இயக்குநர் கமலக்கண்ணனுடன் நேர்காணல் மதுபானக்கடைகளுக்கு எதிரான படமே “மதுபானக்கடை”

உங்களைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம் மற்றும் உங்களது திரைத்துறைப் பயணம் குறித்து ...

எனது சொந்த ஊர் ஈரோடு. நான் படித்ததும் அங்கேதான். சினிமா மீது ஆர்வம் ஏற்பபட்டதால். நிறைய படங்களை பார்க்க ஆரம்பித்தேன், அந்த காலகட்டத்தில் வெளிவந்த ”ஹேராம்” மற்றும் ”முதல்வன்” ஆகிய இரண்டு திரைப்படங்களும் என்னை வெகுவாக பாதித்தன. அதன் பிறகு நாமும் திரைப்பட படைப்பாளி ஆகலாம் என்று முடிவுவெடுத்தேன்.

இளங்கலை வேதியியல் பாடத்துறையிலிருந்து முதலாம் ஆண்டோடு வெளிவந்து, கோவையில் viscom சேர்த்தேன். viscom முடித்த பிறகு சென்னை வந்து இயக்குனர் சீனுராமசாமியிடம் உதவி இயக்குநராக பணியாற்றினேன் அப்போது அவர் விளம்பரப் படங்கள் மட்டும் இயக்கிக்கொண்டிருந்தார் . அவருடன் ஒரு வருடம் திரைப்பட விவாதத்தில் கலந்துகொண்டிருந்தேன் அது எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது, பிறகு அது எனக்கான இடம் இல்லையென்று தோன்றியது. உடனே கோவைக்கு mass communication படிக்க வந்துவிட்டேன். படித்துக்கொண்டிருந்தபோதே கோவையில் படத்தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து திருமண வீடியோ எடுப்பது, படத்தொகுப்பு செய்வது என இயங்கினோம். முன்னரே நானும் என் நண்பர்களும் சென்னையில் இருந்த போது திரைப்பட இயக்கங்களில் திரையிடும் படங்களை பார்க்க ஆரம்பித்திருந்தோம் அப்போதுதான் எனக்கு சினிமாவைப்பற்றி இதுவரையில் தெரிந்தது எல்லாம் மிகக்குறைவு என புரிய ஆரம்பித்தது. ஹாலிவுட் சினிமா, ஹிந்தி சினிமா, தமிழ் சினிமா, கொஞ்சம் மலையாள சினிமா அவ்வளவுதான் எனக்கு தெரியும். இவைமட்டும் இல்லாமல் ஐரோப்பிய சினிமா, ஈரானிய சினிமா என உலகசினிமா பற்றி தெரிந்துகொண்டேன்.
தெரிந்துகொண்ட பிறகு ஏன் இந்த படங்களை கோவையிலும் நாம் திரையிடக்கூடாது? என்று தோன்றியது. . அப்போது கோவையில் ஒன்பது கல்லூரிகளில் viscom பயிற்றுவிக்கப்பட்டுக் கொண்டிருந்தது, அங்கே பயிலும் viscom மாணவர்களிடமும், சினிமா படைப்பாளிகளிடமும், பொது மக்களிடமும் அயல் நாட்டுச் சினிமா, சினிமா ரசனை, தொழிற்நுட்பம் மற்றும் உருவாக்கத்தைப் பற்றி கொண்டுசெல்லலாம் என நினைத்தோம். அதனால் நண்பர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து திரைப்பட சங்கம் ஒன்றை தொடங்கினோம். அபோதுதான் DVD அறிமுகமாகியிருந்த காலகட்டம், எல்லா நாட்டுத்திரைபடங்களும் DVD வடிவில் கிடைத்தன.

”ஆயிஷா” சிவகுமார், அவர்களை அழைத்து வந்து, அவரது குறும்படங்களை திரையிட்டு, அந்த திரைப்படங்களைப் பற்றி விவாதம் செய்தோம். நாங்களும் குறும்படங்கள் உருவாக்கத் தொடங்கினோம், உருவாக்கியபிறகு திரையிட்டுப் பார்த்தோம், தப்புகள் நிறைய இருந்தது, கற்றுக்கொள்ளவும் நிறைய இருந்தது. நல்ல சினிமாக்களை பார்த்தாலும், சினிமா உருவாக்குதல் என்பது ஒரு தொழிற்நுட்பக் கலை, அதை கற்றுக்கொள்ள ஒரு பயிற்சி முறை இருக்கிறது. பயிற்சிபெற, நாங்களே சினிமா பயிற்சிப்பட்டறைகளை ஒருங்கிணைத்தோம்.ஒவ்வொரு மாதமும் திரைத்துறையைச் சார்ந்த நல்ல சினிமாவின் மீது அக்கறை கொண்ட ஒருவர் எங்களுக்கு வகுப்பெடுத்தனர். எப்படி திரைக்கதை எழுதவேண்டும் என்று இயக்குனர் ராம் வகுப்பெடுத்தார், கேமராவைப்பற்றி C. J. ராஜ்குமாரும், நடிப்பைப்பற்றி தியேட்டர் லேப் ஜெயராவும் பயிற்சியளித்தனர். இப்படி பயிற்சிகள் மூலம் கற்றுக்கொண்டு நாங்கள் மீண்டும் குறும்படங்களை உருவாக்கினோம். நாங்களே படத்தொகுப்பு செய்து, திரையிட்டு, விவாதிப்போம். அந்த சமையத்தில் கோவையில் இருந்த சினிமா ஆர்வலர்கள் எங்களுக்கு உதவினார்கள். கவிஞர் புவியரசு, ஓவியர் ஜீவானந்தம், திரைப்பட விமர்சகர் ராகேஷ் கத்தாரே போன்றவர்களோடு தொடர்பு ஏற்ப்பட்டதால் சினிமாவைப் பற்றி இன்னும் அதிகம் தெரிந்துகொண்டோம். அப்போது மக்கள் தொலைக்காட்சியில் முதன்முறையாக குறும்படப் போட்டி ஒன்றை நடத்தினார்கள் அதில் நாங்கள் கலந்துகொண்டோம். முதல் மூன்று பரிசுகளும் எங்கள் குறும்படங்களுக்கு கிடைத்தது. எங்களாலும் படம் உருவாக்க முடியும் என்ற ஒரு நம்பிக்கை ஏற்பட்டது. இப்படி தொடங்கியது தான் இந்த திரைப்பயனமும், சினிமா ஆர்வமும்.

தங்களது திரைப்படச்சங்கம் மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றி...

கோவையில் மட்டும் நான்கு திரைப்படசங்கங்கள் இயங்குகின்றன. எங்கள் எல்லா திரைப்படச் சங்கங்களும் ஒன்றிணைந்த ஒரு புரிதலோடு செயல்படுகிறோம். ”களம்” அமைப்பு குறும்படங்களை மட்டும் திரையிடுவார்கள், பத்திரிக்கையாளர்களுடன் இணைந்து குறும்படங்களை உருவாக்குவதிலும் ஈடுபடுவார்கள். ”நாய்வால்” அமைப்பு அரசியல் சார்ந்த திரைப்படங்களையும், நல்ல குறும்படங்களையும், மாற்று சினிமாக்களையும் திரையிடுகிறார்கள். முக்கியமான தமிழ் படங்களுக்கு பாராட்டு விழாவையும் நடத்துகிறார்கள். இதில் கோணங்கள் அமைப்பு மட்டும் எல்லா வாரமும் சினிமா ரசனை சார்ந்த திரையிடல்களை தொடர்ந்து நிகழ்த்துகிறார்கள். எங்களின் கோவை திரைப்படச்சங்கம் மாணவர்களையும், முக்கியமாக திரைப்படங்களை உருவாக்குபவர்களையும் அடிப்படையாக கொண்டு FILM APPRECIATION, திரைப்பட உருவாக்கம் மற்றும் திரைப்படத் தொழிற்நுட்பம் சார்ந்து செயல்படுகிறது.

சமீபமாக கோவை திரைப்படச்சங்கமும் கோணங்களும் இணைந்து திரைப்பட ரசனை பற்றிய வகுப்புகளை நடத்துகிறோம். சுயாதீனத் திரைப்படம் பற்றிய கருத்தரங்கை நடத்தினோம். அதற்கு நலன்குமாரசாமி, நவீன், சோமிதரன், அருண்கார்த்திக், மாமல்லன் போன்றோர்கள் வந்திருந்தார்கள். கோவையில் நடந்த அந்த கருத்தரங்கில் 250 சுயாதீன திரைப்படக் கலைஞர்கள் கலந்துகொண்டார்கள். ”நிழல்” போன்ற அமைப்புகள் இதுபோன்று தமிழ்நாடு முழுவதும் நடத்தும் போது பலபேர் கலந்து கொள்கிறார்கள்.

டிஜிட்டல் தொழிற்நுட்பம் வந்த பிறகு பலபேர் ஆர்வத்துடன் வருகிறார்கள். இதில் நூறில் நல்ல சினிமா உருவாக்கக்கூடிய இரண்டுபேர் தேறினாலும் நல்ல விஷயம்தான். நான் எப்படி CINIMA PARADISE திரைப்படத்தை பார்த்தேனோ அப்படியேதான் இன்று புதிதாக வருபவர்களும் பார்க்கிறார்கள். அந்த திரைப்படத்தின் தேவை இன்றும் இருக்கிறது.

இதைப்போலவே எங்களின் திரையிடல்களும் அதைச் சார்ந்த விவாதங்களும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன.

மதுபானக்கடை படத்திற்கு A சான்றிதழ் அளித்த பிறகு நீங்கள் அதற்காக போராட்டம் நடத்தினீர்களா? திரைத்துறை சார்பாக உங்களுக்கு ஏதேனும் உதவிகள் கிடைத்ததா?

இந்த படத்திற்கு A சான்றிதழ் கொடுத்த போது இந்த அளவிற்கு பிரச்சனைகள் வரும் என்று நான் நினைக்கவில்லை. ஒரு படைப்பாளியாக இந்த படத்தில் எந்த ஒரு வெட்டும் இருக்கக்கூடாது என்று சென்சார் போர்டுடன் சண்டையிட்டேன். எந்த வெட்டும் இல்லாமல் படத்திற்கு A சான்றிதழ் வழங்கப்பட்டது. A சான்றிதழ் வழங்கபட்டதால் குழந்தைகள் இந்த படத்தை பார்க்கமுடியாது, பெண்கள் இந்த படத்தை பார்க்க வரமாட்டார்கள் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் வரிச்சலுகை கிடையாது, தொலைக்காட்சி உரிமம் பெற முடியாது என்பது போன்ற வணிக பிரச்சனைகள் இருப்பது பற்றி நான் அறிந்திருக்கவில்லை. அப்போது உண்மையான தமிழ் சினிமா மார்க்கெட் பற்றியும் தெரியாது. அதனால் சான்றிதழ் வழங்கப்பட்ட பிறகு இவர்களுடன் போராடி என்ன ஆகபோகிறது என்று இருந்துவிட்டேன். பிறகு, புதிதாய் வருபவர்களுக்கு இந்த விஷயங்கள் தெரியவேண்டும் என்பதற்காகவும், அவர்களின் பாதுகாப்பிற்காகவும் நான் இதைப் பற்றி பேசத்தொடங்கினேன். நாம் அரசாங்கம் தரும் சான்றிதழ் அறம் சார்ந்தது என்று எண்ணுகிறோம், யதார்த்தத்தில் அது பாராபட்சம் பார்ப்பதாக இருக்கிறது.
”மதுபானக்கடை”, மாதிரியான படத்திற்கு A சான்றிதழும், ”கலகலப்பு” மாதிரியான படத்திற்கு U சான்றிதழும், வரி விலக்கும் தருகிறார்கள். நான் ”கலகலப்பு” படத்தை மட்டும் குறிப்பிடவில்லை, குடியை வியாபார அடிப்படையில் கொண்டப்படத்திற்கும், குடியை ஊக்குவிக்கும் படத்திற்கும், குடியை வேறு மாதிரி காட்டும் படத்திற்கும் U சான்றிதழை வழங்கும் போது என் படத்திற்கு A சான்றிதழை வழங்கியது கோபத்தை தருகிறது.

A சான்றிதழோடு வரும் படம் குறிப்பாக அது பெண்களை மையமாக கொண்ட படமாக இருந்தாலும் அதைப் பார்க்க திரையரங்கிற்கு பெண்கள் வருவதில்லை. இப்போது என் மனநிலை என்னவென்றால் உங்கள் படத்திற்கு U சான்றிதழையே வாங்குங்கள், காட்சிகள் வெட்டப்பட்டது சரியானதா? என்று மக்கள் உங்கள் படத்தை பார்த்து முடிவெடுக்கட்டும்.

A சான்றிதழ் வழங்கப்பட்ட படத்திற்கு தொலைக்காட்சி உரிமம் மறுக்கப்படுகிறது, படத்தின் வணிகத்தில் இது முக்கிய பங்கு வகிக்கக்கூடியது. ஆனால் தொலைக்கட்சியில் வரும் நிகழ்ச்சிகள் மிகவும் மோசமானதாக இருக்கின்றன. மது இல்லாத, காமம் சம்மந்தமான படத்துக்கு A சான்றிதழ் வழங்கினாலும், இன்றைக்கு தொலைக்காட்சியில் காண்பிக்கப்படுவதைவிட சினிமாவில் காமம் குறைவாகத்தான் இருக்கிறது. இங்கே சினிமாவுக்கு ஒரு சட்டம், தொலைக்காட்சிக்கு ஒரு சட்டம் என்ற வேறுபாடுகள் நிலவுகிறது.

படம் வெளிவந்த காலக்கட்டத்தில் யாருமே படத்தை பார்க்கவில்லை. ”விகடனில்” விமர்சனம் பார்த்துவிட்டு தான் அந்த வார படத்திற்கு போவது குறித்து தீர்மானிக்கிறார்கள். அதற்குள் திரையரங்கங்களில் படம் இல்லாமல் போனால் என்ன செய்வது? யாரிடமாவது உதவி இயக்குனராக பணிபுரிந்திருந்தால் கூட காட்சி ஏற்பாடு செய்து பார்த்திருப்பார்கள். இங்கு நான் அலுவலகம் வைத்திருக்கும் அதே தெருவில் தான் இன்னொரு இயக்குனர் அலுவலகம் இருக்கிறது. அவர் போன வாரம் தான் "படம் பார்த்தேன் நன்றாக இருக்கிறது" என்று சொல்லும் போது என்ன செய்வது. ஆனால் படம் வெளியான உடனே படத்தை பார்த்துவிட்டு பாலாஜி சக்திவேல், ராம் , செல்வபாரதி போன்றவர்கள் கூப்பிட்டு பேசினார்கள். பெரும்பான்மையானவர்கள் ஒரு மாதம், இரண்டு மாதம், ஏன் ஒரு வருடம் கழித்து கூட அழைத்து பேசினார்கள். கேரளா, பெங்களூர், கனடா போன்ற இடத்தில் கூட திரையிடப்பட்ட இந்த படம் இதுவரைக்கும் தமிழ்நாட்டில் இரண்டுமுறைதான் திரையிடல் நடந்திருக்கிறது. நாம் யாரையும் குறை சொல்லி பயன் இல்லை. ஒரு சுயாதீன திரைப்படக்கலைஞனாய் இதிலிருந்து நிறையவே கற்றுக்கொள்கிறேன். இன்னும் இந்த படத்தை பற்றி பொது வெளியில் யாருமே பேசுவதில்லை. படத்தைப் பற்றி பேசச் சொல்லவில்லை, அதில் பதிவு செய்த சில விடயங்களையாவது பேசியிருக்கலாம். ஆனாலும் நாம் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது. இந்த புத்தக திருவிழாவிற்கு ”மதுபானக்கடை”, படத்தின் மொத்த திரைக்கதையும் (திரையனுபவங்களையும்) புத்தகமாக போடப் போகிறோம் . அது இனி வருகிறவர்களுக்கு உபயோகமாக இருக்கட்டும்

cocktail போன்ற ஹிந்தி திரைப்படங்களை ஒளிப்பரப்பிய சத்யம் திரையரங்கம் தங்களின் திரைப்படத்தை திரையிட மறுத்தன. அதற்கான உங்களின் எதிர்வினை என்னவாக இருந்தது?

சத்யம் திரையரங்க மேனேஜர் நேரடியாக "உங்க படத்தை திரையிட முடியாது, அப்படி திரையிட்டால் பார்க்கிங், கேண்டீனில் வருமானம் இருக்காது" என்று திரையரங்க முதலாளியாக அவரது நியாயங்களை சொன்னார் .தமிழ் சினிமா எடுக்கிறோம், ஆனால் தமிழ் நாட்டிலே திரையிட முடியவில்லையே என்று எனக்கு பயங்கர கோபம் வந்தது. அவர் திரையிட முடியாது என்று சொல்கிற காரணங்கள் எல்லாம் சிந்தனை அற்றதாக இருந்தது. cocktail(ஹிந்தி படம்), hangover(ஆங்கில படம் ) போன்ற படங்களில் எல்லாம் குடித்துக்கொண்டே தான் இருக்கிறார்கள் . ஆனால் அதை திரையிட்டார்கள் . உங்களது படத்தை திரையிடுவதால் வருமானம் இல்லை என்று சொல்வது சரி, உங்க படத்தோட bannerஐ தொங்க விட்டால் , எங்க பெயர் கெட்டுப்போகும் என்று சொல்வது தான் என்னை கோபப்படுத்தியது. நாம் படத்தை எடுத்துக்கொண்டு அவர்களிடம் சென்று நிற்கப்போய்த்தானே இந்த பிரச்சனை . நாம் ஏன் நம் படத்தினை சத்யம் சினிமாஸில் திரையிட நினைக்க வேண்டும். பார்வையாளர்களை மாற்றாமல் இந்த பிரச்சனை முடியாது.
அவர்களின் ரசனையை நாம் மாற்ற வேண்டும். ஷங்கரே தன்னுடைய முதல் படத்தில் அர்ஜுன் இல்லாமல் வேறு எதாவது ஒரு புதுமுகத்தை நடிக்க வைத்திருந்தால் இந்த பிரச்சனைகளை சந்தித்திருக்க வேண்டும். என் படத்திற்கு அங்கீகாரம் கிடைத்திருந்தாலோ, மாநில விருது , மத்திய விருது என கொடுத்திருந்தாலோ அல்லது தொடர்ந்து இந்த படத்தை திரையிடல் நடத்தி இருந்தாலோ? அவர்கள் திரையரங்கை கொடுத்திருக்கப்போகிறான். நாமெல்லாம் அந்த நேரத்தில் படைப்பாளியாக , ஆர்வலராக என்ன செய்துகொண்டிருந்தோம் , முதலாளிகளிடம் நியாயம் கேட்டு என்ன செய்வது?

ஆனந்த பட்வர்தன் அவரது திரைப்படங்களை பொது வெளியில் திரையிடல் நடத்துகிறார்? அப்படி நீங்கள் ஏதேனும் செய்தது உண்டா?

ஆனந்த் பட்வர்தன் ஒரு ஆர்வலர். ஆர்வலராக இருந்து filmmaker ஆக உருவானவர். அவர் படம் எடுப்பதே முக்கியமான ஒன்று. அவர் எடுக்கின்ற படம் எல்லாமே சமுகத்தை மையமாக கொண்ட அரசியல் ஆவணப்படங்கள். நான் அரசியல் ஆவணப்பட இயக்குனர் இல்லை. நான் திரைப்படம் எடுக்கிறேன். என்னால் முடிந்த அளவிற்கு திரையிடல் நடத்துகிறேன். அனால் அந்த படத்தை தூக்கிகிட்டு ஊர் ஊராக சென்று திரையிடல் நடத்துவது என் வேலையாக நான் கருதவில்லை. ஒரு படம் உபயோகமாக இருந்தால் திரைப்பட சங்கங்கள் தான் இந்த வேலையை செய்ய வேண்டும் என்றே நான் நினைக்கிறேன்.

மேடைகளிலும் பொது அரங்குகளிலும் , நல்ல திரைப்படங்களை தயாரிக்க நாங்கள் ஒத்துழைப்போம் என்று தயாரிப்பளர்கள் கூறுகிறார்கள். நல்ல திரைப்படங்களை எடுக்கும் இயக்குனர்கள் தங்களின் படத்தை தாங்களே தயாரித்து கொள்ளும் சூழலும் இருக்கிறது. இவர்களது கூற்று உண்மையா? அல்லது நீங்கள் உங்கள் படத்திற்காக யாரையும் அணுகவில்லையா?

நல்ல திரைப்படம் என்று சொல்வதில் இங்கு நிறைய குழப்பம் இருக்கிறது. அதற்கான விளக்கம் இங்கு இல்லை. நல்ல திரைப்படங்களை தயாரிக்கிற தயாரிப்பாளருக்கு எது நல்ல படமென்று எப்படி தெரியும். யதார்த்த நிலையை நல்ல சினிமா என்று சொல்கிறார்கள். ஆனால் அது சொல்லப்படுகிற விதமும் சினிமாவாக எடுக்கப்படுகிற விதமும் முக்கியமான ஒன்று. நல்ல சினிமாவை பற்றி பேசுகிற எல்லோராலும் நல்ல சினிமா எடுத்து விட முடியுமா? என்றால் தெரியாது. நான் மதுபானக்கடை எடுத்த பிறகுதான் சினிமாவாக ஒரு விஷயத்தை என்னால் எடுக்க முடியும் என்று தெரிகிறது. தயாரிப்பு செலவு என்பது இரண்டாவது தான். இன்று வருடத்திற்கு 320 சினிமா சென்சார் வாங்குகிறது. அதில் நல்ல கதை கரு உள்ள படம் 50 ஆவது இருக்கும்.ஆனால் அதை பார்த்தால் நாம் வேதனை தான் படவேண்டும். ஏனென்றால் அவை ஒழுங்காக எடுக்கப்பட்டு இருக்காது. இங்கு என்னுடைய சிந்தனையை உங்கள் மேல் திணிக்க கூடாது. உங்களுக்கு என்று ஒரு சிந்தனை இருக்கும். என்னுடைய சிந்தனையில் உருவாகும் படம் உங்களுக்கு கெட்ட சினிமாவாக கூட தெரியலாம்.

என்னைப் பொறுத்தவரை உணர்வு பூர்வமான சிந்தனைகளையும், அறம் சார்ந்த விஷயத்தை கலை வடிவமாக கொண்டு வரும் பொழுது பார்வை இங்கு மாறும். இன்று 10 லட்சம் இருந்தால் நல்ல சினிமா எடுத்து விடலாம். பத்து பேர் இறங்கி வேலை செய்தால் அதிகமாக ஒரு வருடத்தில் வசூல் செய்ய முடியும். ஆனால் உங்களுடைய சிந்தனையை அடிப்படையாக கொண்டு பத்து பேர் உருவாக பத்து வருடம் ஆகலாம். வெளியில் இருப்பவர்கள் தயாரிப்பாளர்களை திட்டிக்கிட்டு இருக்கிறார்கள். ஆனால் தயாரிப்பாளர்களுக்கு ஒன்றுமே தெரியாது. ”செல்வராகவன்” கூட ஒரு இடத்தில் சொன்னார் எப்படி தயாரிப்பாளர்களுக்கு கதை சொல்கிறீர் என்று கேட்டதற்கு, ”தயாரிப்பாளர்களுக்கு என்ன தேவையோ அதை அவர்களிடம் சொல்லி அனுமதி வாங்கிவிட்டு, எனக்கு என்ன பிடிக்குமோ அதை படப்பிடிப்பில் எடுப்பேன்” என்றார். இந்த விஷயத்தை நம்மால் நடைமுறையில் செய்ய முடியும். சினிமா ஓவியம் கிடையாது வரைய வரைய பார்த்துக்கொண்டிருப்பதற்கு. என்னை பொறுத்தவரை நல்ல சினிமா வருவதற்கு தயாரிப்பாளர் பிரச்சனை கிடையாது. சினிமா எடுப்பது பெரும் உழைப்பை வேண்டும் விஷயம். அதற்கு நிறைய பயிற்சி தேவை. அதற்கு பின் நிறைய படிப்பும், கவனித்தலும் , அதிகமான பயணங்களும் தேவை இருக்கிறது.
இன்னொரு பக்கம் அறம் சார்ந்து இருப்பதும் பார்வையாளர்களை கவனத்தில் கொள்ள வேண்டியதும் முக்கியம். நாம் எடுக்கப்போகிற படம் பார்வையாளர்களுக்கு பிடிக்க வேண்டும். அதாவது நாம் கணித்து வைத்திருக்கும் பார்வையாளர்கள், உதாரணத்திற்கு தமிழ்நாட்டில் ஒரு 20000 பேர் தான் பார்ப்பார்கள் என்றால் அதற்கு ஏற்ற தயாரிப்பு செலவைக் கவனிக்க வேண்டும். அவர்களிடம் கொண்டு போய் சேர்ப்பதற்கான வழிமுறைகளை உருவாக்க வேண்டும். Hola venky என்று ஒரு படம், Love Rinkle free படத்தை இயக்கியவருடையது. இந்தியா முழுவதும் PVR தான் வெளியிட்டார்கள். A சான்றிதழ் கொடுத்ததால் satellite பிரச்சனை வேறு இருந்தது.

Hola venky இந்த படம் பாலியலை அடிப்படையாய் கொண்டு எடுத்த படம். பத்து லட்ச ரூபாய்க்கு படத்தை எடுத்து சென்சார் வாங்காமல் உலகம் முழுவதும் உள்ள காபேவில் திரையிடல் நடத்தினார். அங்கு திரையிடல் முடிந்த பிறகு "உங்களுக்கு எவ்வளவு விருப்பமோ அதனை தரலாம்" என்கிறார். இப்படியே அவர் 25 லட்சம் வரை சம்பாதித்துவிட்டார் .கோயம்புத்தூரில் மட்டும் இரண்டு திரையிடல் நடத்தினோம். போன வாரம் கூட சென்னையில் திரையிடப்பட்டது. தமிழ்நாடு இல்லாமல் பாலக்காடு, பெங்களூர் பாண்டிச்சேரி இப்படி எல்லா இடங்களிலும் திரையிடல் நடத்தப்பட்டு ஒரு லட்சம் வரை வசூல் செய்தஇருக்கிறது. தமிழ்நாட்டில் இருந்து இப்படியான படம் எத்தனை வந்திருக்கிறது. ஒரு ஹிந்தி ஆங்கில படத்திற்கு இந்த வசூல் கிடைக்கும் போது தமிழ்நாட்டில் நடக்கின்ற ஒரு விஷயத்தை எடுத்து செய்யும் போது ஏன் பணம் பண்ண முடியாது. ஆனால் அது படமாக எடுத்து இருக்க வேண்டும். உங்களுடைய கருத்தைமட்டும் பிரச்சாரம் செய்வது போன்று இருக்க கூடாது.

எல்லோரும் படத்தில் உணர்வுபூர்வமாக ஒன்றவேண்டும். ஏனென்றால் யாரும் உங்கள் கருத்தை பார்க்க வரவில்லை, சினிமா பார்க்க தான் வருகிறார்கள். நாம் இந்த மாதிரி படம் எடுக்காமல் தயாரிப்பாளர்கள் பணம் தரவில்லை என்று அவர்கள் மேல் குற்றம் சொல்வதை நம்மீது பரிதாபம் ஏற்படுத்துகிற விஷயமாக தான் நான் பார்க்கிறேன். இதையே நீங்கள் இரண்டு வருடத்திற்கு முன்பு கேட்டிருந்தால், நீங்கள் எதிர்ப்பார்க்கும் பதிலே கிடைத்திருக்கும். ஆனால் நான் இன்றைக்கு இந்த மாதிரி உள்ள படங்களை பார்க்கிறேன், அவர்கள் கூட இருக்கிறேன் என்பதால் இதை உணர முடிகிறது.

பொதுவாக சிறுகதை, நாவல் போன்றவற்றில் இருந்து திரைப்படத்திற்கான கருவென்பது கிடைக்கும். தங்களின் படத்திற்கு எழுத்தாளர் நாஞ்சில் நாடன் எழுதிய ”உண்ணற்க கள்ளை” என்ற கட்டுரையில் இருந்து கிடைத்தது பற்றி?

மூச்சு விடுகிற மாதிரி, வாசிப்பது மிகவும் அடிப்படையான விஷயம்.. நான் படிப்பதால்தான் படைப்பாளியாக இருக்கிறேன் இல்லையென்றால் முடியாது.
நாஞ்சில் நாடன் எழுதிய கட்டுரையில் முக்கியமான ஒரு கேள்வி வரும், அது என் படத்தில் வரவில்லை. நேரடியாக இல்லை என்றாலும் படம் பார்த்தவர்கள் அதை புரிந்துகொள்ளும் அளவிற்கும், யோசித்துப்பார்க்கும் அளவிற்கும் அந்த கேள்வி இடம்பெற்றிருக்கிறது என்றே நான் நம்புகிறேன். ஒரு 8 ருபாய் கொடுத்து வாங்கும் ’டீ’க்கு, வெந்நீரில் கழுவி, பல விதமான வகையில் பால், லைட், strong என்று மரியாதையாக நம் கையில் கொடுக்கிறார். ஆனால் 80 ரூபாய் கொடுத்து ஒரு கோர்ட்டர், பீர் அல்லது 400 ருபாய் கொடுத்து ஒரு புல்லும் வாங்குபவனை எப்படி மதிக்கிறார்கள்?. அவன் குடிக்கிறது அவனோட தனிப்பட்ட உரிமை. சரி, தப்பு எல்லாம் அடுத்த விஷயம். குடிக்கிறவனும் உழைத்து தான் கொண்டு வருகிறான். சுகாதாரமற்ற கழிப்பிட வசதி, தமிழ்நாட்டில் பெரிய குப்பை மேடு என்றால் அது டாஸ்மாக் பார் தான். அவனுக்கும் கொடுக்கப்படுகிற நொறுக்குத் தீனி, தண்ணீர் பாக்கெட் என எல்லாமே விலை உயர்த்தப்பட்டு தரமற்றதாகத்தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பட்சத்தில் நீ ஏன் அங்கு சென்று குடிக்க வேண்டும் என்பதே அந்த கட்டுரை. இந்தப் படம் மிக மையமாக பேசின விஷயம் என்றால் இது தான். எல்லோரும் இது குடிக்கு எதிரான படமென்று சொன்னார்கள், ஆனால் இது டாஸ்மாக்கிற்கு எதிரான படம். அடிப்படை பொருளாதார சுரண்டலுக்கு எதிரான படம் .

இந்த படத்தில் குடிப்பவர்களை எப்படி நடத்துகிறார்கள், ஆகியவற்றால் குடி பற்றிய உன் பார்வை என்ன என்று என்னை கேட்டுக்கொண்டே போனால் இந்த படம் வேறு ஒரு படமாக மாறும். அவ்வளவு தான் நாம் படைப்பாளியாக செய்ய முடியும். இல்லை ஆவணப்படம் எடுத்துவிடலாம். இப்போது என்ன பிரச்சனை என்றால் ஒரு இலக்கியத்தை இந்த இடத்தில இருந்து படம் செய்வதற்கு ஒரு தேவை இருக்கிறது. இலக்கியத்தில் என்ன சொல்லப்பட்டு உள்ளதோ அதை அப்படியே வரிக்கு வரி செய்தோம் என்றால் பயங்கர பிரச்சனை வரும். ஆனால் அதைத்தான் எழுத்தாளரும் விரும்புவார், படைப்பாளியும் அதையே செய்தால் அது சினிமாவாக இருக்காது. நீங்கள் ”சிற்றன்னை ” படித்துவிட்டு உதிரிப்பூக்கள் பார்த்தால், சிற்றன்னையை எங்கேயும் கண்டுகொள்ளவே முடியாது. ஆனால் உணரமுடியும். அது தான் காட்சியாக மாறும் போது வேறொரு இடத்திற்கு செல்லும். சினிமா வேறு தளம், இலக்கியம் வேறு தளம். இது என்னுடைய நிலைப்பாடு.

”மதுபானக்கடை” திரைப்படத்தின் கள செயல்பாடு குறித்து?

நான் மட்டும் இல்லாமல் இந்த படத்தின் கலை இயக்குனர், ஒளிப்பதிவாளர் என மூன்று பேருமே கவனித்தலில் ஈடுபட்டோம் .எனக்கும் ஒளிப்பதிவாளருக்கும் குடிக்கிற பழக்கம் இல்லை. ஆனால் குடிக்கிற நபர்களிடம் பழக்கம் இருந்தது. அது தான் இந்த படத்திற்கு அடிப்படையே. ஒரு பார் உள்ளே நடக்கிற கதை என்பது முடிவு செய்த பிறகு கிட்டத்தட்ட ஒரு 2 மாதம் தமிழ்நாட்டில் இருக்கும் அதிகமான பார்களுக்கு போய் பார்க்க ஆரம்பித்தோம். இந்த படத்திற்கு Lighting சென்னை உதயம் திரையரங்கிற்கு பக்கத்தில் உள்ள பாரில் இருந்து தான் எடுத்தோம். அதே மாதிரி பெருந்துறையில் செட் போட்டோம். கலை இயக்குனரின் பங்கு அதிகமானது. அவர் தான் மொத்த செட்டையும் வடிவமைத்து கொடுத்தார். அவர் கொடுத்ததில் தான் shoot செய்ய ஆரம்பித்தோம்.
நாங்கள் இது தமிழ்நாட்டின் முக்கியமான ஆவணமாக இருக்க வேண்டும் என்று நினைத்து தான் செயல்பட்டோம். இயக்குனரின் குழுவாகவும் நிறைய கதாபாத்திரங்களை கவனிக்க ஆரம்பித்தோம். குடி என்பதின் முன் அந்த கதாப்பாத்திரத்தின் நிலை, அதன் பின்பு என்று உதாரணத்திற்கு பெட்டிஷன் மணியின் கதாபாத்திரம் நாகர்கோவிலில் நாங்கள் பார்த்த உண்மையான கதாபாத்திரம் தான். கோயம்புத்தூரில் எனக்கே அப்படி நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். காலையில் எட்டு மணிக்கே டாஸ்மாக் பக்கமாக போய் விடுவோம். தினமும் இரவு பிரச்சனை இல்லாமல் தமிழ்நாட்டில் ஒரு டாஸ்மாக்கையும் மூட முடியாத நிலையை பார்த்தோம். இதையெல்லாம் கவனிக்க கவனிக்க எங்களுக்கு பயனுள்ளதாக இருந்தது. நீங்க கற்பனையில் நினைத்துவைத்திருக்கிற கதாப்பாத்திரம் கொண்டு வர இதற்கான வேலைகள் செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனால் உண்மையான நிலையை பதிவு செய்ய இந்த மாதிரியான கள செயல்பாடு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.

இத்திரைப்படத்தில் கதாபாத்திரங்கள் தேர்வு குறித்து?

Type Casting என்ற வகை மாதிரியை சேர்ந்தது இந்த படம். அந்த கதாபாத்திரத்திற்கு அந்த மாதிரி கதாபாத்திரத்தையே நடிக்க வைக்க செய்வது. இந்த படத்தில், கதாபாத்திர வளர்ச்சி என யாருக்குமே இருக்காது. படம் ஆரம்பிக்கும் போது எப்படி இருந்ததோ, அதைப் போலவே முடியும் போதும் இருக்கும். இப்படி இருந்தது இப்படியாக மாறியது என்பது இந்த படத்திற்கு தேவை இல்லை. இந்த படத்தோட பிளஸ் மைனஸ் எல்லாமே இது தான். அவர்களாகவே அவர்கள் இருந்தார்கள். படத்தினுள் அவர்கள் மாறமாட்டார்கள் மாறினால் மதுபானக்கடைக்கு வெளியில் தான் இருப்பார்கள்.
இந்தப்படத்திற்கு தொழில்முறை நடிகர்களை பயன்படுத்தியிருந்தால் நான் பல வருடங்கள் சினிமா எடுக்க வேண்டியதாக இருந்திருக்கும். சில நபர்கள் உண்மையான வாழ்க்கையில் எப்படி இருந்தார்களோ அப்படியே நடித்தார்கள். அப்படி இருக்கும் போதும் அவர்களால் இயல்பாய் கேமரா முன்பு இருக்க முடியவில்லை. செட் போட்டு ஒரு 20 நாட்கள் உள்ளயே இருந்தோம் . தொடர்ந்து ஒத்திகை நடத்தப்பட்டது. அவர்களை சில காட்சிகளில் நடிக்க வைத்து பெரிய திரையில் திரையிட்டு காண்பித்தோம். அவர்களுக்கு Close up-ல் எப்படி இருக்கணும் Long shot-ல் எப்படி நடிக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுத்தோம். ஆனால் அந்த 20 நாட்களில், அந்த மனநிலைக்குள் அவர்களை கொண்டு வரும் வேலையை அதிகமாக பார்த்தோம்.

குறிப்பாக கடவுள் வேடமிட்டவர்கள், திருநங்கைகள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், குழந்தை தொழிலாளர்கள், முதியவர்கள், பெண்கள் போன்றவர்களின் பின்னனி குறித்து?

சில கதாபாத்திரங்கள் நம்முடைய கருத்தியலுக்காக வைக்கப்பட்டது. ஆனால் பெரும்பாலான கதாபாத்திரம் உண்மையில் இருக்கிறது. இன்றைக்கு டாஸ்மாக் சென்றால் படத்தில் உள்ள ஏதாவது ஒரு கதாபாத்திரத்தையாவது உங்களால் சந்திக்க முடியும். நாங்க உருவாக்கின கதாபாத்திரம் கட்டிங் நாராயனமூர்த்தி . இந்த பாத்திரம் Traffic Signal என்ற இந்தி படத்தில் இருந்து எடுத்தோம். அந்த மனநிலை பாதிக்கப்பட்ட கதாபாத்திரத்தின் பாதிப்பு ”சினிமா பாரடைஸ்”, படத்தில் இருந்து தான் வந்தது. ஆனால் நான் இந்த பாத்திரங்களை இந்த படங்களின் பாதிப்பில் தான் எடுத்தேன் என்பதை நானாக சொல்லவில்லை என்றால் யாராலும் கண்டுபிடிக்க முடியாது. இந்த இடத்தில் தான் என்னுடைய உழைப்பும் என் குழுவின் உழைப்பும் இருக்கிறது. உங்களுடைய மூலையில் ஒரு விஷயம் உதிக்கிறது என்றால் ஆயிரம் விஷயம் உங்களை சுற்றி நடந்து இருக்கும். Copyright பிரச்சனைகளில் எல்லாம் எனக்கு உடன்பாடு இல்லை.

சினிமா தொடங்கி நூற்றாண்டு விழா நாம் கொண்டாடி விட்டோம். ”மதுபானக்கடை” அரசியல் சார்ந்த பதிவு, அதன் பின் ஒரு படம் கூட அரசியல் சார்ந்து வரவில்லையே?

”மதுபானக்கடை”, படத்தின் அரசியல் என்பது வேறு. அதனால் அது வேறு பாதிப்பை தருகிறது. நலன் என்னிடம் சொல்லும்போது ”சூதுகவ்வும்” படத்தின் முக்கியமான பகுதி டாஸ்மாக்கில் தான் தொடங்கும், அதை உங்கள் படத்தை பார்த்து தான் வைத்தேன் என்றார். ஒரு சினிமா என்பது அரசியலாக தான் அடுத்த விஷயத்திற்கு போகவேண்டும் என்பது இல்லை. பாதிப்பை ஏற்படுத்தினாலே போதும். ”மெட்ராஸ்” படம் கூட அரசியலைத்தான் பேசுகிறது. இங்கு நீ தப்பு நான் சரி என்று சொல்லவில்லை. அறம் சார்ந்து ஒரு சலனத்தை ஏற்படுத்துகிற எல்லாமே அரசியலாகத்தான் நான் பார்க்கிறேன். ”நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்”, படத்தில் கூட அரசியல் இருக்கிறது. தமிழ் சினிமாவோட வணிக முகத்தை கிழித்த படம் அது. ஒரு கதாநாயகியை பார்த்து கதாநாயகன் ”ப்பா பேய் மாதிரி இருக்கிறாள்”, என்று சொல்வது ஒரு மாற்றத்தையே உருவாக்கியிருக்கிறது. தீவிர அரசியல் பேசுகிற படமாக இலத்தீன் அமெரிக்கா சினிமாவில் இருந்து உலகம் முழுக்க சினிமா இருக்கிறது. ஆனால் அந்த சினிமா இங்கு கொண்டு வர முடியாது. அவர்களின் அரசியல் வேறாக இருக்கும். நம் சினிமா அது போன்று இல்லையே என்றும் நினைக்க கூடாது. ஒரு பெரிய மாற்றம் நடந்து கொண்டு ன் இருக்கிறது. ”கல்யாண சமையல் சாதம்”, முக்கியமான படம்.
sexual expression என்பதை அவ்வளவு அழகாக காண்பித்த படம். கதாநாயகனின் மன அழுத்தத்தினால் ஏற்படும் பிரச்சனையை கதாநாயகியிடம் கூறும் காட்சியை அவ்வளவு அழகாக சொல்லியிருப்பார்கள். செக்ஸின் தேவையை இதற்கு முன் தமிழ் சினிமாவில் எப்படி அணுகியிருந்தார்கள். ஆக இதுவும் ஒரு அரசியல் படம் தான். நேரடியாக தலித். திமுக, அதிமுக அரசியல் வரவேண்டும் என்று நினைக்க கூடாது. ஒரு புது சிந்தனை மாற்று சிந்தனை தமிழ் சினிமாவில் நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. அது commercial ஆகவும் இருக்கிறது. அரசியல் சார்ந்த படமாகவே நான் சூது கவ்வும் படத்தை பார்க்கிறேன். அதில் சொல்லப்படும் ”ஐந்து கூடாது” என்ற வசனங்கள் முக்கியமான ஒன்று. அதிகாரத்தில் ”கை வைக்க கூடாது” என்பது இன்று சராசரி மக்களுக்கு சொல்லப்படும் கருத்து தானே. என்ன தேவையோ அதை கேட்டு வாங்கி கொள்ளவும், மிரட்ட கூடாது, ஆயுதம் தூக்க கூடாது என்பதெல்லாம் பன்னாட்டு நிறுவனங்களின் சிந்தனையையே பிரதிபலிக்கிறது. முக்கியமாக வீரம் அறவே கூடாது. மக்கள் அப்படி இருந்து தான் survive ஆகிறார்கள். இந்த சமுகம் பணம் தான் தேவை என்று ஓடிக்கொண்டிருக்கிறது. ”காக்க காக்க” படத்தில் பார்த்த கடத்தல்காரர்களுக்கும் ”சூதுகவ்வும்” படத்தில் வருபவர்களுக்கும் மேல் உள்ள பார்வை என்பது வேறு வேறானது.
நல்லது கெட்டது எப்படி நம் பார்வையில் மாறுகிறது என்பதை கூர்மையாக விமர்சனம் வைத்திருக்கிறது படத்தில். நிர்வாகம் பண்ணுகிற அரசியல்வாதி இப்படி இருக்கும் பொது மக்கள் ஏன் இப்படி இருக்க கூடாது. இது எல்லாமே அரசியல் படம் தான் என்னைப் பொறுத்த வரை. மதுபானக்கடை மாதிரி எல்லா சினிமாவும் இருக்க வேண்டும் என்று சொல்ல முடியாது. இதைத் தாண்டி தீவிர சினிமா என்பது மாற்று சினிமாவாக தான் வரவேண்டும். அதற்கான வேலையை செய்யாமல் அவர்களை குறைப்பட்டு கொண்டிருக்க கூடாது. 10 லட்சத்தில் நல்ல படம் எடுக்கலாம் என்ற பட்சத்தில் அதை எடுத்து காட்டுவதை விட்டுவிட்டு வியாபாரத்திற்கு எடுப்பவர்களிடம் சென்று ஏன் சண்டை கட்ட வேண்டும். நாம் விரும்புகிற சினிமாவை தான் அவனும் எடுக்க வேண்டும் என்று நினைப்பது நியாயம் கிடையாது.

தற்போது வரும் தமிழ் சினிமாக்களை புதிய அலை சினிமா என்று சொல்லப்படுகிறது. இதைப்பற்றி?

உண்மை தான். புதிய அலை சினிமா உருவாகிக்கொண்டுதான் இருக்கிறது. நீங்கள் எல்லாம் பயங்கரமான விமர்சனத்துக்குள் இறங்க வேண்டாம். படிப்படியாக தான் மாறும். ஒரே இரவில் மாறிவிடாது. மூன்று வருடத்திற்கு முன்பிருந்த தமிழ் சினிமாவிற்கும் இன்று இருக்கின்ற தமிழ் சினிமாவிற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது. அதில் காப்பி இருக்கிறதே என்று நீங்கள் சொன்னால் கூட பின்னோக்கி நகராது, முன்னோக்கி தான் நகர்கிறது. நமக்கு பிடிக்கிறது பிடிக்கவில்லை என்றாலும் கூட ஐந்து வருடத்திற்கு முன்பு ”நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்”, ”சூது கவ்வும்”, ”மூடர்கூடம்”, ”ஜிகர்தண்டா”, ”மெட்ராஸ்”, முக்கியமாக ”கல்யாண சமையல் சாதம்” போன்ற படங்கள் தமிழில் சாத்தியமே இல்லை. ஆனால் இன்று சாத்தியாமாகி இருப்பதால் இதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது என்பது விமர்சகர்களின் கையில் தான் இருக்கிறது. அதாவது positive ஆன விமர்சனம். அவை constructive ஆக இருக்க வேண்டும். இப்போது களத்தில் என்ன நடக்கிறது என்பது தெரிந்து வருகிற விமர்சனம் தான் தேவை. ஈரானிய சினிமா மாதிரி தமிழ் சினிமா இல்லை என்று தொடர்பு படுத்தக்கூடாது. தமிழ் சினிமா பத்து வருடத்திற்கு பின்னோக்கி நகர்ந்த காலகட்டம் எல்லாம் இருக்கிறது. அந்த வகையில் இப்போது முன்னோக்கி தான் செல்கின்றது. பத்தாவது படிக்கும் போது பன்னிரண்டாவது படிப்பது எப்படியென்று கேட்கலாம், நீ ஏன் phd படிக்கவில்லை என்றால் , நாங்கள் அதன்பிறகு மீண்டும் LKG படிக்க போக வேண்டியது தான்.
தங்களின் அடுத்த படம் குறித்து?

இரண்டு கதை செய்துகொண்டு இருக்கிறேன். இன்னும் முடிவு செய்யவில்லை. அவை என்ன மாதிரி வருமென்று தெரியவில்லை. Research செய்துக்கொண்டு இருக்கிறோம்.

ஆனால் ”மதுபானக்கடை” போன்று இல்லாமல் வேறு ஒரு கதையாகத்தான் இருக்கும்.