கனவெனும் குதிரையில் ஏறினேன், இறங்க முடியவில்லை

இலக்கியத்தின் தேவை என்ன?
ஒரு நடு நிலைப்பார்வையை தருவதுதான் இலக்கியத்தின் ஆகச்சிறந்த பயன் என தோன்றுகிறது.

அது என்ன நடு நிலைப்பார்வை?
ஒரு பூனை பிறக்கிறது என வைத்து கொள்ளுங்கள்.பிறக்கும்போதே எலி அதன் இரை, நாய் அதன் எதிரி என்பது போன்ற தகவல்கள் அதன் மூளையில் பதிவாகி இருக்கும். என்றும் அது மாறவே மாறாது.
பொதுவாக மனிதனும் அப்படித்தான் இருப்பான். ஒரு நாத்திக குடும்பத்தில் பிறந்த ஒரு குழந்தை , அந்த கருத்துகளை கேட்டு கேட்டு வளரும் பட்சத்தில் , கடைசி வரை நாத்திகனாகவேதான் இருக்க முடியும். ஆன்மீக நம்பிக்கை உள்ள குடும்பத்தில் பிறக்கும் குழந்தையும் அப்படியே.

இப்படி இறுகல் தன்மை கொண்ட மனிதனை சற்றே இளக வைப்பதுதான் இலக்கியம். ஒரு பூனை இலக்கியம் படிக்க ஆரம்பித்தால் , எலியின் கோணத்தில் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதும் புரியும். பூனையின் பசியையும் , எலியின் உயிர் பயத்தையும் இலக்கியம் பதிவு செய்வதால் ஒரு சமனிலைப்பார்வை கிடைக்கிறது.

பூனை எப்படியும் இலக்கியம் படிக்கபோவதில்லை. அது கடைசி வரை பூனைதான். ஆனால் ஒரு மனிதன் இலக்கியம் பக்கம் வர முடியும். எப்படி பிறந்தானோ அப்படியே இறக்காமல் ,தன்னை கொஞ்சம் உயர்த்தி கொள்ள முடியும்.

சரி..இந்த இலக்கிய அனுபவத்தை சினிமாவால் கொடுக்க முடியுமா என்றால் கண்டிப்பாக முடியும். பல மடங்கு அதிகமாகவே கொடுக்க முடியும். ஆனால் அப்படிப்பட்ட படங்களை நாம் பார்ப்பது அரிது. எப்போதாவதுதான் அத்தகைய படங்களை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். அப்படி கிடைக்கையில் நமக்கு கிடைக்கும் மகிழ்ச்சியே தனிதான். எப்போதாவது வரும் பவுர்ணமிதான் மகிழ்ச்சி.தினம்தோறும் வந்தால் அந்த த்ரில் போய்விடும் அல்லவா.

அந்த வகையில் நான் சமீபத்தில் பார்த்து அசந்து போன படம்,” கனசெம்பா குதிரேயனேறி “ எனும் கன்னடப்படம். கனவெனும் குதிரையில் ஏறி என்ற இந்த படத்தை பெரியார் திடலில் நடந்த திரையிடலில் பார்த்தேன். தமிழ் ஸ்டுடீயோவும் , பெரியார் ஊடகத்துறையும் இணைந்து நடத்திய நிகழ்ச்சி இது.

சரி..... கனவெனும் குதிரையில் ஏறி..எதைப்பற்றிய படம்?

நம்பிக்கை, நம்பிக்கை இன்மை , தவறான நம்பிக்கையில் இருக்கும் சரியான அம்சங்கள், சரியான நம்பிக்கையில் இருக்கும் தவறுகள் என இந்த நம்பிக்கைகளை குதிரையாக உருவகித்து பேசுகிறது படம். குதிரை சவாரி சவால் மிக்கது. சரியாக கையாளா விட்டால், பாதை மாறி சென்று கவிழ்த்து விடும்.சாதாரண குதிரையே என்றால் கனவு எனும் குதிரை எத்தனை மடங்கு சவால் மிக்கது?

ஓர் ஏழை வெட்டியான், அவன் மனைவி.கிராமத்தில் வசிக்கின்றனர். அங்கு ஒரு நம்பிக்கை. அந்த ஊரில் மரணம் நிகழப்போவது , இவனுக்கு கனவு மூலம் தெரிந்து விடும் என்பது நம்பிக்கை.

இப்படிப்பட்ட கனவு அவனுக்கு வருகிறது.

அந்த ஊரில் பணக்கார முதியவர் நோய்வாய்ப்பட்டு இருக்கிறார். அவரைப்பார்க்க அவர் மகன் ,மரு மகள் ,பேத்தி வருகின்றனர். அவர் மருமகளுக்கோ , பேத்திக்கோ அவர் அருகே செல்வதே பிடிக்கவில்லை. உண்மையில் அவர்கள் அவரைப்பார்க்க வரவில்லை. சொத்து விஷ்யமாக வந்து இருக்கிறார்கள்.
இந்த நிலையில்தான் அவனுக்கு கனவு வருகிறது. அந்த கிழ்வன் இறந்ததுதான் கனவாக வந்ததாக நினைத்து அவன் வீடு தேடி வருகிறான், இறுதி சடங்குக்ளைப் பற்றி பேச வரும் அவனை அவர்கள் விரோதமாக பார்க்கிறார்கள்.. யாரும் சாகவில்லை. இறுதி நிகழ்ச்சியெல்லாம் வேண்டாம் என சொல்லி கொஞ்சம் காசு கொடுத்து அனுப்பி விடுகிறார்கள்.

என்ன சுவாரஸ்யம் என்றால் , உண்மையில் அந்த கிழவர் இறந்து விட்டார், காலம் காலமாக இருந்து வரும் கனவு ஐதீகம் இப்போதும் பலித்து விட்டது, ஆனால் சில காரணங்களுக்காக அந்த இறப்பை மறைக்கிறார்கள். என்ன பெரிய காரணம்.. சொத்து விவகாரம்தான், காசுக்காக பெற்ற அப்பன் உடல் அழுகி நாற்றம் எடுத்தாலும் பரவாயில்லை என நினைக்கும் மகன்.

அந்த அப்பாவி ஏழையின் எளிய நம்பிக்கை... நாகரீகம் பொருந்திய அறிவாளிகளின் தந்திரம் என்ற இரு துருவங்களுக்கு இடையேயான மாபெரும் இடைவெளி நம் கண் முன் விரிகிறது.

தர்க்கத்திற்கு அப்பாற்பட்ட சில நம்பிகைக்கள் மூட நம்பிக்கைகளாக மாறி , சுய நலனுக்காக பயன்பட ஆரம்பிப்பது அருவருப்பான ஒன்று. ஆனால் முன்பு ஏதோ ஒரு காலத்தில் ஏதோ சில காரணங்களுக்காக உருவாக்கப்பட்ட சில சடங்குகள் , சில நம்பிக்கைகள் இன்று பொருத்தம் அற்று போனால் கூட ஒரு குறியீடாக மட்டுமே நீடித்து வருவதை அன்றாட வாழ்க்கையில் காணலாம். இவற்றை ஒரு வகையில் பண்பாட்டின் நினைவு சின்னமாக கருதலாம். எல்லா நாடுகளிலும் இப்படிப்பட்ட தனித்தன்மை கொண்ட நம்பிக்கைகள் உண்டு. இவற்றால் என்ன பயன் என்ற கேள்வி எந்த அளவுக்கு முக்கியமோ. இவற்றை அழிப்பதால் என்ன பயன் என்ற கேள்வியும் முக்கியமானதே.

வீட்டை விட்டு அவசரமாக கிளம்புகிறீர்கள். பைக்கை எடுக்கும்போது கல் இடறிவிட்டு விழுந்து விடுகிறீர்கள். நீங்கள் அதுவரை பேசியே இராத பக்கத்து வீட்டுக்கார பெரியவர் அக்கறையாக சொல்வார் “ தம்பி, வீட்டுக்கு போய் கொஞ்சம் தண்ணி குடித்து விட்டு ,ஐந்து நிமிடம் கழித்து கிளம்புங்கள் . நேரம் சரியில்லை போலிருக்கிறது“

அவர் சொல்வது அறிவியல் பூர்வமாக தவறு என ஆதாரபூர்வமாக அவரிடம் நிரூபிக்கலாம். அல்லது சகுனம் சரியில்லை போல , ஏதாவது பிராயசித்தம் செய்ய வேண்டும்போல என பதறலாம்.
ஆனால் இரண்டுக்கும் அப்பாற்பட்ட நடு நிலை பார்வை ஒன்று இருக்கிறது. அவர் சொல்வது அறிவியல் பூர்வமாக சரியில்லை என நினைத்தாலும், அவர் சொல்வதை செய்வதால் பெரிய இழப்பில்லை எனும்பட்சத்தில் , அவரை மதிப்பதற்காகவாவது அவர் சொல்வதை செய்து விட்டு போகலாமே.

ஏதாவது ஒரு தரப்பை எடுப்பது எளிது . ஆனால் எந்த தரப்பையும் எடுக்காமல் இருப்பது , ரேசர் நுனியில் பயணிப்பது போன்றது. அந்த பார்வையைத்தான் படம் தருகிறது.

இந்த பட நாயகனின் நம்பிக்கை மூட நம்பிக்கையாக இருக்கலாம், அந்த மூட நம்பிக்கை அவனை ஏழ்மையில் உழலச்செய்யலாம். இதெல்லாம் தவறுதான், ஆனால் இதற்கு தீர்வு , இந்த நம்பிக்கையை சிதைப்பதுதானா... ஒருவர் தவறை எதிர்க்கிறார் என்றால் அவர் நல்லவர் என்று சொல்ல முடியாது , அவர் அதை விட பெரிய தவறின் பிரதிநிதியாக இருக்க கூடும்.

சரி..இவர்கள் அப்படி தந்திரமாக நடந்து கொள்கிறார்களே..அவர்களை பார்த்து வளரும் குழந்தை எப்படி வளரும்?

ஒரு ஹைக்கூ படித்து இருப்பீர்கள்...

ஓர் எறும்பை கொன்றேன்..
என் மூன்று குழந்தைகள்
பார்த்து கொண்டு இருந்தார்கள்

அவன் ஏழை..கிழிந்த ஆடை. ஆடை முழுக்க ஓட்டைகள். எந்த ஓட்டையில் தலையை விடுவது , எதில் கால் விடுவது என்பது தெரியாத அளவுக்கு ஓட்டை. ஆனால் அவனை அந்த வறுமை கண்ணீர் விட வைக்கவில்லை. தன் ஐதீகம் பொய்யாக போய் விட்டதே என்பதுதான் அவனை வருந்த வைக்கிறது.

ஆனால் இன்னொரு குடும்பம் .இன்னொரு வாழ்க்கை..புத்திசாலிகள் .அசட்டு நம்பிக்கைகள் ஏதும் இல்லாதவர்கள்/ ஆனால் ஒருவர் மீது ஒருவர் அன்பு இல்லாதவர்கள். அந்த குழந்தையும் யார் மீதும் அக்கறையோ அன்போ இல்லாமல்தான் வளரப்போகிறது என்பது பூடகமாக சொல்லப்பட்டு விடுகிறது.

வடகர்னாடக கிராமத்தில் நடக்கும் கதை இது. ஆங்கிலம் கலந்த கன்னட மொழியை பெங்களூரில் பேசி , புரிந்து கொண்டு வாழும் நமக்கு ஒரு வித்தியாசமான கன்னட மொழியை கேட்பதே ஒரு புதிய அனுபவமாக இருக்கிறது.

கதா நாயகனாக நடித்து இருப்பவர் கன்னட திரைப்பட ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமான வைஜனாத் பிராதர். காமெடி நடிப்பில் பிரபலமான இவர் இந்த படத்தில் இந்த கேரக்டருக்கு உயிர் கொடுத்து நடித்து இருக்கிறார்.

இவர் வட கர்நாடகத்தை சேர்ந்தவர் என்பதால் கேரக்டருக்கு நச் என பொருந்துகிறார்.

இவர் மட்டும் அல்ல, பெரும்பாலும் அனைவருமே வட கர்னாடகாவை சேர்ந்தவர்கள்தான். ஓர் இடத்தில்கூட மிகையான காட்சிகளோ , சினிமாத்தனமான ஆர்ப்பாட்டங்களோ இல்லை.
இயக்குனர் கிரிஷ் காசரவள்ளி மாற்று சினிமா இயக்குனர்களில் முக்கியமான ஒருவர். அவரது அனைத்து படங்களும் வைரங்கள் என்றாலும் இந்த படம் அவர் திரையுலக வாழ்க்கையின் மகுடம் என்றே சொல்ல வேண்டும்.

கர்னாடக மக்கள் மிகவும் அன்பானவர்கள். கையில் பத்து பைசா இல்லாமல் நீங்கள் கர்னாடகம் முழுதும் சுற்றி வரலாம். எப்படியாவது சாப்பாடு, மரியாதையான சாப்பாடு, கிடைத்து விடும்.
நான் கர்னாடக கிராமம் ஒருமுறை முதல் முறையாக சென்ற போது , ஒரு எளிமையான வீட்டில் தயங்கி தயங்கி தண்ணீர் கேட்டேன் . நான் யார் , எதற்கு வந்தேன் என்று பேச்சு மெதுவாக ஆரம்பித்து அப்படியே அந்த வீட்டில் சுவையான ராகி களி சாப்பிடுவதில் முடிந்தது. போகும்போது ஏதாவது செய்ய வேண்டுமே என காசை நீட்டினேன், பதறி விட்டார்கள்.உணவுக்கு காசு வாங்குவதா என.

ஆனால் அந்த பண்புகளை எல்லாம் இன்றைய பெங்களூருவில் காண முடியாது. அறிவாளிகளின் நகரமாக மாறிவிட்ட பெங்களூரு , அந்த எளிய மக்களின் ஐதீகம் , நம்பிக்கைகள் , பழக்க வழக்கங்களை மாற்றிவிட்டது.

கிராமத்து கடைகளில் தண்ணீர் பாக்கெட்டுகள் விற்கப்பட்ட புதிதில் சிலர் தண்ணீர் வேண்டும் என கேட்டு வாங்கி குடித்து விட்டு , காசு கொடுக்காமல் நகர ஆரம்பிப்ப்பார்கள்.கடைக்காரர்கள் சற்று குற்ற உணர்வு கலந்த வெட்கத்துடன் அந்த தண்ணீர் விற்பனைக்கு என தயக்கதுடன் சொல்வார்கள்.

ஏழை வெட்டியானின் நம்பிக்கைகள் மெல்ல மெல்ல தோல்வியுற்று அல்லது தோற்கடிக்கப்பட்டு அவன் கலங்கும்போது எனக்கு அதுதான் நினைவுக்கு வந்தது.

இதை சொல்லிய விதம் அற்புதம். அலுப்பூட்டாத திரைக்கதை. ஒவ்வொருவர் கோணத்தில் கதை சொல்லும் பாங்கு அருமை...

இந்த படம் பல விருதுகளை அள்ளிக்குவிக்க திரைக்கதையும் ஒரு முக்கிய காரணம்.

நான் லீனியர் கதை அமைப்பு பல படங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் ஒவ்வொருவரின் பார்வையையும் உணர்வு பூர்வமாக அறிந்து கொள்ள இந்த கதை அமைப்பு சிறப்பாக பயன்பட்டுள்ளது இந்த படத்தில்தான்.

அசட்டு நகைச்சுவைகளும், எதிர்பார திருப்பங்களும்தான் படத்தை விறு விறுப்பாக்கும் என நினைக்கும் தமிழ் இயக்குனர்கள் கண்டிப்பாக படத்தை பார்க்க வேண்டும்.

அந்த பணக்கார வீடு, ஏழை குடிசை, ஒப்பனை இல்லா கிராமம் என கண் முன் நிறுத்தும் கேமரா , இசை என அனைத்திலும் சிறப்பாக அமைந்து இருக்கும் இந்த படத்தை அனைவரும் ஒரு முறையேனும் பார்க்க வேண்டும்.

என் கன்னட நண்பர் ஒருவரிடம் இந்த படம் குறித்து கேட்டேன். மூட நம்பிக்கையில் ஒரு வெட்டியான் தன் ஏழ்மைக்கு காரணம் தன் மூட நம்பிக்கை என உணர்வதுதான் படம் என்றார்.

அசந்து விட்டேன். அந்த கோணத்தில் படம் பார்த்தால் அப்படியும் புரிந்து கொள்ளலாம்தான்.

ஆனால் படம் எந்த பிரச்சாரமும் செய்யாமல் , கேள்விகளை மட்டும் எழுப்பி , அந்த கேள்விகள் ஓய சில நாட்களாவது ஆகிறதே – அதுதான் படத்தின் வெற்றி என்பேன்.

திரைப்படம் என்பது எந்த அளவுக்கு ஒரு நல்ல ஊடகமாக இருக்க முடியும் என ஆச்சர்யப்படுத்தியது படம். இந்த ”கனவு எனும் குதிரையில் ஏறி” னால் அவ்வளவு சீக்கிரம் இறங்கி சென்று முடியாது என படம் பார்த்தால் கண்டிப்பாக உணர்வீர்கள்.