இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை 2. ‘சமுதாயம்’

‘சினிமாக் கலா நிலையம்’ தயாரிக்க இருந்த அப்படத்துக்கு ‘சமுதாயம்’ என்று பெயர் சூட்டினார்கள். அந்த நிலையத்தின் அங்கத்தவர்களில் ஒருவரான வி. தங்கவேலு கதாநாயனாகவும் தர்மதேவி என்ற நடிகை கதாநாயகியாகவும் தெரிவு செய்யப்பட்டார்கள். படப்பிடிப்பும் ஆரம்பமாகிவிட்டது. ‘சமுதாயம்’ திரைப்படம் 35 மி.மீட்டர் பிலிமில் சில ஆயிரம் அடிகள் வளர்ந்துவிட்டது.

கலைஞர்களிடையே போட்டியும் பொறாமையும் இன்று மட்டுமல்ல. அன்றும் நிலவியது. அப்படியான இழுபறிநிலை இப்படத்துக்கும் ஏற்பட்டுவிட்டது. தயாரிப்பாளர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்படவே 35 மி.மீட்டரில் உருவான கறுப்பு வெள்ளைப் படமான ‘சமுதாயம்’ ஆயிரம் அடி வளர்ச்சியுடன் நின்றுகொண்டது.

இத்திரைப்படம் இப்படியே நின்றுவிட்டதால் இந்தக் குழுவின் ஒரு அங்கத்தவரான ஹென்றி சந்திரவன்ஸ இன்னும் சில அங்கத்தவர்களுடன் ஒன்று சேர்ந்து நடிகர்களை மாற்றி ‘சமுதாயம்’ என்ற பெயரிலேயே புதிதாகப் படமொன்றை உருவாக்க முனைந்தார்.
சந்திரவன்ஸவின் குழுவிலிருந்தும் சிலர் பிரிந்து சென்றனர். அவர்களில் முக்கியமானவர்கள் ஏ. அருணனும், வி. தங்கவேலுவுமாவார்கள். இவர்கள் இருவரும் கொஸ்லாந்தையில் நீண்ட காலம் வாழ்ந்து வந்தார்கள். இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து ‘புரட்சி’ என்ற பெயரில் 35 மி.மீட்டரில் தமிழ்ப் படமொன்றை உருவாக்க முனைந்தார்கள். இப்படத்திலும் வி. தங்கவேலுவே கதாநாயகன். படம் 7000 அடி வளர்ந்துவிட்டது. போட்டியும் பொறாமையும் இந்தக் குழுவுக்குள்ளும் வளர்ந்துவிட்டன. தயாரிப்பாளர்களுக்குள்ளும், கலைஞர்களுக்குள்ளும் பெரும் பிணக்குகள் ஏற்பட்டுவிட்டன. அவர்கள் செய்த புரட்சியில் ‘புரட்சி’ என்ற படமும் நின்று கொண்டது.

ஒருபுறம் இந்நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருக்க, கொழும்பில் வேறு ஒரு முயற்சியும் நடைபெற்றுக்கொண்டிருந்தது. முதலாவது சிங்களப் படத்தைத் தயாரித்தவரான எஸ்.எம். நாயகம் ‘கடல் கடந்த தமிழர்’ என்ற பெயரில் பிரம்மாண்டமான தமிழ்ப் படமொன்றைத் தயாரிக்கப்போவதாக விளம்பரம் செய்தார். நடிகர் நடிகையர் தெரிவும் நடைபெற்றது. ஆனால், திரைப்படம் வெளிவரவில்லை.

ஹென்றி சந்திரவன்ஸ எப்படியாவது தமிழ்ப் படமொன்றைத் தயாரித்தே ஆகவேண்டும் என்ற வெறியுடன் விடாப்பிடியாக நின்றார். அவர் ‘சமுதாயம்’ படத்தை 16 மி.மீட்டரில் ரெக்னிக் கலரில் தயாரித்து அதை 35 மி.மீட்டருக்கு மாற்ற எண்ணியிருந்தார்.

இதற்கிடையில் அருணனுக்கும் தங்கவேலுவுக்கும் இடையில் மனஸ்தாபம் ஏற்பட்டது. தங்கவேலு அந்தக் காலத்தில் கொழும்பில் பிரபலம் பெற்று விளங்கிய நாடக நடிகர் ஒருவரிடம் போய்ச் சேர்ந்தார். அந்த நடிகர் தான் பி.எஸ். கிருஷ்ணகுமார். தங்கவேலுவும் கிருஷ்ணகுமாரும் ஒன்று சேர்ந்து ‘தோட்டக்காரி’ என்ற பெயரில் தமிழ்ப் படமொன்றை உருவாக்கினார்கள். ‘சமுதாயம்’ படமும் ‘தோட்டக்காரி’ படமும் போட்டி போட்டுக்கொண்டு வளர்ந்தன.

கலைஞர்கள் ஒவ்வொருவரிடமும் 10 ரூபா வாங்கியே சமுதாயத்தை வளர்த்தார்களாம். ஹென்றி சந்திரவன்ஸ முதலாவது 16 மி.மீட்டர் தமிழ்ப் படத்தைத் தயாரித்தவர் என்ற பெருமையைத் தேடிக்கொண்டார். இப்படத்துக்கான நெறியாள்கையை அவரே கவனித்தார். பின்னாட்களில் பல படங்களில் தந்தை பாத்திரங்களில் தோன்றிய அமரர் எஸ்.என். தனரெத்தினமே இப்படத்தின் கதாநாயகன். அப்பொழுது தனரெத்தினதுக்கு வயது 18. ஜெயகௌரி கதாநாயகி. ஏ.எஸ். ராஜா வில்லன், ஆர். காசிநாதன், ஆர்.வி. ராசையா, இரத்தினகுமாரி போன்றோரும் நடித்தார்கள். நடிகர் சந்திரபாபுவின் சகோதரியின் மகள்மார் இருவரும் இப்படத்தில் தோன்றியிருக்கிறார்கள். எம்.ஆர். ராதாவின் இலங்கை மனைவி கீதாவும் இப்படத்தில் சில காட்சிகளில் தோன்றினார். கதை, வசனம், பாடல்களை ஜீவா நாவுக்கரசன் எழுதினார். அக்காலத்தில் அறிஞர் அண்ணா கதை வசனம் எழுதிய வேலைக்காரி என்ற படம் புகழ்பெற்று விளங்கியது. அப்படத்தின் கதையையே சமுதாயமும் தழுவியிருந்தது.

படத் தயாரிப்புக்கு 10 ரூபா வேண்டியதற்கான பற்றுச் சீட்டுகளைச் சரிபார்ப்பதில் சில்லையூர் செல்வராஜன், சந்திரவன்ஸவுக்கு உதவியிருக்கிறாராம். செலவுச் சுருக்கத்துக்காக இந்தப் படத்தின் எந்தவொரு காட்சியும் ஸ்ரூடியோவுக்குள் பிடிக்கப்படவில்லை. கொழும்பைச் சுற்றியுள்ள தனியார் வீடுகளிலேயே படப்பிடிப்புகள் நடைபெற்றன. வெளிப்புறக் காட்சிகளை ஒளிப்பதிவாளர் பியசேன சிறிமான யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கண்டி, அநுராதபுரம், அம்பாறை போன்ற இடங்களில் ஒளிப்பதிவு செய்தார். அங்கொடையில் கொத்தட்டுவ என்ற இடத்தில் உள்ள ஒரு தனியார் வீட்டிலேயே ஒலிப்பதிவுகள் செய்யப்பட்டனவாம்.

இசையமைப்பைத் திலக் கருணாதிலக கவனித்தார். வினோதினி, இந்திராணி செல்லத்துரை, அம்பிகா தாமோதரம், முஹமட் பியாஸ் ஆகியோர் பின்னணி பாடியிருந்தார்கள். அப்போது புகழ்பெற்ற இலங்கை வானொலிப் பாடகியான வினோதினி பாடிய “இதுவா நீதி இதுவா நேர்மை” என்ற பாடல் சிறப்பாக விளங்கியதாகப் பலர் கூறக் கேட்டிருக்கிறேன்.
‘சமுதாயம்’ திரைப்படம் 16 மி.மீட்டரில் ரெக்னிக் கலரில் எடுக்கப்பட்டது. ஒன்றுக்கு மேற்பட்ட பிரதிகள் எடுக்க முடியாத அமைப்பு முறை கொண்டது. இந்த ஒரு பிரதியைக்கூடத் திரையிடுவதற்குத் தியேட்டர்கள் கிடைக்காமல் பெரும்பாடு பட்டுவிட்டார்கள். இந்தியாவிலிருந்து படங்களை இறக்குமதி செய்து பெரும் பொருளீட்டிய வர்த்தகர்கள் சிங்களப் படங்களைத் தயாரிக்கத் தொடங்கினார்களே தவிர, இலங்கைத் தமிழ்ப் படங்களுக்கு ஆதரவு கொடுக்கப் பின்வாங்கினார்கள்.

கடைசியில் தியேட்டர் கிடைக்காமல் மண்டபமொன்றிலேயே ‘சமுதாயத்தை’க் காட்டினார்களாம். 1962இல் பொரளை வை.எம்.பி.ஏ. மண்டபத்தில் விசேட ஏற்பாட்டின்பேரில் ‘சமுதாயம்’ திரையிடப்பட்டது. அப்போதைய ‘வீரகேசரி’ ஆசிரியர் எஸ்.டி. சிவநாயகம் விழாவை ஆரம்பித்து வைத்தார். அங்கு ஒரு வாரம் ஓடியதாம். ஆனால், அதற்கு முன்பே கொழும்பு – 15, புளுமென்டால் வீதியில் அமைந்துள்ள மொமினியன் தியேட்டரில் இப்படம் திரையிடப்பட்டதாக சில்லையூர் செல்வராஜன் சொல்லியிருக்கிறார்.

‘சமுதாயம்’ தொடர்ந்து பிற ஊர்களிலும் மன்றங்கள் பாடசாலைகள் சார்பிலும் திரையிடப்பட்டது. ஒரு வருடத்தின் பின்பு சிலோன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் உதவியுடன் தெமட்டகொடை மானெல் தியேட்டரில் திரையிடப்பட்டது. தமிழரசுத் தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அந்த ஆரம்ப விழாவுக்கு தலைமை தாங்கினார்.

அந்தக் காலத்தில் இந்தியப் படங்களின் தாக்கத்தில் ‘சமுதாயம்’ படத்திற்குத் தலைநகரில் அதிக வரவேற்புக் கிடைக்கவில்லையாம். ஆனாலும், மலையகத்திலும் வடக்கு கிழக்கிலும் அதிக வரவேற்புக் கிடைத்ததாம். வடபகுதியின் கல்லூரிகள் பலவற்றில் இப்படம் காண்பிக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள்.

சந்திரவன்ஸவின் தளராத முயற்சியினாலும் கடும் உழைப்பினாலுமே இத்திரைப்படம் உருவானது. இலங்கையில் தமிழ்ச் சினிமா பிறப்பதற்கு அடியெடுத்துக் கொடுத்த பெருமை சந்திரவன்ஸவைச் சாரும்.

திரு. சந்திரவன்ஸ ‘சமுதாயம்’ தமிழ்ப் படத்தை உருவாக்கிய அதே சமயத்தில் ‘சமாஜய’ என்னும் சிங்களத் திரைப்படத்தையும் உருவாக்கினார். ‘சமுதாயம்’ படத்தின் தழுவலே அதுவாகும்.

திரு. சந்திரவன்ஸ இவற்றைத் தொடர்ந்து பல சிங்களப் படங்களையும் உருவாக்கினார். 1974இல் வெளிவந்த ‘சுமதி எங்கே’ (டப் படம்) இவர் உருவாக்கிய இரண்டாவது தமிழ்ப் படமாகும்.

ஆரம்ப காலமும் முதலே இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதையை எழுதவேண்டும் என்பது என் ஆசை. 1978ஆம் ஆண்டளவில் திரு. சந்திரவன்ஸவை நான் அடிக்கடி சந்தித்து வந்தேன். கொழும்பு ஐந்து லாம்புச் சந்தியடியில் ஆதம் அலி பில்டிங்கில் மூன்றாவது மாடியில் அவரது அலுவலகம் அமைந்திருந்தது.

அலுவலகத்தின் ஒரு சுவரை ‘சமுதாயம்’ படத்தில் இடம்பெற்ற காட்சிகள் அழகுபடுத்தின. மற்றச் சுவர்களில் வேறு சிங்களப் படங்களின் புகைப்படங்களும் தொங்கிக் கொண்டிருந்தன. திரு. சந்திரவன்ஸவின் அலுவலகத்தில் எந்நேரமும் சினிமாக் கலைஞர்கள் கூடியிருப்பார்கள். நான் திரு. சந்திரவன்ஸவைச் சந்திக்கும் போதெல்லாம் தன் ஆரம்பகால சினிமா வரலாறுகளைக் கூறுவார்.

‘கீதாஞ்சலி’ என்ற பெயரில் தனது மூன்றாவது தமிழ்ப் படத்தை உருவாக்கிக் கொண்டிருந்த காலம் அது. இப் படத்துக்கான கதை, வசனம், பாடல்களை திருமதி இராஜம் புஷ்பவனம் எழுதியிருந்தார். எண் சாத்திரத்தின் படி இவரே இப்படத்துக்கு ‘கீதாஞ்சலி’ என்ற பெயரைச் சூட்டினார். படம் தயாரிக்க ஆரம்பமான போதுதான் அந்தச் சோகமயமான சம்பவம் நடைபெற்றது. 1979ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி திரு. சந்திரவன்ஸ மாரடைப்பால் மரணமானார். ‘கீதாஞ்சலி’ படத்தில் நடிக்க வந்த பலர் இவருக்கு இறுதியஞ்சலி செலுத்த நேர்ந்துவிட்டது.

சமுதாயமும், தோட்டக்காரியும் போட்டி போட்டுக் கொண்டு வளர்ந்தன என்று முன்பு குறிப்பிட்டேன். அதில் சமுதாயமே முந்திக்கொண்டது. இதே காலப்பகுதியில் பல தமிழ்ப் படங்கள் உருவாகியதாக செய்திகள் வெளிவந்தன. ‘புரட்சி’, ‘மலைவாசல்’, ‘கடல்கடந்த தமிழர்’, ‘ஏன் பிறந்தாய் மகனே’, ‘சரிந்த வாழ்வு’ என்பனவே அவற்றின் பெயர்கள். இவற்றின் பெயர்கள் செய்திகளிலும் விளம்பரங்களிலும் வெளிவந்தனவே தவிர, படங்கள் திரைக்கு வரவில்லை.

மின்னஞ்சல் முகவரி: thambytheva@gmail.com

இந்த புத்தகத்தை வெளியிடுவதிலும், நூலை இணையத்தில் வெளியிட வசதியான வடிவில் கொடுத்து உதவிய, நண்பர் ரிஷான் செரிப்பிற்கு பேசாமொழி சார்பில் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.