபோன்ற தனிநபர் முக்கியத்துவங்கள் இல்லை.

உதாரணமாக, சே குவேரா பற்றி ஸ்டீவன் சோடர்பெர்க் எடுத்த படம். அதில், சே குவேராவை, ஒரு சாகசவாதியாக, தனித்த ரீதியில் அவரைக் காட்சிப்படுத்தவே மாட்டார்கள். அதேபோல, அந்தப் படத்திலும் சேகுவேராவின் சாகசங்கள் பெரும்பாலும் இடம்பெற்றிருக்காது. போராளிக்குழுவின் ஒரு அங்கமாகத்தான் சேகுவேராவையும் வைத்திருப்பார்களேயொழிய, எல்லா போராளிகளுக்கும் எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறதோ, அதேயளவு முக்கியத்துவம்தான் சேகுவேராவுக்கும் இருக்குமேயொழிய, சேகுவேராவை ஒரு சாகச நாயகனாகக் காண்பிப்பதுபோன்ற காட்சியமைப்பு அந்தப் படத்தில் இருக்காது. படத்தின் இயக்குனர், இதற்கு என்ன காரணம் சொல்கிறாரென்றால், ”போராளிக்குழுவில் ஒரு தனிநபருக்கு எந்த முக்கியத்துவமும் கிடையாது. எப்படி அவர் உறவுகளையும், தாய் தந்தையரையும், நண்பர்களையும், காதலியையும், குழந்தைகளையும் விட்டுவிட்டு போராட வருகிறாரோ, உயிர்வாழ்தல் சம்பந்தமான நெருக்கடியை எதிர்கொள்கிறாரோ, வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் செயல்படுகிறாரோ, அதேபோலத்தான் சகலவிதமான போராளிகளும் செயலாற்றுகிறார்கள். அனைவரும் சமம். ஆகவேதான், ஒரு தனித்த போராளிக்கு மட்டும் கொரில்லா குழுவிலோ, போராளி அமைப்புகளிலோ எந்த முக்கியத்துவமும் கிடையாது” என்கிறார். இந்த தோழமையுணர்வுதான் மிக அற்புதமான விஷயம். இந்த தோழமையுணர்வு உங்களுக்கு இந்தப் படம் முழுக்க கிடைக்கும். அவர்களுக்கிடையிலான உறவுகள் மிக அற்புதமாக பின்னப்பட்டிருக்கிறது. இருபத்தைந்திலிருந்து முப்பது வயதிற்குள் கூடி வேலை செய்கிறபொழுது அவர்களுக்கிடையிலான உறவு எப்படி இணக்கமாக இருக்கும் என்பது நமக்குத் தெரியும். அந்தத் தோழமை இந்தப் படத்தில் மிகச் சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது.

மக்களுக்காகப் போராடப் புறப்பட்டவர்கள், சரியான நீதி உணர்வுள்ளவர்கள், சனநாயக உணர்வு உள்ளவர்கள், அதிகாரத்தினால் இவ்வாறு கொல்லப்படுகிறார்கள் என்ற துயரம்தான் அவர்களை ஒன்றிணைக்கிறது. ஆகவே, அது கம்யூனிஸ்ட் கட்சியாக இருந்தாலும் சரி, அல்லது வேறெந்த இடதுசாரி இயக்கமாக இருந்தாலும் சரி, அதில் தனிப்பட்ட நபருக்கென எந்த முக்கியத்துவமும் இல்லை. ஏனென்றால், அவர் எப்படி எல்லாவற்றையும் துறந்து தன்னைப் போராட்டத்திற்கு ஒப்படைத்துக்கொள்கிறாரோ, அதைப்போலத்தான் ஒவ்வொருவரும் தம்மை இழந்துதான், அந்தப் போராளிக்குழுவுக்குள் சென்று போராடுகிறார்கள்.
     
ஸ்டேட் ஆஃப் சீஜ் மூன்று அடுக்குகளில் கதை சொல்கிறது.

ஒன்று, அந்த யு.எஸ்.எய்ட் அதிகாரிகளைக் கடத்துவது, ஃபாஸ்ட் கட்டில் காட்டப்படுகிற அந்தக் காட்சிகள். இரண்டாவது இரு நபர்களுக்கிடையே நடக்கிற உரையாடல்கள். மூன்றாவது முடிவுரை, அந்த யு.எஸ்.எய்ட் நபர் கொல்லப்பட்ட பிறகு, அந்தப் போராளிக்குழுவினுடைய இருப்பிடத்தைக் கண்டுபிடித்து அவர்களை அழித்தொழிப்பு செய்வது. இந்த மூன்று அடுக்குகளையும் பார்த்தோமானால், பார்வையாளர்களுக்கு ஒரு விஷயம் திட்டவட்டமாகத் தெரியும். ஆவணச் சான்றுகளோடு, ஒரு ஹ்யூமன் ட்ராமா என்ற அளவில் கூட, நீதிக்காக நிற்கிற, அரசியல் கடப்பாடு கொண்ட, ஒரு உன்னதமான மனிதர்களினுடைய கதை இது. இவர்களுடைய வாழ்வை சீர்குலைக்கிற, இவர்கள் கேட்கிற அந்த நீதியுணர்வை சீரழிக்கிற ஒரு பிரதிநிதியாக அந்த யு.எஸ்.எய்டின் பிரதிநிதி இருக்கிறார் என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. ஒரு கதைசொல்லல் என்ற முறையில் பார்த்தீர்களேயானால், இது தொடர்கிறது, முதலும் முடிவும் இல்லாமல், ஒரு சுழலாக, ஒரு சுழல் பாதையாக இது தொடர்கிறது.

ஸ்டேட் ஆஃப் சீஜ், எழுபதுகளில் நடக்கிற நிகழ்வுகளைத்தான் கதைக்களமாக எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு நாம் 2020-களின் காலகட்டத்தில் இருக்கிறோம். அந்தப் படம் வெளியாகி ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. இந்த ஐம்பது ஆண்டுகளின் பின்னாலும், உலக நாடுகளில் அமெரிக்காவின் தலையீடு என்பதில் ஏதேனும் மாற்றமிருக்கிறதா?

இன்றைக்கும் அதிகமாக உலக நாடுகளில் ராணுவத்தளங்களை வைத்திருக்கிற நாடு அமெரிக்கா. இன்றைக்கும் பெரும்பாலான மக்கள் ஒரு அரசியல் தலைவரைத் தேர்ந்தெடுத்துவிட்ட பிறகும் அவரிடம் ஆட்சியதிகாரத்தைத் தரமுடியாது என்று சொல்கிற நாடு அமெரிக்கா, ஒரு சனாதிபதிக்கு இவ்வளவு பெரிய அதிகாரத்தைக் கொடுத்திருக்கிற சனநாயக நாடாக, அவலத்திற்குரிய சனநாயகத்தைக் கொண்டிருக்கிற நாடாகவும் அமெரிக்காதான் இருக்கிறது. இன்றைக்கும் வெனிசுலாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடதுசாரி அரசாங்கத்தைச் சீர்குலைக்கக்கூடியதாக, அந்தத் தேர்தலில் தலையிட்டு, இவருக்கு நீங்கள் வாக்கு செலுத்த வேண்டாம், இந்தத் தேர்தலில் இடதுசாரிகளைத் தோற்கடியுங்கள் என்று பிரச்சாரம் செய்யக்கூடிய இடத்தில் அமெரிக்காதான் இருக்கிறது. பொலிவியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடதுசாரி அரசாங்கத்தை, சீர்குலைத்து, அந்த அரசாங்கத்தை சிதறடித்து, அங்கு ராணுவ அதிகாரத்தைக் கொண்டுவந்ததும் அமெரிக்காதான்.
 ஆக, அமெரிக்கா அன்றைக்கும், இன்றைக்கும், மூன்றாம் உலக நாடுகளுக்கும், மூன்றாம் உலக மக்களுக்கும் சிறுபான்மையின மக்களுக்கும் எதிராகத்தான் இருக்கிறது. வெள்ளையினத்தவர் அல்லாத மக்களுக்கும் அது எதிரானதாகத்தான் நிற்கிறது. இந்த உண்மையைத்தான் எழுபதுகளில் எடுக்கப்பட்ட படம் (state of siege) இன்றைக்கு நாம் பார்க்கும்போதும் இன்றைய சமகாலத்தோடு பொருந்திப்போகிறது. ஏனென்றால், அமெரிக்கா தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக, எந்த எல்லைக்கும் செல்லும், மீண்டும் மீண்டும் அது கொலைகாரர்களை உலகெங்கும் ஏற்றுமதி செய்யும். மீண்டும் மீண்டும் அது ராணுவத் தலையீடுகளை உலகெங்கும் நிகழ்த்தும். ஆகவே, அது எதற்கு எதிரான உணர்வும், அந்த பிரக்ஞையும், அதை எதிர்த்துப் போராடுகிற பண்பும் குழுக்களும் அமைப்புகளும் வரலாற்றில் இருந்துகொண்டேதான் இருக்கும். இதைத்தான் கோஸ்டா காவ்ரஸின் ஸ்டேட் ஆஃப் சீஜின் கடைசிக் காட்சி நம் கண்முன் நிறுத்துகிறது.
விமானத்தில் அந்த யு.எஸ்.எய்டின் புதிய அதிகாரி வந்து இறங்குகிறார். அவர் வந்து இறங்குவதை வெறுப்போடும் கோபத்தோடும் பார்த்துக்கொண்டிருக்கிற அந்த பராகுவே நாட்டு மக்களையும், உழைப்பாளி மக்களையும் நான்கைந்து ஃப்ரேம்களில் காண்பித்து முடிப்பது, அப்படிப் பார்த்துக்கொண்டிருக்கிற அந்த கோபமான மனிதனுடைய முகம் க்ளோஸ் அப்பிற்குச் சென்று, அந்தக் கண்கள் வெறித்து நிற்பதுதான் படத்தின் கடைசி ஃப்ரேமாக இருக்கும். இதுதான் இன்றைய நிலையும் கூட. கோஸ்டா காவ்ரஸின் படம், நடப்பு உலகோடு பொருந்திப்போவதற்கும், என்றும் நிரந்தரமாக இருப்பதற்கும் இந்தப் பண்புதான் காரணமாக அமைகிறது.

மோசமான அரசியலை எதிர்ப்பவர்களைக் குற்றவாளிகள் போலச் சித்தரிப்பது தந்திரமான வேலை. புதிது புதிதாக சட்டங்களெல்லாம் நடைமுறைக்குக் கொண்டுவருவார்கள். பொதுவாக ஒரு நல்ல குடிமகன் என்று யாரை அடையாளப்படுத்துவோம் என்றால், யாரெல்லாம் சட்டத்திற்குக் கீழ்படிந்து நடக்கிறார்களோ, அவர்களெல்லாம்தான் நல்ல குடிமகன்களுக்கான அடையாளம். அதை எதிர்த்துப் போராடுகிறவர்கள் குற்றவாளிகள். இப்படி, போராளிகள் எவ்விதமாகவெல்லாம் தவறாகச் சித்தரிக்கப்படுகிறார்கள்?

சி.ஐ.ஏ என்பது ஒரு சட்டம் ஆகிவிட்டதென்றால் சட்டத்திற்குக் கீழ்படிந்து நடப்பவன்தான் நல்ல குடிமகன் என்று சொன்னால், யார் அப்படி எல்லாவற்றையும் கேட்டு, அமைதியாக நடந்துகொள்கிற நல்ல குடிமகனாக இருக்க முடியும்? ஒரு அடிமைதான் அப்படியான குடிமகனாக இருப்பான். எதிர்த்துக் கேள்வி கேட்காதவன்தான், சிறந்த குடிமகனாக இருக்க முடியும். சட்டத்திற்குக் கீழ் படிந்து நடப்பவன்தான் உங்களுக்குக் குற்றமற்றவன், அதை மீறுபவன் அதைக் கேள்வி கேட்பவன் குற்றவாளியாக மதிப்பிடப்படுகிறான். எனில், நியாயமான காரணங்களைக் கூட, நீதிக்கான கோரிக்கைகளைக் கூட சட்டம் என்பதன் அடிப்படையில் குற்றம்போலச் சித்தரிக்க முடியும்.
உதாரணமாகப் பார்த்தீர்களேயானால், இந்தியாவில் கோரேகான் வழக்கை எடுத்துக்கொள்ளலாம். அதேபோல அருந்ததி ராய் போன்றவர்கள் நக்ஸலைட் சம்பந்தமான பிரச்சினைகளில் பல சமயங்களில் மக்களைப் பாதுகாக்கிறார்கள். உண்மையில், நக்ஸலைட் பிரச்சினை என்பது வன்முறை சார்ந்த பிரச்சினை அல்ல. அது மலைவாழ் மக்களினுடைய வாழ்வாதாரம் தொடர்பான பிரச்சனை. கனிம வளங்களை கார்ப்பரேட்டிற்கு, மலைவாழ் மக்களின் அனுமதியில்லாமல், அவர்களோடு உரையாடல் நிகழ்த்தாமல், அவர்களை ஒரு பொருட்டாகவே மதிக்காமல், பணத்திற்காக மட்டும் சூறையாடுவதை அம்மக்கள் எதிர்க்கிறார்கள். கார்ப்பரேட்டுகளாலும், அதற்குத் துணை போகிற அரசுகளாலும், மலைவாழ் மக்கள், பழங்குடியினரின் வாழ்வாதாரம் அழிக்கப்படுகிறது. இதற்கு எதிராக, தமது உரிமைக்காக அந்த மக்கள் ஒன்றிணைந்துப் போராடுகிறபொழுது அவர்களை ஒடுக்குவதற்காக, கார்ப்பரேட்டுகளும், ராணுவமும், உள்ளூர் காவல்துறையும், உள்ளூர் காவல்துறைக்கு ஆதரவாகச் செயல்படக்கூடிய பெரும் நிலக்கிழார்களும், பெருஞ்சாதிக்காரர்களுடைய  ஆயுதப்படையும் அந்த மக்களின் மீது தாக்குதலை நிகழ்த்துகிறது. இது உழவர் பிரச்சினை, மலைவாழ் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினை. இதில் காவல்துறையும், நிலக்கிழார்களும், அவர்கள் வைத்திருக்கிற படைகளும் செய்வது கிரிமினல் குற்றம் இல்லை, இதற்கு எதிராகத் தங்கள் வாழ்வாதாரத்திற்காக ஆயுதமேந்திய அந்த விவசாயிகள் செய்வதுதான் கிரிமினல் குற்றம் என்று சொன்னால், அது நீதியல்ல. கொடுஞ்செயல்களுக்கு எதிரான எதிர்வினையைத்தான் பழங்குடி மக்கள் செய்கின்றனர். இங்கு அந்த பழங்குடி மக்களுக்கு ஆதரவாக நிற்பவர்களையும் குற்றவாளிகளாகத்தான் சித்தரிக்கின்றனர்.

மஹாஸ்வேதா தேவி, விவசாயிகளையும், மலைவாழ் மக்களையும், பழங்குடியினரையும்,கிராமப்புற மக்களையும், நக்சல்களையும் பாதுகாக்கிறார். அவர்கள் பக்கம் நிற்கிறார். அவர்கள் குற்றவாளிகள் அல்ல. எங்களை அச்சுறுத்துகிற நீங்கள் ஆயுதம் வைத்திருக்கிறீர்கள், ஆட்கள் உங்கள் கருத்திற்கு மாறுபட்டுப் பேசுகிறார்கள் என்பதற்காகக் கடத்துகிறீர்கள், கைது செய்கிறீர்கள், சித்திரவதை செய்கிறீர்கள். இதுவெல்லாம் குற்றச்செயல்களின் கீழ் வராதா? குற்றச்செயல்களுக்கு எதிராக, அந்த அரசுக்கு எதிராக, நம் சொந்த மக்களின் நலனுக்காக அரசு செய்கிற குற்றத்தை எதிர்ப்பதென்பது நீதி அடிப்படையிலானது, எனவே அது குற்றச்செயல் அல்ல. குற்றத்திற்கு எதிராகப் பேசுவதென்பது அறம். மாறாக, கிரிமினல் அல்ல. மற்றொன்று வன்முறை தொடர்பானது. வன்முறை கெட்டது. வன்முறை மனிதத்தன்மைக்கு எதிரானது. யாரும் வன்முறையை விரும்புவதில்லை. பின்னர், ஏன் ராணுவத்தின் கைகளில் ஆயுதங்கள் கொடுத்திருக்கிறார்கள்? ஏன் காவல்துறையின் கைகளில் ஆயுதங்களைக் கொடுத்திருக்கிறார்கள்? அதே காரணம்தான் ஒடுக்கப்பட்ட மக்களின் கைகளிலும் ஆயுதங்கள் இருப்பதற்கும் பொருந்தும். எதிர் தாக்குதல் என்பது பாதுகாப்பிற்கானது. எதற்குமே வினை, எதிர்வினை என்று பார்க்க வேண்டும். அப்படிப் பார்க்கும்பொழுது, அடக்குபவர்களின் கைகளில் ஆயுதங்கள் இருக்கின்றன, அவர்கள்தான் ஆயுதங்களைக் கையாள்கிறார்கள், ஆயுதங்களைப் பயன்படுத்துகிறார்கள், மக்களின் மீது வன்முறையை ஏவுகிறார்கள், சித்ரவதை செய்கிறார்கள், நீங்கள்தான் கிரிமினல். நக்ஸலிசம் கிரிமினல் செயற்பாடு அல்ல. அதுவொரு அரசியல். அது நீதி அடிப்படையிலானது. எனவே, இதை நீங்கள் கிரிமினல் என்பதன்கீழ் கொண்டுவரமுடியாது. அதிகாரம் வைத்திருப்பவர்கள் தன் அதிகாரத்தை இழந்துவிடுவோமோ என்ற பயத்தில் வன்முறையை பிரயோகிக்கிறார்கள். அதுதான் கிரிமினல் குற்றம். அதை எதிர்ப்பதென்பதுதான் அறம். உங்களுக்கு அது கிரிமினலாகத் தெரிகிறது, எங்களுக்கு அது அறம். நீதியின் பக்கம் நிற்பது. தான் தாக்கப்படும்பொழுது எதிர்ப்பது அந்த நீதியின் குணம். ஸ்டேட் ஆஃப் சீஜ் படத்தில் மக்களின் நலனுக்காகப் போராடுகிற போராளிக்குழுவுக்கும் இது பொருந்தும். அவர்கள் அறத்தின் பக்கம் நிற்கிறார்கள். எனவே, அவர்கள் குற்றவாளிகள் அல்ல.  

இந்தப் படத்தின் துவக்கத்திலேயே, இது ஆவணப்படுத்தப்பட்ட பதிப்பு என்பதுபோல திரையில் எழுத்துகள் வருகின்றன. நல்ல ஒலி / ஒளி தரத்தில் படம் பார்க்கக்கிடைக்கிறது. இந்தியாவில், தமிழ்ச்சூழலில் இந்த ஆவணக்காப்பக கலாச்சாரம் இன்னும் போதிய முக்கியத்துவம் பெறவில்லை. நாம், நம் சினிமாக்களை ஆவணப்படுத்தத் தவறியிருக்கிறோம். தடை செய்யப்பட வேண்டிய படங்கள், அரசுக்கு எதிரான படங்கள், புரட்சி பேசுகிற படங்கள், செவ்வியல் படங்கள், புராணப் படங்கள், வரலாற்றுப் படங்கள், பரிட்சார்த்த படங்கள் என எல்லாமும் ஆவணப்படுத்தப்பட வேண்டும். ஆனால், இது நடப்பதில்லை. ஸ்டேட் ஆஃப் சீஜ் ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. திரையில் ஊடாடும் மெல்லிய நீல வண்ணம், படச்சுருளில் எடுக்கப்பட்ட பிம்பங்களின் துல்லியம், அந்நாட்டின் ஒரு குறிப்பிட்ட கால அரசியல் சூழ்நிலையை ஆவணப்படுத்தியிருக்கிறது. இதைக்கடந்தும், முக்கியமாக, ஒரு படம் ஆவணப்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் என்ன?

இந்தப் படம் முறைப்படி ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. இது, 1972-ல் எடுக்கப்பட்டிருப்பினும், வெளியாகி ஐம்பது வருடங்களைக் கடந்துவிட்ட பிறகும், இப்போதும் இப்படத்தின் பிரதியை நல்ல காட்சித் தரத்தில் காணமுடியும். ஹென்றி லாங்க்லாய்ஸ், பி.கே.நாயர் இவர்கள் இருவருமே ஒரு திரைப்படத்தை முறைப்படி ஆவணமாகச் சேமித்துவைப்பதில் அறிவியல் பூர்வமாக சில ஆய்வுகளைச் செய்தார்கள். லாங்க்லாய்ஸ், ஆவணக்காப்பகம் அமைப்பது பற்றிச் சொல்கிற விஷயம் மிக முக்கியமானது, அது ”ஒரு திரைப்பிரதி என்பது அது மோசமான அல்லது கேவலமான ஆவணமாக இருக்கலாம், அல்லது அது அதிகாரவர்க்கத்தின் ஆவணமாகக்கூட இருக்கலாம். ஆனால், அது எப்படியிருப்பினும், அதை எப்படி எடுத்துக்கொண்டாலும் அது ஆவணம்தான். அதிகாரவர்க்கம் அன்று அப்படி இருந்தது. பொய்கள் இப்படி மாற்றிச் சொல்லப்பட்டது. அல்லது உண்மைகள் இப்படிச் சொல்லப்பட்டன. ஆனால், இப்படி நிகழ்ந்தன என்பது பற்றிய ஆவணமாக அது வரலாற்றில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. எனவே, பிம்பப்படுத்தப்பட்ட ஒவ்வொரு பிரதியுமே ஆவணப்படுத்தப்பட வேண்டும்” என்பதைத்தான் அவர்கள் கொள்கைகளாகக் கொண்டிருந்தனர்.

 நல்ல படங்களை ஆவணப்படுத்துதல், கெட்ட படங்களை ஆவணப்படுத்துதல், போன்ற வகைப்படுத்தல்களையெல்லாம் ஆவணப்படுத்துதல் தொடர்பான விஷயங்களுக்குள் வரவில்லை. அதுவொரு செய்திக்குறிப்பு ஆனாலும், அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரல் ஆனாலும், அல்லது ஒரு போராளிக்குழுவினுடைய தெருமுனைக் கூட்டம் ஆனாலும், அது ஆவணமாக இருந்தது என்றால், அது மனித குலத்தின் சொத்து.அதைப் பாதுகாக்க வேண்டும். ஏனெனில், வரலாறு என்பதற்கு ஆதாரமாக இருப்பது ஆவணங்கள்தான்.
இந்திய காலனியாதிக்கத்தின் பொழுது, இந்தியாவில் இருந்து செயல்பட்ட ஒவ்வொரு அதிகாரியும் தன்னுடைய நாட்குறிப்பை எழுதியிருக்கிறார்கள். அன்றாட வாழ்க்கையை எழுதியிருக்கிறார்கள். அதிலிருந்து, அந்த அதிகாரி யார் யாருடன் தொடர்பு கொண்டார் என்பது தொடர்பான அந்தக் காலனிய மனோநிலை சம்பந்தமான அறிவு, ஆதார நிலை நமக்குக் காணக் கிடைக்கிறது. ஆகவே, ஒவ்வொரு படமுமே, ஒவ்வொரு பிரதியுமே ஆவணப்படுத்தப்பட வேண்டியதன் மதிப்பைக் கொண்டுள்ளது. இதற்கடுத்து சில அழகியல் கூறுகளை சில படங்கள் முன்வைக்கின்றன. உதாரணத்திற்கு, ஸ்டேட் ஆஃப் சீஜ் படத்தில் உள்ளதுபோல, த்ரில்லர் தொடர்பான இந்த ஃபாஸ்ட் கட். த்ரில்லரில் இடம்பெறுகிற இரு தரப்பிற்கிடையிலான வசனங்கள் இது தொடர்பான விஷயங்களை இந்தத் திரைப்படங்கள் முன்வைக்கின்றன. இது அடுத்த தலைமுறைக்கு உதவக்கூடும்.

சி.ஐ.ஏ ஈராக் போராட்டக் காலகட்டத்தில், வால் ஸ்ட்ரீல் போராட்ட காலகட்டத்தில் பெண்டகனில் ஒரு திரைப்படத்தைத் திரையிட்டுக் காண்பித்தார்கள். அது கில்லொ பொன்டேகார்வோவின் பேட்டில் ஆஃப் அல்ஜியர்ஸ். காரணம் என்னவெனில், ”பேட்டில் ஆஃப் அல்ஜியர்ஸ்தான், ஒரு போராளிக்குழு, அதிலிருக்கிற ஆண் பெண் எவ்வாறு செயல்படுவார்கள்?” என்பதற்கான நுட்பங்களைக் கொண்டிருக்கிறது என்று சொல்கிறார்கள். இதை நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள். அதேபோல, கெளண்டர் இண்டலிஜண்ட்ஸிற்கான(counter intelligence) டாக்யூமெண்டாக அவர்கள் வைத்திருப்பது, சேகுவேராவினுடைய பொலிவியன் டைரி. அப்பொழுது, டாக்யூமெண்ட் ஒரு ஆதாரமாக இருக்கிறது, அந்த ஆதாரத் தரவிலிருந்து நீங்கள் தியரிட்டிகல் வேல்யூஸை எட்டலாம், அந்தக் காலத்தின் பண்பாட்டை அறியலாம், இப்படி அவற்றை அறிந்துகொள்வதற்கான நிலைப்பாட்டை நீங்கள் எடுக்கலாம். ஒரு அரசு இதை முன்னெடுக்கமுடியுமானால், அந்த அரசிலிருந்து உரிமைகளைக் கேட்கிற, அந்த மக்கள் சார்பாகப் பேசுகிறவர்களும் இந்த ஆவண மதிப்பை உணர்ந்துகொள்ள வேண்டும். ஆவணங்களைச் செய்வதற்கான அந்த கடப்பாட்டை நாமும் வலியுறுத்த வேண்டும். அந்த வகையில் இல்மஸ் குணேவின் படங்களும் ஆவணப்படுத்தப்பட வேண்டும், பொன்டெகோர்வோவினுடைய படங்களும் ஆவணப்படுத்தப்பட வேண்டும். கோஸ்டா காவ்ரஸின் படங்களும் ஆவணப்படுத்தப்பட வேண்டும். ஏனென்றால், இந்த மூன்று படங்களும்தான் இன்று வரையிலும் அரசியல் திரைப்படங்கள் எடுக்கிற இயக்குனர்களிடையே பாரிய அளவிலான தாக்கம் செலுத்தக்கூடிய படங்களாக இருக்கின்றன.