உயிர் கொடுக்கும் கலை 8 - டிராட்ஸ்கி மருது

நாவலில் இருந்து சினிமா
My task ... is by the power of the written word, to make you hear, to make you feel - it is before all, to make you see.
- Joseph Conrad (1897)

The task I'm trying to achieve above all is to make you see.
- D. W. Griffith (1899)

If you asked me to give you the most distinctive quality of good writing, I would give it to you in one word: VISUAL. Reduce the art of writing to its fundamentals, and you come to this single aim: to convey images by means of words. But to convey images. To make the mind see ... That is the definition of good literature ... It is also a definition of the ideal film.
- Herbert Read (1945)
நாவல்களிலிருந்து தழவியெடுக்கப்பட்ட திரைப்படங்களை குறித்து இலக்கிய ஆளுமைகள், திரைப்பட விமரிசகர்கள், செய்திதாள் விமரிசகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து பொதுவாக சாதகமற்ற ஒப்பிடே வருகிறது. நாவல்கள் திரைப்படமாக்கப்படுவதை விமரிசகர்கள் அடிப்படை குறைபாடுகள் உள்ளதாகவே பார்க்கின்றனர், அவை அசலாக இல்லை என்பதே அவர்கள் பார்வை.

பத்திரிக்கையாளர்கள் மற்றும் பார்வையாளர்கள், மேலோட்டமான சில வேறுபாடுகளால் ஏற்பட்ட ஏமாற்றம், திரைப்பட கதாபத்திர தேர்வினால் கலக்கமுற்று, தவிர்க்க முடியாத சுருக்கம் மற்றும் பிடித்த பாத்திரங்கள் அல்லது நிகழ்வுகள் இழப்பு ஆகியவையினால் எதிர் வினை தெரிவிக்கிறார்கள். இப்படியான படங்களை இலக்கிய மூலத்தில் இருந்து எவ்வளவு பயன்படுத்திகிறார்கள் அல்லது எவ்வளவு வேறுபடுகிறார்கள் என்ற அளவிலே தீர்மானிக்கிறார்கள். 'குறிப்பிடத்தக்க நேர்மையான தழுவல்' அல்லது 'இலக்கிய மூலத்தின் கருவை சொல்ல முடியவில்லை' என்ற அளவிலே பார்க்கின்றார்கள். ஆனால் அவர்கள் விசுவாசமாக இருக்க வேண்டும் என்று அதில் என்ன இருக்கிறது? பல வாசகர்கள் இருப்பது போல் பல விதமான வாசிப்புகள் ஒரு நூலுக்கு இருக்குமென்றால், நாவலை திரைப்படமாக்குதலையும் அப்படி ஒன்றாக கருதலாமல்லவா, 'வாசிப்புகள்' அல்லது அவர்களின் மூல நூல்கள் பற்றிய 'கட்டுரைகள்' என எடுத்துக்கொள்ளலாம் அல்லவா.
சினிமா 100 ஆண்டுகளுக்கு முன்பு லூமியேர் சகோதரர்கள் மூலம் ஆரம்பித்தது. விரைவில் முதல் துண்டு படங்கள் வர தொடங்கியது. யதார்த்தவாதமே முதலில் வெளிப்பட்ட வகை. 1905'இல், சினிமாவின் மாற்றை துவக்கிவைத்தார் ஜார்ஜ் மெல்லிஸ், தொழில்நுட்ப திறன்களை பயன்படுத்தி கனவுகளையும் கற்பனைகளையும் உணர செய்தார். அந்த நேரத்தில் அவை யதார்த்தவாதத்தின் இறுதி நாட்களாகவும், சினிமாவின் கற்பனை பிரதிநிதித்துவம் முக்கிய இடத்தை பிடித்துவிடும் என்று தோன்றியது. ஆனால் இன்னும் யதார்த்தவாதமே முன்னிலையில் இருக்கிறது. ஒவ்வொரு மேட்ரிக்ஸ் மற்றும் மிஷின் இம்பாஸ்பிள் படத்திற்கும், ஒவ்வொரு ஆண்டும் நிஜ வாழ்கையை பிரதிபளிக்கும் நூற்றுக்கணக்கான படங்கள் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது, அல்லது முந்தைய காலத்தின் நிஜ வாழ்கையை மீண்டும் உருவாக்குவிதமாக படங்கள் வெளிவந்துக் கொண்டிருக்கிறது, பத்தொன்பதாம் மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளின் யதார்த்த பாரம்பரியமிக்க நாவல்களே திரைப்பட படைப்பாளிகளுக்கு மிக அதிகமாக பயன்பட்ட மூல பொருளாக விளங்குகிறது, குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால் பிரிட்டிஷ் மற்றும் ஐரோப்பிய படைப்பாளிகளுக்கு பெரிதும் நாவல்கள் உதவுகின்றன. இன்னும் திரைப்படமாக்கப்படாத நாவல்களை திரைப்பட தயாரிப்பாளர்கள் திரைப்படமாக்கி பணம் பார்த்துக்கொண்டிருக்கின்றனர், ஏற்கனவே திரைப்படமாக்கபட்ட நாவலை மறு உருவாக்கம் செய்வதன் மூலம் லாபம் வருமென்றால் அதையும் செய்ய தயாராக இருக்கிறார்கள். சிறந்த கதையும் வலுவான கதாபாத்திரங்கள் கொண்ட யதார்த்த நாவல்களையே சினிமாவாக எடுக்க ஆசை படுவார்கள். நவீன அறிவியல் இலக்கியங்கள் சில தழுவலுக்கு உகந்ததாக இல்லை, சில நாவல்கள் திரைப்படமாக்க முடியாதவை என்று கருத படுவதும் உண்டு. சிறந்து விற்பனையாகும் நாவல்களின் உரிமையை பெற பல தயாரிப்பாளர்கள் வரிசையில் நிற்பதும் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது.

உரைநடை புனைவு மீது சினிமாவின் செல்வாக்கு குறிப்பிடதக்கதாகும். ஒரு நாவலை தழுவும் போது, திரைக்கதையாசிரியர் எப்போதும் கடினமான தேர்வுகளை எதிர்கொண்டாக வேண்டும்: எவற்றை சேர்க்க / ஒதுக்க வேண்டும், ஒதுக்கியத்தை எப்படி ஈடு செய்வது, பாத்திரங்கள் மற்றும் சம்பவங்களை எப்படி ஒருங்கிணைப்பது, எழுத்தாளர் என்ன சொல்கிறார் என்பதை எப்படி காண்பிக்க வேண்டும். இங்கே ஒன்றை நினைவு படுத்துவது நல்லது: நாவலை வாசிக்க பல மணி நேரங்களாகும், அன்றே படித்து முடித்துவிட வேண்டும் என்ற உந்துதல் இல்லாத பட்சத்தில் நாவலை சிறிது சிறிதாக சில நாட்கள் அல்லது சில வாரங்களும் படிக்கலாம், வாசிப்பது என்பது ஒரு நெருக்கமான அனுபவம், பெரும்பாலும் தனியாக வாசிப்போம், வாசிப்பவர் அவரின் விருப்பத்திற்கு ஏற்றார் போல மீண்டும் படிக்கலாம், அந்த பகுதியை தவிர்க்கலாம், அல்லது வேறு ஒரு பகுதிக்கு செல்லலாம், அதாவது வாசிப்பனுபவத்தை நாம் கட்டுப்படுத்த இயலும். திரைப்படம் பார்பது என்பது, இரண்டு அல்லது மூன்று மணி நேரம் ஒருமுகப்படுத்தி, இருட்டறையில் ஒர் இடைவேளை அல்லது இடைவேளையின்றி சில அல்லது பல அந்நியர்களுடன், ஒரு சிறைப்பிடிக்கப்பட்ட பார்வையாளராக, திரையில் நடப்பவையை இடைவிடாமல் பின்பற்ற வேண்டும்.

விவரண கதை சொல்லும் புனைவும், விவரண கதை சொல்லும் திரைப்படமும், பார்வையளர்கள் மத்தியில் ஒரு வலிமையான உணர்வை, அறிந்துக்கொள்ளும்படியான இடங்கள் பயன்படுத்துவதன் மூலம் கொடுக்கும். இடங்களை போல, நாம் கதாபாத்திரங்களையும் அங்கீகரிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். நாவல் மற்றும் திரைப்படத்தில், அவர்களின் நடத்தை உளவியல் நிலைத்தன்மையின் படியே அவர்களின் பிரதிநிதித்துவத்தின் வெற்றியை அளவிட முடியும். நாவலும் திரைப்படமும் கதைகள் சொல்லும். நாம் தொடர்ந்து பார்ப்போம். அடுத்து என்ன நடக்கும் என நாம் தொடர்ந்து வாசிப்போம் அல்லது நமக்கு பரிச்சயமான வகையானால், அது எப்படி நடக்கிறது என நாம் கண்டறிவோம்.

நாவல்களை திரைப்படமாக்குவதை மூன்று வகையாக பிரிக்கலாம். இயக்குநர் நாவலை மிகவும் உண்மையாக திரை மொழி சார்ந்து திரைப்படமாக உருவாக்குவது முதல் வகை. நாவலை படித்த பார்வையாளர்கள் சில காட்சிகள் அல்லது கதாபாத்திரங்கள் நீக்கப்பட்டதிற்கு புலம்பினாலும், மூல நூலுக்கு நெருக்கமான நிலையில் இப்படங்கள் இருப்பதனால் அவர்கள் இந்த படத்தை ஒப்புக்கொள்வார்கள். நாவலின் உட்பொருளை அறிந்துக்கொள்ள மீண்டும் விளக்குவது அல்லது அது குறித்து கருத்து சொல்லும் விதத்திலும் திரைப்படமாக மாற்றுவது இரண்டாவது வகை. மேலோட்டமான மாற்றத்திற்காக மட்டுமல்ல, விளக்குவதற்காக சேர்க்கப்பட்ட அடுக்குகளினால் நாவலுடன் நெருங்கிய வாசகர்களுக்கு இது மிகவும் ஏமாற்றத்தை அளிக்கும். நாவலிலிருந்து மிகவும் தளர்வாக, அதை அடிப்படையாக வைத்து படமெடுப்பது மூன்றாவது வகையாகும்.

இலக்கியம் எழுதுவது, ஓவியம் வரைவது, திரைப்படம் எடுப்பது என இவையனைத்தும் தனி தனியாக பேசுகிற ஒரு மொழி / முறை ஆகும். இலக்கியமும் திரைப்படமும் செயல்படும் முறை, மொழியால் வெவ்வேறு. இலக்கியம் வார்த்தைகளைக் கொண்டது, சினிமா காட்சிகளை கொண்டது. ஒரே கருத்தை இரண்டு விதமாகவும் தெரியப்படுத்தலாம். ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு மாறும் போது, அந்த மொழிக்கான சாத்தியங்களையும் அவசியங்களையும் கற்றவராக இருக்க வேண்டும் என்பது முக்கியமானதாகும். வெறும் நாடகத்திற்கு எழுதுவது போன்றான ஏற்றம் - இறக்கம் கொண்ட நாடக பாணி எழுத்து அல்ல அது. காட்சிப்பூர்வமாக அது மாறவேண்டுமெனில் திரை மொழிக்கான கூறுகளை முறையே தெரிந்து கொள்ள வேண்டும். நாவலுக்கு அல்லது சிறுகதைக்கு இத்தனை பக்கங்கள் என உள்ளது, வாழ்வின் ஒரு பகுதியை அல்லது முழுமையான காவியத்தை போல ஒரு விஷயத்தை பேசுவது போல, சினிமாவிற்கும் இரண்டரை மணி நேரம், குறும்படத்திற்கு 5 முதல் 30 நிமிடங்கள், ஒரு காவியத்தை காட்ட மூன்று மணி நேரம் என ஒரு காலளவு இருக்கிறது, அதனுடன் திரைமொழியால் பேசுவது தான் மிக முக்கியமானது.

தமிழக சூழலில் இலக்கியத்தை சினிமாவாக உருவாக்க முயல்வதில்லை என்று பேசுபவர்களுக்கும், இலக்கிய ஆளுமைகளையும் இலக்கியத்தையும் மதிக்காத சினிமா கலைஞர்கள் சார்ந்த ஒரு கூட்டத்திற்க்குமான பிரிவும் பேச்சும் தொடர்ந்து நடந்துக்கொண்டே இருக்கிறது. அடிப்படையில் பார்வையாளர்களுடன் தொடர்பை ஏற்படுத்தும் விதமாக, திரைமொழியை பயன்படுத்துவது என்ற பயிற்சியை இருவரும் எடுத்துக்கொள்வதில்லை என்பதே என் அபிப்ராயம். நேற்று நடிக்க வந்தவர்கள், நாளையே முதலமைச்சராகிவிடலாம் என்ற நோகத்தைக் கொண்ட நடிகர்களாலானது தமிழ் சினிமா. வேறெங்கும் இப்படி இருப்பது போல் எனக்கு தெரியவில்லை. தமிழ் நாட்டிற்குள் எழுத்தாளராக இருந்து இயக்குநராக மாறுவது என்பது சினிமா நடிகர்கள் நடிப்பதிலிருந்து ஓய்வு எடுக்கும் காலத்தில் மக்களுக்கு தொண்டு செய்ய போகிறேன் என்று அரசியலில் ஈடுபடுவது போன்றதான ஒரு காரியமாகும், நான் கடந்த 30 ஆண்டுகளாக பார்த்துக்கொண்டிருக்கிறேன், எழுதிவிட்டால் எனக்கு எல்லாம் தெரிந்துவிடும் என்ற எண்ணம், தான் எடுப்பதே சினிமா என்று நினைத்து தோற்ற, அல்லது மக்களுடன் தொடர்பை ஏற்படுத்த முடியாத திரைப்படங்களை எடுத்தவர்கள் தமிழ் நாட்டில் அதிகம். பெரிய எழுத்தாளர்களின் பெயர் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஆனால் பயன்படுத்திய சில இயக்குநருக்கு ஷாட்டைப் பிரிக்க கூட தெரியாது. திரைக்கதை என்பது எழுதப்படுவது அல்ல, அது காட்சி படிமமாக சிந்திக்க வேண்டிய ஒன்று.

யாராவது ஒரு குறிப்பிட்ட கலைஞரை முன்னிறுத்துவது என்ற நோக்கமும் அவசியமும் எனக்கில்லை. தங்களை முன்னிறுத்தியோ அல்லது தங்களுக்கான இடத்தை தக்க வைத்துக்கொள்ள அல்லது இருட்டில் இருந்தாலும் கிரீடத்தை கழட்டாத ஒரு மனநிலையும் கொண்ட சிலர் இருக்கிறார்கள். கடந்த ஒரு வருடமாக சமூக வலைதளங்களின் நான் எனது ஓவியத்தை மட்டுமே பதிவு செய்துக்கொண்டிருந்தேன். முதல் முறையாக நான் எழுதியது ஓநாயும் ஆட்டுக்குட்டியை பார்த்த பின்பு தான். அந்த படத்தை நான் உயர்ந்த இலக்கியமென்று சொல்லவரவில்லை, சிறந்த சினிமா இயக்குநர் அவர் என்று நிறுவவும் நான் வரவில்லை, இதெல்லாம் தாண்டி தமிழ் சினிமாவில் ஒரு நல்ல முயற்சியாக இதை பார்க்கிறேன். பொதுவாக, திரைப்படத்தை பாராட்டி எழுதுபவர்கள் பாதி பேர், நிராகரிக்கப்பவர்கள் பாதி பேர். முதல் நாளே பார்த்த முக்கிய எழுத்தாளர்கள் இது குறித்து எழுதாதவர்கள் பலர். எதுவென்றாலும், எழுதுவதாலோ அல்லது பேசுவதாலோ தன்னுடைய உயர்வுக்கு சேர்ந்துவிடும் என அடுத்த நொடியில் எழுதியவர்கள், திரைப்படத்தை பார்க்கும் போதே சிலாகித்து பேசிவிட்டு தொடர்ந்து எழுத விரும்பாத மனநிலை கொண்ட எழுத்தாளர்களையும் இப்போது நான் படித்துக் கொண்டு தான் இருக்கிறேன். படத்தின் குறையாக பேசும் அனைவருமே உள்ளடக்கத்தை (content) குறித்து மட்டுமே பேசுகிறார்கள். எப்போதுமே நான் சொல்லுவது, கதை இரண்டாம் பட்சம் தான். எந்த கதையாக இருந்தாலும் காட்சி மொழியில் பேசலாம். ஒரு செய்தியை கதையாக்கி பேசலாம். வார்த்தைகளால் கட்டமைக்கப்பட்ட ஊடகமல்ல இது, காட்சிகளால் கட்டமைக்கப்பட்ட ஊடகம். அதனால் தான் உலகத்தில் இருக்கும் அனைவரும் பார்க்கும் வகையில் இருக்கும் ஒன்றாக திகழ்கிறது. தமிழ் சினிமா தமிழர்கள் மட்டும் பார்க்கும் இடத்தை தாண்டி எப்போது முன்னேறுவது ?. திரைப்பட மொழியால் அது சிறந்து விளங்கினால் தான் அது சாத்தியம். ஒரு மிக சிறந்த திரைப்படம் என்பது ஒலியை நீக்கிவிட்டு பார்த்தாலும் உலகத்திலுள்ள அனைவராலும் அதை தொடர்பு படுத்தி புரிந்துக்கொள்ள இயல வேண்டும். அது தான் உலக மக்களால் புரிந்து கொள்ளத் தக்க சினிமா. வார்த்தைகள் சொல்லாத பகுதியை பிம்பங்கள் எளிதாக சொல்லிவிடும். உலக சினிமாவில் பிம்பங்கள் சொல்லமுடியாத இடத்தில் தான் வார்த்தைகள் வரும். உலகம் முழுவதில் இருக்கும் பொதுவான பார்வையாளர்கள் ரசிக்கும் சினிமா அப்படியானதாக தான் இருக்கிறது. மிஷ்கினின் இந்த படத்தில் தமிழ் சினிமாவில் இது வரை நடக்காத ஒன்று நடந்துள்ளது. பெரும் பகுதி வசனமே இல்லை, பின்னனியிசையால் நடத்த படுகிறது. முக்கியமாக மிஷ்கினின் காட்சி படுத்தும் முறையில் இந்த படம் நடத்தப் படுகிறது.

இயக்குநர்கள் ஒளிப்பதிவாளரை சார்ந்தே இருக்கிறார்கள். அவர்களால் காட்சிப்பூர்வமாக சிந்திக்க தெரியவில்லை என்பதே காரணம். வெகு சிலரே இதற்கு விதிவிளக்கு. பல இயக்குநர்கள், மிட் ஷார், லாங் ஷாட், க்ளோஸ் அப், டாப் ஆங்கிள், லோ ஆங்கிள் போன்ற சில வார்த்தைகளை வைத்துக்கொண்டுதான் படம் எடுக்கிறார்கள். அதற்கு மேல் sense of composition, choreography இதை குறித்தான பெரிய ஞானம் அல்லது ஒவ்வொரு சினிமாவிலும் தன்னை மேம்படுத்திக்கொள்வதற்கான முயற்சிகள் எந்தக் காலகட்டத்திலும் இல்லை. கதையை வார்த்தைகளால் சொல்லிவிடுவதற்கான முறையைதான் தமிழ் சினிமாவில் கையாண்டிருக்கிறார்கள். முழு திரையையும் பயன்படுத்துவதில்லை. 30 அல்லது 40 விழுக்காடு திரைவெளியை தான் பயன்படுத்துகிறார்கள். இவையெல்லாம் கூடும் போது ஒரு தேர்ந்த மாபெரும் எழுத்தாளரின் எழுத்து இந்த மொழியில் மாற்றம் அடையும் போது அது வேறுதான். ஹிட்ச்காக் எட்டனா மர்ம நாவலை தான் சினிமாவாக எடுத்தார். ஆனால் அந்த எழுத்தாளர்கள் இப்போது போற்றபடவில்லை. அவை அனைத்தும் ஹிட்ச்காக்கின் படங்களாக தான் சொல்லப்படுகிறது. விபூதி பூஷன் நாவலை எழுதியிருந்தாலும், திரைப்பட மொழியாக மாறும் பட்சத்தில் சத்யஜித் ரே தான் திரையில் விரிந்த பதேர் பாஞ்சாலியினுடைய படைப்பாளி. அதே போல் ஷேக்ஸ்பியர் கதைகளை பலர் படமாக எடுத்திருக்கிறார்கள். அந்தந்த இயக்குநர்களால் அவர்கள் கையாண்ட முறையினால் அது பல்வேறு விதமாக வெளிப்பட்டது. குரோசுவோவும் ஷேக்ஸ்பியரின் படைப்பை திரைப்படமாக எடுத்துள்ளார். அது குரோசுவோவின் படைப்பாகவே இருக்கிறது என்பது தான் உண்மை.

தனக்கு பயனில்லாத அல்லது தன்னை முன்னிறுத்த இயலாத இடத்தில் அதை கொண்டாடவும் அது குறித்து எழுதவும் மறுக்கின்றனர். ஆனால் இதை கொண்டாடினால் தான் தமிழ் சினிமா மேலே வரும். தனக்கான ஒரு திட்டம் வைத்துக்கொண்டு இருக்கின்றனர். இந்த படத்தை விமரிசிப்பவர்கள் அனைவரும், உள்ளடக்கத்தை தான் விமரிசிக்கின்றனர். ஆனால் இந்த படத்தின் தலையாய பரிசோதனை, வடிவத்தில் (Form) தான் என்பது என் அபிப்ராயம். தொடர்ந்து ஆறு திரைப்படத்திலும் ஆசிய படங்களின் தாக்கமும், மேற்குலக படங்களில் தாக்கமும், தமிழ் சினிமாவில் சொல்லபடுகின்ற கதை, பாட்டு என, மூன்று தன்மையின் கூறுகளை கலந்த மாதிரியான ஒரு திரைப்பட மொழியாக மிஷ்கினுடைய திரை மொழி வந்திருக்கிறது. ஆறாவது படத்தில், பழக்கப்பட்ட இரசிகர்கள் உடனே ஏற்றுக்கொள்கிறார்கள். எல்லா இயக்குநருக்கு இப்படியான நிலைமை ஏற்படும். தமிழ் பத்திரிக்கைகளில் அழகான பெண்களை வரையும் ஓவியர்கள் நிறைய இருந்த காலகட்டத்தில், மனித உடலை பிரித்து கட்டமைக்கும் பாணியை வரைந்த எங்களைப் பார்த்து, பெண்களை கிறுக்கி மோசமாக சித்திரிக்கிறார்கள் என்றனர். அப்படி பார்த்துக்கொண்டிருந்த நிலையிலிருந்து நான்கைந்து வருடங்களிலேயே அது போன்றவற்றை பார்த்து மக்கள் பழுக்கமடைந்தார்கள். சமகாலத்தில், இருப்பதை இருப்பதாக வரையும் பகுதியையும் இதையும் மக்கள் ஒப்பிட்டு பார்க்கின்றனர், ஒரு ஓவியருக்கு என்ன செய்நேர்த்தி தேவையோ அது இவர்களுக்கு இருக்கிறது. இரண்டையும் தொடர்பு படுத்தி, இதையும் இரசிப்பதற்கான ஒரு இடத்துக்கு பழக்க படுகிறார்கள். தொடர்ந்து நாங்கள் செய்து வந்ததைப் பார்த்து, பழகி, உணர்ந்து ஏற்றுக்கொண்டனர். எனக்கு தெரிந்து இந்த ஆறாவது படம் அப்படி தான் கிடைத்திருக்கிறது. இது மாதிரியான சோதனைகளை நான் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறேன்.

இலக்கியத்தை திரைப்படமாக எடுக்கும் போது அசலை போல் இல்லை என்று பெரும்பாலானோர் கூறுவார்கள். இந்த இடர்பாடுகள் உலக முழுவதும் எப்போதும் நடந்துக்கொண்டே தான் இருக்கிறது. திரைப்படம் என்பது இயக்குநரின் ஊடகம். எழுதி இயக்குபவரின் முழுமையான வடிவமே திரைப்படம். எழுதுபவர் அவரேவாக இருக்கலாம், அல்லது வேறொருவராகவும் இருக்கலாம். திரைப்படத்தை திரை மொழியுடனான வடிவத்திற்கு கொண்டுவருவதற்கான அனைத்து சாத்தியமும் இயக்குநருக்கு தான் இருக்கிறது. பலர் சேர்ந்து இயங்கி இயக்குநரின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் இருக்க வேண்டும். நல்ல மேதைகளின் இலக்கியத்தை கேட்டு பாருங்கள், காட்சி பூர்வமாக உங்களை சிந்திக்க வைப்பதே மேன்மையான இலக்கியமாகும். திகில் படம் பார்பதில் ஆர்வமுடையவர் புதுமைப்பித்தன் என்று தொ.மு.சி.இரகுநாதன் நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டார். திகில் படங்களுக்கு செல்லும் போது தன்னையும் அடிக்கடி கூட்டி சென்றுள்ளார் என்றார். புதுமைபித்தனின் திகில் கதைகளை படிக்கும் போது, என்னுடைய இளவயதில் நான் பார்த்த சமகால ஹேமர் நிறுவனத்தின் திகில் படங்களின் பிம்பங்களே என் முன்பு வரும். பிராங்கன்ஸ்டினை தமிழ் படுத்த வேண்டும் என்று நினைத்தவர் புதுமைபித்தன். சுப்பையா பிள்ளையில் காதல் (என்று நினைக்கிறேன்) என்ற புதுமைபித்தனின் கதையில், தாம்பரத்தில் இரயிலேறி எஸ்ப்ளேனட் வருபவர் ஒருவரின் மண ஓட்டம் இடம்பெறும் , திருநெல்வேலியிலிருந்து இரயில் வரும், அதை பார்த்துவிட்டு, இன்னொரு முதலாளிக்கு கணக்கு பிள்ளையாக வேலைப்பார்க்கிறவரின் நினைவும், அவர் கண்ணுக்கு முன் நடக்கும் சில நிகழ்ச்சியை எழுதும் முறையென்பது, 35 வருடங்களுக்கு முன்பே எடிட் செய்யப்பட்ட ஒரு தேர்ந்த சினிமாவைப் போல அந்த எழுத்து என்னை பார்க்க தூண்டியது. பலரின் எழுத்துக்கள் அப்படி என்னை உணரவைத்ததில்லை. இரயிலுக்கு பக்கத்திலிருக்கும் சுவர்கள் ஓடுவது படபடவென என இன்றுவரை காட்சிகளாக எனக்கு நினைவில் இருக்கிறது.

தங்களை தூக்கி நிறுத்துவதற்கான ஒரு சூழலாக நினைத்து, பொய்யாகவே இலக்கியங்களை திரைப்படமாக்கினால் நல்ல சினிமா வரும் என்ற எண்ணமும் இங்கு இருக்கிறது. எது எப்படி எந்த சூழ்நிலைக்கு வந்தாலும், அடிப்படையில் திரைப்படமாக்குவதற்கு எந்த கருத்தையும் எதையும் வலியுறுத்துவதற்கும், தெள்ள தெளிவாக பார்வையாளர்முன் வைப்பதற்கு முதலில் திரைக்கதையாக எழுதப்பட்ட அல்லது ஒரு கருவை சினிமாவாக மொழிமாற்றம் செய்வதற்கான பயிற்சிதான் மிக முக்கியம். அது வெறுமனே எழுதிவிட்டால் மட்டும் ஏற்படாது. சினிமா தொடர்புடைய மற்ற கலை குறித்தான விழிப்புணர்வு தேவை. கணினிமையமான இன்றைய காலகட்டத்தில் அனுபவங்கள் பெறுவதற்கான வழிகள் பல இருக்கிறது. அந்த வழிகளில், ஒளிப்ப்பதிவு, உலக முழுவதிலும் இருக்கும் கலைஞர்களின் சினிமா, அதை கட்டமைப்பு சார்ந்து பார்ப்பதன் மூலமாகவும், படிப்பதன் மூலமாகவும் தெரிந்துக்கொள்ளலாம். இலக்கிய ஆளுமைகள் சினிமாவை சினிமாவாக படிக்கிற பயிற்சியை அடைய வேண்டும், சினிமா, இலக்கியம் பேசுகிறதை போல, இலக்கியத்திற்கு உள்ளிருக்கும் சக்தியோடு திரைப்படம் எடுக்க வேண்டுமென்றால் அதற்கான சக்தியோடான ஒரு பயிற்சியுடன் வருவது மிகவும் முக்கியம்.

இங்கு பொய்யாக பேசப்படும் நிலையிலிருந்து மாறி, நல்லப்படியான ஒரு இடத்துக்கு முன்னேற வேண்டும், இப்போதும் தயாராக இல்லை, தான் முன்னிறுத்தப்பட வேண்டுமென்பது தான் நோக்கம், இந்த படத்திற்காக யார் பேசினார்கள், யார் பேசவில்லை, ஏன் பேச வரமாட்டேன் என்கிறார்கள். பேச வேண்டியதை விட்டுவிட்டு வேறெல்லாம் ஏன் பேசுகிறார்கள். ஒரு தனி மனிதனை நாம் முன்னிறுத்த வேண்டியதில்லை. தனி சினிமாவை முன்னிறுத்த வேண்டியதில்லை, ஒரு இரசிகர் கூட்டத்தை தயார் படுத்த வேண்டியதில்லை, ஆனால் நீங்கள் மொழியைப் பற்றி பேசிதானே ஆக வேண்டும். அந்த மொழியை ஒரு குறிப்பிட்ட கலைஞர் செய்கிறார் என்பதினாலே அவரும் அங்கு வந்து கருத்தில் கொள்ள படுகிறார். நீங்கள் அதையும் அங்கு பார்க்க வேண்டும். தன்னுடைய பீடத்தை இன்னொருவனுடன் பகிர விரும்பாத மனநிலைதான் இப்படியான மனநிலை. தமிழ் நாட்டின் பொதுபுத்தியில் இருக்கின்ற கள்ள மெளனம் எனக்கு வேறொன்றையும் நினைவுப் படுத்துகிறது. கடந்த 15-30 வருடமாக எல்லாரும் சேர்ந்து சொல்வார்கள், நடந்து முடிந்தது, கண் முன்பே நடந்து முடிந்தது என இலங்கை பிரச்சனை குறித்து பேசுவார்கள். உரிய நேரத்தில் கள்ள மெளனத்தை விட்டு விட்டு பேச வேண்டிய மனிதர்களெல்லாம் தமிழ் நாட்டில் பேசாமல் போனதால் தான் இது நிகழ்ந்தது. இன-மொழி போராட்ட வட்டத்துக்குள் எனக்கு இப்படி தெரிகிறது. கிட்டதட்ட அதே போல் கலைக்குள் நடக்கும் கள்ள மெளனமாக இது தெரிகிறது. தமிழ்நாட்டின் பண்பாட்டுசாந்த கலையின் மீதான ஒரு கயமைத்தனம் எனக்கு இதில் தெரிகிறது. நீங்கள் கழட்டி வைக்கு கிரீடம் யாரோ ஒருவருக்கு சென்றுவிடும் என்ற பயம் இங்கு இருப்பவர்களுக்கு இருக்கிறது. இப்படி பார்த்தார்களென்றால் வளர்ச்சி அடையவே இயலாது.

கதை சார்ந்து பல சிறந்த முயற்சிகள் தமிழகத்தில் நடந்துள்ளது, வார்த்தைகளால் பேசுகின்ற திரைப்படம் நம்மிடம் மிக அதிகமாக இருக்கிறது. ஆனால் திரைப்பட மொழியில் பேசும் திரைப்ப்டம் குறைவு. பரதனின் பங்களிப்பை நான் அடிக்கடி குறிப்பிடுவதுண்டு. அதை பார்க்க தவறிவிட்டது தமிழ் சமூகம். அவர் எடுத்த படம் தேவர் மகனாகவும் இருக்கலாம், நாயர் மகனாகவும் இருக்கலாம். ஆனால் அந்த படம் செயலாற்றிய முறையை தமிழ் நாட்டின் பெரிய கலைஞர்களான சிவாஜி மற்றும் கமலை சார்ந்து தான் நாம் பார்த்துவிட்டோம். ஆனால் அதை தாண்டி அதன் பின் இருக்கும் இன்னொரு பங்களிப்பை படிக்க தமிழ் மக்களுக்கு தெரியவில்லை, அல்லது எடுத்துக் கொடுக்க தெரியவில்லை அல்லது எடுத்துக் கொடுக்க வேண்டாம் என மறைத்தார்கள். திரை மொழிக்கு அப்பாற்பட்டு, பழக்கபடாத அல்லாத மாற்றி அமைக்கப்பட்ட காட்சி படிமங்களின் வழியிலும், அதீத கற்பனை தன்மை வழியிலும், நடப்பு அரசியலை தைரியமாக பேசியதிலும் சூது கவ்வும் ஒரு புதிய அனுபவத்தை ஏற்படுத்தியது. நவீன தொடர்பு நிலை இல்லாத போது தான், பிரிந்து வெவ்வேறு தளத்தில் திரைப்பட முயற்சி செய்ய வேண்டி இருந்தது. தொடர்பு சாதன வளர்ச்சியில் ஒரு அமெச்சூரின் படைப்பும் மாபெரும் கலைஞரின் படைப்பும் youtube'இல் அருகருகே பார்க்க முடிகிறது. மக்களுக்கு முன்பே பரிட்சாத்தம் நடக்க கூடாது என ஏதேனும் சட்டம் இருக்கிறதா என்ன?

மிஷ்கினின் காட்சி படுத்தும் வரிசை, அவரிடமிருந்தே முழுமையாக வருவதினால், அந்த படத்தொகுப்பு வடிவத்தை பார்ப்பதற்கு, தான் செய்வதை முழுவதாக ஏற்றுக்கொண்டு அவரோடு சேர்ந்து படத்தொகுப்பு செய்தால் போதும் என்கிற அவருடைய மனநிலை சரியானது தான். படத்தொகுப்பில் தனக்கான சக்தியையும் வீரியத்தையும் கொண்ட படத்தொகுப்பாளரின் பங்களிப்பு மிஷ்கினுக்கு இப்போது தேவை என்பதை நான் அவரிடம் சொல்லிக்கொண்டே இருந்திருக்கிறேன். அதை தைரியமாக இன்னொருவர் கையில் ஒப்படைக்கும் துணிவு அவரிடத்தில் இல்லை, ஏனென்றால் அவரின் தனித்த வடிவமாக அதை நினைக்கிறார். தான் விரும்புவதை, தான் சொல்வதை செய்யும் ஒரு அசோசியேட்டாக வேலை செய்யும் ஒரு படத்தொகுப்பாளர் இருந்தால் போதும் என அவர் கருதிய காலகட்டத்தைத் தாண்டிவிட்டார். படத்தொகுப்பு கலையின் முழுமையான விஷயங்களை தெரிந்த, தனித்து சிந்தித்து இயங்கும் சக்தியை கொண்ட ஒரு படத்தொகுப்பாளர், மிஷ்கினுடைய ஆறு படங்கள் மூலமாக அவர் எப்படியெல்லாம் தன்னுடைய சினிமாவை கட்டமைக்கிறார் என்பதை புரிந்துக்கொண்டு, இவருக்கு சரிசமமாக பக்கத்திலிருந்து படத்தொகுப்பு செய்வதற்கான சக்தியுடன் சேரும் போது இந்த திரைப்படத்திற்கான மொழி இன்னொரு கட்டுத்துக்கு போகும் என நான் நம்புகிறேன். இதை மிஷ்கினிடமே நான் பரிமாறியிருக்கிறேன்.
நாவலிலிருக்கும் பல அம்சங்கள் சினிமாவில் கொண்டுவர இயலாது என்பது உண்மை. நாவலில் இருக்கும் அனைத்தையும் மிக உண்மையான படைப்பாளியும் மாற்ற கூடும். ஆனால், சினிமா தாழ்மையானது, படிப்பதற்கு குறைவான தகுதி கொண்ட ஒன்று என்பது தவறானதாகும். இலக்கிய ஆசிரியர்கள் திரைப்படத்தை எப்படி படிப்பது என கற்றுக்கொள்ள வேண்டும்.

இக்கட்டுரைக்கு ஆலன் புல்வெர்னெஸின் கருத்துக்களும் உதவியது.