இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை 6. ‘டெக்ஸி ட்ரைவர்' (கலைத்தம்பதிகள் உருவாக்கிய படம்)

1950ஆம் ஆண்டளவில், சுண்டிக்குளியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் சென்பற்றிக்ஸ் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தார். இவ்விளைஞர் இலக்கிய ஆர்வம் காரணமாக ‘லட்டு’ என்ற பத்திரிகையை வெளியிட்டு வந்தார்.

சுண்டிக்குளி பெண்கள் கல்லூரியில் படித்துவந்த மாணவி ஒருத்தியும் ‘லட்டு’ பத்திரிகையை வாசித்து வந்தார். அதற்கு, கதை கட்டுரைகளையும் எழுதி அனுப்பினார். பத்திரிகை ஆசிரியர், எழுத்தாளருக்கு நன்றிக் கடிதங்கள் எழுதினார். நாளடைவில் நன்றிக் கடிதங்கள் காதல் கடிதங்களாக மாறின. அவர்களது காதல் கல்யாணத்தில் முடிந்தது.

இந்தக் கலைத் தம்பதிகள்தான் சுண்டிக்குளி சோமசேகரனும், திருமதி மாலினிதேவி சோமசேகரனும் ஆவர்.
திரு. சோமசேகரன் 1955ஆம் ஆண்டு சென்னைக்குச் சென்று வாஹினி ஸ்டூடியோவில் துணை ஒலிப்பதிவாளராகச் சேர்ந்து கொண்டார். அந்தக் காலத்தில் ‘தாயைப் போல பிள்ளை நூலைப்போல சேலை’ என்ற படம் வெளிவந்தது. அப்படத்தில் சிவாஜி கணேசன் நடித்த ‘பொற்கைப் பாண்டியன்’ என்ற நாடகம் இடம்பெற்றது. இந்தக் காட்சியில்தான், தனது கலைப்பணியைத் திறமையாக ஆரம்பித்திருப்பதாகப் பெருமையாகச் சொன்னார் சோமசேகரன்.

1960ஆம் ஆண்டு கொழும்பு சிலோன் ஸ்டூடியோ இவரை வரவேற்றது. அங்கு 50க்கு மேற்பட்ட சிங்களப் படங்களுக்கு ஒலிப்பதிவு செய்தார்.

இவருக்கு இளமையிலிருந்தே இலங்கையில் தமிழ்ப் படமொன்றை உருவாக்க வேண்டுமென்ற எண்ணம் இருந்து வந்தது. இவரது ஆசைக்கு மனைவியும் தூண்டுகோலாக இருந்தார். தங்கள் படக் கொம்பனிக்கு ‘தங்கமணி பிக்சர்ஸ்’ என்ற பெயரைச் சூட்டினார்கள். சோமசேகரன் சிறந்த ஒலிப்பதிவாளரல்லவா? எனவே, முதலில் பாடல்களை ஒலிப்பதிவு செய்தார். யூ.எல். ஹமீட் எழுதிய பாடல்களுக்கு ஆர். முத்துசாமி இசை அமைத்தார். அன்ரனி, கௌரீஸ்வரி, ஏபிரஹாம் போன்றோர் பின்னணி பாடினர்.

லெனினின் மூலக்கதைக்கு பி.எஸ். நாகலிங்கம் வசனம் எழுதினார். வானொலி நாடகத் துறையின் முன்னோடியான கலாஜோதி எஸ். சண்முகநாதன் (சானா), எஸ். ராஜேஸ்வரன், தேவன் அழகக்கோன், ரொஸாரியோ பீரிஸ், எம்.பி. பாலன், அரசு, பரமானந்தம், யோகா தில்லைநாதன், சந்திரகலா, இந்திரா, வசந்தா, ருத்ராணி மற்றும் பலர் நடிப்பதற்குத் தெரிவு செய்யப்பட்டார்கள்.
ஒளிப்பதிவில் எம்.ஏ. கபூருக்கு இது இரண்டாவது தமிழ்ப் படம். திரு. சோமசேகரன் இயக்குநர் பொறுப்பையும், திருமதி மாலினிதேவி தயாரிப்புப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார்கள்.

‘டெக்ஸி டிரைவர்’ என்ற பெயரில் படம் 27.12.66 இல் திரைக்கு வந்துவிட்டது. கொழும்பில் சென்றல், முருகன் உட்பட 8 தியேட்டர்களில் திரையிடப்பட்டது. அன்றைய தியேட்டர் நிர்வாக அமைப்பு காரணமாக நகரப்பகுதிகளில் 2 வாரங்களுக்குப் பின் கிராமப்புறத் தியேட்டர்களுக்கு மாற்றவேண்டி ஏற்பட்டுவிட்டது. ஆனாலும், பருத்தித்துறை போன்ற கிராமப்புறத்தில்கூட, தொடர்ந்து 3 வாரங்களுக்கு மேல் ஓடியது.

படித்த ஏழை இளைஞன் அசோக், ஒரு டெக்ஸி டிரைவர். இவனது உழைப்பிலேயே தாயாரும், ஊமைச் சகோதரி மீனாவும் வாழ்ந்து வருகிறார்கள். மேஜர் வரதநாதனின் மகள் பிறேமா, டெக்ஸி டிரைவரைக் காதலிக்கிறாள். தந்தை இதை எதிர்க்கிறார். மேஜரின் மருமகனும், பிறேமாவின் முறை மாப்பிள்ளையுமாகிய சங்கர், அசோக்கைப் பழிவாங்கும் நோக்குடன் ஊமைப் பெண் மீனாவைக் கெடுத்து விடுகிறான். தங்கையின் உயிர் பிரியுமுன்பாவது அவளைச் சுமங்கலியாக்கிவிட அசோக் முயல்கிறான். ஆனால், மீனா இறந்த பின்பே சங்கர் அவளுக்கு இரத்தத் திலகமிட்டு சுமங்கலியாக்குகிறான்.

இதுதான் ‘டெக்ஸி டிரைவர்’ திரைப்படத்தின் கதைச்சுருக்கம். தென்னிந்தியத் தமிழ்ப் படங்களில் இடம்பெறும் பல அம்சங்கள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன. சண்டைகள், கார் ஓட்டங்கள், நடனங்கள் என்று பல இருந்தன.

பெரியவராகத் தோன்றும் சண்முகநாதன் யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில் கேள்வி கேட்க, அவரது மருமகனாகத் தோன்றும் தேவன் அழகக்கோன் இந்தியப் பேச்சுவழக்கில் பதில் அளிப்பார். இரண்டும் கலந்த உரையாடல்கள்.
1984ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தக் கலைத்தம்பதியரின் வீட்டுக்குச் சென்றேன். ஹவ்லக் றோட்டில் அவர்களது வீட்டைக் காணமுடியவில்லை. ஆம், அது 83 ஜுலை கலவரத்தில் எரிந்துவிட்டது. திரைப்படம் சம்பந்தமான தஸ்தாவேஜுகளும் அழிந்துவிட்டனவாம். தீ அரக்கனிட மிருந்து தப்பிய ஒரே ஒரு பொருள் எது தெரியுமா? அவர்கள் ஏற்கனவே தந்து எனது வீட்டில் அகப்பட்டு விட்ட ஒரு சினிமா அல்பம் மட்டும்தான்.

1983 ஆம் ஆண்டுக் கலவரத்தின் பின் சோமசேகரன் மத்தியகிழக்கு நாடொன்றுக்குத் தொழில் தேடிச் சென்று விட்டார். மாலினிதேவி தனது பிள்ளைகளுடன் யாழ்ப்பாணம் திருநெல்வேலியிலுள்ள தனது தாயார் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

1987ஆம் ஆண்டு வடக்கு,கிழக்குப் பகுதிகளுக்கு இந்திய இராணுவத்தினர் 'அமைதிப்படை' என்ற பெயரில் வந்தபோது இவரது வீடும் தரைமட்டமாகியது. இதில் இவரது புதல்வர்களில் ஒருவரும் இறந்துவிட்டார். உயிர் தப்பிய பிள்ளைகளுடன் திருமதி.மாலினிதேவி இந்தியாவுக்குச் சென்று திருச்சியில் குடியேறினார். இப்பொழுது அங்கேயே வாழ்ந்துவருகிறார்.

----------------------------------------------------------------------------------------------------மின்னஞ்சல் முகவரி: thambytheva@gmail.com

இந்த புத்தகத்தை வெளியிடுவதிலும், நூலை இணையத்தில் வெளியிட வசதியான வடிவில் கொடுத்து உதவிய, நண்பர் ரிஷான் செரிப்பிற்கு பேசாமொழி சார்பில் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.