என்னை வளர்த்துக்கொள்ள உதவிய படங்கள்

மதனோத்சவம் (மலையாளம்)

என்னை இதில் பாதி டைரக்டராக்கினார் சங்கரன் நாயர். கேரளத்தில் பெரிய ஹிட் ‘மதனோத்சவம்’.

Image result for kamal hassan on shooting spot rare stills"

காத்திருந்த நிமிஷம் (மலையாளம்)

வேடிக்கையான படம். 25 நாள் கால்ஷீட் கொடுத்து லொகேஷனுக்குப் போனால் கதை வரவில்லை. அதனால் ஐந்து நாளில் நாங்களே கதை எழுதி, இருபது நாளில் படத்தை முடித்தோம்.

அனுமோதனம் (மலையாளம்)

பிடித்தமான தயாரிப்பாளர் குஞ்சு கண்ணன். பணக்கார சின்னப்ப தேவர் மாதிரி. இந்தப் படத்தில் நடித்தபோதே அடுத்த படத்திலும் தேதி வாங்கிக்கொண்டார். ஆனால் எனது திருமண சமயத்தில் அவருக்கு நான் நடித்துக்கொடுக்க வேண்டும். எனக்காக தேதிகளை விட்டுக் கொடுத்தார். அவருக்கு அடுத்து கால்ஷீட் கொடுக்க முடியாத அளவு தமிழில் பிஸியாக இருந்தேன்.

நான் எப்போது கால்ஷீட் கொடுக்கிறேனோ அப்போது படம் செய்துகொள்கிறேன் என்று சொல்லிவிட்டார். வேறு படமும் அவர் செய்வதாக இல்லை. இன்று அவர் வேறு படம் தயாரிக்கவும் இல்லை. தமிழில் படம் தயாரிக்கும்படி கேட்டேன். மறுத்துவிட்டார். மலையாளப் படம் என்றால் அவர் சொல்லும் கதைதான் படமாகும். எனக்கு அது சரிப்பட்டு வராது. இப்படி இருவருமே இழுத்துக்கொண்டிருக்கிறோம்…

நிழல் நிஜமாகிறது

மலையாளத்தில் சத்யன் ஏற்றதை தமிழில் நான் ஏற்றிருந்தேன். அவர் நடித்ததை நான் பார்க்கவில்லை. பாலசந்தர் படங்களிலேயே மிகவிரைவாக முடிந்த படம். அதே நேரத்தில் குறைவான சம்பளம் வாங்கி இதில் நடித்தேன்.

மற்றொன்று, ஷோபா நிஜமாக இருந்தபோது நடித்த படம் இது. அப்புறம் நிஜம் நிழலாகிவிட்டது.

Image result for nizhal nijamagiradhu"

மரோசரித்ரா (தெலுங்கு)

பொதுவாக பாலசந்தர் படம் எல்லாவற்றிலுமே இருப்பேன். ‘பட்டினப் பிரவேசம்’ படத்தில் நான் இல்லை. அதன் படப்பிடிப்பு வாசு ஸ்டூடியோவில் நடந்தபோது டைரக்டரைப் பார்க்கப் போயிருந்தேன். அப்போது தயாரிப்பாளர் இராம. அரங்கண்ணலும் பாலசந்தரைப் பார்க்க வந்திருந்தார். டைரக்டர் என்னைக் காட்டி, “இவனுக்கு அட்வான்ஸ் கொடுத்து விடுங்கள்” என்றார். அரங்கண்ணல் ஒரு செக்கை நீட்டினார். “என் படத்திற்கு நீங்கள்தான் ஹீரோ” என்று.

‘மரோசரித்ரா’ தொடங்கியபோது கதாநாயகியாக ஒரு பெண்ணை, “இவர்தான் உன் ஜோடி” என்று அறிமுகப்படுத்தினார்கள். அவர் சரிதா. அவரைப் பார்த்ததும் பயந்துவிட்டேன். “இவரைப்போய் நமக்கு ஜோடியாகப் போட்டிருக்கிறார்களே” என்று. அதை வெளிப்படையாகவும் விமர்சித்தேன். மூன்று நாட்கள் படப்பிடிப்பிற்கு பின், “சரிதாவைப் பற்றி நான் சொன்னதை எல்லாம் திரும்ப வாங்கிக்கறேன்” என்று அனந்துவிடம் சொன்னேன். ஒருவரது தோற்றத்தைப் பார்த்து எடைபோடக்கூடாது என்று கற்பித்த படம் இது.

இளமை ஊஞ்சலாடுகிறது

டைரக்டர் ஸ்ரீதர் படம். அவருக்கும் எங்களுக்கும் பெரிய வெற்றி தேடித்தந்த சுகமான ஊஞ்சல்.
இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமானதும் சம்பளத்தை நாமே பேசவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டு ஸ்ரீதரிடம் பேரம் பேசுவேன். லட்ச ரூபாய் சம்பள லட்சியத்தை அப்புறம் மறந்துவிடுவேன்.

”ஒரே நாள் உனை நான்” என்ற பாடலைக் கேட்டதும் “சுமாரா இருக்கு” என்றேன். “ஹிட்” என்றார் ஸ்ரீதர். நான் ஒப்பவில்லை. ஸ்ரீதர், “நீயே தெரிஞ்சுக்குவே” என்றார். “பாடலை மக்களின் கோணத்தில் இருந்து பார்க்க வேண்டும்” என்றேன். இப்படி வாக்குவாதம். பாடல் பெரிய ஹிட்டானது. இத்தனைக்கும் ஸ்ரீதருக்கும் சங்கீத ஞானம் ஒன்றும் பெரிதாக இல்லை. ஆனால் அவரது தீர்மானம் சரியாகவே இருந்தது.

“இந்த வயதில் இளமையான படம் எப்படி உங்களால் செய்யமுடியும்?” என்று கேட்டேன். “என்ன வயது எனக்கு?” என்று சண்டைக்கு வந்துவிட்டார்.

சட்டம் என் கையில்

டி.என். பாலு படம். ஊக்கமாக இரட்டை வேடம் போட்டேன். இன்று டி.என்.பாலு இருந்திருந்தால் அவர் மூலமாகவே ஆறு வெள்ளி விழாப் படங்களைக் கொடுத்திருப்பேன். அற்புதமான மசாலா டைரக்டர். அவர் இல்லாதது பெருங்குறைதான். அவரையடுத்து பஞ்சு அருணாசலம் நல்ல மசாலா படம் உற்பத்தியாளர் என்பேன்.

வயசு பிலிசிந்தி (தெலுங்கு)

தெலுங்கு ‘இளமை ஊஞ்சலாடுகிறது’, தெலுங்கில் என் படம் விற்கிறது என்பதால் செய்தது.

வயநாடன் தம்பான் (மலையாளம்)

தமிழில், ‘கன்னி வேட்டை’ என்று டப் செய்யப்பட்டு வந்தது. இதில் இந்திய டிராகுலா நான். கோர மேக்கப்பில் அப்படி நடிப்பதற்கே ஒரு தைரியம் வேண்டும். தைரியத்துடன் சிரமப்படவும் வேண்டும்.

அவள் அப்படித்தான்

திரைப்படக் கல்லூரியிலிருந்து வந்த ருத்ரய்யா செய்த முதல் படம். படித்தவர்கள் மத்தியில் பெயர் வாங்கித் தந்தார். மரியாதையும் பெற்றுத் தந்தார்.
தமிழில் ஆர்ட் ஃபிலிம் டைப்பில் ஒரு படம் வரவேண்டும் என்பதற்காகவே ரஜினியை வற்புறுத்தி நடிக்க வைத்தோம். சுமாரான படம். எல்லோரும் நண்பர்களாக இருந்து உருவாக்கினோம்.

சிகப்பு ரோஜாக்கள்

நெகடிவ் ரோலுக்கு கதாநாயக அந்தஸ்து கொடுக்காமல் வெற்றி பெறச் செய்யமுடியும் என்று பாரதிராஜா நிரூபித்த படம்.
வில்லத்தனமான, இக்கதாநாயகனாக பல கதாநாயக நடிகர்கள் நடிக்க மாட்டேன் என்று மறுத்துவிட, கடைசியில் என்னிடம் வந்தது. படப்பிடிப்பில் பாரதி ராஜாவை அப்படிச் செய்யலாமா, இப்படிச் செய்யலாமா என்று அதிகம் அரிப்பெடுத்து நடித்தேன்.

Image result for sigappu rojakkal"

படப்பிடிப்பு நடந்த பங்களாவில் முதல் நாள் கரண்ட் கட். அது அபசகுணம் என்று அனைவரும் கருத. பங்களாவும் பொருத்தமாக இல்லை என்று வேறு இடம் தேடினோம். ஹென்ஸ்மென் சாலையில் (இன்றைய கண்ணதாசன் சாலை) சுற்றியபோது வளைவில் ஒரு வீட்டைப் பார்த்து, “இந்த வீடுதான்” என்று காரை நிறுத்தச் சொன்னேன். வீடு யாருடையது, என்ன விபரம் என்று கூட தெரியாமல் உள்ளே போனோம். வீட்டுக்காரர் இல்லை என்பது காவல்காரர் மூலம் தெரிந்தது. அவரிடம், “நான்தான் கமல்ஹாசன். படப்பிடிப்பிற்காக வீடு பார்க்க வந்தோம்” என்றபோது, ஒரு நடிகன் வலிய வந்து பேசியதும் தலைகால் புரியவில்லை அவருக்கு. ஆர்வத்தில் வீட்டைச் சுற்றிக் காண்பித்தார். எங்கள் அதிர்ஷ்டம் முதலாளி வந்தபின் மறுக்கவில்லை. அந்த பங்காளாதான் பிற்பாடு ‘ரெட்ரோஸ்’ பங்களா என்று பெயரெடுத்தது. வீட்டுக்காரருக்கு நிறைய வருமானத்தையும் தேடிக்கொடுத்தது.

மனிதரில் இத்தனை நிறங்களா?

நல்ல பாத்திரம்தான். ஆனால் முழுமையாகச் செய்யமுடியாமல் எத்தனை இடையூறுகள்? சிலமனித நிறங்களைப் புரிந்துகொள்ளும் சந்தர்ப்பம் இதில்… ஹிட்டாக வேண்டிய படத்தை அவசரப்பட்டு முடித்து… முடித்துவிட்டார்கள்!

ஈட்டா (மலையாளம்)

இருபது நாட்களில் எடுக்கப்பட்டது. ஒரே லொகேஷனில் எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம். இரண்டு யூனிட்டாய் பகிர்ந்து படப்பிடிப்பு நடத்தினோம். சண்டைக் காட்சிகளை கிருபா மாஸ்டருடன் சேர்ந்து படமாக்கினோம். பிற காட்சிகளை வேறு பக்கம் ஐ.வி. சசி படமாக்குவார்.
சீனியர் நடிகையான ஷீலாவோடு நெருங்கி நடிக்கும் காட்சிகள் எனக்குண்டு. அதனால் அவருடன் பயந்து மரியாதையாக நடித்தேன்.

சொம்மு ஒகதி ஷோக கொடுதி (தெலுங்கு)

நல்ல நட்பாளர் சிங்கீதம் சீனிவாசராவுடன் இதில் சந்திப்பு. பாலுமகேந்திரா கேமரா, மகிழ்ச்சியான நாட்கள் அவை. இது தமிழில் ‘இரு நிலவுகள்’ என்று டப் செய்யப்பட்டு வந்தது.

சிவப்புக்கல் மூக்குத்தி

நண்பர் வலம்புரி சோமநாதனின் வற்புறுத்தலால் செய்த படம். சிவப்புக்கல் இருக்கிறது. மூக்குத்தியைக் காணோம்.

நீயா?

ஸ்ரீபிரியாவுக்காக பணம் வாங்காமல் நடித்த படம். நிறைய கதாநாயகர்கள் பங்கு பெற்றார்கள்.

Image result for alavudeen arputha vilakku"

அலாவுதீனும் அற்புதவிளக்கும் (மலையாளம்)

தேய்க்க தேய்க்க பூதம் வரவில்லை. இரண்டு வருடங்களாக நடித்தோம். இனி இருவரும் சேர்ந்து நடிப்பதில்லை என்று ரஜினியும், நானும் இந்தப் படப்பிடிப்பின் போதுதான் முடிவுசெய்தோம். ஒரு நடிகருக்குரிய சம்பளத்தை இரண்டு பேருக்கு பிரித்துக் கொடுத்து விடுகிறார்கள் என்று நினைத்தோம். எங்கள் கணிப்பு சரியாகவே இருந்தது.

-கமல்ஹாசன்

நேர்காணல், தொகுப்பு: எஸ்.விஜயன்

பொம்மை: பிப்ரவரி 97