உலக சினிமா சாதனையாளர்கள் - 2 லூயி புனுவெல்

வருடம் 1928 அந்தாலுசியன் நாய் என்ற ஒரு பிரெஞ்சு மொழித் திரைப்படம் வெளிவருகிறது. “அந்தாலு” என்பது ஸ்பெயின் தேசத்தின் தென்பகுதியில் உள்ள ஒரு பிரதேசம். பிரெஞ்ச் மொழியில் இப்படத்தை இயக்கியவர் ஸ்பெயின் தேசத்தைச் சேர்ந்த லூயி புனுவெல். (Luis Bunuel) கிருத்துவ மத நிறுவனங்களும், சமூகத்தின் பல அங்கங்களும் ஏற்படுத்திய இறுக்கமான ஒழுக்க கோட்பாடுகள் மனித மனத்தில் இயல்பாகத் தோன்றும் ஆசைகள், விருப்பு –வெறுப்புகளை வெளிப்படுத்த பெரும் தடையாக இருந்தன என்றும், அதன் விளைவாகவே வக்கிரங்கள் எழுகின்றன என்றும் இப்படத்தில் அவர் சொல்கிறார். அதில் ஒன்றும் புதுமை இல்லை. அவருக்கு முன்னமையே பலர் இவ்வாறு சொல்லியுள்ளனர். ஆனால், திரைப்படம் என்ற ஒரு சாதனத்தின் மூலமாக, இதை வெளிப்படுத்த அவர் கையாண்ட உத்தி இதை ஒருவிதத்தில் முதன்மையாக்குகிறது. திரைப்பட வரலாற்றில் முதல் சர்ரியலிஸ (Surrealist) படம் என்று இது கருதப்படுகிறது.
சர்ரியலிஸம் (Surrealism) என்பது என்ன? பிரான்ஸ் நாட்டில் இலக்கிய, கலை உலகில் 1920- களில் தோன்றிய ஒரு இயக்கம் இது. Realism என்பது யதார்த்தம். Sur என்ற பிரெஞ்சு சொல் “மேலே, அப்பால்” என்று பொருள்படும் “யதார்த்தத்திற்கு அப்பால்” என்று இதை உத்தேசமாக தமிழில் மொழி பெயர்க்கலாம். இந்த இயக்கத்திற்கு உருவ, உள்ளடக்க ரீதியில் பல பரிமாணங்கள் ஏற்பட்டதால், இப்போதைக்கு ‘சர்ரியலிஸம்’ என்ற வேற்றுமொழிச் சொல்லையே பயன்படுத்தலாம். கற்பனையின் வேகம் அழகியல் (Aesthetics) வரம்புகளை உடைத்துக்கொண்டு செல்கையில், புற உலகைக் குறித்து ஏற்கனவே நம் மனதில் உள்ள பிம்பங்களையும் யதார்த்தத்தைப் பற்றிய பிரக்ஞையையும் மீறி தன்னிச்சையாகப் பறந்து செல்லும் ஒரு அறிவு பூர்வமான சாகச செயல்தான் சர்ரியலிஸ இயக்கம் என்பது அவர்களுடைய கோட்பாடு. இவ்வியக்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முதன் முறையாக 1924-ல் வெளியிட்டவர் ஆந்த்ரே ப்ரெதோன் (Andre Breton) என்ற பிரெஞ்சு எழுத்தாளர்.

தர்க்கவாதம், அழகியல், நெறிமுறைகள் என்ற அளவுகோல்களின் தடையின்றி உள் மனதின் எண்ணங்களை அப்படியே கொட்டிவிடுவது இவர்களுடைய படைப்பின் சிறப்பு அம்சம். இது ஒரு அற்புதமான, ஞான அனுபவத்தை அளித்தது என்று அவர்கள் கருதினர். கவிஞர்களின் மொழியையும், வண்ணக் கலைஞர்களின் யதார்த்தப் பார்வையையும் மறுத்த இவர்கள் எந்த இலக்கணத்திற்கும் கட்டுப்பட வேண்டிய அவசியம் இருக்கவில்லை. இருந்தும் புதுமையான இந்த அணுகல் பல பரபரப்பு அலைகளை எழுப்பியது. இதன் குறிக்கோள் என்ன, அது முழுமையாக நிறைவேறியதா?, பிற்காலத்தில் இவ்வியக்கம் எப்படி வளர்ந்தது என்பதெல்லாம் இக்கட்டுரைக்கு அப்பாற்பட்டது.

”அந்தாலுசியன் நாய்” திரைப்படத்தில், ஆரம்பத்தில் ஒரு மனித கண்ணை பிளேடு ஒன்று குறுக்காக வெட்டுவதான படிமம் வருகிறது. இது எதன் குறியீடு என்பது பற்றிப் பல விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. ஒரு முழுநிலவைப் பார்க்கும்பொழுது கரிய மேகம் ஒன்று அதை மறைக்கும் கொடுமையை இது குறிக்கிறதா? அல்லது, மரபுக் கண்களைப் பிடுங்கி விட்டு, வேறு ஒரு கண் கொண்டு இதைப் பார்க்க வேண்டும் என்கிறாரா? படத்தின் ஸ்கிரிப்டில் இப்படி இருந்தது.
முன்னொரு காலத்தில்...

ஒரு பால்கனி, இரவு நேரம். பால்கனி அருகில் ஒருவன் ஒரு பிளேடை கூர்மையாக்கிக் கொண்டிருக்கிறான்.

அந்த மனிதன் சன்னல் வழியாக வானத்தைப் பார்க்கிறான்...

வானத்தில் ஒரு முழுநிலவு. அதை நோக்கி மெல்ல நகர்கிறது ஒரு கரிய மேகம்.
ஒரு பெண்ணின் முகம். அகல விரிந்த கண்கள்...

பிளேடின் கூரிய நுனி கண் அருகே வருகிறது. ஒரு சிறிய மேகம் நிலவின் முன் நகர்ந்து அதை மறைக்கிறது.

பிளேடு கண் முன் நகர்ந்து, அதைக் கீறிப் பிளக்கிறது.

ஆசைகள் நிறைவேறும் என்ற எதிர்பார்ப்பும், அதன் சாத்தியக் கூறுகள் பிரிக்கப்படும் அவலமும் ஒன்றுக்கொன்று முரண்பட்டிருப்பதைக் குறியீடும் முன்னுரை – படிமங்களினால் ஆன முன்னுரை – திரைப்பட வரலாற்றில் ஒரு புதுமை. திரைப்பட உலகில் லூயி புனுவெல் என்ற வித்தியாசமான ஒரு படைப்பாளி வந்து விட்டார் என்பதை அறிவித்தது இத்திரைப்படம்.

1930ல், பொற்காலம் (Age d’or) என்ற இரண்டாவது பிரெஞ்சுத் திரைப்படம், மதக் கோட்பாடுகளின் ஒடுக்குமுறைச் சூழலில் இடம் பெறும் நிறைவேறாக் காதலைப் பற்றியது. மஜோர்கான் என்ற விசித்திரமான குழுவினர் பாறைகள் நிரம்பிய தீவு ஒன்றில் புதிய ரோமா புரி நகரத்தை நிறுவ முயல்கின்றனர். அதற்கு முன்பே அங்கு சென்ற பாதிரியார்கள் சிலர், மத வழிபாட்டை நடத்தும்போது எலும்புக்கூடுகளாக மாறி விடுகின்றனர். புதிதாக வந்தவர்களின் தொடக்க விழாவில் ஒரு தடங்கல் செய்வது தரையில் ஒருவரையொருவர் அணைத்தபடி இருக்கும் இரு காதலர்களின் குரல்கள்.

காதலர்கள் பிரிக்கப்படுகிறார்கள்; ஆண் சிறை செய்யப்படுகிறான். பெண் விடுவிக்கப்படுகிறாள். அவன் பிறகு தப்பி வந்து அவளுடன் சேர்ந்த பிறகும், உடலுறவு கொள்ளும் முயற்சியில் பல தடங்கல்கள்; தொலைபேசி அழைப்புகள், பெண்ணின் தந்தையின் வருகை, அது தவிர அவர்களுக்கிடையே உள்ள தயக்கங்கள். இந்தப் படத்தில் வன்முறை குறித்து அலட்சியமாகவே இருக்கின்றனர் என்பதும் தெரிகிறது.

பல சமூக நியதிகளைத் தகர்த்தெறிந்த இந்தப் படம் ஒரு இழிவூட்டும் விவகாரம் என்று எதிர்ப்புக் குரல்கள் கிளம்பின. படம் தடை செய்யப்பட்டது. ஏற்கனவே நிலவி வந்த பல மதிப்பீடுகளை இப்படம் உடைத்தெறிந்ததே இதற்கு காரணம்; தாய்நாடு, மதப்பற்று, குடும்பம், திருமணம், அரசியல்,. பாரிஸ் நகரத்தின் முனிசிபல் கெளன்சிலர் “சர்ரியலிஸக் குப்பைகளை”த் தடை செய்யும் சட்டம் ஒன்று வேண்டுமென்றார். இந்த ஆர்ப்பாட்டத்தின் ஒரு விளைவு; இதுவரை அறிவுஜீவகளுக்கு மட்டுமே பரிச்சயமாகியிருந்த சர்ரியலிஸப் புரட்சி. பரவலாகப் பொதுமக்களைத் தொட்டது. கருத்து ரீதியில் அவதூறாகக் கருதப்பட்ட இந்த படம், உருவ, உத்தி ரீதியில் பல புதுமைகளை அறிமுகப்படுத்தியது. காட்சிக்குக் காட்சி ஒரு தொடர்பு இருக்கும் மரபை எதிர்த்த புனுவெல், நாவல்களில் வருவதுபோன்ற புளித்துப்போன ஒரு மரபு அம்சம் திரைப்படத்தின் தனித்தன்மையைப் பாதித்தது என்றார். பணக்கார வரவேற்பறையின் நடுவே பாமர மக்கள். கட்டிலில் படுத்திருக்கும் பசு மாடு போன்ற திடுக்கிடும் காட்சிகள் திரைப்படத்தில் வெளிப்படும் மனித உள் மனத்தின் கற்பனைகளாக அமைந்தன.

ஸ்பெயின் தேசத்தில் படமாக்கப்பட்ட அவரது மூன்றாம் படம், ”உணவு இல்லாத பூமி”, (Terre Saus Pain) ஸ்பெயினில் உள்ள மலைப்பிரதேசம் ஒன்றில் வாழும் மக்களைப் பற்றியது. இவர்களது வாழ்க்கையின் பிரதான அம்சம் பட்டினிதான். ஏழ்மை, நோய்நொடி, மதம் மூடநம்பிக்கை, குரலை எழுப்பக் கூட முடியாத சோகம் இவற்றின் கொடுமைகளை இவரது காமிரா படம் பிடிக்கிறது. இடையிடையே வரும் விவரணை புறவய நோக்குடன், உணர்ச்சிகளற்று ஒலிக்கிறது. தான்படும் இன்னல்கள் மூலம்தான் மனித வாழ்க்கைக்கு அர்த்தமும் கண்ணியமும் கிடைக்கின்றன என்ற பழைய நம்பிக்கை ஒரு அப்பட்டமான பொய் என்றார் புனுவெல். ஸ்பெயின் அரசாங்கம் இந்தப் படத்திற்கு தடை விதித்தது. அவருடைய முதல் மூன்று படங்களுமே மதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தன என்ற காரணத்தினால் பல ஆர்ப்பாட்டங்களைத் தோற்றுவித்தன. அவரது திரைப்பட படைப்புகளுக்கு நிதி வசதி அரிதாகியது.
அடுத்த பல ஆண்டுகள் அவருக்கு ஒரு வித வனவாசம். அமெரிக்கா சென்று, வார்னர், பாரமெளண்ட், ஸ்டூடியோக்களுக்கு டப்பிங் செய்தும், போர்க்காலத்தில் பிரச்சாரப்படங்கள் எடுத்தும் பிழைப்பை நடத்தினார். பிறகு மெக்ஸிகோவிலிருந்து அழைப்பு வந்தது. 1950களில் சுமார் பத்து வர்த்தக படங்களை இயக்கினார். இந்தப் படங்களில் குறிப்பிடும்படியாக ஒன்றும் இல்லை என்று அவரே சொல்லியுள்ளார். (வர்த்தகப் படங்கள் இயக்க வேண்டியிருந்ததை அவர் நியாயப்படுத்தவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது)

இருந்தபோதிலும், இந்த காலகட்டத்தில் 1951-ல் வெளிவந்த லாஸ் ஒல்விடாடோஸ் (los Olvidados) என்ற படம் ‘கான்’ திரைப்பட விழாவில் அவருக்கு ‘சிறந்த இயக்குனர்’ விருதைப் பெற்றுத் தந்தது. இளவயதுக் குற்றவாளிகளை மையமாகக் கொண்ட இப்படம் ஒரு உருக்கமான, வர்த்தக சினிமா போன்று தோன்றினாலும் இதன் பாத்திரப் படைப்பில் புனுவெலின் ஒரு அக்கறை மேலோங்கி இருந்தது; பிறவியில் உடல் ஊனமுற்றவர்களைப் போல, உணர்வு ஊனமுற்றவர்களின் அன்புக்கான தேடல் அது.

1958ல் கான் விழாவில் சிறந்த திரைப்படம். லூயி புனுவெலின் நாஸரின் (Nazarin). நாஸரின் என்பவர் ஒரு தொழிலாளி – பாதிரியார். ஏழைகளிடையே வாழ்ந்துகொண்டு, தன்னிடம் உள்ளதை எல்லாம் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்கிறார். மத நிறுவனங்களும், காவல்துறையும், அவரை சந்தேகிக்கின்றன. தன்னுடைய பாதிரியார் ஆடைகளைக் களைந்து, சாதாரணக் குடிமகனின் உடைகளுடன் பாதிரித் தொழிலைச் செய்கிறார். அப்படியும் அவரை சமூகம் தவறாகப் புரிந்து கொள்கிறது. நிராகரிக்கிறது.
சுமார் முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் தனது தாய்நாடான ஸ்பெயினுக்குத் திரும்பினார். 1961-ல் அங்கு அவர் தயாரித்த படம் விரிடியானா (Viridianna). மீண்டும், கான் விழாவில் சிறந்த திரைப்பட விருது, இதன் கதாநாயகி கன்னிமாடத்தில் சேர விருப்பப்படும், மதப்பற்றுள்ள இளம்பெண், அதற்குத் தயாராகிக்கொண்டிருக்கும் நிலையில், வயதான தன்னுடைய மாமாவைப் பார்க்கப் போகிறாள். மாமா அவளுக்கும் அயக்க மருந்து கொடுத்து, தன்னுடைய இறந்துபோன மனைவியின் திருமண ஆடைகளை அவளுக்கு அணிவித்து, அசைவற்று இருக்கும் அப்பெண்ணுடன் உடலுறவு கொள்ள முயலுகிறார். மறுநாள் காலை, வேலைக்காரி மூலம் நடந்ததை அறிந்த அப்பெண் அதிர்ச்சி அடைகிறாள். மற்றும் ஒரு பெரும் அதிர்ச்சி. விஷயம் வெளியில் தெரிந்து, அவமானம் தாங்காத அவளுடைய மாமா தூக்குப் போட்டுக்கொண்டு இறக்கிறார். மாமாவின் மகன் – தகாத முறையில் பிறந்த மகன் – அவருடைய சொத்தைப் பராமரிக்க வந்து சேருகிறான். முற்றிலும் குழம்பியிருக்கும் விரிடியானா இனிமேல் இவனைத்தான் சமாளிக்க வேண்டும்.

பரிசு கிடைத்த மறுநாளே ஒரு கத்தோலிக்க நாளேடு கிருத்துவ மதத்தை இழிவுபடுத்தும் நாஸ்திகத் திரைப்படம் இது என்று குற்றம் சாற்றியது. மத நிறுவனத்தைப் பகைத்துக் கொள்ள விரும்பாத பிராங்கோ அரசாங்கம் உடனே பின்வாங்கியது. படத்தின் எல்லாப் பிரதிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. தகவல் துறை மந்திரி பதவி நீக்கம் செய்யப்பட்டார். கான் திரைப்பட விழாவில் தங்கப் பதக்கம் பெற்ற படத்தைப் பார்ப்பதையோ, அதைபற்றிப் பேசுவதையோ அதிகார பூர்வமாக தடை செய்யப்பட்ட ஒரே நாடு என்ற பெருமை (?) ஸ்பெயினுக்கு கிட்டியது. இதுபோன்ற விவகாரங்களில் அநுபவம் மிக்க லூயிபுனுவெல், ஸ்பெயினிலிருந்து பாரிஸிக்குப் போகும்பொழுது இப்படத்தின் ஒரு பிரதியைத் தன்னுடைய பெட்டியில் எடுத்துச் சென்றிருந்தார். 1977ல், பிராங்கோ இறந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இப்படம் முதல் முறையாக ஸ்பெயின் மக்களிடையே வெளிவந்தது.

1964-ல் பிரெஞ்சு மொழியில் வேலைக்காரியின் நாட்குறிப்பு என்ற படமும், 1970-ல் வந்த மில்கிவே (The Milky way) குறிப்பிடும்படியாக இருந்தன. இது தவிர வேறு சில படைப்புகளும் வெளிவந்தன. 1969ல் மீண்டும் ஸ்பெயினுக்கு அழைக்கப்பட்டு, டிரிஸ்டானா (Tristanna) என்ற படத்தை இயக்கினார். 17ம் நூற்றாண்டிலிருந்த ஸ்பானிய சமூகத்தின் வக்கிரங்கள் இன்னமும் மாறவில்லை என்பதாக இருந்தது. இவர் கருத்து, டிரிஸ்டானா, சுதந்திரத்தை விழையும் இளம் பெண், டான், லோப் என்ற முதியவர் தன்னிடம் வேலை பார்க்கும் பெண்களிடம் ஆளுமை கொண்டு அவர்களை அடைய வேண்டும் என்று ரகசியமாக விரும்பும் ஒரு சராசரி ஆணின் பிரதிபலிப்பு.

சமூகத்தின் அவலங்களை, குறிப்பாக ஸ்பானியப் பின்னணியில், விமர்சித்த இவர், இதற்குப் பிந்தைய காலகட்டத்தில் பிரெஞ்சு மொழியில் எடுத்த படங்களில் இதே பிரச்சினையை பொதுவான கண்ணோட்டத்தில் பார்க்கிறார். பலவிதங்களில் புதுமையான நோக்கையும், புதுமையான உத்திகளையும் அறிமுகப்படுத்திய லூயி புனுவெல் திரைப்பட உலகின் ஒரு முக்கியமான சாதனையாளர்.

திரைப்பட பணி வரலாறு

அந்தாலூசியன் நாய் (1928)
பொற்காலம் (1930)
உணவு இல்லாத பூமி (1932)
கிராண்கசினோ (1947)
லாஸ் ஓல்விடாடோஸ் (1951)
காட்டில் மரணம் (1956)
நாஸரின் (1956)
விரிடியானா (1961)
த எக்ஸ்டர்மினேடிங் ஏஞ்சல் (1962)
வேலைக்காரியின் நாட்குறிப்பு (1964)
மில்கிவே (1969)
டிரிஸ்டானா(1970)
பூர்ஷ்வாவின் நாசூக்கான கவர்ச்சி (1972)
புலப்படாத ஆசை(1974)

- தொடரும் -

சலனம் இதழில் வெளிவந்த சில முக்கியமான கட்டுரைகளை, அதன் தேவை கருதி, பேசாமொழியில் மறு பிரசுரம் செய்கிறோம். அதன்படி, சலனம் இதழில் தொடராக வெளிவந்த, உலக சினிமா சாதனையாளர்கள் தொடரை இங்கே வாசகர்களுக்காக படிக்க கொடுக்கிறோம். சலனம் இதழ் ஆசிரியர்க்கு நன்றி.