கடவுளரின் தலையீடு : கனவும் யதார்த்தமும்

பாலஸ்தீன இயக்குனர் எலியா சுலைமானின் டிவைன் இன்டர்வென்சன் அல்லது கடவுளரின் தலையீடு இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டுக்கான கேன் திரைப்பட விழா நடுவர்களின் விருதுபெற்ற திரைப்படம். குரோனிக்கல் ஆப் த டிஸ்ஸப்பியரன்ஸ் எனும் அவருடைய முதல் படத்தினையடுத்து குரோனிக்கல் ஆப் லவ் அன்ட பெய்ன் எனும் துணைத்தலைப்புடன் எடுக்கப்பட்ட திரைப்படம் டிவைன் இன்டர்வென்சன். அவருடைய முதல் படத்தில் பாலஸ்தீன நிலப்பரப்பினுள் பாலஸ்தீன மனிதனின் இருப்பு காணாமல் போகிறது. அவரது இரண்டாவது படத்தில் அந்த காணாமல்போன பாலஸ்தீன மனிதனினது இருப்பின் வலியும் காதலும் சொல்லப்படுகிறது. இந்த வலியும் காதலும் கூட பாலஸ்தீன மனிதனால் புலன்வழி உணரப்படுவதற்கு கடவுளரின் தலையீட்டின் மூலமே சாத்தியமாகும் என்பதைக் காட்சிக்கனவுகளாக இழைத்திருக்கிறார் சுலைமான். ஆண்பெண் உறவில் நிறைவேறத்தக்க மிகச் சாதாரண ஆசைகள் கூட பாலஸ்தீன நிலைமையில் புனித ஆவிக்காகக் காத்திருக்க வேண்டிய அதிசயங்களாக இருக்கின்றன.

டீவைன் இன்டர்வென்சன்ஸ் படத்தை எந்த வழமையான கதை கூறு திரைமரபுடனும் ஒப்பிட முடியாது. வசனமே அநேகமாக படத்தில் இல்லை. படத்தில் வசனம் பேசுகின்றவர்கள் பெரும்பாலும் ஆக்கிரமிப்பாளர்களான இஸ்ரேலியக் குடியேறிகள், சோதனைச் சாவடியில் காவலிருக்கிற இஸ்ரேலிய ராணவத்தினர் போன்றவர்கள்தான். பிரதான கதை மாந்தர் என எவரும் படத்தில் இல்லை. சில காட்சி; தொடர்கள் இருக்கின்றன. ஓரு குறிப்பிட்ட நாளில், ஒரு குறிப்பிட்ட காலத்தில், சில குறிப்பிட்ட மனிதர்களுக்கு என்ன நேர்கிறது எனக் காண்பிக்கப்படுகிறது. அடுத்தடுத்த நாட்களில் அதே குறிப்பிட்ட மனிதர்களுக்கு அதே குறிப்பிட்ட காலத்தில் என்ன நேர்கிறது என்பதைப் படம் தேடிப் பதிவு செய்கிறது. தன் வீட்டிலிருந்து காரில் தனது வெல்டிங் பட்டறைக்குக் கிளம்பும்; சுலைமானின் தகப்பனார் வழியில் தனக்கு வணக்கம் சொல்கிற அத்தனை பேரையும் தனக்குள் ஆளுக்கொரு கெட்டவார்த்தை சொல்லி, வெளியில் கையசைத்து பதில் வணக்கம் சொல்லிக் கொண்டே செல்கிறார். இறுதிக் காட்சியில் அவர் மரணமுற்ற பின்னால் மகனான சுலைமானும் அவனது அன்னையும் சோபாவில் அமரந்து கொண்டு விசிலடிக்கும் குக்கர் எப்போது சப்தத்தை நிறுத்தும் என்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

நிலமும் நிலம் சார்ந்த உடமையும் அடையாளங்களும் பூர்வீக நினைவுகளும் இங்கு பலமனிதர்களைப் பிரிப்பதாக உள்ளார்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. நாசரேத், ரமல்லா,ஜெருசலேம் என மூன்று நகர்களை இணைத்து காட்சிகள் நகர்கிறது. நூசரேத் நகரத்திலிருந்து அடர்ந்த மரங்களினிடையில் துரத்திச் செல்லப்படும் கிறிஸ்துமஸ் தாத்தாவின் பரிசுப் பொருட்கள் அவரது முதுகுப் பையிலிருந்து சிதற அவரை சில சிறுவர்கள் துரத்துகிறார்கள். அவரது நெஞ்சில் கத்தி பாய்ந்திருக்கிறது. இது ஒரு காட்சி. படத்தின் தலைப்பும் கலைஞர்களின் பெயரும் தோன்றும்போது, படத்தின் துவக்கத்தின் முன் வரும் காட்சி இது. நாசரேத் நகரத்தில் கிறிஸ்துமஸ் தாத்தா கொல்லப்படுகிறார்.

நிலம் குறித்த சில காட்சிகள் இவ்வாறு இருக்கின்றன : அன்றாடம் தனது வீட்டில் குப்பைப் பையுடன் வெளியே வரும் ஒரு யூதர் தனது குப்பையை தனது அண்டைவீட்டினுள் வீசுகிறார். இது மறுபடி மறுபடி தொடர்கிறது. ஓரு நாள் அண்டை வீட்டுப் பெண்மணி அந்தத்; தொகையான குப்பைப் பைகளை எடுத்து யூதரின் வீட்டு வாயிலில் திரும்ப எறிகிறார். அவர் பாலஸ்தீனப் பெண்மணி. யூதர் னது வீட்டிலிருந்து வெளியே வந்து இப்படிச் செய்யலாமா என்கிறார். இது நீங்கள் எனது வீட்டுக்குள் முன்பே எறிந்த குப்பைகள் என்கிறார் பெண்மணி. என்றாலும் அண்டை வீட்டாரிடம் இப்பயா நடந்து கொள்வது? இதற்குத்தானா கடவுள் நமக்கு மொழியைக் கொடுத்திருக்கிறார் என்கிறார் யூதர். இது நாசரேத் நகரம்.

மூன்று பாதைகள் சந்திக்கும் இடத்தில் ஒரு காவல்துறை வாகனம் நிற்கிறது. ஓட்டுனர் இருக்கையில் இஸ்ரேலியக் காவலர் அமர்ந்திருக்கிறார். வாகனத்தின் பின்னால் கண்கள் கட்டப்பட்டு விலங்கிடப்பட்ட நிலையில் பாலஸ்தீனர் ஒருவர் பூட்டப்பட்டிருக்கிறார். அது ஜெருசலேம் நகரம். அங்கு வரும் பெண் உல்லாசப் பயணியொருவர் ஒரு இடத்தின் அடையாளத்தை இஸ்ரேலியக் காவலரிடம் கேட்கிறார். அவருக்கு அந்த இடம் தெரியவில்லை. கண்கள் கட்டப்பட்ட நிலையிலுள்ள கைதியை அழைத்துவந்து இடத்தின் அடையாளம் சொல்லக் கேட்க, கண்கள் கட்டப்பட்ட நிலையில், குறிப்பிட்ட இடத்திற்குச் செல்ல மூன்று வேறுவேறு பாதைகளைக் காட்டுகிறார் அவர். அதே இடம். அதே வாகனம். அதே பெண். இடம் கேட்கிறார். காவலன் இறங்கி வாகனத்தின் பின்னால் போய் கதவைத் திறக்கிறான். உள்ளே கைதி இல்லை. பறந்துவிட்டான். காவலன் பதறிக் கொண்டு வாகனத்தை வேகமாகத் திருப்புகிறான். இஸ்ரேலியர் பாலஸ்தீனர் என குடியிருப்புகளுக்கிடையில் கால் பந்து விளையாடுவது, பாம்பை அடிப்பது, கார் நிறுத்துவது எனும் இயல்பான அன்றாடச் செயல்கள் அனைத்துமே வெறுப்பும் வன்முறையும் நிறைந்ததாக இருக்கிறது.

கைவிடப்பட்ட பேருந்து தரிப்பிடம். பாழடைந்து கிடக்கிறது. அங்கு தினமும் ஒரு இளைஞன் கண்களுக்குக் கறுப்புக் கண்ணாடி போட்டுக் கொண்டு அழகாக உடுத்துக் கொண்டு நின்று கொண்டிருக்கிறான். பேருந்து நிறுத்தத்திற்கு அருகிலுள்ள வீட்டிலிருந்து வெளியே வரும் ஒரு ஆண் அவன் அருகில் வந்து இங்கு பஸ் நிற்பதில்லை என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் சென்று விடுகிறான். மறுபடி அதே பேருந்து நிறுத்தம். பிறிதொரு நாள். அதே நிலையில் இளைஞன். வீட்டிலிருந்து வெளியே வரும் ஆள் மறுபடி இங்கே பஸ் நிற்பதில்லை என்கிறான். கொஞ்சம் நிதானித்துவிட்டு வீட்டுக்குள் சென்று விடுகிறான். பிறிதொரு நாள். அதே பேருந்து நிறத்தம். அதே இளைஞன். வீட்டுக்குள் இருந்து வெளியே வரும் ஆள் பஸ் நிற்காது என்கிறான். இளைஞன் இப்போது தனக்குத் தெரியும் என்கிறான். வீட்டிலிருந்து வெளியே வந்தவன் சுற்றிலும் பார்த்துவிட்டு வீட்டுக்குள் செல்கிறான். இப்போது பஸ் நிறுத்தத்திற்கு எதிர்வீட்டு மாடியைக் காண்பிக்கிறது காமெரா. பால்கனியில் உலர்ந்து கொண்டிருக்கும் ஆடைகளை எடுக்க வெளியே வருகிறாள் ஒரு இளம்பெண். ஆடைகளை எடுத்துக் கொண்டு வீட்டுக்குள் திரும்புகிறவள் திரும்பி நின்று இளைஞன் இருக்கும் திசையில் பார்க்கிறாள். அரபுக் காதல் பாடலொன்று எழுகிறது.

இனி, இரண்டு நகர்களில் வாழும் காதல் ஜோடி பற்றிய நிகழ்வுகள். ஆண் நாசரேத்தில் வாழ்கிறான். பெண் ரமல்லாவில் வாழ்கிறாள். நாசரேத் இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட நகரம். ரமல்லா பாலஸ்தீனர் நிர்வாகத்தில் இருக்கும் நகரம். இரண்டு நகர்களையும் பிரிக்கும் சோதனைச் சாவடி ஒன்று இருக்கிறது. காதலர்கள் இருவரும் அந்தச் சோதனைச் சாவடியில் இருந்து கொஞ்சதூரத்திலுள்ள கட்டுமானப் பணிநடக்கும் ஒரு மைதானத்தில் தினமும் தனித்தனிக் காரில் வந்து சந்தித்துவிட்டு, இரவு வீழ்ந்த பின் தத்தமது நகர்களுக்காகப் பிரிகிறார்கள். இவர்களது சந்திப்பை முன்வைத்து இரண்டு அன்றாட நடப்புகள் காண்பிக்கப்படுகிறது. அந்தச் சோதனைச் சாவடியைக் கடந்து சொல்கிறவர்கள் அடையாள அட்டையை இஸ்ரேலிய ராணுவத்தினரிடம் காண்பித்துவிட்டே செல்ல வேண்டும். இஸ்ரேலிய ராணுவத்தினர் எவருக்கும் அனுமதி மறுக்கலாம். எவரையும் அவமானப்படுத்தலாம். வன்முறைக்கு உட்பத்தடுத்தலாம். அவர்கள் நினைத்தால் என்னவும் செய்யலாம். அப்படி பாலஸ்தீனர்களை அவர்களது மண்ணிலேயே அவமானப்படுத்தி அடிமைகளைப் போல நடத்துகிறார்கள். இவை அனைத்தையும் காதலர் இருவரும் சாட்சியமாக இருந்து பார்க்கிறார்கள்.

இன்னொரு அன்றாட நிகழ்வு உடலுறவு விழைவுக்கான அவர்களது வேட்கை வெளிப்படுவது. இருவரும் மூடிய வாகனத்தினுள் அமர்ந்தபடி மோகம் ததும்ப முகங்களைப் பார்த்தபடி கைவிரல்களைப் பிணைத்து பிசைந்து மேலும் கீழுமாக நிரவி, உக்கிரமான கலவிக்கான மறுதலை அக்காட்சிகள். தமது மக்கள் தம்முன் படும் உளவேதனையும் தாம் அனுபவிக்கும் விரகவேதனையும் அவர்களிடம் பழிவாங்கும் உணர்வாகவும், கடவுளரின் தலையீடாகும் கற்பனைகளாகவும் உருவாகிறது. நிஜத்தில் இருவரும் சந்திக்கும் தருணமொன்றில் ஆண் ஒரு பலூனைக் கொண்டு வந்து அதற்கு் காற்றடிக்கிறான். ஊதப்பட்ட பலூனில் யாசர் அரபாத்தின் புன்னகை முகம்.
காரின் மேல் ஜன்னலைத் திறந்து பலூனை மெதுவாகப் பறக்கவிட்டுவிடுகிறார்கள். பலூன் சோதனைச் சாவடி மீது பறக்கிறது. ராணுவத்தினர் அதனைச் சுட்டு வீழத்தலாம் என்கிறார்கள். ராணவத் தலைமையகத்துக்குச் செய்தி பறக்கிறது. ஆய்வு செய்கிறோம் பொருத்திருங்கள் எனச் செய்தி வருகிறது. சோதனைச் சாவடியில் ஒரு களேபரம். புலூன் பறந்து சென்று இஸ்லாமிய வழிபாட்டு தலமொன்றின் உச்சியில் அமர்கிறது. இந்த நெருக்கடியைப் பயன்படுத்திக்கொண்டு சோதனைச் சாவடியைக் கடந்து இரண்டு கார்களில் ஆணும் பெண்ணும் ஜெருசெலேம் பறந்து ஒரே அறையில் இரவைக் கழிக்கிறார்கள்.


காதலர்கள் இருவரும் பல அற்புதங்களைப் புரிகிறார்கள். தங்களால் இயலாததை அவர்கள் கடவுளரின் தலையீடுகளில் அதிசயங்களாகக் கனவாக ஆக்குகிறார்கள். படத்தின் அதி அற்புதமான காட்சிகள் இவைகள்தான். படத்தில் வரும் ஆண் படத்தின் இயக்குனர் சுலைமான். பட்டறையை விற்றுவிட்டு நோயுறும் தந்தையை மருத்துவமனையில் பார்ப்பற்காக அவர் நாசரேத் வருகிறார். வரும் பாதையில் கார் செலுத்தியபடி கையடக்கமான பழமொன்றைச் சாப்பிட்டுக் கொண்டே வருகிறார்.


கொட்டை மிஞ்சுகிறது. அந்தக் கொட்டையை எடுத்து கார் ஜன்னலுக்கு வெளியே எறிகிறார். பாதையின் பக்கத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் இஸ்ரேலிய டாங்கியொன்றின் மீதும் விழும் அந்தக் கொட்டை வெடித்து டாங்கி சுக்கல் சுக்கலாக வெடித்துச் சிதறுகிறது. பிறிதொரு காட்சி இது : ரமல்லா, நாசரேத் என இரண்டு நகர்களை இணைக்கும் சாவடியை மூடி வாகனங்களைத் திருப்பி அனுப்புகிறார்கள் இஸ்ரேலிய ராணுவத்தினர்.


அனைவரும் வாகனங்களைத் திருப்பிக் கொண்ட போக அங்கு வரும் பெண் காரிலிருந்து இறங்கி ராணுவ்தினரைப் பொருட்படுத்தாமல் சாவடியைக் கடக்கிறாள். ஆவளைச் சுடுவதற்காக ராணுவத்தினர் இயந்திரத் துப்பாக்கிகளைக் குறிபார்க்கிறார்கள். தினவெடுத்த குதிரையைப் போல தொடைகள் குலுங்க நிமிர்ந்து நடக்கும் பெண் தனது கறுப்புக் கண்ணாடியைச் சாவகாசமாகத் தனது தலைக்கு ஏற்றிவிட்டு அவர்களது கண்களுக்குள் பார்த்தபடி நடக்கிறாள். துப்பாக்கிகள் தாழ்கின்றன. ஆவள் சோதனைச் சாவடியை நடநடது கடக்கையில் சோதனைச் சாவடியின் காவற்கோபுரம் சரிகிறது.


இன்னொரு காட்சி : எதிரில் பாலஸ்தீனப் பெண்ணின் படம் தீட்டப்பட்ட கட்அவுட்கள் வரிசையாக நிற்கிறது. இஸ்ரேலிய வீரர்களுக்கு அதனைச் சுட்டுச் சாயக்க பயிற்சியளித்துக் கொண்டிருக்கிறார் அதிகாரி. ஓரேயொரு கடஅவுட்டைச் சாய்க்க அவர்களால் முடியவில்லை. அந்தக் கட்அவுட்டின் மறைவிலிருந்து காதலுற்ற பெண் நிஞ்ஜா வடிவத்தில் வருகிறாள்.
சரமாரியாக அவளைச் சுடத் துவங்குகிறார்கள். அவள் வானுக்கு உயர்கிறாள். இயேசுநாதரின் தலையைச் சுற்றிய முள்முடிபோல அவளது தலையைச் சுற்றிய துப்பாக்கி ரவைகள் பொலபொலவென கீழே விழுகிறது. பிறைபொறித்த கத்திகளை ஏவி இஸ்ரேலிய ராணுவத்தினரைச் சாய்க்கிறாள். எஞ்சிய ஒருவனை கவன் கற்களால் வீழ்த்துகிறாள். அதிகாரி மிஞ்சி நிற்கிறான். அவன் அவளைச் சுடத் தொடங்குகிறான். இருமுனைக் கூர் கொண்ட கோடலி போன்ற உலோகத்தினால் அதனைத் தடுக்கும் அவள் அதனைச் சுழலவிட்டு அது அவனைச் சுற்றிவிட்டு அவளிடம் மீளவர, அவளை நோக்கி மலைக்குப் பின்புறமிருந்து எழும் ஹெலிகாப்டரில் அது மோதி ஹெலிகாப்டர் வெடித்துச் சிதறுகிறது. கைத்த மனநிலையில் வெளிப்படும் நகைச்சுவை படமெங்கிலும் நிரவியிருக்கிறது.
சுலைமானின் முதல் இரண்டு படங்களில் தொடரும் பெற்றோருக்கும் மகனுக்குமான அற்புதமான உறவு அவரது மூன்றாவது படமான த டைம் தட் ரிமைன்ஸ் படத்தில் உச்சத்தை அடைகிறது. இரண்ட படங்களிலும் இடம்பெறும் இரண்டு காட்சிகளைச் சுட்டவிரும்புகிறேன். து டைம் தட் ரிமைன்ஸ் படத்தில் அவரது தந்தை இறந்த பின் அவரது தாய் உன்மத்த நிலையை அடைந்துவிடுகிறாள். அவள் சதா வெறித்த பார்வையடன் பால்கணியில் சலனமற்று அமர்ந்து கொண்டேயிருக்கிறாள். இரண்டு ஸ்பீக்கர்களை எடுத்;துவரும் மகன் அதனைத் தாயின் கால்களின் அடியில் வைக்கிறான். அவளுக்கும் அவளது கணவனுக்கும் பிடித்த இசைத்தட்டு ஒன்றினைப் போடுகிறான். தாயின் கால்கள் தானே அசையத் துவங்குகின்றன. அவளது உதடுகள் மெதுவாகப் புன்னகைக்கிறது. டீவைன் இன்டர்வென்ஸ் படத்தில் வரும் காட்சி இது : தந்தை மருத்துவமனையில் அசைவின்றிப் படுத்திருக்கிறார். மகன் சந்தேகத்துடன் தந்தையின் மார்பில் காதுவைத்து அவர் சுவாசிக்கிறாரா என உறுதிப்படுத்திக் கொள்கிறான். வெளியே சென்று திரும்பி வரும் அவன் இயர்போனைக் கொண்டுவந்து தந்தையின் இரு காதுகளிலும்; பொருத்திவிட்டு டேப்ரிகாடரை டுயூன் செய்துவிட்டுப் போகிறான். கண்கள் மூடிய நிலையில் தந்தையின் முகம் பூக்கத் துவங்குகிறது. சுலைமானின் திரைப்படங்கள் கதைகள் கொண்டதல்ல, ஒவ்வொரு காட்சியும் வலியும் காதலும் கொண்ட கவிதைகள். திரைமொழியின் மஹ்முத் தர்வீஷ் எலியா சுலைமான்.