இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை 5. 'பாச நிலா’ (கல்லூரிக்குள் உருவான திரைப்படம்)

1965ஆம் ஆண்டளவில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் ஜோசப் தேவானந்தன் என்ற ஆசிரியர் கல்வி கற்பித்துவந்தார். இவரும் இலங்கையில் தமிழ்ப் படமொன்றை உருவாக்க வேண்டுமென்று ஆசை கொண்டிருந்தார். சக ஆசிரியர் தேவகுலதுங்கத்துடன் சேர்ந்து திரைக்கதையை எழுதிவிட்டார்.

யாழ்ப்பாணக் கல்லூரி மாணவர்கள் ஏ.ஈ. மனோகரன், ஜயேந்திரா போன்றோருடன் யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரி மாணவர்கள் சிலரும், செல்வி ஐடா துரைசிங்கம் போன்றோரும், நடிகர்களாகத் தெரிவு செய்யப்பட்டார்கள். பலாலி ஆசிரிய கலாசாலை மாணவனாக இருந்த எம்.எச். ஹக் இப்படத்துக்கான பாடல்களுக்கு இசை அமைத்தார். யாழ்ப்பாணப் பாடசாலைகள், பேராதனைப் பூங்கா, தெஹிவளை மிருகக்காட்சிசாலை போன்ற இடங்களில் படப்பிடிப்புகள் நடைபெற்றன.
16 மி.மீட்டரில் ரெக்னிக் கலரில் உருவான இப்படத்தின் கதையை மாணவர்களுக்கு ஏற்ற விதத்தில் எழுதியிருந்தார்கள். வயது முதிர்ந்த தம்பதியொன்றுக்கு, ஆண் ஒன்றும் பெண் ஒன்றுமாக இரண்டு பிள்ளைகள். கீதாவே மூத்தவள். மச்சான் முறையான குமார் என்ற இளைஞனும் இவர்களுடன் ஒன்றாகவே பாடசாலைக்குச் சென்று வருவான். ஒருநாள் மூவரும் படகொன்றில் சுற்றுலா போகிறார்கள். குமார் கேலிக்காகப் பயம் காட்டுகிறான். அதிர்ச்சியடைந்த கீதா ஊமையாகி விடுகிறாள். அவளது தம்பியும் படிக்காமல் குட்டிச் சுவராகி விடுகிறான்.

'நான் உன் குடும்பத்துக்கு எத்தனையோ நன்மைகளைச் செய்தேன். இறுதியில் உன் தம்பிகூட என்னை அடித்துவிட்டான். இனி மேல் இந்த உலகத்தில் வாழ்வதில் பயனில்லை. எனவே, நான் தற்கொலை செய்யப்போகிறேன்!’ என்று கூறிவிட்டு குமார் வைத்தியசாலையின் மேல் மாடியிலிருந்து குதித்துவிட ஓடுகிறான். அதிர்ச்சியடைந்த கீதா வாய்விட்டு அலறிவிடுகிறாள்.

பரீட்சையில் சித்தியடைந்த குமார், கொழும்புக்கு வந்துவிடுகிறான். கீதாவுக்கும் கொழும்பிலேயே சிகிச்சை நடைபெறுகிறது. குமார், கீதாவின் தம்பியை நல்வழிப்படுத்த முனைந்தபோது, அவனால் தாக்கப்படுகிறான். குமார் தனக்கு நடைபெற்றவைகளைக் கீதாவுக்குக் கூறுகிறான். அந்த ஊமைப்பெண் வாய் பேசத் தொடங்கினாள். குமாருக்கும் கீதாவுக்கும் திருமணம் நடைபெறுகிறது.

இதுதான் ‘பாசநிலா’ திரைப்படத்தின் கதைச் சுருக்கமாகும். குமாராக ஏ.ஈ. மனோகரனும், கீதாவாக ஐடாதுரை சிங்கமும், தம்பியாக ஜயேந்திராவும் பாத்திரமேற்றார்கள்.

1966ஆம் ஆண்டில் ‘பாசநிலா’ திரையிடப்பட்டது. அக் காலத்தில் யாழ்ப்பாண நகர மண்டபத்தில் 5 நாட்களும், வேல்விழாவின்போது கொழும்பு சரஸ்வதி மண்டபத்தில் 3 நாட்களும், காண்பிக்கப்பட்டதாம். தொடர்ந்து யாழ்ப்பாணப் பகுதியின் பல பாடசாலைகளிலும் தினமும் ஒரு காட்சியாக 50க்கும் மேற்பட்ட முறை காட்டப்பட்டதாம்.

லண்டனில் ‘வெஸ்ற் மினிஸ்ரர் சென்றல் ஹோலில்’ திரையிடப்பட்ட முதல் இலங்கைப் படம் ‘பாசநிலா’ தான். இதன் பின்பு ஜோ. தேவானந்தா பல சிங்கள தமிழ்ப் படங்களை இயக்கிவிட்டார். ஆனால், இந்தப் ‘பாசநிலா’வில் கிடைத்ததுபோன்ற ஆத்மதிருப்தி வேறு எதிலும் கிடைக்கவில்லை. எனது மூத்த பிள்ளை, இந்தப் ‘பாசநிலா’ பட ரீல்கள்தான் என்று சொல்லி மகிழ்கிறார்.
-----------------------------------------------------------------------------------------------------மின்னஞ்சல் முகவரி: thambytheva@gmail.com

இந்த புத்தகத்தை வெளியிடுவதிலும், நூலை இணையத்தில் வெளியிட வசதியான வடிவில் கொடுத்து உதவிய, நண்பர் ரிஷான் செரிப்பிற்கு பேசாமொழி சார்பில் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.