மைக்கேல் ஹெனகேவின் தி செவன்த் காண்டினெண்ட் (The Seventh Continent)

-தினேஷ்
 
நல்ல பண்பட்ட மனிதர்களாகவும், அறிவு, பொருளாதாரம், செல்வ வளம் என அனைத்திலும் மேன்மையடைந்தவர்களாகவும், நம்மை நாமே கருதிவருகிறோம். ஆனால், உண்மையில், வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் என்பதிலேயே பலவித குழப்பங்களையும், சிக்கல்களையும் அன்றாடம் கடந்துவரக்கூடிய மனிதர்களாகத்தான் நாம் இருக்கிறோம். அறிவியல் வளர்ச்சி, தொழில்நுட்ப புரட்சி என்று பேசுகிற சமகாலத்தில், நாம் வளர்ந்திருக்கிறோம் என்று சொல்கிற, நவநாகரீக வளர்ச்சி, இந்த நவீன சமூகம், ஒரு சாமானிய குடும்பத்தின்மீது எந்தவிதமான பாதிப்புகளையெல்லாம் செலுத்துகிறது, அவர்களுக்கு எவ்விதமான உள நெருக்கடிகளையும், மனச்சிக்கல்களையும் தருகிறது என்ற பேசுபொருளை எடுத்துக்கொண்டிருக்கிற படம்தான் தி செவன்த் காண்டினெண்ட்.
ஆஸ்த்ரிய திரைப்பட இயக்குனர் மைக்கேல் ஹெனகே இயக்கத்தில், 1989-ல் வெளியான இப்படத்தை, இன்றைய நடப்புச் சூழலோடு ஒப்பிட்டுப் பார்த்தால்கூட, அதிநவீன சமூகத்தோடு தொடர்புபடுத்திக்கொள்ள முடியாத, அதனோடு இணைந்து இயங்க முடியாத குடும்பங்களின் வாழ்வைப் பதிவுசெய்த வகையில், 32 வருடங்கள் கழிந்தும், இன்றைக்கும் இது தனித்துவிடப்பட்ட குடும்பங்களின் துயரநிலையோடு பொருந்திப்போகிறது. மேலும் இது இன்னும் 30 வருடங்கள் கழிந்தும் அப்போதைக்கிருக்கிற சமகாலத்தோடு பொருந்திப்போகக்கூடிய ஒன்றாகத்தான் இருக்கும். ஏனெனில், முற்றிலும் இயந்திரமயமான உலகில், அதனோடு இணைந்து இயங்க முடியாத மனிதர்கள் அப்போதும் இருப்பார்கள்.

இப்படத்தில், ஒரு குடும்பம் எப்படி தற்கொலை செய்கிறது? என்பதை விஸ்தாரமாகக் காட்சியாக்கியிருக்கிறார்கள். ஏன் அந்தக் குடும்பம் தற்கொலை செய்துகொண்டது? என்பதைப் படம் பார்க்கிற பார்வையாளர்கள், தன் புரிதலின் அடிப்படையில் ஒவ்வொரு முடிவுக்கு வரலாம். எனினும், படத்தில் இடம்பெறுகிற காட்சிகளை அடிப்படையாக வைத்துப் பார்க்கையில், எவ்வித சுவாரஸ்யமுமற்ற அன்றாடச் சூழலுக்குள், இயந்திரங்கள்போல் தானும் சுழல்கிற மன அழுத்தத்திலிருந்து வெளியேறத்தான், கணவன், மனைவி, குழந்தை என ஒரு குடும்பமே தற்கொலை செய்துகொள்கிறது. நவநாகரீக உலகம் என்று சொல்லப்படுகிற இந்தத் தொழிற்புரட்சி யுகம், கண்களுக்கு வெளிப்படையாகத் தெரியாமல், உயிர்கள்மேல் இரக்கமற்று நடத்துகிற வன்முறையை இப்படத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
இதைக்கடந்து, இப்படம் மேற்கொண்டிருக்கிற கதைசொல்லல் நுட்பங்கள், அதற்குப் பின்னுள்ள அரசியல் சார்ந்த சூழ்நிலைகளைப் பற்றி தோழர் யமுனா ராஜேந்திரன் அவர்களுடன் கலந்துரையாடலாம். 

பொதுவாக இன்றைக்கிருக்கிற தொழிற்துறை யுகத்தால், ஐரோப்பிய சமூகத்தில் வாழ்கிற மக்களின் அன்றாட வாழ்வு எவ்வளவு வன்முறைக்கு மத்தியில் நடந்தேறுகிறது என்பதை மைக்கேல் ஹெனகே தன் படங்களில் மீண்டும் மீண்டும் சொல்கிறார். அவருடைய ஆரம்பகாலப் படங்களையே உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம், செவன்த் காண்டினெண்ட் திரைப்படத்திற்குப் பிற்பாடு, பென்னிஸ் வீடியோ (Benny's Video, 1992), ஃபன்னி கேம்ஸ் (Funny Games, 1997) போன்ற படங்களையெல்லாம் எடுத்தார். இந்தப் படங்களெல்லாமே வீடியோ கலாச்சாரம், தகவல் தொழில்நுட்ப புரட்சி, மனிதர்களுடைய உளவியலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன என்பது தொடர்பான கதைக்களம். அதேபோல, இந்த தொழிற்நுட்ப யுகம், சுய சார்பு, தனிப்பட்ட வாழ்க்கை வாழ்கிற சமூகத்தில், ஒரு மனிதனுக்கும் இன்னொரு மனிதனுக்கும் இடையேயான உறவு எப்படி அந்நியப்பட்டிருக்கிறது? எவ்வளவுதூரம், இயந்திரமயமானதாக இந்த மனித உறவு நிலை ஆகியிருக்கிறது? என்பதைத் தன் படங்களில் தொடர்ந்து விவாதிக்கிறார். 

செவன்த் காண்டினெண்ட் படத்தை இன்றைக்குப் பார்த்தாலும், மிகுந்த மன வருத்தத்தையும், மனத் தொந்தரவுகளையும் கொடுக்கக்கூடிய படமாக இருக்கிறது. கான் திரைப்பட விழாவில் கூட, இப்படத்தை, சிறந்த படமாக, நடுவர்கள் கவனத்தில்கொள்ளவில்லை. அதேபோல இப்படம் தொடர்பான விமர்சனங்களைப் பார்த்தீர்களேயானால், பெரும்பாலும், ’இது மன அமைதியைச் சீர்குலைக்கக்கூடிய திரைப்படம்’ என்றே எழுதியிருப்பார்கள். இந்தப் படம் ஓடிக்கொண்டிருக்கும்போதே, பெரும்பாலான விமர்சகர்களும், பார்வையாளர்களும் திரையரங்கிலிருந்து வெளியேறிச் சென்றிருக்கிறார்கள்.

அதேபோல, இந்தப் படத்தில் அரசாங்கங்களுக்கும், நிதி நிறுவனங்களுக்கும், உயர் மத்தியதர மக்களுக்கும், அதிர்ச்சிதரத்தக்க விஷயமாக இருந்தது என்னவென்றால், அந்த நார்வேஜீயன் பணத்தை, கத்தை கத்தையாகக் கிழித்து, கழிப்பறைக்குள் தள்ளுகிற காட்சி. சில்லறைக் காசுகள் முதற்கொண்டு, அனைத்து பணத்தையும் கிழித்து, கழிப்பறைக்குள் தள்ளி, தண்ணீரை பீய்ச்சியடிப்பது, பார்க்கிற அனைவருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியைத் தந்தது. ஏனென்றால், இந்தச் சமூகத்திற்கு பணம் என்பது மிக அடிப்படையான விஷயம். பணம்தான், ஒரு மனிதனுடைய பெருமிதத்தை, மனிதனுடைய ஆளுமையை, மனிதனுடைய அதிகாரத்தையும் நிர்ணயிக்கக்கிறது. அந்தப் பணத்தைச் சேர்ப்பதற்காகத்தான் மனிதர்கள் இரவும் பகலும் உழைக்கின்றனர். பணத்தின் பின்னாலேயே ஓடுகின்றனர். ஆனால், செவன்த் காண்டினெண்ட் திரைப்படத்தில் வருகிற குடும்பம், கட்டுக் கட்டான பணத்தை வெட்டியெறிந்து கழிப்பறைக்குள் தள்ளுவது தார்மீக அதிர்ச்சியை பார்வையாளர்களுக்குக் கொடுக்கிறது.

இரண்டாவது, தற்கொலையைத் திட்டமிட்டு, மிகவும் நிதானமாக, இயல்பாகச் செய்கிற இந்தக் குடும்பத்தின் மனோநிலை ஒரு அதிர்வை ஏற்படுத்துகிறது. அதுவும், தான்பெற்ற மகளையே கொலை செய்கிற காட்சி மிகப்பெரிய அதிர்ச்சி. இதற்கடுத்தது, பணத்தைத் துச்சமாக மதித்து, கிழித்தெறிகிற காட்சி, மிகவும் அதிர்ச்சிதரத்தக்கதாக இருக்கும்.

வழக்கமாகவே, திரைப்படங்களில் காரணம் – விளைவு என்பதன் அடிப்படையில் திரைக்கதை அமைக்கப்படும். மைக்கேல் ஹெனகே, பொதுவாகவே வழமையான திரைக்கதைப் பாணி எதையும் பின்பற்றுவதில்லை. உண்மைச்சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிற, செவன்த் காண்டினெண்டில், ஒரு குடும்பம் சாகிற விளைவு, விஸ்தாரமாகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தாலும், அந்தக் குடும்பம் எதற்காகத் தற்கொலை செய்துகொண்டது? என்பதற்கான காரணம் அவ்வளவு துல்லியமாக இல்லை.

படத்தில் ஜார்ஜ் (கணவன்) தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னர், தன் தாய் தந்தையருக்குக் கடிதம் எழுதும்போது, “நானும், மனைவியும் வேலையை ராஜினாமா செய்துவிட்டோம். ஆஸ்திரேலியா செல்கிறோம், நாங்கள் விடைபெறுகிறோம்” என்றுதான் சொல்கிறார். பிறகு, ”இதைச் சொல்வதற்கு எனக்குக் கஷ்டமாகயிருக்கிறது. நானும், என் மனைவியும் (அன்னா Anna) வளர்ந்தவர்கள். நாங்கள் விடைபெறுகிறோம், இங்கிருந்து போகிறோம் என்பது எங்களுடைய முடிவு. ஆனால், எங்கள் குழந்தை, உங்களுடைய மிகுந்த நேசத்திற்கு அருகிலிருக்கக்கூடிய ஜீவன், எனில், இந்தக் குழந்தையின் உயிரைப் பறிப்பதற்கு, எங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? என்ற கேள்வி எங்களுக்கு வந்தது. ஒருமுறை தேவாலயத்தில், பைபிள் தொடர்பான விஷயங்களைப் பார்க்கும்போது, இறப்பிற்கு நானும் வருகிறேன், சாவை எதிர்கொள்வதில் எனக்குப் பயம் ஏதுமில்லை, என்று மகள் (எவா – Eva) சொல்கிறாள். தாய், தகப்பனுக்கே, சாவை எதிர்கொள்வதில் பயமில்லை என்றால், எனக்கும் பயமில்லை, நானும் உடன் வருகிறேன், என்றுதான் மகளும் சொல்கிறாள். எனவே, அந்தக் குழந்தையும் தயாராகத்தான் இருக்கிறது. ஆக, நாங்கள் எங்களுடன் எங்கள் மகளையும் அழைத்துச் செல்கிறோம்” என்று குறிப்பிடுகிறார். இறுதியில் அவர் சொல்வது, “நாங்கள் ஏன் தற்கொலை செய்துகொள்கிறோம் என்பது தொடர்பான, எந்தவிதமான காரணங்களையும் நாங்கள் இங்கு கண்டுபிடிக்கவில்லை. எங்கள் தற்கொலை முடிவுக்கு என்னென்ன தாக்கங்கள் இருக்கின்றன, என்ற விஷயத்தையும் நாங்கள் கண்டுபிடிக்கவில்லை. I am making a statement of Fact.” என்றுதான் கடிதத்தை முடிக்கிறார். அதாவது நிகழ்வுகள் நடப்பது தொடர்பான, ஒருவிதமான அறிவித்தலை மட்டுமே அவர் செய்கிறார். மாறாக, தாங்கள் ஏன் தற்கொலை செய்துகொண்டோம்? எதற்காகத் தற்கொலை செய்துகொண்டோம்? எதற்காக இந்த முடிவுக்குத் தள்ளப்பட்டோம்? என்பதை, அவர் தன் தாய் தகப்பனுக்கும் சொல்வதில்லை. ஆக, இந்தப் படத்தில் அம்மூவரும், ஏன் இந்த தற்கொலை முடிவை மேற்கொள்கிறார்கள் என்பதற்கு, உறுதியான காரணங்களை நம்மாலும் சொல்லமுடியவில்லை. அதேவேளையில், இப்படத்தின் இயக்குனராக, மைக்கேல் ஹெனகேயும், ஒரு செய்தியாக, ஒரு கருத்தாக, தார்மீக நெறி என்றளவில் அவரும், தற்கொலைக்கான காரணம் என எதையும் சொல்வதில்லை. ஆனால், இந்தப் படத்தினுடைய காட்சியமைப்புகள், அந்தக் காரணங்களைச் சொல்லிக்கொண்டே போவதை நீங்கள் படம் முழுக்கப் பார்க்கமுடியும்.

வாழ்வில் எத்தகைய பிரச்சினைகள் சூழ்ந்திருப்பினும், அதைக் கலைவழி வெளிப்படுத்துவதும், அதன்வழி ஒரு உரையாடலை முன்னெடுப்பதுமே கலைஞர்கள் செய்யக்கூடிய வழிமுறை. அதை மைக்கேல் ஹெனகே மிகச்சரியாகவே செய்திருக்கிறார். இது மைக்கேல் ஹெனகே இயக்கத்தில் வெளியான முதல்படம். ஆனால், முதல் படத்திலேயே காட்சிகளின் வழி கதைசொல்லும் நுட்பத்தைத் திறம்படக் கையாண்டிருக்கிறார். திரைப்படக் கல்லூரிகளில் இந்தப் படத்தின் சட்டகங்கள் (Frames) மற்றும் கம்பொஸிஷன் (Composition) குறித்துத் திறனாய்வு செய்யுமளவிற்கு தனித்துவத்தைக் கொண்டிருக்கின்றன.
நாம் ஐரோப்பியன் சினிமாவை எடுத்துக்கொண்டால், கோதார்த், த்ரூபோ, கீஸ்லோவ்ஸ்கி, கென்லோச் போன்றவர்களைப் பேசுவோம். இதற்கு முன்னர், விட்டோரியா டிசிகா, அந்தோனியோனி, ஃபெலினி போன்ற திரைப்படைப்பாளிகளைப் பற்றி உரையாடுவோம். ஆனால், சமகாலத்தில், ஐரோப்பிய திரைப்படைப்பாளிகளை எடுத்துக்கொண்டால், மிகவும் தீவிரமாகக் கவனிக்கப்படுகிற, சமகால ஐரோப்பிய வாழ்க்கையைப் பற்றிய, மிகச்சரியான, விமர்சனங்களையும், பார்வைகளையும், தன் கருத்துக்களையும் முன்வைக்கிற இரண்டு இயக்குனர்களாக, லார்ஸ் வான் ட்ரையரையும், மைக்கேல் ஹெனகேவையும் சொல்ல முடியும். பெண் இயக்குனர்கள் என்றால், ஜெர்மனைச் சார்ந்த மார்கரிட்டா வான் ட்ரோட்டாவைச் (Margarethe von trotta) சொல்வேன். பெண்ணியப் பார்வையில், சமூக மாற்றம், அதில் பெண்களுடைய இடம், முன்மாதிரியான பெண் புரட்சியாளர்கள் பற்றிய படங்களாகத் தொடர்ந்து மார்கரிட்டா வான் ட்ரோட்டா எடுத்திருக்கிறார்.

லார்ஸ் வான் ட்ரையரை எடுத்துக்கொண்டால், பொதுவாக இந்த உலகம், ஐரோப்பிய சமூகம் எதை ’பேசக்கூடாது’ என்று நினைக்கிறதோ, எது விலக்கிவைக்க வேண்டியது, எது அருவெறுப்பானது என்று நினைக்கிறதோ, அந்த விஷயங்களைப் பேசுகிறார். குறிப்பாக கிறித்துவ நெறிமுறைகள், பத்து கட்டளைகள் (Ten commandments), பாலியலில் இருக்கிற எதிர்மறை அம்சங்கள், வன்முறை, கீழ்மையான விஷயங்களை, அதிகக் கேள்விகளுக்கு உட்படுத்துகிறார். அவருடைய ப்ரேக்கிங் தி வேவ்ஸ் (Breaking the Waves ,1996), இடியட்ஸ் (The Idiots, 1998), நிம்போமேனியாக் (Nymphomaniac, 2013) என எந்தப் படத்தை எடுத்துக்கொண்டாலும், அவர் மீண்டும் மீண்டும் இந்த நீதிநெறிமுறையின் வறுமை, தார்மீக அறம், போலித்தனமான ஐரோப்பிய அற மதிப்பீடுகளைப் பேசுகிறார். இன்னும், பாலுறவு தொடர்பான விஷயங்களை மையமாக வைத்துத்தான் இவற்றை அணுகுகிறார்.
அதுபோல, மைக்கேல் ஹெனகேவின் படங்களை எடுத்துக்கொண்டால், ஐரோப்பிய சமூகத்தினுடைய பிரதான பிரச்சினையாக இருக்கிற, உறவுகளுக்கிடையிலான அந்நியமாதலை, முதியவர்கள், இளையவர்கள், குழந்தைகளுக்கிடையே இருக்கிற அந்நியமாதலை, அவர் கதைக்களனாகத் தேர்ந்தெடுக்கிறார். தனிநபர் சமூகம், தொழிற்புரட்சி யுகம், நுகர்பொருள் கலாச்சாரம் எப்படி, அந்நியமாதலை உருவாக்குகிறது, என்பதைப் பற்றி தொடர்ந்து பேசுகிறார். அதேபோல, தகவல் தொழில்நுட்பப் புரட்சி, வீடியோ கலாச்சாரம் போன்றவை, எவ்வளவு வன்முறை உணர்வுகளை, இளைய சமூகத்திடம் உருவாக்கியிருக்கிறது என்பதையும் அவர் தன் திரைப்படங்களில் வெளிப்படுத்துகிறார். பின்னர், அகதிகள் பிரச்சினையை அவருடைய படங்கள் பேசுகின்றன, சமகால ஐரோப்பாவினுடைய வன்முறை சார்ந்த, மனித விலக்கம் சார்ந்த, இருத்தலுக்கும் இன்மைக்கும் இடையிலான இந்த உண்மைநிலை சார்ந்த விஷயங்களே மைக்கேல் ஹெனகேவின் கதைக்களன்கள். இதில் பென்னிஸ் வீடியோ, ஃபன்னி கேம்ஸ், செவன்த் காண்டினெண்ட் போன்ற படங்கள், நிகழும் வன்முறையில் ஊடகமும், பிம்பங்களும் ஏற்படுத்துகிற தாக்கம் குறித்து மிக முக்கியமாக விவாதிக்கப்பட்டிருக்கும்.
செவன்த் காண்டினெண்டில், அன்னாவின் (Anna) அம்மா இறந்துபோனது தொடர்பாக, அவருடைய சகோதரன் (அன்னாவின் உடன்பிறந்தவர்) நினைவுகூறுவார். மற்றவர்கள் இதைக் கண்டுகொள்ளாது தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருப்பார்கள். அம்மா இறந்த சோகத்தை, அந்த உணர்வை, சகோதரர் அழுவதன் வழியாகத்தான் பகிர்ந்துகொள்கிறாரேயொழிய, எந்தவிதமான உரையாடலும் அவர்களுக்கிடையில் நிகழ்வதில்லை. இந்தப் படம் முழுக்கவுமே, நீங்கள் பார்த்தீர்களென்றால், உரையாடல்கள் அதிகமாக நிகழ்வதேயில்லை. கணவன் மனைவிக்கு இடையிலான உரையாடல்களானாலும் சரி, குழந்தைக்கும் அப்பாவுக்கும் இடையிலான உரையாடலானாலும் சரி, வேலையிடத்தில் என எங்குமே உரையாடல் அதிகம் இல்லை. பொதுவாகவே, உரையாடல்கள் மிக மிகக் குறைவு. தமிழில் மணி ரத்னம், உரையாடலைக் குறைவாகப் பயன்படுத்துவாரே, அதுபோன்றதல்ல, இது. மனிதர்கள் எவ்வளவு அந்நியப்பட்டுப் போயிருக்கிறார்கள், எவ்வளவு இயந்திரத்தனமாகவும், உணர்வுகள் அற்றவர்களாகவும் இருக்கிறார்கள், என்ற விஷயத்தை அடிக்கோடிடத்தான் இந்தப் படத்தில் உரையாடல்கள் மிகவும் குறைவாக இடம்பெற்றிருக்கின்றன.

தன் அம்மா இறந்ததை நினைத்து சகோதரன் அழுகிறார், என்றாலும், அந்த சோகத்தை தன் சகோதரியுடன் பகிர்ந்துகொள்வதில்லை. மற்றவர்கள், தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்கும்போது, இவர் தனக்குத் தானே சொல்லிக்கொள்வார், “மனிதர்களின் முகத்திற்குப் பதிலாக, தொலைக்காட்சித் திரை இருந்ததென்றால், நாம் மனிதர்களை எவ்வளவு எளிதாகப் புரிந்துகொள்ள முடியும், மனிதர்களின் பல்வேறு பரிமாணங்களை எளிதாகப் பார்க்கமுடியும்” என்று அம்மா ஒருமுறை சொன்னதை நினைவுபடுத்துவார். இதிலிருந்து, அம்மாவுக்கும், மகனுக்குமிடையே இருந்த உணர்வுப்பந்தம், அம்மாவுக்கும் மகளுக்குமிடையே இருந்த உறவில் உணர்வுரீதியிலான தொடர்பு இல்லை என்ற விஷயத்தை, இந்த நவீன சமூகத்திலிருந்து இவர்கள் எப்படி அந்நியமாகியிருக்கிறார்கள் என்ற விஷயத்தை, அந்த ஒரேயொரு உரையாடல் வெளிப்படுத்தும். இப்படிச் சின்ன சின்ன உரையாடல்கள், பாவனைகளில், சைகைகளில் மைக்கேல் ஹெனகே, இந்தப் படம் சொல்லவருகிற, மனித அந்நியப்படுதல் தொடர்பான விவரணைகளைக் காண்பித்துச் செல்கிறார்.

இந்தப் படத்தில் முக்கியமாகக் குறிப்பிடவேண்டிய இரண்டு விஷயங்கள். ஒன்று, மனிதர்களின் இயற்கையான வாழ்வில், நாம் வாழ்ந்துகொண்டிருக்கிற விதம் அல்லது நாம் உருவாகிற விதம், நாம் கனவு காண்கிற விதம் என்பது எவ்வளவு அபத்தமாகவும், எவ்வளவு இன்மையாகவும், ஏதுமில்லாததாகவும் இருக்கிறது என்பதை இந்தப் படம் விவாதிக்கிறது. இது தத்துவத்தின் பிரச்சினை. நாம் எதற்காக வாழ்கிறோம்? ஏன் வாழ்கிறோம்? எங்கிருந்து வந்தோம்? எங்கே போகிறோம்? இப்போது நாமெல்லாம் உண்மையாகவே நமது வாழ்வை வாழ்ந்துகொண்டிருக்கிறோமா? இந்த வாழ்வின் அர்த்தம் என்ன? எங்களுடைய இருத்தல், இன்மையும் என்ன? என்ற பிரச்சினையை படம் பேசுகிறது. முதுமை, விபத்துகள், மனிதர்கள் இறந்துபோதல், அது தொடர்பான துக்கம், வாழ்வில் தங்களுடைய கனவுகள் என்ன? நம்முடைய கனவுகளை அடைய முடியுமா? என்ற தேடல், இதெல்லாம் இன்மையில் முடிவது மாதிரியான விஷயத்தையும், இபபடம் அடிக்கோடிடுகிறது.

ஆனால், அதே சமயத்தில், மிகவும் ஆழ்ந்து, சமகால சமூகம், நுகர் கலாச்சாரம், இயந்திரமயமான வாழ்க்கை, தொழிற்நுட்ப யுகம், பணத் தேடல் இதெல்லாம் எப்படி இயல்பான மனிதனுடைய வாழ்வை அழிக்கிறது, இயல்பான மனிதர்களுக்கிடையான தொடர்பாடலை அழிக்கிறது, எப்படி உணர்வுரீதியிலான பிணைப்பை இல்லாமல் செய்கிறது என்பதை இந்தப்படம் பதிவுசெய்கிறது. மார்க்ஸின் மேற்கோளை இந்த இடத்தில் சுட்டிக்காட்டலாம், மார்க்ஸ், ”முதலாளித்துவ சமூகம், மனித உறவுகளை, ஆண் – பெண் உறவுகளை பணப்பட்டுவாடா செய்யும் உறவுகளாக மாற்றிவிட்டது” என்பார். இதனோடு ஒட்டி, இக்குடும்பம் பணத்தையெல்லாம், கிழித்து, டாய்லட்டிற்குள் திணித்த காட்சியை ஒப்பிட்டுப் பார்க்கலாம். அதேபோல, மார்க்ஸ் சொல்கிற இன்னொரு விஷயம், ”மனிதன் இயற்கையாகவும் இருக்கிறான், இயற்கையின் பகுதியாகவும் இருக்கிறான், இயற்கை மனிதனுக்குள்ளும் இருக்கிறது” என்ற வளர்சிதை மாற்ற பிளவு கோட்பாடு (Metabolic rift). ஆனால், இன்றைக்கு, இயற்கை மனிதனுக்கு எதிராக இருக்கிறது, மனிதன் இயற்கைக்கு எதிராக இருக்கிறான். ஆகவே, பூமியை, மனிதன் வாழ்வதற்குத் தகாத ஒரு இடமாக உருவாக்கியதில், மனிதனுக்குத்தான் முக்கியப் பங்கு இருக்கிறது. இது தொழிற்மய மாசு, அதிக தொழிற்சாலைப் பெருக்கம், போன்றவற்றால் நிகழ்ந்தது. மனிதன் இயற்கையைப் பணமாகப் பார்க்கிறான். இந்த அந்நியமாதல், கார்ல் மார்க்ஸினுடைய சமூகம் தொடர்பான ஆய்வுகளில் மிக முக்கியமானது. ஆகவே, தத்துவ அளவில், இருத்தலும் இன்மையும், (Being and Nothingness) என்ற பிரச்சினையை இப்படம் எடுத்துக்கொண்டிருக்கிறது.

நீங்கள் சொன்னதுபோல, தொழிற்நுட்பங்களால் ஆன இந்த உலகின் ஒரு பகுதியான, தன் வீட்டை, அழிக்க நினைக்கிறார்கள். அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் முதற்கொண்டு தன் வீட்டில் இருக்கிற அழகு சாதனங்கள், தொலைபேசி, மேசை, நாற்காலி, என அனைத்தையும் உடைக்கத் தயாராகின்றனர். சிறு கோடாரியை எடுத்துக்கொண்டு எல்லா பொருட்களையும் தந்தை உடைக்கத் துவங்குகிறார். மனைவி, மகள் முகத்தில் எவ்விதப் பதற்றமும் இல்லை. மனிதர்களையும், இயந்திரமாக உணரவைத்த அந்தப் பொருட்களை உடைப்பது, மிக நீண்ட காட்சிகளாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கும். இதில், ஒரு இடத்தில் தந்தை மீன் தொட்டியை உடைப்பார். அப்போது, மகள், அந்த மீன்களுக்காக கலங்கி அழுவார். மீன்களைக் காப்பாற்றத் துடிப்பார். தந்தையும் ஒரு நிமிடம் அதிர்ச்சியடைவார். மீன் தொட்டியை உடைத்து, அந்த மீன்கள் கொஞ்சம் கொஞ்சமாக இறந்துபோவதைப் பார்க்கும்போதுதான், அவர்கள் மனம் சஞ்சலப்படுகிறது.

அந்தக் காட்சிகளில் பாருங்கள், தன் வீட்டுச் சாதனங்களை அழிப்பதிலோ, உடைப்பதிலோ, அக்குடும்பத்திற்கு எவ்விதமான தயக்கமோ, சஞ்சலமோ கிடையாது. அந்தக் குழந்தையையும் வைத்துக்கொண்டுதான், தந்தை அலமாரிகளையும், மேஜைகளையும் உடைக்கிறார். குழந்தையும் அதை வெறுமனே பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. தான் பயன்படுத்திய பொருட்கள் உடைவது தொடர்பாக அந்தக் குழந்தையிடமும் எவ்வித வருத்தங்களும் இல்லை. இன்னும், இந்த உடைந்த பொருட்களால், குழந்தைக்கு ஏதேனும் காயம்பட்டுவிடுமோ என்று பயந்துதான், காலில் ஷாக்ஸ் அணிந்துகொள் என்று கூட, தந்தை குழந்தையிடம் சொல்கிறார். அதேபோல, இந்த உடைக்கிற செயலை, ஒரு நாள் முழுக்கச் செய்கிறார்கள். மனைவி, துணிகளைக் கிழிப்பது, சமயலறைப் பொருட்களை உடைப்பது போன்ற செயல்களைச் செய்கிறார். கணவன், ஹாலில் உள்ள புத்தக அலமாரி, நாற்காலி, வீட்டுச் சாதனங்கள், தொலைபேசி, என அத்தனையையும் உடைத்துக்கொண்டிருக்கிறார். குழந்தையும், தன்னுடைய உடைமைகளைக் கிழிப்பது, ஓவியங்களைக் கிழிப்பது என்று தன் பங்கிற்கு தன்னாலான காரியங்களைச் செய்துகொண்டிருக்கிறார். ஆக, மூன்று பேருமே, இந்த விஷயங்களை, மிக நிதானமாக, திட்டமிட்டு செய்துகொண்டிருக்கிற, அதே நேரத்தில், மனித வாழ்வின் இயல்பான ’பசி’ என்ற உணர்விற்கு அவர்கள் இடம்கொடுக்கிறார்கள். நிதானமாக காஃபி தயாரிக்கிறார்கள். காஃபி மிஷினை உடைப்பதில்லை. மேசை நிறைய விலையுயர்ந்த உணவுப்பொருட்களை வைத்துக்கொண்டு சாப்பிடுகிறார்கள். மனித வாழ்வின் இயல்பான வேட்கை, பசி, தாகம் போன்றவற்றை அவர்கள் எதிர்கொள்ளத்தான் செய்கிறார்கள். தந்தையும், தாயும், குழந்தையும் வருந்துகிற ஒரே விஷயம், அந்த மீன் தொட்டியை உடைக்கும்போதுதான்.

இவர்கள் உடைப்பது எல்லாமே, நுகர்பொருள் சார்ந்தவை. சடப்பொருட்கள். இவைகள், அந்த மனிதர்களுடன் தொடர்பற்றவை, மனிதர்களுக்கும் இந்தப் பொருட்களுக்கும் அந்நியத்தன்மை இருக்கிறது. ஆனால், அந்த மீனுக்கு இந்த குழந்தை உட்பட, அனைவரும் தினமும் சாப்பாடு போடுகிறார்கள். ”நாம், தாத்தா பாட்டியைப் பார்க்கச் சென்றபோது, மீன்களுக்கு உணவு வழங்கப்படவில்லை” என்று, அங்கு வேலை செய்துகொண்டிருந்த பணிப்பெண்ணை, நீக்க வேண்டுமென, தந்தை சொல்கிறார். அந்த மீன் தொட்டியை, உடைக்கப் போகும்போதுதான், மனைவி, ’வேண்டாம்’ என தடுக்க முயல்கிறார். ஆனால், கணவன் அதற்குள் உடைத்துவிடுகிறார். சிறுகச் சிறுகச் சாகிற அந்த மீன்களுக்காக மகள் அழுகிறார். பொருட்களை உடைப்பதை சாதாரணமாகக் காண்பிக்கிற கேமரா, அந்த மீன் தொட்டி உடைந்து தண்ணீர் பெருகுவதை, தரையில் தண்ணீர் படர்வதை, சிதறிய கண்ணாடித் துண்டுகளுக்கு மத்தியில், மீன்கள் துள்ளத் துள்ள மரணமடைவதை, மெல்ல அவற்றின் உயிர் அடங்குவதை, மிக விஸ்தாரமாகக் காண்பிக்கிறது. இந்த ஒரு தருணத்தில்தான், மீன்கள் கொல்லப்படும்போதுதான், அவர்கள் வருந்துகின்றனர். இந்த உயிரோட்டம் அவர்களுக்கு வாழ்வு முழுவதும் இருந்திருந்தால், இந்த சமூகத்தோடும், தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களோடும் இருந்திருந்தால், அவர்கள் ஒருநாளும் தற்கொலைக்கு முயன்றிருக்க மாட்டார்கள். அதனால்தான், தற்கொலைக்குத் திட்டமிட்ட ஜார்ஜ், தன்னுடைய மகளோடும், மனைவியோடும் தற்கொலை செய்யவிருக்கும் அந்த ஜார்ஜ் வாய்திறந்து சொல்கிறார், “என்னை மன்னித்துவிடுங்கள்”. மீன் தொட்டியை உடைத்த தவறுக்காக, தன் மகளைப் பார்த்துச் சொல்கிறார், “I am Sorry”.

மைக்கேல் ஹெனகே, இந்தப் படம் குறித்து, நேர்காணல்களில் பெரிதாக ஏதும் பேசவில்லை. இந்தப் படம் சொல்லவருகிற கருத்து, செய்தி என எதையும் அவர் வெளிப்படையாகச் சொல்லவில்லை. ஆனால், இந்தப் படம் வழி, ஒரு தார்மீக நெறியை முன்வைக்கிறார். அது, ஒரு உயிரைக் கொல்கிறபோது, அதற்காக நீங்கள் வருந்த வேண்டும், அதனால்தான், தந்தை தன் மகளிடம் மன்னிப்பு கேட்கிறார்.” உயிரைக் கொன்றுவிட்டேன், நீ மிக நேசித்த மீன்களைக் கொன்றுவிட்டேன், என்னை மன்னித்துவிடு மகளே!” என்கிறார். அடுத்தது, வீட்டிலிருக்கிற ஒரே உயிர்ப்புள்ள விஷயம், மகளின் அறையிலிருக்கிற, தொலைக்காட்சி. அந்த தொலைக்காட்சிதான், கடைசி வரைக்கும், இயங்கிக்கொண்டேயிருக்கிறது. கேபிள் இணைப்பு துண்டிக்கப்பட்டு, பிம்பங்கள் தெரியாவிட்டாலும், தொலைக்காட்சி மட்டும் இயங்குகிறது. இறுதிவரை, அந்த வீட்டில் உயிரோடு இருப்பது, அங்கு வாழ்ந்த மனிதர்களின் இறப்பிற்குச் சாட்சியமாக இருப்பது, அந்த தொலைக்காட்சி ஒன்றுதான். ஆகவே, சடப்பொருட்கள், நுகர்பொருட்கள், போன்றவற்றை மனிதன் நிராகரித்தாலும்கூட, உயிர்வாழ்தல், உயிர்ஜீவிகளை அழிப்பது, அதனுடன் தன் உயிர்களை பிணைத்துக்கொள்வது, தான் நேசித்து வளர்த்த உயிர் பிரிகிறது என்று வரும்போது, மனிதன் துக்கப்படுகிறான் என்ற விஷயத்தைத்தான், மைக்கேல் ஹெனகே இந்தப் படத்தில் சொல்லவருகிறார்.

கதாபாத்திர வடிவமைப்பில் பார்த்தால், தந்தை (ஜார்ஜ்) கதாபாத்திரம் மிகவும் இறுக்கமானவராகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறார். ஜார்ஜ் தன் பணியில் பதவி உயர்வு பெறுகிறார். முன்பு அந்தப் பொறுப்பில் இருந்தவர், மேசையில் வைத்திருந்த பொருட்களையெல்லாம் ஜார்ஜ், குப்பை போல ஒரு இடத்தில் குவித்து வைத்திருப்பார். வயதானவர் வந்து, நாய்குட்டியின் புகைப்படத்தை மட்டும் எடுத்துச் செல்வார். தான் வேலை பார்க்கிற இடத்தில், தனக்குப் பிரியமான பொருட்களையெல்லாம் மேசைமீது வைத்திருப்போம். அந்தப் பொருட்களுக்கும், நமக்குமே ஒருவித பிணைப்பு இருக்கும். ஆனால், அதைக்கூட புரிந்துகொள்ள முடியாத, மனித உணர்வுகளுக்கு இடமளிக்காதவன்தான் ஜார்ஜ் என்பதைப் புரிந்துகொள்ள இந்த ஒரு காட்சி போதும்.  அதேபோல, இன்னொரு காட்சியில், குழந்தையின் மனநிலை வெளிப்படும் தருணம். ஐந்து வயதைக் கடந்த குழந்தை, பள்ளியில் தனக்குக் கண் தெரியவில்லை என்று சொல்லி மாட்டிக்கொள்கிறது. குழந்தையும் அன்பிற்காக ஏங்குகிறது. தனக்குக் கண் தெரியவில்லை என்று சொன்னாலாவது, யாரேனும் தன் மீது பாசம் காட்டுவார்கள், தன்னைக் கவனிப்பார்கள் என்று நினைக்கிறது. அந்தக் குழந்தை வரைகிற ஓவியங்கள் எல்லாமே மன அழுத்தம் தரக்கூடியதாக இருக்கும். இந்த ஒரு கதாபாத்திரம் மட்டுமல்லாமல், ஏறக்குறைய மற்ற கதாபாத்திரங்களும் இதே மனநிலையில்தான் இருக்கின்றன. குழந்தைகள் பிறக்கும்போதே, இந்த நுகர்பொருள் கலாச்சாரத்திற்குள் சிக்கிக்கொள்கிறார்கள். அவர்கள் வாழ்க்கை எவ்வித பிடிப்புமற்று ஆனதில், இயந்திரமயமான உலகம், மனிதத்தன்மையற்ற, இரக்கமற்ற உலகம் பெரும்பங்கு வகிக்கிறது.

இந்தக் குழந்தை, பள்ளியில் கண் தெரியாதது போல நடிக்கிற காட்சியைக் குறிப்பிட்டீர்கள். ஏன் அந்தக் குழந்தை அப்படி நடந்துகொள்கிறது என்று உரையாடலின் வழி, இந்தப் படத்தில் நீங்கள் கண்டுபிடிக்கவே முடியாது. இதற்கான காரணம் என ஏதும் இந்தப் படத்தில் வெளிப்படையாகச் சொல்லவில்லை. ஆனால், அம்மா தன் குழந்தையிடம், ”கண் தெரியவில்லை என்று நடிக்கிறாயா? உண்மையைச் சொல், அடிக்கமாட்டேன்” என்று சத்தியம் செய்கிறார். குழந்தையும் இதை நம்பி, உண்மையைச் சொல்கிறது. ”ஆம், கண் தெரியாததுபோல நடந்துகொண்டேன்” என்கிறது. அடிக்கமாட்டேன் என்று சத்தியம் செய்த அம்மா, குழந்தை உண்மையைச் சொன்னதும், அடிக்கிறார். வெள்ளந்தியாக அந்தக் குழந்தை உண்மையைச் சொல்கிறது, பதிலுக்கு, அம்மாவோ, தன் குழந்தையைத் தண்டிக்கிறார்.

இது போன்ற சம்பவங்கள்தான், குழந்தை அந்நியப்படுதலுக்கான காரணம்,. அப்பாவியாக உண்மையைச் சொன்னதற்காக, குழந்தை தண்டிக்கப்படுகிறார். இந்தக் குழந்தை, தூங்கிக்கொண்டிருக்கிறது, அம்மா, மேசையைச் சுத்தப்படுத்துவதற்காக வரும்போது, குழந்தையின் மேசையில் இருக்கிற விஷயங்களைப் பார்க்கிறார், புத்தகம், ஓவியங்கள், வீட்டுப்பாடங்கள் என எல்லாவற்றையும் பார்க்கும்போது, செய்தித்தாளில், கண் தெரியாத ஒரு குழந்தைக்கும், அவரது தாய்க்கும் இடையேயிருக்கிற உறவு பற்றிய செய்தி கண்ணில் படுகிறது. ஒரு ஊடகத்தில் வருகிற செய்தியை அந்தக் குழந்தை பார்த்திருக்கிறாள். அதை எடுத்து, தன் மேசையில் பத்திரப்படுத்தியிருக்கிறாள். இதற்கு அடுத்த காட்சியில், அம்மா, தன் குழந்தையிடம் ”நானும், அப்பாவும் உன் மீது அதிக அன்பு, பாசம் வைத்திருக்கிறோம், அதேபோல, உன்னுடைய மாமா, உன்னை மிகவும் நேசிக்கிறார், அது உனக்குத் தெரியுமா?” என்று கேட்பார். ”நாங்கள் உன் மீது அன்பு வைத்திருக்கிறோம்” என்று அம்மா சொல்கிறார். படம் முழுக்கவே முத்தமிடுவதையோ, கட்டியணைப்பதையோ, தாயோ தகப்பனோ, அந்தக் குழந்தையிடம் வெளிப்படுவதில்லை. அந்தளவிற்கு அவரது தாயும், தந்தையும் இயந்திரமாக இருக்கின்றனர். இருவருக்குமான வேலை. தந்தை ஒரு பொறியியலாளர். அம்மா, ஆப்டிக்கலில் வேலை செய்கிறார். இவர்கள் இருவரின் அன்றாட அலுவல்கள் என்னென்னவாக இருக்கின்றன என்பதுதான், படத்தின் பெரும்பகுதி. இந்தப் படம், முதலில் துவங்கும்போது, கார் கழுவப்படுகிற காட்சி, ஏறக்குறை ஆறு நிமிட கால அளவு காண்பிக்கப்படும். இந்த இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாமல், கார் சுத்தமாவதை மட்டும் பார்த்துக்கொண்டிருப்பார்கள். இந்த கார் வாஷிங் காட்சி மூன்று இடங்களில் திரும்பத் திரும்ப வரும்.
அதேபோல, அன்றாட வாழ்வில் நாம் செய்கிற செயல்கள், இதுபோன்ற கார் வாஷிங், பல் துலக்குதல், காலையில் காஃபி குடித்தல், வேலைக்குக் கிளம்புதல், ஷாப்பிங் செய்தல், திரும்பி வருதல், தூங்குதல், இவையே திரும்பத் திரும்ப வருகின்றன. இந்தப் படத்தில் மூன்று வருடமும், 1987,1988, 1989 இக்குடும்பத்தின் வாழ்க்கை எப்படியிருக்கிறது என்று காண்பிக்கப்படுகிறது.

இந்த மூன்று வருடங்களும், மீண்டும் மீண்டும் ஒரேமாதிரி நிகழ்கின்றன. இந்த இயந்திரத்தனம், படத்தின் கதைசொல்லலுக்கு மிக முக்கியமான அம்சம். இந்த இயந்திரத்தன்மைதான், குழந்தைக்கும், தாயுக்கும் இடையிலான அந்தத் தொடர்பாடலை இல்லாமல் செய்கிறது. தகப்பனுக்கும் குழந்தைக்கும் இடையிலான உரையாடலை இல்லாமல் செய்கிறது. ஒரு குழந்தை தான் ஊனமுற்றவராக, கண் தெரியாதவளாக நடிப்பதன்மூலம், தாயினுடைய அன்பையும், அணுக்கத்தையும், கட்டித்தழுவதலையும், பெற முடியும் என்று நினைக்கவைக்கிறது. அன்பு கிடைக்காததால்தான் குழந்தை இவ்வாறு நடந்துகொள்கிறது, என்பதை தாய் உணர்கிறாள்.

படத்தில் மைக்கேல் ஹெனகே, மனித உணர்வு, உறவு, மனிதனுடைய நடத்தையின் மூலம் மனித உறவுகள், மனநிலை எவ்வாறு மாற்றமடையும் என்று சொல்லிக்கொண்டு போகிறாரேயொழிய, உரையாடல்களின் மூலம், அவர் இந்தப் படத்தை நகர்த்துவதே கிடையாது. மருத்துவமனையில் அமர்ந்திருக்கிற காட்சி, வேலைத்தடங்கள், வெளியில் கார் செல்வது, மனிதர்கள் கூடுகிற இடங்களைத் தவிர, மற்ற எல்லா இடங்களிலும், மிக அண்மைக் காட்சியில்(க்ளோச் அப்) சம்பவங்கள் பதிவுசெய்யப்பட்டிருக்கும். அன்றாட வாழ்க்கை தொடர்பான காட்சிகள், அண்மைக் காட்சியில் இருக்கும். உதாரணமாகப் பாருங்கள், இயந்திரமயமான, வாழ்க்கை தங்களை எப்படிச் சூழ்ந்திருக்கிறது? என்பதை, தன்னைச் சுற்றியிருக்கிற ஒலி, சப்தங்களை வைத்தே, வெளிப்படுத்திக்கொண்டே வருவார்.


உதாரணத்திற்கு, சூப்பர் மார்க்கெட்டில், பொருட்கள் வாங்கும்போது, ஸ்கேன் செய்துவிட்டு, பில் போடுதல், பணம் வாங்குதல், மீதிச் சில்லறைகளைக் கொடுத்தல், கணினியில் தட்டச்சு செய்தல் இந்த ஒலிகள் மீண்டும் மீண்டும் பதிவாகும். அந்த ஒலிகளே காட்சியில் பிரதானமாக இடம்பெறும். இதெல்லாம், இயந்திரமயமான செயல்கள். இந்த ஒலிகள் இயந்திரமயமான ஒலிகள் என்பதை, கதாநாயகன் கதாநாயகி மட்டுமல்லாமல், சூப்பர் மார்கெட்டில் வேலை செய்கிற பெண்ணும் உணர்வார். ஒவ்வொரு மனிதனுமே, அன்றாட வாழ்க்கையில், இந்த இயந்திரச் சூழலுக்குள், சப்தங்களுக்குள் ஆட்படுகிறார்கள், எங்களைச் சுற்றிலும் அந்த இயந்திரத்தின் சப்தங்கள் நிரம்பியிருக்கின்றன என்பதை மைக்கேல் ஹெனகே வெளிப்படுத்துகிறார். இந்தப் படத்தினுடைய கதை சொல்லலே இதுதான்.

அக்குடும்பத்திடம் பெரிய சாப்பாட்டு மேசை இருக்கிறது. அதில் நிறைய உணவு வகைகள் உள்ளன. உணவிற்கு ஒரு பிரச்சனையும் இல்லை. அவர்கள் வீட்டில் இல்லாத வசதிகளே இல்லை. வங்கி பண இருப்பு எல்லாம் அளவுக்கதிகமாகவே இருக்கிறது. ஆனால், இத்தனையும் இருந்தும், ஏன் தற்கொலை செய்துகொள்ளும் முடிவெடுக்கிறார்கள்? என்பது யோசிக்க வேண்டிய விஷயம். அவர்கள் சாலையில் செல்லும்போது, விபத்துக்குள்ளான காட்சியைப் பார்க்கிறார்கள். உயிரிழந்த இரண்டு உடல்கள் மூடிக்கட்டப்படுகின்றன. தன் தாய் இறந்தபோதுகூட அதிகமாக உணர்ச்சிவசப்படாத அன்னா, இறந்த உடல்களை சாலை விபத்தில் பார்த்தபிறகு, இரண்டாவது கார் வாஸில் ஒருவரையொருவர் பார்த்து, கைகளைத் தொட்டு தடவி, அன்னா விம்மி விம்மி அழத்துவங்கிவிடுகிறார். அன்னா, உணர்ச்சிவயப்படுவதும், துயரப்படுவதைக் காண்பிப்பதும், அந்தக் கைகளின் தொடுதலில்தான் உணர்த்தப்படுகிறது. தன் அம்மாவின் மரணம், விபத்து இதுபோன்ற நிகழ்வுகளால் அன்னா அதிகம் பாதிக்கப்படுகிறாள். அம்மாவின் மரணம், மனதில் சஞ்சல உணர்வை, துக்கத்தைக் கொடுக்கிறது. எனினும், அந்த (அம்மாவின்) இறப்பு அவளை அதிகம் காயப்படுத்தவில்லை. ஏனெனில், இயந்திரத்தனமான உலகிற்குள் அவர்கள் இருக்கிறார்கள். ஆனால், சாலை விபத்தில் பார்க்கிற மரணங்கள், அவர்களை முற்றிலுமாக உலுக்கிவிடுகிறது.
தத்துவ நோக்கில் பார்க்கும்போது, இருத்தல் மற்றும் இன்மைக்கிடையிலான விசாரணை. இவ்வளவு பணம், செல்வம், சொத்து இருந்தும், இறந்தபிறகு, எதை எடுத்துச்செல்லப் போகிறோம்? அவர்கள் கனவே, ஆஸ்திரேலியா செல்ல வேண்டும் என்பதாக இருக்கிறது. படத்தின் தலைப்பு செவன்த் காண்டினெண்ட். உலகில், மனிதன் வாழத்தகுந்த எத்தனை கண்டங்கள் உண்மையாகவே இருக்கின்றன. ஐந்துதான். ஆஸ்திரேலியாவுக்குச் செல்கிற அவர்களது கனவு, நிறைவேறாத ஒன்றில்லை. பணம் படைத்தவர்களுக்கு, இதெல்லாம் பெரிய விஷயம் இல்லை. வங்கியிலிருந்து பணத்தை எடுக்கும்போது, ’நாங்கள் ஆஸ்திரேலியா செல்கிறோம்’, என்றுதான் சொல்கிறார்கள். ஆனால், அவர்கள் ஆஸ்திரேலியா செல்வதில்லை. தற்கொலை செய்துகொள்கிறார்கள். காரணம் என்னவென்றால், படத்தின் தலைப்பு சொல்கிற, ஏழாவது கண்டம் என்பது கற்பனை நிலம்.

படத்தின் ஆரம்பத்தில் கார் வாஸிங் காட்சியின்போது தெரிகிற ஆஸ்திரேலியாவின் போஸ்டர்தான், படத்தின் மூன்று பகுதிகளிலும் வருகிறது. கடைசிப் பகுதியில் மட்டும்தான், அலை அசைவதுபோல இருக்கும். மற்ற இரண்டு போஸ்டர்களிலும், எவ்வித சலனங்களுமற்ற பிம்பமாக மட்டுமே தோன்றும்.

செவன்த் காண்டினெண்ட், என்பது கற்பனையான (utopian) நிலம். இந்த கற்பனை நிலம், இயற்கையோடு இயைந்த வாழ்வு, மிக அமைதியான சூழல், காற்றும் தண்ணீரும் கடலும் மலையும் சேர்ந்த மனித சஞ்சாரமேயற்ற இடம், மனிதனும் இயற்கையும் மட்டுமே சஞ்சரிக்கிற ஒரு இடம். அப்படியான ஒரு இடமாக ஆஸ்திரேலியாவும் இல்லை. அப்படியான ஒரு இடம் இந்த உலகிலேயே இல்லை என்பதுதான் நிதர்சனம்.

உண்மையிலேயே, இயந்திரத்தனமான நகர வாழ்விலிருந்து தப்பித்து, மனிதர்களாக நம்மை நிலைநிறுத்திக்கொள்வதற்கு நாம் தேடிப்போகிற இடம், இயற்கையும் இயற்கை சார்ந்த நிலங்களும்தான். ஆறு, குளம், ஏரி, மலை, வயல்வெளிகள், கிராமப்புறங்கள் இங்கெல்லாம் செல்லும்போதுதான், நம்மை மீளவும் இயற்கையோடான உயிர்கள் என்ற விஷயத்தைக் கண்டடைகிறோம். இதுதான் மனித இயல்பு. அப்படித்தான், செவன்த் காண்டினெண்ட் என்ற பிம்பம் மீண்டும் மீண்டும் தோன்றுகிறது. அந்த செவன்த் காண்டினெண்டை அடைய முடியுமானால், உயிர்களை நேசிக்கிற இயற்கை சூழ் வாழ்வை அடையமுடியுமானால், அங்கு அவர்கள் தற்கொலை செய்துகொள்ளாமல், மன அழுத்தம் இல்லாமல் வாழமுடியும் என்பதை, பிம்பத்தின் மூலமாக, இயக்குனர் எடுத்துரைக்கிறார்.

இந்தப் படத்தில் கதை இருக்கிறது என்று சொல்லவே முடியாது. இரண்டு மணி நேர திரைப்படத்தில் பாதி நேரம் அவர்களது அன்றாட வாழ்க்கைதான் காண்பிக்கப்படுகிறது. அவர்கள் காலையில் எழுதல், குளியல் அறைக்குச் செல்லுதல், வேலைக்குத் தயாராகுதல், காரில் செல்லுதல், சூப்பர் மார்க்கெட்டில் பொருட்களை வாங்குதல், குழந்தை பள்ளிக்குச் செல்லுதல் இதுபோன்ற விஷயங்களையே காண்பித்துக்கொண்டிருக்கிறார்கள். திரைப்படத்தின் அடுத்த பாதி, இவர்கள் தற்கொலை செய்வதற்கான முன் தயாரிப்புகளும், காரை விற்பது, கோடாரிகளை வாங்குவது, தங்களுடைய நுகர்வுப்பொருட்களை அழிப்பதுமான பகுதி நிறைந்திருக்கிறது. இதில் ஒரு கதையோ, திரைக்கதை திருப்பங்களோ என எதுவுமே கிடையாது. மிகச் சாதாரணமான அன்றாட வாழ்க்கையை இயக்குனர் பதிவுசெய்திருக்கிறார்.

கதைக்கான ஆதாரம் ஒரு பத்திரிக்கைச் செய்தி. பத்திரிக்கையில் இதுபோல தாய் தகப்பனுக்குக் கடிதம் எழுதிவிட்டு, ஒரு தம்பதி, தங்கள் குழந்தையுடன், தற்கொலை செய்துகொள்கிறது. இத்தனைக்கும் அவர்கள் பொருளாதார ரீதியில் தன்னிறைவான குடும்பம். ஏன் அந்தக் குடும்பம் தற்கொலை செய்துகொண்டது? என்ற விசாரணையின் அடிப்படையில்தான் மைக்கேல் ஹெனகே, இப்படத்தை எடுக்கிறார். தற்கொலைக்கான காரணம் என்ன என்பதை விவாதங்களின் மூலமோ, உ ரையாடலின் மூலமோ, அல்லது கருத்துச் சொல்லுதல் என்பதன் மூலமோ எடுத்துரைக்க முயற்சிக்கவில்லை. முழுக்க முழுக்க அவர்கள் வாழ்க்கை எப்படியிருக்கிறது? அவர்களைச் சுற்றியிருக்கிற வாழ்க்கை எப்படியிருக்கிறது? மனித உறவுகள் எப்படியிருக்கின்றன? என்பதை நவீன தொழிற்புரட்சியுக சமூகத்தின் மத்தியில் காட்சிப்படுத்தியிருக்கிறார். கதை சொல்லல் என்றளவில், இயந்திரமயம், தொழிற்புரட்சியுக காலத்தில், மனித வாழ்க்கையின் அந்நியமாதலை அதியற்புதமாகச் சித்தரித்திருக்கிறார்.

மூன்று பரிமாணங்களில், அடுத்தடுத்த வருடங்களில் அந்தக் குடும்பத்தின் ஒரு நாளைய வாழ்வு எப்படியிருக்கிறது? என்பதுதான் மொத்தப்படமுமே! மனித சமூகம் ’நாகரிகம்’ என்ற பெயரில் நிறைய மாற்றங்களை உள்வாங்கி, நிறைய சிக்கல்களுக்குள் சென்றிருக்கிறது. இதை வளர்ச்சி எனும் பாதையிலும் பார்க்கமுடியாது. தொழிற்புரட்சி யுகத்தில் இயற்கையை அழிக்கிறோமே தவிர, இயற்கைக்கும் நமக்கும் இடையில் பெரிய இணக்கமும் இல்லை.

முதல் காட்சியில் இந்த சமூகம் பற்றியோ, இந்தச் சூழல் பற்றியோ எந்தவிதமான விமர்சன உணர்வும் பார்வையாளர்களுக்குள் ஏற்படாதவாறுதான் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். அன்றாட வாழ்வை வரிசையாகக் காண்பிக்கிறார்கள். இந்த சமூகம், மனித உறவுகள் தொடர்பான விமர்சனம் என்பது பார்வையாளர்கள் ஓரளவிற்கு உணரக்கூடியது. அடுத்து, அவர்களது வீட்டிற்கு வருகிறேன் என்று சொன்ன விருந்தினர்கள் வரவில்லை. ஏன் அவர்கள் வரவில்லை என்பதற்கான உரையாடல்கள் நிகழ்கிறது. “ஏன் எங்கள் வீட்டிற்கு வர விருப்பமில்லையா?” என்று அவர்களைக் கேட்கிறபோது, ”உண்மையாகவே எங்களுக்கு உடல்நிலை சரியில்லை” என்பதுபோன்ற காரணங்களைச் சொல்கிறார்கள். ஆனால், பாருங்கள், இந்தக் குடும்பமும் யார் வீட்டிற்கும் செல்வதில்லை. ஜார்ஜ், தன் தாய் தந்தையைக் கூட, அடிக்கடி, பார்க்கச் செல்வதில்லை. கடைசியில், தாங்கள் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ளப்போகிறோம் என்பதைத் தெரிவிப்பதற்காகத்தான், இறுதியில் அவர் கடிதம் எழுதுகிறாரேயொழிய, அவருடைய மனைவிக்குத்தான் (அன்னா) தன் மாமனாருக்கும், அத்தைக்கும் தங்கள் சார்பாக கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறார். அதையும் எழுதுகிறபோது, தங்களைப் பற்றியும், தங்களுடைய வேலைகள் பற்றியும், வேலையில் இருக்கிற கஷ்டங்கள் பற்றியும், அடுத்த பதவி உயர்வு, சம்பள உயர்வு பற்றித் தெரிவிக்கிறாரேயொழிய, அந்தப் பெற்றோர்கள் நலன் தொடர்பான எந்தவிதமான உரையாடல்களும் அந்தக் கடிதத்தில் நிகழ்வதேயில்லை.
சாலையில் சந்திக்கிற அந்த விபத்து, விபத்தின் மரணம், அம்மா தொடர்பான மரணத்திற்கு உணர்ச்சிவசப்படுவது, பெண்ணின் தம்பி அழுவது, கணவன் தன் வேலையை விடுவது, குழந்தைக்கு அன்பில்லாத விஷயம், இவர்களோடு தொடர்பில்லாத புறவுலகு எல்லாமே, படத்தின் மத்தியப் பகுதியில் 1988-ல் நடக்கிறது. அதற்குப் பிறகு 1989-ல் அவர்கள் இறப்பை எப்படித் திட்டமிடுகிறார்கள் என்று காண்பிக்கிறார்கள். என்னவென்றால், வருடங்கள் மூன்றுதான், ஆனால், அந்தக் கார் கழுவுதல், அவர்களின் அன்றாட வாழ்க்கை, அவர்களின் தொடர்பாடல்கள், மனிதர்களுடைய உறவுகளில் எந்த மாற்றங்களும் நிகழ்வதில்லை. வருடங்களில் மட்டுமே மாற்றங்கள், வாழ்க்கை மீண்டும் மீண்டும், இருத்தல், இன்மை, நிகழ்வில் நாம் என்னவாகயிருக்கிறோம்? போன்றவற்றில் பெரிய மாற்றங்கள் இல்லை.

ஐரோப்பிய சமூகத்தில், தொழில்வளர்ச்சி, சுரண்டல், தனி மனித உரிமைகள் தொடர்பான போராட்டங்கள், நிகழ்கின்றன. இன்றைக்கு செல்வம் ஒரு பக்கம் அதிகமாகயிருக்கிறது என்று சொல்கிறோம். அது, அமெரிக்காவில் இருப்பதுபோல, தொண்ணூறு சதவீதத்திற்கும் அதிகமானோர் செல்வமில்லாமல், வறுமையில் இருக்கின்றனர். ஒரு சதவீதம் மட்டும் செல்வசெழிப்போடு, அதிக பணக்காரர்களாக இருக்கிறார்கள். செல்வ வளர்ச்சி இருக்கிறது, அதே நேரத்தில் சுரண்டலும், சூழலியல் சீர்கேடும், வறுமையும் அதிகமாயிருக்கிறது. ஆகவே, இங்கு வளர்ச்சி என்பது என்ன? இது தொடர்பான கேள்விகளைத்தான் இந்தப் படம் எழுப்புகிறது.

அதேபோல, மன அழுத்தம் ஏன் வருகிறது? என்பதையும் விவாதப்பொருளாக்குகிறது. மனித உறவுகள் இன்னும் இன்னும் அந்நியமாகிக்கொண்டு போகிறது என்பதையும் சொல்கிறது. அமெரிக்க, ஐரோப்பிய சமூகம் தொடர்பாக, இந்த மனநல, உளவியல் பிரச்சினைகள், அந்நியமாதல் தொடர்பான மனச்சிக்கல்கள் அதிகமாகிக்கொண்டே போகின்றன. மனிதர்கள் யாருமே இயல்பானவர்களாக இல்லை. ஒன்று, வியாதியினால் பாதிக்கப்பட்டிருக்கிறோம். இந்தப் படத்தில் பார்த்தீர்களேயானால், மருத்துவ பரிசோதனையில், நோயாளிகள் பரிசோதிக்கப்படுகிற காட்சி அடிக்கடி இடம்பெறும். முதுமை, நோய், மனிதனுடைய உடம்பு சீரழிதல் தொடர்பான விஷயங்கள் மீண்டும் மீண்டும் வரும். இந்த அமெரிக்க சமூகத்தில், அந்நியமாதல் அதிகமாகியிருக்கிறது. எது அதிகமான வளர்ச்சியடைந்த சமூகம் என்றெல்லாம் சுட்டிக்காட்டுகிறோமோ, அங்கெல்லாம் அந்நியமாதல் தன்மையும், உளவியல் பாதிப்புகளும், மன அழுத்தங்களும் அதிகமாக உள்ளன. இதைத்தான் இந்தப் படம் கதை சொல்லல் என்றளவில் எடுத்துக்கொள்கிறது. தத்துவ நோக்கில் இருத்தல் - இன்மை, சமகாலத்தில் அர்த்தமற்றதாக இருக்கிறது என்பதைச் சொல்கிறது. முக்கியமாக, இன்னொரு புறம், மனிதர்கள் உயிர் ஜீவிகளுக்கேயுரிய, தழுவுதல், முத்தமிடுதல், உணர்வுகளைப் பகிர்ந்துகொள்தல், தொடர்பாடு கொள்தல், அன்பாகயிருத்தல் போன்றவற்றை இழந்து, தனித்தனி தீவுகளாக ஆகிக்கொண்டிருக்கிறார்கள், அந்நியமாகிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை இந்தப் படம் சொல்கிறது.


படத்தையொட்டி, படத்திற்கு வெளியே ஒரு கேள்வி. ’தற்கொலை’ சார்ந்த பார்வை என்னவாக இருக்கிறது. ஒரு சிலர் தற்கொலை என்பது விடுதலை, சுதந்திரம் என்று சொல்கிறார்கள். இந்த உலகத்தை எதிர்கொள்ள முடியாதவர்கள், தனித்து விடப்பட்டவர்கள், ஆதரவற்றவர்கள் எடுக்கிற முடிவு, அறிவற்றவர்களின் செயல் ‘தற்கொலை’ என்றும் சொல்கிறார்கள். இந்த உலகம் வாழ்வதற்குத் தகுதியானதில்லை எனும் பார்வையும் அவர்களுக்கு இருக்கிறது. உங்களைப் பொறுத்தவரை ‘தற்கொலை’ செய்துகொள்தல் என்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்.

இதை இரண்டு வகையாக அணுக வேண்டும். ஒன்று, திணிக்கப்படுகிற தற்கொலை. இன்னொன்று, தத்துவத் தேர்வு எனும் அளவில் ’தற்கொலையைப்’ பாவிப்பது. வறுமை, சுரண்டல், அதிகாரம் போன்றவையெல்லாம் சுமத்தப்படுகிற காரணங்கள். இந்தக் காரணத்திற்காக தற்கொலை செய்துகொள்வது அதிகமாகியிருக்கிறது. அலுவலகத்தில் பெண்கள், பள்ளிக்கூடத்தில் துன்புறுத்தப்படுகிற குழந்தைகள், நல்ல மதிப்பெண் பெறவில்லை என்று தற்கொலை செய்துகொள்கிற குழந்தைகள் அல்லது பொருளாதார காரணங்களுக்காக தற்கொலை செய்வதெல்லாம் சுமத்தப்பட்ட காரணங்கள். அதேபோல, சித்திரவதை தாங்கமுடியாமல், அரசுகளுடைய வற்புறுத்தலால், காவல்துறை, இராணுவம் போன்ற துன்புறுத்தல்களிலிருந்து தப்பிக்க தற்கொலை செய்துகொள்வது இன்னொரு காரணம். தங்கள் மீது சுமத்தப்படுகிற பல்வேறு விதமான காரணங்கள், வறுமையானாலும் சரி, உடல் ரீதியிலான சித்திரவதையானாலும் சரி, உயிர் வாழ்வதற்கான வழிகள் அடைபடும்போதும் சரி, தோல்வி பற்றி பயத்திலும் சரி, இதெல்லாம் சுமத்தப்படுகிறது. இது ஒன்று.
இந்தப் படத்தில் நிகழ்கிற தற்கொலை என்பது கட்டமைக்கப்பட்ட வன்முறை (structural violence). தனி மனிதர்கள் யாரும் இவர்கள் மீது வன்முறையைச் சுமத்துவதில்லை. எந்த நிர்வாக அமைப்பும் இவர்கள் மீது வன்முறையைப் பிரயோகிக்கவில்லை. இது கட்டமைக்கப்பட்ட வன்முறை. அம்மா, குழந்தையிடம், “நீ உண்மையைச் சொல், உண்மையைச் சொன்னால், அடிக்கமாட்டேன்” என்று கேட்கையில், குழந்தை வெகுளியாகவும், அப்பாவியாகவும், உண்மையைச் சொல்கிறது. ஆனால், அதற்காக அந்த அம்மா குழந்தையைத் தண்டிக்கிறார். அடுத்து, பள்ளியில், குழந்தை தன் உடலில் அரிப்பு இருப்பதை உணர்கிறது. பதற்றத்தில் வகுப்பைக் கவனிக்க முடியவில்லை. அந்த நேரத்தில், குழந்தை, ஆசிரியையிடம் தன் பிரச்சினையைச் சொல்கிறது. ஆசிரியை, “உனக்குக் காயம் இருக்கிறதா என்று பார்ப்போம்”, என்று பார்க்கிறார். பின்னர், ”உனக்குக் காயம் ஏதும் ஏற்படவில்லை, எனவே, உனக்கு அரிப்பு இருக்காது, நீ இப்படிச் செய்யக்கூடாது” என்று கண்டிக்கிறார். ஏற்கனவே, தனக்குக் கண் தெரியவில்லை என்று குழந்தை பொய்சொன்னதால், இதுவும் பொய்யாகத்தான் இருக்கும் என்று ஆசிரியை முடிவெடுக்கிறார். குழந்தை ஒரு இயல்பான காரியத்தை, தான் மிகவும் அசெளகரியமான சூழ்நிலையை உணரும்போது, அதற்கான ஆழமான காரணத்தை, கண்டுபிடிப்பது பள்ளியின் முறையே, அது அங்கு நடக்கவில்லை.

படத்தில் ஒரு காட்சி,  குழந்தைகள் எல்லாம் தாண்டு குதிரை போல, குறுக்கே ஒரு கட்டையை வைத்து, அதில் தாண்டி, அந்தப் பக்கம் வருவார்கள். வரிசையில், பல்வேறுபட்ட குழந்தைகள் நிற்பார்கள். வளர்ந்த குழந்தைகள், வளர்ச்சி குறைவான குழந்தைகள், கால் நீளமான குழந்தைகள், என பல்வேறுபட்ட குழந்தைகள் இருப்பார்கள். ஆனால், அவர்கள் தாண்ட வேண்டிய உயர அளவு ஒன்றுபோலவே இருக்கும். குழந்தைகளுக்கு ஏற்ப, தாண்டும் உயரத்தில் மாற்றங்கள் இருக்காது. சில குழந்தைகள் எளிதாகத் தாண்டிச்செல்லும், சில குழந்தைகள் தடுமாறும், இன்னும் சில குழந்தைகள் விழப்போகும். அப்போது, ஆசிரியர்கள் தடுக்கி விழ நேர்கிற குழந்தைகளை இழுத்து அந்தப் பக்கம் நகர்த்துவார்கள். இதைக் கல்வி முறைகளிலும் ஒப்பிட்டுப் பார்க்கமுடியும்.

இங்கு, பள்ளிகள் எப்படி மாறுதலே இல்லாமல், சலிப்பான முறையில் இருக்கின்றன, எப்படி இயந்திரத்தனமாக நடந்துகொள்கின்றன, என்பதைக் காட்டுகிறது. பள்ளிகள், ஒழுக்கம், நியதி என்ற பெயரில் குழந்தைகளின் மீது இயந்திர மதிப்பீடுகளைத் திணிக்கிறது. ஒரு உதாரணத்தைச் சொல்கிறேன், ஜப்பானில், பள்ளி வாயிற்கதவுகளில், மனிதர்கள் அதை இயக்காமல், கணினியில் இயக்குவது போல அமைத்திருந்தார்கள். குறிப்பிட்ட நேரத்திற்குள் குழந்தைகள், கேட்டைத் தாண்டி உள்ளே சென்றுவிட்டால், அவர்கள் பள்ளியில் படிக்க அனுமதிக்கப்படுவார்கள். அதுவே, தாமதமாகிவிட்டால், கதவு தாமாகவே அடைக்கப்பட்டுவிடும். பின்னர், குழந்தை அன்றைக்கு வகுப்பிற்குச் செல்லமுடியாது, அடுத்த நாள், கதவு மூடப்படுவதற்கு முன் வந்துவிடவேண்டும். இதுவொரு விதிமுறை. குழந்தை ஒன்று கடைசி நேரத்தில் வந்து, ஆட்கள் யாரும் இல்லை என்பதால், குழந்தையும் கதவைத் தாண்டிச் செல்கையில், அது சரியாக தானியங்கி கதவு மூடப்படுவதற்கான நேரம் என்பதால், அந்தக் குழந்தை சரியாக கதவுகளில் சிக்கி இறந்துபோகிறது. இதற்குப் பிறகுதான், பள்ளி நிர்வாகத்தில் மாற்றங்கள் வருகின்றன. தானியங்கி கதவானாலும், அங்கு ஒரு ஆசிரியர் நிற்க வேண்டும். குழந்தைகள் வருகிறார்களா? என்பதைப் பார்த்துவிட்டுத்தான், கதவுகளை மூட வேண்டும். ஒரு ஆள், அங்கு எப்போதும் நின்றுகொண்டிருப்பார். இந்த மாற்றம் வருவதற்கு, ஒரு உயிரை விலை கொடுத்திருக்கிறோம்.

பள்ளிகள் என்ன செய்கின்றன? குழந்தைகளிடம் கட்டுப்பாடுகளைக் கொண்டுவருவது, குழந்தைகளை சிறு வயதிலிருந்தே கட்டுப்பாட்டிற்குள் திணிப்பது, அவர்களை ஒரு சரியான, ஒழுக்கத்திற்குள் வளர்ப்பது என்ற பெயரில், இயல்பான அவர்களின் குறும்புத்தனம், அவர்களின் செளகரியம், விடுதலை போன்றவற்றை இந்தக் கல்வி அமைப்புகள், பள்ளிக்கூடங்கள் பறிக்கின்றன. சமீபத்தில் ஒரு செய்தி படித்தேன். அதில், சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கிற ஹாங்காங்கில் புதிய திட்டம் ஒன்று கொண்டுவந்திருக்கிறார்கள். அதாவது பாதுகாப்பு திட்டம். அதனடிப்படையில், கல்லூரியில் மாணவர்கள் எப்படியிருக்க வேண்டும்? அதேபோல, துவக்கப் பள்ளிகளில் மாணவர்கள் எப்படியிருக்க வேண்டும்? பால்வாடிகளில் குழந்தைகள் எப்படியிருக்க வேண்டும்? என்பது தொடர்பான, வழிகாட்டுதல்களைக் கொண்டுவந்திருக்கிறார்கள். பள்ளிகளில், ”நீ நல்ல குடிமகன் என்றால், நீ சிறந்த தேசபக்தியோடு இருக்க வேண்டும், நீ அரசியல் வாதிகளுக்கு மரியாதை கொடுக்க வேண்டும், பாராளுமன்ற உறுப்பினரை, ஆசிரியரை எப்படி மதிக்க வேண்டும்” என்பது தொடர்பான விதிகளை உருவாகியிருக்கிறார்கள். இவற்றையெல்லாம் பின்பற்றுவதுதான், நல்ல குடிமகனுக்கான அடையாளமாக அவர்கள் விதிமுறைகளைக் கொண்டுவந்திருக்கிறார்கள். அரசிற்குக் கீழ்படிகிற மனிதனை உருவாக்குவதுபோன்ற கட்டுப்பாடுகள்தான் இதில் உள்ளன. பள்ளிகளில், குழந்தைகளை அதற்குத் தயார்செய்கிறார்கள். படம் பார்க்கும்போது, இதுபோன்ற செய்திகளும் ஞாபகத்திற்கு வருகின்றன. பள்ளிகள், வன்முறைகளை குழந்தைகள் மீது செலுத்துகின்றன. குழந்தைகள் ஏன் இப்படி நடந்துகொள்கின்றன? இதற்குப் பின்னான காரணங்கள் என்ன? என்பதையெல்லாம் கல்வி நிறுவனங்களும் ஆசிரியர்களும் சிந்திப்பதில்லை. குழந்தைகளும், கல்விநிறுவனங்களிலிருந்து அந்நியமாகிறார்கள். குடும்பத்தில் கணவனும் மனைவியும், பெற்றோர்களிடமிருந்து குழந்தைகள், நண்பர்களிடமிருந்தும் ஒருவருக்கொருவர் அந்நியமாகயிருக்கிறார்கள். இதற்கு தத்துவரீதியிலான காரணங்கள் மட்டும்தான் இருக்கின்றதா? இதில் நாம் வாழ்கிற, சமூகத்தினுடைய, சமூகப் பொருளாதார, நிர்வாக, நிறுவனம் சார்ந்த காரணங்கள் இருக்கின்றனவா? என்பதை மைக்கேல் ஹெனகே முன்வைக்கிறார்.

படத்தின் ’ரிதம்’ மிகவும் முக்கியமானது. மிகவும் மெதுவாக நகர்கிற திரைப்படம். இடையிடையே கருந்திரை காண்பிக்கப்படுகிறது. ஒவ்வொரு அத்தியாயம் அல்லது கதையின் முக்கிய நகர்விற்குப் பிறகு கருந்திரை வருகிறது. முன்பே சொன்னதுபோல, படத்தில் கதையும் இல்லை. எனவே, இப்படியான ஒரு போக்கில் கதை சொல்கிற இயக்குனரின் முயற்சி, அதுவும் முதல் படத்திலேயே இத்தகைய தைரியமான முயற்சியைச் சாத்தியப்படுத்தியிருப்பது, திரைப்படத்தை அணுகுவதில் உள்ள இன்னொரு பரிமாணத்தை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

பொதுவாக, கலை இலக்கியத்தில், ஊடகத்தை மிகவும் ஆழமாக அணுகுகிறவர்களைப் பார்த்தோமானால், வாழ்க்கையினுடைய ஆழமான கேள்விகளை இந்தக் கலை ஊடகங்களில் பிடிக்க முடியுமா? இந்தக் கலை ஊடகத்தின் மூலம் அப்படியான ஒரு உரையாடலை, தொடர்பாடலை பார்வையாளனுடன் கலைஞன் உருவாக்கமுடியுமா என்ற தேடலை முன்னெடுப்பார்கள். லவ் தியாஸின் (lav diaz) பன்னிரண்டு மணி நேரப் படங்கள், மிக நீண்ட கால அளவு கொண்ட லாங் ஷாட் (Long shot) படங்கள், தர்க்கோவ்ஸ்கி படங்கள், இங்கிலாந்து இயக்குனர் மைக் லெ (Mike leigh), உண்மையான நேரத்தில் இரண்டு மனிதர்கள் என்னமாதிரியாக இருக்கிறார்கள்? எப்படி நடந்து கொள்கிறார்கள்? என்பதைக் காட்சிகளில் விளக்குவார்.

இன்றைக்கு, படத்தொகுப்பு பாணியில், உரையாடலில் ஒருவரைக் காட்சிப்படுத்தியபிறகு, அடுத்த நபரைக் காண்பிப்பார்கள். அதுவே, கூட்டத்தில் நடக்கிற காட்சியில், மொத்தமாக அவர்கள் அனைவரின் முக பாவனைகளையும், காட்சியோடு தொடர்புபட்டிருக்கிற பிற மனிதர்களின் பங்களிப்பையும், இந்த படத்தொகுப்பு உத்தியினால் பற்றிப்பிடிக்க முடிவதில்லை. ஆகவேதான், உண்மையான நேரத்தில் (Real time), படம்பிடிப்பதில், கதை சொல்லலில் மிகவும் ஆழமாக, கதாபாத்திரங்களின் உடல், மனம் பற்றிய புரிதலை ஆழ்ந்து உள்வாங்க முடியும், என்று அவர் சொல்கிறார். இதனால்தான், தியோ ஆஞ்சலெபெலோஸ் தன் படங்களை லாங் ஷாட்களில் எடுக்கிறார்.

அடுத்து, படங்கள் மெதுவாக நகர்வதற்கு முக்கியமான காரணம், வாழ்க்கையினுடைய பல்வேறு பரிமாணங்கள், பல்வேறுவிதமான கோணங்களைத் தங்களுடைய ஃப்ரேம்களுக்குள் கொண்டுவந்துவிட முடியுமா என்பது அந்த இயக்குனர்களின் தேடல். அதுதான் இந்தப் படத்திலும் உள்ளது. இயந்திரத்தனமான அன்றாட வாழ்க்கை, ஒரேவிதமான அனுபவத்தை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டு போகிறது. முதல் காட்சியே நீங்கள் பாருங்கள். இதுதான் படத்தினுடைய மொத்த கதை சொல்லலையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. முதல் காட்சியில், இரண்டு மனிதர்கள் காருக்குள் அமர்ந்திருக்கிறார்கள், அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்வதுகூட இல்லை, எவ்வித தொடர்பாடலும் அவர்களுக்குள் இல்லை, அந்தக் காட்சியில் அவ்விருவரும் அப்படியே சிலைபோல அமர்ந்திருக்கிறார்கள். கார் கழுவுதல் விஸ்தாரமாகக் காட்டப்படுகிறது. மனிதர்கள் பெரும்பாலும் இப்படித்தான் இருக்கிறார்கள். விட்டு விலகிய மனிதர்கள், தொடர்பாடலற்ற மனிதர்கள், அந்நியப்பட்ட மனிதர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தத்தான் மெதுவான கதையோட்டத்தையும் இத்திரைப்படம் கொண்டிருக்கிறது. கண் தெரியவில்லை, என்று அக்குழந்தை சொல்வது, அழகான காட்சி. அந்தக் குழந்தை, ஆசிரியையிடம் கண்களைத் திறக்க மறுக்கிறாள். ’கண்ணைத் திற’ என்று சொன்னாலும், கண்களைத் திறப்பதில்லை. ”உன்னை அப்படியே விட்டுவிட்டுச் சென்றுவிடுவேன்” என்று சொன்னதும்தான், ”உண்மையிலேயே எனக்குக் கண் தெரியவில்லை” என்கிறாள். விரலைக் காண்பித்து, இது தெரிகிறதா? என்று கேட்கையில், என்ன கேட்கிறீர்கள், எதுவுமே தெரியவில்லையே என்று நாடகமாடுகிறாள். எனவே, ஆசிரியை கையின் இடத்தை மாற்றுகிறாள், குழந்தையும், அப்படியே கண்பார்வையை இடம் மாற்றுகிறது. எனவே, அக்குழந்தை பொய் சொல்கிறது, அவளுக்குக் கண் தெரிகிறது என்பதை ஆசிரியைக் கண்டுபிடித்துவிடுகிறார். எனினும், அந்த இடத்தில் ஆசிரியை ஏதும் பேசுவதில்லை. கண்டிப்பதும் இல்லை. அத்தோடு அந்தக் காட்சி ’கட்’ செய்யப்படுகிறது. கருந்திரை வருகிறது.

ஆனால், நமக்கும் தெரிகிறது, ஆசிரியயைக்கும் தெரிகிறது, அந்தக் குழந்தை நடிக்கிறது. தானே, காட்சியனுபவத்தின்மூலம் உணர்வதற்கும், மனிதனுடைய செயல்பாடுகளின், அசைவுகளின், முகத்தோற்றத்தின் மூலம், தொடர்பாடலை ஏற்படுத்துவதற்கான, திரை மொழியைத்தான் மைக்கேல் ஹெனகே பாவித்திருக்கிறார்.
இசை, இந்தப் படத்தில் முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம். இசை, எப்படி நம்மைச் சுற்றிலும் இயந்திரத்தன்மையோடு இருக்கிறது. தட்டச்சு செய்கிற சப்தம், நிரவியிருக்கிறது, மின்னணு இயந்திரங்களில் சப்தங்கள், இவையெல்லாம் நமக்கு எப்படிப் பழகிப்போயிருக்கின்றன, எப்படி இவையெல்லாம் மனிதர்களின் உடல்மொழியைத் தீர்மானிக்கக்கூடியதாக, அன்றாட வாழ்க்கையின் சிந்தனையமைப்பைத் தீர்மானிக்கக்கூடியதாக இருக்கின்றன, என்பதை விளக்குகிறது. உதாரணமாக, சூப்பர் மார்க்கெட்டில், ஷாப்பிங் செய்கையில், பில் போடுகிற அந்தப் பெண்ணைப் பாருங்கள். இயந்திரத்தனமாக இருப்பார். ஆனால், காட்சியில் ’ரிதம்’ இருக்கும். எதிரேயிருப்பவர் மனிதர் என்பதை மறந்து இயந்திரம் போலச் செயல்படுவார்கள். இவை மீண்டும் மீண்டும் இடம்பெறும். இப்படியான ஒரு கதை சொல்லலை பார்வையாளர்களோடு தொடர்புபடுத்துவதற்காகத்தான், உண்மையான நேரத்திற்கு மிக அருகிலான ஒரு சொல்முறையை இப்படம் கொண்டிருக்கிறது.