உயிர் கொடுக்கும் கலை 7 - டிராட்ஸ்கி மருது

வரலாற்றுத் திரைப்படம் ( Period Film)

சில நூறு வருடங்களுக்கு முன்பு, வரலாற்று ஓவியம் என்ற பிரிவு ஓவியக் கலையில் இருந்தது. சரித்திர நிகழ்வுகளைக் காட்சிப்படுத்துவது என்பது ஒரு காலகட்டத்தில் மிக விரிவாக இருந்தது. எடுத்துக்காட்டாக, 16 ஆம் நூற்றாண்டின் ஐரோப்பாவின் ஏதேனும் ஒரு முக்கிய நிகழ்வின் ஒரு முக்கிய காட்சியை நீங்கள் ஓவியத்தின் மூலம் காணலாம். இதற்கென்று ஓவியர்கள் இருந்தார்கள். கிறிஸ்த்துவினுடைய வாழ்க்கையை ஓவியமாக வரைவது கிட்டத்தட்ட பதினோறாம் நூற்றாண்டிலே தொடங்கிவிட்டது. மதம் சார்ந்த முக்கியமான காட்சிகள், ஜாதகா கதைகள், இந்திய மற்றும் சீன கலை முறைகளிலும் இருந்தது.
ஆய்வுபூர்வமாக, அதாவது ஒரு குறிப்பிட்ட காலத்தை ஓவியத்தின் மூலம் காட்சிப்படுத்தும் போது அதன் பின்புலத்தைக் குறித்து ஆராய்ந்து, உடை, அக்காலத்தில் பயன்படுத்திப்பட்ட பொருட்கள், வீட்டுக்குள்ளே சூழல் எப்படி இருந்திருக்கும், அரண்மனைக்குள்ளே எப்படி இருந்திருக்கும் போன்ற உட்கட்டமைப்புகள் என இப்படியான பகுதிகளையெல்லாம் ஆய்வு செய்து ஓவியர்கள் வரைவது என்ற பகுதி சிறிது சிறிதாக வளர்ந்து வந்தது. 15 ஆம் நூற்றாண்டிற்கு பின்பு மிகவும் தீவிரமாக இந்த முறை வளர்ந்தது. 16, 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் இந்த முறை மிக பெரிய நிலையை எட்டியது, பைபிள் நிகழ்வுகளை ஓவியங்களாக காட்சிப்படுத்துவது மட்டுமின்றி சரித்திர நிகழ்வுகளை ஓவியங்களாக காட்சிப்படுத்துவதையும் தொடர்ந்து ஓவியர்கள் சவாலாக ஏற்று செயல்பட்டார்கள்.
பொறித்தல் கலை (engraving), செதுக்குருவக்கலை (etching) மற்றும் அச்சுக்கலை வளர்ந்தது. ஓவியர் ரெம்பிராண்ட் (Rembrandt), இயேசுவின் வாழ்கை வரலாற்றைக் காட்சிப்படுத்தினார். அதற்கு பிறகு, 18 மற்றும் 19 நூற்றாண்டு ஓவியர்களின் காலம் குறிப்பிடத்தக்கது. கட்டுரை, கதை அல்லது சரித்திர பின்னனி கொண்ட செய்தி ஆகியவைகளுக்கு ஓவியங்கள் மூலம் எடுத்துரைப்பது (illustrate) என்ற தேவை வந்தது. இதனால் வராலற்று ஓவியங்கள், வரலாற்றை விளக்கும் படியான ஓவியங்கள் பெரிதும் வளர்ச்சியடைந்தது. நவீனக் கலை (Modern Art), கடந்த நூற்றாண்டில் பிறப்பதற்கு முன்பு வரை இந்த முறை மிக தீவிரமாக இருந்தது. ஜெர்மானிய வாழ்க்கை வரலாறு முழுவதையுமே நான் engraving மற்றும் etching`இல் பார்த்துள்ளேன். ஐரோப்பாவின் பல்வேறு காலகட்டத்தின் முக்கியமான சரித்திர நிகழ்வுகள் அனைத்தும் ஓவியமாக மாற்றப்பட்டுள்ளது. தற்போது நீங்கள் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை தேடினால், அன்றைய நிகழ்வுகள் குறித்த ஓவியங்கள் கிடைக்கும்.
The Great Artists - Their lives, works and inspiration என்ற தலைப்பில், 500-600 ஓவியர்கள் மற்றும் எழுத்தாளர்கள் குறித்து புத்தகங்கள் தொடர்ந்து வெளியானது. 30-40 பக்கங்கள் மட்டுமேயுடைய சிறிய புத்தகங்கள் அவை, சிலர் அதை பார்த்திருக்க கூடும்.
கடந்த 25-30 ஆண்டுகளில் தமிழ் நாடு மற்றும் இந்தியா முழுக்க கிடைக்கும்படியாக இருக்கிறது. ஓவியரின் பிரபலமான படம் அட்டையில் இருக்கும், திறந்தவுடன் உள்ளே முதல் பக்கத்தில் ஓவியரின் ஓவியம் இருக்கும், அது அவர் வரைந்ததில் சிறந்த ஓவியமாக இருக்கும் அல்லது வேறு யாராவது அவரை வரைந்ததாக இருக்கும் அல்லது தன்னையே சுயரூபமாக வரைந்த படமாக (self portrait) இருக்கும். அதன் பின் அவர் வாழ்க்கை வரலாறு, எவையெல்லாம் அவரை பாதித்தது, அவர் வாழ்க்கை என்னென்ன போக்கிலெல்லாம் சென்றது, எவையெல்லாம் அவரை ஊக்குவித்தது/தூண்டியது, எந்தெந்த காலகட்டத்தில் என்னென்ன ஓவியங்கள் வரைந்தார், இப்போது அந்த ஓவியங்கள் எந்த அருங்காட்சியகத்தில் அல்லது தேவாலயத்தில் இருக்கிறது போன்ற தகவல்களெல்லாம் இருக்கும்.
இதுமட்டுமில்லாமல், அவருடைய காலகட்டத்திலிருந்த அரசியல் பின்னனி, கலாச்சார பின்னனி சார்ந்த தகவல்களும் இருக்கும். உதாரணமாக, இவரின் காலத்தில் ஆப்பிரிக்கா கண்டுபிடிக்கப்பட்டது, ஆப்பிரிக்காவிலிருந்து இந்த பொருள்கள் இங்கு வந்தன, அது சமுதாயத்தில் இவ்வாறு தாக்கம் ஏற்படுத்தியது, இவருடைய காலகட்டத்தில் தான் நெப்போலியன் அந்த இடத்துக்கு சென்றார் அல்லது ஐரோப்பியர்கள் வியாபார நிமித்தமாக கப்பலில் சென்று ஆசியாவை கண்டுபிடித்தார்கள், அதிலிருந்து அவர்களுக்கு இன்னென்ன பொருள்கள் எல்லாம் கிடைத்தன, இன்னென்ன செய்திகள் கிடைத்தன, கிழக்கத்தியர்களை அவை எவ்வாறு செல்வாக்கு செலுத்தியன போன்ற முறையில் செய்திகள் இருக்கும்.

அவர் வாழ்ந்த காலத்தின் புற சூழல் சார்ந்த தகவல்கள், பெரும் யுத்தங்கள், பெரும் வியாபாரங்கள் என ஓவியர் வாழ்ந்த காலத்தின் அரசியல் மற்றும் கலாச்சார பின்னனி சார்ந்த தகவல்களும் இருக்கும். ஓவிய கலைஞருடன் சமகாலத்தில் துணை நின்ற அல்லது வாழ்ந்த எழுத்தாளர்கள், நாடகம் சார்ந்த அவரது பணி, 100 வருடங்களுக்குள் என்றால் சினிமாவில் அவரது பணி, புத்தகங்கள் சார்ந்த அவரது பணி, எழுத்தாளர்களுடனான அவரது பணி, பெரும் இசை கலைஞர்களுடனான அவரது பணி மற்றும் நட்பு, இவையெல்லாம் அவரை எவ்வாறு ஊக்குவித்தது, அந்த காலத்தில் இருந்த ஓவியங்கள் அப்போதைய எழுத்தாளர்களை எவ்வாறு பாதித்தது/ஊக்குவித்தது என்பன போன்ற தகவல்களும் இருக்கும். ஓவியரை தூண்டிய சமூகம் அல்லது அவர் ஓவியராக உருவாகுவதற்கான பின்னனி, அன்றைய காலகட்டத்தின் அரசியல் நிலை, அரசியலில் நேரடியாக அவர் சம்பந்தப்பட்டது அல்லது அரசியல் சூழலினால் அவரில் ஏற்ப்பட்ட தாக்கம், அல்லது தொழிற்புரட்சியினால் ஏற்ப்பட்ட தாக்கம் என்பன போன்ற செய்திகளும் அதில் இருக்கும். காண்பியல் ரீதியாக உணர, தெளிவு பெற, ஒரு ஓவியர் படைப்பின் மூலம் அவர் காலத்தை அறிய உதவும் செய்திகளும் கொண்ட இந்த ஆவணங்கள் உதவுகிறது.
சினிமாவில் வரலாற்றுத் திரைப்படம் தயாரிக்க வேண்டுமெனும் போது, அந்த காலகட்டத்தை முழுமையாக தெரிந்திருக்க வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் ஒரு ப்ரொடகசன் டிசைனருக்கு அது மிகவும் அவசியமானதாக இருக்கிறது. உலகம் முழுவதும் இப்படி வரலாற்றுப் படம் எடுக்கும் பட்சத்தில், என்ன காலகட்டத்தில் இது நடக்கிறது, அப்போது யாரெல்லாம் வாழ்ந்தார், உடை எப்படி இருந்தது, அந்த காலகட்ட இலக்கியங்களில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது, கட்டிடக்கலை எப்படி இருந்தது போன்ற தகவல்களையெல்லாம் ஒரு சரித்தர ஆய்வாளரின் உதவியுடன் பெறுவார்கள். அவருடைய வழிக்காட்டுதலின் மூலமாகத்தான் அந்த வரலாற்றுக் காலகட்டத்தை அடைய முடியும். அந்த காலகட்டத்திற்கான காட்சிப்பூர்வமான குறிப்புகள் (visual reference) தேவை. அந்த காலகட்டத்திற்கான ஓவியங்கள்/படங்கள் என்னென்ன உள்ளது, எத்தனை விதமான ஓவியங்கள் இருக்கிறது, அந்த காலத்திலிருந்து தொடர்ந்து வந்த ஓவியங்களில் சிலரின் ஓவியங்களை தேர்ந்தெடுத்து, குறிப்புக்கான புகைப்படங்கள், வடிவைப்பு, உடை, கைவினை பொருட்கள் மற்றும் நுண்கலைச் சார்ந்த அனைத்து தகவல்களையும் எடுப்பார்கள். அதிலிருந்து கதைக்குத் தக்கப்படியான ஒரு சூழலை உருவாக்குவார்கள். குறிப்பிட்ட காலத்தை சொல்லும்படியான படமாக இருந்தால், 1920 என எடுத்துக்கொண்டால், அன்றைக்கு இருந்த விளம்பரங்கள், என்ன மாதிரியான வியபாரங்கள் நடந்தது, வீடுகள் எப்படி இருந்தது, துண்டறிக்கைகள் எவ்வாறு இருந்தது, அச்சு முறை எப்படி இருந்தது, புத்தகங்கள் எப்படி இருந்தது, என்ன மாதிரியான எழுத்துரு (font) பயன்படுத்தினார்கள் என்பன போன்றவற்றை திரைப்படத்தின் வடிவமைப்பு நேர்த்திக்காக சேகரிப்பார்கள்.
க்ளாடியேட்டர் திரைப்படத்திற்கு ஃப்ரென்ச்சு ஓவியரான Jean-Léon Gérôme'யின் ஓவியமும், ஓவியர் Lawrence Alma-Tadema'வின் ஓவியம் தான் பெருமளவு உபயோகப்படுத்தப்பட்டது. இதுவரை கிரேக்கம் மற்றும் ரோம் குறித்து குழந்தைகள் புத்தக ஓவியங்களாக, சிற்பமாக, அருங்காட்சியங்கள் மூலமாக, அந்த காலத்தை சித்தரிக்கும் வகையில் ஏற்கனவே எடுக்கப்பட்ட "Fall of Roman Empire" , "Ten Commandments", "Spartacus" போன்ற திரைப்படங்கள் மூலமாக ஏற்கனவே கிரேக்கம் மற்றும் ரோம் காலத்தை பார்த்திருக்கிறோம். இவையும் ஒரு வழிகாட்டுதலாக இருந்தது. கிரேக்கம் மற்றும் ரோம் சார்ந்த அனைத்து படங்களையும் க்ளாடியேட்டருக்காக பார்த்து, அப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கும் நிலையிலிருந்து இன்னும் சிறப்பாக அமைய ப்ரொடக்சன் டிசைனரும் கலைஞர்களும் வேலை செய்தனர். ஜார்ஜ் லூக்காஸின் "Raiders of the Lost Ark", 1940களில் நாஜி காலத்தில் இரண்டாம் உலக போர் நடக்கும் தருவாயில் நிகழும் கதையாகும். அந்த காலகட்டம் சார்ந்த உடை, இடம் மட்டுமல்லாமல் காட்சிப்படுத்தும் (cinematography) முறையில் என்ன வர்ணங்கள் அக்காலத்தில் பயன்படுத்தப்பட்டது, புகைப்படத்தில் என்ன வண்ணங்கள் மேம்பட்டிருந்தது, 1940`ஐ சொல்லியிருக்கும் அனைத்து படங்களும் பார்த்து, தேவையான குறிப்புகள் எடுக்கப்பட்டது. அது போல முந்தைய கட்டுரை ஒன்றில் Howard Pyle குறித்து குறிப்பிட்டிருந்தேன். நான் மிகவும் இரசிக்கும் ஓவியர்களில் ஒருவர். Pirates of Caribbean திரைப்படம் பார்க்கும் போது Pyle'யின் ஓவியம் உயிர் பெற்றது போன்று எனக்கு தோன்றியது. Pyle'யின் அனைத்து ஓவியங்களை மாற்றி அடுக்கினாலே பல பைரேட்ஸ் கதைகள் கிடைக்கும். அவர் பைரேட்ஸ் குறித்து அதிகம் எழுதியும் இருக்கிறார். திரைப்படம் எடுக்க அவரின் தகவல்கள் பெரிதும் உதவின.
இந்தியாவின் முதல் திரைப்படம் இராஜா ஹரிசந்திரா, தாதா சாஹேப் பால்கே அவர்களின் படம். சரித்திர பின்னனிக் கொண்ட ஒரு கதை இராஜா ஹரிசந்திரா. 200 வருட ஆங்கிலேய ஆட்சியில், வெள்ளையர் சேகரிப்பு ஓவியத்தின் பார்சி நாடக வழியில் கிடைத்தவற்றின் உதவியுடன் ரவி வர்மா வரைந்த ஓவியங்கள் தான் அப்போது பால்கே அவர்களுக்கு குறிப்பாக (reference) இருந்தன. இது குறித்து முந்தைய கட்டுரை ஒன்றில் விரிவாக குறிப்பிட்டுள்ளேன். ஓவியர் ரவி வர்மா, தாதா சாஹேப் பால்கே அவர்களுக்கு சம காலத்தவர். மாராட்டிய சினிமா நல்ல நிலைக்கு பிறகு வந்தது. மராட்டிய திரைப்படங்கள் அனைத்தும் கர்ண பரம்பரை கதைகள் அல்லது புராணக் கதைகள், பிறகு சம கால கதைகள் சொல்லுபவையாக இருந்தன. படங்களின் கதைகளுக்கான பின்னனியை தீர ஆய்வு செய்து அது குறித்து தெரிந்துக்கொள்ளும் வழக்கம் இருந்ததில்லை. அந்த 200 வருட காலத்தில் பதிவு செய்திருந்த குறிப்புகளை வைத்தே படமெடுக்கப்பட்டது.
மராத்திய சினிமா உயரத்திற்கு வந்து, அதன் வெளிப்பாட்டிலிருந்து பல தென்னிந்திய மொழிகளின் சினிமாவும் உருவானது. 2000 ஆண்டுக்கு முந்தைய சங்க காலத்து கதையை சொன்னாலும் இந்த அடிப்படையிலே சொன்னார்கள். ஏனென்றால் ஆய்வு செய்யாமல், மராத்தி படங்களில் பயன்படுத்தியதை அப்படியே பயன்படுத்தினார்கள். சரியா தவறா என்று யோசிக்காமல், அவ்வப்போது கிடைப்பதை எடுத்து அப்படியே பயன்படுத்துவதும் நடந்தது. இப்போது அந்த விழிப்புணர்வு மெதுவாக வந்துள்ளது. கடந்த 25 வருடங்களில் சில முயற்சிகள் நடந்துள்ளது. எனக்கு தெரிந்து சத்யஜித் ரே, ஷ்யாம் பெனிகல், கெளதம் கோஷ் மற்றும் கேத்தன் மேத்தா ஆகிய நால்வரும் உன்னிப்பாக வரலாற்றுப் படங்களுக்காக உழைத்திருக்கிறார்கள். இந்திய சினிமா அளவில், இந்த நால்வர் தான் அர்ப்பணிப்புடன் அந்த (வரலாற்று) காலத்தை காட்சிப்படுத்துபவர்களாக நாம் காண்கிறோம்.
தமிழ் சினிமாவில் பல முறை வரலாற்றுப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. மராத்திய சினிமாவின் பங்களிப்புக்குப் பிறகு, தென்னிந்தியாவில் பெரியளவில் மாற்றமும் திரைப்பட முன்னெடுப்பும் நடந்தது. தமிழ் மற்றும் தெலுங்கு படங்கள் அதிகளவில் எடுக்கப்பட்டது. 1935`இல் தெலுங்கில் ஹரிசந்திரா படம் எடுக்கப்பட்டது. புல்லையா என்பவர் இயக்கிய படம். தெலுங்கு பட உலகில் முக்கியமானவர். நாட்டுப்பற்று மிக்க படங்கள் எடுத்தவர். அந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடன இயக்குனராக பணியாற்றியவர் TVS Sarma.
ஓவியரான அவர், பிறகு கலை இயக்குனராக 30 ஆண்டு காலம், 1970 வரை தென்னிந்திய சினிமாவுக்கு மிக பெரிய பங்களிப்பையாற்றினார். மராத்திய சினிமாவின் அடிப்படையைக் கொண்டு செய்யப்பட்ட புராண கதைகள் சார்ந்த வரலாற்றுப் படங்களுக்கு பெரிய பங்களிப்பாற்றியவர் TVS சர்மா. மராத்திய சினிமாவிலிருந்து அடுத்த இடத்திற்கு முன்னெடுப்பை செய்தவர் TVS சர்மா. மல்லே பல்லி, சத்யபாமா, மைரவனா, லவகுசா, சீதாராம கல்யாணம், நர்தனசாலா மற்றும் சகுந்தலா ஆகியவை அவரின் சில குறிப்பிடதக்க திரைப்படங்களாகும் .தென்னிந்திய சினிமாவின் தோற்றம் கட்டமைக்கப்பட்டதில் இவரின் பங்கு மிக முக்கியமானது. அவருடைய திரைப்படங்களில் மிகவும் முக்கியமானது நர்தனசாலா. ஜகார்த்தா திரைப்பட விழாவில் இந்த திரைப்படத்திற்காக சிறந்த கலை இயக்குனர் விருதை பெற்றார்.
நாகிரெட்டி-சக்கரபாணி (விஜயா-வாஹினி ஸ்டுடியோ) அவர்கள் தென்பகுதியில் மிக பெரிய தொடர் ஸ்டுடியோக்களை நிறுவினார்கள், 13 தளங்கள் கொண்ட, ஆசியாவில் மிக பெரிய ஸ்டுடியோவாக இருந்த போது, பம்பாயிலிருந்து தொழில் முறை கலைஞர்கள் பலர் இங்கு வந்தனர். பிறகு நாமே இங்க சினிமா தயாரிக்கலாம் என்ற நிலை வந்தது. TVS சர்மா உடை மற்றும் செட் வடிவமைத்தார். குறிப்பாக பாதாள லோகம் போன்ற பிரம்மாண்டமானவைகளைத் தென்னிந்திய சினிமாவுக்கு கொடுத்தவர் TVS சர்மா. அது ஒரு காலகட்டம். எனக்கு தெரிந்து அதற்கு பிறகு சிறு முயற்சிகள் நடந்தது. அந்த காலகட்டத்தில், தென்பகுதியிலேயே S.S.Vasan அவர்களால் எடுக்கப்பட்ட சினிமாக்களில் மற்றும் வேறு சில சினிமாக்களில் ஒரு சில பகுதிகள் தமிழ் அறிஞர்களின் பங்களிப்பினால் ஏதோ ஒரு தமிழ் தன்மை சில இடங்களில் இருப்பதை காணமுடியும். முழுமையாக இருக்காது. பார்சி திரையரங்க தாக்கத்துட்டன், மூல கதை தமிழர் வாழ்வு சொல்லும் பட்சத்தில் ஒரு சில பகுதிகளில் தமிழ் தன்மை தெரியும். மன்னரை பார்க்க வந்த மக்கள், குடியானவர்கள், சாதாரன மக்களின் தோற்றம், தொழில் செய்பவரின் தோற்றம் போன்ற பகுதிகளில் தமிழ் தன்மை சிறிதாக தெரியும்.
TVS சர்மா பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன், இவருடைய படைப்புகளை பார்த்திருக்கிறேன், இன்னாருடையது தான் என்று தெரியாமல் பல நேரம் இவரது படைப்புகளை இரசித்திருக்கிறேன். தமிழ் சார்ந்த, தமிழ் தன்மைக் கொண்ட வெளிப்பாடு நமது வரலாற்றுப் படங்களில் இல்லை, மராத்திய தன்மை தான் இருக்கிறது. அதை மாற்றி அமைக்க வேண்டும் என்ற ஆசையோடு, ஏற்கனவே கிடைத்த கலைஞர்களின் படைப்புகள், ஆவணங்களை மறு வாசிப்பு செய்து, மூல தமிழ் தன்மையை அடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு நான் பணி புரிந்த காலகட்டத்தில் எனக்கு கிடைத்த வாய்ப்பு ”தேவதை” திரைப்படம். அப்படி வந்த சூழலில், இது குறித்து மேலும் படிக்க மற்றும் படங்களை பார்த்தபின் TVS சர்மா அவர்களின் பங்களிப்பு இதில் பெரியது என தெரிய வந்தது. கடந்த ஒரு வருடமாக, நானும் என்னோடு ஆறேழு ஓவியர்கள் சேர்ந்து அனிமேஷன் தொடர் ஒன்றை உருவாக்கி கொண்டிருக்கிறோம். நாங்கள் பணிபுரியும் அலுவலகம் TVS சர்மா அவர்களின் வீடு தான் என்பது சுவாரசியமான விஷயம். இது எனக்கு பெரிய மகிழ்ச்சி. எந்த கலைஞரை பார்த்து அதிசயத்தனோ, எந்த கலைஞரின் பணியிலிருந்து அடுத்த கட்டத்துக்கு, தமிழ் தன்மை நோக்கி பயணிக்க வேண்டும் என நினைத்தேனோ, அவர் வீட்டிலேயே அமர்ந்து மாற்றி அமைப்பதற்கான முயற்சி செய்வது எனக்கு கிடைத்த பெருமதி என்றே நான் நினைக்கிறேன். 1970 வரைக்கும் மந்தைவெளியில் அவர் வாழ்ந்த வீட்டில் நாங்கள் இப்போது பணி செய்கிறோம்.
திராவிட இயக்க வளர்ச்சிக்கு பிறகே புராண புனைகதைகள் சார்ந்த படங்களும் அதற்கான அவசியுமும் தேவையும் குறைந்தது. இதனால் வரலாற்றுப் படங்கள் வருவது குறைந்துவிட்டது. சம கால நிகழ்வுகள் சார்ந்து திரைப்படங்கள் வெளிவர தொடங்கியது. அவ்வப்போது சிறு வரலாற்றுப் படங்களுக்கான முயற்சி இருந்துக்கொண்டிருந்தது. ஐம்பதுகளில், சிவகங்கைச் சீமை, கட்டபொம்மன் போன்ற படங்கள் வந்தன. இவை முழுமையான வரலாற்றுப் படங்களல்ல, கட்டபொம்மனின் தோற்றம் 90 விழுக்காடு பொய்யானது, தெளிவோடு இருக்கவில்லை, ஒரு சிறு பகுதி மட்டுமே குறிப்பிடும் படி இருந்தது. கண்ணதாசன், அவர் மண்ணின் படம் என்பதால், சிவகங்கைச் சீமையில் உடை போன்ற சிறிய பகுதியில் கவனம் செலுத்தினார். அதன் பிறகு சமகாலத்தில் சற்று முன்பு நடந்த வரலாற்று நிகழ்வை காட்சிப்படுத்துவதாக சில திரைப்படங்கள் வெளிவந்தது. இருவர், பரதேசி, வாகை சூட வா, அரவாண், சுப்பிரமணியபுரம் ஆகியவை சில குறிப்பிடத்தக்க திரைப்படங்கள். எல்லா படங்களுமே அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும், திரைப்பட கலைஞர்களுக்கு வேறொரு காட்சியமைப்பை உருவாக்க வேண்டுமென்ற ஆசை இருந்தாலும், என்னுடைய அபிப்பிராயத்தில் அவையாவும் முழுமையான சித்திரங்கள் கிடையாது. முழுமையான வரலாற்றுத் தோற்றம் தெரிந்தே ஆக வேண்டும் என்று முனைப்புடனும் அவர்கள் மெனக்கெடவில்லை.
தமிழ்நாட்டில் சொற்கள் மூலம் செய்தியை சொல்லிவிட்டாளே சினிமா சென்றடைந்துவிடும் என்ற பழக்கமும் பயிற்சியும் கிட்டதட்ட 50 ஆண்டுகள் இருப்பதினாலே, இதனுடைய முக்கியத்துவத்தை தமிழ் சினிமாவில் இருப்பவர்கள் பெரிதாக அறியவில்லை. இப்போக்கின் அடுத்த கட்ட வடிவம் தான் சந்தானம் மற்றும் சிவகார்த்திகேயன் போன்றவர்கள் முன்னிலைப்பட்டிருப்பது என்று எடுத்துக் கொள்ளலாம். ஆசைப்பட்டார்களே ஒழிய அதற்காக உழைக்க, தன்னை அர்ப்பணிப்பது அதிகமாக கிடையாது. நான் தமிழ் திரைப்படங்களில் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸில் பணி செய்திருக்கிறேன் என்ற பட்சத்தில் தயாரிப்பாளர்கள், இயக்குனர்களுக்கு கற்பித்துள்ளேன். சினிமாவை முடித்த பிறகு இறுதி ஒரு மாதத்தில் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் பற்றிக் கவலைப்பட்டு ஒரு மாதத்திற்குள் அதை முடித்துவிட வேண்டும் என நினைப்பார்கள். ஆனால் அதெல்லாம் அப்படி கிடையாது என அறிவுறுத்தியுள்ளேன், படப்பிடிப்பின் முதல் கட்டத்திலேயே எஃபெக்ட்ஸில் பணிபுரிய வேண்டும். நான் இதை செய்துக்கொண்டிருக்க, நீங்கள் சென்று காட்சி பதிவு செய்துவிட்டு வாருங்கள் என்று சொல்லுவேன். நாங்கள் முடிக்க, நீங்கள் திரும்பி வர சரியாக இருக்கும் என்பேன். எங்களை விரட்ட கூடாது, அவசர படுத்த கூடாது என்று சொல்லுவேன். இந்த மாதிரி வரலாற்று படங்களில், படத்தயாரிப்புக்கு முன்பான (pre-production) வேலைகள் மட்டுமே அதிகமாக இருக்கும். அப்படியான படங்கள் வராததாலே, அந்த பொறுமையும் பார்வையும் சமகாலத்தில் ஒரு தலைமுறைக்கே இல்லாமல் போய்விட்டதே என்று நினைக்கத் தோன்றுகிறது.
கிராமங்களுக்கு சென்று படமெடுப்பது என்ற நிலை வந்தவுடன், இந்த உழைப்புக்கெல்லாம் மரியாதை குறைந்து விட்டது. ஆகையாலயே இந்த பகுதி வளராமல் சென்றுவிட்டது. வரலாற்றுப் படமென்றால் எப்போதும் கிரிடத்தை மாட்டிக்கொண்டு வரும் சினிமாவாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. சுப்பிரமணியபுரம் போன்ற சிறிய முயற்சிகள் நடந்துக்கொண்டிருக்கிறது. அனைத்தும் முழுமையான ஒரு இடத்தில் இல்லை. அதற்கான source material, அதாவது ஒரு கதையையோ கருவையோ எழுதுவது எப்படி முக்கியமோ, அதுப்போல அந்த காலகட்டதிற்கு ஒரு scrap book தயார் செய்வது முக்கியம்.
1985`இல் கதை நடக்கிறதென்றால், அது சார்பான source material தேடியெடுப்பது கதை எழுதவதினினுடைய ஒரு பகுதி. புற தோற்றத்தின் மூலம் அந்த காலகட்டத்திற்கு கொண்டு சென்றுவிட்டீர்கள் என்றாலே பாதி வெற்றியும், உங்களுடைய கதையை கேட்பதற்கான புது உலகத்தில் இதுவரை அறிந்த ஆனால் சந்திக்காத, அனுபவிக்காத அந்த உலகத்திற்குள்ள பார்வையாளனை இழுத்துக் கொண்டு போவதற்கு நான் குறிப்பிடும் இந்த கட்டமைப்பு மிக மிக முக்கியமானது. என்னுடைய அபிப்பிராயத்தில் கதை எழுதுவது 35-45 விழுக்காடு பகுதிதான். கதை எழுதும் போது, எதற்காக இதை எழுதுகிறோம், ஏன் இதை சொல்லப்போகிறோம், இந்த கருத்து என்னவென்பதில் தெளிவாகிவிட்டால், என்னைப்பொருத்தமட்டில் 60 விழுக்காடு தோற்றத்தில் தான் சினிமா இருக்கிறது.
பாத்திர தேர்வு எவ்வளவு முக்கியமோ, இந்த கதாபாத்திரத்திற்கு தோற்றத்தில் இப்படிதான் அவர் இருக்க வேண்டும், திறமையான நடிகர், இன்னென்ன பாத்திரத்தில் நடித்தவர், இவரை எப்படி நாம் பயன்படுத்திக்கொள்ளலாம் என எப்படி பாத்திர தேர்வு செய்கிறோமோ; இந்த கதையை எழுதலாம், இப்படி ஒரு படத்தை எடுக்கலாம், இந்த கதையில் இன்ன கருத்து இருக்கு, இந்த கதையை சொல்லி தான் ஆகனும், ஏன் அவசியம், இவற்றையெல்லாம் எப்படி அறிந்துக்கொள்கிறோமோ இவை போலவே; தோற்றத்தில் இந்த திரைப்படம் எப்படி தெரிய வேண்டும் என்று முடிவெடுப்பதிலேயே படத்தின் பாதி வெற்றி இருக்கிறது. சினிமாவின் பெரும்பகுதி தோற்றம் தான். அதற்கான உழைப்பு மிக மிக அவசியமானது. இது வரலாற்றுப் படங்களுக்கு மட்டுமல்ல, சம காலத்தில் ஒரு ப்ரொடக்சன் டிசைனர் உள்ள ஒரு சினிமாவிற்கும் இவை அனைத்தும் தேவை. குறிப்பான ஒரு காலகட்டத்தை சொல்லும் போது, அந்த காலகட்டதை நம்பகத்தன்மையோடு சொல்வதற்கு இந்த உழைப்பு மிக மிக அவசியம்.