ஆய்வு: வங்காளிகளின் தேடல்கள் (2005 ஆம் ஆண்டு வங்காளிகளின் படங்களை முன்வைத்து...)

ஆவணப்படுத்தும் நோக்கில் 'திரை' இதழில் வெளியான முக்கியமானக் கட்டுரைகளை பேசாமொழியில் அதன் ஆசிரியர் லீனா மணிமேகலை அனுமதியுடன் வெளியிட்டு வருகிறோம்.

“என்னைப்
பெற்றது
நான்தான்”

நகுலனைச் சந்தித்த போது இதைச் சொல்லி அவரைப் படம்பிடித்துக்கொண்டிருந்த இயக்குனர் அருண்மொழியிடம் அதற்கு அர்த்தம் என்ன என்று கேட்டார்.

அருண் மொழி சொன்ன விளக்கம் அவருக்குத் திருப்தி தராதது போல பார்த்துக் கொண்டிருந்தார். நான்கு நாள் இடைவெளிக்குப் பின் “செவ்வகம்” ஆசிரியர் விஸ்வாமித்திரனுடன் சந்தித்தபோது நகுலன் விஸ்வாமித்திரனிடம் அதே கவிதையைச் சொல்லி ’இதற்கு அர்த்தம் என்ன?’ என்றார், அவர் ஒருவனின் ஆளுமையும் வாழ்மனச் சூழலும் அவனின் வாசிப்பு, அவனைச் சுற்றி உள்ளவர்களால் உருவாக்கப்படுவது பற்றிச் சொன்னார். நகுலன் ஓரளவு திருப்தி அடைந்தவர் போல் புன்னகைத்தார். அதைத் தொடர்ந்து அவர் கேள்விகளைக் கேட்டார். பெரும்பாலும் பதில்களாக அவை அமையாமல் கேள்விகளாகவே அமைந்திருந்தன. “இது ஒரு வகை ஜென் தன்மையானது. கேட்கிற கேள்விகளுக்குக் கேட்டுக்கொண்டிருப்பது” என்றார் விஸ்வாமித்திரன்.

நகுலன் குறிப்பிடும் “தன்னை” உருவாக்கும் தன்மைகள் மனிதர்களுக்கு மனிதர் வேறுபடுகின்றன. நகுலனின் இவ்விரண்டு சந்திப்பு இடைவேளையில் பார்த்த சில வங்காளப் படங்கள் நகுலனின் தேடுதலின் ஒரு அம்சமாகத் தென்பட்டது. இயக்குனர் சுமன் முகோபாத்யாய் இயக்கியிருக்கும் “ஹெர்பர்ட்” படத்தில் இடம்பெறும் ஹெர்பர்ட் சர்க்கார் நாற்பது வயதில் வளர்ந்து நிற்கும் ஒரு மனிதன் என்றாலும் அவன் தன்னைத் தானே உருவாக்கிக் கொண்டவன்தான். பட்டாச்சாரியாவின் நாவலில் சர்க்கார் இப்படித்தான் விசுவரூபித்து நிற்கிறான். கல்கத்தா நகரத்தின் பிரமாண்டமும், அரசியல் போராட்டங்களும், சித்தாந்த வெடிப்புகளும் அவனைப் பெரிதாய் பாதிப்பதில்லை, பாலியல் ரீதியாகவும், காதல் போன்றவற்றின் ஈர்ப்பாகவும் பெண்ணொருத்தி பாதிப்பது கூட தற்செயலாக நடந்து கானல்நீராகத்தான் போய்விடுகிறது. எப்படியோ கிடைக்கிற புத்தகமொன்றில் தென்படும் இறந்தவர்களோடு பேசுதல் அவனுக்கு ஈர்ப்பாகிறது. அவனின் அறையில் வந்து தங்கும் பொதுவுடைமை சித்தாந்தத்திலும் தீவிரவாதத்திலும் அக்கறை கொண்டவன் பரப்பி வைக்கும் மார்க்சிய சித்தாந்த நூல்களும், கொடிகளும், பிரச்சாரப் பிரசுரங்களும் பாதிக்கவில்லை. அனாதைபோல அவன் இருக்கும் கட்டிடத்தில் இருக்கும் மற்றவர்கள் அவனுக்குத் தரும் உணவு மற்றும் உபச்சாரங்கள் அவனை நாற்பது வயது மனிதனாக உருவாக்கி இருக்கிறது. ஒரு வகையில் எடுப்பார் கைப்பிள்ளையாக இருக்கிறான். இறந்தவர்களோடு பேசுவதில் அவனுக்குக் கிடைக்கும் மகிழ்ச்சியும் பரிமாற்றமும் வேறு எவரோடுடனான பரிமாற்றத்தைவிட உன்னதமாகப் படுகிறது. ஆவிகளோடு பேசுவது புகழ் தரும் ஒரு விஷயமாகி அவனின் புகழை வியாபாரமாக்குபவர்களிடம் அவன் சிக்குகிறான். அவன் அலைக்கழிக்கப்படுகிறான். அவனது மரணமும் ஒரு கலவரம் போலவும், திருவிழா போலவும் கொண்டாடப்படுகிறது. தான் யார் என்பது நிர்ணயிக்கப்படாமலேயே இறந்து போகும் ஒருவனின் அடையாளம் மற்றவர்களால் சுட்டப்படுவதில் நிரந்தரமாக்கப்படுகிறது.

மார்க்சிய சித்தாந்தத்தால் உருவாக்கப்படும் ஒருவன் தன்னை அந்த சித்தாந்தத்திற்காக பலி கொடுப்பது சாதாரனமாக நிகழ்வதை சேகர் தாஸின் “கிராந்திகால்” படத்தில் காணமுடிகிறது. சேகர் தாஸின் முந்தையப் படம் “மலைகளின் பாடல்” சந்தால் ஆதிவாசிகளின் மாறி வரும் போராட்ட வாழ்க்கையைச் சித்தரித்த படம் மார்க்சியத் தீவிரவாதி தன்னை யார் என்று அடையாளம் கண்டுகொள்வதற்கும் ஒரு வாய்ப்பாக அவன் தலைமறைவாகி ஒரு வீட்டில் புகுவதில் இருக்கிறது. மன்னர் பரம்பரையினர் ஒருவரின் வீடு அது. முந்தைய பரம்பரையின் எல்லா கிரீடங்களையும் இழந்துவிட்டு அக்குடும்பம் வாழ்ந்துவருகிறது. முதியவரின் வயதான மகன் படுக்கையோடு இருப்பவன். விவாகரத்தான மருமகள். அந்த பழைய அரண்மனையின் ஒரு பகுதி அடைக்கலமாயில்லாத சிலருக்குப் புகலிடமாய் இருக்கிறது.
அடைக்கலமாயிருக்கும் பெண்கள் கைவிடப்பட்டவர்கள். அழுகை மட்டும் அவர்களை ஆசுவாசப்படுத்துகிறது. மருமகள் கல்லூரி உத்யோகம் தவிர அப்பெண்களையும், வயதான மாமனாரையும் பார்த்துக்கொள்வதே அவளின் நேரத்தை தின்று விடுவதாக இருக்கிறது. அடைக்கலமாகும் தீவிரவாதப் போராளி அவர்களின் மத்தியில் தன்னை அந்நியனாகவே உணர்ந்துகொள்கிறான். அடைக்கலமாகியிருக்கும் பெண்களில் ஒருத்தி காவல் துறையின் உளவாளியாக இருப்பாளோ என்ற சந்தேகமும் அவனுக்கு வருகிறது. வீட்டிற்கு வருகிறவர்களிடமோ, தொலைபேசி அழைப்புகளோ அவனை அடையாளம் காட்டத் தவறுவதில்லை. அவனை அடையாளம் கண்டு கொள்கிறவர்களிடம் தத்துவ விசாரங்களும், சர்ச்சைகளும், அவனது ஆயுதம் தாங்கிய போராட்டத்திற்கான நியாயங்களும் காணப்படுகின்றன. தேடிவரும் காவல் துறையினருடன் போரிட்டு அவன் சாக வேண்டியிருக்கிறது. அவன் என்னவாக அவனை நிலை நிறுத்திக்கொள்ள நினைக்கிறானோ அதுவாக அவனின் வாழ்க்கையை முடித்துக்கொள்கிறான். ஹெர்பர்ட் சர்க்காருக்கு ஏற்படும் சிக்கல் போராளிக்கில்லை. தன்னைப் பொறுத்த அளவில் என்னவாக ஆக ஆசைப்படுகிற கணமோ அது நிகழ்ந்துவிடுகிறது. அவனின் லட்சியப் பாதையின் மைல்கல்லாக அவன் முன் நிறுத்தப்படுகிறான் என்பதை சேகர் தாஸ் நிரூபிக்கிறார். எல்லா காலங்களிலும் இவ்வகைப் போராட்டங்களும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. அது மன்னர் பரம்பரைக் குடும்பத்திற்குள் ஊடுருவும் போது அவர்களுக்குள் ஏற்படும் அதிர்ச்சி மற்ற சமூகங்களுக்குள் குறைவாகவே ஏற்படுகிறது. அந்த அக்கறையின் வெளிப்பாடாகவே இவ்வகை படங்கள் அவரிடமிருந்து தொடர்ந்து வெளிவருகின்றன. அபர்ணா சென்னின் 15, பார்க் அவன்யூ படத்தில் இடம்பெறும் மீத்திக்கு (கொன்கொனா சென் சர்மா) அவள் என்னவாக இருக்கிறாள் என்பதை அவள் உணர்வதற்கான சந்தர்ப்பங்கள் மிகவும் குறைவாகவே நிகழ்கின்றன.

பிளவுபட்ட மனநிலை மற்றும் இன்னொரு உலகத்தில் யதார்த்தத்தை விட்டு விலகி வாழ்ந்துகொண்டிருப்பதும் சாதாரணமாகவே இருக்கிறது. அவளின் உலகம் எல்லோரையும் பயமுறுத்திக்கொண்டிருப்பது, அந்த உலகத்தை தரிசிக்க வீட்டில் உள்ளவர்களுக்கு கிடைக்கும் சில நிமிடங்களில் அவர்கள் மரணத்தை தரிசித்துவிட்டு திரும்பி உடல் நடுங்க மீதியைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அதை நோய் என்று அறிந்துகொள்ள பிறர் மறுக்கிறார்கள். (ஹெர்பர்ட் சர்க்கார் போல ஒருவன் தன்மகளின் மனச்சிதைவு நோயைப் போக்கிவிட முடியும் என்று ஒரு தாய் _வஹிதா_ரகுமான்_பேய் ஓட்ட ஒருவனை அழைத்து வந்து பேயை விளக்குமாற்றால் அடித்து ஓட்டும் சடங்கை தன் வீட்டில் நிகழ்த்தி கண்ணீர் வடிக்கிறாள்) கல்லூரிப்பேராசிரியை மூத்த மகள் அஞ்சலி (சப்னா ஆஸ்மி) வைத்தியமுறைகளும், மருந்தும்தான் தீர்வு என்று நம்பி மீத்திக்கு ஆறுதலாக இருப்பவள். ஆனால் மீத்தியால் தன் வாழ்க்கை தேங்கிப்போய்விட்டதாக உணரும்போது உடைந்துபோகிறவளாகவும் இருக்கிறாள். திருமணத்தைத் தள்ளி வைத்துக்கொண்டே போய் பிறகொரு எல்லையில் நிற்கிறாள். தன் காதலன் வெளிநாடு போகும் வேலை மற்றும் பிரிவு அவளை வெகுவாக பாதிக்கிறது. மீத்திக்காக வைத்தியம் பார்க்கும் மனநல மருத்துவர் மீது அஞ்சலிக்கு ஏற்படும் ஈர்ப்புகூட தற்காலிகமானதாகவும் அம்மாவால் கண்டிக்கப்படுவதாகவும் இருக்கிறது. மீத்தி சிறு வயதிலிருந்து தனிமையில் வேறொரு உலகத்தில் இருப்பவள். பத்திரிக்கையாளராக அவள் பணிபுரியும்போது அரசியல் குண்டர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு நிலைகுலைவது மனநோயின் அழுத்தத்திற்கு முக்கியமான காரணமாகிறது. ஓரளவு சமநிலைக்கு வரும் போது திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. திடுமென கிளம்பும் மனச்சிதைவு ஒத்தி வைக்கிறது. இளைஞன் ஜோஜோவிற்கு அதிர்ச்சியாக இருக்கிறது. பத்து ஆண்டுகள் கழித்து மீத்தியை அவன் சந்திக்கிறான். ஒரு விடுமுறை வாசஸ்தலத்தில் தன் மனைவி, இரு குழந்தைகளுடன் வந்திருப்பவன் மீத்தியைச் சந்திக்கிறான். மீத்திக்கு அவனை அடையாளம் கண்டுகொள்ள முடிவதில்லை.

ஆனால் அவனுடனான உலகத்தில் அவனுடன் பெற்றெடுத்த ஐந்து குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறவளின் இருப்பு அவளுக்கு ஆறுதல் தருகிறது. ஆறுதலும், அன்பும், அரவணைப்பும் நோய்க்கு மருந்தாக இருக்கும் என்பதை நம்புகிறான். தன் மனைவியின் வருத்தங்களும், அஞ்சலியின் உபதேசங்களையும் மீறி மீத்தியுடன் பழகுகிறான். 15, பார்க் அவன்யூவில் மீத்தி ஜோஜோவுடன் இருக்கும் அவள் உலகத்தைத் தேடி அவள் வீதிகளில் அலைந்து மறந்துபோகிறாள். வீட்டில் உள்ளவர்கள் மீத்தியைத் தேடுகிறார்கள். அவள் விரும்பும் உலகத்தில் அவள் ஐக்கியமாவது அவளுக்கு ஆறுதல் தரும், ஆனால் அவள் அவளின் யதார்த்த உலகிற்கு வெகு சீக்கிரம் வந்து விடுவாள். மீண்டும் மீண்டும் அவளினுலகத்திற்கு அவள் அலைந்து கொண்டும் இருப்பாள்.

சத்யஜித் ரேயின் மகன் சந்திப் ரே, சத்யஜித் ரேயுடன் பல படங்களில் பணிபுரிந்தவர். அவரின் மூன்று படங்களில் ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்திருக்கிறார். அவரின் திரைக்கதையை மையமாகக்கொண்டு பத்து ஆண்டுகளுக்கு முன் டார்கெட் என்ற படத்தையும் எடுத்திருப்பவர். அவரின் ஐந்தாவது படம் சமீபத்தில் வந்திருக்கிறது. மனிதர்கள் தங்களை எடை போட்டுக்கொள்வதற்கும், தங்களைப் பற்றின பரிசீலனையைச் செய்து கொள்வதற்கும் இயற்கை தரும் அதிர்ச்சிகள் உதவுகின்றன. பிமல் தாஸ் அரசாங்கப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின்பு ஹிமாலாயாவின் ஒரு கோடியில் தனிமையை அனுபவித்து வாழ்ந்து வருபவர். ஆற்றின் மேல் ஊசலாடும் ஒரு பாலம் வெளி உறவுக்குத் துணையாக இருக்கிறது. குளிர் காலமொன்றில் அவரின் குடும்பத்தினர் வந்து அவருக்கு ஆறுதல் அளிக்கின்றனர். திடுமென கிளம்பும் நில அதிர்ச்சி எல்லோரையும் பிரித்துப் போடுகிறது. அரசாங்க உதவிக்குழு வருவது ஆசுவாசப்படுத்துகிறது. இந்த இடைவெளியில் தங்களின் தனிமை, கையறுநிலை மற்றும் முன்பு விசுவரூபித்த தன்னகங்காரம் குறித்த பரிசீலனைகள் மனிதர்கள் என்னவாக இருக்கிறார்கள் என்பதையும், என்னவாக இருக்க ஆசைப்பட்டார்கள் என்ற பரிசீலனையையும் முன் வைக்கிறது.


ரிதுபர்னோ கோஷின் முந்திய படமான ரெயின்கோட்டின் பாத்திர விவரிப்பும், உள்ளார்ந்த காதலின் மேன்மையும் வெளிப்படுத்தும் தன்மைக்கு எதிர்மாறான குரூரமான சூழலும் வக்கிரத்தன்மையும் வெளிப்படும் படம் “அந்தர்மஹால்”. “சோக்கர்பாலி” போன்ற கலைப்படங்களில் வெகுவாக அக்கறை கொண்டவர் ரிதுபர்னோ கோஷ் என்பதும் வெளிப்படுகிறது. தாராசங்கர், பந்தோபாத்யாயாவின் சிறுகதை ஒன்றை மையமாகக் கொண்ட படம் இது. 19ஆம் நூற்றாண்டின் ஜமீன்தாரின் ஆதிக்கத்தையும் வெள்ளைக்காரனுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கும் தன்மையையும் இப்படம் விவரிக்கிறது. ஜமீன்தாருக்கு இளைய மனைவியின் மீது புது மோகம். அவள் கர்ப்பமுற்றிருப்பது அறிந்து படுக்கை அறையிலேயே புரோகிதர்களை வைத்து மந்திரங்கள் ஓதச் செய்து உடல் உறவின் போது அந்த மந்திரங்கள் கேட்டு உருவாகும் கரு உயர்ந்த அறிவாளியாக இருப்பான் என்று நம்புகிறவன். பூஜையின்போது காளி சிலை செய்ய இளைஞன் ஒருவன் அழைக்கப்படுகிறான். அவனின் தோஷத்தால் தடைபடப் போகும் சில காரியங்களுக்காக முதல் மனைவி பிராமணர்களுடன் படுக்க வேண்டும் எனவும் வற்புறத்தப்படுகிறது. சிற்பி உருவாக்கும் காளி சிலையின் முகம் விக்டோரியா இளவரசி முகமாக வடிவமைக்கச் செய்கிறான். அதன் மூலம் ஆங்கிலேயர்களை மனம் மகிழச் செய்வதும் லாபங்களைப் பெறுவதும், அரசாட்சியை தொடரச்செய்வதும் அவனின் நோக்கமாக இருக்கிறது. ஜமீன்தாரின் இளைய மனைவியின் மேல் கொண்ட ஈர்ப்பு காரணமாக காளியின் முகத்திற்கு பதிலாக இளைய மனைவியின் முகமாக அது அமைந்து விடுகிறது. ஜமீன்தார் அவளைக்கொல்ல விரைவதற்கு முன்பாக அவளே தற்கொலை செய்துகொள்கிறாள்.

பாலியலும், அதிகாரத்தின் வன்முறையும் பிராமணர்களின் சூழ்ச்சியும் கொண்ட உலகத்தை விரிவாக கோஷ் காட்டுகிறார். குரூரங்கள் புதைந்திருக்கும் மனித மனங்களின் விசித்திரம் பல பரிமாணங்களைக் கொண்டது. பாலியலையும் அதிகாரத்தையும் முழுமையாக அனுபவிக்கும் ஜமீன்தாரின் முகம் குரூரமானது. ஆங்கிலேயர்களைத் திருப்திப்படுத்த அவன் எடுக்கிற முயற்சிகளில் தலையாயது காளியின் சிலை முகம் விக்டோரியா இளவரிசியுடையதாக அமைக்கிற ஆசையில் முதிய சிற்பிகளை நிராகரிப்பதும் இளைஞனைத் தேர்வு செய்வதும், இளைய மனைவியின் கர்ப்பம் தவிர்க்க முதல் மனைவி தன் உடம்பைக்காட்டி புரோகிதர்களிடம் சரசமாடுவதும், அவளே தன்பாலியல் ஆசைகளை இளைய சிற்பியிடம் வெளிப்படுத்தி தோல்வியுறுவதும், புரோகிதர்களின் தந்திர நடவடிக்கைகளும் அதனதன் குரூரங்களுடனே வெளிப்பட்டிருக்கின்றன.

குரூரங்களின் மொத்த வடிவமான நிலப்பரப்புத்துவ ஆட்சியில் அதிகாரத்துவம் சார்ந்தவர்கள் செயல்படுவது சரியாகவே காட்டப்பட்டிருக்கிறது. இந்த குரூரங்களே கோஷ் போன்ற கலைஞர்களை வேறொரு பரிமாணத்தில் பார்க்க ஏதுவாகிறது. அதை நிராகரிக்கவும் கூட முயலலாம். குரூரங்களை குரூரங்களாகவே சொல்லத்தான் கலைஞர்களால் முடியும். அதைப்பூசி மழுப்புவது சிரமம்தான்.

ஒரு தெருக்கூத்துப்பெண் தன் மனதை வெளிக்காட்டிவிட்டதன் மர்மத்தால் ஒரு மருத்துவரின் வாழ்க்கை தடுமாறிப் போவதை “கால்புருஷ்” படத்தில் காட்டுகிறார் புத்ததேவ் தாஸ்குப்தா. தெருக்கூத்துப் பெண்ணிற்கு அது சாதாரண நிகழ்வாகக்கூட இருக்கலாம். அவளின் தெருக்கூத்தின் ஒரு நாடகமாகக் கூட இருக்கலாம். ஆனால் குடும்ப அமைப்பைக் கட்டி காக்க ஆசைப்படும் சராசரிப்பெண்ணிற்கு அது வாழ்க்கையையே சிதைக்கிறதாக அமைந்து விடுகிறது. இந்த சிதைவின் சுமையை வாழ்நாள் முழுவதும் மருத்துவர் அஸ்வினி சுமக்க வேண்டி இருக்கிறது. மகனையும், மனைவியையும் பிரிந்து வாழும் துயரத்தின் கொடுமையை அனுபவிக்க வேண்டி இருக்கிறது. வளர்ந்து பெரியவனாகி இரு குழந்தைகளுடன் இருக்கும் அவன் மகனும் இதே போன்ற சுமையைத் தாங்கிக் கொண்டிருக்கிறான் என்பது அஸ்வினிக்குத் தெரியாது.

மகன் தந்தையைக் குரூரமானவனாகவே வரித்துக் கொண்டிருக்கிறான். தன் மனைவியுடனான இடைவெளி என்பது நீண்டுகொண்டே இருக்கிறது. வேறு ஒருவனுடனான தொடர்பும் அமெரிக்கா சென்று விட்டு வந்தவள் பயணக்கட்டுரை எழுதி பிரபலம் ஆகி அவனை விட்டுச் செல்வதும் இயல்பாகவே நடக்கிறது. அவனின் இரு குழந்தைகளுக்கும் தந்தை அவனல்ல என்பதாய் அவள் சொல்லும் போது அது அவனுக்கும் தெரியும் என்கிறான். (அவனின் இயல்பே எல்லாவற்றையும் சாதாரணமாக ஏற்றுக்கொள்வதே என்பதாய்தான் தோன்றுகிறது. மனைவியின் அந்நியமான நடவடிக்கைகளுக்கு அவன் உணர்வு ரீதியாக எந்த எதிர்வினையையும் காட்டுவதில்லை. அவன் குடியிருப்பு வீதியில் நடக்கும் கொலைக்கு காரணமானவனைப் பூங்கா ஒன்றில் பார்க்கிறான். அப்போதும் அவனின் எதிர்வினை பதற்றத்திற்குள்ளாக்குவதாக இல்லை.) தந்தையுடனான அபூர்வ சந்திப்பு அவனுக்கு வேறொரு உலகத்தைக் காட்டுகிறது. நெகிழ்ந்து போகிறான். இழந்துபோன பால்ய வாழ்க்கையை மீட்டெடுக்கிற முயற்சியில் ஈடுபடுகிறான்.

புத்ததேவ் தஸ் குப்தாவின் இயக்கத்திலும், மிதுன் சக்ரவர்த்தி, ராகுல் போஸ் போன்றோரின் பிரதான கதாபாத்திர நடிப்பிலும் வெளிவந்திருக்கும் இப்படத்தின் தலைப்பு “பனியினூடே நினைவுகள்.” தந்தையும் மகனும் சிலுவைகளைக் களைந்து விட்டு தங்களைக் கண்டடைகிற முயற்சியில் ஈடுபடும் தருணங்கள் அபூர்வமானவை. அதில் தங்களைச் சார்ந்தவர்கள் இருக்கிறார்கள். ஆனாலும் தங்களைத் தேடும் அபூர்வ முயற்சிகள் அவர்களுக்கு வாழ்க்கையில் உற்சாகத்தை ஏற்படுத்தும். குரூரங்களுக்கு மத்தியில் அவர்கள் தங்களை நினைத்துப் பார்த்துக்கொள்ளும் சந்தர்ப்பங்கள் வாய்க்கின்றன. இந்தச் சந்தர்ப்பங்கள் புத்ததேவ் தாஸ்குப்தாவின் சென்ற படத்தின் (திரும்புதல்) மனிதர்களுக்கு நேராதது. எல்லையை நோக்கித் திரும்பும் கர்ப்பிணிப்பெண் தன் கணவன் மதக்கலவரத்தில் இறந்து அனாதையாகி நின்றாலும் எல்லைக்குத் திரும்பிவிட்டால் அதுவே ஆறுதலானது என்பதை மனதில் கொண்டுவிட்டவள். ஆனால் விளம்பரப்படங்கள் திரையிடும் அரசு ஊழியன் மற்றும் அவனது வாகன ஓட்டிக்கு குரூரங்கள் தேச எல்லைக்குத் தேவையில்லாமல் அப்பெண்ணுடன் துரத்துகிறது. சாவு தங்களைத் துரத்துகிறது என்பதை அறியாமல் அவர்கள் ஓடிக்கொண்டிருக்க வேண்டியிருக்கிறது.


தன்னைத் தேடுகிற மனிதர்களை வங்காள இயக்குனர்கள் அடையாளம் காட்டுகிறார்கள். இதற்காக அவர்கள் எடுத்துக் கொள்ளும் வெவ்வேறு விதமான மனிதர்களின் வகைப்பாடும் வாழ்க்கைப் பின்னணிகளும் சுவாரஸ்யமானவை. பல்வேறு காலகட்டங்களையும் நிகழ்வுகளையும் உள்ளடக்கியது. நீண்ட வாழ்க்கையின் வெவ்வேறு நிலைகளாக விளங்குபவை. மனிதர்கள் தங்களைக் கண்டடைகிற முயற்சிகளை முன் வைப்பவை. அல்லது தங்கள் இருப்பை உணராமலே வாழ்க்கையைக் கழித்துவிடுபவர்கள் பற்றியவை. மனித மனத்தின் ஆழங்காண முடியாத புரிதலுக்கு ரகசிய வழிகளைத் திறந்து வைப்பவை. மனிதர்களை உருவாக்கும் சூழல்கள் பற்றி விவரிப்பவை.

நன்றி: திரை – ஏப்ரல் 2006