உயிர் கொடுக்கும் கலை - ட்ராட்ஸ்கி மருது

அனிமேஷன் என்ற வார்த்தை சமீப காலமாக, மிக பரிச்சயமான ஒரு வார்த்தையாக மாறிவிட்டது. திரைப்படம் தோன்றிய கடந்த நூற்றாண்டில், அனிமேஷன் குறிப்பிடத்தக்க கலை வடிவமாக வளர்ந்து வருவதற்கான வாய்ப்பு ஏற்பட்டது. கணிப்பொறி, அனிமேஷன் கலையை ஜனநாயக படுத்தியது. முன்பெல்லாம் 1 அல்ல 2 விழுக்காடு கலைஞர்கள் மட்டுமே அனிமேஷன் கலையில் ஈடுப்பட்டிருந்தனர். கணினியின் வருகைக்கு பின், இப்போது அனைவரும் அனிமேஷன் கலையில் ஈடுபட வாய்ப்பு இருக்கிறது. கடந்த 100 ஆண்டுகளில், கலைஞர்களில் ஒரு சிறு பகுதியினர்தான் இந்த கலையோடு சம்பந்தப்பட்டிருந்தார்கள். அவர்களும் பல பிரிவுகளாக இருந்தார்கள்.

அனிமேஷன் என்றாலே உயிர் கொடுப்பது. Inanimate-able Object`ஐ animate பண்ணுவது. அசையாத வஸ்துகளுக்கு அசைவை கொடுப்பது, அசைவை கொடுப்பதன் மூலமாக உயிரை கொடுப்பதாகும். நொடிக்கு 24 ஃப்ரேம்கள் பயன்படுத்துவதன் மூலமாக சினிமாவில் ஒரு மாயை உருவாக்குகிறார்கள். கடந்த நூற்றாண்டில், இந்த மாயை உருவாக்குவதற்கு Z robe மற்றும் பல கருவிகள் உபயோகித்தார்கள். சினிமாவில் 24 அசையாத ப்ரேம்களை, தொடர்வான அசைவுகளை குறிக்கும் படத்தினை; ஒரு ஸ்கிரின் மேல் ப்ரொஜக்ட் செய்யப்பட்டு உயிர் கொடுக்கிறார்கள். அதே போல 24 ஃப்ரேம்கள் வரைந்தோ அல்லது புகைப்படம் எடுக்கும்போது அசையாது வஸ்துவை சிறிது சிறிதாக நகர்த்தி வைத்து, ஸ்டாப் மோஷன் என்று சொல்லப்படும் முறையை பயன்படுத்தினார்கள். ஸ்டாப் மோஷனுக்கு எடுத்துக்காட்டாக கல்யாண சமையல் சாதம் பாடல் காட்சியை சொல்லலாம். கடோத்கஜன் சாப்பிடும் போது பாத்திரங்கள் நகர்ந்து வருவது ஸடாப் மோஷன் முறை மூலம் தான். ஒவ்வொரு ப்ரேமாக எடுக்கப்பட்டு பின் இணைக்கப்படும்.

சினிமாவுக்கு வேண்டிய பல்வேறு துறை சார்ந்த விஷயங்களினால் அனிமேஷன் channelise ஆனது. Fritz Lang`இன் மெட்ரோபோலிஸ் திரைப்படத்தில் பெரிய Futuristic நகரம் ஒன்றை காட்டுவார்கள், அது அனிமேடட் தான். இது போன்று, அனிமேஷன் பயன்படுத்தப்பட்ட பல படங்களை வரிசை படுத்தலாம். ஒரு ஒவியர் எப்படி திரையை பிரித்து கையாளுகிறாரோ, அதே போல அனிமேஷனிலும் செய்வார்கள். டென் கமேண்ட்மெண்ட்ஸ் திரைப்படத்தில், மோஸஸ் கரையில் நின்றுக்கொண்டு கடலை பிரிப்பது போன்ற ஒரு காட்சி உண்டு. ஒரு முழு ப்ரேமில் தேவையான பகுதியை மறைத்துவிட்டு அதை பிலிம் செய்து, பின் அனிமேட் செய்து மொத்தமாக கம்போஸ் செய்யவார்கள். கம்போஸ் செய்ததை டெவலப் செய்து பிரிண்ட் போட்டு மக்களுக்கு காட்டுவார்கள். கம்போஸ் செய்து ஓவியம் வரைவது போல் தான் இதுவும். ஒவ்வொரு பகுதியும் அசைவை வைத்து தனி தனியாக எடுப்பது, மேகத்தை தனியாக காட்சி படுத்துவது, கூட்டத்தை தனியாக எடுப்பது; இப்படியான முறை முன்பும் இருந்தது.
வால்ட் டிஸ்னியை பார்த்தோமெனில், நான் முன்பு கூறியது போல் தான், Inanimate-able Object`ஐ animate செய்வார்கள். 12 கார்ட்டூன் வரைபடங்களை இரண்டு இரண்டு முறை ஃப்லிம் செய்வதன் மூலம் 24 ப்ரேமுக்கு கொண்டு வருவார்கள். இவையெல்லாம் கார்ட்டூன் அனிமேஷன். கார்ட்டூனை அனிமேட் செய்வது என்பது பல்வேறு நிலைகளில் இருந்தது. பழைய அனிமேஷன் முறைகள் அனைத்திற்க்கும் ஒரு வழி முறை இருந்தது. பிக்பால்லில் வரைவார்கள். இதற்கு ஒரு பெரிய வளர்ச்சி இருந்தது.சரித்திரத்தை படித்தால் நமக்கு இது புரியும். 1914`இல் வெளிவந்த Winsor McCay `இன் Gertie the Dinosaur படம் ஒரு எடுத்துக்காட்டு.
ஒவ்வொரு பேப்பரிலும் வரைவார்கள். அதை ஃப்லிம் செய்வார்கள். கதாபாத்திரங்களை எப்படி அடையாளம் காண்பது? பின்புறத்தையும்(background) கதாப்பாத்திரத்தையும் தனியா பிரித்துவிடுவார்கள். ஒரு பின்புற வரைப்படம் வரைந்துவிட்டு, கண்ணாடி போல் இருக்கும் transparent celluloid ஷீட்டு மேல் அசையும் வஸ்துவெல்லாம் வரைவார்கள். ஷீட்டை மட்டும் தொடர்ந்து மாற்றம் செய்து மற்றவையை வரைவார்கள். 12 வரைபடத்தில் மிக்கி மெளஸ் ஒரு அடி எடுத்து வைப்பதை வரைந்தால், அதை இரண்டு இரண்டு தடவை ஃப்லிம் செய்வார்கள். பின்புறம் அதே தான் இருக்கும். எடுத்துக்காட்டுக்கு மிக்கி மெளஸ் ஒர் இருக்கையிலிருந்து எழுந்து செல்கிறதென்றால் , அந்த இருக்கை மற்றும் அறை ஒரு வரைப்படமாக இருக்கும். இந்த முறை மூலம் வரைப்படத்தை பிரித்தார்கள். அசைவதை மேலே வைத்து கார்ட்டூன் அனிமேஷனை செய்தார்கள்.

Trick shots, டென் கமெண்ட்மெண்ட்ஸ் போன்ற திரைப்படங்களில் இடம் பெற்றது. ட்ரிக் ஷாட்ஸ் மூலம் பிரமிக்கத்தக்க, ஆச்சரியமான காட்சிகள் எடுக்கப் பட்டது. மலை மீது இருக்கும் ஒரு பெரிய கோட்டையை காட்சிப்படுத்த வேண்டும் என்றால், கோட்டையை மலை மீது கட்டாமல், கண்ணாடியில் பெயிண்ட் மூலம் வரைந்து, ப்ரேமுக்கு முன்பு வைத்து காட்சி படுத்தினார்கள். இது போன்ற காட்சியை எப்படி காட்டுவது(உருவாக்குவது) என்பதற்கு கலைஞர்கள் சில tricky செயல்களை செய்தனர். மேஜிக்கல். கண்ணால் நாம் காண முடியாத காட்சிகளை காட்சி படுத்தும் செயல். காலப்போக்கில் லெனஸஸ், மேட், பிரிண்டர், ஃப்லிம் , இப்படி எல்லா வழிகளிலும் அதற்கான சாத்தியங்கள் அதிகரித்தது. கணினியும் வந்தது. பின்பு மென்பொருள்களும் வந்தது. மீண்டும் டைனோஸர் அனிமேட் செய்துவிடலாம், வரைய தேவையில்லை, சிற்பம் போல் கணினி மூலம் நாமே அனிமேட் செய்யலாம். அப்படி ஒரு நிலைமை வந்துவிட்டது.

எழுபதுகளுக்கு பிறகு ஹாலிவுட்டில் கவுப்பாய் படங்கள் தான் வந்துக்கொண்டிருந்தது. நாம் நாற்பதிலிருந்தே கடவுள் சார்ந்த படங்கள் தான் எடுத்துக்கொண்டிருந்தோம். திராவிட கோட்பாட்டு எழுச்சிக்கு பிறகு சமூகம் சார்ந்த படங்கள் வெளி வந்தது. சாமி வந்து குஷ்டத்தை போக்கும் போன்ற கதையெல்லாம் காலாவதியாகிவிட்டது. சமூக நோக்கமுள்ள படங்கள் வெளிவந்தது, இதனால் ட்ரிக் ஷாட்ஸ் மற்றும் அனிமேஷனுக்கான வாய்ப்பு குறைந்து. கிட்டதட்ட 32 ஆண்டுகள் இந்த நிலைமை நீடித்தது.

நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது Stanley Kubrick`இன் 2001: A Space Odyssey திரைப்படம் பார்த்தேன். மதுரையில் எனக்கு திரைப்படம் பார்க்க நல்ல சூழ்நிலை அமைந்திருந்தது. அப்பா திரைப்படங்களுக்கு அழைத்து செல்வார். மதுரையில் எல்லா புத்தகங்களையும் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. ரீகல் டாக்கிஸ்ஸில் அனிமேஷன் படங்களை தொடர்ந்து பார்க்க வாய்ப்பு கிடைத்தது. டென் கமேண்ட்மென்ஸ், பென் ஹர், சாலமன் அண்ட் ஷீபா போன்ற பெரிய படங்கள் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. ஆரம்ப காட்சிகளில் அரண்மனையை காட்டும் போது , சீலிங்(மேல் கூறை) ப்ரஷில் (brush)வரைந்திருக்கிறார்கள் என எனக்கு தோன்றும். அரண்மனையின் கீழ் பகுதியை வடிவமைத்திருப்பார்கள், மேல் கூறையை வடிவமைக்க மாட்டார்கள், வரைந்திருப்பார்கள். இரண்டு அல்லது மூன்று நொடிகள் தான் அந்த காட்சியிருக்கும். ப்ரஷில் தான் வரைந்திருக்கிறார்கள் என நன்கு உணரும் முன்பே அந்த காட்சி சென்றுவிடும். அடுத்த காட்சி வந்துவிடும். அதை அறிய வேண்டும், தெரிந்துக்கொள்ள வேண்டும் என உள்நோக்கமும் ஆசையும் எழுந்தது. அது போன்ற விஷயங்களை ஊன்றி கவனிப்பதும் படிப்பதுமாக இருந்தேன். ஓவியனாக வேண்டும் என்று நினைத்திருந்ததாலே சினிமாவில் ஓவியரின் பங்கு என்னை எப்போதும் ஈர்த்தது. அத்துடன் அனிமேஷன், அசைவு, அசைவின் கலை, நடனம், சினிமா உருவாக்கம், காமிக்ஸ் புத்தகம், இவையாவும் என்னை ஊக்கப்படுத்திக்கொண்டே இருந்தது.

சென்னை ஓவிய கல்லூரியில் சேர்ந்தேன். அங்கு அனிமேஷனுகென்று பெரிய சூழல் இல்லை. நான் மட்டும் தான் இதில் ஆர்வமுடையவனாக இருந்தேன். உலகளவிலேயே அனிமேஷனை படிப்பவர்கள் சிறு பகுதியாக இருந்தார்கள். அதை தெரிந்தவர்களும் சிலரே. 1930`க்கு முன் இது போன்ற வேலைகளை ட்ரிக் ஷாட், இன்விசிப்ள் ஆர்ட் என்று தான் அழைப்பார்கள். அந்த கலையை வெளியில் தெரியாமல் சினிமாவிற்குள்ளே நடத்துவது தான் அதன் வெற்றி. மேஜிக் போலத்தான். மேஜிக்கில் இந்த வஸ்துவை நான் எப்படி வரவழைத்தேன் என உங்களுக்கு தெரிய கூடாது, தெரியாமல் இருந்தால்தான் அது மேஜிக். தெரிந்தால் மேஜிக்கில்லை. ஒரு கால கட்டத்தில் இதை செய்யும் கலைஞர்களின் பெயர்களை பெயர் பட்டியலில் போடாமல் இருப்பதும், அந்த கலை குறித்து வெளியே சொல்லாமல் இருப்பதுமாக சூழ்நிலை இருந்தது. பிறகு இது போன்ற உபகரணங்கள் அனைத்தும் உட்கொண்ட மாதிரி ஒரு சினிமா அமைப்பும், அப்படியான கதை வடிவமும் செய்யும் கலைஞர்கள் வந்தார்கள். இந்த சூழ்நிலைக்கு பின், பின்னால் வேலை பார்த்தவர்களின் பங்களிப்பு தான் சினிமாவின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது என்றும் நடிகர்களும் மற்றவர்களும் அல்ல என்பதும் தெரிய வந்தது. சமகாலத்தில் அப்படியான ஒரு இடம் இந்த கலைக்கு உண்டு, அதனால் தான் அகாடெமி விருது வழங்கும் விழாவில் ஸ்பெஷல் எஃப்க்கட் செய்தவர்கள் குறித்து முதலில் அறிவிப்பதும், மரியாதை செய்வதுமான ஒரு நிலை உருவானது. அப்படி ஒரு நிலைக்கு சமூகம் வளர்ந்திருக்கிறது.

கடந்த நூற்றாண்டில் அனிமேஷன் கலையை நன்றாக உள்வாங்கியிருந்தால் இன்னும் சிறந்த நிலையில் இருந்திருக்கலாம். எந்த மொழியையும் பேச தேவையில்லை, ஆனால் சக்தி வாய்ந்தது சினிமா. சினிமா பேசாத காலத்திலிருந்து இன்று வரை சாப்ளின் எப்படி நம்முடன் தொடர்பு கொள்கிறார் என்பதை கவனிக்க வேண்டும். டிஸ்னியின் பழைய அனிமேஷன் திரைப்படங்கள் இன்றும் 3 வயது குழந்தையிலிருந்து 93 வயதானவர்களின் கவனத்தை ஈர்க்கிறது. அவர்களால் தொடர்பு படுத்தி பார்க்க முடிகிறது. உலகிலுள்ள அனைவராலும் தொடர்பு படுத்திக்கொள்ள முடிகிறது. இது அனிமேஷன் கலையின் மிக முக்கியமான ஒரு சக்தி என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ஒரு காலகட்டத்தில் அனிமேஷன் கலையை அறிந்துக்கொள்வதில் பல இடறல்கள் இருந்தது. வாழ்வையே அர்ப்பணிக்க வேண்டும். டிஸ்னி போன்ற நிறுவனங்கள் ஈடுபட்டிருந்த க்ளாசிக் அனிமேஷன் தான் முக்கியமான ஒன்றாக இருந்தது. வாழ்க்கையையே Realistic`ஆக செய்வது டிஸ்னியின் பாணியாக இருந்தது. நாய் எப்படி நடக்கும், எப்படி செயல்படும், பறவை எப்படி பறக்கும் என அப்படியே அனிமேட் செய்தார்கள். வாழ்க்கையை போலவே வரைந்து காட்டுவது போலான சக்தியை டிஸ்னி கொண்டிருந்தது. அனிமேஷனை ஒரு பெரிய நிறுவனமாக உலகம் முழவதும் கொண்டு சென்றதில் டிஸ்னிக்கு பெரிய பங்கு உண்டு. இதே காலகட்டத்தில் அதாவது 40,50களுக்கு பிறகு ஐரோப்பாவிலும் கம்யூனிஸ்ட் நாடுகளில் இருந்தும் அனிமேஷன் கலைஞர்கள் வந்தனர். செக்கஸ்லோவாக்கியா, யுகஸ்லோவியா, ரஷ்யா மற்றும் ப்ராண்ஸ் நாடுகளும் இதில் அடங்கும். பல நாடுகளிலிருந்து வந்த அனிமேட்டர்ஸ், பிறகு அனிமேஷனில் காமிக் புத்தக ஓவியரின் பங்களிப்பு , அனிமேஷனில் க்ராபிக் டிஸைனரின் பங்களிப்பு என 70`க்கு பின் ஒரு பெரும் வளர்ச்சி இருந்தது. டிஸ்னியில் இருந்து வெளியேறியவர்கள், பழைய கால ஓவிய நுட்பத்திலிருந்து விலகி நவீன ஓவியத்தின் தாகத்தினூடே படம் வரைய தொடங்கினர். டிஸ்னியோடு நடந்த போராட்டத்திற்கு பிறகு வெளியே வந்தவர்கள் அனிமேஷனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றார்கள். அனிமேஷன்களை எளிமையாக்கினார்கள். நவீன ஓவியத்திற்கு இணையான வடிவத்திலேயே அனிமேஷன் செய்தனர். குறைந்த அசைவுகளோடு இருந்தாலும் போதும், ஆனால் மக்கள் எளிமையாக தொடர்பு படுத்திக்கொள்ளும் படி பார்த்துக்கொண்டார்கள். அனிமேஷன் கலை, நல்ல வளர்ச்சி அடைந்திருந்தது. கம்யூட்டரின் பயன்பாட்டிற்கு பின் அனிமேஷனின் பெரும் பகுதி மக்களின் அருகாமைக்கு சென்றுவிட்டது. உலகளவில் சினிமா மொழிகளை கடந்தது, எந்த மொழியும் பேச வேண்டிய அவசியம் கிடையாது. வழக்கத்திலிருக்கும் பேசும் மொழியாக இல்லாமல் காண்பியல் மொழி மூலமாகவே மக்களுடன் தொடர்பு கொள்வதற்கானா சக்தியை கொண்டது தான் சினிமா.

பல கலைஞர்கள் சேர்ந்து ஒரு சினிமாவை உருவாக்கும் விதம் தான் பொதுவாக இருந்த ஒன்று. டிஸ்னி , 600 பேர், 4 ஆண்டுகள் வேலை பார்த்து ஒரு அனிமேஷன் சினிமாவை உருவாக்கும் இடத்திற்கு கொண்டு வந்தது. 80,90`களுக்கு பிறகு கணினி வந்தது, அதன் பின் நல்ல மாற்றம் ஏற்ப்பட்டது. தனி நபர் ஒருவரே 5 நிமிட சினமாவை சிறந்த விதத்தில் எடுத்துவிடலாம். தனியாக ஒருவர் செய்வதற்கான எல்லா வாய்ப்புகளையும் தரவுகளையும் கணினி கொண்டு வந்தது. 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெரிய போர் நடந்தது, கேமராவா கணினியா ? இந்த ஒட்டுமொத்த பயணத்தில் நான் கூடவே பயணித்திருக்கிறேன். சினிமா கேமராவிற்கும் கணினிக்கும் சண்டை நடந்தது.

ஜார்ஜ் லூக்காஸ் மற்றும் ILM நிறுவனத்தின் ஸ்டார் வார்ஸ் 1977 ஆம் ஆண்டு வெளியானது. ஓவியக் கல்லூரி முடித்தவுடன் அவர்களது செயல்பாடுகளையும், அதில் பங்களித்த கலைஞர்களையும் தொடர்ந்து கவனித்து வந்தேன். அவர்களை பற்றி படிப்பது, எழுதுவதென தொடர்ந்து அவர்களது செயல்பாடுகளை பார்பதன் மூலமாக 18 ஆண்டுகள் முன்பே வெளிச்சம் தெரிந்தது. ஆகையால் தான் தென்னிந்தியாவில் ஓவியர்களில் யாரும் யோசிக்காத காலக்கட்டத்திலேயே நான் கணினியை நோக்கி பயணித்தேன். ஒரு சில கட்டுரைகள் எனக்கு கணினி குறித்து பெரிய வெளிச்சத்தை அளித்தது. சிறு வயதிலிருந்து அனிமேஷன் மீது ஒரு Passion மற்றும் ஆசை இருந்தது. அனிமேஷன் செய்து பார்க்க வேண்டும் என்ற இடத்துக்கு வந்து விட்டேன். வாழ்க்கையில் வசதியாக இருந்திருக்க கூடும். அரசு நிறுவனமான சென்னை நெசவாளர் கூடத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். அக்காலத்திலேயே நாற்பதாயிரம் ரூபாய் ஊதியம். அந்த வேலையை தூக்கி எறிந்துவிட்டு அனிமேஷன் கலைக்கு வந்துவிட்டேன். வாழ்க்கை உத்திரவாதாம் என்பதை துணிந்து தூக்கி எறிந்துவிட்டு அனிமேஷன் துறைக்குள் வந்தேன்.
என்னுடைய நண்பர்களின் திரைப்படங்களுக்கு பெயர் பட்டியல்(டைட்டில்) செய்து கொடுத்தேன். நான் கற்றுக்கொள்ள என்னென்ன இருக்கிறதோ, அவற்றையெல்லாம் அவர்களுக்கு டைட்டிலாக செய்து கொடுத்தேன். நான் செய்து பார்க்க வேண்டும் என எதையெல்லாம் நினைத்தேனோ, எதையெல்லாம் பயிற்சி செய்யவேண்டும் என நினைத்தேனோ அதையெல்லாம் ஒருங்கினைத்து செய்து கொடுத்தேன். இதற்காக பணம் பெரிதாக எதிர்ப் பார்க்கவில்லை. அக்கால கட்டத்தில் சிலர் பணம் கொடுக்கவுமில்லை. பிரசாத் ஸ்டூடியோவில் வெர்ட்டிகல் கேமரா இருக்கும், டைட்டிலுக்கு மட்டும் பயன்படுத்தப்படும். நானும் சில நண்பர்களும் பயன்படுத்தி எங்கள் வேலையை செய்வோம்.

ஓவியக் கல்லூரியின் என் ஜூனியராக இருந்தவர்களில், நான் பேசும் அதே அனிமேஷன் குறித்து ஆர்வமாக உள்ளவர்களை என்னுடன் சேர்த்துக் கொண்டேன். இன்று இருக்கும் அனிமேட்டர்ஸ் சிலர் நான் பயிற்சி கொடுத்தவர்கள் மற்றும் எனக்கு பின் வந்தவர்களிடம் பயிற்சி பெற்றவர்களாவார்கள். போட்டோகிராபிக்கு செலவழிக்க வேண்டும். அறிந்துக்கொள்ள செலவழிக்க வேண்டும். ஓவியமும் அது போல தான். உபகரணங்களுக்கு செலவு செய்ய வேண்டும், பயிற்சி எடுக்க வேண்டும். முதலில் செலவழிக்க வேண்டும். இசை கற்றுக்கொள்ள நேரம் கொடுக்க வேண்டும், வயலினோ அல்லது வீனையோ வாங்கி நேரம் செலவழித்தால் போதும். ஆனால் ஓவியம் அப்படி கிடையாது. போட்டோகிராபி ஒரு கால கட்டத்தில் அப்படி கிடையாது. நீங்கள் பரிட்ச்சார்த்தமாக தெரிந்துக்கொள்ள ஃபில்முக்கு செலவழிக்க வேண்டும். நேரத்தை செலவழிக்க வேண்டும். வாழ்க்கையே அர்பணிக்க வேண்டும். அது போல் தான் ஓவியமும், குறிப்பிட்ட ஓவியத்தை வரைவதற்கு உங்களுக்கு ஒரு பாண்டித்தியம் தேவை. உள்ளதை உள்ளபடி ரியலிஸ்டிக்கா பார்ப்பது போலவே வரைவதற்கு ஒரு பாண்டித்தியம் வேண்டும். பத்து வருடங்கள் கடுமையான பயிற்சி வேண்டும். ஒவ்வொரு நாளும் 20 மணிநேரமும் அதற்கும் மேலும் பயிற்சி தேவை.

சிறிய அனிமேஷன் செய்ய வேண்டுமென்றால், குறைந்தது மூன்று மாதம் நான் கடுமையாக வேலை பார்த்தாக வேண்டும். அரசு வேலையை விட்டுவிட்டு அல்லது இதற்காக மூன்று மாதங்கள் ஒதுக்கவேண்டும். வேறு யாராவது உதவுவதற்கு உத்திரவாதம் அளிக்க வேண்டும். நான் செலவழிக்க வேண்டுமென்றால் என்னிடம் அதற்கான வசதி இருந்திருக்க வேண்டும். என்னுடைய வாழ்க்கை சிறப்பாக இருந்திருக்க வேண்டும். வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு இதுவும் ஒரு தடையாக இருந்தது. அரசு வேலை செய்துகொண்டே இரவெல்லாம் அனிமேஷன் பணியை செய்தேன். விடுப்பு எடுத்தும் வேலை பார்த்தேன். முன்று மாதம் வேலைக்கு பின் வெர்ட்டிகல் கேமராவை நாள் வாடகைக்கு எடுக்க வேண்டும். ஃப்லிமுக்கு செலவழிக்க வேண்டும். பின்பு அதை டெவலப் செய்ய வேண்டும். டெவலப் செய்த பின் சிறிய அல்லது பெரிய திரையரங்குகளில் ப்ரொஜகட் செய்து பார்க்க வேண்டும். பின் அதை எடிட் செய்ய வேண்டும். ஒலியை சேர்க்க வேண்டும். இன்னும் பல இருந்தது. இரண்டு அல்ல மூன்று நிமிடங்கள் உருவாக்குவதற்கும் பெரிய பண பின்புலம் தேவையிருந்தது. பணம் செலவு செய்ய வேண்டியிருந்தது. அப்படியான நிலைமை தான் இருந்தது. பாராம்பரிய அனிமேஷன் வழியாக நான் அப்படி தான் சென்றேன். அந்த காலகட்டத்தில், கணினி பெரிய வசதியை கொடுக்கிறது என தெரிந்தவுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

என் நண்பரும் எழுத்தாளர் கு.அழகிரிசாமி அவர்களின் மகனுமான சாரங்கன் மற்றும் என் தம்பி திலக், இருவரும் விளம்பரப் படம் எடுக்க முடிவெடுத்திருந்தனர். இருவரும் திரைப்படக் கல்லூரி மாணவர்கள். அனைத்து விளம்பரம் படங்களுக்கும் அனிமேஷனுக்காக சென்னையிலிருந்து மும்பாய்க்கு செல்லும், அங்கிருக்கும் ஏஜென்ஸிக்கள் மூலம் அனிமேஷன் செய்து பெறப்படும். நாம் செய்வோம் என கூறியவுடன், நீங்கள் செய்வதாக இருந்தால் நான் வாங்கிக்கொள்கிறேன் என்றார் சாரங்கன். கணினி ஆரம்ப கட்டத்தில் இருந்த காலம் அது. ஒரு வாரம் கணினியில் வரைவதற்கு பயன்படுத்தி பார்த்தேன். ஸாப்டேவேரின் அனைத்து செயல்பாடுகளும் எனக்கு நன்றாக புரிந்து விட்டது. அதற்கு தகுந்த படி அனிமேஷனை பிரித்து பிரித்து செய்தேன். அப்போது வீடியோ கேமராதான் பயன்பாட்டிலிருந்தது. Capture Corder கிடையாது, Flat bit scannerகிடையாது. இப்படியான சூழ்நிலையில் கேமரா பயன்படுத்தி அதை உள்வாங்கி அனிமேட் செய்தேன். அந்த விளம்பரம் அருமையாக வெற்றிகரமாக வந்தது. அந்த விளம்பர படத்தின் மூலமாக எனக்கு கிடைத்த பணத்திலேயே நான் முதல் கணினி வாங்கினேன். 22 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது இது.கணினி வாங்குவதற்கு நான்கு ஆண்டுகள் முன்பாகவே, கணினி மற்றும் அனிமேஷன் சம்பந்தமான குறிப்பாக அமிகோ என்ற கணினி சம்பந்தமான பத்திரிக்கைகளை வாங்கி படித்து கனவு கண்டு கொண்டிருந்தேன். கணினி இல்லாமலே கனவு கண்டு கொண்டிருந்த நான், பிறகு மெல்ல மெல்ல அதனுள் பயணம் செய்ய ஆரம்பித்தேன்.

கணினியில் பணி செய்ய உதவிய முதல் நிறுவனத்தின் நபர், எனக்கு அதன் பயன்பாட்டை சரியாக சொல்லி தரவில்லை. சில பகுதிகளை அறை குறையாக காண்பித்து விளக்கினார், பின் உடனே மானிடரை அணைத்து வைத்து விடுவார். நீங்க செய்யுங்க, நான் பிறகு சொல்கிறேன், நீங்கள் சொல்வதெல்லாம் செய்ய இயலாதென, ஸ்கிரினை பார்க்க கூட அனுமதிக்காத முறையில் நடந்து கொண்டார். ஏனென்றால் அவர் கலைஞர் அல்ல, திடீரென ஒரு இயந்திரம் குறித்து அறிவு கிடைத்திருந்தது. அவ்வளவுதான். அப்போது அந்த நபரிடம் நான் சொன்னேன், இப்படியெல்லாம் செய்யாதீர்கள், காலம் உங்களை வெளியே தள்ளிவிடும். இரண்டு மாதம் அந்த கணினி முன் அமர்ந்தால் நான் உங்களை வெளியே தள்ளிவிடுவேன். ஆனால் உங்களால் எப்போதும் பிறகு இங்கு அமர முடியாது. கணினி அனுதினம் வளர்ந்துக் கொண்டே போகும், அதை நீங்கள் அடக்கியெல்லாம் வைக்க முடியாது. அதை உனதாக்கி கொள்ள முடியாது. அறிவை உனதாக்கி கொள்ளலாம் ஆனால் அதுவும் மற்றவர்களுக்கு பகிர்ந்தால் தான் சிறப்பு. நாளையே உன் அடுத்த வீட்டில் கணினியுடன் வேறொருவன் இதை செய்துவிடுவான். இப்படியெல்லாம் இருக்காதே என்று சொன்னபின்பு அந்த நபருக்கு புரிந்தது.

அனிமேஷனில் பெரிய பணம் இருக்கிறது என தெரிந்து, பேராசையில் தெளிவில்லாமல் முதலிடு செய்ய சிலர் ஆரம்பித்தனர். இயந்திரங்களை வாங்கி குவித்தனர். கலைஞர்கள் இல்லை. பெரிய திரைப்படமெடுக்க கலைஞர்களில்லாமல் இயந்திரங்களை வைத்து எப்படி தரமாக எடுக்க இயலும். அதனால் பெரிய பணம் இழந்தவர்களையும் நான் அறிவேன். உலகளவில் தேவை இருக்கு, கணினி வந்தவுடன் பெரிய வாய்ப்பும் சந்தையும் இருக்கு என தெரிந்தவுடன், பலர் 150-200 ஆள்களை சேர்த்து நிறுவனங்களை தொடங்கினர். அவர்களுக்கு அனிமேஷன் மீது passion கிடையாது. பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன், அனிமேஷன் மூலம் உலக நாடுகளின் தேவைகளை குறைந்த ஊதியத்தில் பூர்த்தி செய்வதற்கான வாய்ப்பு இங்கு இருக்கு என்று நினைத்தனர். கலை மீது ஆர்வம் இல்லை, விரைவில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் தான் இதில் பல நிறுவனங்கள் நுழைந்தது. அனிமேஷன் மேல் passion இல்லை. இது போன்ற நிறுவனங்கள் பல காணாமல் போய்விட்டன. என்ன திறமை தேவை என்று கூட தெரியாமல், export கம்பெனியில் embroidery வேலை செய்யும் பெண்களை அழைத்து வந்து அனிமேஷன் நிறுவனங்கள் நடத்தியவர்களை பார்த்திருக்கிறேன்.

100 ஆண்டுகளை கடந்தும் டிஸ்னி, கலைஞர்களுக்கான சிறந்த சூழலை தொடர்ந்து உருவாக்கி கொண்டிருக்கிறது. பெண்டா ஃபோர் போன்ற பெரிய நிறுவனத்திற்கு சென்றிருக்கேன். நான், இளையராஜா, கேயார் மற்றும் லெனின் சேர்ந்து தான் சென்றோம். அந்நிறுவனத்திடம், அனிமேஷன் துறையில் நல்ல சூழல் கொண்டுவருவது குறித்து எந்த வித அர்ப்பணிப்புமில்லை. ஒரு இரசிகன் பேசுவது போல் பேசினர். ஆழம் இல்லாத ஒரு சூழ்நிலையை தான் அங்கு கண்டேன். பெரிய வாய்ப்புகளை வைத்துக்கொண்டு, கலைஞர்களுக்கான ஒரு சூழ்நிலையை உருவாக்க முயலவில்லை. இறுதியில் ஊழியர்கள் பலருக்கு ஊதியம் கொடுக்க இயலாமல் வெளியேறிய நிறுவனங்களையும் தமிழ்நாட்டில் கண்டேன். பெரிய ஆசையை உண்டாக்கி, இறுதியில் நிறுவனமே இல்லாமல் போய்விட்டது. திறைமையுள்ளவர்களுக்கு பிறகு ஒரு நம்பிக்கை கிடைத்தது. தங்களை சிரம்படுத்திக்கொள்ள இங்கிருந்து வெளியேறி பெங்களூர், பம்பாய் மற்றும் ஹைதராபாத் போன்ற நகரங்களுக்கு குடிபெயர்ந்தனர். நானறிந்த நல்ல மாணவர்கள் இங்கிருந்து வெளியேறி விட்டனர். நல்ல வாய்ப்புகள் தமிழ்நாட்டுக்குள் இல்லாததால் அந்த கலைஞர்கள் அங்கேயே இருந்துவிட்டனர். மீண்டும் தமிழகத்திற்கு வரவில்லை. தமிழ் பேசும் நல்ல கலைஞர்கள் வெளி மாநிலத்தில் வாழும் நிற்பந்தம் ஏற்ப்பட்டது. இந்த நிலைமைக்கு காரணம் ஏமாற்று நிறுவனங்கள் தான். நம்பிக்கையை ஏற்படுத்தி பின் ஒரு நாளில் அறிவிக்காமல் சென்றுவிட்டனர். இதை சார்ந்தே ஒரு கூட்டம் இருந்தது, பல பயிற்சி நிறுவனங்கள் உருவாகின. எந்தவொரு பயிற்சி நிலையத்திலும் அனிமேஷன் கலை குறித்து ஆழமாக தெரிந்தவர் ஒருவரும் இல்லை. இன்னும் 10 ஆண்டுகளில், 5 ஆண்டுகளில், 2 ஆண்டுகளில் இன்னும் 2 இலட்சம் 5 இலட்சம் வேலை வாய்ப்புகள் என பொய்யான விளம்பரங்கள் கொடுத்து பல நிறுவனங்கள் பலரின் வாழ்கையை சீரழித்துவிட்டது. பயிற்சி நிலையத்திற்கு ஒரு மாணவன் படிக்கச் சென்றால், அவனுக்கு ஆசிரியராக இருப்பது அங்கு ஆறு மாதம் முன்பு படித்த மாணவன் தான். தற்போது வந்திருப்பவனைவிட அவனக்கு ஒன்றுமே தெரியாது. அவனுக்கு சொல்லி கொடுக்க யாருமே இருந்திருக்க மாட்டர்கள். மக்களிடம் தெளிவின்மை இருந்தது, இதை பயன்படுத்தி பல நிறுவனங்கள் பணம் பார்த்தது. இப்போது சூழல் ஓரளவு பரவாயில்லை.

அன்றைய காலகட்டத்தில் ஓவிய கல்லூரி போன்ற கல்லூரிகளிலும் கணினி குறித்து சரியான பார்வையில்லை. கையால் தினமும் ஓவியம் வரைந்துக் கொண்டே இருக்க வேண்டும். பயிற்சி மிகவும் முக்கியம், கணினி வந்துவிட்டால் நன்றாக வரையா மாட்டாய், கணினியை பயன்படுத்தினால் நல்ல கலைஞன் இல்லை என்பது போன்ற கருத்துக்கள் இருந்து வந்தது. அறியாமை இருந்தது. சில ஆசிரியர்கள் அப்படியிருந்தனர். மாணவர்களை ஊக்குப்பபடுத்தவில்லை. நான் இன்று வரை கையால் தான் வரைகிறேன். என்னை போல் கணினியை பயன்படுத்த வேண்டும் என சக கலைஞர்கள் யாரும் முன்வரவில்லை. தீவிர ஓவிய கண்காட்சிகளிலும் இயங்கியிருக்கிறேன். பத்திரிக்கைக்குள்ளும் நுழைந்தேன். அங்கும் வரைய ஆரம்பித்தேன். பத்திரிக்கைகளுக்கு வரைவது தவறு என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள் பலர். நெசவு கூடத்தில் டெக்ஸ்டைல் டிஸைனராக இருந்தேன். நன்கு வரைந்து கொண்டிருந்தேன். அப்படியிருப்பவன் மனிதர்களை வரைவது என்ன தவறு. பத்திரிக்கைக்கு வரைவதாலேயே நீ காணாமல் போய்விடுவாய் என்று கூறினார்கள். அப்படி கூறியவர்கள் இன்று இயங்காமல் இருக்கிறார்கள். ஓவியம்,அனிமேஷன், பத்திரிக்கை என என்னை வளர்த்துக்கொண்டே இருந்தேன்.

கணினியில்லாமல் இயங்க இயலுமா, இயலாது. ஒரு காலகட்டத்தில் கையால் ஆடை தைப்பது மிக பெரிய கலை. ஒரு மணி நேரத்தில் பெரிய கவுன் அல்லது வேறு ஆடையை யார் சிறப்பாக தைக்கிறார்கள் என பார்பதற்காக போட்டிகள் நடத்துவார்கள். வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படும். அப்படி இருந்த காலகட்டதில், தையல் இயந்திரந்தை கண்டுபிடித்தவனின் வீட்டிற்குள் நுழைந்து அந்த இயந்திரத்தை உடைத்தனர். தங்கள் வேலையை கெடுக்கிறான் என்று இவனை தூற்றினார்கள். ஆனால் கடந்த காலத்தில், வாழ்வாதாரமே இல்லாமல், ஆண் துணை இல்லாமல் இருந்த பல கைப்பெண்களை தையல் இயந்திரம் தான் காப்பாற்றியது. காலத்திற்க்கேற்ப நம்மை தயார் படுத்திக்கொள்ள வேண்டும். தன்னை காலத்திற்கேற்ப மாற்ற இயலாதவனுக்கு இவை தவறாக தெரியும். இப்படி இயங்காமல் இருப்பவர்கள் இதெல்லாம் கலையே இல்லை என வாதிடுவார்கள். பயன்பாட்டிற்கு வந்தவுடன் அதை பயன்படுத்த நினைக்கமாட்டார்கள் சிலர். அப்படியல்ல, இப்படியல்ல என ஏதாவது சொல்லிக் கொண்டு திரிவார்கள். பெரிய கலைஞர்கள் அதை பயன்படுத்தி ஒரு தேர்ந்த படைப்பை செய்து, அதை உலகம் ஏற்றுக்கொண்டடால், பின்னர் அதற்குள் வருவார்கள். பத்திரிக்கைக்கு நான் வரைவதை பார்த்து என்னை ஏளனம் செய்தவர்களும் உண்டு. பத்திரிக்கைகளில் வரைவதன் மூலம் ஐந்தாண்டுகளுக்குள் பலர் அறியும்படி நல்ல அறிமுகம் கிடைத்தது. நாம் இதை செய்ய தவறவிட்டோமே என பிறகு அவர்கள் வருந்தினார்கள். அதற்கு பின் அவர்களும் பத்திரிக்கை துறைக்குள் நுழைந்தார்கள். இவை அனைத்திற்கும் ஒரு பெரிய அர்ப்பணிப்பு தேவை.

பத்திரிக்கை, அனிமேஷன் என புதிய தளங்களுக்கு செல்வதன் மூலம், அதில் இருக்கும் சாத்தியகூறுகளையெல்லாம் ஆராய்ந்து செய்து பார்க்க ஞானம் இருக்கும். அல்லது அதில் செய்யமுடியாதவையை விட்டுவிட்டு, என்ன செய்ய முடியும் என பார்க்க வேண்டும். இப்படியான ஒளிவு மறைவற்ற தன்மையில்லாதவர்கள், நம்பிக்கை இல்லாதவர்கள் பத்திரிக்கைகளில் வரைந்தார்கள். எதுவும் சரியாக செய்யவில்லை. பின்பு காணாமல் போய்விட்டார்கள். இங்கு வேறொரு தவறான பார்வையும் உண்டு. ஜனரஞ்சக கலையெல்லாம் தவறான கலை, பாராம்பரிய கலைதான் பெரிது என கூறிக்கொண்டு இருந்தனர். ஆனால் அப்படி கிடையாது. காமிக் புத்தகம், ஜனரஞ்சக கலை தான். அதற்குள் இருக்கும் ஒழுங்கும் நேர்த்தியும் தங்களை நவீன ஓவியர்கள் என சொல்லிக்கொள்ளும் பலரிடம் கிடையாது. தகுதியில்லாதவர்கள் பலர் இருக்கிறார்கள். இன்னொருத்தர் பூசினால் அதை பார்த்து பூசி வைக்க நிறைய பேர் இங்குள்ளார்கள். இப்படியான நவீன ஓவியர்களும் இருக்கிறார்கள். அது போலவே பத்திரிக்கை துறை ஓவியர்கள், நவீன ஓவியத்தை குறை கூறுவார்கள். நவீன ஓவியமொன்றும் பெரியது இல்லை என கூறிக்கொண்டு, அதற்குள் செல்லாமலே சுகம் கண்டுக்கொண்டு விடுவார்கள். தங்களை அப்டேட் செய்து கொள்வதில்லை. பத்திரிக்கைகுளிருந்த பெரிய ஓவியர்களே நவீன ஒவியர்களை தவறென சொன்னவர்களும் இருக்கிறார்கள். ஆனால் அப்படியில்லை. ஆக்கப்பூர்வமான சிந்தனை தேவை, அதேம் நேரம் முன்னேறி செல்ல வேண்டும். இந்த கலை வடிவத்திலிருக்கும் அனைத்து வாய்ப்புகளையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். சினிமா அந்த இடத்திற்கு தான் கொண்டு சென்றது. கணினியில் அனிமேட் செய்வதை, ஐபேட்`இல் தற்போது சில சின்ன எளிய ஸாப்ட்வேர்கள் பயன்படுத்தி கையை நகர்த்தி நகர்த்தியே அனிமேட் செய்ய முடிகிறது. இன்னும் இரண்டே ஆண்டுகளில், ஐபேட்`இல் அனிமேட்டர் போன்ற சாத்திய கூறுகள் கொண்டு அசைவு கொடுப்பதற்கான ஸாப்ட்வேர் சாதாரன மக்களை வந்தடையும்.

திறமை மிகுந்த சிறந்த கலைஞனுக்கு போட்டி கூடிக்கொண்டே தான் போகும். என் வேலையை அவன் எடுத்துக்கொள்கிறான், அதனால் எனக்கு வேலை சென்றுவிடும் என நினைக்க கூடாது. வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. 3டி’இல் இப்போது ஒரு ஸாப்ட்வேர் இருக்கிறது, கணினியின் முன்பிருக்கும் 2 அடி இடத்தை 3டி சூழலாக மாற்றி விடுகிறது ஒரு கருவி. கணினியில் ஒரு சிற்பம் செய்ய வேண்டுமெனில், கையை தேவைக்கேற்றவாரு அசைத்தாலே போதும், கணினியின் ஸ்கிரின்க்குள் இருக்கும் சிற்பம் நெளியும். அதன் மூக்கு பகுதியை நான் கையாலேயே செய்துவிட முடியும். அப்படி ஒரு இடத்தில் இருக்கிறோம். திறமை வாய்ந்த கலைஞர்களுக்கு வாய்ப்புகள் அதிகமாகி கொண்டு தான் இருக்கிறதேயொழிய குறையவில்லை. தொழில்நுட்பங்கள் வளர்வதன் மூலம், நம்மிடம் இருக்கும் உழைப்பை நவீன சாதனம் குறைத்துவிடுகிறது. உடல் உழைப்பை குறைத்து இன்னும் சுதந்திரமாக சிந்தித்து கற்பனை உலகத்தில் நம்மை பிரவேசிக்க செய்யும். இப்படி பார்ப்பது தான் சரியான பார்வையாகும். என் வேலையை எடுத்துக்கொள்கிறதே என பார்க்க கூடாது. இது பற்றியெல்லாம் சிந்தனையில்லாமல் பேசிக்கொண்டு மட்டும் இருப்பவனை குறித்து கவலை கொள்ள தேவையில்லை.
தமிழகத்தில் பல கல்லூரிகளில் விஷ்வல் கம்யூனிகேஷன் துறை உள்ளது. அனைத்து கல்லூரியிலும் பாடதிட்டம் சரியில்லை. காமிக் புத்தகத்தின் மதிப்பு ஒருவருக்கும் தெரிவதில்லை. சில பெரிய கல்லூரிகளுக்கு பாடத்திட்டத்தை அமைத்து கொடுத்திருக்கிறேன். ஆனால் அவர்கள் அதை பின்பற்றவில்லை. நிர்வாகத்திற்கும் தொலை நோக்கு பார்வையில்லை, ஆசிரியர்களுக்கும் தொலை நோக்கு பார்வையில்லை. இனி வரும் நாட்களில், எழுத்தாளர்கள் வேலையையும் காம்கிக் புத்தகம் எடுத்தக் கொள்ளப்போகின்றது. இதை கருத்தில் கொள்ளுங்கள், மிக முக்கியமானது. ஒரு விஷயத்தை காட்சிப்படுத்துவதற்கு எழுத்தாளனின் எழுத்து பயன்படுக்கிறது. காம்கிஸ் புத்தகம் மூலம் 90% காட்சிப் படுத்திவிட முடியுமென்றால்...

நிர்வாகங்கள் போல் பயிற்சி நிலையங்களுக்கும் தொலை நோக்கு பார்வையில்லை. ஏற்கனவே நடத்திவிட்டு பாதியில் விட்டுவிட்டு ஓடிபோன நிறுவனங்கள் மற்றும் வேறு பல நிறுவனங்கள், தொலை நோக்கு பார்வை இல்லாமல் இருந்தனர். வரும்வரை லாபம் என்று பொய் வாக்குறுதிகளை கொடுத்து பயிற்சி நிலையங்கள் பணம் பார்த்தது. பின்பு நிலைமை மாறியது. இவர்கள் அல்லாது மற்ற சிலருக்கும் அனிமேஷன் கலை அறிமுகமானது. தேவை தமிழகத்தில் குறைவாக இருந்தது. ஆனால் ஆட்கள் பலர் இருந்தனர். அனைவருக்கும் வாய்ப்பு கிடைப்பது கடினமாக இருந்தது. சில நிறுவனங்களில் தலைமை பொறுப்பில் தகுதியில்லாதவர்கள் அமர்ந்து கலைஞர்களை வேலை வாங்கும் நிலைமை இருந்தது. கலை குறித்து எந்த அறிவும் இல்லாதவர்கள் தலைமை பொறுப்பில் அமர்ந்திருந்தனர். கலைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இந்நிறுவனங்கள் இயங்கியது. தகுதியுள்ள கலைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் தனக்கு ஆபத்து என அஞ்சினார்கள். இது போன்ற போராட்டங்கள் அனைத்தையும் கடந்து தான் கலைஞர்கள் தங்களை நிலை நிறுத்த வேண்டும். கலைஞனாக தான் இருப்பேன், ஆக்கப்பூர்வமான பணிகளை தான் செய்வேன், எனக்கு நல்ல ஊதியம் வேண்டும்; இப்படி இருப்பவர்கள் வேறு இடத்துக்கு தான் செல்வார்கள். தமிழகத்தில் அனிமேஷன் கலைக்கான சூழல் மிகவும் குறைவாக இருந்ததால், கலைஞர்கள் வெளி மாநிலங்களுக்கு சென்றார்கள். இங்கு இருக்கும் பெரிய நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் இருப்பவருக்கும் ஒரு விசாலமான பார்வை இல்லை.தகுதியில்லாத அவன், தான் வாழவேண்டும் என்ற நோக்கத்துடனே தான் இருந்தான். தான் நிலைத்திருக்க மற்றவர்களை புறந்தள்ளிவிட்டு நிர்வாகத்திற்கு அடிமையாக இருந்து சில அற்ப வேலைகளை செய்தார்கள். நீண்ட காலத்திற்கு கலைஞனாக இருக்க வேண்டுமென்றால், சில நிறுவனங்களை சார்ந்து இருக்க வேண்டிய சூழல் தான் இருந்தது. அதனால் பலர் வேறு மாநிலங்களுக்கு செல்ல தொடங்கினர். நல்ல கலைஞர்கள் சிலர் ஹைதராபாத்துக்கு சென்று விட்டனர். சில கலைஞர்கள் பொறுமை காத்து இங்கேயே இருந்தனர். அனைத்து இடங்களிலும் இந்த சூழல் இருக்கும், ஆனால் தமிழகத்தின் சூழல் மிக மோசமாக இருந்தது. இங்கு ஒரு வெற்றிடம் இருந்தது போல தோற்றம் உருவாகியது. அனைவருக்கு வேலை உண்டு எனபது போல் இருந்தது, ஆனால் அப்படி இல்லாமல் போயிற்று. அதனால் தான் பயிற்சி நிலையங்கள் சரியான வளர்ச்சி அடையவில்லை. பயிற்சி நிலையங்கள் தங்களை தயார் படுத்திக்கொள்ள எந்த முயற்சியும் எடுக்கவில்லை.பயிற்சி நிலையங்களில் இருந்து வெளிவரும் மாணவர்கள், மொத்த அனிமேஷனையும் கற்றுக்கொண்டது போல் ஒரு குறுந்தகுடை வைத்துக்கொண்டு திரிகிறார்கள். எனக்கு எல்லாம் தெரியும், 3டி தெரியும் என சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். மாணவர்கள் மேல் நம்பிக்கை வைத்து அவர்களின் போக்கிலே விடும் பெற்றோருகளுக்கு தங்கள் பிள்ளைகள் இப்படி இருப்பதை கண்டு நம்பிக்கை இழக்கின்றனர். அனிமேஷன் படிப்புக்கு நல்ல எதிர்க்காலம் உண்டா என சில பெற்றோர் என்னிடமும் கேட்டதுண்டு. சினிமாவை நம்பி இருக்க வேண்டிய கட்டாயம் இப்போது இல்லை. e-learning, மற்றும் இன்னும் பல வழிகள் மலர்ந்து கொண்டே இருக்கிறது.

நானும் தமிழ் சினிமாவில் வேலை செய்திருக்கிறேன். ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் பெரிய இயக்குனர்கள் க்ராபிக்ஸ்-அனிமேஷன் பயன்படுத்த தொடங்கியிருந்தனர். இயக்குனர்கள் அனிமேஷன் குறித்து சரியான புரிதல் இல்லாமல் அறியாமையில் இருந்து வந்தனர். அந்த அறியாமையை பயன்படுத்தி அவர்களை ஏமாற்றி அதிக பணம் பறித்துக் கொண்டிருந்தது ஒரு கூட்டம். மார்க்கெட்டிங் என்று சொல்லி இடை தரகர்கள் பிறகு வந்தார்கள். இவர்கள், உண்மையான கலைஞர்களை இருட்டில் வைத்தனர். இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரிடம் பேரம் பேச ஆரம்பித்தனர். தயாரிப்பாளரிடம் பேசாமல், இயக்குனர் அல்லது ஸ்டண்ட் மாஸ்டரிடம் கமிஷன் வாங்கி திண்ற ஒரு கூட்டமும் இருந்தது. இவர்களால் தான் இந்த அனிமேஷன் கலை வளரவில்லை.சில இயக்குனர்கள் மற்றும் கதாநாயகர்களுக்கு இது குறித்து எதுவும் தெரியாது. இடைதரகர்கள், நீங்க கொடுங்க சார் நான் செய்து தரேன், உங்களுக்கு 5 லட்சம் தரேன் என இடையில் சென்று பேசினார்கள். இது போன்ற வேலைகள் நடந்துக்கொண்டு இருந்தது. நல்ல கலைஞர்கள், தகுதியுடைய இளம் கலைஞர்கள் நம்பிக்கையுடன் வளர்ந்து நல்ல படைப்புகள் மூலம் மேலே வருவதற்கு எப்போதும் தடை இருந்தது. இப்படி பேசிய சில தரகர்களே தேசிய விருது வாங்கினார்கள். இது தான் வரலாறு. எனக்கே சிலரை தெரியும். கணினியின் முன் அமர்ந்தது கூட கிடையாது. அனிமேஷன் குறித்து அவனுக்கு எதுவுமே தெரியாது. ஒரு ப்ரேமில் கூட வேலை பார்த்ததில்லை, ஆனால் தேசிய விருது வாங்கினார்கள். தங்களை Co-ordinator என சொல்லிக் கொண்டு இருந்தார்கள்.

ஸ்டண்ட மாஸ்டருக்கு அனிமேஷன் குறித்து என்ன தெரியும். அவருக்கும் EFXக்கும் என்ன சம்பந்தம். மற்ற அனைத்தையும் ஸ்டண்ட் மாஸ்டர் கையாள்வதை போல் இதையும் அவர் தான் கையாள்வார் என்று அவனை அனுகுகிறார்கள் கருங்காலி இடைதரகர்கள். தயாரிப்பு நிறுவனமும் இயக்குனரும் ஒன்றும் செய்ய இயலாது. ஐந்து நாட்களில் எல்லாம் செய்து கொண்டுக்க வேண்டுமென்று சொன்னால், அனிமேஷன் குறித்து ஏதும் தெரியாத இடைதரக்கர் மூலம் வரும் படைப்பு தவறானதாக தான் இருக்கும். அனிமேஷன் கலைகென்று ஒரு குறிப்பிட்ட நேரம் தேவை. அவர்களுக்கு அந்த நேரம் போதாது. அதனால் அந்த படைப்பு தவறானதாக தான் இருக்கும். இப்படி நிறைய நடந்திருக்க்கிறது. ஆழமில்லாத சில கதாநாயகர்களாலும் இந்த கலை சீரழிந்துவிட்டது. பெரிய கதாநாயகன், மக்கள் விரும்ப வேண்டுமென கூறி செயற்கையாக குட்டி கர்ணம் அடிப்பது போன்று காட்சி அமைத்தார்கள். 20 குட்டி கர்ணம் அடிப்பது போல் செய்து கொடுத்தார்கள். ஃபாண்டஸி காட்சிகளுக்காக நேர்மையற்ற ஆழமில்லாத காட்சிகளை தான், இது போன்ற அமைப்புகளால் கொடுக்க முடிந்தது.

கடந்த 20 ஆண்டுகளாக சூழல் மாறியிருக்கிறது. கலைஞர்களை அதிகமாக்குவதற்காக நானும் தொடர்ந்து அதற்கான வேலையை செய்துக்கொண்டிருக்கிறேன். கூட்டம் சேர்ப்பது போல் என்று கூட சொல்லிக்கொள்ளலாம். எனக்கு கலைஞர்கள் தேவையென்றால், சிறந்து விளங்கும் மாணவர்களை தத்தெடுத்துக்கொள்வேன். என் திரைப்படங்களில் இது போல் பலரை நான் சேர்த்திருக்கிறேன். பலருக்கு நான் சொல்லிக் கொடுத்துள்ளேன். இப்போது அது போல் அல்ல, தற்கால சூழல் வேறு மாதிரி உள்ளது. மென்பொருள்களின் தோற்றத்தினால் வாய்ப்புகள் அதிகமாகிவிட்டது. சினிமா முழுவதும் எதிர்ப்பார்தது போல டிஜிட்டலாக மாறியது. 5டி அல்லது 7டி கேமராவில் ஒரு திரைப்படத்தை எடுத்துவிடலாம். தேவி திரையரங்கிலும் அதை திரையிடலாம். 4k ரெஸலியுஷன் கேமரா 1 லட்சத்திற்க்குள் கிடைக்கிறது. 1.5 இன்ச் மற்றும் 2 இன்ச் உயர கேமராக்கள் வந்துவிட்டது. கேமராவையும் ஸ்டுடியோவையும் விட்டு விட்டு பெரிய கதாநாயகர்களை நம்பாமல், ஒரு சிறிய குழுவாக இயங்கும் வாய்ப்பு வந்துவிட்டது. மூன்று முதல் ஐந்து பேர் சேர்ந்து சிறந்த திரைப்படத்தை உருவாக்கலாம். ஆக்கப்பூர்வமாக சிந்திக்கும் திறன் கொண்ட நல்ல கலைஞர்கள் ஒரு சிறு குழுவாக இணைந்து பெரிய கதாநாயகருக்கு எதிராக சிறந்த படைப்பை உருவாக்கலாம். அப்படியொரு காலக்கட்டத்தில் நாம் இருக்கிறோம்.

அனிமேட்டராக கேமராமேனாக கலர் கரெக்ட்டராக மற்ற சினிமா துறைகளில் இருக்கும் இளம் கலைஞர்கள் ஐந்து பேர் சேர்ந்து, அருமையாக ஒரு கதை(கரு) வைத்துள்ளீர்கள் என்றால் யாரையும் நம்பாமல் சிறந்த படைப்பை கொடுக்கலாம். எந்தவொரு பயிற்சி நிலையங்களையும் நம்ப தேவையில்லை. உங்களுக்கு தேவையானது இணையத்தில் நிறைய இருக்கு. டூடோரியல் மற்றும் நூல்களை படித்து, யாருடைய தயவுமில்லாமல், சுயமாக யாரும் சொல்லாத அற்புத விஷயங்களை சொல்வதற்கான சாத்தியங்கள் உங்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கிறது. நீங்கள் எங்கும் திரிய தேவையில்லை. மிக முக்கியமானது, இனக்கமான 4 அல்ல 5 கலைஞர்கள் சேர வேண்டும். அதெப்படியென்றால், நான் நடக்கும் போது எனக்கு துணையாக நீங்கள் நடக்க வேண்டும். உங்களுக்கு துணையாக நான் நடக்க வேண்டும். ஐவரும் சேர்ந்து இயங்க வேண்டும். ஒருவர் ஒரு கருத்து வைத்துள்ளாரெனில், அவருக்காக நால்வரும் இயங்குவது, இன்னொருவரின் கருத்துக்காக மற்ற நால்வரும் இயங்குவது, ஒரு குழு மனம்பான்மை தேவை. யாரை குறித்தும் அச்சமில்லாமல் நீங்கள் செய்ய நினைத்ததை அருமையாக செய்ய எல்லா சாத்தியங்களும் இளம் கலைஞர்களுக்கு உண்டு. அப்படி ஒரு காலகட்டத்தில் தான் நாம் இருக்கிறோம்.

மோசம் செய்யும் கூட்டத்தை தவிர்த்துவிட்டு, சுயமாக இயங்க முடியும். சிறந்த கலைஞர்கள் சுதந்திரமாக இயங்க அனைத்து சாத்தியங்களும் உண்டு. ஸ்டுடியோவையோ பயிற்சி நிலையங்களையோ நம்ப தேவையில்லை. தமிழகம் முழவதும் இருக்கும் விஷ்வல் கம்யூனிகேஷன் பயிற்றுவிக்கும் கல்லூரிகளின் பாடத்திட்டம் தெளிவில்லாத ஒன்றாக தான் இருக்கிறது.இது வருத்தமளிக்கும் ஒன்றாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் 60 முதல் 80 மாணவர்கள் விஷ்வல் கம்யூனிகேஷன் படித்து வெளியேருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் வந்துக்கொண்டே தான் இருக்கிறார்கள். ஆனால் பெரும்பாலானோர் காம்பியரராகவும் நடிகராகவும் தான் உருவாகுகிறார்கள். மற்ற துறைக்குள் வீச்சோடு வருபவர்கள் இல்லை. யாரையும் சார்ந்தில்லாமல் சுயமாக வளர்வதற்கான வாய்ப்பும் இப்போது இருக்கு. தமிழகம் துடிப்போடு இயங்கும் இளம் கலைஞர்களை நம்பி தான் இருக்கிறது. அவர்கள் தான் இனி எல்லாமே..