இயக்குனர் சீனு ராமசாமி நேர்காணல்: "மக்கள் விரும்புவதை செய்யாமல், மக்களுக்கு எது தேவையோ அதை செய்பவனே சிறந்த கலைஞன்"

சீனு ராமசாமி சினிமாவிற்கு வந்தது எப்படி?

கல்லூரி இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருக்கின்ற பொழுது, மதுரை திருப்பரங்குன்றத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் விழா ஒன்று நடத்தினார்கள். அதற்கு பாலு மகேந்திரா சார் வந்திருந்தார். அவர் மேடையில் பேசுவதை நான் கேட்டேன். அதற்கு முன்பு வரை அவர் மீது அதீத அபிமானத்தில் இருந்தேன். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் உலக சினிமாக்கள் எல்லாம் காண்பிப்பார்கள். அங்கு சென்று படங்கள் எல்லாம் பார்ப்பேன். நிறைய இலக்கியம் படிக்கின்ற இலக்கிய மாணவனாகவும் இருந்தேன். அச்சமயத்தில் பாலுமேந்திராவின் பேச்சு மிகுந்த ஈர்ப்பு ஏற்படுத்துவதாக இருந்தது. உடனே அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். அவர்களுடைய படங்களை அடிப்படையாக வைத்து, கொஞ்சம் விமர்சனமும் சேர்த்து பதினெட்டு பக்கங்களுக்கு எழுதி பாலு மகேந்திராவிற்கு அனுப்பினேன்.

உதவியாளராக சேர்ந்தால் பாலு மகேந்திராவிடம் தான் இருக்க வேண்டும் என்ற முடிவோடு சென்னை வந்தவன் தான் நானும். ஆனால், அவரை எப்படி அணுகுவது என்று தெரியவில்லை. நான் எழுதிய கடிதத்திற்கும் பதில் வரவேயில்லை. அதன் ஜெராக்ஸ் ஒன்று வைத்திருந்தேன். அதை வைத்துக்கொண்டு, ”நான் ஏற்கனவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுதினேன், பதில் வரவில்லை, முதல் கடிதத்திற்கு பதில் வராத பட்சத்தில் இரண்டாவது கடிதம் எழுதுவதென்பது அநாகரிகம். என் முதல் கடிதத்திற்கு பதில் வரும் வரை என் முதல் கடிதமே திரும்பவும் உங்களுக்கு வரும்”. என்று மீண்டும் அதை அவருக்கு அனுப்பினேன்.

அதற்கு பதில் கடிதம் வந்தது. ஆனால், அதற்குள் நான் திரும்ப ஊருக்கு வந்துவிட்டேன். அச்சமயத்தில் நான் இரண்டு பத்திரிக்கை நண்பர்களோடு தங்கியிருந்தேன். அந்த நண்பர்கள் அந்த கடிதத்தை எடுத்துக்கொண்டு என்னைப்பார்க்க ஊருக்கே வந்துவிட்டார்கள். மதுரைக்கு வந்து பாலுமகேந்திரா சார் லெட்டர் அனுப்பியிருக்கார் என்று சொல்லி அந்த கடிதத்தை என்னிடம் கொடுத்தார்கள். அதில் ”தங்களின் அசலும் நகலும் எனக்கு கிடைத்தது. என்னை வந்து பாருங்கள்” என்று எழுதப்பட்டிருந்தது. அந்த லெட்டரோடு வந்து அவரிடம் உதவியாளராகச் சேர்ந்தேன். அவரோடே பல வருடங்கள் கழித்தேன். இதற்கு பின்பாக இயக்குனர் அண்ணன் சீமானின் அறிமுகம் கிடைத்தது. அவரிடமும் ”வீரநடை”, என்ற படத்தில் வேலை செய்தேன். நிறைய விளம்பரப்படங்கள் எடுத்தேன் . அந்த துறை எனக்கு சினிமாவிலும் கதை சொல்லலாம் என்ற நம்பிக்கையை அளித்தது. அந்நம்பிக்கை பழித்ததன்பேரில் இன்னமும் நான் சினிமாவினுள் இருக்கிறேன்.

தென்மேற்கு பருவக்காற்று, கூடல் நகர், நீர்ப்பறவை இம்மூன்றில் படைப்பாளராக உங்களை திருப்திபடுத்திய படம் ஒரு சினிமா ரசிகராக உங்களை திருப்திப்படுத்திய படம் எது?

இயக்குனராக அடுத்து பண்ணப்போகிற படம் தான் நம்மை திருப்திப்படுத்தும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் எனக்கென்னவோ திருப்தியின்மைதான் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது. ஒவ்வொரு படங்களும் முடிகின்ற பொழுதும், இன்னமும் நன்றாக வேலை செய்திருக்கலாமோ, இன்னும் நன்றாக எடுத்திருக்கலாமோ, இந்த விஷயங்கள் அந்நேரத்தில் ஒத்துழைக்கவில்லையே, என்ற குறைகள் மட்டுமே என் மனதில் தங்கிக்கொண்டேயிருக்கிறது. இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இது சம்பந்தமாக என்னுடைய சக இயக்குனர் நண்பர்களிடமும் கேட்டுக்கொண்டேயிருக்கிறேன். அப்படிப்பார்க்கையில் ”தென்மேற்கு பருவக்காற்று”, படைப்பாளராக என்னைத் திருப்திப்படுத்தியபடம்.

சினிமா ரசிகராக என்று சொல்லவேண்டுமானால், ஒவ்வொரு படமுமே அந்த காலகட்டத்தில் அந்தச் சூழலில் ரசித்து செய்த படங்கள்தான். அப்பொழுது இருந்த சினிமா அறிவிற்கு எல்லாமே ரசித்து பண்ணப்பட்ட படங்கள்தான். அதில் ரசிகராக எனக்கு ”நீர்ப்பறவை”, மிகவும் பிடிக்கும்.
நீர்ப்பறவை படத்தில் கடலையும், கடல் வாழ் மக்களையும், கிறிஸ்தவ சமூகத்தினரைப்பற்றியும் காட்சிப்படுத்துகிறீர்கள். அப்படியிருக்க அழகியல் பூர்வமாக அதனை அணுகியிருப்பதை அதன் யதார்த்த தன்மையை பாதிக்கிறதை உணர்கிறீர்களா?

கடலே அழகானது தான். என்ன இருக்கிறதோ அதைத்தான் காண்பித்திருக்கிறேன். நான் எடுத்தது சின்ன பட்ஜெட் படம். வியாபார பலமற்ற படம். ஒட்டு மொத்த கடலை ஒரு ஆர்ட் டிபார்ட்மெண்டை வைத்து சுத்தம் பண்ண முடியுமா?. அந்த பகுதியே அப்படித்தான் இருந்தது. மேலும் நீர்ப்பறவை நிகழும் கதைக்களம் ராமேஸ்வரம். ஆனால் ராமேஸ்வரத்தில் இருக்கின்ற கடல் உங்களுக்கு காட்டப்பட்டதா? என்றால் அதற்கான சாத்தியதைகள் அங்கு இல்லை. கதைக்கு பழைய கடற்கரை தேவைப்பட்டது. ப்ளாஸ்பேக் சீன்களும் படத்தில் வருகின்றன. அதனால் மணப்பாடு கடற்கரையை தேர்ந்தெடுத்துக்கொண்டேன்.


அழகியகடல் மீனவர்களுக்கான வாழ்க்கை எவ்வளவு துயரம் மிகுந்ததாக இருக்கிறது என்பதைத்தான் கதை சொல்கிறது. யதார்த்தப்படம் என்பதால் அதை அசிங்கமாக காட்டமுடியுமா?

இராமேஸ்வரம் என்று காண்பிக்கிறோம், இராமேஸ்வரம் கடலில் அலையே கிடையாது. அந்தக்கடலை நீங்கள் சினிமாவில் காண்பித்தால் நம் ரசிகர்கள் ஒத்துக்கொள்வார்களா?, ஏதோ குளம் , குட்டையில் போய் படம் எடுத்து வந்திருக்கிறார்கள் என்று சொல்வார்கள். இங்கு சில சமரசங்கள் உண்டு. ஒளிப்பதிவாளரிடமும் என்ன இருக்கிறதோ அதை மிகைப்படுத்தாமல் அப்படியே காட்டுங்கள் என்றுதான் சொல்லப்பட்டது.

வசனங்களை விட காட்சிகள் தான் வலிமையானது. இருப்பினும் அரசியல் சார்ந்த கருத்துகள் உங்களின் ”நீர்ப்பறவை” படத்தில் வந்தாலும் அது வசனம் சார்ந்ததாகத்தான் இருக்கிறது. அதை ஏன் நீங்கள் காட்சி ரீதியாக காட்சிப்படுத்த முயலவில்லை. உதாரணமாக. இயக்குனர் சமுத்திரகனி பேசுகின்ற வசனங்கள், “தமிழ்நாட்டில் ஒரு தொகுதி கூட மீனவனுக்கு இல்லை, ஒரு முப்பது தொகுதி மீனவனுக்கு இருந்தா நம் சத்தமும் வெளியே கேட்கும்., பத்திரிக்கைகள் கூட இந்திய மீனவர்கள் என்று சொல்லாமல் தமிழக மீனவர்கள் என்று பிரிக்கிறார்கள்”, இராமேஸ்வர மீனவர்களின் கொலை போன்றவைகளெல்லாம் ஏன் வசன ரீதியாகவே அணுகியிருக்கிறீர்கள்?

படத்தின் கதையாக எதை வெளிப்படுத்த வேண்டுமோ, அதை வெளிப்படுத்தி விட்டோம். என்ன சொல்லவேண்டுமோ அதைச் சொல்லிவிட்டோம். ஒரு படத்தில் கதைக்கு சம்பந்தமான எல்லா விஷயங்களையும் பேசிவிட வேண்டும் என்று முயற்சிப்பதன் பலன் தான், வசனங்களாக வைத்திருப்பது. கடல் சார்ந்த மக்களின் பிரச்சனைகளை ஒட்டுமொத்த சினிமாவில் ஏதேனும் ஒரு இடத்திலாவது பேசிவிட வேண்டும் என்ற வேட்கைதான் காரணம். எல்லாவற்றையும் காட்சியாகவே வைக்க வேண்டுமென்றால் எப்படியும் இதை வைத்தே இரண்டு மூன்று படங்கள் எடுக்க வேண்டி வரும். நான் எரிந்திருப்பது முதல் கல் தான். எனக்குப் பின்னால் ஒருவர் பெரிய பாறாங்கல்லை தூக்கி எறிவதற்கு என் சினிமா வழிவகுக்கும் என்று நம்புகிறேன்.

தென்மேற்குப் பருவக்காற்று படத்தினை பற்றி பேசாமொழியில் கட்டுரை ஒன்று எழுதப்பட்டிருந்தது. முதலில் அந்தக்கட்டுரையை படித்தவுடன் கோபம் கொண்டதாகவும், பின்னர் அதை எழுதியது வெங்கட்சாமிநாதன் என்பவர் என்று தெரிந்துகொண்டதும் அதன் கருத்துக்களை புரிந்துகொண்டேன் என்று சொன்னீர்கள். அப்படியெனில் விமர்சனத்திற்குள்ளான கருத்துகள் முக்கியமானதா? அல்லது அதை யார் சொன்னார்கள் என்பதுதான் முக்கியமானதா?

முதலில் விமர்சனம் முக்கியம். அது கலாப்பூர்வமான விமர்சனமாக இருக்கின்ற பட்சத்தில் அதை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். நான் விமர்சனங்களுக்கு எதிரானவன் கிடையாது. விமர்சனம் நியாயமானதாக இருந்தால் ஏற்றுக்கொள்வேன்.


விமர்சகர் என்னைப்பார்த்துக் கேட்டார், ”ஒரு அம்மா வயிற்றில் கத்தியால் குத்தி ரத்தம் வர போய் பஸ்ஸை இடை மறித்து, அதில் ஏறி பெரியாஸ்பத்திரியில் அட்மிட் ஆக முடியுமா?” என்று. நான் அதற்கு ”உங்கள் வீட்டில் கரப்பான் பூச்சி இருந்தால் உங்கள் அம்மா என்ன செய்வார்கள்”, என்று கேட்டேன். ”அலறிக்கிட்டு வெளியே ஓடி வந்துவிடுவார்”, என்று சொன்னார். ஆனால், எங்கள் ஊரில் நச்சுப்பாம்பைப் பார்த்தால்கூட அடிப்பதற்கு பெண்கள் ஓடுவார்கள். அந்த வாழ்க்கைதான் தீர்மானிக்கிறது. இது மாதிரியான பல சம்பவங்களை என் நிஜ வாழ்வில் பார்த்திருக்கிறேன். ஒரு மாடு முட்டியதாகத்தான் அந்த அம்மா மருத்துவமனையில் சேர்ந்துகொள்ளும். நிறைய பேர் அப்படி எங்கள் ஊரில் செய்திருக்கிறார்கள், அதை வைத்துத்தான் தென்மேற்கு பருவக்காற்றில் அந்தக்காட்சியை வைத்தோம்.

விமர்சனம் யார் சொல்கிறார்கள் என்பது முக்கியம் கிடையாது. நியாயமானதாக இருந்தால் அதனை யார் சொன்னாலும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.

நீர்ப்பறவை படத்தில், அருளப்பசாமி இறந்ததற்கு நானே காரணமென எஸ்தர் சொல்கிறாள். ஆனால் கதைப்படி இலங்கை மீனவர்கள்தான் அருளப்பசாமியை கொலை செய்திருக்கிறார்கள் என்ற உண்மையும் அதில் இருக்கிறது. தான் கடலுக்குச் செல்லச்சொன்னதால்தான் அருளப்பசாமி இறந்துவிட்டாரென எஸ்தர் இருபத்தைந்து வருடங்கள் கழித்தும் நீதிமன்றத்தில் சொல்வது நிஜவாழ்வில் சாத்தியமாகுமா?

அவள் ஒரு பாமரத்தாய். அவள் படித்தவள் கிடையாது. தன் மகனை ’கடைக்குப் போய் வா’, என்று காசு கொடுத்து அனுப்புகிறாள் ஒரு அம்மா என்று வைத்துக்கொள்வோம். அந்த பையன் யதேச்சையாக சாலை விபத்தில் மரணமடைந்தும் விடுகிறான் என்றால், ’என் மகனை நான்தான் கொன்றேன்’, என்றும் கடைசி வரை சொல்லிக்கொண்டேயிருக்கும். சென்சார் அனுமதித்த விதிமுறைகளுக்குட்பட்டுத்தான் அந்தப்படத்திற்கான வசனங்கள் படத்திலிருக்கின்றன. ஏன் அந்த பெண் ஐ.நா. சபையைப் பார்த்து கேள்வி கேட்கவில்லை?, ஏன் இந்திய அரசாங்கத்தைப் பார்த்து கேள்வி கேட்கவில்லை? என்றெல்லாம் கேள்வி எழுப்புகிறார்கள்.

கண்டிப்பாக எஸ்தர் கேட்டிருப்பதற்கு வாய்ப்பில்லை. ஆனாலும், அந்தப்படத்தின் இறுதிக்காட்சியில் நீங்கள் பார்த்தீர்களேயானால், நீதி மன்றத்தில் “நீ ஏன் உன் கணவரின் இறப்பை அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தவில்லை” என்று கேட்கிற பொழுது, “ என் கணவரோடு சேர்ந்து இத்தனை மீனவர்கள் செத்திருக்கிறார், என்ன செஞ்சீங்க” என்று எஸ்தர் அழுகிறாள். இவ்வளவுதான் அந்தக்கதாபாத்திரம் பேச முடியும். எஸ்தர் அதனை தெளிவாகச் சொல்கிறாள்.


அதற்குமேல் அந்த கதாப்பாத்திரத்தால் பேச முடியாது. ஆனால், அதே சமயம் நீதிமன்றத்தில் “சுட்டது அவுக, ஆனால் கொன்னது நான்” என்று சொல்வாள். அந்த உண்மையை அங்கு சொல்கிறாள். அரசியலைச் சொல்லிவிட்டாள். அந்த கதாபாத்திரத்திற்கு மீறி அதனை பேச வைத்தால் அது பழைய ’கண்ணாம்பா’, படம் போல மாறிவிடும் சில விஷயங்கள் தணிக்கையில் நீக்க வேண்டிய கட்டாயம் ஆகிவிட்டது. அதை ஒன்றும் செய்ய முடியவில்லை. சமுத்ரகனி சிலோன் பற்றியெல்லாம் பேசுவார், ஆனால் அதையெல்லாம் நீக்கிவிட்டோம்.

நீர்ப்பறவை படத்தில் ”பூ” ராம், தன் மகனை திருத்தி அனுப்பிய பாதிரியாருக்கு ஒரு மீன் பரிசளிப்பார். அந்த இடத்தில் எங்கேயும் வசனங்களே இல்லாமல் உணர்வுப்பூர்வமாக ஒரு தந்தையின் மனநிலையை பிரதிபலிக்கின்ற விதமாக காட்சியிருக்கும். இன்றைக்கு வரைக்கும் பாராட்டப்படுகின்ற காட்சி. மொழி தெரியாதவர்களுக்கும், பேசத்தெரியாதவர்களுக்கும் காட்சியல் ரீதியாக ஒரு கதையை சொல்வதுதான் சினிமா, ஆனால் தமிழ்சினிமாவில் வசனங்கள் மூலமாகவே கதைசொல்கின்ற போக்கு இருக்கிறது . அதுவும் ஒரு காட்சியை காட்டிவிட்டு அப்படியே அதனை வசனமாகவும் சொல்வது வழக்கமாக வைத்திருக்கிறார்கள். கணிதத்தில் கூட ஒரு சூத்திரம் கொடுத்துவிட்டு அதற்கான கணக்கை கொடுப்பார்கள். ஆனால் இங்கு சினிமாவில் முழுக்கவே வசனமாகவே வைத்துவிடுவதால் பார்வையாளர்கள் விஷீவல் ஹாண்டிகேப்டுகளாக இருக்கிறார்கள். இது தமிழ்சினிமாவின் நூறாண்டு கால சோகம், இதைப்பற்றி ?

இது ”பாபு ஊமையாம், அவனால பேசமுடியாதாம்”, என்று சொல்வது போலத்தான். இதன் பின்னணி என்னவென்றால் கடைக்கோடி ரசிகர்களுக்கும் புரியவேண்டும் என்று படைப்பாளிகள் எண்ணியதன் விளைவுதான். இது தொடர்ந்துகொண்டிருக்கிறது, இது தவறுதான். அதே நேரம் எங்கு பேச வேண்டுமோ, அங்கு பேச வேண்டும், பின்னர் எடுத்து இயம்புதல் என்பது நாடகத்தன்மைதான். நானும் கூட டப்பிங்கில் காட்சி புரியாமல் போய்விடக்கூடாது என்ற காரணத்திற்காக அதைச்செய்திருக்கிறேன். இது தவறுதான். ஆனால் காலங்கள் மாறும். புதுமுகங்களை வைத்துப் படமெடுப்பதற்கும் வாய்ப்புகள் அருகி வருகிறது. எல்லாப்படத்திற்குமே அதே உழைப்புத்தான் தேவைப்படுகிறது.

அகிலா க்ரேன், ஜிம்மி ஜிப் எல்லாம் பயன்படுத்த முடியாது. ஆனால், உழைப்பு ஒன்றுதான். ஒரு வருடம் உழைத்து கஷ்டப்பட்டு எடுக்கப்படுகின்ற படைப்பு சரியாகப் புரியாமல் மக்களைச் சென்றடையாமல் போய்விட்டால் என்ன செய்வது என்ற பயமும் இருக்கிறது. அதற்காக அந்த வசனங்களும் தேவைப்படுகின்றன.

சென்சார் விதிமுறைகள் குறித்து உங்களது பார்வைகள்?

வெறும் ஆபாசத்தையும், வன்முறையையும் மட்டுமே குறைப்பதற்காகவா தணிக்கைத்துறை அமைக்கப்பட்டிருக்கிறது. புரட்சிகரமான கருத்துகள், சமூக மாற்றத்தை உந்தித்தள்ளுகிற கருத்துகள், இந்த அமைப்பை கேள்வி கேட்கிற கதைகள், எது வந்தாலும் தணிக்கையில் தடை செய்கிறார்கள். அவர்கள் செய்கை வினோதமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் வாங்கமுடியாத தணிக்கை சான்றிதழை மும்பையில் வாங்கிவிடலாம்.
தமிழகத்தில், சென்சார் என்பது அரசு அமைப்பிற்கு எதிரான கருத்துக்களை எந்த வடிவத்தில் சொன்னாலும், அந்த காட்சியை எடுத்துவிடுகிறார்கள். தமிழ்நாட்டைப் பொருத்தமட்டில் சினிமா என்பது ஒரு தியேட்டர் வியாபாரம். ஏன், இந்தியாவைப் பொருத்தவரையிலும் சினிமா என்பது தியேட்டர் வியாபாரம் மட்டுமே. இங்கு என்னமாதிரியான சினிமாக்கள் மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதை தணிக்கைத்துறை தீர்மானிக்கிறது. இங்கு ராணுவத்தில் என்ன மாதிரியான பிரச்சனைகள் இருக்கின்றது என்பதைப்பற்றி ஒரு படம் எடுத்துவிட முடியாது. ராணுவத்தை விமர்சித்து ஒரு படம் எடுத்தால் இந்தியன் டிபன்ஸ் மினிஸ்ட்ரிக்கு உங்கள் படத்தை அனுப்பி, அவர்கள் பார்த்து ஆட்சேபணை இல்லை என்று சொன்னவுடன் தான் அதற்கான ஒப்புதல் பெற முடியும். அப்படியெனில் ஆறு மாத அளவிற்குள் எடுக்கப்படுகின்ற ஒரு வணிக படத்திற்கு, இந்த சாத்தியக்கூறுகள் சரியாக இருக்குமா? காத்திருக்க முடியுமா? அந்த தயாரிப்பாளரால் கடனுக்கான வட்டிக்கட்ட முடியுமா? என்றெல்லாம் பார்க்கையில் சில விஷயங்களை நம்மால் விமர்சிக்க முடியாது. இந்திய நாட்டுடன் நட்பு நாடுகளாக இருப்பவைகளை விமர்சிக்க முடியாது. அரசியல் காரணமாக பாகிஸ்தானை விமர்சனம் பண்ணலாம், ஆனால் இலங்கையை விமர்சிக்க முடியாது.

அப்படி நீங்கள் இலங்கையை விமர்சித்தால் அப்படம் இங்கேயே துண்டிக்கப்படும், அல்லது டிஃபன்ஸ் மினிஸ்ட்ரியின் எல்லைக்குப் போகும். ஆகையால், சென்சாரில் எந்தமாதிரியான கருத்துகள் வெளியே வரலாம், மக்களைச் சென்றடையலாம், எதெல்லாம் வரக்கூடாது என்பதற்கான கருத்துகளும் உள்ளடக்கம். வன்முறையும், ஆபாசங்களும் மட்டுமே அவர்களுக்கான இலக்கு அல்ல.

சென்சார் போர்டு தேவை என்று நினைக்கிறீர்களா?

ஜனநாயகப்பூர்வமான சென்சார் தேவை. சென்சார் தேவையில்லை என்று சொன்னால் மக்கள் பார்க்க கூடாத படங்களெல்லாம் கூட திரையரங்கத்திற்கு வந்துவிடும். இது இருப்பதிலேயே ஆபத்து. சென்சாரின் அளவுகோல்கள் என்ன?, தீர்மானங்கள் என்ன என்பதற்கான வழிமுறைகள் மிகவும் வலுவாக நிர்ணயிக்கப்பட வேண்டும். சமூகத்தில் இருக்க கூடிய பகுத்தறிவாதிகள், முற்போக்கு சிந்தனையாளர்கள், நிறைய படித்தவர்கள், சிந்தனையாளர்கள் கொண்ட குழுவினரால் திரைப்படங்கள் சென்சார் செய்யப்படவேண்டும்.

அதேசமயத்தில் லீனா மணிமேகலை, அரசியல் பிரச்சனைகளை முன்னிலப்படுத்தி எடுத்த ”செங்கடல்”, மாதிரியான திரைப்படங்கள் தணிக்கைத்துறையினரோடு போராடி எந்தவித வெட்டும் இல்லாமல் படத்தை வெளியிடுகின்றனர். இது போல் தமிழ்சினிமாவிலும் ஏன் யாரும் செய்வதில்லை?

அது அந்த படத்தை தயாரிக்கிற தயாரிப்பாளர்களின் விழிப்புணர்ச்சி. பொறுப்புணர்ச்சி, சம்பந்தப்பட்டது. அந்த தயாரிப்பாளருக்கான ஒத்துழைப்பு இருந்ததென்றால் கண்டிப்பாக அதைச்செய்யலாம். தயாரிப்பாளர்களின் ஒத்துழைப்பால் மட்டுமே இது சாத்தியம்.


உங்கள் ஒவ்வொரு படமும் நிலம் சார்ந்து கதைக்களம் அமைத்துக்கொள்வதற்கான காரணங்கள் என்ன?
தமிழ் கதைகளே நிலம் சார்ந்துதான் இருக்கிறது. நிலம் சார்ந்த அடிப்படையில்தான் தொழில்களும் இருக்கிறது. மீனவன் கடல் சார்ந்து இருக்கிறான். நிலம் சார்ந்துதான் தமிழ் வாழ்க்கை கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் அந்த வாழ்க்கை முறை திரைக்கு ஒத்து வரும் என்ற அடிப்படை விதியும் உள்ளது. பின்பு நாமும் உலக சினிமா பார்க்கிறோம். More regional is universal என்கிறார்கள் ஒரு காஞ்சி பட்டு, காஞ்சி பட்டாக இருப்பதுதான் உலகத்தரம் என்கிறார்கள். அப்படிப்பார்க்கையில் இந்த வெகுஜன சினிமாவில் இவ்வளவு குறுகிய எல்லைக்குட்பட்டு வெகுஜன கதைகளாகவே யிருந்தாலும், அதில் என்ன புதுமுயற்சியாக செய்துபார்க்கலாம் என்று தோன்றுவதால் என் கதைகளை நிலம் சார்ந்து அமைத்துக்கொள்கிறேன்.

ஒரு திரைப்படமெடுக்க இயக்குனருக்கும், ஒளிப்பதிவாளருக்குமிடையேயான உறவு எப்படியிருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்.?

வழக்கமாக கணவன் மனைவி உறவுபோல இருக்கவேண்டும் என்பார்கள். ஒரு திரைக்கதையை இயக்குனர் படத்தில் எப்படி காட்டவேண்டும் என்று விரும்புகிறார் என்கிற புரிதல் மட்டும் ஒளிப்பதிவாளருக்கு இருந்தாலே போதும். வேறு எதுவும் தேவையில்லை. இந்த காட்சிப்பதிவுகளை புரிந்துகொண்டாலே, உணர்ந்துகொண்டாலே அந்தப்படம் நல்ல படமாக வந்துவிடும்.

’சூது கவ்வும்’ படம் வருகிறது, ’தென்மேற்குப் பருவக்காற்று’ படமும் வருகின்றது. இரண்டிற்குமான அணுகுமுறை வேறு. சூது கவ்வும் படத்திற்கான ட்ரீட்மெண்டை நீங்கள் தென்மேற்குப் பருவக்காற்று படத்திற்கு பொருத்திப்பார்க்க முடியாது. என் படத்தில் என் கதைக்கான ட்ரீட்மெண்ட்டை புரிந்துகொண்டே செய்திருக்கிறார்கள். நீங்கள் குறிப்பிட்டது போல கொஞ்சம் அதிகமான அழகியலைக் கொடுப்பவர் பால சுப்ரமணியம் சார் தான்.

மாநிறம் கொண்ட இயல்பான கிராமத்து முகங்களை பாலுமகேந்திராவிற்கு பின்பாக உங்கள் படத்தில் காண முடிகின்றது. அதைப்பற்றி உங்கள் கருத்து?

இவைகள் தான் தமிழ்முகங்கள். திராவிட முகங்கள். கருத்தபெண்கள். அன்றாட வாழ்க்கையில் சந்திப்பவர்கள். இது மாதிரியான ஊர்நாட்டுக்கதைகள் மையமாக இருப்பதால் அதற்கான முகங்கள் இருந்தால் இன்னமும் கதாபாத்திரத்தோடு நெருக்கமாக ஆகலாம் என்ற காரணம் தான். மும்பை வாழ்க்கையை மையமாக வைத்துக்கொண்டு இரண்டு கதாநாயகிகளையும் கருப்பாகத்தான் காட்ட வேண்டும் என்று அடம்பிடிக்க மாட்டேன். மாநிற பெண்கள் தான் என் கதைக்கான விருப்பம், அந்நிறப்பெண்களைத் தேடுகின்றோம், அப்படி கிடைக்காத பட்சத்தில் அவர்கள் இயல்பான நிறத்தை கொஞ்சம் குறைத்து மாநிறமாக்குகின்றோம்.


பாடல்கள் தமிழ்சினிமாவில் என்னவிதமாக உதவிசெய்கிறது?

ஒரு உதவியும் செய்யவில்லை. சினிமாவில் பாடல்களே தேவையில்லை என்ற கட்சியைச் சேர்ந்தவன் தான் நானும். அதுதான் என் ஆசையும் விருப்பமும். அதற்கான சாத்தியங்கள் நிகழும் போது என் படமும் பாடல்கள் இல்லாமல் வெளிவரும்.

வள்ளி திருமணம் நாடகத்தை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள் இந்த நூறு வருட தமிழ்சினிமாவின் கமர்சியல் வடிவம் அந்த நாடகத்தினுள் இருக்கும். அதில் வருகின்ற காமெடி பப்பூன் தான் இன்றைக்கு வருகின்ற சந்தானம், சூரி, அன்றைக்கிருந்த கவுண்டமணி, செந்தில் , வடிவேலு இப்படி எல்லோருமே அந்த வள்ளி திருமண நாடகத்திலிருந்த பப்பூன்கள் தான். இடையில் பாட்டு பாடுவார்கள். க்ளைமேக்ஸில் ஒரு பரபரப்பு. யானை வந்து துரத்தும், இதை அப்படியே எல்லீஸ் ஆர் டங்கன் மாதிரியான இயக்குனர்கள் மக்கள் இதைத்தான் விரும்புகிறார்கள் என்றும் மக்கள் இதனையே ரசிக்கிறார்கள் என்றும் அந்நாடகங்களை அப்படியே படமாக எடுத்தார்கள்.

அதுவே சமூக கதைகளை எடுக்கின்ற பொழுது இந்த தன்மைகளை திரைக்கதைகளில் வைத்து விட்டார்கள். அப்படித்தான் பாட்டு உள்ளே வருகிறது. பி.யூ.சின்னப்பா பாடத்தெரிந்த ஒரே காரணத்திற்காகவே ஹீரோவாக்கிவிட்டார்கள். மக்கள் நாடகத்தில் எந்தெந்த இடத்திலெல்லாம் கைதட்டுகிறார்கள் என்பதைக் கவனித்து அந்த அம்சங்களையெல்லாம் எடுத்து தமிழ்சினிமாவில் புகுத்துவிட்டார்கள்.

பணத்தை சம்பாதிக்க கூடியதாகவும், கைதட்டல்கள் வாங்க கூடியதாகவும் இருக்கின்ற காரணத்தினால்தான் தொடர்ந்து தமிழ்சினிமாவில் இந்த வழிமுறையை பின்பற்றிக்கொண்டேயிருக்கிறார்கள். இதுவரைக்கும் நிகழ்ந்துகொண்டே வருகிறது. கண்டிப்பாக ஒரு காலத்தில் மாற்றங்கள் வரும். எனக்கு குறும்பட இயக்குனர்கள் மேல் நம்பிக்கை இருக்கிறது. அவர்கள் இந்த நாடகத்தன்மையை உடைப்பார்கள். வணிக வெற்றிதான் வெகுஜன சினிமாவில் அடுத்த மாற்றத்தினை உருவாக்குகிற மைல்கல்லாக இருக்கிறது. அவர்கள் அந்த வெற்றியைக் கொடுப்பார்கள்.

ஒரு பேய் படம் வெற்றியடைந்தால் அடுத்து எத்தனை ஆவி படங்கள் உருவாகப்போகிறதென்று தெரியவில்லை. ஒரு சாமிப்படம் வெற்றியடைந்தால் அதைத்தொடர்ந்து சாமிப்படங்கள் வரத்துவங்குகின்றன. ஆக, வெகுஜனத்திற்குள் சிறு மாற்றங்கள் கொண்ட படங்கள் வெற்றிபெற்றால் அடுத்தடுத்து பாடல்களைத்தவிர்த்த படங்கள் வெளியாகத்துவங்கும்.

நீங்கள் எதிர்பார்க்கிற மாற்று சினிமாக்கள் தயாரிப்பாளர்கள் அதிகமாக கிடைத்தால் சாத்தியம்.

படங்களில் இசையின் பங்கு?

தமிழ்சினிமாவில் ஒலி மாசு அதிகமாக இருக்கிறது. படம் முழுவதும் சப்தங்களால் நிரப்பப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. இதற்கு தொடர்ந்து பழக்கப்படுத்தப்பட்ட ரசிகர்கள்தான் இங்கிருப்பவர்கள். தொலைக்காட்சித்தொடர்களிலும், திரைப்படங்களிலும் இதுவே தொடர்ந்து நிகழ்கிறது. அப்படிப்பார்க்கையில் சப்தக்குறையோடு நிசப்தமாக ஒரு காட்சி வைக்கப்பட்டிருந்தால், படம் மெதுவாக நகர்கிறது. லேக் என்று சொல்கிறார்கள். நிசப்தம் வந்தால் ரசிகர்கள் பேச ஆரம்பித்துவிடுகிறார்கள். இதிலிருந்து விலகி சில இசையமைப்பாளர்கள்தான் குறைந்தபட்ச இசையை தர முயற்சிக்கிறார்கள்.

ஆனால., பெரிய ஸ்டார் வேல்யூ படங்களெல்லாம் இயக்குனரின் நோக்கமே படம் வேகமாக செல்லவேண்டும் என்பதால் சப்தங்களால் கதையை நிரப்பிவிடுகிறார்கள். மெளனமாக ஒரு காட்சியை விட்டால், தியேட்டரில் கத்திவிடுவார்களோ என்ற பயம் இருக்கிறது. இசையும் வணிகமாக இருக்கிறது. இங்கு ஒன்பது விநியோகஸ்தர்கள் தான் இன்னமாதிரியான சினிமாக்கள் வெளியே வரவேண்டும் என்று தீர்மானிக்கிறார்கள். எல்லா படங்களும் வணிக ரீதியாக வெற்றியடைய வேண்டும் என்கிற நோக்கத்திற்காகத்தான் எடுக்கப்படுகிறது.
சினிமாவிற்கான அதிகபட்சமான ஆடியன்ஸ்கள் தமிழில் இருக்கிறார்கள்.

நீங்கள் இலக்கியப் பின்புலத்திலிருந்து வந்தவர், ஆனால் இன்னமும் இங்கு அதிக அளவில் இலக்கியத்திலிருந்து சினிமாக்கள் உருவாகாதது ஏன்?

நாவலிலிருந்து சினிமாக்கள் எடுக்க வேண்டும் என்பதே என் ஆசை. கண்டிப்பாகச் செய்வேன். அதற்கான ஆரோக்கியமான போக்கு ஆரம்பித்துவிட்டது. சுஜாதாவின் கதையை வாங்கி அதனை எடுக்கவேண்டிய முயற்சிகளில் இருந்து வருகிறேன். நாவலிலிருந்து திரைக்கதை என்பது வேறு. இங்கு தொடர் முயற்சிகள் நடந்து வெற்றிபெறும் பொழுது இலக்கியங்கள் சினிமாவாகும் மாற்றங்கள் அதிகமாக வரலாம்.

நீங்கள் படித்ததில் பிடித்த புத்தகம்?

நான் படித்ததில் மறக்க முடியாத புத்தகம் “சிதம்பர நினைவுகள்”. மலையாளத்தில் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு என்ற எழுத்தாளர் எழுதியிருந்தார். அதனை தமிழுக்கு திருமதி கே.வி. ஷைலஜா அவர்கள் மொழிபெயர்த்திருந்தார்.


உங்கள் சினிமாக்களில் தொடர்ச்சியாக பெண்கள் பற்றிய மேம்பட்ட சித்தரிப்புகள் வருகின்றது. ஆனால், தற்கால சினிமாக்களில் பெண்கள் குறித்த சித்தரிப்புகள் மூன்றாம் தரமாக இருக்கின்றது. இதை எப்படி பார்க்கிறீர்கள். இதன் பின்னணி என்னவென்று நினைக்கிறீர்கள்.?

அடுத்த வருடம் இந்த வணிக சினிமா நம்மை வைத்திருக்க விடுமா? என்பது தெரியவில்லை. அதற்குள் நாம் என்ன செய்யவேண்டும் என்பதே முக்கியம். வாழ்விற்கு ஆதாரமே பெண்கள் தான். இது என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலிருந்து பெறப்பட்ட கருத்துகள். நான் மனிதனாக இருப்பதற்கு இரண்டு பெண்கள் முக்கிய காரணங்களாக இருக்கின்றனர். ஒன்று என் மனைவி, இன்னொன்று என் அம்மா. பெண்களால் தான் நான் வளர்க்கப்பட்டவன். படங்களில் பெண்களை மேம்பட்டு காண்பிப்பது சமூகத்தேவை. மக்கள் விரும்புவதை செய்யாமல், மக்களுக்கு எது தேவையோ அதை செய்பவனே சிறந்த கலைஞன் ஆகிறான்.

இலக்கியங்களின் பேசுபொருட்களுக்கும், சினிமாவின் பேசுபொருட்களுக்கும் எப்போதும் பெரும் இடைவெளி இருப்பது ஏன்?

மக்களின் வாழ்க்கையை பிரதிபலிப்பது நாவல்கள். ஆனால் இங்கு பெரும்பான்மையான படங்கள் ஹீரோயிசப்படங்கள். ஆக, அந்த ஹீரோக்களுக்கு என்ன படம் பிடிக்குமோ அதுதான் இங்கு கவனிக்கப்படும். ஒரு முழுமையான வாழ்க்கையை திரைக்கதையாக்க முயற்சித்தால் அது பொதுவெளிக்கு வருமா என்பதே சந்தேகம். ஒரு நாவல் படமாக்கப்பட வேண்டும் என்று கேட்கிறீர்கள். இங்கு எல்லோருமே நாவலைப்படமாக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறோம். ஆனால் அதை தயாரிப்பது யார்?. அதை தியேட்டருக்கு கொண்டுவருவது யார்?.

அதில் நடிப்பதற்கு உச்ச நட்சத்திரங்கள் தயாராக இருக்கிறார்களா?. கண்டிப்பாக நடிக்க வரமாட்டார்கள். இங்கு எப்பொழுது நாவல்கள் அதிகமாக படமாக்கப்படுமென்றால், அதற்கான சாத்தியங்கள் உருவாகுமென்றால், நடிகர்கள் நாவல்களைப் படித்துவிட்டு அந்நாவலை படமாக பண்ணலாம் என்கிற முடிவெடுத்து அதற்கு சம்பந்தப்பட்ட இயக்குனர்களையும் எழுத்தாளர்களையும் அழைத்து இதற்கு திரைக்கதை அமையுங்கள் என்று சொன்னால், நாவல்கள் படமாகுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. தனிப்பட்ட இயக்குனராக இந்த முயற்சியில் ஈடுபட்டால் அதில் நடிப்பதற்கு யாருமே வரமாட்டார்கள். புதுமுகங்களை வைத்துத்தான் எடுக்கவேண்டும். புதுமுகங்கள் இருந்தால் தயாரிப்பாளர்கள் முன்வருவார்களா?.

வியாபார பலம் என்பது நடிகனின் கால்ஷீட் தான். நட்சத்திர அந்தஸ்து வாய்த்தவர்களிடம் தான் அது இருக்கிறது. இன்றைக்கு காலகட்டத்தில் ஒரு பாலச்சந்தரோ, பாலு மகேந்திராவோ , பாரதி ராஜாவோ, மகேந்திரனோ ஜீவிக்கிற சூழல் தமிழ் சினிமாவில் இருக்கிறதா?. ஒரு வாரத்திற்கு பதினொரு படங்கள் வெளியாகிறது. முதல் மூன்று நாட்களும் படம் கூட்டம் நிரம்பியதாக இருக்கவேண்டும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் முதற்கொண்டு இயக்குனர், தயாரிப்பாளர் வரை எல்லோரும் நினைக்கிறார்கள். நட்சத்திர அந்தஸ்து இல்லாமல் இது எப்படி சாத்தியம்.


பிஞ்சு, பூ, காய், கனி என்கிற நான்கு நிலைகள் இருக்கிறது. ஒரு நல்ல படத்திற்கான நான்கு நிலைகள் mouth talk ஆக பரவி இரண்டாவது வாரம், மூன்றாவது வாரத்தில் மெல்லமெல்ல கூட்டம் அதிகரிக்கும். அப்படியொரு காலமும் தமிழ்சினிமாவில் இருந்ததுதானே. இன்றைக்கு ஏன் அது இல்லாமல் போய்விட்டது.

பெண்களை மையமாக வைத்த படங்கள், சிறு படங்கள், தியேட்டருக்கு வந்து அறியப்படாமலேயே போகிறது. ஓரிரண்டு படங்கள் மட்டுமே தப்பிக்கிறது. 90 சதவீதமான படங்கள் நன்றாகயிருக்கிறது என்று சொன்னாலும் அப்படம் பார்ப்பதற்கு ஆள் இல்லை. இன்றைக்கு வியாபாரமே மாறிப்போயிருக்கின்ற காரணத்தினால் நாவல் படமாக்கப்படும் என்றால் நடிகர்கள் மனசு வைத்தால்தான் அது நடக்கும். அது இயக்குனர்களின் கையில் இல்லை.

நடிகர்கள் இலக்கியங்கள் படித்துவிட்டு, அதிலிருந்து படமெடுக்கலாம் என்று அவர்கள் சொல்லும் சூழல் நிகழ வாய்ப்பிருக்கிறதா?

நடிகர்கள் படித்தால் நல்லது.

தியேட்டருக்கு வந்தால் தான் ஒரு படம் வெற்றி. தியேட்டரில் வந்தால்தான் தொலைக்காட்சியிலேயே வாங்குகிறார்கள். இல்லையேல் அது நடப்பதில்லை. தொலைக்காட்சி உரிமம் மறுக்கப்படுகிறது. இது தமிழ்நாட்டில் மட்டும்தான். ஆனால், கேரளாவிலோ, ஒரு கோடியிலிருந்து ஐந்து கோடி வரை தொலைக்காட்சி உரிமத்தை மட்டுமே அடிப்படையாக வைத்து படமெடுக்கிறார்கள். அதிலிருந்து அதற்கான பணத்தை வருவாயை பெற்றுக்கொள்கிறார்கள். மராட்டியத்தில் அரசு நிதியுதவி செய்கிறது. ’ஃபன்றி’, அப்படி வெளிவந்த படம் தான். இங்கு தியேட்டரை மட்டுமே நம்பாமல், ஃப்லிம் பெஸ்டிவல் இருக்கிறது, ஒரு நல்ல படம் எடுத்துவிட்டால் நாம் முதலீடு செய்த பணத்தைக்காட்டிலும் அதிகமாக பணம் திரும்பி வர வாய்ப்பிருக்கிறது. அப்படி தியேட்டரை மட்டுமே நம்பியிருப்பதுதான் இதுபோன்ற நல்ல முயற்சிகள் வராமல் இருப்பதற்கான காரணமா?

ஆரம்பத்தில் சொன்னது போல சினிமா என்பது தியேட்டர் வியாபாரம் தான். எனக்கு சில குறும்படங்கள் எடுக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்கான திரைக்கதையும் தயாராக இருக்கிறது. தியேட்டருக்கு அனுப்பாமல் ஃபெஸ்டிவல்ஸ்களில் போய் அந்த மரியாதையைப்பெறுவதற்கும், பொருளாதார தன்னிறைவு அடைவதற்கும் நீண்ட நாள் காத்திருப்பு தேவைப்படுகிறது. இதைப்புரிந்துகொள்கிற தயாரிப்பாளர்கள் முதலில் தேவை.

இங்கு கதைக்கு பஞ்சம் கிடையாது. அதை எடுப்பதற்கு ஆட்களுக்கும் பஞ்சம் கிடையாது. ஆனால் தயாரிப்பாளர்களுக்கு பஞ்சம். அதற்கான பயிற்சி இங்கு இல்லாமல் இருக்கிறது. ஒரு சிலர் அதற்கான முயற்சியை செய்கிறார்கள். ”காக்கா முட்டை”, அப்படிச்செய்திருக்கிறது. அப்படியான புரிதல் இருக்கிறது. அதனை ஒரு இயக்கமாக முன்னெடுக்க வேண்டும். நிறைய பேர் முன்வர வேண்டும். அப்போது இத்திட்டம் வெற்றிபெற வாய்ப்பிருக்கிறது.

இந்தியச்சினிமாவிலேயே மிக முக்கியான படம் ”வீடு”. அந்த மாதிரியான முயற்சிகள் வரவேண்டும்.


மேலைநாடுகளில் அவ்வப்போது பெரிய இயக்குனர்களே குறும்படம் எடுக்கிறார்கள். குறும்படம் தவிர்க்க இயலாத துறையும் கூட, அதேபோல இங்கு ஏன் உருவாகவில்லை?

குறும்படம் எடுத்துவிட்டு இயக்குனர் ஆகிறார்கள். ஏன் இயக்குனர் திரைப்படம் எடுத்துவிட்டு குறும்படம் எடுக்க கூடாதா, ஆகையால் நான் குறும்படம் எடுப்பேன். என்ற ஆசையும் எனக்குள் இருக்கிறது. இந்த கால இடைவெளியில் அதற்கான முயற்சிகள் இருக்கும்.

நீங்கள் கேட்ட கேள்விக்கு வருகிறேன்.

“காசு வரல”. அதாவது இயக்குனர்கள் பெரும்பான்மையோர் குறும்படம் எடுக்காமலிருப்பதற்கான காரணம் அதிலிருந்து காசு வரவில்லை. அதன் மூலம் வருவாய் வந்தால் அத்தனை பேரும் எடுத்துவிடுவார்கள். தியேட்டர் ரிலீஸிற்கு குறும்படங்கள் வந்தால் நிறைய இயக்குனர்கள் இதை முயன்றுவிடுவார்கள். காசு வராத வேலையை யார் செய்வார்கள்?. ஒரு பொருள் விற்பனைக்கு வந்தால்தான் அதன்மீது இந்தசமூகத்திற்கு மதிப்பு. விற்பனையாகாத பொருளின் மீது இவர்களுக்கு மதிப்பே கிடையாது. கண்ணகி சிலை போல கடந்துசென்றுவிடுகிறார்கள். இறங்கி கிட்ட போய் கூட பார்க்க மாட்டார்கள்.

பாலுமகேந்திராவின் தாக்கம் உங்கள் சினிமாக்களில் எந்த அளவிற்கு இருப்பதாக நினைக்கிறீர்கள்.?

அவரின் முழுமையான தாக்கம் இன்றளவும் என்னிடம் வரவில்லை என்று நினைக்கிறேன். அந்த முழுமையான தாக்கம் வந்தால் நன்றாகயிருக்கும் என்றும் ஆசைப்படுகின்றேன். அவர் ஒரு காட்சியை உருவாக்குகிற விதமே கவனிக்கத்தக்கதாக இருக்கும். அது மட்டும் என்னிடம் இருப்பதாக நான் நம்புகிறேன்.

பாலுமகேந்திராவிற்கான வெற்றிடம் ஒன்று இருக்கிறது. அது திரைப்படங்கள் சார்ந்தது மட்டுமல்ல, சினிமா சம்பந்தமான விழாக்களிலும் கூட. பாலுமகேந்திரா இருந்தவரை அவர் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் வருவார். சினிமா பற்றி தொடர்ந்து பேசுவார். கல்லூரிகளுக்குச் செல்வார், ”கல்லூரிகளில் சினிமா கட்டாய பாடமாக்க வேண்டும்”, எனவும் சொல்வார். இளைஞர்களோடு அதிக நேரம் செலவிடுவார். இதுமாதிரியாக அவர் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருந்தார், அந்த இயக்கத்தை இப்பொழுது சுத்தமாக யாரும் முன்னெடுப்பதில்லை. பாலுமகேந்திராவின் வெற்றிடத்தை யார் நிரப்ப வேறு யாரும் முன்வராதது ஏன்?

ஒருவரின் இறப்பில் தான் அவர்செய்திருக்கிற சாதனைகள் தெரியவரும். பாலு மகேந்திராவின் இறப்பில் கலந்துகொண்ட கூட்டத்தை வைத்து இதனை அறிந்துகொள்ளலாம். ஆனால், அவரையே இந்தசினிமா 5 வருடங்கள் பட்டினி போட்டிருக்கிறது.

உண்மையிலேயே மிகவும் வருத்தமானதுதான். இவ்வளவு சீக்கிரம் அவர் நம்மிடமிருந்து விடைபெற்று போயிருக்கவும் கூடாது. அவர் இளைஞர்களை ஊக்கப்படுத்தும் விதம் என்றுமே மறக்க முடியாதது. அதே போல அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்டது எதிர் விமர்சனம் தான். ஒரு படத்தைப் பார்த்துவிட்டு அதை அவர் விமர்சிப்பதே எங்களுக்கெல்லாம் மிகப்பெரிய பாடமாக இருக்கும். சினிமாக்களில் எதைச்செய்யவேண்டும், எதைச்செய்யக்கூடாது என்றும் சொல்வார். இந்த வெற்றிடம் சினிமா மாணவர்களுக்கும், பெரிய இழப்புதான். அந்த மரியாதைக்குரிய கெளரவமான இடத்திற்கு மாற்றாக இன்னொரு ஆள் இல்லை என்பதும் உண்மைதான்.


ஒரு ஆசிரியராக கடைசி காலத்தில் அவர் செயல்பட்டார். இன்றைக்கும் என்னால் மறக்கமுடியாத ஒரு தருணம், ”நீர்ப்பறவை”, படம் பார்த்துவிட்டு சத்யம் தியேட்டரிலிருந்து வெளியே வந்த பாலுமகேந்திரா என்னைப்பார்த்தவுடன் அவரின் வெள்ளைத்தாடி என் கன்னத்தில் படும்படியாக ஒரு முத்தம் கொடுத்தார். உண்மையிலேயே என்னால் மறக்கமுடியாதது. அவர் பள்ளியில் என் படத்தை திரையிட்டு கலந்துரையாடினார்.

அந்த வெற்றிடம் மிகுந்த வேதனைக்குரிய ஒன்றுதான். மற்றவர்கள் ஏன் தொடர்ந்து வருவதில்லை எனவும் கேட்கிறீர்கள். அவர்களெல்லாம் படமெடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் எப்படி வருவார்கள்?. தற்பெருமை பேசுபவர்களே இங்கு அதிகம். ஆனால், ”வீடு” மாதிரியோ, ”சந்தியா ராகம்”, மாதிரியான படம் ஏதேனும் ஒன்றை எடுத்திருந்தால் அந்த மேடையில் வந்து நிற்கலாம். எதுவுமே செய்யாமல் வெறும் சினிமா வியாபாரம் மட்டுமே செய்துவிட்டு எப்படி மாற்றுசினிமா மேடைகளில் வந்து நிற்க முடியும். இதனாலேயே பலர் வராமல் இருக்கலாம்.

தயாரிப்பாளர்கள் அதிகமாக இல்லை என்றும், திரைப்படங்களை புரிந்துகொண்டு அதன் நலனில் அக்கறை செலுத்துகின்ற தயாரிப்பாளர்கள் வேண்டும் எனவும் சொல்கிறீர்கள். ஆனால், இன்று நிறைய பேர் crowd fund மூலமாக படம் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அப்படி உங்களுக்கு ஏதேனும் செய்ய திட்டம் இருக்கிறதா? ஒரு கோடி ரூபாய் வரை மக்களிடமிருந்து அதற்கான பணம் வருகிற வேளையில் நன்கு தெரியப்படுகின்ற உங்களைப்போன்ற இயக்குனர்கள் கேட்டால் நிச்சயம் பணம் கிடைக்கும். உங்கள் படத்தில் உங்களுக்கான சுதந்திரமும் கிடைக்கிறது. அப்படியெனில், அதுபோன்ற படங்கள் உங்களிடமிருந்து எதிர்பார்க்கலாமா?

நீங்கள் சொல்கிற ஃபண்டிங்க் முறையை கையாள்வதற்கு பயமாக இருக்கிறது. தயாரிப்பு சார்ந்த துறையில் எனக்கு பெரிய அறிவு இருக்கிறதா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்வேன். நான் ஒரு கதை சொல்பவனாக இருக்கிறேன். செட்யூல் போட்டு சொன்ன தேதிக்குள் ஒரு படத்தை முடித்து தருகிற ஒரு இயக்குனராக மட்டுமே இருக்கிறேன். ஆகையால் இந்த ஃபண்டிங்க் பொதுமக்களிடமிருந்து பணம் வாங்கி , திரும்பி அவர்களிடமே கொடுப்பது போன்ற துறைகளில் எனக்கு மிகப்பெரிய அறிவு இல்லை. எது உண்மையோ அதைத்தான் சொல்கிறேன்.


ஆனால், ஒரு தனித்த தயாரிப்பாளர் என்னை இது மாதிரியான படம் பண்ணலாம் என்று அணுகினால் என்னாலும் ”ஃபன்றி”, மாதிரியாக ஒரு படம் எடுக்க முடியும். மாற்றுசினிமாவை முன்வைக்க முடியும். இன்னும் சொல்லப்போனால் பாலு மகேந்திரா என்ன செய்தாரோ அதே வழியில் நான் போகிறேன். அவர் கடைசி வரை சம்பளம் வாங்குகிற இயக்குனராகத்தான் இருந்தார். அந்நிலையிலிருந்தே ”வீடு”, ”சந்தியாராகம்” போன்ற படங்களையும் எடுத்தார்.

தற்கால தமிழ்சினிமாவில் தகுதியான screen writters இருக்கிறார்களா?

முதலில் இங்கு கதை இலாகாவே காணாமல் போய் விட்டது. பாரதி ராஜாவிற்கு இருந்த கதாசிரியர்கள் இன்றைக்கு இல்லை. பீம்சிங்க் அவர்கள் இயக்குனராக இருந்த காலகட்டத்தில் இருந்த கதை இலாகா இன்றில்லை. இந்த நூற்றாண்டு தமிழ் சினிமாவில் 90களுக்கு முன்பாகவே கதாசிரியர்கள் இல்லாமல் போய்விட்டார்கள். இயக்குனர்களே அந்தப்பணியை எடுத்துச்செய்ய வேண்டிய கட்டாயத்திற்கும் ஆளாகிவிட்டார்கள். ஊடக வளர்ச்சியின் காரணமாக கதை எழுத தெரிந்தவர்களே படம் இயக்கவும் தயாராகவிட்டார்கள். திரைக்கதை ஆசிரியர்கள் என்று யாரும் இல்லாமல் போயிருப்பது வருத்தம் தான்.

நம் சமூகத்தில் வாழ்க்கையை பிரதிபலிக்கும் திரைப்படங்களின் தேவை என்ன?

உண்மைக்கு நெருக்கமாகத்தான் படம் எடுக்க முடியும். உண்மையை அப்படியே எடுக்க முடியாது. நானறிந்த சினிமாவில் மகேந்திரன், பாலு மகேந்திரா, பரதன் என சத்யஜித் ராயின் தலைமுறையினரது படங்களால் உந்தப்பட்டு சினிமாவிற்கு வந்தேன். ஆகையால், அந்த வகையான படங்களை மட்டுமே என்னால் இயக்க முடியும்.

இதன் மூலமாக சமூகத்திற்கு என்ன பயன் என்றால்? அது இன்றைக்கு தெரியவில்லை. ஒரு வேளை நான் அல்லாத காலத்தில் அதன் நன்மைகள் பேசப்பட்டால் பெருமையாக இருக்கும் என நினைக்கிறேன். புதிய தடம் பதிப்பவைகளாக இருக்கும்.

மக்களிடையே கதாநாயகர்களாக முன்னிறுத்தப்படுகிறவர்கள் திடீரென்று கொண்டாட்டத்திற்கு உள்ளாக்கப்படுவதும், பின்னர் கொண்டாட்டத்தை இழக்க வைப்பதும், அபிப்ராயத்தை உண்டாக்குவதும், அதனை அவர்களே அழிப்பதுமாக இருக்கிறார்கள். இப்படியான ஒரு தமிழ்சமுதாயம் உருவாவதைப் பார்க்கிறேன். இது மிகப்பெரிய அச்சுறுத்தலாகவே இருந்து வருகிறது. இவர்கள் தங்களுக்கான அபிப்ராயங்களை மட்டுமே பேசிவிட்டு அவரவர் வீட்டிற்குள் போய்விடுகிறார்கள். இயக்கம் என்பது இல்லை. இணையத்தில் ஒரு படத்திற்கான விளம்பரத்தை பொதுமக்களே செய்ய ஆரம்பிக்கிறார்கள். சிறு படங்கள் புல் பூண்டுகள் போல அழிந்துவிடுகின்றன. சிறு படங்கள் மூலமாகத்தான் கதைப்படங்கள் வரும் என்றும் நம்புகின்றேன்.

சமூகத்தில் சாதி இன்னும் ஒழியவில்லை. அதேசமயம் சினிமாவில் சாதிகளை தங்கள் படைப்புகளில் எவ்விதமாக பயன்படுத்துகிறார்கள்.?

சாதிய துவேஷம் இருக்கிறது, எல்லாத்துறைகளிலும் சாதி இருக்கு, சாதி பார்க்கிறவர்கள் இருக்கிறார்கள் மறுப்பதற்கில்லை. ஆனால், அதில் கண்ணுக்குத்தெரிந்து எந்த பயனும் இல்லை. நான் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்ததில் இருந்து நிறைய பேர் எனக்கு உதவிசெய்திருக்கிறார்கள். பொருளாதார ரீதியாகவும் உதவியிருக்கிறார்கள். அவர்கள் என்ன சாதி என்பது தெரியாது.

சமூகத்தில் சாதி அழிய வேண்டும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்துகளும் எனக்கு இல்லை. இன்றைக்கு நிறைய கலப்புத்திருமணங்கள் நடந்துவருகின்றது. இந்தக்கருத்துக்களை தமிழ்சினிமாக்கள் பிரதிபலிக்க வேண்டும். அதனைச்செய்யாமல் இருப்பது தவறுதான்.

கலை எதற்காக மக்களுக்காகவா, கலைக்காகவா?

கலையாவும் மக்களுக்கே.

நடிகர்கள் மாறவேண்டும் என்று சொல்கிறீர்கள். நீங்கள் அறிமுகப்படுத்திய நடிகர் தான் விஜய் சேதுபதி இன்றைக்கு தமிழின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராகவும் இருக்கிறார். உங்கள் அடுத்த படத்திலும் அவரே ஹீரோ. முதல் படத்தில் அவரிடம் வேலை வாங்கியதற்கும், இந்தப்படத்தில் வேலை செய்திருப்பதில் இருக்கின்ற மாற்றங்களாக நீங்கள் நினைப்பது.?

முதல் படத்தில் எனக்கு பயப்படுவான். அன்போடு இருப்பான். இந்தப்படத்தில் வேலை செய்கின்ற பொழுது என்னிடம் பேரன்போடு இருக்கிறான்.

உதவி இயக்குனர்களை எப்படி அமைத்துக்கொள்கிறீர்கள். நல்ல குழந்தைகளை வளர்ப்பதன் மூலம் சமூகத்தினை எளிதாக மாற்றியமைக்கலாம். அதேதான் சினிமாவிலும் நல்ல படங்கள் உருவாக வழி வகுக்கலாம். தமிழில் வெளிவந்திருக்கின்ற ஆயிரக்கணக்கான படங்களில் லட்சக்கணக்கான உதவி இயக்குனர்கள் இருப்பார்கள். அவர்களிலிருந்து வெளிப்பட்டவர்கள் சொற்பமே. பாலு மகேந்திராவிடமிருந்து வெளிவந்தவர்கள் இன்றைக்கு சினிமாவில் நல்ல மரியாதையான நிலைமையில் இருக்கிறார்கள். ஆனால், இது எல்லா இயக்குனர்களுக்கும் சாத்தியமாவதில்லை. இங்கு உதவி இயக்குனர்களை பயிற்றுவிப்பதில் இயக்குனருக்குண்டான பொறுப்பு, அல்லது பிரச்சனைகள் என்ன?

என்னிடமிருந்து 37 பேர் பயிற்சி பெற்று வெளியே போயிருக்கிறார்கள். அதிலிருந்து மூன்று நான்கு பேர் இயக்குனராகவும் ஆகிவிட்டார்கள். மற்றவர்கள் அதற்கான முயற்சியில் இருக்கிறார்கள். எனக்கு எதையும் மறைபொருளாக வைத்துச் சொல்லிக்கொடுக்கின்ற அவசியம் இல்லை. அனைத்தையும் அனைவருக்கும் தெரியும்படியாகச் சொல்லிக்கொடுப்பேன். தொழில்நுட்ப விஷயமாக இருந்தாலும் கதை விவாதமாக இருந்தாலும் முதல் நிலை இயக்குனர், கடைநிலை இயக்குனர் என்ற வேறுபாடு எங்களிடம் கிடையாது.

எல்லோரையும் என் சகோதரர்கள் போலவே பார்க்கிறேன். சில குறும்படங்கள் எடுத்து வந்து என்னிடம் சேர்ந்துகொள்கிறார்கள். சிலர் இலக்கியத்தினை பின்புலமாக வைத்துக்கொண்டு வருகிறார்கள். சிலர் உலக சினிமா அறிவோடு நிறைய படங்கள் பார்த்துவிட்டு அதனை என்னோடு விவாதிக்கிறார்கள். இப்படி ஏதாவது ஒரு அடிப்படைத் தகுதியோடுதான் அவர்களை நான் சேர்த்துக்கொள்கிறேன். அதேபோல உதவி இயக்குனர்கள் இல்லாமல் சினிமா எடுக்கவும் முடியாது. குறும்படம் எடுத்து, சினிமா எடுப்பவர்கள் கூட தன்னிடம் ஆறு, ஏழு உதவி இயக்குனர்களை வைத்துள்ளார்கள். காஸ்டியூம் கண்டினூட்டி இருக்கிறது, அதைப்பார்க்க வேண்டும், க்ளேப் போர்டு என எல்லாத்தையும் ஒரு இயக்குனரால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.

உதவி இயக்குனர்கள் இல்லாமல் படங்கள் சாத்தியமாவது இல்லை. இயக்குனர் வருவதற்கு முன்பாகவே உதவி இயக்குனர்கள் படப்பிடிப்புத் தளத்தில் தயாராக இருப்பார்கள். அனைத்தையும் முறைப்படி வைத்திருப்பார்கள். என்னிடம் திரைக்கதை தயாரானவுடன் அப்படியே எடுத்து உதவி இயக்குனர்களிடம் கொடுத்துவிட்டு அவர்களிடமிருந்து கேள்விகளை எதிர்பார்ப்பேன்.

இயக்குனரும், இணை இயக்குனரும் மட்டுமே ஒரு அறைக்குள் உட்கார்ந்துகொண்டு கதைவிவாதிப்பதும், உதவி இயக்குனர்கள் வெளியே நிற்கின்ற வழக்கமும் என்னிடம் கிடையாது. சந்தேகங்களும் அவர்கள் கேட்பார்கள். சரியாக இருந்தாலும் தவறாக இருந்தாலும் அதைப்பற்றி விவாதிப்போம்.