ஒரு கதை கவிதையாகும் தருணம்

கதை நேரம் - பிரசாதம் குறும்படம் - பாலு மகேந்திரா
தமிழகத்தின் தொலைகாட்சி வரலாற்றி நடந்த ஒரு அருமையான அழகியல் நிகழ்வு, பாலு மகேந்திரா அவர்கள் இயக்கத்தில் சன் டி.வி. யில் தொடராக வெளிவந்த "கதை நேரம்" நிகழ்ச்சி. அருமையான சிறுகதைகளை சிறப்பான குறும்படமாக பாலு மகேந்திரா வடித்திருப்பார். இந்த குறும்படங்கள் சார்ந்து பல மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும், இத முயற்சியை போற்றும் விதமாக கதை நேரத்தில் வெளிவந்த அனைத்து குறும்படங்கள் பற்றியும் இங்கே விரிவாக அலசப்படுகிறது.
பாலு மகேந்திரா
"வாழ்க்கையின் எந்த பல்சக்கரங்களுக்குள்ளும் என் வேட்டி நுனி கூடச் சிக்கி இதுவரை நைந்து போகவில்லை. இருந்தாலும் என் அக்கறை சார்ந்திருக்கிற உலகம் எது என்பதை என் படைப்புகள் சொல்லும்" - வண்ணதாசன்.

எத்தனை பேருக்கு வாய்க்கிறது இப்படிக் கிழிந்து போகாத வேட்டி ? அப்படி வேட்டி நுனி கூட கசங்காத வாழ்க்கையில் என்ன சுவாரஷ்யம் இருக்க முடியும் ? வண்ணதாசனைப் பார்க்க வாய்க்கும் போது கேட்க வேண்டும் எனக்கு. இருத்தலுக்கும், மரித்தலுக்கும் இடையே சிக்கிச் சுழலும் இந்த பற்சக்கர வாழ்க்கையில் விரலே சிக்கினால் கூட, ஓடி வந்து காப்பாற்றும் கை ஒன்றாவது இருக்கத் தானே செய்கிறது ஒவ்வொருவருக்கும். அந்த நம்பிக்கையில் தானே சுழலுகின்றன நம் அனைவரது சக்கரங்களும்.
இப்படி அடுத்தவர் மேல் கொஞ்சமாவது அக்கறை மிச்சமிருக்கும் இந்த வாழ்வில், சூழ்நிலையின் நிமித்தம் ஒரு போலீஸ் கான்ஸ்டேபிளுக்கும், ஒரு கோவில் அர்ச்சகருக்கும் இடையே நடக்கும் ஒரு மிக எளிய போராட்டமே இந்த " பிரசாதம் " குறும்படம்.
தமிழின் குறிப்பிடத்தக்க இலக்கிய ஆளுமைகளுள் ஒருவரான சு.ரா என்றழைக்கப்படும் சுந்தர ராமசாமியின் இந்தச் சிறுகதை - பிரசாதம் - 1958 ஆம் ஆண்டு, "சரஸ்வதி" இதழில் வெளிவந்தது. வாழ்வோடு இசைந்து போகும் எந்த ஒரு படைப்பும் காலம் கடந்தும் நிற்கும் என்பதற்கு சாலச்சிறந்த சான்று இச்சிறுகதை. இல்லாது போனால், எழுதப்பட்டு 41 ஆண்டுகளுக்குப் பின்னாலும் கூட பாலுமகேந்திரா என்னும் வெள்ளித்திரைச் சிற்பியால் பட்டை தீட்டப்பெற்று சின்னத்திரையில் ஒரு வைரமாய் ஜொலித்திருக்க முடியுமா இப்படி?
பாலுமகேந்திரா - தான் ஒளிபதிவு செய்த முதல் படத்திற்கு சிறந்த ஒளிபதிவிற்கான தேசிய விருது, தான் இயக்கிய முதல் திரைப்படத்திற்கு சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது உட்பட ஐந்து தேசிய விருதுகளுக்குச் சொந்தக்காரர். குழந்தைமையிலிருந்து திரைப்படக் கனவுகளில் வாழ்ந்த இவர் போன்ற ஒருவருக்கு மட்டுமே இத்தனையும் சாத்தியம். எது எப்படியோ அவர் ஆசைப்பட்டது போல் "ரெய்ன்" என்று சொன்னால் இன்றைக்கும் கூட மழை பெய்யும்.
1999 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் 2000 ஆம் ஆண்டு செப்டம்பர் வரை, சன் டி.வி-யில் வாரவாரம் பாலுமகேந்திரா இயக்கத்தில் "கதை நேரம்" என்னும் குறும்படத் தொகுப்பு வெளிவந்தது. வாரம் ஒரு குறும்படம் வீதம், தமிழின் ஆகச்சிறந்த 52 சிறுகதைகள் குறும்படங்களாக எடுக்கப்பட்டு வெளிவந்தன. அதில் ஒன்றுதான் சு.ரா.வின் "பிரசாதம்". பொதுவாக சினிமாவில் இருந்து தொலைக்காட்சிக்கு வருவதை கெளரவக் குறைவாக இன்றும் நினைக்கும் இந்தத் தமிழ்ப்பட வெளியில், சின்னத்திரையிலும் தன் முத்திரையை அழுத்தமாக பதித்தவர் பாலுமகேந்திரா.

கதை இவ்வளவுதான். 7347 என்றே கதை முழுக்க அழைக்கப்படும் அந்த போலீஸ் கான்ஸ்டேபிளின் குழந்தைக்கு மறுநாள் பிறந்த நாள். மனைவி ஆசைப்படி பிறந்த நாள் கொண்டாட ஒரு ஐந்து ரூபாய் தேவைப்படுகிறது (கதை நடக்கும் காலம் 1958). அதை, யாரிடமாவது மாமூல் வாங்கித் திரட்டப் புறப்படுகிறான் 7347. அன்றைக்கென்று பார்த்து எல்லாரும் ஒழுங்காக நடந்து கொள்கிறார்கள். யாரும் சிக்கவில்லை. கடைசியாக ஒரு கோவில் அர்ச்சகர் தபால் போட வருகிறார். அவர் தபால் போடும் போது இடைஞ்சலாக இருக்கும் மற்றொரு தபாலை எடுத்துவிட்டு போட முயற்சிக்கையில், அதையே குற்றமென பிடித்துக் கொள்கிறான் 7347. அவரும் பலவிதமாகக் கெஞ்சிப் பார்க்கிறார். மசியவில்லை. இவனோ ஆனமட்டும் மிரட்டிப் பார்த்து கடைசியாக 10 ரூபாயை லஞ்சமாகக் கேட்கிறான். அர்ச்சகரோ பைசா தருவதற்குத் தயாராக இல்லை. இருந்தால் தானே கொடுப்பதற்கு என்கிறார். வாக்குவாதம் வலுப்பட்டும் ஒன்றும் வேலைக்காக வில்லை. சரிப் போய்த் தொலைகிறது என்று 7347 அவனே, அவரிடமிருந்து விலகிப் போகிறான். அவரோ விடுவதாய் இல்லை. கடைசியில் அவன் தன் நிலைமையை ஒரு கடைக்காரரிடம் எடுத்துச் சொல்வதைக் கேட்கிறார் அர்ச்சகர். இப்போது அவர் புரிந்து கொள்கிறார். இருந்தாலும் அவனை விடாமல் இவர் தொடர, ஒரு புள்ளியில் இருவரும் புன்னகைத்து, வெடித்துச் சிரிக்கிறார்கள். பின்பு பேசிப் பிரிகையில், அர்ச்சகரே 7347ஐ அழைத்து மடியிலிருந்து ஐந்து ரூபாயை எடுத்துக் கொடுத்து குழந்தை பிறந்தநாளைக் கொண்டாடுமாறு சொல்கிறார்.
இவ்வாறு, கதையாகப் படிக்கும் பொழுது, எளிமையாக ஆரம்பித்து, லஞ்சம் வாங்கும் அந்த கான்ஸ்டேபிளிடத்திலும் கூட சிறு பரிவை ஏற்படுத்தி, அதில் அவன்படும் அவஸ்தைகளை விவரித்து, அர்ச்சகருடனான உரையாடலில் ஒரு மென் நகைச்சுவை கலந்து, இறுதியில் உருக்கத்துடன் முடிகிறது கதை.
" சூரியக் கதிர்களைத் தன் சின்னஞ்சிறு குவிமையத்தின் வழி வீரியத்துடன் வெளிப்படுத்தும் குவி ஆடியின் திறனை ஒத்த சிறுகதைக் கலை, ஒட்டுமொத்தப் படைப்பாளுமையின் ஜீவனைத் தன்னுள் அடக்கியிருக்கும் என்பதில் ஐயமில்லை " என்கிறார் ' படைப்பு வெளியில் சுரா வின் பயணம் ' குறித்த கட்டுரையில் அரவிந்தன். இத்தகைய செறிவுள்ள ஒரு சிறுகதையை, அதன் வீரியம் குறையாமல் திரைப்படமாக்குவதில் எத்தனையெத்தனை சிக்கல்களை கையாள நேர்ந்திருக்கும்?

முதலில் குறைந்தது ஐம்பது கதைகளாவது படித்துத்தான் இந்தக் கதையைத் தேர்ந்தெடுத்திருக்கவே முடியும். இதை பாலு மகேந்திராவிடம் இக்குறும்படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றிய இயக்குனர் வெற்றிமாறன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். ஏனெனில் எல்லாச் சிறுகதைகளையும் குறும்படங்களாக்கிவிட முடியாது. ஜெயமோகனின் "ஊமைச் செந்நாய்", வண்ண நிலவனின் "மிருகம்", சாரு நிவேதிதாவின் "முள்" இவையெல்லாம் உலக இலக்கிய வரிசையில் வைக்கப்பட வேண்டிய சிறுகதைகள்தாம் ஆனால் அவ்வளவு சுலபமாக குறும்படமாக்கிவிட முடியாது. உதாரணத்திற்கு சாருவின் முள் கதையையே எடுத்துக் கொள்வோம். அது அப்பாவின் சகோதரியான அத்தைக்கும், மருமகனுக்கும் இடையேயான அளவிலாத அன்பைப் பேசியிருக்கும். கொஞ்சம் பிசகினாலும் குடி கெட்டுவிடும். நான் ஏன் இங்கு இதைச் சொல்கிறேன் என்றால், நாம் திரையில் பார்க்கும் ஒரு குறும்படத்திற்கு பின்னால், "ஆக்ஷன்" சொல்லுவதற்கு முன்னால் எத்தகைய உழைப்பு 
சரி படித்து, புரிந்து, கதை தேர்ந்து எடுத்தாயிற்று. இப்போது, இச்சிறுகதைக் கேற்ற திரைக்கதை எழுத வேண்டும். இங்கு தான் இயக்குனருக்கு முதல் சிக்கல் ஆரம்பிக்கிறது. என்ன சிக்கல்? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். நீங்கள் ஒரு படத்திற்கு போகிறீர்கள். அந்த படத்தின் கதையை உங்கள் நண்பர் உங்களுக்கு ஏற்கனவே சொல்லிவிட்டார். அதையும் மீறி அந்தக் கதையில், திரைப்படத்தில் உங்களை ஒன்றச் செய்வது சாதாரண காரியமா? ஒரு தெரிந்த கதைக்கே இப்படி என்றால், புகழ்பெற்ற சிறுகதைகளைப் படமாக்கும் போது, பார்வையாளர்களில் பலர் அந்தக் கதையை ஏற்கனவே படித்திருப்பார்கள். அதைப் படிக்கும் போதே அவர்கள் மனதில் ஒரு குட்டி சினிமாவே ஓட்டிப் பார்த்திருப்பார்கள். எனவே அவர்களின் சினிமாவை விட கொஞ்சம் சிறப்பாக நாம் கொடுத்தால் மட்டுமே வெற்றி என்பது சாத்தியம் இங்கே. 
உலகெங்கும் திரைக்கதையின் பிதாமகராகக் கொண்டாடப்படும் சிட் ஃபீல்ட், திரைக்கதையை இப்படி வரையறுக்கிறார் - " திரைக்கதை என்பது, காட்சிகள், வசனங்கள் மற்றும் விவரிப்பின் மூலமாகச் சொல்லப்பட்டு, விறுவிறுப்பான ஒரு கட்டமைப்பினுள் வைக்கப்படும் ஒரு கதை.". ஆக இந்தச் சிறுகதையை காட்சிகளாகவும், வசனங்களாவும் விவரித்து திரைக்கதையாக மாற்ற வேண்டும். சிட் ஃபீல்ட் கூட, திரைக்கதையில் இருக்க வேண்டிய கூறுகளாக காட்சிகள், வசனங்கள் மற்றும் விவரிப்புகள் என்று மூன்றோடு முடித்துக் கொண்டார். பாலுமகேந்திரா அதற்கும் ஒருபடி மேலே போகிறார். அவர் இப்படிச் சொல்கிறார் : " நான் இயக்கும் படங்களுக்கான இசை, குறிப்பாக பின்னணி இசை எங்கு தொடங்கி எங்கு முடிய வேண்டும், அது எப்படிப்பட்ட இசையாக இருக்கவேண்டும் என்பவற்றில் நான் வெகு உன்னிப்பாக இருப்பேன். இவற்றையெல்லாம் அந்தந்தப் படங்களுக்கான திரைக்கதைகளை எழுதும்போதே நான் தீர்மானித்துக் கொள்வேன். "
திரைக்கதை ஜாம்பவானான பாலுமகேந்திராவிற்கு இக்குறும்படம் மிகச் சாதாரண விஷயம். அதை அவர் கையாண்டிருக்கும் விதம் குறித்து கொஞ்சம் பார்க்கலாம். சிறுகதையை அவர் வரிக்கு வரி அப்படியே எடுத்துத் திரைக்கதையாக மாற்றவில்லை. காட்சிப்படுத்தும் சாத்தியமுள்ளவற்றையும், அப்படிக் காட்சிப்படுத்தும் போது பார்வையாளனிடத்தே சிறு சலிப்பையோ சின்ன நெருடலையோ உண்டாக்காதவற்றையே அவர் காட்சிகளாக மாற்றியுள்ளார். இதில் அவர் மிகக் கவனமாக இருந்திருக்கிறார். சான்றாக, சிறுகதையில் - அர்ச்சகர் தீடிரென்று கதையின் நடுவில் உதயமாகும் ஒரு கதாப்பாத்திரம். மேலும் அவரிடம் எப்படி அந்த ஐந்து ரூபாய் இருந்தது பற்றியெல்லாம் குறிப்பில்லை. ஆனால் குறும்படத்தில், அந்த அர்ச்சகருக்கு நூறு ரூபாய் விழுவதுதான் ஆரம்பக் காட்சியே. (ஆமாம், காலத்திற்கு ஏற்ப பண மதிப்பு உயருமல்லவா?). இங்கும் சிட் ஃபீல்ட் சொன்ன திரைக்கதை நுட்பம் மிகச் சரியாகவே பின்பற்றப்பட்டு இருக்கும். அவர் சொல்வது இது தான். எந்தத் திரைப்படமாக இருப்பினும் படத்தின் முக்கிய பாத்திரங்களின் அறிமுகம் முதல் 15 நிமிடத்தில் முடிந்து, படம் கதைக்கருவை நோக்கிப் பயணப்பட்டிருக்க வேண்டும். இது குறும்படம் ஆதலால் முதல் ஐந்து-ஏழு நிமிடத்திலேயே படம் கதைக்கருவை நோக்கி பயணப்பட ஆரம்பித்திருக்கும். மையக்கரு என்ன? குழந்தை பிறந்த நாளுக்கு பணம் திரட்டுதல்.
மேலும் இதே காட்சியையே மாண்டேஜ் எடிட்டிங் முறைக்குச் சான்றாகவும் கூறலாம். அது என்ன மாண்டேஜ் எடிட்டிங்? ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத காட்சிகள், திரைப்படத்தின் வேறு ஒரு புள்ளியில் தொடர்பு படுத்திக் காட்டப்படுவது. அல்லது பார்வையாளனின் கற்பனைக்கு விட்டுவிடுவது. இந்த முதல் காட்சியில் வரும் நூறு ரூபாயைத்தான் கடைசிக் காட்சியில் அர்ச்சகர் எடுத்துக் கொடுப்பார்.
அதே போன்று திரைக்கதை இலக்கணப்படி, எந்த ஒரு திரைக்கதையும் தொடக்கம், மையம், முடிவு என்று மூன்று பகுதிகளாகப் பிரிக்கப் பட்டும், அப்பிரிந்த பகுதிகள் சரியான காட்சியமைப்பால்/சம்பவங்களால் இணைக்கப்பட்டும் இருக்க வேண்டும். இக்குறும்படத்தில் குழந்தையின் பிறந்த நாள் குறித்தான போலீஸ்காரனின் மனைவியின் கற்பனையும், அதை விவரிக்கும் பகுதிகளும் தொடக்கம். பின்பு கான்ஸ்டேபிள் பணத்திற்காக படும்பாடு அத்தனையும் நடுப்பகுதி. அர்ச்சகரின் விடாப்பிடியும், கான்ஸ்டேபிள் அவரை விட்டு விலகிப்பின் சேர்தலும் அழகான ஒரு நேர்மறை முடிவு. இவை அத்தனையும் வலுவான சம்பவங்களால் அழகாக இணைக்கப்பட்டிருக்கும். இக்குறும்படத்தில் முக்கியமான சம்பவம் என்றால் எதைக் கூற முடியும்? தபால் பெட்டியில் அர்ச்சகர் தபால் போடும் சம்பவமே அது. அந்தச் சம்பவம் பார்வையாளனுக்கு அதுவரையில் கான்ஸ்டேபிளின் மீது இருந்த பரிவை அப்படியே அந்த அர்ச்சகரிடத்தில் கொண்டு சேர்த்துவிடுகின்றது. இது பார்வையாளனுக்கு அடுத்து அர்ச்சகருக்கு என்ன நேருமோ என்ற பதற்றத்தைக் கொடுத்து அவனை கதையின் அடுத்த நிலைக்கு இழுக்கிறது. இப்படி எந்த ஒரு புள்ளியிலும் தொய்வடையாமல் பயணிக்கிறது திரைக்கதை.
திரைக்கதையின் மற்றுமொரு மிக முக்கிய சாராம்சம் கதாப்பாத்திரங்களின் வடிவமைப்பு. சிறுகதைகளில் பொதுவாக முக்கியமான கதாப்பாத்திரங்களுக்கு மட்டுமே சிறிய வருணனை தரப்படும். இல்லாவிட்டால் அது நாவலாக மாறிவிடும் அபாயம் உண்டு. ஆனால் திரைப்படத்திலோ / குறும்படத்திலோ பக்கம் பக்கமான வருணனைகளைக் கூட ஒரே ஒரு காட்சியில் காட்டிவிட முடியும். உதாரணத்திற்கு கான்ஸ்டேபிளின் மனைவியாக வரும் மெளனிகாவின் கதாப்பாத்திரத்தையே எடுத்துக் கொள்வோம். இந்தக் கதாப்பாத்திரம் பற்றிய விவரிப்பு ஒன்றும் சிறுகதையில் பெரியதாக இல்லை. ஆனால் பார்வையாளனுக்குத் தெரியும். ஒரு சாதாரண போலீஸ்காரன் மனைவியின் தோற்றமும், அவளது மனோபாவமும். இங்கு அந்த கதாப்பாத்திரம் ஒரு நல்ல உடை உடுத்தியிருந்தால் கூட போதும் பார்வையாளனின் மனதில் ஒட்டாமல் போவதற்கு. மேலும், அந்தக் கதாப்பாத்திரம் முதலில் தன் கணவன் லஞ்சம் வாங்குகிறான் என்ற போது மெலிதாய் ஆச்சர்யப்பட்டு பின்பு அதையே பெருமிதமாய் ஏற்றுக் கொள்கிறது. அதுதான் இங்கு அடிப்படை. அவளது கதாப்பாத்திரம் மட்டும் இங்கு நேர்மையானவளாக சித்தரிக்கப்பட்டிருந்தால் மொத்தப் படமும் அடிபட்டுப் போகும்.
இத்தகைய முக்கியமான கதாப்பாத்திரம் என்றில்லை. இக்குறும்படத்தில் சில வினாடிகளே வந்து போகக்கூடிய கதாப்பாத்திரத்திங்களின் மீது கூட இயக்குனரின் கவனம் இம்மியளவும் பிசகவில்லை. இதற்கு எடுத்துக்காட்டாக முதல் காட்சியைக் கூறலாம். முதல் காட்சியில் அர்ச்சகர் தட்டில் 100 ரூபாய் போடும் நபரின் தோற்றம். அவரைப் பார்த்தவுடன் பார்வையாளனுக்குத் தோன்ற வேண்டும் இந்த நபர், அர்ச்சகர் தட்டில் 100 ரூபாய் போடுவதற்குத் தகுதியானவரா என்று. அதே போன்றதுதான் வேலையில்லாதவனாக வரும் தாடி வைத்த சசியின் தோற்றமும்.
கதாப்பாத்திரத்தின் வடிவமைப்பு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியமானவை அவை பேசும் வசனங்கள். " போகும்போது முதுகப்பாத்தா வரும்போது முகத்தப் பாக்குறேன் ", "ஏ காசுல என்ன பீயா ஒட்டிக்கிட்டு வரப்போது ". என வசனங்கள் ஒவ்வொன்றும் பளிச் வகையறா. அதிலும், "புள்ள குட்டிக்காகத்தான நாம இவ்ளோ கஷ்டப்படுறோம் "- இந்த வசனத்தைப் பேசும் தொனியில், இந்த ஒற்றை வசனத்தில் மொத்தக் கதையின் சாராம்சத்தையும் உள்ளடக்கிவிடுகிறார் கான்ஸ்டேபிளாக வரும் ஜூனியர் பாலையா.
நல்ல வசனங்கள் ஒரு கதைக்கு எத்தனை பலம் சேர்க்கும் என்பதை அதைப் பேசும் கதாபாத்திரங்களே தீர்மானிக்கின்றன. உதாரணத்திற்கு, பாலையா தான் லஞ்சம் வாங்குவது பற்றி விவரிக்கும் போது, " அப்புறம் பஸ் ஸ்டாண்ட் பக்கதுல இருக்கிற ஜூசு கட " என்று சொல்வார். அதற்கு எதிர்வினையாற்றும் போது மெளனிகா கேட்பார் " சூசு கடைலேயா ? " என்று. இங்கு ஒன்றை நாம் நன்றாக கவனிக்க வேண்டும். ஒரு கான்ஸ்டேபிளுக்கு இருக்கும் குறைந்தபட்ச படிப்பறிவின் காரணமாக juice என்ற ஆங்கிலச் சொல்லை முறையாகப் பயன்படுத்துமாறும், அதே நேரத்தில் படிப்பறிவில்லாத மனைவி "சூசாக"வும் உச்சரிக்குமாறும் வசனங்கள் எழுதப்பட்டிருக்கும். ஒரே காட்சியில் அடுத்தடுத்து வரும் வசனங்கள்தாம் ஆனால் கதாப்பாத்திரத்திற்கு தக்கவாறு ஒரு வார்த்தையின் உச்சரிப்பு கூட மாறுகிறது. வசனம் எழுதும் போது இத்தனை நுணுக்கம் தேவையா? ஆம், வசனம்தான் மிக நுட்பமான உணர்வுகளை பார்வையாளனிடத்தே எடுத்துச் செல்லும் கருவி. " ஏன்னா.. நீ என் நண்பன் " இந்த நான்கே வார்த்தையிலான வசனம் உங்களுக்கு ஒரு முழுத் திரைப்படத்தையும் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறது அல்லவா?
பாலையாவின் நடிப்பு பற்றி நான் எப்படி பாராட்டினாலும் அது முழுமையாக இருக்காது. குடும்பச் சொத்தோ என்னவோ நகைச்சுவையை உடல் மொழியிலேயே கொணர்கிறார். சாலையில் சிறுநீர் கழிப்பவனைப் பிடிக்கப் போகும் நேரத்தில் அவர் காட்டும் பாவனை ஒன்றே போதும். அதே நேரத்தில் ஆங்காங்கே உருகவும் வைக்கிறார். அதுவும் அந்தக் கடைசிக் காட்சியில் அவர் காட்டும் முகபாவம் இருக்கிறதே கிளாசிக் ! பாலையாவின் மனைவியாக வரும் மெளனிகா கணவனுடனான மனைவியின் உரையாடலை அப்படியே உயிர்ப்பித்துக்கிறார். அதுவும் பாலையா பாராட்டுமிடத்தில் அவர் பெருமிதம் பொங்க வெட்கபடுவதும், பின்பு பாலையா தான் மாமூல் வாங்குவது குறித்து விளக்கும் போது வாய்பொத்தி ஆச்சர்யப்படுவதும் கொள்ளை அழகு ! அர்ச்சகராக வரும் அந்தப் புதுமுகமும் இயல்பான நடிப்பில் கவர்கிறார். இதற்கிடையில், டீக்கடை பெஞ்சில் அதுவரை உட்கார்ந்து பேசிவிட்டு, பாலையா காசு பற்றி பேசியதும் நழுவுமிடத்தில் சசி ஈர்த்திருக்கிறார். சிறு கண் அசைவைக் கூட அற்புதமாய் வெளிப்படுத்தியிருக்கிறார். ஒரே நிமிடம் என்றால் கூட மனதில் ஒட்டிக் கொள்கிறார். இப்படி ஒவ்வொருவரும் அந்தந்த கதாப்பாத்திரத்திற்குத் தேவையானதை செவ்வனே தந்திருக்கிறார்கள். "குறும்படம் தானே", யார் கவனிக்கப் போகிறார்கள் என்ற மனோபாவம் யாரிடமும் கிஞ்சித்தும் இருந்திருக்கவில்லை.
ஒரு நதியின் போக்கை எப்படி அது பாய்ந்து செல்லும் நிலப்படுகை தீர்மானிக்கின்றதோ அதுப்போலத்தான் ஒரு படத்திற்கான இசையையும் அந்தப்படத்தின் திரைக்கதை தான் தீர்மானிக்கின்றது என்கிறார் பாலுமகேந்திரா. என்ன ஒரு கவித்துவமான உவமை! " எனது படங்களில் பிரக்ஞைப்பூர்வமாக நான் வைக்கும் மௌனங்களை, உணர்வு பொதிந்த, அர்த்தமுள்ள அந்த மௌனங்களை இசைகொண்டு கலைக்க வேண்டாம் என்றும் என் இசையமைப்பாளரிடம் நான் கேட்டுக் கொள்வேன் " என்கிறார். இங்கும் அது பொருந்திப் போகிறது.
இக்குறும்படத்திற்கு இசை ஐசக் தாமஸ் கொடுக்காப்பள்ளி. எந்த இடத்திலும் உருத்தாத பின்னணி இசை. தேவைக்கேற்ப அளவாய் இருக்கிறது. ஸ்பாட் ரிக்கார்ட்டிங்க் சிறப்பாக வந்திருக்கிறது. அதுவும் பின்னால் ஒலிக்கும் அந்த " வாங்க மச்சான் வாங்க " பாடலும், அதன் பின் வரும் " நீயும் நானுமா கண்ணா " பாடலும் அந்தந்த இடத்தில் பொருத்தமாக இருக்கிறது. ஊன்றி கவனித்தால், அந்த காட்சியின் நகைச்சுவைக்கு காரணமே அப்பாடல்கள்தாம். சரியான இடத்தில் வரும்போது பின்னால் ஒலிக்கும் ஒரு பழைய பாடல் கூட எவ்வளவு அற்புதமாக இருக்கிறது !
ஷங்கி மகேந்திராவின் ஒளிபதிவு, கதையெங்கும் பரவியிருக்கும் அந்த கான்ஸ்டேபிளின் ஆற்றாமையையும், வெறுமையையும் படம் முழுவதும் சிந்திப் பெருகும் வெயிலின் வழியே நமக்கும் கடத்துகின்றது. கதை அன்பென்னும் மழையில் நனையுமிடத்தில் நிழலில் சங்கமிக்கிறது ஒளிபதிவும். சிங்கத்திற்குப் பிறந்துவிட்டு எப்படி சிட்டுக்குருவியாக முடியும் ? (எத்தனை முறைதான் புலியையும், பூனையையுமே வம்பிற்கு இழுப்பது?). அடுத்தாக படத்தொகுப்பு. பாலு மகேந்திராவின் படத்தொகுப்பை விளக்க இந்த ஒரே ஒரு செய்தி போதும். இவரிடம் இக்குறும்படத்தில் துணை எடிட்டராகப் பணியாற்றிய பிரவீன் தான் 2011 ஆம் ஆண்டு "ஆரண்ய காண்டம்" படத்தின் படத்தொகுப்பிற்காக தேசிய விருது பெற்றிருக்கிறார்.
படம் பார்ப்பவர்களை பார்வையாளன் என்ற நிலையிலிருந்து பங்கேற்பாளனாக மாற்றுவதே ஒரு கலை இயக்குனரின் வேலை என்கிறார் இந்திய சினிமாவின் தலைசிறந்த கலை இயக்குனரான நிதின் சந்திரகாந்த் தேசாய். இக்குறும்படத்தின் கலை இயக்குனர் பீட்டர், நிதின் சொன்னதை மெய்பித்திருக்கிறார். வீடாகட்டும், போலீஸ் ஸ்டேசனாகட்டும் இயல்பாய் கதையோடு பொருந்தியிருக்கும். பாலையாவின் அறிமுகக் காட்சியில் அவர் ஒரு சாதாரண மரப்பலகையில் ஒரு போர்வை விரித்தே படுத்திருப்பார். குழந்தையின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கே படாத பாடு படும் ஒரு கான்ஸ்டேபிளுக்கு அவ்வளவுதானே சாத்தியம் !
இவையத்தனையும் தான் நடிப்புலக மேதைகளோ, தேவதையை யொத்த கதாநாயகிகளோ, இசை சக்கரவர்த்திகளோ இல்லாமல் உலகத் தரத்திலான ஒரு குறும்படத்தைக் கொடுக்க பாலுமகேந்திராவிற்கு உதவியிருக்கின்றன. பொருட்செலவு கூட பெரிய அளவில் இருந்திருக்க வாய்ப்பில்லை. இப்படிக் கதையும், திரைக்கதையும், வசனமும், கலையும், ஒளியும், இசையும், நடிப்பும், இயக்கமும் ஒரு இலக்கை நோக்கிப் பயணப்படும் போதுதான் ஒரு கதை கவிதையாகும் தருணம் சாத்தியப்படுகின்றது. ஆனால் இதற்குப் பின்னால் இருந்த உழைப்பு அளப்பரியது. இத்தனை இருந்தும் என்ன பயன், இதுவரை இந்தக் குறும்படத்தை "யு ட்யூபில்" பார்த்தவர்களின் எண்ணிக்கை வெறும் 975 மட்டுமே (இந்த கட்டுரைக்காக நான் பார்த்த 6 முறைகளையும் சேர்த்தே). எங்கே போய்க் கொண்டிருக்கிறது நம் ரசனை??
இப்போதெல்லாம் தழுவியெடுத்தல், அகத் தூண்டுதல் (இன்ஸ்ப்ரேஷன்) என்ற வார்த்தைகளையெல்லாம் தமிழ் சினிமாவை கவனித்து வரும் ஒரு சாதாரணன் கூட அடிக்கடி கேட்க நேரிடுகிறது. அப்படித் தழுவித்தான் எடுக்க வேண்டுமானாலும் கட்டித் தழுவுவதற்கும், ஏன் கடித்தே தின்பதற்கும் கூட இந்தத் திருநாட்டிலேயே ஏராளமாய் கொட்டிக் கிடக்கிறதே ஐயா? மலையாளச் சிறுகதையான " இருட்டிண்ட ஆத்மா " சேதுவாகவும், ஜெயகாந்தனின் " நந்தவனத்தில் ஒரு ஆண்டி " பிதாமகனாகவும் பாலாவின் கைகளில் எத்தனை அருமையாக உருபெற்றிருக்கிறது. பிறகு ஏன் நாம் க்ரிஸ் கொலம்பஸையும், ஜெஸ்ஸி நெல்சனையும், கிறிஸ்டோஃபர் நோலனையும் நகலெடுக்க வேண்டும். அகத் தூண்டுதலுக்கும், நகலெடுத்தலுக்கும் வித்தியாசம் கூடத் தெரியாத மடையன் கிடையாது இன்றைய மோசன் கேப்ச்சர் டெக்னாலாஜி காலத்துப் பார்வையாளன்.
என் மனதை அரித்துக் கொண்டிருக்கும் ஒரு கேள்வியுடன் முடித்துக் கொள்கிறேன். சத்யஜித்ரேவின் சாருலதாவையோ, மகேந்திரனின் உதிரிப்பூக்களையோ, பாலுமகேந்திராவின் வீடு படத்தையோ அகத் தூண்டுதலாகக் கொண்டு ஏன் ஒரு படம் கூட இன்று வெளி வருவதில்லை?? இவர்களெல்லாம் படம் எடுக்கவில்லை நண்பர்காள், பாடம் எடுத்திருக்கிறார்கள்.
" நான் வணங்கும் பிரபஞ்ச சக்தி, சினிமா என்னும் மிகப் பெரிய ஆற்றலை எனக்குத் தந்துள்ளது. என்னிடமிருந்து சினிமாவைப் பிரித்துவிட்டால், எஞ்சுவது பூஜ்யம் என்பது எனக்குத் தெரியும்." - பாலு மகேந்திரா.
பி.கு : இந்த கதை நேரத்தில் இடம்பெற்ற கதைகளும், குறும்படங்களின் டி.வி.டிக்களும் வம்சி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டு விற்பனையில் உள்ளன.
கட்டுரைக்கு உதவியவை:
1. 
http://filmmakerbalumahendra.blogspot.in/
 karundhel.com
3. சுந்தர ராமசாமி சிறுகதைகள் முழுத்தொகுப்பு : காலச்சுவடு வெளியீhttp://www.wikipedia.org/ 
http://www.youtube.com/watch?v=-90s4Q51vFc&feature=rel
http://azhiyasudargal.blogspot.in/2010/06/blog-post_24.h 
http://www.rediff.com/movies/2003/jan/18nitin
http://introtoediting.com/theory.h






இந்த குறும்படத்தைப் பார்க்க:http://www.youtube.com/watch?v=C5xR2nauBxg






























 




















* * *
























tml





















8.htm

















7.tml













6.mfu









5.


 

4.
2.