The Two Popes 

உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்படுகிற திரைப்படங்கள் எப்பொழுதுமே, பார்வையாளர்களால் பெரிதும் ரசித்துப் பார்க்கப்படும் தன்மையைப் பெற்றிருக்கும். இது ’உண்மையான கதை’ என்ற அடைமொழியுடன் துவங்கப்படுவதால், அத்திரைப்படத்தின் மீதான நமது நம்பகத்தன்மை அதிகரிக்கிறது. இதுவே, மற்ற படங்களில் நமக்கு வேறுவிதமான அனுபவங்களே கிடைக்கின்றன. நாம் எவ்வளவுதான் திரையரங்கில் ஒரு திரைப்படத்தை ரசித்துப் பார்த்தாலும், ஒரு கட்டத்தில் படத்தில் சொல்லப்பட்டிருக்கிற இந்தக் கதை ‘கற்பனையானதுதானே!’ என்ற எண்ணம் மனதின் ஒரு ஓரத்தில் தங்கியிருக்கும். அப்படியான ஒரு எண்ணம் வந்துவிட்டாலே, ஒரு எச்சரிக்கையான விழிப்புணர்வுடன் அத்திரைப்படத்தை அணுகத்துவங்குகிறோம். படம் முடிந்தவுடன், திரையரங்கிலேயே அது ஏற்படுத்திய உணர்வையும் விட்டுச்செல்கிறோம். ஆனால், நிஜ வாழ்வை அடிப்படையாக வைத்து எடுக்கப்படுகிற திரைப்படங்கள் இதிலிருந்து சற்று மாறுபடுகின்றன. அது உங்களுக்குச் சில வேலைகளைக் கூடுதலாகக் கொடுத்துச்செல்கிறது. 

Image result for the two popes"

உதாரணத்திற்கு இந்த ’தி டூ போப்ஸ்’ படத்தையே எடுத்துக்கொள்வோமே! எப்போதுமே மக்களுக்கு ஒரு போப்பாண்டவர் மட்டுமே இருப்பார். அவர் இறந்தவுடன் அடுத்த போப்பாண்டவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஆனால், கொஞ்சம் வித்தியாசமாக இரண்டு போப் ஆண்டவர்கள் உள்ளனர். அதற்கான பின்புலக் காரணம் என்ன? இதுபோன்ற ஆய்வுகளை இப்படம் நம்மை மேற்கொள்ளச் செய்கின்றன. இத்தகைய கேள்விகளை, ‘புனைவுப் படங்கள்’ ஏற்படுத்துவதைக் காட்டிலும், ‘உண்மைச் சம்பவங்களை அடிப்படை’யாக வைத்து எடுக்கப்படுகிற படங்கள் அதிகளவில் ஏற்படுத்துகின்றன. ஏனெனில், இத்தகைய யதார்த்த நிகழ்வுகளின் பரிச்சயம் இருந்தால்தான், அப்படத்தை நம்மால் மென்மேலும் புரிந்துகொள்ள முடியும். மேலும், உலகளவில், சர்வதேச திரைப்பட விழாக்களில் என எங்கெங்கு காணினும், ‘நிஜ வாழ்வை ஒட்டி எடுக்கப்படுகிற’ திரைப்படங்களுக்கு எப்பொழுதுமே வரவேற்பு உண்டு. ஆனால், நிச்சயமாக அப்படம் எப்படி எடுக்கப்பட்டிருக்கிறது? என்பதையும் கருத்தில்கொள்ள வேண்டும். 

வெறுமனே உண்மைச்சம்பவத்தை மையமாகக் கொண்டு கதையை வார்த்தால் மட்டும் போதுமா, அந்த உண்மைச் சம்பவத்திற்கு நியாயம் செய்யவேண்டாமா? ஆக, வடிவ ரீதியில் போதிய தன்னிறைவு பெறாமல், ஆனால் கதையாக ஒரு உண்மைச் சம்பவத்தைப் பின்பற்றி எடுத்தால் மட்டும் போதும், என்று நினைப்பதும் தவறான பாதையே! இதில் The Two Popes திரைப்படம் ஃப்லிம்மேக்கிங்காக கச்சிதமான வடிவத்தைப் பின்பற்றியிருக்கிறது. 

காரணம், இப்படத்தின் இயக்குனர் ஃபெர்னாண்டோ ஃபெரீரா மீரெலெஸ் (Fernando Ferreira Meirelles). பிரேசிலிய இயக்குனரான இவர் 2002ஆம் ஆண்டு வெளியான ’சிட்டி ஆஃப் காட்’ திரைப்படத்தை காடியா லண்ட் (Kátia Lund) உடன் இணைந்து இயக்கியவர். இப்படம் இவரை அதிகப் பிரபலமாக்கியது. சமீபத்தில், நெட்ஃபிளிக்ஸிற்காக இவர் இயக்கிய படம்தான் ‘The Two Popes’. அந்தோனி மெக்கார்டனின் (Anthony McCarten) நாடகத்தை அடிப்படையாகக் கொண்டுதான் இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. நியூசிலாந்தில் பிறந்த நாடகாசிரியர் அந்தோனி மெக்கார்டன் 2014-ல் எழுதிய ’த தியரி ஆஃப் எவ்ரிதிங்’ மற்றும் 2017-ல் எழுதிய ’டார்கஸ்ட் ஹவர்’ என இரு நாடகங்களும் ‘போப்பின்’ பெயரிலேயே மேடையேறியவை. 
இப்பூமியில் பெரும்பாலான மக்கள், கடவுளின் பிரதிநிதிகள்தான் இந்த போப்பாண்டவர்கள் என நம்புகின்றனர். மக்களுக்கு ஏதோவொரு வகையில் தன் காலத்தைக் கடத்திச் செல்வதற்கு ஒரு நம்பிக்கை தேவைப்படுகிறது. அது பெரும்பாலான நேரங்களில், பெரும்பாலானோர்க்கு கடவுளாக இருக்கிறது. எக்காலத்திலும் கடவுள் நேரடியாக வந்து அவர்களின் குறைகளைக் கேட்கப்போவதில்லை. இதுவே நடைமுறையாக பலகாலம் தொடர்ந்தால் என்னவாகும்? மக்களுக்கு கடவுள் மீதான நம்பிக்கையும், பயமும் மறந்துபோய், தன் வேலையைப் பார்க்கச் சென்றுவிடுவார்கள். எனவே, மக்களின் நம்பிக்கையைப் பொய்த்துவிடாமல் பாதுகாப்பதற்கு அங்கு ஒரு ’கடவுளின் பிரதிநிதி’ தேவைப்படுகிறார். அவர் நாம் செய்த பாவங்களுக்கு பாவ மன்னிப்பு வழங்குவார், நம்மைக் கஷ்டங்களிலிருந்து மீட்பார், உலக நன்மைகளுக்கு ஆதரவாக இருப்பார் என்றெல்லாம் துதிபாடுகிறோம். மிகப்பெரிய புனித பிம்பங்களை போப்பாண்டவர்கள் மேல் ஏற்றிவிடுகிறோம்.

Image result for the two popes"

ஒருவரைப் புனிதராகவும், நம்மில் உயர்ந்தவராகவும், கடவுள் ஸ்தானத்திற்கு வைத்துப் பார்க்கிறபொழுது, அவர் அன்றாட வாழ்வில் ஏதாவது செய்தால் கூட, அதுவே மிகப்பெரிய செய்தியாகிவிடுகிறது. ரஜினி காந்த் தன் சட்டையில் ஒட்டியிருந்த தூசியைத் தானே துடைத்தார் என்பதெல்லாம் செய்தியானது. ஏனெனில், ரஜினி என்ற பெயருக்குப் பின்னால் மிகப்பெரிய நாயகபிம்பத்தை அவர்மேல் ஏற்றிவைத்திருக்கிறோம். ’போப்பாண்டவர்’களும் நம்மைப் போன்ற மனிதர்கள்தான், அவர்களும் கால்பந்து விளையாட்டை ரசிப்பார்கள், பியானோ இசைப்பார்கள், தொலைக்காட்சி பார்ப்பார்கள், பீட்சா சாப்பிடுவார்கள், கூல்ட்ரிங்க்ஸ், வைன் எல்லாம் குடிப்பார்கள் என்பதோடு, அவர்களுக்கும் மறைக்கப்பட்ட அந்தரங்கப் பக்கங்கள் இருக்கும், அவர்களுக்கும் கடவுளின் குரல் கேட்காமல் போகும் என்று அவர்களின் மறுபக்கத்தையும் கதையின் போக்கில், இயல்பாக காட்டிச் செல்கிறது இப்படம். எனவே, இப்படத்தை நாம் வெறும் பொழுதுபோக்கு என்ற ஒற்றைப் பரிமாணத்தில் மட்டும் அணுகிவிட முடியாது, அதைத்தாண்டிய ஆர்வமேற்படுத்தும் விஷயங்கள் பல உள்ளன. 

இரண்டு போப்களாக, மிகச்சிறந்த இரு நடிகர்கள் நடித்துள்ளனர். கார்டினல் ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோவாக ஜொனாதன் பிரைஸ் (Jonathan Pryce) மற்றும் போப் பெனடிக்ட் XVI ஆக, அந்தோனி ஹாப்கின்ஸ் (Anthony Hopkins) நடித்துள்ளனர். அந்தோனி ஹாப்கின்ஸின் நடிப்பை நாம் ஏற்கனவே, ‘தி சைலன்ஸ் ஆஃப் தி லாம்ப்ஸ்” படத்தில் பார்த்திருக்கிறோம். இதில் தளர்ந்து முதிர்ந்த கதாபாத்திரத்தில், தன் வயதிற்குரிய தோற்றத்தில் நடித்துள்ளார். 

Image result for the two popes"

போப் இரண்டாம் ஜான் பால் இறந்ததிலிருந்து கதை துவங்குகிறது. வாடிகன் நகரில் போப் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான சடங்குகளே, அதற்குரிய யதார்த்தத்தோடு பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. போப் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டால், சிம்னியிலிருந்து வெள்ளை நிற புகை வெளிவரும், அதுவே, ஏதும் முடிவுகள் எடுக்கப்படவில்லை என்றால், சிம்னியிலிருந்து கருப்பு நிற புகை வெளிவரும், இதை அங்குக் கூடியிருந்த செய்தியாளர்களில் ஒருவர் தெரிவிக்கிறார். சுற்றிலும் கூட்டம் கூடியிருக்கிறது. யார் அடுத்த போப் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர். வாக்கெடுப்பில் முதல் இரு இடங்களில் வந்த போப்-கள் எப்படி சிறிது வருடங்கள் கழித்து, மற்றவர் போப்பாண்டவர் பதவிக்கு வந்தார்? அதற்குப் பின்னான காரணங்கள் என்ன? என்பதையே இப்படம் கதையாக எடுத்துக்கொண்டிருக்கிறது. பெரும்பாலும் உரையாடலாகவே கதைக்களம் நகர்கிறது. இரண்டு போப்-களும் உட்கார்ந்து பேசுகிறார்கள், பேசுவதிலிருந்தே தன் ரகசியங்களும், ஒருவர் மற்றவரைப் புரிந்துகொள்வதும் என எல்லாமே நடக்கிறது. 

ஏப்ரல் 2005-ல் புவனெஸ் அயர்ஸின் பேராயரான கார்டினல் ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ, போப் இரண்டாம் ஜான் பால் இறப்பிற்குப் பிறகு, புதிய போப்பைத் தேர்ந்தெடுப்பதற்காக வாடிகன் நகரத்திற்கு அழைக்கப்படுகிறார். ஆனால், ஜெர்மன் கார்டினல் ஜோசப் ராட்ஸிங்கர் XVI -ஆம் போப் பெனடிக்டாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்; அதேசமயத்தில் புவனெஸ் அயர்ஸிலிருந்து வந்த பெர்கோக்லியோ இரண்டாவது அதிகபட்ச வாக்குகளைப் பெற்ற இடத்தில் இருக்கிறார். கதை ஏழு வருடங்களுக்கு அப்பால் நகர்கிறது, கத்தோலிக்க திருச்சபை சில ஊழல்களில் சிக்கிக்கொள்வதால், பெனடிக்ட் பொது குற்றச்சாட்டுகளால் களங்கமடைகிறார். இந்நேரத்தில்தான், பெர்கோக்லியோ தன் பதவியை ராஜினாமா செய்யநினைத்து, வாடிகனுக்கு கடிதம் அனுப்புகிறார். ஆனால், வாடிகனிலிருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை. மேலும், பெர்கோக்லியோ, தன் பதவியை ராஜினாமா செய்வது குறித்து எடுத்த முடிவு, இப்போது எடுத்த ஒன்றல்ல, அது வாடிகனில் போப் பெனடிக்ட் தேர்ந்தெடுக்கப்பட்டவுடனேயே அருகிலிருந்தவரிடம், நான் பேராயர் பதவியிலிருந்து விலகலாம் என்றிருக்கிறேன், என்ற கருத்தை அங்கேயே வெளிப்படுத்தியிருப்பார். ஆனால், ஏதோ ஒரு காரணத்தால், தன் ராஜினாமா வாடிகனில் ஏற்க மறுக்கிறார்கள் என்று பெர்கோக்லியோ நினைக்கிறார். எனவே, நேரடியாக ரோமிற்குச் சென்று, அங்கு போப்பாண்டவரிடம் தனிப்பட்ட முறையில் தன் ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துவிடலாம் என்று முடிவெடுக்கிறார், அப்போது அவருக்கு, வாத்திகன் நகரத்திற்கு வருமாறு ஒரு கோரிக்கை வருகிறது. 

Image result for the two popes"

போப்பின் கோடைகால இல்லமான காஸ்டல் காண்டோல்போ அரண்மனையில் பெர்கோக்லியோவும் போப் பெனடிக்டும் சந்திக்கிறார்கள். கடவுளுக்கும், தேவாலயத்திற்கும் இடையேயான உறவுமுறை குறித்து இருவரும் காரசாரமாக விவாதிக்கின்றனர். பெர்கோக்லியோ நடைமுறை விஷயங்களில் ஆர்வம் செலுத்தக்கூடிய நபராக இருக்கிறார். காரில் வரும்பொழுதுகூட, முன்பக்க இருக்கையில் அமர்வது அவருக்குப் பிடித்திருக்கிறது. போப்பிற்காகக் காத்திருக்கும் வேளையில் தோட்ட வேலை செய்பவருடன் அவரால் எளிதாக உரையாடலை முன்னெடுக்க முடிகிறது. நடனம் ஆடத்தெரிந்திருக்கிறார். இவருடைய குணாதிசயத்திற்குச் சற்று வித்தியாசமானவர் போப் பெனடிக்ட். தான் ஒருநாளில் இவ்வளவு தொலைவு நடக்க வேண்டும் என்பதில் கவனத்தோடு இருப்பவர். அதற்காக, கருவியின் உதவியோடு அலாரம் வைத்து நடக்கிறார். தனிமையில் சாப்பிட விரும்பும் மனிதர். சற்று முரண்பாடுகளோடு நகர்கிற அவர்களது முதல் சந்திப்பு உரையாடல், இரவு உணவுக்குப் பின்னர் சற்று ஆசுவாசமடைகிறது. இருவரும் இணைந்து, தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிற Kommissar Rex எனும் வெகுசன துப்பறியும் தொடர் பற்றி பேசிக்கோள்கின்றனர். இப்போதும் பெர்கோக்லியோ வந்த காரியம் நிறைவேறவில்லை. அவர் தனது ராஜினாமா கடிதத்தை போப்பிடம் கொடுப்பது தாமதப்படுத்தப்படுகிறது. 

பெர்கோக்லியோ தனது ஆரம்பகால வாழ்க்கையைப் பற்றியும், எப்படி தேவாலயப் பணிகளுக்குள் தான் நுழைந்தேன் என்பது பற்றியும் பெனடிக்டுடன் பகிர்ந்துகொள்கிறார். இத்தகைய பேச்சுக்களை பெனடிக்ட் ஆர்வத்தோடு கேட்டாலும், பெர்கோக்லியோவின் ராஜினாமாவை அவர் நிராகரிக்கிறார். இப்போது பல பிரச்சினைகள் சூழ்ந்திருக்கிற வேளையில், நீங்கள் ராஜினாமா செய்தால், அது என்மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு என்று பிறர் கருதக்கூடும், மேலும் அது கத்தோலிக்க திருச்சபையை பலவீனப்படுத்தும் என்று ராஜினாமாவை போப் ஏற்க மறுக்கிறார். ஆனாலும், அவர்கள் தொடர்ந்து பேசுகிறார்கள். கருத்து வேறுபாடுகளை மறந்து ஒருவருக்கொருவர் நெருக்கமாகப் பேசிக்கொள்கிறார்கள். 

அடுத்த நாள், இருவரும் வாடிகனுக்கு ஹெலிகாப்டரில் செல்கிறார்கள், இப்போதும் பெனடிக்ட், பெர்க்லியோவின் ராஜினாமா பற்றிய பேச்சை வேண்டுமென்றே தவிர்க்கிறார். பெர்கோக்லியோதான் ராஜினாமா செய்யவேண்டி இங்கு வந்தார், ஆனால், வாடிகன் அறையில் போப் பெனடிக்ட் தான் இந்தப் பதவியை விட்டு விலகயிருப்பதாகச் சொல்கிறார். பெர்கோக்லியோ அதிர்ச்சியடைகிறார். பெர்கோக்லியோவைப் போப்பாண்டவர் பதவியை ஏற்றுக்கொள்ளச் சொல்கிறார். ஆனால், சர்வாதிகார ஆட்சியின்பொழுது தனது செயல்கள் மற்றும் மனிதத் தன்மையற்ற சம்பவங்கள் என கடந்த கால நினைவுகள் தொடர்ந்து அவரைக் காயப்படுத்துகின்றன. இப்போது பெனடிக்ட், பெர்கோக்லியோவை ஆறுதல் படுத்துகிறார். பெர்கோக்லியோவிடம் சொல்ல ஒரு கதை இருந்தது போலவே, பெனடிக்டிடமும் சொல்ல ஒரு கதையிருந்தது. என்னால் கடவுளின் குரலைக் கேட்க முடியவில்லை, எனது விருப்பங்களைத் துறக்க விரும்புவதாகவும் கூறுகிறார், இம்முறை பெர்கோக்லியோ, பெனடிக்டை ஆறுதல் படுத்துகிறார். ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருக்கிறார்கள். 

Image result for Fernando meirelles on two popes shooting"

பின்னர் இருவரும் அறையிலிருந்து வெளியே வருகிறார்கள். அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் பெனடிக்டைச் சூழ்ந்துகொள்கிறார்கள், மெய்க்காப்பாளர் அவர்களைத் தடுக்க நினைக்கிறார். ஜனத்திரளுக்குள் பெனடிக்ட் முன்னேறிச் செல்வதை பெர்கோக்லியோ புன்முகத்தோடு பார்க்கிறார். மெய்க்காப்பாளரிடம், ’தடுக்க வேண்டாம்’ என்பதுபோலச் சொல்கிறார். பெனடிக்ட் அங்கிருந்த மக்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டு நகர்கிறார். பெர்கோக்லியோ அர்ஜெண்டினாவிற்குப் புறப்படுகிறார்.

இது நடந்து ஒரு வருடத்திற்குப் பிறகு, XVI-ஆம் போப் பெனடிக்ட் தனது ராஜினாமாவை உலகிற்கு வெளிப்படுத்துகிறார். கார்டினல் பெர்கோக்லியோ 2013 போப்பாண்டவர் கூட்டத்தில் பெனடிக்டின் வாரிசாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போப் பிரான்சிஸ் ஆகிறார். ஜெர்மனிக்கு அர்ஜெண்டினாவுக்கும் இடையிலான 2014 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியை இரு போப்களும் ஒன்றாக இணைந்து பார்ப்பதுடன் படம் முடிகிறது. 

இதுபோன்ற வரலாற்றுச் சம்பவங்களைத் திரைப்படங்களாக எடுக்கையில், இடம் சார்ந்த பிரக்ஞையை அப்படங்கள் வெளிப்படுத்த வேண்டும். இப்படம் அத்தகைய சித்திரத்தை வழங்குகிறது. ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இசை என அனைத்திலும், சினிமா ஆர்வலர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய திரைப்படம் என இதைச் சொல்லலாம்.