young and beautiful படத்தின் இயக்குனர் François Ozon இணையத்திற்கு அளித்த பேட்டியிலிருந்து

காமம் என்றோர் உணர்வு மட்டும் இல்லையென்றால், அச்செயலுக்கு ஈடாக இன்னொன்றை கண்டறிகின்ற வரையிலும், அநேகம் பேர் மிருகமாகத்தான் அலைவார்கள். இன்னொரு பிரிவினரும் மிருகத்தன்மையுடன் திரிவார்கள். அவர்கள் யாரெனில் காமத்தை எப்படி எந்த முறையில் அணுகுவது என்ற தரம் தெரியாமல் அவற்றை முற்றிலும் உடலின் தேவையாக மட்டுமே கருதி, கண்மூடித்தனமாக பாலியல் வன்முறைகளில் ஈடுபடுகின்றவர்கள். இவர்களைப்பற்றியும், இவர்கள் செய்திருக்கக்கூடிய அநாகரிகமான பாலியல் வக்கிரங்களைப் பற்றியும் விலாவாரியாக செய்தித்தாள்களின் முதல் பக்கத்திலேயே இடம்பெற்று வருகிறது. பின்னர் சில நாட்களுக்குள், அது ஆணின் கண்மூடித்தனமான வெறிச்செயல் என்றும், அவ்வேளையில் அங்கு பெண்களுக்கு என்ன வேலை? என்றும், பிரச்சனைகளின் மையத்திலிருந்து விலகி சமூக ஒழுக்கத்தையே பிரதானமாக அலசத்தொடங்கிவிடுவார்கள். அடுத்த சில நாட்களுக்குள் முதல் பக்கத்தில் இடம்பெற்றிருந்த செய்தி கடைசிப்பக்கத்திற்கு வந்துவிடுவது போலவே, மக்களுக்கும் பேசுவதற்கு பல புதிய பிரச்சனைகள் தோன்றிக்கொண்டேயிருக்கின்றன.

இம்மாதிரியான காலத்தில் காமம் சார்ந்த புரிதல்களைக் கொடுக்கக்கூடிய படங்களை அவ்வப்போது திரையில் காண்கின்ற வாய்ப்புகள் ஏற்படுவதுண்டு. இவை பெரும்பாலும் திரைப்பட விழாக்களில் திரையிடப்படக்கூடிய சினிமாக்களின் மூலமாகத்தான் ஈடேறுகின்றன. இப்படங்களும் பல நாடுகளில் விருதுப்பட்டியல்களின் இடம்பிடித்தவைகளாக இருப்பதால் இவை பெரும்பாலும் சோடை போவதற்கு வாய்ப்பில்லை.

இத்தகு படங்கள் திரையிடப்படுகின்றத் திரையரங்களுக்கு கூட்டம் கூட்டமாகச் செல்கின்ற நம்மக்களில் சிலர், இதுவரையில் தமிழ்ச்சினிமாக்களில் காமம் சார்ந்து சித்தரிக்கப்பட்டிருக்கின்ற தவறானப் புரிதல் தருகின்ற படங்களையே பார்த்திருப்பதால், தனக்கு இது ஒவ்வாது என்று முகத்தைத் திருப்பிக்கொள்கின்றனர். இப்படி முகத்தை திருப்பிக்கொண்ட கூட்டங்களெல்லாம் ஒன்றாகச்சேர்ந்துகொண்டுதான் அப்படம் புரியவில்லை, நிர்வாணக்காட்சிகள் அதிகமாக இருக்கின்றன என்று குற்றம் சொல்லித்திரிகின்றனர். ஒருவனை முழுமையாக வசீகரிகப்படுத்துவதற்கு அவள் நிர்வாணமாகத்தான் நிற்கவேண்டுமென்ற அவசியமில்லை.
படம் எளிதாகப் புரிந்துவிடக்கூடாது என்று மல்லுக்கட்டிக்கொண்டு படமெடுக்கின்ற இயக்குனர்களுக்கு மத்தியில் நாம் வாழ்வதால் இவ்வாறான சினிமாவைப் புரியவில்லை என்று ஒத்துக்கொள்வதில் தவறில்லை. எனினும் திரைவிழாக்களில் திரையிடப்படுகின்ற படங்களை குறைந்தளவேனும் புரிந்துகொள்ள முயற்சியாமல், அவற்றை வெறுமனே குப்பை என்று பெருக்கித்தள்ளுவதில் எவ்வித பலனும் வந்துசேராது.

நம் தமிழ்ச்சினிமாவில் குப்பைகளின் நெடி அதிகமாக கலந்திருப்பதன் காரணமாக நாம் இதுவரை பார்த்துப் பழகிவந்திருக்கின்ற படங்களின் மேன்மைக்கு இழுக்காவதையும், நாம் பழகிவந்த ரசனைக்கு விசித்திரமானதாக இருப்பவைகளும் குப்பைகளாகத்தான் தோன்றும்.

அண்மையில் நடந்த சென்னை உலகத்திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட படங்களான blue is the warmest color, young and beautiful, puppy love போன்ற படங்கள் இப்படித்தான் பிட்டுப்படங்கள் என்று ஒருசிலரால் முகப்புத்தகத்தில் கேலிக்குள்ளாக்கப்பட்டன. ஒட்டுமொத்தமாக சென்சார் செய்யப்பட்டிருக்கின்ற சமூகத்திடமிருந்து இது போன்ற பதில்கள் வருவதில் ஐயமில்லை. இதில் படம் பார்த்துவிட்டு அதன்மீது வெறுப்புணர்ச்சியைக் காட்டுபவர்களைக் காட்டிலும், படம் பார்க்காமலேயே அவற்றின் மீது பிட்டுப்படங்கள் என்று போஸ்டர் ஒட்டுகின்றவர்களும் இருந்தனர். இவர்களுக்கெல்லாம் ’நான் ஒரு முட்டாள்’ என்று பொதுவெளியில் வெளிப்படையாக அறிவிப்பதில் அப்படி என்னதான் சுகமோ?

காமம் சார்ந்த படங்கள் வேண்டாம் என்பதற்கு காரணங்கள் இருப்பதைக் காட்டிலும், ஏன் அது சார்ந்த படங்கள் வேண்டும் என்பதற்கு நம் நாட்டில் அடிக்கடி நடந்தேறுகின்ற பாலியல் குற்றங்களே சாட்சியமாகின்றன.

இவர்கள் குற்றம் சாட்டுவதைப்போலவே ரசிகர்களின் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு வேடிக்கைப் பார்ப்பதற்காக அக்காட்சிகளை இயக்குனர்கள் வைக்கவில்லை. கதைக்கானத் தேவையாகத்தான் வைக்கப்பட்டுள்ளது. அப்படங்களின் இயக்குனரது பதில்களைக்கேட்கின்றபொழுது அவர் காமத்தை பிரதானப்படுத்தவில்லை என்பதும், அவற்றின் வாயிலாக பதின்பருவப்பெண்ணின் மனப்பதிவுகளையே பதிவிடுகின்றார் என்றும் அறிய முடிகின்றது.

உதாரணமாக young and beautiful படத்தின் இயக்குனர் François Ozon இணையத்திற்கு அளித்த பேட்டியிலிருந்து..,

Young and beautiful படத்தை இயக்குவதற்கு, உங்களை ஊக்குவித்த காரணிகள் எவை?

எனது முந்தைய குறும்படங்களில் சில இளமையை ஆராயப்படுத்தின. அதன் பின்னர் என் கதைக்கான தேர்வாக மூத்த நடிகர்களை நாட வேண்டி வந்தது. பின்னர் மீண்டும் இளைஞர்களின் வாழ்வை படமாக்கலாம் என்ற எண்ணம் வந்தபொழுது, நான் தேர்ந்தெடுத்துக்கொண்ட கதைதான் இது. இதில் ஒரு இளம்பெண்ணின் வாழ்வை பதிவுசெய்யலாம் என்று முடிவு செய்தேன்.

Isabelle இளம்பெண் மட்டுமல்ல, அவள் ஒரு விபச்சாரியாகவும் வேலை செய்கிறாள் அல்லவா?

பதினேழு வயதிற்கேயுரிய உடல் மாற்றங்கள் அவரவர் மனதில் என்னவிதமான மாற்றங்களை உண்டாக்குகின்றன, என்பதையே இப்படம் உணர்த்துகின்றது. வளர் இளம்பருவத்திற்கான உளவியல் சிக்கல்களை அடிக்கடி சினிமாக்கள் முணுமுணுத்தபடியேதான் இருக்கின்றன. என்னைப்பொறுத்தவரை இதுவொரு சிக்கலான வலிநிறைந்த பருவமாற்றம், அதற்காக உங்கள் பழைய நினைவுகளை கிளப்பிவிடுவதுபோலவும் படம் அமைந்துவிடக்கூடாது. பதின் பருவத்தில் நம் உடலானது தீவிர உடலியல் மாற்றங்களுக்குள் செல்கின்றது, ஆனால் இப்பொழுது உணர்ச்சியில்லாத வகையாக உணர்கிறேன். ஆகையால் அப்பொழுது உடலின் தாக்குதல்களை நாம் உணரவேண்டும், உடலின் எல்லையை தெரிந்துவைத்திருக்க வேண்டும். இளமையானது பாலியல் குறித்து எழுப்புகின்ற பாலியல் கேள்விகளை அறிந்துகொள்வதற்கும், விளக்கம் காணவும் விபச்சாரமே பிரதானப்படுத்தப்படுகின்றது. ஆனால், அங்கு உண்மையான உணர்ச்சியும், பாலியலும் ஒன்றிணைவதில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

Isabelle ன் குடும்பம் நிதிப்பிரச்சனையில் வாடுவதாக படத்தில் சித்தரிக்கப்படாத காரணத்தினால், அவள் தன் குடும்பநலனுக்காக விபச்சாரத்தில் ஈடுபடவில்லைதானே?

Isabelle தான் உயிர்வாழ்வதற்காகவோ, பள்ளிக்கு கட்டணம் செலுத்துவதற்காகவோ விபச்சாரத்தில் ஈடுபடவில்லை. உடலின் தேவையால்தான் அதனை மேற்கொள்கிறாள். இளமைப்பருவமானது எதையும் சாதித்துக்கொள்ளும் வளமையான பருவம். rimbaudன் கவிதையானதுதான் இத்தருணத்தில் நினைவு வருகின்றது ”no one’s is serious at seventeen”. அந்த வயதில்அறநெறிகளை கவனத்தில்கொள்வதில்லை. உலகையே திறப்பவர்கள் நாங்கள்தான் என்ற மாயையில் இருப்பார்கள். இதனால்தான் isabelle விபச்சாரத்தின் பாதையை பரிசோதனைப்பயணத்திற்காக தேர்ந்தெடுத்துக்கொள்கிறாள். ஆனால், அத்தருணத்தில் இது தவறானதென அவள் நினைக்கவில்லை.

Isabelle எதற்காகவும் அதிகமாக சந்தோஷப்படக்கூடியவளாக இல்லை. உணர்ச்சிகளை எதிர்கொள்ளும்பொழுதும், குறிப்பாக தன் கன்னித்தன்மையை இழந்தபொழுதும் இயல்பாகவே காணப்படுகிறாள் அல்லவா?

Marina devanனுடான உரையாடலின்பொழுது அவள் சிக்கலான தருணத்தில் இருண்மைகாட்டும் யோசனையோடு இருப்பதை காட்சிப்படுத்த விரும்பினேன். ஆண்களும், பெண்களும் உடலைக்கடந்த உணர்வு நிலையை பாலியல் மூலமாக கண்டறிந்து வித்தியாசமானதொரு அனுபத்தைப் பெறக்கூடும். ஒரே நேரத்தில் அங்கு இருப்பவராகவும், அல்லது அவ்விடத்தில் இல்லாமலிருப்பவராகவும் இருக்க வேண்டும். அதாவது படத்தில் கதாபாத்திரமாகவும், சூழலை கவனிப்பவராகவும் இருக்கவேண்டும். இந்த தருணத்தைத்தான் isabelleன் இரட்டைவாழ்க்கையை உணர, பார்வையாளர்களை தயார்படுத்தினேன். அதுவே இயல்பானதாக அமைந்துவிட்டது.

படத்தின் முதல் காட்சியிலேயே isabelleன் தம்பி அவளை நுண்ணோக்கியில் பார்ப்பதையே காட்சிப்படுத்தியிருக்கின்றீர்கள். அதன் மூலம் அவள் பிறரின் கண்காணிப்பிற்கு ஆட்படுகிறோம் என்ற எண்ணத்தை மீறுவதற்காக, தனியுரிமையை நாடிச்செல்கிறாள் என்பதாகக் கொள்ளலாமா?

Isabelleன் செயல்பாடுகள் முற்றிலும் வலுவான விளைவுகளை அமைக்கிறது, மேலும் இதற்கான விளைவுகளையும் தன் நெருங்கிய சொந்தங்களிடமிருந்தே கண்டுகொள்வதாகவும் அமைகின்றது.

கதையானது ஒவ்வொரு காலநிலை மாற்றத்திலும் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் வாயிலாகப் பயணிக்கின்றது. கோடையில் isabelleன் சகோதரனது பார்வையிலிருந்தும், இலையுதிர் காலத்தில் அவரது தாயார், குளிர்காலத்தில் வாடிக்கையாளர், வசந்த காலத்தில் அவரது தகப்பானரது பார்வையில் கதை நகர்ந்து மீண்டும் isabelleன் பார்வைக்கே வருகின்றோம். நான் நான்கு பருவங்களிலும் ஒரு முழுச்சுற்றில் கதை நகர்த்த வேண்டும் என்று திட்டமிட்டிருந்தேன்.

சொன்னதுபோலவே ஒவ்வொரு காலநிலைக்கும் தகுந்த வாறு பிரான்சிஸ் ஹார்டியின் பாடலும் இடம்பெற்றுள்ளது.
ஆம், ஒரு சாதாரண கட்டமைப்பிற்குள் முழு சுதந்திரத்தையும் கட்டமைக்க நான் விரும்பினேன்,. ஒரு இளம்பெண்ணின் கதையை பள்ளிப்பருவத்திலிருந்து நகர்த்துகின்ற படத்தில் பாடல்கள் இலக்கண நிறுத்தற்குறிகளைப்போன்று தருணங்களை வர்ணிக்கின்றன. மூன்றாவது முறையாக அவரது பாடல்களை பயன்படுத்தியிருக்கின்றேன்.

இளவயதிலேயே விபச்சாரம் செய்வது, மிகப்பெரிய பிரச்சனையாக இப்பொழுது கருதப்பட்டு வருகின்றது. இச்சமயத்தில் சமூகவியல் கல்வி நோக்கிச்செல்லாத வகையில் இக்கதையை எப்படி உங்களால் எடுக்க முடிந்தது.?

நிச்சயமாக ஆய்வு செய்த பின்பே என்னால் இக்கதையை படமெடுக்க முடிந்தது. இக்காலத்தில் இளைஞர்கள் தொலைத்தொடர்புத்துறையின் வளர்ச்சியில் உள்ளனர். ஆனால் என் இளம்பருவத்தில் இம்மாதிரியான கருவிகளின் வரவு அவ்வளாக இல்லை. எனவே இக்காலத்திய இளைஞர்களின் மனநிலையை அறிந்துகொள்வதற்காக, இதனை விசாரித்து வருகின்ற காவல்துறையினரையும், விபச்சாரத்தில் நிபுணத்துவம் பெற்று விளங்கிவருபவர்களையும், உளவியல் மருத்துவரான Serge Hefezயையும் சந்தித்தேன்.இம்மூவருமே இத்தகைய இளைஞர்களோடு பழக்கமுடையவர்கள். இவர்கள் கூறியவற்றிலிருந்து கதைக்குத்தேவையான நிகழ்வுகளை மட்டும் எடுத்துக்கொண்டு மீதியை என் கற்பனா சக்தியின் மூலமாகவும் நிரப்பிக்கொண்டேன்.

அவளை அணுகும் வாடிக்கையாளர்களில் georges மட்டுமே தனித்திருக்கிறார்.

ஆம். இருவருக்குமிடையே தொடர்பு இருந்தது. அவருடன் இருக்கும்போது அவள் இன்பமாகவே உணர்கிறாள். அவ்விருவரின் சந்திப்புகளிலும், தொடுதல்களிலும் மற்ற வாடிக்கயாளர்களிடம் இருப்பதுபோன்று இயந்திரத்தனம் தெரியாது. அவளுக்கு, georges ஈர்ப்புத்தன்மை வாய்ந்தவனாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். எனவே தான் அக்கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக Johan Leysenயைத் தேர்ந்தெடுத்தேன். அவரால் isabelleயை தன் வசப்படுத்த முடியும் என்று படம் பார்ப்பவர்களை நான் நம்ப வைக்க வேண்டும் அதற்கு Johan Leysen தான் சரியாக இருப்பார் என்பது என் எண்ணம். அவரிடம் எடுப்பான தோற்றம், வசீகரிக்கும் குரல், வடிவான முகம் உள்ளது. உடலளவில் Clint Eastwood போன்ற தோற்றத்தையும் கொண்டிருக்கிறார்.

Marine Vacth எப்படி isabelleன் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக அமைந்தார். இதுதான் அவர் பிரதான கதாபாத்திரமாக நடிக்கின்ற முதல் படமா?

ஆம், அதே வேளையில் கனமான பாத்திரமும் கூட, படம் துவங்குவதற்கு முன்பே நாங்களிருவரும் பலவாறாக கலந்தாலோசிப்போம், பிறகு சக நடிகர்களுடன் காட்சிகளுக்கான ஒப்பனை நடந்த பிறகே படப்பிடிப்பு துவங்கும். படத்திற்கான செயல்முறைகளிலெல்லாம் அவர் மிகவும் ஈடுபாட்டோடு கலந்துகொண்டார் என்பதை என்னால் உறுதியாக கூறமுடியும். அவருக்கான உடைகளை தேர்ந்தெடுப்பதிலிருந்து, திரைக்கதையை மேன்மைப்படுத்துவது வரை உடனிருந்து உதவிசெய்தார். அவரோடு பணியாற்றிய மற்ற நடிகர்களுடனும் சகஜமாகவே நடந்துகொண்டார். அவர் தன் உடலை படத்தின் நேர்த்திக்காக ஒரு கருவிபோல பயன்படுத்தியிருக்கிறார். பிற நடிகர்களைக்காட்டிலும் Marine Vacth என் கதைக்கு இணக்கமாகவே இருந்தார்.

Isabelleன் அம்மா கதாபாத்திரம் பற்றி?

ஆம், கதையின் ஒரு கட்டத்தில் அவரை நோக்கியும் முழுக்கவனத்தையும் திருப்புமாறு செய்தேன். தன் மகளின் பாலியல் வாழ்க்கை (காதல் வாழ்க்கை அல்லாத) தெரிய வரும்போது, பெற்றவளின் மனநிலை என்னவாக இருக்கும் என்பதும் கதையில் முக்கியம். எந்தப் பெற்றோரும் இந்த மூன்று கேள்விகளையும் எதிர்கொண்டே ஆக வேண்டும்.

பாலியல் பாதிப்பிற்கு தன் குழந்தை எப்படி ஆளானது.? அவர்களின் அச்சமும், கவலைகளும் என்னென்ன?

தன் குழந்தைகளின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பெற்றோர்கள் என்ற முறையில் தனக்கு எவ்வளவு தூரம் தெரியும்,.?

அதில் அவர்கள் எந்த அளவிற்கு தலையிட வேண்டும்.?

அம்மாவிற்கும் மகளுக்குமான உறவினை எவ்வகையிலான கற்பனையில் அமைத்தீர்கள்?

நான் அவர்களின் உறவை மிகவும் நெருக்கமாகக் காட்டவே விரும்பினேன். ஆனால் அதே சமயத்தில் இந்த வயதில் இவர்கள் நண்பர்களாக இல்லை என்பதையும் எச்சரிக்கையாகவே காட்டினேன். என் கதையில் வருகின்ற அம்மா கதாபாத்திரம் இந்த தலைமுறையில் இருப்பது போலவே மிகவும் நவீனமானவள்.

பாலியல் காட்சிகளை படமாக்குவதைப் பொறுத்தவரை உங்கள் அணுகுமுறை எப்படி இருந்தது?

நான் அவற்றை மிகவும் யதார்த்தமாக காண்பிக்க விரும்பினேன். அதே வேளையில் அவற்றை இழிவான நிலையில் சித்தரிக்கவும் விரும்பவில்லை. அவற்றின் மீது வழக்கமாக சொல்லப்பட்டு வருகின்ற தார்மீக நியாயங்களையும் தவிர்க்க விரும்பினேன். Isabelleyயை அணுகும் ஒவ்வொரு வாடிக்கையாளரும் ஒவ்வொரு குணாதியசங்களுடன் வருகின்றனர். அவர்கள் பலவாறாக அவளிடம் நடந்துகொள்கின்றனர், ஆனால் அவ்வேளையிலெல்லாம் isabelle எத்தகைய மனநிலையில் இருக்கின்றாள், அச்சூழ்நிலையை அவள் எவ்வாறு ஏற்றுக்கொள்கிறாள் என்பதைக் காட்டவே விரும்பினேன்.

காட்சிகளின் வக்கிரத்தன்மைக்காகவோ, வியாபார சமரசத்திற்காகவோ இயக்குனர் அவ்வித பாலியல் சம்பந்தமான காட்சிகளை படமாக்கவில்லை என்பது, இந்தப்பதில்கள் மூலம் தெளிவாகவே விளங்குகின்றது. இனிமேலும் தன்னையும் ஏமாற்றிக்கொண்டு, பிறரையும் ஏமாளியாக்குகின்ற முயற்சியில் இதுபோன்ற படங்களை கொச்சைப்படுத்திக் குளிர்காய்வதென்பது அருவருக்கத்தக்கது. ஆனால், இதுபோன்ற முயற்சிகளை தமிழிலும் செய்து பார்க்க புதுமுக இயக்குனர்கள் ஆவலாகத்தான் இருக்கின்றார்கள். அப்படியே அவர்கள் செய்து காண்பித்திருந்தாலும் இவ்வகையான காட்சிகளெல்லாம் திரைக்கு வராமலேயே தணிக்கைத்துறை மேலாளர்களின் கண்களுக்கு மட்டுமே தீனியாக அமைந்திருக்கும்.