உயிர் கொடுக்கும் கலை 13 - டிராட்ஸ்கி மருது

சென்னையிலிருந்து பன்முகத் தன்மையோடு காண்பியல் மொழியில் இயங்கியதில் மிக முக்கியமானவர் சமீபத்தில் மறைந்த ஓவியர் பாப்பு (Baapu) அவர்கள். இவரது இயற்ப்பெயர் சத்திராஜூ லட்சுமி நாராயணா. ஆரம்பத்தில் விளம்பர நிறுவனத்தில் இருந்துக்கொண்டே பத்திரிக்கையிலும் இயங்கியவர். ஓவியர், திரை கலைஞர், கலை இயக்குநர். அவரைக் குறித்து தமிழ்நாட்டில் அதிகமாக எழுதியதோ பேசியதோ இதுவரை அதிகமாக இருக்கவில்லை. ஆந்திராவின் கலாச்சாரமானாலும், மொழி சார்ந்தோ, வெகுஜன பத்திரிக்கைகளானாலும், இலக்கியம்-நாவல் அல்லது அது சம்பந்தமான விஷயமானாலும், எந்த ஒரு பகுதியானாலும், ஆந்திராவைக் குறித்த கடந்த 50 ஆண்டுகளக்குள் நுழைந்து செல்லவேண்டுமாயின் நீங்கள் பாப்புவைக் கடந்துதான் செல்ல வேண்டும். பாப்புதான் வாசலிலே இருப்பவர். தெலுங்கு கலாச்சாரத்தில் குறிப்பிடத்தக்க ஆளுமை அவர்.
சென்னைக்கு வருவதற்கு முன்பே, பள்ளி நாட்களிலேயே அவரது ஓவியங்களைப் பார்பதற்கான வாய்ப்பு எனக்கு இருந்தது. ஒரு சில நேரங்களில் அவரது கையொப்பத்தைத் தேடி கண்டடைந்ததும் உண்டு. அதற்கு முன்பே 1960'களில், மதுரையில் இருந்த போது லிஃப்கோ பதிப்பித்த அகராதியில் அவரது படங்களைப் பார்த்திருக்கிறேன். வார பத்திரிக்கைகள் மூலம் கிடைக்கும் ஓவியங்கள், அதில் முன்னனியில் இருந்த கோபுலு, மாதவன் போன்றவர்களைப் பார்த்து வளர்ந்தவன் நான். ஓவியத்தைப் பற்றி தீவிரமான தேடுதலில் இருந்து கொண்டிருந்த நேரத்தில், வித்தியாசமான, கவலையற்ற மற்றும் சரளமான கோடுகளுடன், மிக கம்பிரமானதாக பாப்புவின் ஓவியங்கள் சில இருந்தது. தொடர்ந்து அவரது படைப்புகளைப் பார்பதற்கான வாய்ப்பும் அப்போதே அமைந்தது.

அவரது கையெழுத்தில்லாமலே லிஃப்கோ அகராதியில், கிட்டதட்ட் 80-90 விழுக்காடு கோபுலு போலவே இருக்கும் தன்மை கொண்ட ஓவியமாக அவரின் ஓவியங்களைப் பார்த்திருக்கிறேன். கோபுலு ஓவியத்தைப் போன்றதாகவே இருக்கும், ஆனால் அது கோபுலுடையதில்லை என்று கண்டுபிடித்துவிடும் அறிவு அந்த வயதில் இருந்தது. ஆனாலும் கோபுலுவை முழுமையாக சுவீகரித்துக் கொண்ட தன்மை அதில் இருக்கும், கையெழுத்து இருக்காது. காலப்போக்கில் ஓவியக்கல்லூரி சேர்ந்தபின்பு, இந்த ஓவியங்களெல்லாம் பாப்பு வரைந்தது கோபுலு அல்ல என தெரிந்துக்கொண்டேன். ஓவியக்கல்லூரி வந்தபின்பு, கன்னிமாரா நூலகத்தை தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டிருந்த காலகட்டத்தில், கடைசியாக நூலகத்தை விட்டு வெளிய கிளம்பும் முன், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாள பத்திரிக்கைகள் இருக்கும் பகுதியை ஒரு முறை பார்த்துவிட்டு வருவேன். அதில் குறிப்பாக, மலையாள பத்திரிக்கைகளில் நம்பூதிரியின் ஓவியத்தையும் தெலுங்கு பத்திரிக்கைகளில் பாப்புவின் ஓவியத்தையும் பார்ப்பேன். அதில் என்னவெல்லாம் இருக்கிறது என்று பார்ப்பதோடு அவர்களுடைய சிறப்பை உணராமலும் வந்தது கிடையாது.
ஓவிய கல்லூரி எங்களுக்கு உலக ஓவியங்களைக் காண்பித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில், இவர்களைப் போன்றவர்களையும் பார்க்க தவறியதில்லை. பாப்புலர் வட்டத்தில் கோபுலு ஒரு வீச்சோடு பணி செய்திருப்பது போல குறிப்பிடத்தக்க நிலையை பாப்புவும் சென்றிருக்கிறார். 1980'களுக்கு பிறகு கோபுலுவை ஒரு நாள் சந்தித்த போது, பாப்பு மற்றும் அவரின் ஓவியம் குறித்து பேசிக்கொண்டிருந்தேன். என்னை கடந்து சென்று சாதனைகள் செய்தவர் பாப்பு என்று மனதார பாராட்டினார் கோபுலு. எனக்கு அறிமுகப்படுத்துவதாகவும் குறிப்பிட்டார். ஆனால் என் வாழ்நாளில் பாப்புவை சந்திக்க முடியாமலேயே போய்விட்டது. ஆனால் அவரை பார்க்காத, நுணுக்கமாக கவனிக்காத நாளும் பகுதியும் கிடையாது. "ஆனந்த விகடன் போன்ற பத்திரிக்கைகளில் இருந்து என்னை வெளியே கொண்டுவந்தது பாப்பு தான்" என கோபுலு கூறுவார். தன்னிச்சயாக விளம்பர நிறுவனம் போன்றவற்றில் இயங்க என்னை தூண்டியவர் என்று அவரை குறிப்பிட்டு சொன்னார் கோபுலு.

பாப்புவின் ஆரம்ப கால ஓவியங்களிலிருந்து நான் பார்த்தவறையில், அவரது வீச்சு இந்திய மற்றும் தென்னிந்திய ஓவியங்களின் மரபு, லேபாக்‌ஷி ஓவியம், தமிழ்நாட்டில் இருக்கும் சிற்பங்கள், இந்தியன் மினியேச்சர் ஓவியங்கள், இவற்றில் இருக்கும் கூறுகளை எல்லாம் எடுத்துக்கொண்டு, தன்னுடைய தன்மைக்கான ஒரு விஷயமாக சேர்த்துக்கொண்டே வந்திருக்கிறார். அதை தொடர்ந்து செய்திருக்கிறார். கேரளாவின் பரதனையும் இவரைப் போலவே சின்ன வயதிலிருந்து இரசித்திருக்கிறேன். 1970'களில் வாசுதேவன் நாயர் நிர்மால்யம் படம் எடுத்தார், அரவிந்தன் படம் எடுத்தார், முக்கியமான தென்னாட்டு திரைப்படகர்த்தாக்கள் மாற்றான சினிமா செய்து கொண்டிருந்தவர்களுக்கு நடுவே ஓவியர்கள் சிலரும் படம் எடுக்க உள்ளே வந்தனர். 1972லிருந்து 1974க்குள் இவர்கள் அனைவரும் உள் நுழைகிறார்கள். அரவிந்தனுடைய முதல் படத்தை முதல் நாள் மற்றும் பரதனுடைய முதல் படத்தையும் முதல் நாளே பார்த்தேன். அதே போல் பாப்புவின் முத்தயாள் மூகு படத்தையும் இராஜகுமாரி திரையரங்கில் பார்த்தேன்.
நான் அடிக்கடி சொல்லுவது போல் 150 ஆண்டுகால இந்திய காண்பியல் கலை மரபு வரலாற்றில் தென்பகுதிக்கு ஒரு மிகப்பெரிய பங்கு உண்டு. வெளிநாட்டிற்கு சென்று அங்கிருந்த ஓவியங்கள் மூலம் ஊக்கம் பெற்று வடக்கில் அமிர்தா ஷெர்கில் வரைந்தது, ரவி வர்மா பம்பாய் சென்று வரைய ஆரம்பித்தது, தமிழ்நாட்டின் காலண்டர் ஆர்ட், பத்திரிக்கைகள், 150 வருட மரபை ஏற்படுத்தியிருக்கும் சென்னை ஓவிய கல்லூரி, இப்படியான சூழ்நிலையில் இறுதியாக பாப்புலர் கலைக்குள்ளும் குறிப்பிடதக்க தாக்கத்தை தென் பகுதி மக்கள் மத்தியில் ஏற்படுத்தியதில் முக்கியமான ஒருவர் பாப்பு. அவருடடைய calligraphy (அழகிய கையெழுத்து) வகை, அவர் தேர்ந்தெடுத்த சினிமா வகை, அப்போது மிடில் சினிமா என்று ஒன்றிருந்தது, மிடில் சினிமாவையும் பாப்புலர் சினிமாவையும் இணைப்பதற்கான பாலமாக இருந்தவர்களில் இவர்கள் இருவரும் (பரதனும் பாப்புவும்) முக்கியமானவர். அவர்கள் ஓவியர்களாக இருப்பதும் சினிமாவிற்க்குள் பங்கெடுப்பதும் மிக முக்கியமானதாகக் கருதுகிறேன்.

வார்த்தைகளால் கட்டப்பட்டுள்ள இந்திய சினிமாவில் ஓவியத்தன்மையுடனும் அதன் மரபை உள்வாங்கி கொண்டும் வேலை பார்பவர் ஒளிப்பதிவாளராக இருந்திருக்கிறார்கள், அல்லது ஓவியம் மற்றும் புகைப்படம் சார்ந்த சொற்ப அறிவுடன் இயக்குநர்களாக இருந்திருக்கிறார்கள். அல்லது ஒளிப்பதிவாளரே இயக்குநராகும் பட்சத்தில் காண்பியல் தெளிவு அவரிடம் இருக்கும். முழுமையான ஓவியராக இருந்து திரைப்படத்தையும் சுவீகரித்து, இந்த இரண்டு பகுதியையும் இணைக்கும் தன்மையை செய்தவர்களில் நானறிந்து தென்னிந்திய சினிமாவில் பரதனும் பாப்புவும் தான் மிகவும் முக்கியமானவர்கள்.

1970'க்கு பிறகான இந்திய சினிமா புது முயற்சிகளை, 80'களில் தெலுங்கிற்கு கொண்டு வந்தார். காலனிய காலத்தில் மொழிவாரி மாநிலம் பிரிக்கப்படாததற்கு முன்பு, தெலுங்கு குடும்பத்தில் பிறந்து, சென்னையில் படித்து, சென்னையிலேயே வாழ்ந்து, இங்கு தயாரிக்கப்பட்ட தெலுங்கு சினிமாக்களுடன் இருந்து பிற்காலத்தில் ஹைதராபாத் தெலுங்கு சினிமாவுடன் பணி செய்ய ஆரம்பித்தார். அவரது வாழ்நாளில் பெரும்பகுதி சென்னையில் இருந்தே அவர் இயங்கினார். சென்னை வாழ்வு, தமிழ்நாட்டு சம்பந்தப்பட்ட வாழ்க்கை அவரிலிருந்து பிரிக்க முடியாது. வளரும் ஓவியர்களில் அவருடைய பெயரைத் தெரியாதவரிடமும் அவரின் தாக்கம் இருக்கிறது. அவருடைய நேரடி தாக்கமாக கடந்தகாலத்தில் நான் பார்த்திருப்பது, தமிழ் சினிமாவில் போஸ்டர் வடிவமைப்பாளராக இருந்த பரணி (ஶ்ரீதருக்கு போஸ்டர் வடிவமைத்தவர்), ஶ்ரீதர் இயங்குவது குறைந்த பின்பு பாலசந்தருக்காக போஸ்டர் வடிவமைப்பு செய்தவர். பரணியின் பெரும்பாலான சினிமா சார்ந்த ஓவிய செயல்பாட்டின் ஒரு பகுதி பாப்புவின் நீட்சியே ஆகும். போஸ்டர் வடிவமைப்பதில் அவரது தாக்கம் இருந்தது. கலை இயக்குநர் தோட்டாதரணிக்கும் ஆரம்பகாலத்தில் பாப்புவின் தாக்கம் இருந்திருப்பதை உணரலாம்.
தமிழ்நாட்டில் தான் அவர் இயங்கிக்கொண்டிருந்தார் என பலபேருக்கு தெரியாது. ஆந்திராவின் தன்மையே அவர் மூலமாக தான் வெளிவந்தது, ஆனால் அவர் தமிழ் நாட்டிலிருந்தே இயங்கினார். தவிற்க்க முடியாத, மறக்க முடியாத ஒரு அசாதாரனமான பங்களிப்பை கோட்டு சித்திரம் மரபிலும், அதன் இன்னொரு நீட்சியான சினிமாவிலும் செய்தவர். நான் பார்த்த அவரது திரைப்படங்கள் அவரின் இலஸ்ட்ரேஷனின் நீட்சியாகவே எனக்கு தெரிந்தது. தெலுங்கு பிரமாண குடும்பத்தில் பிறந்தாலும் வம்ச விருக்‌ஷம் போன்ற படங்களையும் எடுத்திருக்கிறார். மதம் சார்ந்த நம்பிக்கைகள் இருந்தாலும், மாற்று கருத்துகளை ஆராதிக்கிற கொண்டாடுகிற மனப்பான்மையும் இருந்தது. மொழிவாரி மாநிலம் பிரிக்கப்படாத காலத்திலிருந்து, தமிழ்நாட்டுடைய தன்மையையும் தெலுங்கு தன்மையையும் சேர்த்ததாக கொண்ட ஒரு பகுதியோடு சேர்ந்து சினிமாவிற்கும் அதை எடுத்துக்கொண்டு, ஓவியத்தையும் திரைப்படத்தையும் இணைத்து, சேர்த்து இயங்கிய கலைஞர்களில் மிக முக்கியமானவர் பாப்பு. பாப்புவின் ஓவியங்களையும் பாப்புவின் சினிமாவையும் அறிந்தவர்கள் பார்க்க பார்க்க, வருங்காலத்தில் அவர் இன்னமும் கொண்டாட படுவார் என்றே நான் நினைக்கிறேன்.