உதிரிப்பூக்கள் – வாடாமலர்

’உதிரிப்பூக்கள்’ திரைப்படத்தில் மனதை அதிகம் பாதிக்கும் பாத்திரம் அதன் நாயகன். அப்படி ஒரு கதாபாத்திரம்; அமைதியாகப் புன்முறுவலுடன் உலவும், மெதுவாக அளந்துபேசும் பாத்திரம். மெதுவாகப் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் தீப்பிழம்பாகச் சுடுகிறது. கனிவாகத் தோன்றும் கண்கள் சட்டெனெ வெறுப்பை உமிழுகின்றன. முகத்தில் எவ்வித சலனமும் இன்றி மனதில் வன்மமும் வெறுப்பும் கொண்டு ஊரின் பெரிய மனிதனாய் வலம்வரும் சுந்தரவடிவேலு என்கிற மறக்கமுடியாத பாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள கதை. அன்று சிவாஜி கணேசன் எதிர்நாயகனாக நடித்த ’அந்த நாள்’ திரைப்படத்திலிருந்து இன்றுவரை திரையில் தோன்றியுள்ள எதிர்நாயகப் பாத்திரங்களுள் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய பாத்திரப்படைப்பு.
இயக்குநர் மகேந்திரனின் மிகச்சிறந்த படைப்பாக மதிக்கப்படும் ’உதிரிப்பூக்கள்’ (1979) தமிழ் சினிமாவின் முக்கியமான திரைப்படங்களில் ஒன்றாக மட்டுமன்றி, முதன்மையானதாகப் பாராட்டப்படும் திரைப்படம். சிறப்பான கதை சொல்லல், கச்சிதமான காட்சி அமைப்புகள், வசனம் என இயக்குநர் மகேந்திரனின் கைவண்ணத்தில் மிளிரும் படைப்பு. புதுமைப்பித்தன் எழுதிய ‘சிற்றன்னை’யை மூலமாகக் கொண்டு உருவான கதை என மகேந்திரன் குறிப்பிட்டுள்ளார். மகேந்திரன் எழுதியிருக்கும் அழுத்தமான வசனங்கள் இப்படத்திற்கு மெருகேற்றுகின்றன.

ஆள் அரவமற்றுக் காலியாக இருக்கும் கிராமத்து ரயில்நிலையத்தில் இரண்டு பேர்கள் கையில் மாலையுடன் காத்துக்கொண்டிருப்பதுடன் ’உதிரிப்பூக்கள்’ திரைப்படம் துவங்குகிறது. ஊருக்குப் புதிதாக அரசு மருத்துவர் மனைவியுடன் ரயிலில் வந்து இறங்குகிறார். இரண்டாவதாக ஒரு புதியவர் அந்தக் கிராமத்துப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிவதற்காக வருகிறார். வாழ்க்கையில் மறக்கமுடியாத அனுபவங்களை அந்தக் கிராமத்தில் பெறப்போவதைப் பற்றி அந்த இருவருக்கும் அப்போது எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்கள் வரவை ஒட்டி அந்தக் கிராம மனிதர்கள் சிலர் நமக்கு அறிமுகமாகின்றனர். பள்ளியில் வந்திறங்கும் ஆசிரியரை வரவேற்கும் பள்ளித் தாளாளர் சுந்தரவடிவேலுவை முதல்முறையாகச் சந்திக்கிறோம்.

மகேந்திரனின் முந்தைய படைப்பான ‘முள்ளும் மலரும்’ போல இதுவும் ஒரு அழகான கிராமத்தில் நிகழும் கதை . பச்சைப்பசேலென வயல்களும், அருகில் ஓடிக்கொண்டிருக்கும் ஆறுமாக இயற்கை அழகுமிக்க சிறு கிராமம். பெரிய குடும்பத்தைச் சேர்ந்த சுந்தரவடிவேலுவின் கொடூரத்தனங்களைத் தட்டிக்கேட்க எவருக்கும் துணிவில்லை. மனைவி பரிமாறும் உணவில் கல் இருப்பதைக் குத்திக்காட்டும்போதும் மகளுக்கு அம்மை என்றதும் சற்றும் வருந்தாது அதற்கு அரசால் கொடுக்கப்படும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகையை வேண்டிப்பெற வற்புறுத்தும் போதும் அமிலமாய் உமிழப்படும் வார்த்தைகள் மனைவி லஷ்மியும் அவள் தந்தையும் இரு குழந்தைகளும் சுந்தரவடிவேலுவினால் எப்படி நடத்தப்படுகின்றனர் என்பதை நமக்கு வெளிப்படுத்துகின்றன.

மனைவியின் தங்கையை இரண்டாம்தாரமாக மணமுடிக்க ஆசைப்படும் சுந்தரவடிவேலுவு அதற்கான காய்களை கவனமுடன் நகர்த்துவது வீணாகப் போகிறது. மருத்துவராக வந்திருக்கும் பிரகாஷ் ஒரு காலத்தில் லக்ஷ்மியை ஆசைப்பட்டு பெண் கேட்டதை அறியும் சுந்தரவடிவேலு, இருவருக்கும் தொடர்பிருப்பதாகப் பொய்ப்பழி சுமத்தி மனைவியைத் தள்ளிவைக்க பஞ்சாயத்தைக் கூட்டுவதும் வீணாகப்போகிறது. சுந்தரவடிவேலுவின் மனதிலிருந்து எவ்விதமான குரூர எண்ணம் அடுத்து வெளிப்படப்போகிறதோ என்ற அச்சத்துடன் கூடிய எதிர்பார்ப்புடன் படத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

நிலப்பிரபுத்துவ சமூகத்தை சேர்ந்த ஒருவனாக, அந்த சமூகத்தின் ஆண்களுக்கான எல்லையற்ற அதிகாரத்தை நிறுவுவனாக ஊரின் பெரிய குடும்பத்தைச் சேர்ந்த சுந்தரவடிவேலுவின் பாத்திரம் படைக்கப்பட்டிருக்கிறது. இல்லை என்ற சொல்லை ஏற்பதில்லை. அடையவேண்டியதை எப்படியாவது அடைந்துவிடவேண்டும். சுந்தரவடிவேலு ஒருவித சேடிஸ்ட். பிறரை மனதளவில் கொடூரமாகப் புண்படுத்துவதில் வல்லவன். அது முடியாமற் போகும்போது கோபத்தில் கைகலப்பதற்கும், அடித்துத் துன்புறுத்துவதற்கும் தயங்குவதில்லை.
ஒவ்வொரு பாத்திரத்திற்கும் மிகச்சரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நடிகர்கள். சுந்தரவடிவேலு பாத்திரத்தை விஜயனைத் தவிர வேறு எவராலும் இந்த அளவுக்கு வெளிப்படுத்தியிருக்கமுடியாது எனச் சொல்லுமளவு அந்தப் பாத்திரப் பொருத்தத்தைச் சொல்லலாம். மனைவி லட்சுமியாக சிறப்பாக நடித்திருக்கும் அஸ்விணி பிரபலமாக அறியப்பட்டவர் அல்ல. தந்தையாக நடித்திருக்கும் சருஹாசன், சில காட்சிகளில் வந்தாலும் அழகாக நடித்திருக்கிறார். நாவிதர், மேளக்காரர், ஆசிரியர் எனப் படத்தில் பங்கேற்கும் பாத்திரங்களை மகேந்திரன் இயல்பாக, யதார்த்தமாக படத்தில் உலவச் செய்திருக்கிறார்.

கதையின் முடிவு பற்றி பல கருத்துக்கள். வன்முறையின் வெளிப்பாடு, அபத்தமான முடிவு மக்கள் எழுச்சியின் வெற்றி என வித்தியாசமான எதிர்வினைகளை எழுப்பிய முடிவு. தமிழ்ப்பட சரித்திரத்தில் இம்மாதிரியான முடிவை நாம் சந்தித்ததில்லை. சிறப்பாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இறுதிக்காட்சிகள் இந்தத் திரைப்படத்திற்கு முத்தாய்ப்பாக அமைகின்றன. கிராம மக்களின் ஏகோபித்த முடிவின்படி சுந்தரவடிவேலு ஆற்றில் தன்னை மாய்த்துக்கொள்ளும் தருணத்தில் பள்ளி ஆசிரியர் போன்ற சிலர் அதைத் தடுத்து நிறுத்த முயலுவதைக் காண்கிறோம். ஷ்யாம் பெனகலின் ‘நிஷாந்த்’ திரைப்படமும் இம்மாதிரியான மக்கள் எழுச்சியைக் காண்பிப்பதுடன் முற்றுப்பெறுகிறது. அப்படத்தில் மக்கள் இறுதியில் திரண்டெழுந்து அவர்களை கசக்கிப்பிழிந்துகொண்டிருந்த நிலச் சுவான்தார் குடும்பத்துடன் அவர் மாளிகை முதற்கொண்டு அனைத்தையும் அழிக்கின்றனர். உதிரிப்பூக்களில் சுந்தர வடிவேலுவின் உயிரை அவனே முடித்துக்கொள்ள ஊரார் முடிவுசெய்து அதை நிறைவேற்றுகின்றனர்.

மனதில் ஆழமாக உணரப்படும் வண்ணம் சிறப்பாகக் கதை சொல்லப்பட்டுள்ளது. இரவில் பசியுடன் குழந்தைகள் தாயின் சகோதரியிடம் வந்து உணவு கேட்கும் காட்சி போன்று நமது உணர்வுகளைத் தொடும் காட்சிகள் படம் முழுக்க வந்து போகின்றன. குழந்தை அந்தக் காட்சியில் வெகு இயற்கையாக, குழந்தைத்தனமாக, முகத்தில் சிரிப்புடன் பசிக்கிறது என்று சொல்லுகிறது. அதீத மிகையுணர்ச்சியை பயன்படுத்தி பார்வையாளரை உருகி அழவைக்கும் தமிழ்ப்பட வழக்கத்தை மகேந்திரன் முற்றிலுமாகப் புறக்கணித்திருக்கிறார். சுந்தரவடிவேலு மருத்துவருடன் கைகலப்பது போன்ற வன்முறைக்காட்சிகள் வெளிப்படையாகக் காட்டப்படாமல் உணர்த்தப்படுகின்றன. வழக்கத்திற்கு மாறாக நிதானமாகச் சொல்லப்படும் கதை.

சிறந்த படம் என்பதற்கு எடுத்துக்காட்டாக இப்படத்தில் சொல்வதற்கு ஏராளம் உண்டு. இருந்த போதும் பல வருடங்களுக்கு முன்பு வெளிவந்த ஒன்றிரண்டு திரைப்படங்கள் மட்டுமே தமிழில் சிறந்த படங்கள் என்று இன்னும் எத்தனை நாட்களுக்குச் சொல்லிக்கொண்டிருப்பீர்கள் எனச் சலித்துக்கொள்பவர்கள் இருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை 2007 இல் எங்கள் திரைப்படசங்கத்தில் திரையிட்டபோது, சிறந்த படம் என இதை எப்படிச் சொல்லலாம் என்ற கேள்வி எழுந்தது.

சமீபத்தில் இந்தக் கட்டுரைக்காகப் படத்தைப் பார்த்தபோது நெருடலை ஏற்படுத்திய ஒரு சில விஷயங்களைச் சொல்லியாகவேண்டும். இறுதியில் வரும் இரு பாடல் காட்சிகள் அவற்றில் சேர்த்தி. இறுக்கமாகப் போய்க்கொண்டிருக்கும் கதையை சற்று இலகுவாக்க இப்பாடல் காட்சிகள் பயன்பட்டிருக்கலாம். ஆனால் படத்தின் சிறப்பை இக்காட்சிகள் குறைப்பதாகவே கருதவேண்டியிருக்கிறது. தனது முடிவை நோக்கி மக்கள் பின்தொடர சுந்தரவடிவேலு சென்றுகொண்டிருக்கும் இறுதிக் காட்சியின் பின்னணியில் அளவுக்கு அதிகமாக ஒலிக்கும் பறை ஒலி நெருடலை அளிக்கிறது.
நமது திரைப்படங்களில் முதலிலிருந்து இறுதிவரை பின்னணி என்ற பெயரில் தொடர்ந்து ஏதாவது ஒரு சப்தம் கேட்டுக்கொண்டிருக்க வேண்டும். பாடல்களும் அப்படியே. படல்களைக் கேட்டு ரசிப்பதற்காகவே சினிமாவுக்குப் போகும் வழக்கம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. பாடல்களின் ஆக்கிரமிப்பிலிருந்து நமது சினிமா என்று விடுதலை பெறுகிறதோ அன்று தான் கதை, ஒளிப்பதிவு, காட்சியமைப்பு இவற்றுடன் அனைத்து திரைப்பட நுட்பங்களிலும் முழுக் கவனமும் செலுத்தப்பட்டு முழுமையான திரைப்படம் உருவாக வாய்ப்பு உண்டு. இந்தக்கருத்தை இயக்குநர் மகேந்திரனும் தனது நேர்காணல்களில் வலியுறுத்தியுள்ளார். நமது படங்களில் இன்றும் ’டூயட்’ பாடல்கள் இடம்பெறும் அபத்தத்தைப்பற்றி அடிக்கடி பேசியிருக்கிறார். ஒரு பாடல் கூட இல்லாமல் அடர்த்தியான கதையையும், தரமான டெக்னீஷியன்களையும், புதுமுகங்களையும் வைத்துப் படம் எடுக்க முடிவு செய்திருப்பதாகக் கூறியிருக்கிறார்.

மிகப்பெரிய ஆச்சரியம் என்னவென்றால், வழக்கத்திற்கு மாறான பல விஷயங்களுடன் ஒரு கலைப்படைப்பாக வெளிவந்த இந்தத் திரைப்படத்தை மக்கள் வரவேற்று வெற்றிப்படமாக ஆக்கியதுதான். உதிரிப்பூக்கள் இருபத்து ஐந்து வாரங்களுக்கு மேல் ஓடிய படம். உரத்த குரலில் சொல்லப்படும் கதைகளுக்குப் பழக்கப்பட்ட தமிழக திரைப்பட ரசிகர்கள் அதற்கு முற்றிலும் எதிர்மறையாக, மென்மையாக, கவித்துவமாகச் சொல்லப்பட்டுள்ள திரைப்படத்தை வெற்றிப்படமாக அங்கீகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மக்களுக்கு இதில் கதை சொல்லப்பட்டுள்ள விதம் பிடித்திருக்கிறது என்பது மகிழ்ச்சியான செய்தி.

உதிரிப்பூக்கள் போன்ற ஒரு அற்புதத்தை உருவாக்கிய படைப்பாளிக்கு இன்று நமது திரையுலகில் இடமிருக்கிறதா அல்லது அவராக விலகியிருக்கிறாரா என்ற கேள்விகளுக்குச் சரியான பதில் இல்லை. மகேந்திரன் இறுதியாக உருவாக்கிய படைப்பான ’சாசனம்’ திரைக்கு வர பல ஆண்டுகள் ஆகி பல சோதனைகளை அவர் சந்திக்க நேர்ந்திருக்கிறது. அந்தப் படம் சரியான முறையில் திரையிடப்படவில்லை. மீண்டும் திரைப்படம் உருவாக்கப்போவது பற்றி நேர்காணலில் சொல்லியிருக்கிறார். அவர் மீண்டும் அற்புதங்களை உருவாக்கவேண்டும். காத்திருப்போம்.