With you Without you - ஒரு களப்பணியாளனின் நேரடி அனுபவம்...

நான் முன்னமே பார்த்து வியந்த ராபர் ப்ரெசனின் "The Gentle Women", மற்றும் மணி கவுலின் "Nazar" இரண்டு திரைப்படங்களும் தஸ்தாயெவ்ஸ்கியின் "The Gentle Creature", குறுநாவலின் திரைவடிவங்கள். இந்த குறுநாவல் மனிதனின் ஆழ்மனதில் இருக்கும் காதல், பொருளாசை, அவசர உலகின் எதார்த்த நிகழ்வுகள் போன்றவற்றை மிக சிறப்பாக உணர்வுகளால் வடித்திருக்கும். இந்த நாவலின் மேல் இருந்த கிறக்கமும், முன்னமே இருபெரும் கலைஞர்களின் கேமராமொழியால் பார்த்து வியந்த கதையை, தற்போது பிரசன்னா விதானகேவும் With you Without you என்கிற பெயரில் திரைப்படமாக எடுத்திருப்பதையும், அதனை ஜூன் 20ஆம் தேதி சென்னை பி.வி.ஆர் திரையரங்கில் "Directors Rare" பிரிவில் வெளியிடப்போவதையும் அறிந்து அன்று மாலை இந்த படத்தை பார்க்க சென்றிருந்தேன். முன்னர் பார்த்த இரண்டு படங்களை விட, பிரசன்னாவின் இந்த திரைப்படம் இன்னமும் நெருக்கமாக இருந்தது. அந்த பெண்ணின் வலியை இன்னும் அதிகமாக உணரமுடிந்தது. காரணம், இந்த திரைப்படம் என்னுடைய மொழிபேசும், இன மக்களின் போருக்கு பிந்தைய வலியை அதனளவில் கொஞ்சமாவது பேசுகின்ற படம். மிக முக்கியமாக, தமிழ் மக்களுக்கு எவ்விதத்திலும் எதிராக இல்லாத படம்.
With you Without you திரைப்படத்தை நாங்கள் பார்த்த மறுநாள், படம் திரையரங்கில் இருந்து எடுக்கப்பட்டது. அதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டது. திரையரங்கிற்கு சிலர் மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் கூறி திரையரங்க நிர்வாகம் படத்தினை திரையிட மறுத்து அறிக்கை வெளியிட்டது. தமிழ்நாட்டில் நல்ல திரைப்படங்களை வளர்த்தெடுக்கவும், நல்ல திரைப்பட ரசனையை வளர்க்கவும் உருவான திரைப்பட இயக்கமான தமிழ் ஸ்டுடியோ மூலம் இந்த படத்தினை, முக்கியமாக தமிழ்நாட்டு திரைப்பட கலைஞர்களுக்காக திரையிட்டு காண்பிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். பிரசன்னாவிடம் இதுகுறித்து பேசியதும், இரண்டு நாட்கள் கழித்து சந்திக்கலாம் என்றார். திங்கள் அவரை நேரில் சந்தித்தேன். தான் தமிழ் மக்களுக்கு எதிரானவன் அல்ல, தமிழ்மக்களின் படும் பாடுகளை நான் அறிந்தவன், எனவே ஒருபோதும் தமிழ் மக்களுக்கு எதிரான படத்தை எடுக்கமாட்டேன் என்று தொடங்கினார். பின்னர் என்னுடைய கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, இந்த திரைப்படத்தை சென்னையில் திரையிட ஒப்புக்கொண்டார். நான் ஒருவார கால அவகாசம் கேட்டிருந்தேன். பிரசன்னாவும் ஒப்புக்கொண்டு, நான் புதன் மாலை நாடு திரும்பவேண்டும். எனவே நீங்களே சனிகிழமை படத்தை திரையிட்டு படம் குறித்து விவாதியுங்கள் என்றார். ஒரு திரைப்படத்தை, அதன் இயக்குனரோடு பார்த்து விவாதிக்கும் நிகழ்வின் அருமை எனக்கு தெரியும். திரைப்பட ரசனையின் முக்கியமான ஒருங்கிணைப்பு அது. எனவே பிரசன்னாவையும் சனிக்கிழமை வரை சென்னையில் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். எவ்வளவோ முயற்சித்தும், அவரால் சனிக்கிழமை வரை இருக்க முடியாது என்கிற சூழலில், இயக்குனருடன் விவாதித்தே தீர வேண்டும் என்கிற காரணத்தினாலும், படத்தை செவ்வாய் கிழமையன்றே திரையிடலாம் என்று என்று அவரிடம் தெரிவித்தேன். அவரும் சரி என்றார்.

ஆனாலும், அரங்கங்கள் கிடைக்கவில்லை. பி.வி.ஆர் திரையரங்கத்தை கேட்டபோது, காவதுறையினர் பாதுகாப்பு கொடுத்தால் திரையிடுவோம் என்றார்கள். அதற்கு வாய்ப்பு இல்லை என்பதால், வேறு சில அரங்கங்களை முயன்றோம். ஆனால் சென்சிடிவான பிரச்னை என்று கருதி யாரும் இடம் கொடுக்கவில்லை. இறுதியாக வடபழனியில் உள்ள ஆர்.கே.வி திரையரங்கில் திரையிடுவது என்று ஏற்பாடு ஆனது. அரங்கின் வாடகை மிக அதிகமாக இருந்தது. அரங்கின் உரிமையாளரை தெரிந்த நண்பரிடம் பேசி, அரங்கின் வாடகையை 22,000 என்று குறைத்து கொடுக்க சொன்னோம். அரங்க உரிமையாளரும் ஒப்புக்கொண்டார். நான் என்னுடைய செலவுக்காக வைத்திருந்த பணத்தையும், நண்பர்கள் சிலரிடத்தில் கடன் வாங்கியும் அரங்க வாடகையை கட்டினேன். திங்கள் மாலை ஏழு மணியளவில் தமிழ் ஸ்டுடியோ அலுவலகம் திரும்பி, படத்தை திரையிடுவதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்ய ஆரம்பித்தேன். அன்று இரவு முழுக்க ஒரு பத்து நிமிடம் கூட உறங்காமல், இந்த திரையிடலை அனைவருக்கும் கொண்டு செல்ல பாடுபட்டுக்கொண்டிருந்தேன். சுமார் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு இப்படி ஒரு திரையிடல் செவ்வாய் அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்று தெரிவித்தேன்.
தமிழ் ஸ்டுடியோவின் ஒவ்வொரு நிகழ்விற்கும் எத்தனை பேர் வருவார்கள் என்கிற அனுமான எண் என் மனதில் இருக்கும். திரையிடலுக்கு குறைந்தபட்சம் முன்னூறு பார்வையாளர்களாவது வருவார்கள் என்று நினைத்திருந்தேன். அத்தனை தூரம் அசுரத்தனமாக உழைத்து களைத்துப்போய் காலை ஏழு மணியளவில் சிறிது நேரம் தூங்க சென்றேன். ஆனால் பத்து நிமிடம் தூகமுடியாமல், மீண்டும் திரையிடலுக்கு தேவையான வசதிகளையும் செய்யவும், சில முக்கியமான பார்வையாளர்களை தனிப்பட்ட முறையில் அழைக்க வேண்டியும் இருந்தது. ஆனால் காலை 10 மணியளவில், அரங்க உரிமையாளர் அழைத்து, காவல்துறையில் இப்போதுதான் விசாரித்து போனார்கள் என்று செய்தி வந்தது. அடுத்து உளவுத் துறையில் இருந்து அழைப்பு வந்தது, தொடர்ச்சியாக பல்வேறு விசாரணைகள், வடபழனி வரை அழைக்கழிப்பு என நாள் முழுவதும் விசாரணையில் கழிந்தது. பின்னர் ஒரு திரைப்பட இயக்கத்திற்குரிய சட்ட விதிமுறைகளை காவல்துறைக்கு விளக்கி, திரையிடலை வெற்றிகரமாக நடத்துவதற்காக மாலை 6.45க்கு ஆர்.கே.வி அரங்கம் சென்றேன்.
அதற்குள் அரங்கம் நிறைந்திருந்தது. பெரும்பாலான நண்பர்கள் நின்ருகொண்டிருந்தார்கள். எளிமையான அறிமுகத்திற்கு பிறகு திரையிடல் தொடங்கியது. திரையிடலுக்கு பின்னர், முதல் ஒன்றிரண்டு நபர்கள், படத்தின் அழகியல் குறித்து பேசினார்கள். அடுத்ததாக ஒரு நண்பர் கையில் இருபது பக்க அறிக்கையுடன் எழுந்து நின்று பிரசன்னா விதானகேவை பார்த்து கேள்விகள் கேட்க தொடங்கினார். அதற்கடுத்து தொடர்ச்சியாக பல்வேறு அரசியல் கேள்விகள், சச்சரவுகள், கூச்சல் என அரங்கம், அதன் நோக்கத்தில் இருந்து விலகி சென்றது. எனது நோக்கம் கொஞ்சம் கொஞ்சமாக சிதைவுருவதை கண்கூடாக காண நேர்ந்தது. தமிழ்நாட்டில் திரைப்பட இயக்குனராக அறியப்படும் ஒருவர் எழுந்து, இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்று நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்களா? என்றார், இன்னொரு கேள்வி, படத்தில் பெண்கள் மட்டுமே கற்பழிக்கப்படுவதாக வசனம் வருகிறது, ஆனால் ஆண்களும் கற்பழிக்கப்பட்டிருக்கிறார்கள், அதனை ஏன் நீங்கள் உங்கள் படத்தில் காட்டவில்லை என்று ஒரு குரல் ஒலித்தது. இனப்படுகொலை நடந்துக்கொண்டிருக்கும்போது நீங்கள் என்ன செய்துக்கொண்டிருந்தீர்கள் என்று கேள்விகள் நாலாபுறமும் எவ்வித அறமும் இன்றி பாய்ந்து வரவே நான், விவாதத்தை முடித்துக்கொள்ளலாம் என்று சொன்னேன். அதற்குள் எழுத்தாளரும் நடிகருமான வ.ஐ.ச ஜெயபாலனுக்கும், சில நண்பர்களுக்கும் வாக்குவாதம் வரவே, அரங்கிற்குள் காவல்துறை நுழைந்தது. உடனே நான் வெளியே சென்று காவல்துறை அதிகாரியை சந்தித்து யாரும் உள்ளே வரக்கூடாது என்று சொல்லிவிட்டு வந்தேன். ஆனாலும், தொடர் கூச்சல் காரணமாக காவல்துறை உள்ளே வந்துக்கொண்டிருக்க, வேறு வழியில்லாமல் நான் நிகழ்வை முடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
நிகழ்வில், இது அரசியல் கூட்டமல்ல, திரைப்பட விவாதக்கூட்டம் என்று நான் சொன்னதும், இப்போதும் கூட பல நண்பர்கள் அதனை எதிர்த்து பேசி வருகிறார்கள். ஆனால் நான் அதற்கடுத்து சொல்ல வந்த வார்த்தைகளை சொல்ல விடாமல் பலரும் கூச்சல் போடவே என்னால் பதிவு செய்ய முடியால் போயிற்று. இது அரசியல் கூட்டமல்ல, ராஜபக்ஷேவிடம் கேட்க வேண்டிய கேள்விகளை, ஒரு படைப்பாளியிடம் கேட்டால் அவரால் எப்படி பதில் சொல்ல முடியும்? இந்த திரைப்படம் பேசும் அரசியலையும், அதில் உங்களுக்கு இருக்கும் மாற்றுக்கருத்துகளையும் சொல்லுங்கள் என்றுதான் நான் பேச நினைத்தேன். ஆனால் முதல் வரியிலேயே எல்லாரும் கூச்சலிட்டு, என்னை மேற்கொண்டு பேசவிடாமல் செய்துவிட்டார்கள்.

தொடர்ச்சியாக தமிழில் வெளியாகும் படங்களை விமர்சித்து பேசிவரும் என்னை நோக்கி எதுதான் நல்லப்படம் என்று கேட்டுக்கொண்டிருந்தார்கள். அதற்கு விடையாக, இதோ இது ஒரு நல்லப்படம் என்று சொல்லவேண்டும், என்கிற எண்ணமும் ஒருவகையில் இந்த திரையிடலை ஒருங்கிணைக்க காரணமாக இருந்தது. ஆனால் ஒரு திரைப்பட பிரதியை எப்படி அணுக வேண்டும், காட்சி அமைப்புகளை எப்படி உள்வாங்கிக்கொள்ள வேண்டும் என்கிற புரிதல் தமிழ் திரைப்பட பார்வையாளர்களிடம் இல்லை என்பதையே இந்த திரையிடல் மீண்டும் எனக்கு உணர்த்தியிருக்கிறது.

இந்த திரைப்பட திரையிடலின் தொடர்ச்சியாக, இலங்கையின் உதயன் பத்திரிகைக்கு நான் அளித்த நேர்காணலையும் இங்கே வாசிக்க கொடுக்கிறேன்.
1. இந்தத் திரையிடலின் நோக்கம் என்ன?

சென்னை PVR திரையரங்கில், Directors Rare என்கிற பிரிவில் ஜூன் 20ஆம் தேதி, With you Without you திரைப்படத்தை பார்க்க நேர்ந்தது. முதல் காட்சியில் நான் உட்பட மொத்தம் 18 பார்வையாளர்கள் மட்டுமே இருந்தோம். இந்த திரைப்படம், தஸ்தாயெவ்ஸ்கியின் ‘A Gentle Creature’ நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தொடர்ந்து வெளியாகும் மோசமான திரைப்படங்களை பார்த்து, சோர்வடைந்த வேளையில், இந்த திரைப்படம் எனக்குள் புது உத்வேகத்தை கொடுத்தது. தவிர இதே நாவலை அடிப்படையாக வைத்து முன்னமே இரண்டு படங்கள் வெளிவந்திருந்தாலும், இந்த திரைப்படம் எனக்கு மிக நெருக்கமாக இருந்தது. காரணம், இந்த படம் என் மொழி பேசும் மக்களின் வலியை பதிவு செய்திருகிறது. தமிழர்களுக்கு எதிரான படமல்ல என்பதை முதலில் உறுதி செய்துக்கொண்டேன். நான் இந்த படத்தை பார்த்த மறுநாளே, திரையரங்கிற்கு மிரட்டல் விடுக்கப்பட்டது என்கிற காரணம் காட்டி படம் திரையரங்கில் இருந்து எடுக்கப்பட்டது. நல்ல படத்தை தமிழக திரைப்பட ரசிகர்கள் அவசியம் பார்க்க வேண்டும், லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டபோதும், நகைச்சுவை, கேளிக்கை என்று திரைப்படம் எடுத்துக்கொண்டிருந்த தமிழ் திரைப்பட கலைஞர்களுக்கு இந்த திரைப்படத்தை திரையிட்டு காட்ட வேண்டும் என்பதே என் நோக்கமாக இருந்தது.

2. நோக்கம் சரிவர நிறைவேறியதா? சிதறியதா?

நோக்கம் நிறைவேறியது என்றோ, அல்லது நிறைவேறவில்ல என்றோ சொல்ல முடியாது. இந்த திரைப்படத்தை பெரும்பான்மையான தமிழக திரைப்பட ஆர்வலர்களும், திரைப்பட கலைஞர்களும் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். திரைப்பட ஆர்வலர்களோடு, பெருவாரியான அரசியல் இயக்கத்தை சேர்ந்தவர்களும் படம் பார்க்க வந்திருந்தனர். தோராயமாக 700 பேர் இந்த திரையிடலுக்கு வந்திருந்தார்கள். திரையிடலுக்கு பின்னர் நடந்த விவாதம், இந்த திரைப்படம் திரையிடப்பட்ட நோக்கத்தை சிதைத்தது என்றுதான் சொல்லவேண்டும்.
3. விதானகேயின் படம் குறித்தும், அது பேசும் அரசியல் குறித்தும் நீங்கள் ஒரு விமர்சகனாக என்ன கருகின்றீர்கள்?

விதானகேயின் பல திரைப்படங்களை நான் பார்த்திருக்கிறேன். முக்கியமாக "எ டெத் ஆன் ஃபுல் மூன் டே", திரைப்படத்தை பார்த்து, நல்ல திரைப்படத்தை நேசிக்கும் ஒரு திரைப்பட ஆர்வலனாக அவரை பெரிதும் கொண்டாடினேன். தவிர பிரசன்னா விதானகே ஒருபோதும் தமிழ் மக்களுக்கு எதிராக பேசியதோ, அவரது படைப்பில் தமிழர்களுக்கு எதிராக காட்சிகள் வைத்தோ நான் பார்த்தது இல்லை. அவரது முந்தைய திரைப்படம் இலங்கையில் தடை செய்யப்பட்டிருக்கிறது, என்றால் அவர் நிச்சயம் தமிழர்களுக்கு எதிராக செயல்பட வாய்ப்பில்லை என்பதே என் எண்ணம். இந்த திரைப்படம் பேசும் அரசியல் என்பதை விட, நாவலின் ஆசிரியர் தஸ்தாயெவ்ஸ்கி பேசியிருக்கும் மனித உளவியலை இந்த படம் நேர்மையாக பேசுகிறது. வட்டிகடை வைத்திருப்பவனின் பொருளாசை, பெண் மீது காதல் வயப்படுவது, அவசர அவசரமாக கலவி கொள்வது, அவன் பற்றிய உண்மை அவளுக்கு தெரிந்ததும், கதையின் நாயகன் கொஞ்சம் கொஞ்சமாக மாறுவது போன்றவற்றை, விதானகே இந்த படத்தில் மிக சிறப்பான காட்சி மொழியில் பதிவு செய்திருக்கிறார். இந்த படம் தமிழர்களுக்கு ஆதரவான அரசியலை பேசுகிறதா என்பதை விட, அவர்களுக்கு எதிரான அரசியலை பேசவில்லை என்பதே எனக்கு முக்கியமாகபடுகிறது.

4. இலங்கை சினிமா (சிங்கள சினிமா) தமிழகத்துக்கு வருவதால், தமிழகத்தின் சினிமா வணிகம் பாதிக்கப்படும் என்ற அச்சம் உணரப்படுகிறதா?

இந்த கேள்வியை எப்படி எதிர்கொள்வது, எனக்கு இந்த அபத்தமாக படுகிறது. இந்தி சினிமாக்களே தமிழ் சினிமாவின் வணிக மதிப்பை குறைக்கமுடியாதபோது, தமிழ்நாட்டில் இன்னமும் வெளியாகாமல் இருக்கும் சிங்கள சினிமா எப்படி அதன் சந்தையை பாதிக்கும். தமிழ்நாட்டில் சிங்கள சினிமா வெளியாகும் வாய்ப்பே இல்லை என்றுதான் கூறவேண்டும். இந்த திரைப்படம், சிங்கள் படமாக மட்டுமில்லை, கதாபாத்திரங்கள் தமிழிலும் பேசுகிறது.

5. தொடர்ந்தும் இலங்கையில் இருந்து வருகின்ற படங்களை திரையிடும் எண்ணம் வைத்திருக்கின்றீர்களா?

இலங்கை மட்டுமல்ல, உலகில் எந்த மூலையில் இருந்து நல்ல படங்கள் வெளிவந்தாலும், அந்த திரைப்படங்களை தமிழ்நாட்டில் திரையிடுவேன். காரணம், தமிழ் ஸ்டுடியோ மாற்று திரைப்படங்களுக்கான, திரைப்பட ரசனைக்கான ஒரு இயக்கம். அதன் செயல்பாடுகளில் ஒன்று, உலகம் முழுக்க வெளியாகும் நல்ல சினிமாவை திரையிட்டு பார்வையாளர்களின் ரசனையை மேம்படுத்து, இங்கேயும் அப்படியான படங்களை தருவித்து கொடுப்பது. ஆனால் ஒருபோதும், தமிழர்களுக்கான எதிரான, அவர்களின் வாழ்வியலை கேள்விக்குள்ளாக்கும் படங்களை தமிழ் ஸ்டுடியோ ஒருபோதும் ஆதரிக்காது. திரையிடாது.
6. உங்கள் தெரிவில் ஈழத் தமிழ் படங்கள் உள்ளடக்கப்படுமா?

இதற்கு முன்னர் ஈழ தமிழர்கள் இயக்கத்தில் வெளிவந்த பல்வேறு குறும்படங்களையும், திரைப்படங்களையும் தமிழ் ஸ்டுடியோ சென்னை மற்றும் தமிழ்நாடு முழுக்க திரையிட்டு காட்டியிருக்கிறது. உதாரணமாக எல்லாளன் என்கிற திரைப்படத்தை, தமிழ்நாடு மட்டுமின்றி, புதுச்சேரியிலும் தமிழ் ஸ்டுடியோ திரையிட்டிருக்கிறது. அதற்காக எதிர்கொண்ட காவல்துறை அடக்குமுறைகள் ஏராளம்.

7. இந்த சர்ச்சைகளுக்கும், விவாதங்களுக்கும் முடிவாக நீங்கள் சொல்லும் பதில் என்ன?

தமிழ் ஸ்டுடியோ என்பது தமிழர்களின் திரைப்பட ரசனையை வளர்க்கவும், கேளிக்கை, நகைச்சுவை தாண்டி, சமூக அக்கறையோடு கூடிய திரைப்படங்கள் உருவாகவேண்டும் என்கிற நோக்கோடும்தான், தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. வீண் விவாதங்களையோ, சர்ச்சைகளை கிளப்புவதோ தமிழ் ஸ்டுடியோவின் நோக்கமல்ல. ஆனால் ஒரு திரைப்பட பிரதியை எப்படி அணுக வேண்டும் என்கிற தெளிவு தமிழர்களுக்கு இன்னமும் ஏற்படவே இல்லை. பாதிக்கப்பட்டவர்கள் கூட, விதானகேவை தங்களின் மரியாதைக்குரிய கலைஞன் என்று சொல்லும்போது, இங்கே இருந்துக்கொண்டு, தங்களின் இருத்தலை தெரிவிக்க போராடும், சில போலி போராளிகளே இத்தகைய சர்ச்சைகளை கிளப்பிவிடுகிறார்கள். நான் உண்மையாகவே தமிழர்களுக்காக போராடுபவர்களை பெரிதும் மதிக்கிறேன். ஆனால் அரசியலுக்காக ஈழ தமிழர்களை ஒரு பகடைக் காயாக மாற்ற நினைபவர்களை நான் எப்போதும் எதிர்ப்பேன்.
8. மேலிதிகமாக....

விதானகேவின் இந்த திரைப்படம், நிச்சயம் தமிழர்களுக்கு எதிரான திரைப்படம் அல்ல. பாதிக்கப்பட்டவர்களின் முகாமில் இருந்து வெளிவரும் திரைப்படங்களை, கொஞ்சம் நிறைகுறை இருந்தாலும் ஏற்றுக்கொள்வதில்தான், அவர்களின் அடுத்தக்கட்ட முன்னேற்றம் தொடங்கும். நாம் எல்லாரையும் ராஜபக்ஷேக்களாக நினைத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. உலகம் முழுக்க மனிதம் இன்னமும் இருந்துக்கொண்டுதான் இருக்கிறது. அத்தகைய மனிதம் மிக்க ஒரு கலைஞனாகத்தான் பிரசன்னா விதானகேவை நான் பார்க்கிறேன். படைப்புகளில் அரசியல் பார்க்க கூடாது என்று நான் சொல்லவே மாட்டேன். அரசியல் இல்லாத எதுவும் படைப்புகளே அல்ல என்பதை அறிந்தவன் நான். ஆனால், ஒட்டுமொத்த இலங்கையிலும் நடந்துக்கொண்டிருக்கும் அரசியலை, ஒரு திரைப்படத்தில், அதன் படைப்பாளி பதிவு செய்ய வேண்டும் என்று நினைப்பது அறியாமை. நாம் எதிரிகளிடம் எப்போதும் ஜாக்கிரதையாக இருப்பதில் தவறில்லை. ஆனால் எதிரி முகாமில் இருந்து உதவ முன்வருபவர்களை எப்போதும் எதிரிபோல் பாவிப்பதில் பொருளேதுமில்லை. அது நமக்கு ஆபத்தானதும் கூட.

நன்றி: ஜெரா (உதயன்)