ஒருபோதும் வாடாத 'மலர்'

'எவன் தயவும் எனக்கு வேண்டாம். சாகுற வரைக்கும் உங்களையெல்லாம் வச்சு நான் சோறு போடுவேன்டா. கை போனா என்னடா? என்ன செத்தா போயிட்டேன்? ஒப்பாரி வைக்கிறாங்க..ஒப்பாரி. போங்கடா...போங்க.'
இந்தளவு தன்னம்பிக்கை மிகுந்த வசனங்களை அண்மைக்கால தமிழ்த் திரைப்படம் எதிலும் நான் பார்க்கவில்லை. ஒரு விபத்து. கதாநாயகனின் ஒரு கை முற்றுமுழுதாக அகற்றப்படுகிறது. அதுவரைக்கும் அவனது குடும்பத்தின் வாழ்வாதாரம் அவன் மட்டும்தான். ஊராரின் பாசம் அவனுக்கு ஆறுதல் சொல்லத் தூண்டுகிறது. அந்த ஆறுதலை அவன் மனது ஏற்க மறுக்கிறது. சிறு வயது முதலிருக்கும் முரட்டுத்தனமும், போலியான நடிப்பின்றிய பாசமும், சுயத்தை இழக்கத் துணியாத தைரியமும், தன்னம்பிக்கையும் இந்த வசனங்களில் மிகத் தெளிவாகத் தெரிகின்றன. இவ்வாறாக மனித வாழ்வின் ஏற்ற இறக்கங்கள், பாமரனொருவனுக்கும் படித்தவனுக்குமிடையிலான பிறிதொரு மனப்பான்மை மற்றும் தாழ்வுச் சிக்கல்கள் போன்றவை எவ்வாறு ஒருவனின் வாழ்க்கைப் பாதையை முழுவதுமாக மாற்றியமைக்கிறது என்பதைச் சொல்ல முயல்கிறது 'முள்ளும் மலரும்' திரைப்படம். தெருவோர வித்தை காண்பிப்பவன் உயர்த்திப் பிடித்திருக்கும் கழியில் ஊசலாடிக் கொண்டிருக்கும் சிறுமியையும், கொட்டடித்து பார்வையாளர்களை தம் பக்கம் வரவழைத்துக் கொண்டிருக்கும் சிறுவனையும் திரைப்படத்தின் ஆரம்பக் காட்சியில் காணலாம். அநாதையாக நிற்கும் தமக்கு ஆதரவளிக்க எவருமற்ற வாழ்வின் துயர்களை, தொடர்ந்து வரும் பாடல் விளக்குகிறது.

உலகில் மனிதர்கள் எவ்வளவு விசித்திரமான மனம் படைத்தவர்களாக இருக்கிறார்கள்? ஒவ்வொருவருக்குள்ளும் எத்தனையெத்தனையோ முகங்கள். ஒருவன், ஒருவரிடம் காட்டும் முகம் பிறிதொருவரிடத்தில் காட்ட மாட்டான். தனது தேவைகளுக்காக மாத்திரமே அடுத்தவனைப் பயன்படுத்திக் கொள்ளும் சந்தர்ப்பவாதியாக அவன் இருக்கிறான். தேவை பூர்த்தியானதும், கழற்றி விடும் சுயநலமும், பச்சோந்தித்தனமும், அதுவரையில் உதவியவர்களை கறிவேப்பிலையெனத் தூக்கிப் போடும் பாசாங்குத்தனமுமாக வாழும் போலி மனிதர்களுக்கு மத்தியில் நாம் வாழ வேண்டியவர்களாக விதிக்கப்பட்டிருக்கிறோம். அவ்வாறான நிலையில் உண்மையான பாசங்களையும், எந்தவித எதிர்பார்ப்புமற்ற பரிவினையும், நேசத்தையும், வெள்ளந்தித்தனத்தையும் இத் திரைப்படத்தில் காட்டப்படும் கிராமம் போன்ற பிரதேசங்களில்தான் காணக்கூடியதாக இருக்கும். மலையும், மலை சார்ந்த பிரதேசங்களும் சூழ உள்ள அக் கிராமம் அங்கு வாழும் மனிதர்களிடத்திலும் பாசத்தினை மட்டுமே விதைத்திருக்கிறது எனலாம்.


ஊர் மக்களுக்கு உதவுவதற்காக வேண்டி, தான் பொறுப்பாக இருந்து இயக்கி வரும் ட்ராலி வண்டியில் ஊர் மக்களில் சிலரை ஏற்றி அனுப்ப எத்தனிக்கும் காளியை தடுத்து நிறுத்தி எச்சரிக்கிறார் அங்கு புதிதாக வந்திருக்கும் எஞ்சினியர். அதற்குப் பழி வாங்க எஞ்சினியர் பயணிக்கும் ட்ராலி வண்டியை இடைவழியில் நிறுத்தி மீதித் தூரத்தை நடந்து செல்லும்படி பணிக்கிறான் காளி. அதனைப் புன்னகையோடு ஏற்கும் எஞ்சினியரினதும், காளியினதும் மனநிலை வேறுபாட்டை மிக இலாவகமாக சித்தரிக்கிறது அக் காட்சியமைப்பு. கிராமத்துக்குள் அதிகமாக வந்துபோயிராத ஜீப் வண்டியொன்றைக் கண்டதும் அதில் ஏறி விளையாடும் கிராமத்துப் பெண்கள் மிக யதார்த்தமான கதாபாத்திரச் சித்தரிப்புக்கள். காளியைப் பற்றி எஞ்சினியர் தனது அலுவலக ஊழியரிடம் விசாரிக்கும்போது பதிலாகக் கிடைக்கும் அந்த ஊழியரின் பொய்யான மறுமொழிகளும், தொடர்ச்சியான நிஜ காட்சியமைப்புக்களும் ஹாஸ்யத்தன்மை வாய்ந்தவையாக அமைந்துள்ளன. அக் காலம் தொட்டு எல்லாப் பணியிடங்களிலும் இப்படித்தான் போலும். வெகு இயல்பான வசனங்களோடு சுயநலமும், சந்தர்ப்பவாதமும் மிகைத்திருக்கும் காளியினது பணிச் சூழலை முகத்தில் அறைந்து உணர்த்துகிறது அக் காட்சியமைப்பு. அவ்வாறே எஞ்சினியரின் தொடர்ச்சியான எச்சரிப்புக்களால் சினமுற்றிருக்கும் காளி, விடயம் தெரியாமல் உணவு ஊட்டி விடப் பார்க்கும் தங்கை வள்ளியிடம் கோபித்துக் கொள்வதும், உணவைத் தட்டிவிடுவதும் அதனைத் தொடர்ந்த காட்சிகளும் திரைப்படத்தின் நகர்வுக்கும், கதாபாத்திரங்களின் இயல்பான நடைமுறைகளைச் சித்தரிப்பதற்கும், சகோதர பாசத்தின் நெருக்கத்தை விபரிப்பதற்கும் பெரிதும் உதவியிருக்கின்றன எனலாம்.

வாழ்வில் முதல் வலி எப்பொழுதுமே மறக்க முடியாதது. உடற்காயம் கூட ஆறி விடலாம். ஆனால் நாம் உண்மையாகவே நேசிக்கும் ஒரு ஜீவனால் ஏற்படுத்தப்படும் உள்ளக் காயங்கள் ஒருபோதும் மறக்கப்பட முடியாதவை. அவை கீறப்பட்டுக் கீறப்பட்டு வலியைத் தொடர்ந்தும் தந்தபடியே இருக்கும். அவ்வாறான வலியை உணரும் காளி வீட்டுக்குக் குடித்துவிட்டு வந்து தனது தங்கை வள்ளியிடம் அழுகிறான்.

'பொறந்ததிலிருந்து எங்கம்மாவை நான் அடிச்சதேயில்ல. வலிச்சுதாப்பா? என்னிக்குமில்லாம இன்னிக்கு... என்னை நல்லா அடிச்சிடுப்பா..என்னை நல்லா அடிச்சிடுப்பா.. நல்லா அடிச்சிடு.."

"இப்படியெல்லாம் பேசினா நான் திட்டுவேன்.."

"நீ என்னை நல்லாத் திட்டு..நீ திட்டாம என்னை வேறு யார் திட்டுறது? எந்தெந்த நாயெல்லாமோ என்னைத் திட்டுது"

எனத் தொடர்ந்து செல்லும் உரையாடல்களும், காளியின் தங்கை வள்ளி, மங்காவிடம் தனது அண்ணனைத் திருமணம் செய்துகொள்ளும்படி வேண்டும்போது இடம்பெறும் உரையாடல்களும் சகோதரத்துவத்தின் நிஜமான பாசத்தினை வெளிப்படுத்துகின்றன. காளியின் மீது மங்காவுக்கு இருக்கும் அன்பும் இவ்வாறே பல காட்சிகளில் வெளிப்படுகிறது. திரைப்படத்தில் மங்காவின் பாத்திரப் படைப்பு வித்தியாசமானது. ஆரம்பத்தில் உணவுப் பண்டங்கள் மீது தீவிர ப்ரியம் காட்டுபவளாகவும், வேலைகள் எதையும் செய்ய உடல் வணங்காதவளாகவும், திமிர் பிடித்தவளாகவும், குறும்புத்தனம் மிக்கவளாகவும் காட்டப்படும் மங்கா, படத்தின் இறுதிக் காட்சிகளில் தனது கணவனின் தங்கையின் மீதுள்ள பேரன்பையும் அவளது எதிர்காலம் குறித்த கரிசனையையும் கூட கோபத்தின் மூலமே காட்டவிழைவது வெகு இயல்பானது. தனக்கு இருப்பிடம் கொடுத்து, வாழ வழியமைத்துக் கொடுத்தவளது எதிர்கால நலனுக்காக, தனது உயிரையும் கூடக் கொடுக்கத் துணிவது மிக யதார்த்தமாகக் காட்டப்பட்டிருக்கிறது.

அற்புதமான நடிகர்கள் தேர்வு திரைப்படத்தின் வெற்றிக்கும் முதல் காரணமெனத் தயங்காது கூறலாம். எல்லோரும் போற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தினுடைய நடிப்பின் முழுப் பரிமாணத்தையும் இத் திரைப்படத்தில் காணக் கூடியதாக உள்ளது. ரஜினிகாந்த் நடித்த திரைப்படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம் இதுதான் என நான் இத் திரைப்படத்தை உறுதியாகக் கூறலாம். இந்த நடிப்பெல்லாம் இப்பொழுதும் கூட இவருக்குள்ளேதானே உள்ளது. ஏன் தமிழ் திரைப்படத் துறையினர் இப்பொழுதெல்லாம் இவரிடமிருந்து இந்த நடிப்பை வாங்க மறுக்கின்றனர்? என்ற கேள்வி எழாமலில்லை.
நடிகை ஷோபா நடித்து நான் பார்த்த முதல் திரைப்படம் இது. பாசம், பரிவு, ஏமாற்றம், துயரம், மகிழ்ச்சி என எல்லா உணர்வுகளையும் ஒரே வதனத்தில் சில கணங்களுக்குள் கொண்டு வந்து நடித்த அற்புதமான நடிகையாக அவரை இத் திரைப்படத்தில் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. ஜெயலட்சுமியின் கதாபாத்திரம் முற்றுமுழுதாக ஷோபாவிடமிருந்து வேறுபடுகிறது. அதீத உணவுப் பிரியையாகவும், குறும்புத்தனம் செய்து கொண்டு எவருக்கும் கட்டுப்பட்டு நடக்க விரும்பாத பெண்ணாகவும் திரைப்படத்தின் முதல்பாதியில் சித்தரிக்கப்படும் அவர் திரைப்படத்தின் பிற்பாதியில் தனக்குத் தரப்பட்ட முழுப் பொறுப்பையும் செவ்வனே நிறைவேற்றியிருக்கிறார். தமிழ் சினிமாவில் நல்ல நடிகைகளாக வலம் வந்திருக்க வேண்டியவர்களாக, இன்றும் பேசப்படுபவர்களாக இவர்கள் இருவரும் இருப்பதற்கு இத் திரைப்படம் கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

திரைப்படத்தின் வெற்றிக்கு இன்னும் பல காரணங்கள் கை கோர்த்திருக்கின்றன. திரைக்கதை, இயக்கத்தோடு, இசை, ஒளிப்பதிவு, பாடல்கள் என எல்லாவற்றையும் மிக அருமையாகத் தருவதற்கு உழைத்த அனைவருமே இங்கு நினைவுகூறப்பட வேண்டியவர்களாக இருக்கின்றனர். மனதை வருடும் இளையராஜாவின் அற்புதமான இசையில் வெளிவந்த 'செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்', 'அடி பெண்ணே பொன்னூஞ்சலாடும் இளமை', 'ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்ல', 'நித்தம் நித்தம் நெல்லுச் சோறு' ஆகிய பாடல்கள் காலத்தால் அழியாத கானங்கள். 'பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்' என இயற்கையோடு, மனித மனங்களையும் வர்ணித்து எழுதியிருக்கும் கவிஞர் கண்ணதாசனின் வரிகளை உணர்வோடு வெளிப்படுத்தியிருக்கிறார் பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ். அதே போல பாடலாசிரியர் பஞ்சு அருணாசலத்தின் 'அடி பெண்ணே' பாடலைத் தனது அற்புதமான குரலில் மிக மென்மையாக வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார் பாடகி ஜென்சி.

இயக்குனர் மகேந்திரனின் முதல் திரைப்படம் இது. தமிழ் சினிமாவின் வழமையான பாணிகளை மாற்றியமைத்த திரைப்படமாகவும் இதனைச் சொல்லலாம். எழுத்தாளர் உமா சந்திரன் எழுதி, கல்கி வெள்ளிவிழா மலரில் பரிசு பெற்ற கதையானது, இயக்குனர் மகேந்திரனின் இயக்கத்தில், இயக்குனர் பாலு மகேந்திராவின் ஒளிப்பதிவோடு மிகவும் கச்சிதமாக காட்சிப்படுத்தப்பட்டு வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஆபாசத்தை வலிந்து புகுத்த முடியுமான வெண்ணிற ஆடை மூர்த்தியின் காதல் காட்சிகளில் கூட அது வலிந்து தவிர்க்கப்பட்டிருப்பதானது பாராட்டுதற்குரியது. இவ்வாறான திரைப்படங்கள் இக் காலத்தின் தேவையாக இருக்கின்றன என்பது மறுப்பதற்கில்லை. இயக்குனர் மகேந்திரனும், இயக்குனர் பாலு மகேந்திராவும் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த வரங்களெனச் சொல்லலாம். இவர்களது பங்களிப்பு தமிழ் சினிமாவுக்கு தொடர்ச்சியாகத் தேவைப்படும் இக் காலத்தில் இவர்கள் அமைதியாக இருப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.

திரைப்படத்தின் இறுதிக் காட்சியை அன்பின் உன்னதத்தை விளக்கும் ஓரிடமாகக் கொள்ளலாம். ஒருவர் மேல் உண்மையாக வைக்கும் அன்பும், பாசமும் அவருக்காக எதையும் செய்யத் தூண்டும். அவர் மேல் அதிகமாக அக்கறை செலுத்த வைக்கும். அவர் மீது அதிகளவு நம்பிக்கையை வைத்திருக்கச் செய்யும். உண்மையான அன்பும் நேசமும் எந்தப் பிரதிபலனையும் எதிர்பாராது எனப் பொதுவாகச் சொல்லப்படுகிறது. எனினும், உண்மையில் அந்த அன்பும் கூட அதற்குப் பிரதிபலனாக அன்பையும் ஆதரவையுமே எதிர்பார்த்திருக்கும். பிரதிபலனை எதிர்பார்க்காத அன்பும், வாழ்வின் மீது பற்றற்ற இருப்பும் இருப்பதென்பதே மிகவும் பொய்யானது. அது போலியான வாழ்க்கையைத்தான் வாழத் தூண்டும். ஒப்பனையையும், அரிதாரத்தையும், வேடத்தையும் வெறும் உடலுக்கு மட்டும் சூடிக்கொண்டு, நிஜத்தில் நேர்மையாக வாழும் மனிதர்களை மிக அரிதாகவே காணலாம். எனினும் வாழ்வின் மீது பற்றற்றவனென்றும் தானொரு துறவியென்றும் தன்னைக் குறித்தான விம்பங்களை உயர்த்திப் பிடித்துக் கொண்டு ஊருக்கு மாத்திரம் உபதேசித்துத் திரிபவர்களை தினந்தோறும் அதிகளவில் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. அவர்களது போலி விம்பங்கள் உடைந்து சிதறும் நாளில், எவரும் அவருடன் இருக்க மாட்டார்கள் என்பதே நிதர்சனம். 'முள்ளும் மலரும்' இதனையே உணர்த்துகிறது. பலருக்கும் பாடம் கற்பித்துச் செல்லும் திரைப்படம், சாகாவரம் பெற்றதெனச் சொல்லலாம். இந்த மலரோடு முள்ளும் கூட ஒருபோதும் வாடாது.

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை
mrishanshareef@gmail.com