அந்த 30 வெட்டுக்களை நான் ஏற்றுக்கொண்டிருந்தால், பப்பிலியோ புத்தா சிதைக்கப்பட்டிருக்கும்

பெர்லினாலே பனோரமாவில் திரையிடப்படும் "பப்பிலியோ புத்தா" இந்திய தணிக்கை வாரியத்தால் முதலில் தடை செய்யப்பட்டது. இந்திய திரைப்பட விழாக்களிலும் இந்த திரைப்படத்தை திரையிட தயங்கினார்கள். இயக்குனர் ஜெயன் செரியன், திரைப்பட உருவாக்கம் மற்றும் பொது திரையிடலுக்காக சான்றிதழ் பெற தணிக்கை முறையுடனான நீண்ட போராட்டம் குறித்த தனது அசாதாரன பயணத்தை நம்முடன் பகிர்கிறார்.

நியூயார்கை சேர்ந்த இயக்குனர் ஜெயன் செரியன் உருவாக்கிய மலையாள திரைப்படமான பப்பிலியோ புத்தா, தயாரிக்கப்பட்டத்திலிருந்து பல இடங்களுக்கு பயணம் செய்துள்ளது. வெட்டுக்களுடன் அல்லது வெட்டுக்களில்லாமலும் இந்த படத்திற்கு சான்றிதழ் தர தணிக்கை வாரியம் முதலில் மறுத்துவிட்டது, இறுதியில் சென்ற ஆண்டு கேரளாவில் சிறியளவில் வெளியிட்டை கொண்டு வர முடிந்தது. பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் இந்த படம் பனோரமா பிரிவில் இப்போது திரையிடப்படுகிறது. பப்பிலியோ புத்தா மற்றும் தணிக்கை குறித்து ஜெயன் செரியன் பேசுகிறார்:
பப்பிலியோ புத்தா எதைப் பற்றியது?

பப்பிலியோ புத்தா திரைப்படம், இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள இடம்பெயர்ந்த தலித்துகள் குழு ஒன்றை பற்றியதாகும். உண்மையான நில போராட்டங்கள் நடக்கும் கேரளாவின் சமூக சூழலில் உருவானது இது, பல உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாகும். கடந்த பத்தாண்டுகளில் கேரளாவில் நடந்த நில போராட்ட வரலாற்றை எடுத்துக்கொண்டு, அதன் மீது ஒரு திரைக்கதையை அடுக்கினேன். கேரள தலித் அனுபவங்களை ஒருங்கினைப்பதே செயல்திட்டமாகும்.

பெண் உடல் பொது வெளியில் எப்படி அணுகப்படுகிறது என்பதையும் இப்படம் கையாள்கிறது. ஒரு வாக்கியத்தில் சொல்லவேண்டுமானால், பெண்கள், தலித்துகள் மற்றும் இயற்கை ஆகியவற்றுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள் குறித்து இந்த படம் பேசுகிறது. பரந்த பார்வையில் இந்த மூன்று கூறுகள் பற்றியும் படம் விவாதிக்கிறது.

முதல் திரைப்படத்திற்கு இது ஒரு சவாலான மற்றும் கையாள துணிச்சலான பொருள் போல் தெரிகிறது. இது குறித்து படம் எடுக்க வேண்டும் என்று ஏன் தோன்றியது?

உண்மையில், எனது பெரும்பாலான படங்களில் அடையாள பிரச்சனை குறித்து ஆராய்வேன். எனது முந்தைய குறும்படம், 2012 MIFF'இல் விருது பெற்ற "ஷேப் ஆஃப் தி ஷேப்லெஸ்", நியூயார்க்கில் இருக்கும் பாலின நீர்மநிலை (gender fluidity) குறித்ததாகும்.
பப்பிலியோ புத்தா இந்தியாவில் நான் எடுக்கும் முதல் திரைப்படமாகும். இந்திய சூழலில், சாதி அடையளம் என்பது மிகவும் சிக்கலானது. ஒடுக்குமுறைக்கான கருவியாக பயன்படுத்தும் அதே நேரத்தில், அரசியல் இயக்கங்களின் மலர்ச்சியினால் அதிகாரமளிக்கும் கருவியாகவும் அதை பார்க்க முடிகிறது.

எனது பெரும்பாலான படங்கள் அடையாளங்களை ஆராய்வதாக இருக்கும், எந்த நிலையில் இருக்கிறார்கள் மற்றும் பல்வேறு மட்டங்களில் என்ன பங்குவகிக்கிறார்கள் என்பதுப் பற்றிய ஆய்வாக இருக்கும். அந்த வகையில் பப்பிலியோ புத்தா எனது மற்ற படைப்புகளின் நீட்சியே ஆகும்.

இந்தியாவில் நீங்கள் படப்பிடிப்பு செய்த முதல் படம் இது என்று கூறினீர்கள். உங்களுக்கு கிடைத்த அனுபவம் எப்படி இருந்தது?

இந்த திரைப்பட உருவாக்கம் உண்மையான சவாலாக இருந்தது. திரைப்பட கதாபாத்திரங்களுக்கான நடிகர் தேர்வில் நான் சில சோதனைகளை செய்துள்ளேன். திரைப்படத்தின் முக்கிய பாத்திரத்தில் நடித்தவர்கள் உண்மையான செயற்பாட்டாளர்கள், அதேசமயம் எப்போதும் வரும் முக்கிய நடிகர்களை இரண்டாம் நிலை பாத்திரத்தில் நடிக்க வைத்துள்ளேன். இந்திய சினிமாவில், தலித் கதாபாத்திரங்கள் மற்றும் நடிகர்கள் ஓரங்கட்டப்படுவதை நாம் பெரும்பாலும் பார்க்கிறோம். ஆனால் இந்த படத்தில், நான் அவர்களை மையத்தில் கொண்டு வர முயற்சி செய்துள்ளேன்.அதே நேரத்தில், எப்போதும் மையத்தில் இருப்பவர்களை ஓரத்தில் வைத்துள்ளேன்.

பெரும்பாலான முக்கிய கதாபாத்திரங்கள் தங்கள் வாழ்க்கைக்கு நெருக்கமான வேடங்களிலேயே நடித்துள்ளனர். உண்மை கதாபாத்திரங்களுக்கும் நடிகர்களுக்குமான நெருக்கம் மற்றும் கேரளாவின் சமீபத்திய வரலாற்று நிகழ்வுகளுக்கும் திரைப்படத்தில் வரும் சம்பவங்களுக்குமான நெருக்கம், இந்த திரைப்படத்தை இப்பகுதியில் அரசியல் உணர்ச்சிமிக்க ஒன்றாக செய்கிறது.

நான் இந்தியாவில் மாணவனாக இருந்த காலத்தில், கேரளாவின் இடதுசாரி இயக்கங்களில் ஈடுபட்டிருந்தேன், தலித் மற்றும் பழங்குடி பகுதிகளில் பணி செய்யும் வாய்ப்பும் கிடைத்தது. எனவே எனக்கு சொந்த அனுபவங்கள் இருந்தது.

நான் திரைக்கதை எழுதும் போது, இந்த பகுதிகளுக்கு மீண்டும் சென்று காவல் துறை மற்றும் அரசின் அட்டூழியங்களால் பாதிக்கப்பட்டவர்களை பேட்டி கண்டேன். திரைப்படத்தை எடுத்து முடிக்க நான்கு ஆண்டுகளானது. எழுதும் செயல் முறையும் மிக கடுமையாக இருந்தது. நிலப்போராட்டங்களினால் பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான சாட்சியங்களில் இருந்து திரைக்கதையை நான் உருவாக்கினேன்.
100% கல்வியறிவு மற்றும் உரிமைப் பெற்றுள்ள பெண்கள் எனக்கூறி கேரளாவின் நடுத்தர வர்க்கம் தங்களை மிகவும் முற்போக்கானவர்கள் என கருதுகிறது. ஆனால் அறிவுஜீவிகள் என்ற அழைக்கபடுவர்களுக்கும் முற்போக்கான இடதுசாரிகளுக்கும் கூட தலித் மற்றும் பழங்குடி பகுதிகளில் என்ன நடக்கிறது என்பதை பற்றி கவலை இல்லை. நான் ஒரு கலைஞன், கலையின் ஒரு பகுதியை உருவாக்குகிறேன், ஆனால் அதே நேரத்தில் இது மிக அதிக அரசியல் நிறைந்த கதை. எனவே இந்த திரைப்பட உருவாக்கம் என்பது எனக்கு பெரிய சவாலாக இருந்தது. கலையுணர்வில் சமரசம் செய்துக்கொள்ளக்கூடாது, அதே நேரத்தில் மக்களின் கதையை சொல்ல வேண்டும் என்கிற நோக்கத்தில் இருந்து விலகவே இல்லை.

திரைப்பட உருவாக்கம் முடித்தப்பின், தணிக்கை வாரியம் விதித்த தடை எனக்கிருந்த மிகப்பெரிய சவாலாகும்.

ஆம், உங்கள் திரைப்படம் பெரிய தணிக்கை சர்ச்சையில் சிக்கியிருந்தது. உண்மையில் தணிக்கை வாரியம் எதற்கு ஆட்சேபனை தெரிவித்தார்கள்?

காந்தியின் உருவ பொம்மையை எரித்து அம்பேத்கரைட்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் காட்சி மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் குழு ஒரு பெண்னை கூட்டு வல்லுறவு செய்யும் உண்மை கதையின் அடிப்படையிலான காட்சி; இந்த காட்சிகள் காரணமாக சான்றளிக்கப்படவில்லை.

படத்தில் கதாபாத்திரம் ஒன்று உள்ளது, ஆட்டோ ஓட்டுநர்; தலித் பெண் ஆட்டோ ஓட்டுநராக இருக்கும் காரணத்தால் ஆட்டோ ரிக்‌ஷா தொழிற்சங்கத் தலைவர் குழுவினால் கூட்டு வல்லுறவிற்கு ஆளானவர். அவர் அனைத்து எல்லைகளையும் வரம்பு மீறுகிறார், அவள் கட்டுப்படுத்த வேண்டியவளாகிறாள். இந்தியாவில் வல்லுறவு என்பது சமூக கட்டுப்பாட்டை நிலைநிறுத்த ஒரு முறையான கருவியாக மாறிவிட்டது.

வல்லுறவு காட்சிகள் இந்திய படங்களில் ஏற்கனவே இருக்கும் ஒன்று தான், ஆனால் அவர்கள் எனது படம் அரசியல் ரீதியானது என உணர்ந்தனர், ஏனென்றால் எனது கவனம் பெண் உடல் மீது இல்லை, பாலுணர்வு ஊட்டும் பகுதியை நான் தவிர்க்க விரும்பினேன், பெண்கள் மீது வன்முறை செலுத்தும் ஆண்கள் மீதே எனது கவனத்தை செலுத்தினேன்.

தவிர, மக்கள் பேசும் மொழியின் மீது தணிக்கை வாரியத்திற்கு பெரிய பிரச்சனை இருந்தது. எனது படத்தில் வரும் மக்கள் அன்றாடம் பேசும் மொழியிலேயே பேசுகிறார்கள். மாறாக திட்டமிட்டு, நவீன, சினிமா பேச்சு மொழியை அது பேசவில்லை.

மேலும், படத்தின் இன்னொரு கதாபாத்திரம் 1932'இன் காந்தியின் யேர்வாடா சத்தியாகிரகம் குறித்த அம்பேத்கரின் கருத்தை தெரிவிப்பார். தீண்டத்தகாதவர்களுக்கு தனி தொகுதி கொடுப்பதில் காந்திக்கு விருப்பமில்லை. சீக்கியர்கள், ஆங்கிலோ இந்தியர்கள், இஸ்லாமியர்கள் அதை பெற்றிருந்தனர், ஆனால் தீண்டத்தகாதவர்களுக்கு தனி தொகுதி கொடுத்தால் இந்துக்களை அது பிரித்துவிடும் என பயந்தார். அதனால் அவர் அதை எதிர்த்தார். பின்னர் அவர் சத்தியாகிரகம் தொடங்கினார், யேர்வாடா சிறை சத்தியாகிரகம் என்று அதை அழைத்தனர். காந்தியுடனான ஒப்பந்ததில் கையெழுத்திட அம்பேத்கர் முழுவதாக நிர்பந்திக்கப்பட்டார், அதுவே பூனா ஒப்பந்தம். "உண்ணாநிலையினால் எந்த நன்மையுமில்லை. அது அழுக்கான இழி செயலாகும். உண்ணாநிலை தீண்டப்படாதவர்களின் நலனுக்காக அல்ல. அது அவர்களுக்கு எதிரானது, அரசியல் சட்ட உரிமையை (அவர்களுக்கு வழங்கப்பட்டது அது) விட்டு கொடுக்க வலுக்கட்டாயமாக அதிகாரமற்ற மக்கள் மீது பயன்படுத்தியதாகும்." என்ற அம்பேத்கரின் கருத்தை ஒரு பிரபலமான புத்தகம் மேற்கோள் காட்டியுள்ளது.
அது வரலாறு. ஆனால் தணிக்கை வாரியம் படத்தில் வரும் கதாபாத்திரம் அம்பேத்கரை மேற்கோள் காட்டும் பகுதியை நீக்க வேண்டும் என்றனர். ஏனெனில் அவர்களுக்கு காந்தி புனிதமாகவே கருதப்பட வேண்டும் என்கிற கருத்து மேலோங்கியிருந்தது.

பின்பு சீராய்வு குழுவிற்க்கு சென்றோம், அதில் சில பிரபலமான இயக்குனர்களோடு 12 உறுப்பினர்கள் இருந்தனர். அவர்கள் 30 வெட்டுகள், பேச்சு நீக்கம் மற்றும் மங்கலாக்குதல் என 50 மாற்றங்கள் பரிந்துரைத்தார்கள். அந்த வெட்டுக்களை நான் ஏற்றுக்கொண்டிருந்தால், திரைப்படத்தின் வடிவம் முழுவதுமாக சிதைக்கப்பட்டிருக்கும்.

எனவே நாங்கள் தில்லியிலுள்ள திரைப்படத் தணிக்கை முதன்மை தீர்ப்பாயம் (FCAT) சென்றோம், அவர்களை சந்திக்க எங்களுக்கு 8 மாதங்களானது. காந்தியின் உருவ பொம்மை எரிக்கும் காட்சியை மங்கலாக்கும் படியும், அம்பேத்கரின் மேற்கோளை நீக்கும் படியும் அந்த குழு பரிந்துரைத்தது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என பெருமைக் கொள்ளும் இந்தியாவில் கலை படைப்பில் நேரடி தலையீடு என்பது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. பின்னர் தீர்ப்பாயத்திலிருந்து "A" சான்றிதழ் பெற்றோம்.

அந்த வெட்டுக்களை செய்ய வேண்டியிருந்ததா?

தனிப்பட்ட முறையில் ஒரு இயக்குனராக, அதை ஏற்க நான் மறுக்கிறேன். ஆனால் நாங்கள் படத்தை திரையிட்டு காட்ட வேண்டும். எனது தயாரிப்பாளரின் அவல நிலையை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.

இதற்கிடையில் இன்னொரு விஷயம் நடந்தது. கேரள சர்வதேச திரைப்பட விழாவிற்கு திரைப்படம் தேர்வானது, ஆனால் அரசியல்வாதி ஒருவரின் தொலைப்பேசி அழைப்பு வந்த பின் எடுத்துவிட்டனர்.

திரைப்பட விழா சமயத்தில், தனியார் அரங்கில் பிரத்தியேக திரையிடலை ஏற்பாடு செய்திருந்தோம். திரைப்படம் ஆரம்பிப்பதற்கு முன் காவல்துறை அதிகாரிகள் உள் நுழைந்து அனைவரையும் வெளியேற்றி அரங்கை அடைத்தனர். திரைப்படத்தை பார்க்க வந்த மக்கள் திரைப்பட விழா நடக்கும் இடத்திற்கு முன் இதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செயதனர்.

திரைப்பட விநியோக வழிவகையில் தணிக்கை எவ்வாறான பாதிப்பை ஏற்படுத்தியது?

அரசு நிதியுதவி பெறும் திரைப்பட திருவிழாக்கள், பப்பிலியோ புத்தாவை திரையிட மறுத்தனர். தீர்ப்பாயம் அளித்த "A" சான்றிதழ் செயற்கைக்கோள் விநியோக சாத்தியமில்லாமல் செய்தது. பொதுவான திரைப்பட விநியோகிஸ்தர்கள் தணிக்கை வாரியத்துடனான எங்கள் போராட்டத்திற்கு பின் எங்கள் படத்தை தொடவில்லை. தலித் பகுதிகள் மற்றும் பல்கலைகழக வளாகங்களில் பிரத்தியேக தனி திரையிடல்களில் நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும். இணைய விநியோக சாத்தியங்களை ஆராய்ந்துக் கொண்டிருக்கிறோம்.

இந்திய திரைப்பட தணிக்கை பற்றி என்ன நினைக்கிறீர்கள் மற்றும் உங்கள் திரைப்படத்தில் அது ஏற்படுத்திய விளைவு?

தணிக்கை வாரியம் மிகவும் பழைய வழிகாட்டல்கள் பேரில் இயங்குகிறது, அது அரசுக்கு அபரிமிதமான சக்தி கொடுக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக நினைக்கிறேன். கலை படைப்பில் அரசியல் ரீதியான தலையீடு செய்வதற்கான அரசு நிறுவனம் என்றே அதை நம்புகிறேன். ஒருவேளை எனது படத்தின் மேற்கோள் அவர்கள் பரப்பும் காந்தி குறித்தான தேசிய விவரிப்பை பலவீனப்படுத்தும் என அவர்கள் நினைக்கிறார்கள். ஒரு சமூகத்தில் அரசு சொல்லாடல்களுக்கு எதிர் கருத்து கூறும் சொல்லாடல்களுக்கு இடமில்லை என்றால், அதை நாம் ஜனநாயக சமூகம் என கூற முடியாது. தணிக்கை வாரிய நடவடிக்கையில் எந்த நியாயமும் இல்லை.
-------------------------------------------------------------------------------------------------------------
பிப்ரவரி 2014 - dearcinema.com இணையத்தில் வெளியான இந்தக் கட்டுரையை, தணிக்கை தொடர்பான பேசாமொழியின் சிறப்பிதழுக்காக அதன் வாசகர்களுக்கு மொழியாக்கம் செய்துக் கொடுத்துள்ளோம்.