காணும் முறைகள் ஜான் பெர்ஜர்1

அத்தியாயம் 1 - பகுதி 2

ஒரு இயற்கைக்காட்சியை பார்க்கும் போது, நம்மை அதில் இருத்திக்கொள்கிறோம். கடந்தகால கலைப்படைப்பை பார்த்தால், நாம் வரலாற்றில் நம்மை இருத்திக்கொள்வோம். அதை நாம் பார்க்க தடைவிதிக்கப்பட்டால், நமக்கு சொந்தமான வரலாற்றை நாம் இழக்கிறோம். இந்த இழப்பினால் யாருக்கு நன்மை? இறுதியில், கடந்த கால கலைப்படைப்பை புதிராக்குக்கிறார்கள். தனி சலுகை பெற்ற ஒரு சிறுபான்மை ஆளும் கூட்டம் வரலாற்றை தங்களுக்கு நியாயப்படுத்த முயலும். அப்படியான நியாயப்படுத்தல் நவீன முறையில் பயனளிக்காது. அதனால், தவிற்க இயலாமல், அது புதிராகுகிறது.

இப்படியான புதிராக்கம்/மாயாவாதம் (Mystification) குறித்து ஒரு எடுத்துக்காட்டை பார்ப்போம்.

ஓவியர் ஃப்ரான்ஸ் ஹால்ஸ் (Frans Hals) குறித்த ஆய்வு புத்தகம் இரண்டு தொகுதிகளாக 1971'இல் வெளியானது. இந்த ஓவியர் குறித்து வெளியான புத்தகங்களில் இது அதிகாரபூர்வமானதாகும் (1972'ஆம் ஆண்டு வரை). கலை வரலாறு குறித்த ஆய்வு புத்தகமான இது, சராசரியை விட சிறந்ததாகவும் அல்லாமல், சராசரியை விட மோசமானதாகவும் அல்லாமல் இருக்கிறது.

ஏழை வயதானவர்கள் காப்பக நிர்வாக ஆண் உறுப்பினர்கள்.
ஏழை வயதானவர்கள் காப்பக நிர்வாக பெண் உறுப்பினர்கள்.
ப்ரான்ஸ் ஹால்ஸின் கடைசி இரண்டு சிறந்த ஓவியங்கள், பதினேழாம் நூற்றாண்டு டச்சு நகரமான ஹார்லேமில் இருக்கும் ஏழை வயதானவர்கள் காப்பக்கத்தின் ஆண் மற்றும் பெண் நிர்வாக உறுப்பினர்களை சித்தரிக்கின்றன. அவ்விரு ஓவியங்களும் கேட்டுக்கொண்டதிற்கு இணங்க அதிகாரப்பூர்வமாக வரையப்பட்டன. எண்பது வயதை கடந்த ஓவியர் ஹால்ஸ் ஆதரவற்றவர். வாழ்வின் பெரும்பகுதி கடனில் கழிந்தது. இவ்விரு ஓவியங்களை வரைய தொடங்கிய 1664 ஆம் ஆண்டின் குளிர்காலத்தில், பொது தொண்டு நிலையத்தின் மூலமாக மூன்று சுமைகள் தூள் நிலக்கரி பெற்றார், அது கிடைக்காமல் இருந்திருந்தால் குளிரால் உறைந்து இறந்திருப்பார். அப்படியான பொது தொண்டு நிலையத்தின் நிர்வாகிகளே இந்த ஓவியத்தில் அவருக்காக அமர்ந்திருப்பவர்கள்.

இந்த உண்மைகளை நூலாசிரியர் பதிவு செய்து, இந்த ஓவியங்களில் அமர்ந்திருப்பவர்கள் குறித்து மதிப்பீடு செய்யாமல் இவற்றைப் படிப்பது சரியாகாது என வெளிப்படையாக தெரிவிக்கிறார். கசப்புணர்வுடன் இந்த ஓவியங்களை ஹால்ஸ் வரைந்தார் என எந்த ஆதாராமும் இல்லை என குறிப்பிடுகிறார். எனினும், இவ்வோவியங்களை ஆசிரியர் குறிப்பிடத்தக்க கலை படைப்பு என கருதி விளக்கமும் அளிக்கிறார்.
பெண் உறுப்பினர்கள் குறித்து இப்படியாக எழுதுகிறார்,
"ஒவ்வொரு பெண்ணும் மனித நிலையை குறித்து சம முக்கியத்துவத்துடன் நம்மோடு பேசுகிறார்கள். இருண்ட பரப்பிற்கு எதிராக சம தெளிவுடன் ஒவ்வொரு பெண்ணும் தெரிகிறார்கள், இருப்பினும் அவர்கள் நிலையான உரு அமைப்புடைய ஓழுங்குடன் இணைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தலைகள் மற்றும் கைகள் மட்டுப்படுத்திய சாய்வான படிவத்தை உருவாக்குகிறது. ஆழமான நுட்பமைப்பு, ஒளிரும் கருப்பு வண்ணம் ஆகியவை ஓவியத்தின் பொருத்தமான சேர்க்கைக்கு பங்களிக்கிறது, சக்தி வாய்ந்த வெள்ளை நிறம் மறக்க இயலா வேறுபாட்டை அமைக்கிறது. தெளிவான மஞ்சள் சார்புகொண்ட இளஞ்சிவப்பு நிறம், அங்கு பிரிக்கப்பட்ட கீற்றுகள் அகலம் மற்றும் வலிமையில் உச்சத்தை எட்டுகிறது."

ஓவியத்தின் கூட்டமைப்பு (composition) ஒற்றுமையே படிமத்தின் சக்திக்கு அடிப்படையாக பங்களிக்கிறது. ஓவியத்தின் கூட்டமைப்பை கருத்தில் கொள்வது நியாமானதாகும். ஆனால் இங்கு கூட்டமைப்பே ஓவியத்தின் உணர்வுகளை வெளிப்படுத்துவதாக எழுதப்பட்டுள்ளது. பொருத்தமான சேர்க்கை, மறக்க இயலா வேறுபாடு, அகலம் மற்றும் வலிமையில் உச்சத்தை எட்டுகிறது போன்ற சொற்கள், படிமத்தினால் தூண்டப்பட்ட உணர்ச்சியை வாழ்ந்த அனுபவத்தின் தளத்திலிருந்து சார்பற்ற கலை பாராட்டு தளத்திற்கு இடம் மாற்றுகிறது. அனைத்து முரண்பாடுகளும் மறைக்கின்றது. மாறாத மனித நிலை இன்னும் மிச்சம் இருக்கிறது. ஓவியம் செய்யப்பட்ட ஒர் அற்புதமான பொருளாக கருதப்படுகிறது.

ஹால்ஸ் குறித்தும் அவரை ஓவியம் வரைய பணித்த நிறுவன உறுப்பினர்கள் குறித்தும் மிக குறைவான தகவல்களே அறிய முடிகிறது. அவர்களுக்கிடையேயான உறவு குறித்து சூழ்நிலை ஆதாரங்கள் தயாரிக்க இயலாது. ஆனால் ஓவியங்கள் தாமே ஆதாரங்களாக இருக்கிறது. ஆண்கள் மற்றும் பெண்கள் குழுவை இன்னொரு மனிதன் (ஓவியர்) பார்ததற்கான ஆதாரம். இந்த ஆதாரத்தை படித்து, நீங்களே மதிப்பிடு செய்துக்கொள்ளவும்.

கலை வரலாற்று ஆசிரியர் அப்படி நேரடியாக முடிவெடுக்க அச்சப்படுகிறார்:
"ஹால்ஸின் மற்ற பல படங்களில் இருப்பது போல், ஊடுருவி செல்லும் பாத்திர படைப்பு கிட்டத்தட்ட நம்மை மயக்க செய்து, சித்தரிக்கப்பட்டுள்ள ஆண்கள்/பெண்கள் குறித்த ஆளுமை பண்புகள் மற்றும் அவர்களது பழக்கங்கள் கூட நமக்கு தெரிந்திருக்கிறது என்று நம்ப செய்கிறது."

'மயக்க செய்து' என்று எதை குறிப்பிடுகிறார்? ஓவியங்கள் நம்முள் செயலாற்ற துவங்கியதன்று வேறொன்றுமில்லை. அவை நம்மூள் செயலாற்ற துவங்கியது, ஏனெனில் அமர்ந்திருப்பவர்களை ஹால்ஸ் பார்க்கும் விதத்தை நாம் ஏற்கிறோம். அப்பாவித்தனமாக இதை நாம் ஏற்கவில்லை. நாம் இதுவரை கவனித்த மக்கள், சைகைகள், முகங்கள், நிறுவனங்கள் ஆகியவற்றை ஒத்துள்ளது என்பதால் ஏற்றுக்கொள்கிறோம். தார்மீக மதிப்புகள் மற்றும் ஒப்பிடத்தக்க சமூக உறுவுகள் அடங்கிய சமூதாயத்திலேயே நாம் வாழ்கிறோம் என்பதாலே இது சாத்தியமாகிறது. துல்லியமாக இதுவே ஓவியங்களின் உளவியல் மற்றும் சமூக தேவைகளை கொடுக்கிறது. இதுவே, சித்தரிக்கப்பட்டுள்ள மக்களை தெரிந்து கொள்ள முடியும் என நம்மை சமாதானப்படுத்துகிறது, ஓவியரின் மயக்க செய்யும் திறன் அல்ல.
ஆசிரியர் தொடர்கிறார்:
"சில விமரிசகரின் பார்வையில், மயக்க செய்வது என்பது வெற்றிகரமாக முழுவதும் நடந்திருக்கிறது. எடுத்துக்காட்டாக, தொப்பியின் ஒருபுற விளிம்பினைக் கீழ் நோக்கிச் சாய்வாக வைத்திருக்கிற (நிர்வாக உறுப்பினர்), நீண்ட மெலிந்த அவருடைய முடியை தொப்பி அரிதாக மறைக்கிற, அவரது ஆர்வமூட்டும் கண்கள் மயங்கிய நிலையில் குடிபோதையில் இருப்பது போல் காட்டப்பட்டுள்ளது."

அவர் இதை அவதூறு என்றே கூறுகிறார். அந்த காலக்கட்டத்தில் தொப்பியை தலையின் ஒரு பக்கத்தில் அணிவது என்பது நடப்பு வழக்காகும். மருத்துவ கருத்தை மேற்கோள் காட்டி, அந்த நிறுவண உறுப்பினரின் வெளிப்பாட்டிற்கு முக பக்கவாதம் காரணமாக இருக்கலாம் என நிருப்பிக்க முயல்கிறார். நிர்வாக உறுப்பினர்களில் ஒருவர் குடிப்போதையில் இருப்பதாக சித்தரித்திருந்தால், அந்த ஓவியத்தை நிர்வாக உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார்கள் என வலியுறுத்துகிறார். இவற்றை குறித்து தொடர்ந்து பல பக்கங்கள் விவாதித்துக்கொண்டே போகலாம். (பதினேழாம் நூற்றாண்டு ஹாலந்தில், தலையின் ஒரு பக்கத்தில் தொப்பி அணியும் ஆண்களை சாகசமிக்கவர்களாகவும் இன்பம் விரும்புபவர்களாகவும் கருதினர். அதிகமாக குடிப்பது என்பது நடைமுறையில் இருந்த அங்கிகரிக்கப்பட்ட ஒன்றாகும். மற்றும் பல...). ஆனால், அப்படியான விவாதங்கள் தேவையானவற்றைப் பற்றி சிந்திக்க விடாமல் நம்மை வெகுதொலைவில் கொண்டு சென்றுவிடும். இதை ஆசிரியர் தவிர்க்க தீர்மானித்திருக்கிறார்.

மதிப்பு இழந்த பொது தொண்டின் உதவியால் வாழும் ஆதரவற்ற வயதான ஓவியர் ஹால்சை, ஆண் மற்றும் பெண் நிர்வாக உறுப்பினர்கள் நேருக்கு நேர் உற்றுப்பார்க்கின்றனர். அவர்களை ஏழையின் பார்வையிலிருந்தே ஹால்ஸ் ஆராய்கிறார், ஆனால் அப்படியான பார்வையை அவர் சமாளித்திருக்க வேண்டும். இதுவே இந்த ஓவியங்களின் நாடகம். "மறக்க இயலா மாறுபாடு" அடங்கிய நாடகம்.

இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள இந்த குறிப்புக்கும் மாயாவாதத்துக்குமான தொடர்பு மிக குறைவு. மாயாவாதம் என்பது வேறு வகையில் எது உண்மையாக இருக்கும் என்பதை தெளிவப்படுத்தும் செயல்முறையே ஆகும். முதலாளித்துவம் உருவாக்கிய புதிய பாத்திரங்களையும் வெளிப்பாடுகளையும் முதலில் வரைந்தவர் ஹால்ஸ் தான். பால்ஸாக் இரண்டு நூற்றாண்டுகளுக்கு பிறகு இலக்கியத்தில் என்ன செய்தாரோ அதை அப்போதே படிம முறையில் செய்தார். ஆயினும், இந்த ஓவியங்களின் அதிகாரப்பூர்வ ஆய்வாசிரியர் கலைஞரின் சாதனை குறித்து இவ்வாறு கூறுகிறார்.
"ஹால்ஸின் தனிப்பட்ட நோக்கத்திலிருந்து அசையாத அர்ப்பணிப்பு, சக மனிதர்களின் மீதான நம் உணர்வை செழிப்பாக்குகிறது மற்றும் உத்வேகத்தை எப்போதும் அதிகரிக்கும் சக்தி நமது பிரமிப்பை உயர்த்துகிறது, அதுவே வாழ்க்கையின் முக்கிய திறன்களை நமக்கு நெருக்கத்தில் காட்சிக்கொடுக்க அவருக்கு உதவியது."

அதுவே மாயாவாதம்.

- தொடரும் -

குறிப்பு: ஜான் பெர்ஜர் எழுதிய மிக முக்கியமான புத்தகமான Ways of Seeing பார்த்தலில் இருக்கும் பல கூறுகளை நுட்பமாக அலசுகிறது. ஒருமுறை தமிழ்த்திரைப்பட ஆய்வாளர் தியடோர் பாஸ்கரன் எனக்கு இந்த புத்தகத்தை அறிமுகப்படுத்தினார். சில பக்கங்களை படித்தவுடனேயே நண்பர் யுகேந்திரனிடம் இதனை தமிழில் மொழியாக்கம் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். பிறகு முழு புத்தகத்தையும் படித்து முடித்தவுடன், பார்த்தலில் இருக்கும் நுட்பங்களை அறிந்து வியந்தேன். அந்த வியப்பை, காட்சி ஊடகத்தின் சிறப்பை தமிழ் பார்வையாளர்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்கிற நோக்கில் வேஸ் ஆப் சீயிங் என்கிற இந்த நூலை தமிழில் மொழியாக்கம் செய்து வெளியிடுகிறோம். இந்த புத்தகத்தை எனக்கு அறிமுகம் செய்த தியடோர் பாஸ்கரன் எப்போதும் என் நன்றிக்கு உரியவர். தமிழில் மொழியாக்கம் செய்வதில் தீவிர அக்கறை எடுத்து செய்து வரும் நண்பர் யுகேந்திரனுக்கு பேசாமொழி சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
--------------------------------------------------------------------------------------------------