இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை 4. ‘கடமையின் எல்லை’ (தமிழ்ப் படமாக மாறிய ஆங்கில நாடகம்)

ஆங்கில நாடக மேதை மகாகவி சேக்ஸ்பியரின் துன்பியல் நாடகங்களில் ‘ஹம்லட்’ என்ற நாடகமும் ஒன்றாகும். யாழ்ப்பாண ஆசிரிய கலாசாலையொன்றில் கடமையாற்றிய ஆங்கில விரிவுரையாளர் ஒருவருக்கு இந்த நாடகத்தின் மீது தனிப்பிரியம். அவர் 'இந்த நாடகத்தை ஒரு தமிழ்ப் படமாக எடுத்தால் என்ன?' என்று நீண்ட நாட்களாகவே எண்ணி வந்தார்.

அவரது எண்ணம் செயலுருவாகியது. இந்த நாடகத்தைத் தழுவித் தமிழ்ப் பண்பாடுகளைப் பிரதிபலிக்கும் வகையில் இலங்கையில் முதன்முதலாகத் தமிழ்ச் சரித்திரப் படமொன்றை உருவாக்கத் தொடங்கிவிட்டார்.

படம் தயாரிப்பதற்குப் பட நிறுவனம் வேண்டுமே? ராஜா ஜோஷுவா, கே. கதிர்காமத்தம்பி, ஏ.ஜே.சாள்ஸ், ஏ.எம். ஜோசப் போன்றோரின் உதவியுடன் ‘கலாபவன பிலிம்ஸ்’ நிறுவனத்தை உருவாக்கினார்.
தமது படத்துக்குக் ‘கடமையின் எல்லை’ என்ற பெயரையும் சூட்டினார். திரைக்கதை வசனம் பாடல்களை வித்துவான் ஆனந்த ராயர், எஸ். பஸ்தியாம்பிள்ளை, எம். விக்டர் ஆகியோரைக் கொண்டு எழுதுவித்தார். நெறியாள்கையுடன் இசையமைக்கும் பொறுப்பையும் தானே ஏற்றுக்கொண்டார். இப்படியான பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட அந்த விரிவுரையாளர் யார் தெரியுமா? அவர்தான் எம். வேதநாயகம் (பி.ஏ.)

அந்த நாட்களில் நாடகங்களில் நடித்துப் புகழ் பெற்றிருந்த பலர் இப்படத்தில் நடிப்பதற்காகத் தெரிவு செய்யப்பட்டிருந்தார்கள். மன்னார் அரசியல்வாதி ஒருவரின் மகனுக்கு நாடகம் நடிப்பதில் பெரிதும் ஆர்வம். சினிமாவில் நடிக்க வேண்டுமென்று துடித்துக்கொண்டிருந்தான். பள்ளிப் பருவம் முடிந்து கொழும்புக்கு வேலைக்குப்போனபோது, நாடகத்தைப் போலவே சினிமாவும் அவனைத் தேடி வந்தது. ஆம். அவன் ‘கடமையின் எல்லை’யில் மன்னனாக நடிப்பதற்குத் தெரிவு செய்யப்பட்டான். அந்த நடிகன்தான் தேவன் அழகக்கோன்.

நவாலியைச் சேர்ந்த ஓர் இளைஞன், கலையரசு சொர்ணலிங்கத்தின் நாடகப் பண்ணையில் பயின்றுவந்தான். இவனுக்கும் ‘கடமையின் எல்லை’யில் நடிப்பதற்கு வாய்ப்புக் கிடைத்தது. இந்த நடிகரின் பெயர்தான் ஏ. ரகுநாதன்.

இளவரசன் கமலநாதன்தான் கதையின் முக்கியப் பாத்திரம். இந்தப் பாத்திரத்திற்குக் கராட்டிச் சம்பியன் பொனி றொபட்ஸ் தெரிவு செய்யப்பட்டார். புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் இளைஞன், கொழும்புக்கு வந்து 15 வருடங்களாக மேடை நாடகங்களில் நடித்துவந்தான். இவனும் இப்படத்தில் நடிகராகத் தெரிவு செய்யப்பட்டான். இந்த நடிகரின் பெயர்தான் எம். உதயகுமார்.

ஏ. ஐராங்கனி, ஜீ. நிர்மலா, எஸ். பஸ்தியாம்பிள்ளை, ஆர். அமிர்தவாசகம், எஸ்.ரி.அரசு, கே. துரைசிங்கம், ஆர். காசிநாதன், குமார், லூக்காஸ் போன்றோரும் நடிகர்களாகத் தெரிவு செய்யப்பட்டார்கள்.

வீ. முத்தையா, வீ. கமலலோஜனி, அம்பிகா தாமோதரம், ரீ. புவனேஸ்வரி போன்றோர் பாடல்களைப் பாடினார்கள். எம்.ஏ.கபூரும், ஏ.ரீ. அரசும் கூட்டாக ஒளிப்பதிவை மேற்கொண்டார்கள். கொழும்பு ‘சிலோன் ஸ்ரூடியோ’ வுக்குள் முதன்முதலாக ஒரு தமிழ்ப்படம் உருவானது. படத்துக்கான கலை நிர்மாணத்தை கே.ஏ. வின்சென்ற் கவனித்தார்.

‘கடமையின் எல்லை’ (04.10.1966) ‘சிலோன் தியேட்டர்ஸின்’ 8 திரையரங்குகளில் திரையிடப்பட்டது. வேதனை என்னவென்றால் இத்தனை கஷ்டப்பட்டு உருவாக்கிய இயக்குநரால் இப்படத்தைத் திரையில் பார்க்க முடியவில்லை. காரணம், ‘கடமையின் எல்லை’ திரைக்கு வருமுன்பே அதன் இயக்குநர் எம். வேதநாயகம் காலமாகிவிட்டார்.
மணியோசை முழங்குகிறது. காக்கையினங்கள் ஆனந்தத்துடன் ஆரவாரித்தன. ஆழ்கடலின் பேரலைகள் கற்பாறைகளில் மோதி வெண்ணுரை பரப்புகின்றன. இந்தக் காட்சிகளுடனே 'கடமையின் எல்லை' திரைப்படம் ஆரம்பமாகியது. உரையாடல்கள் யாழ்ப்பாணப் பேச்சுவழக்கில் இடம் பெற்றன. பொதுவாக நடிப்பில் எல்லோருமே நாடகப் பாணியைப் பின்பற்றியிருந்தார்கள்.

இன்பரசனாகத் தோன்றிய தேவன் அழகக்கோனின் நடிப்பு குறிப்பிடத்தக்கதாக அமைந்திருந்தாலும், தென்னிந்திய நடிகர் சிவாஜி பாணியைப் பின்பற்றியிருந்தார். இப்படத்தில் அறிமுகமான ஏ.ரகுநாதனும் பி.உதயகுமாரும் பின் நாட்களில் சிறந்த திரை நாயகர்களாக உருவாகினார்கள்.

கதாநாயகியாக ஜி. நிர்மலாவும், தாயாராக ஐராங்கனியும் நடித்தார்கள். அக்காலத்திலும் தமிழ் நடிகைகள் பஞ்சம் நிலவியிருக்கவேண்டும். பெண் பாத்திரத்தில்கூட ஆண் ஒருவர் நடித்தார். அதிகமான உப பாத்திரங்கள் தோன்றின. ஆரம்பகால முயற்சி என்பதால் தொழில் நுட்பத்துறையில் பல குறைபாடுகள் தெரிந்தன.

துள்ளி விளையாடும் புள்ளிமான் ரூபா காதல் வயப்பட்டாள். இளவரசன் கமலநாதனும் அவளை நேசித்தான். காதலர்கள் ஆடிப் பாடி மகிழ்ந்தார்கள். தம்மை இன்பரசனும் ரூபாவின் தந்தையும் மறைந்திருந்து பார்ப்பதை இளவரசன் கண்டுவிட்டான். அவர்களின் தூண்டுதலின் பேரில்தான் ரூபா தன்னைக் காதலிப்பதாக நடிக்கிறாள் என்று எண்ணி வெகுண்டான் கமலநாதன். அவன் எட்டி உதைக்கவே அவள் பதறிப்போய்விட்டாள்.

இப்படியான உணர்ச்சிகரமான பல காட்சிகள் இப்படத்தில் இடம்பெற்றன. பல ஊர்களிலும் இத்திரைப்படம் இரண்டு வாரங்களுக்குமேல் ஓடவில்லை. இத்தனை பிரம்மாண்டமான தயாரிப்பு பொருளாதார ரீதியில் பெருந்தோல்விப்படமாகியது. ஆரம்ப நிலையிலிருந்த தமிழ்ப் படத்துறையில் இப்படியான பிரம்மாண்டமான கதையைத் திரைப்பட ஆக்கத்திற்குத் தெரிவு செய்ததே பெருந்தவறு என்று கூறப்பட்டது.

‘கடமையின் எல்லை’ திரைப்படத்தைப் பற்றி, பத்திரிகைகள் பலவாறு விமர்சனங்களை எழுதின. அந்தக்காலச் சூழ்நிலையை அறிந்த எவரும் குறைகளை அதிகமாக எழுதவில்லை. இயக்குநர், தயாரிப்பாளர்களின் துணிவைப் பாராட்டி எழுதினர்.
அக்காலத்தில் இலங்கையில் தமிழ்ப் படத் தயாரிப்பு என்பது எல்லா வகையிலும் தோல்வியிலேயே முடியும் என்பதை அறிந்திருந்தபோதிலும் சில தீவிர கலைஞர்கள் தம் திருப்திக்காக இவ்வாறு சில திரைப்படங்களை உருவாக்கினார்கள். அவ்வாறான முயற்சியில் ‘கடமையின் எல்லை’ திரைப்படமும் ஒன்றாகும்.

சினிமா என்ற கலை மீது கொண்ட காதலால் இவ்வாறான முயற்சியை திரு. வேதநாயகம் மேற்கொண்டார். இந்த வகையில் இலங்கைச் சினிமாவின் வரலாற்றை ஆரம்பித்து வைத்தவர்களின் பெயர்களில் திரு. வேதநாயகத்தின் பெயரும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய பெயராகும்.

ஒரு பத்திரிகை இவ்வாறு எழுதியது. ‘கோட்டையில் ஆவிவரும் காட்சிகள் ஆங்கிலப் படங்களைப் போல் அமைந்திருந்தன. வாட் சண்டைகள் முதல் குதிரைச் சவாரிகள்வரை எல்லாமே கஷ்டப்பட்டு எடுக்கப்பட்டிருந்த. காதல் காட்சிகளுடன் இலங்கைப் பாடகர்களின் இன்னிசையும் யாழ். கலாநேத்திர மாணவிகளின் நடனங்களையும் கண்டு களிக்கலாம்…’ என்று எழுதியது.

‘… நடிகர்களில் பலர் நன்கு நடித்திருந்தாலும் தேவன் அழகக்கோன் எம் மனதில் ஒரு செய்தியை நிறுத்தினார். இவர் கதாநாயகனைவிட எம் மனதில் முன் நிற்கிறார். அதற்குக் காரணம் இவரது திரைக்கு ஏற்ற முகவெட்டும், உடல் அமைப்பும்தான் என்று எண்ணமுடிகிறது. இவர் தென்னிந்திய நடிகர் ஒருவரின் பாணியை மட்டும் கைவிட வேண்டும்’ என்று இன்னுமொரு பத்திரிகை புத்திமதி சொல்லியது.

நெறியாள்கையையும் இசை அமைப்பையும் வேதநாயகமே ஏற்றிருந்தாரல்லவா? சினிமாவைப் பொறுத்தவரை அவரது முதலாவது படைப்பு இது. ஆனாலும், அனுபவம் பெற்ற பலருடன் ஒப்பிடக்கூடியளவு தனது கடமையைச் செய்திருந்தார் என்பது உண்மையே.

அதிகமான காட்சிகள் வெளிப்புறங்களிலேயே எடுக்கப்பட்டன. ஒளிப்பதிவாளர்கள் கபூருக்கும், அரசுக்கும் தமது திறமைகளை காட்ட அதிக சந்தர்ப்பங்கள் கிடைத்துள்ளன. ‘மனம் வைத்ததொன்று’ என்ற பாடல் இனிமையாக இருந்தது.

‘இப்படத்தைப் பற்றி கதாநாயகி ஜி. நிர்மலா தனது கருத்தைக் கூறியிருந்தார். இப்படத்தின் கலைஞர்கள் அனைவரும் அனுபவம் இல்லாதவர்கள். இதுவே இப்படத்தின் தோல்விக்குக் காரணம். படப்பிடிப்பின்போது டைரக்டர் மனம் போனபடி ‘குதி’, ‘தொங்கு’ என்றெல்லாம் ஆட்டிப்படைத்தார். கட்டுப்பாடுகளை விதித்தார்களே தவிர, நடிக்க சந்தர்ப்பம் தரவில்லை. இப்படம் தோல்வி அடைந்தால் என் எதிர்காலம் பாதிக்கப்படுமோ? என்று அஞ்சுகிறேன்’ என்று பேட்டி கொடுத்திருந்தார். வேடிக்கை என்னவென்றால் அவர் நடித்த முதல் படமும் கடைசிப்படமும் ‘கடமையின் எல்லை’யேதான்.

படத்தின் உப கதாநாயகன் எம். உதயகுமார் என்ன கூறினார் தெரியுமா? ‘நடிப்புத் திறனற்றவர்களை முக்கியபாத்திரத்தில் நடிக்க வைத்ததே படத்தின் தோல்விக்குக் காரணமாகும். சினிமாத் துறையின் வளர்ச்சியை அறிந்து புதுமையான முறையில் படத்தை உருவாக்கியிருக்கவேண்டும். அதை விடுத்து பழமையைப் புகுத்துவதும் பழக்கமற்ற செயல்களில் ஈடுபடுத்துவதும் படுதோல்வியைத்தானே கொண்டுவரும். தயாரிப்பாளர்கள் பணத்தை விரயம் செய்து படம் டைரக்ட் செய்யும் முறையைப் பயின்றுள்ளனர்’ என்று எழுதினார்.

அந்தக் காலத்தில் நடிகராகவும், நாடகத் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகியிருந்த ஏ. நெயினார் தன் கருத்தைத் தினகரனில் எழுதியிருந்தார். ‘எத்தனையோ செல்வந்தர்கள் இருந்தும் துணிந்து முன்வந்த திரு. வேதநாயகம் அவர்களைக் கலைஞர்களாகிய நாம் பாராட்டாமல் இருக்க முடியுமா? என்று கேட்டிருந்தார்.

அந்தக் காலத்தில் வெளிவந்து கொண்டிருந்த ‘சுதந்திரன் (06.10.1966) பத்திரிகையும் விமர்சனம் எழுதியது. ‘சேக்ஷ்பியரின் கதையைத் தமிழ்ப் படமாகச் செய்திருப்பதன் மூலம் இயக்குநரின் ஆற்றலையும் நம்பிக்கையையும் காட்டுகிறது. தமிழ் மரபுடன் கதையை நடத்திச் செல்வதற்கு ஒரு பாராட்டு! அருவக்காட்சிகள், போர்க்காட்சிகள், கதாநாயகியின் சமாதிக் காட்சி போன்றன டைரக்டரின் திறமையைக் காட்டுகின்றன…’ என்று எழுதியது.

வீரகேசரியும் (04.10.66) விமர்சனம் எழுதியது.‘சேக்ஷ்பியரின் கதைகள் எதுவும் தமிழில் முழுப்படமாக வெளிவரவில்லை. அம் முயற்சியைத் துணிந்து மேற்கொண்டு சரித்திரப் படமாகத் தயாரித்திருப்பதை நாம் பாராட்டாமல் இருக்கமுடியாது. டைரக்ஷன் பொறுப்பை ஏற்றுள்ள வேதநாயகத்துக்கு இது முதற்படைப்பாக இருந்த போதிலும் அனுபவம் பெற்றுள்ள பலரோடு ஒப்பிடக்கூடிய முறையில் கடமையைத் திறமையாகச் செய்துள்ளார். இலங்கையில் இப்பொழுது சிங்களச் சினிமாத்துறை நன்கு உயர்ந்துவிட்டது. அங்கு தமிழ்க் கலைஞர்கள் பலர் கடமையாற்றுகிறார்கள். அவர்களை தமிழ்ப்பட உலகை முன்னேற்றும் ஒரு பணிக்கு திரு. வேதநாயகம் தயார்ப்படுத்தும் அம்சமாக இப்படம் எடுக்கப்பட்டதையிட்டு நாம் மிகவும் பாராட்டுவோம்!’ என்று விமர்சனம் எழுதியது.

‘கடமையின் எல்லை’ திரையிடப்பட்டபோது எனக்கு வயது 15. அப்பொழுது நான் கொழும்பு விவேகானந்தா மகாவித்தியாலயத்தில் 10ஆம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன். கொழும்பில் எல்பினிஸ்ரனிலும், ரொக்ஸியிலும் இப்படத்தைத் திரையிட்டிருந்தார்கள். எனது மாமா சிவநாமம் என்னை அப்படத்தைப் பார்ப்பதற்கு அழைத்துச்சென்றார். எல்பினிஸ்ரன் தியேட்டரில் 2ஆம் வகுப்பு டிக்கெட் எடுத்துக்கொண்டோம். அப்போது ஒரு டிக்கெட்டின் விலை 1 ரூபா 10 சதம் மட்டும்தான்.

தியேட்டரில் மேல்வகுப்பு இருக்கைகளில் சிலர் இருந்தனர். இரண்டாம் வகுப்பு இருக்கைகளில் எங்களுடன் சேர்த்து எல்லோருமாக ஒரு 50 பேர் இருப்போம். கலரி மட்டும் நன்றாக நிறைந்திருந்தது. அப்போது கலரி டிக்கெட்டின் விலை 50 சதம் மட்டுமே.

படம் ஆரம்பமாகியது. திரையில் மணியோசை முழங்கியது. ஆழ்கடலின் நீள் அலைகள் கற்பாறைகளில் மோதிவெண்ணுரை பரப்பின. யாழ்ப்பாணக் கோட்டை தெரிந்தது. அடுத்த சில பாத்திரங்கள் பேசின. யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் அந்த உரையாடல்கள் அமைந்திருந்தன. நான் மகிழ்ச்சி நீடிப்பதற்கு முன்பே கலரிப் பக்கத்திலிருந்து கூச்சல்கள் கிளம்பின.
‘என்ன விஷயம்?’ என்று நான் மாமாவிடம் வினவினேன். ‘இலங்கைப்படம் என்றால் கலரியில் உள்ளவர்கள் அப்படித்தான் கூச்சல் போடுவார்கள். நீ பேசாமல் படத்தைப் பார்’ என்றார் மாமா. காட்சிக்குக் காட்சி கலரிக்காரர்களின் கூக்குரல் அதிகரித்துக்கொண்டே வந்தது.

அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று அறிவதற்காக எனது காதுகளைக் கூர்மையாக்கினேன். ‘பனங்கொட்டை….. பனங்கொட்டை… பனங்கொட்டைப் படம் எங்களுக்கு வேண்டாம்.’ இவைதான் அவர்களின் கூக்குரலின் அர்த்தம்.

நானும் ‘பனங்கொட்டை’ என்பதால் அவர்கள் சொன்ன சொற்கள் எனக்கு வேதனையை ஏற்படுத்தின. அவர்கள் என்ன சொல்லிக் கூக்குரலிட்டாலும், அது ‘பனங்கொட்டைப்படம்’ என்பதால் படம் முடியும்வரை இருந்து பார்த்துவிட்டுத்தான் நானும் மாமாவும் வீடு திரும்பினோம். இப்படியெல்லாம் எமது இலங்கைத் தமிழ்த் திரைப்படங்களின் வரலாறு வளர்ந்துவந்தது.

இப்படத்தின் மூலமே முதன் முதலில் 'யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழ்' திரைப்படமொன்றில் அறிமுகமாகியது. ஆனாலும் இப்படியான சரித்திரப்படத்துக்கு யாழ்ப்பாணப் பேச்சுத்தமிழ் பொருந்தவில்லை என்பது உண்மைதான். ஆனாலும் பின்பு வந்த பல தமிழ்ப்படங்களுக்கு யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழ் பொருந்தி விட்டன.
மின்னஞ்சல் முகவரி: thambytheva@gmail.com

இந்த புத்தகத்தை வெளியிடுவதிலும், நூலை இணையத்தில் வெளியிட வசதியான வடிவில் கொடுத்து உதவிய, நண்பர் ரிஷான் செரிப்பிற்கு பேசாமொழி சார்பில் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.