இந்திய சினிமா வரலாறு – 2

திரிம்பகேஷ்வர் சாஸ்திரியின் வருகை

இந்நாட்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஊர் இது. 2200 மீட்டர் கடல் மட்டத்திலிருந்து உயர்ந்த, நாசிக்கிலிருந்து 28கி.மீ. தாண்டியுள்ளது திரிம்பகேஷ்வர். ரக்‌ஷ பந்தன் நாட்களில் இங்கு சித்ஹஸ்த கும்ப மேளா நடைபெறும். அன்று மட்டும், மூன்று லட்சம் பேர் இங்கு விஜயம் செய்வார்கள். ஏப்ரல் 30 ஆம் நாள் 1870 ஆம் வருடம், இங்கு தான் தாதா ஸாஹேப் பால்கே என பரவலாக அழைக்கப்படும் துந்தி ராஜ் கோபிந்த் பால்கே பிறந்தார். அவர் தந்தை தாஜி சாஸ்த்ரி பால்கேவைப் போல் இருவரும் பண்டிதர் ஆவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. பம்பாயில் உள்ள வில்ஸன் கல்லூரியில் தந்தை வேலைக்கு சேர்ந்தார். குடும்பமே பம்பாய் வந்து சேர்ந்தது. 1885 ஆம் வருடம் கலையார்வம் மிக்க மகன் பால்கே, தன் பள்ளிப் படிப்பை முடித்தபின், ஜே.ஜே.கல்லூரியில் சேர்க்கப்பட்டார். அங்கு புகைப்படக்கலை முதற்கொண்டு, எல்லா கலைத்துறைகளிலும் பயிற்சி அளிக்கப்பெற்றார். பரோடாவில் உள்ள ‘கலாபவனில்’ மேல் படிப்பைத் தொடர்ந்தார். (இன்று புகழ்பெற்ற பரோடா பல்கலைக் கழகத்தின் ஓர் அங்கம் இது) இளம் பால்கேயின் அபார திறமையை கண்ட கல்லூரி முதல்வர், கலாபவனின் புகைப்படக்கூடத்தை நிர்வகிக்கும் பொறுப்பை இவரிடம் ஒப்படைத்தார். அங்கு சிறிய அளவில் ஆராய்ச்சி செய்தவண்ணம், மாயாஜாலம், நாடகக்கலை, கட்டிடக் கலை போன்ற துறைகளிலும் பயிற்சி பெற்றார். பிற்காலத்தில் ‘சினிமா’ என்ற மாபெரும் மாயத்தை இந்தியாவிற்கு தருவிக்க, கலாபவனில் பால்கே பெற்ற பயிற்சியே அஸ்திவாரம்.
சுதேசி காட்சிகளைப் படம்பிடிக்க தயாராகுதல்:

1890ல், பரோடாவில் படித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் தனது முதல் புகைப்பட காமெராவை பால்கே வாங்கினார். மூவண்ண பிளாக் செய்தல், செராமிக்ஸ், போட்டோலித்தோகிராபி எல்லாம் கற்றுக்கொண்டார். நாடக ஒப்பனையாளர், புகைப்பட நிபுணர், பின்னணிச் சீல ஓவியர், ஆசிரியர், மந்திரவாதி என வயிற்று பிழைப்பிற்காக பல தொழில்கள் செய்தார். ஜெர்மானிய மந்திரவாதி ஒருவர் கீழ் முறையாக மாயாஜாலம் பயின்று, பின் புரொபஸர் கேல்பா என்ற பெயரில் மந்திர மாயாஜலங்கள் செய்தார். நாடகக் கம்பெனிகளிலும் ஓவியராக அவர் நீண்ட காலம் பணியாற்றியது விதியின் விளையாட்டே. 1903ல் அரசு தொல்பொருள் துறையில் புகைப்படக் காரராக அவர் பணியாற்றிய காலத்தைப் பற்றி அவர் சொல்கிறார்.... “சுதேசி போராட்டம் உச்சத்தில் இருந்த கால கட்டம். அதைப் பற்றி காரசாரமான வாதங்கள் நடந்துகொண்டு இருந்தன. அதன் விளைவாக எனது குஷியான அரசாங்க உத்தியோகத்தை விட்டு வந்தேன். எனக்கு என்று தனியாக ஒரு துறையைத் தேடினேன்...

ராஜ ரவி வர்மாவுடன் பரிச்சயம்

சில நண்பர்களுடன் கூட்டாக, 1908ல், லோனோவாலாவில், பால்கே அச்சுத் தொழில் (Phalke Art Printing & Engraving Works) துவங்கினார். அதன் முக்கிய பங்குதாரர் என்ற முறையில் பால்கே, ஜெர்மனி பயணமானார். மூவண்ண அச்சு வேலைகளுக்கான மெஷின் ஒன்றை ஜெர்மனியிலிருந்து இறக்குமதி செய்தார். இதில் மெஷின் உதவியுடன் இந்த தொழிலை இந்தியாவிற்கு கொண்டு வந்த முன்னோடியானார் பால்கே. அவரது தொழிலும் நன்கு முன்னேறியது. அதன் மூலம் ராஜா ரவி வர்மாவை சந்தித்தார். லக்‌ஷ்மி ஆர்ட் பிரிண்டிங்க் வர்க்ஸ் என்ற ரவிவர்மாவின் நிறுவனத்திற்கு, பால்கே பல வேலைகள் செய்தார். பால்கேயின் பிற்கால திரைப்படத் தொழிலை ரவிவர்மா ஏகமாக பாதித்தார். பால்கேயின் மேற்பார்வையில் வெளிவந்த ரவிவர்மாவின் ஓவிய அச்சுகள் அவரது பாணிக்காக அவரை சிறப்பித்தன. அவரது பாணி., பால்கே பிற்காலத்தில் இயக்கிய புராண திரைப்படங்களுக்கு பெரும் உதவியாக இருந்தது. “ஏசுவின் வாழ்க்கை” வழிகாட்டியது.
புது மெஷின் வருகை மற்றும் பால்கேயின் தொழில்நுட்ப உதவியுடன், அந்நிறுவனம் விருத்தி அடைந்தது. ஆனால் அச்சு வேலையில் பால்கே திருப்தி அடையவில்லை. 1910ல் அவரது வாழ்க்கையில் விதி விளையாடியது. நிறுவன பங்குதாரர்களுடன் தகராறு ஆனதால், பால்கே வெளிநடப்பு செய்தார். வேறு வேலை தேடிக்கொண்டிருந்த பொழுதுதான் அமெரிக்க – இந்திய இணை தயாரிப்பான ஏசுவின் வாழ்க்கை (Life of Christ) என்ற திரைப்படத்தை பார்த்தார். 1910ல் கிருஸ்துமஸ் திருநாள் அன்று (அன்றைய பத்திரிக்கை விளம்பரங்கள் 1911ல் ஈஸ்டர் திருநாள் என கூறுகின்றன) 1917ல் நவயுக் என்ற பத்திரிக்கையின் நவம்பர் பிரதியில் பால்கே சொல்கிறார்.... “இதற்கு முன்னால் நான் பல படங்களை பார்த்திருப்பேன். ஆனால் அந்த சனிக்கிழமை ... என் வாழ்க்கையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. இந்தியாவின் பல பெரிய, சிறிய தொழில்துறைகளில், ஐந்தாவது இடத்தில் இருக்கும் துறை அன்றுதான் துவங்கியது. என்னுள் ஒரு அரூவமான உணர்ச்சி ஓட்டத்தை உணர்ந்தேன். ஏசுவின் வாழ்க்கையின் பல கட்டங்களை பார்த்து, என்னையும் அறியாமல் கை தட்டிக் கொண்டிருந்தேன். என் கண்முன்னே ஏசுவின் வாழ்க்கைக் காட்சிகள் உருண்டோட, என் மனக் கண்ணில் , கிருஷ்ணரும், ராமரும் கோகுலத்தில், அயோத்தியில் நாட்டியமாடினார்.. இது நடைபெறக் கூடுமா? இந்திய மக்களான நாம், வெள்ளித்திரையில் இந்திய காட்சிகளை பார்போமா?... அன்றிரவை பெரும் மன சஞ்சலத்தில் கழித்தேன்”.

பால்கே மறைவிற்கு பின் எழுதப்பட்ட சுயசரிதை ஒன்றில் திருமதி சரஸ்வதி பால்கே சொல்கிறார்... “அன்றிரவு அவருக்கு இருப்பே கொள்ளவில்லை. புத்தகங்களை புரட்டினார். அடுத்த நாள் மீண்டும் அந்த படத்தைப் பார்க்கப்போனோம். படம் முடிந்தவுடன் “எப்படி இந்த படங்கள் நகர்ந்தன?” என்று கேட்டேன். என்னை ப்ரொஜக்‌ஷன் அறைக்கு அழைத்துச் சென்று எல்லாவற்றையும் விளக்கினார். திரும்பி வரும்போது,... “உனக்கு தானாக எல்லாம் விளங்கும். இனி., இது தான் நம் தொழில். இன்று ஏசுவை பார்த்தது போல் நாளை கிருஷ்ணரையும், ராமரையும் பார்க்கப் போகிறாய்...” என்றார். எனக்கு இதனை கேட்க சந்தோஷமாக இல்லை; ஆனால் எதுவும் பதிலுரைக்கவில்லை. அரங்கத்திற்கு வெளியே தூக்கி எறியப்பட்ட பிலிம் சுருள் சிலவற்றை அடுத்த நாள் கொணர்ந்து, பூதக்கண்ணாடி கொண்டு ஆராய்ந்தார். அடுத்த நாளே ஒரு பொம்மை ப்ரொஜக்டர் வாங்கினார். கூட கொஞ்சம் பிலிம் சுருளும் வந்தது. அன்று இரவு , ஒரு மெழுகுவர்த்தி உதவியுடன், எங்கள் வீட்டு சுவரில் அவரது முதல் திரைப்படக் காட்சி நடந்தது..” (காக்கி என்கிற சரஸ்வதி பால்கே , அவரது திரைப்படத்துறை வாழ்க்கையில் பெரும் பங்கு வகித்தார். நாசிக்கில், அவர்களது வீட்டு சமயலறை காக்கியின் ராஜ்ஜியம், திரைப்படக்குழுவின் மொத்த பேர்களுக்கு அன்றாடம் சமையலைத் தவிர, அவர்கள் எடுக்கும் படத்தின் லாபரெட்டரி வேலையும் அங்கு தான் நடைபெறும்)

தனது நவயுக் கட்டுரையில் பால்கே மேலும் எழுதுகிறார்... “இரண்டு மாதங்களுக்கு.. பம்பாய்க்கு வரும் ஒவ்வொரு படத்தையும் நான் பார்த்தாக வேண்டும். அதை இந்நாட்டில் எப்படி செயலாக்குவது என்பதிலேயே என் எண்ணம் சுழன்றது. இத்துறையின் லாப கணக்கைப் பற்றி எனக்கு சந்தேகம் இல்லை. ஆனால் எப்படி செயல்படுவது?”

ஒரு முன்னோடியின் போராட்டம்:

சூழ்நிலை பால்கேவிற்கு சாதகமாக இல்லை., நிச்சயமான வருமானம் இல்லாதவர். திரைப்படத்தைத் தவிர வேறு எது செய்யவும் அவர் தயாராக இல்லை. வரும் நாட்கள் அச்சுறுத்தியது. ஆனால் பால்கே அயராது நடைபோட்டார்... “ஒரு வருடத்திற்கு எனக்கு சொந்தம் என்று இருந்தது எல்லாவற்றையும் விற்றேன். தேவையான கருவிகளின் விலைப்பட்டியலையும், புத்தகங்களையும் சேகரித்தேன். ஆறு மாதங்களுக்கு எனக்கு தூக்கம் என்பதே இல்லை. தொடர்ச்சியாக படம் பார்த்தாலும், தூக்கமில்லாததாலும், மனச்சுமையாலும் எனது கண்பார்வை கெட்டது. குடும்பச் சுமையும், உறவினர்களின் எக்காளமும் என்னை குருடாக்கின. டாக்டர் பிரபாகரின் சமயோசித சிகிச்சையால் எனது பார்வையை மீண்டும் பெற்றேன்.” தனது பாலிஸிக்களை அடமானம் வைத்து எனக்காக ரூ.10000 புரட்டினார். “நான் காணும் கனவிற்கும், உண்மையான வெளிநாட்டு சினிமாவிற்கும் இருக்கும் சம்பந்தத்தை ஆராயாமல் இவ்வளவு பெரிய தொகையை ஏற்பது எனக்கு புத்திசாலித் தனமாக தோன்றவில்லை”

1912ஆம் ஆண்டு பிப்ரவரி 1 ஆம் தேதி லண்டன் பயணமானார் பால்கே. தனது விலைப்பட்டியலை கொண்டு பல சினிமா கருவி கடைகளை அணுகி, தனக்கு தேவைப்பட்ட கருவிகளைத் தேடினார். அங்கிருந்த போட்டி மனப்பான்மை அவரை குழப்பியது. “பயாஸ்கோப்” என்ற வார பத்திரிக்கையின் ஆசிரியர் காபோர்ன் பால்கேயிடம் அவரது கனவை விட்டுவிட சொன்னார். இங்கிலாந்திலேயே தோல்வியுற்ற படத்தயாரிப்பாளர்களை பற்றிச் சொன்னார். பல நாட்கள் விவாதத்திற்குப் பிறகு சிசில் ஹெப்வர்த் என்ற இயக்குனரிடம் பால்கேவை அறிமுகம் செய்தார். அவரது ஸ்டுடியோவில் எல்லா துறைகளையும் அலச பால்கேவை அனுமதித்தார் ஹெப்வெர்த். இரண்டு வாரங்களுக்கு பிறகு ஒரு வில்லியம்சன் காமெரா, பெர்பெரேட்டர் (Perforator) கச்சா பிலிம், புத்தகங்களுடன் இந்தியா திரும்பினார் பால்கே. (இன்றைய தயாரிப்பாளர்களிடையே, திரைப்பட இலக்கியங்களுக்கு ஒரு நிகழ்ச்சி இருப்பது உண்மை)

இந்திய திரைப்படத்தின் ஜனனம்

தான் புதிதாக வாங்கி வந்த காமெராவைக் கொண்டு 1912ஆம் ஆண்டு ஒரு பட்டாணிச் செடியின் வளர்ச்சி (The Birth of a Pea Plant) என்ற சிறிய படத்தை இயக்கினார். ஒரு மாதத்திற்கு தனித்தனி ஷாட்களாக, அதன் வளர்ச்சியை பதிவு செய்திருந்தார். தன் நண்பர்கள் இப்படத்தை காண அழைத்தார். அவர்களில் ஒருவர், புகைப்படக் கருவி விற்பனையாளரான யஷ்வந்த் நட்கர்ணி (Yeswant Nadkarni) பார்த்தவர்கள் வியப்படைந்தனர். பால்கேவிற்கு பண உதவி செய்ய முன்வந்தனர். அடமானமாக திருமதி பால்கே தன் நகைகளைத் தந்தார் வேலை துவங்கியது.

தனக்கு மிகப் பிடித்தமான கிருஷ்னர் கதையை தற்காலிகமாக கைவிட்டு, புதிதாக, சுலபமான கதையை எடுத்தார். இதிகாச கதையான இது, மக்களிடையே கண்டிப்பாக வரவேற்பு பெறும் என நம்பினார் பால்கே. மஹாபாரதத்தின் அங்கமான இது, ஒரு பழங்கதை.. ஆனால் திரைப்படம் உருவாகுவதில் பிரச்சனை பணம் மட்டும் அல்ல. அன்று தேர்ச்சி பெற்ற நடிகர்கள் தாராளமாக கிடையாது. இத்துறைக்கு இன்றுள்ள அளவு மரியாதையில்லாததால் கெளரவமான குடும்பங்களிலிருந்து நடிகர்கள் வருவது இல்லை. “அழகான முக அமைப்பு சினிமாவிற்காக தேவை” என்று 1912 ஆம் ஆண்டு மே மாதம் இந்திர பிரகாஷ் என்ற பம்பாய் பத்திரிகையில் பால்கே விடுத்த விளம்பரத்திற்கு, மூன்றாம் தர நாடக நடிகர்களே வந்து சேர்ந்தனர். ஆனால், பெண் நடிகைகளோ கிடைக்கவே இல்லை. பெண் கதாபாத்திரங்களில் தோன்ற பெண்களே தேவையென பால்கே நினைத்தார். “சிவப்பு விளக்குப் பகுதி பெண்களே விண்ணப்பித்தனர். அவர்களையும் நான் பார்வையிட்டேன்”என்றார் பால்கே. ஆனால், ஏதோ பயத்தில் அவர்களும் பின் வாங்கினர். வேறு வழியில்லாமல், அன்றைய நாடகங்களிலிருந்தது போலவே, ஆண்களை பெண் வேடங்களுக்கு தயார் செய்தார். ஒரு உணவு விடுதியில் தனது கதாநாயகியாக நடித்த ஆணை சந்தித்தார். அவர் சமையல் செய்து பெற்றதை விட ஐந்து ரூபாய் அதிகமாக சம்பளம் தந்தார் பால்கே. ஆக ராஜா ஹரிச்சந்திராவில் (1912) சந்திரமதியாகவும், லங்கா தகனில் (1913) சீதாவாகவும் நடிக்க ஒப்புக்கொண்டார் சாலுங்கே.

இடர்களின் இடையே:

தயாரிப்பில் பிரச்சனைகள் ஏராளம். 1928ஆம் ஆண்டு திரைப்பட விசாரணை குழுவிடம் பால்கே சொன்னார். .. “நானே எல்லாவற்றையும் செய்தேன். திரைக்கதை எழுதி, நடிகர்களுக்கு பயிற்சியளித்து , ஒளிப்பதிவு செய்து, பின் அரங்கங்களில் ஒட்டவும் செய்தேன். 1911ல் இந்நாட்டில் இத்துறையை அறிந்தவர்கள் சிலரே. “தாதர் மெய்ன் ரோடில் தனது ஸ்டுடியோவை ஏற்படுத்தினார். ராஜா ஹரிச்சந்திராவிற்கான செட்டுகளை அங்கு நிறுவி, படப்பிடிப்பைத் தொடங்கினார். பகல் வேளைகளில் படப்பிடிப்பு செய்து, இரவு நேரத்தில் பிலிமை பதப்படுத்துவார். ஆனால் பாதியுத்தம் தான்முடிந்தேறியது. விளம்பரமும் வெளியீடும் திறமையாக அதேயளவு கவனம் தேவைப்பட்டது. மேனஜ் பத்திரிகைக்கு 1939 அவர் அளித்த பேட்டியில் பால்கே சொல்கிறார். “திரைப்பட தயாரிப்பிற்கான, ஓவியம் நாடகம், மாயாஜாலம், கட்டிடக்கலை, நிழற்படக்கலை ஆகியவற்றின் பரிச்சயம் எனக்கு இருந்தாலும், மிகுந்த தைரியத்துடன் இத்துறையில் நான் முதல் அடி எடுத்து வைத்தாலும், தான் 1912ல் இந்நாட்டிற்கு இத்துறை வந்தது என்ற பெருமிதம் எனக்குண்டு”

ராஜா ஹரிச்சந்திரா (1913)

பால்கேயின் முதல் முழு நீளப் படம் (3700 அடிகள்) 1912ல் முடிவடைந்தது., 1913ஆம் ஆண்டு மே 13 ஆம் தேதி காரனேஷன் திரையரங்கில் வெளியிடப்பட்டது. 1913ல் ஏப்ரல் 21ஆம் தேதி, ஒலிம்பிக் சினிமா அரங்கில் பிரத்தியேக காட்சி, பத்திரிக்கையார்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டது. எல்லோராலும் ஏக மனதாக பாராட்டப்பட்டது. மஹாபாரதத்தின் ஓர் அங்கமான இக்கதை, மேடை நாடகமாக ஏற்கனவே பிரபலமானது. குஜராத்திலும், ஹிந்தியிலும் வினாயக் பிரஸாத் தாலிப்பினால் பார்ஸீ பாலிவாலா விக்டோரியா நாடக குழுவிற்காக (Parsee Theatre Baliwala Victoria Group) எழுதப்பட்ட நாடகம் மிக பிரபலமானது. உண்மைக்காக தன் மனைவி குழந்தை, ராஜ்யத்தை இழந்த சரித்தர நாயகனின் கதை (இவ்வாறாக அரங்கேறுகிறது). ரவிவர்மாவின் ஓவிய அமைப்புக் கொண்ட இக்காட்சி தொடங்குகிறது. அழகிய வனத்தில் கறுப்பு வெள்ளை செப்பனிட்ட தரையுடன் அழகிய பூந்தொட்டிகள் அணைகாக்க, மரங்கள் வானத்தை தொடும் வண்ணம் இருப்பது போல் விரிகிறது. ராஜ உடையில் காட்சியளிக்கும் அவ்வரசன் தன் மகனுக்கு அம்பு எய்யும் கலையை பயிற்றுவிப்பதையும் காண முடிகிறது. அவரது மனைவி சந்திரமதி தன் மகனுக்கு அம்பு எய்ய உற்சாகமூட்டுவதையும், காண்கிறோம், மகன் அம்பு எய்கிறான். மன்னன் கொணர பணிக்கிறான். பணிப்பெண் மறைந்து அம்பு எய்த பூசனியுடன் வருகிறாள். மன்னனிடம் தருகிறாள். மன்னம் சந்திரமதியிடம் பூசனியை தர, அவளின் அக்கறையின்மையை உணர்ந்து, மீண்டும் பணிப்பெண்ணிடமே திருப்பித் தருகிறார். இந்த சமயம் மன்னனின் மெய்க்காவலன் திரையில் வருகிறான் அவனுடன் இராஜ குடும்பத்தைச் சார்ந்த ஒரு கூட்டம் வருகிறது; மன்னனை வேட்டைக்கு அவர்கள் அழைக்கிறார்கள்.
அரசன் அவர்கள் அழைப்பை ஏற்க, பணிப்பெண் வாளை மன்னனிடம் தருகிறாள். “அரசன் வேட்டைக்கு செல்கிறார்” என விளக்க அட்டை வரும் பின் மகன் குனிந்து வில்லை எடுக்க , மன்னன் அவனை தட்டிக்கொடுப்பார். விருப்பமில்லாமல் குடும்பத்திடமிருந்து விடைபெற்றுக் கொண்டு மன்னன், பிரஜைகளுடன் செல்வார். அரசியும், பணிப்பெண்ணும் மகனை பாராட்டியவாறு வெளியேறுவர். இது அத்தனையும், படத்தின் முதல் காட்சி காமெரா ஒரே குறிப்பிட்ட இடத்தில் இருக்கும்.
முதல் காட்சியில் அக்குடும்பத்தின் மகிழ்ச்சியும், பிற்காலத்தில் அக்குடும்பம் கலைந்து போகும், என்பதும் காட்டப்படும். பின்னணியிலிருந்து பிரஜைகள் வரும் வாயில் வழியாக ஒரு நாள் மன்னன் வெளியேற்றப்படுவார் என்பதும் நமக்கு தெரிந்துவிடும். நாடக மேடைகளின் பக்கங்களை போல் பால்கே பிரேம்களை பயன்படுத்தினார். பாட் ஓவியங்களில் இருந்தது போல் பார்வையாளர்களின் கண்ணோட்டத்தை வைத்தே கதாபாத்திரங்களின் இடம் நிர்ணயிக்கப்படும்.

அரச வேட்டை பின் பக்கத்திலிருந்து நுழைந்த வேட்டையாடி வெற்றி பெறும். அப்பொழுது மன்னன் தவறு செய்வார். விஸ்வாமித்திரன் முனிவரின் தியான இடத்தில் வேட்டையாட வந்துவிடுவார் மன்னர். இந்த தவறுக்காக மன்னன், பதவி இழக்க சபிக்கப்படுவார். “இந்திரசபை’என்ற தலீப்பின் நாடகத்தின், இக்காட்சியமைப்பில் மூன்று தேவகன்னிகள் அங்கு தீயில் அல்லாடி முனிவரின் தபத்தை கலைப்பார்கள், அவர்களை மன்னன் காப்பாற்றுவான். (இது மன்னனுக்காக விரிக்கப்பட்ட தேவவலை என்பது நமக்கு பின்னால் விளக்கப்படும்) வேட்டை காட்சியும், முனிவரின் சிஷ்யன் நட்சத்திரியனை கோமாளியாக்கியது இரண்டுமே முன் கூறிய நாடகத்தின் தாக்கமே. மன்னன் கடுமையான சோதனைகளை சந்தித்தபின் படத்தின் முடிவில், எல்லாம் வல்ல இறைவன் பிரத்தின் முடிவில், எல்லாம் வல்ல இறைவன் பிரத்தியட்சம் ஆகி, மன்னனின் சோகத்தை நிவர்த்தி செய்வார். உண்மைக்காக மன்னன் பட்ட கஷ்டங்களைக் கருதி, மீண்டும் அவனின் பழைய பதவியை தந்துவிடுவார் இறைவன்.

இந்திய கூத்து நாடகங்களைப் போலவும், பழம் நவீனங்கள் போலவும் தான் இக்கதையின் காட்சிகள் அமைந்திருக்கும். விளக்க அட்டைகள் ஹிந்தியிலும், ஆங்கிலமும், பாமரர்களுக்காக ஹிந்தியும்) காமெரா நகர்வு மிகக் குறைவே. வேட்டை காட்சியில் மட்டும் காமெரா சிறிதளவு பான் (Pan) செய்யும் வெளிப்புறக் காட்சிகளில் வரும் செட்டுகள், இன்றைய திரைப்படங்களுக்கு நிகரானவை. வில்லனைப் போல் தோற்றமளிக்கும் முனிவர், கோமாளி சிஷ்யன், அப்பாவியான சந்திரமதி, நீதிமன்றம் போல் தோற்றமளிக்கும் பஞ்சாயத்து விசாரணை, ஜலக்கிரீடை செய்யும் பெண்கள் (அனைவரும் பெண் வேடமிட்ட ஆண்கள்) இன்றைய திரைப்படங்களின் முன் மாதிரி வடிவங்களாகி விட்டன.
சுதேசி கனவு நிறைவேறியது:

ராஜா ஹரிச்சந்திராவை இயக்க அவர் பட்ட கஷ்டங்கள், சுதேசி இயக்கத்திற்காக, அவரின் பங்கு என ஆணித்தரமாக நம்பினார் பால்கே. சுதேசி என்பது காந்திஜி சொன்னது போல்.. “இந்தியர்களுக்கென ஒரு தொழில் துறை.., இந்தியர்களால் இயங்கும் துறை. முதலும், கருவியும் இந்தியர்களே. உழைப்பவர்களுக்கு அன்றாட ஊதியமும், அவனது அத்தியாவசிய தேவைகளும் நிறைவேற்றப்பட வேண்டும்.

அன்றைய அரசியல் போராட்டமான சுதேசி கண்ணோட்டத்தின் தொடர்ச்சியாக தனது திரைப்படங்களைப் பார்த்தார் பால்கே. 19ஆம் நூற்றாண்டின் பாட் ஓவியங்களும், நிழற்படங்களும் அன்றைய சமுதாய நகர்வின் ஆதாரங்களாக இருந்தது போல், “எனது படங்களில் முதல், முதலாளி, உழைப்பாளி, கதை எல்லாமே சுதேசி தான்” என்றார் பால்கே. இந்தியர்களால் படைக்கப்பட்டது மட்டும் அல்ல, இந்தியத்தனமான கலாச்சாரத்தின் காட்சிப் பதிவுகள், சுதேசிக் கனவு நனவாயிற்று. இது அவரது, பின் வந்த கிருஷ்ண ஜன்மா (1918)., காலிய மர்தன் (1919) போன்ற படங்களில் ஊர்ஜிதமாயிற்று, அதனை நாம் அடுத்த தொடரில் பார்ப்போம்.

- தொடரும் -

சலனம் இதழில் வெளிவந்த சில முக்கியமான கட்டுரைகளை, அதன் தேவை கருதி, பேசாமொழியில் மறு பிரசுரம் செய்கிறோம். அதன்படி, சலனம் இதழில் தொடராக வெளிவந்த, பி.கே. நாயர் அவர்களின் கட்டுரைகளை பேசாமொழி இதழில் மறுபிரசுரம் செய்கிறோம். சலனம் இதழ் ஆசிரியர்க்கு நன்றி.