கிளர்ந்தெழும் மூன்றாம் சினிமா

தமிழில் வெளிவந்த திரைப்பட சிற்றிதழ்களில் இருந்து முக்கியமான, அல்லது விவாதத்திற்குரிய, அல்லது ஆவணமாக இருக்க கூடிய சில கட்டுரைகளை பேசாமொழியில் படிக்க கொடுக்கிறோம். முடிந்த வரை அந்த கட்டுரைகள் வெளிவந்த பத்திரிகை ஆசிரியர்களின் அனுமதி பெற்றே அவை வெளியிடப்படும். ஆனால் சில சிற்றிதழ்களின் ஆசிரியர்களை அணுகவே முடியாத சூழலில் கட்டுரையின் முக்கியத்துவம் கருதி இங்கே வெளியிடுகிறோம். தொடர்புடைய யாராவது ஆட்சேபம் தெரிவித்தால் கட்டுரைகள் நீக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

விஸ்வாமித்ரனை ஆசிரியராக கொண்டு வெளிவந்த செவ்வகம் சிற்றிதழில் இருந்து சில கட்டுரைகளை இந்த இதழில் வாசிக்க கொடுக்கிறோம்.

கிளர்ந்தெழும் மூன்றாம் சினிமா

ஒரு சீரிய பார்வையாளர்களின் மனத் தேர்ச்சியை வலுவேற்றக்கூடிய நம்பகமான திரைப்படவிழா இந்திய அளவில் கேரளத் திரைப்படவிழாவாகத்தான் இருக்க முடியும். அவ்விழாவில் பங்கேற்கும் பெரும்பான்மைப் படங்கள் தரும் உவகையும் சிந்தனையூட்டமும் அளப்பரியது. ஆசிய, மூன்றாம் உலக லத்தீன் அமெரிக்க நாடுகளின் திரைப்படங்களை முன்னிலைப் படுத்துவதில் கவனம் கொள்ளும் அதன் உணர்வோட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. விருதுக்கான படங்களும் இந்நிலப்பரப்புக் களிலிருந்தே தேர்வு செய்யப்படுகின்றன. வாழ்வின் நெடுவேராய் ஊடுபாவியிருக்கும் மானுட மேன்மையை அகம்விதைக்கும் படைப்பாக்கங்களை தேடிக் காண்பதும், அதன் வழியே பார்வையாளனது தன்னுணர்வுக் கண்ணோட்டம் சீரடைவதும் இன்றைய கலையுருவாக்கத்தின் தலையாய தேவைகளாய் நம்முன் அங்கம் வகிக்கின்றன.
வெறுமனே திரைப்பட விழாவில் கலந்து கொள்வதும் மகிழ்வுடன் ஊர்திரும்புவதும் என்கிற நுகர்வுப் போக்கை கேரளத் திரைப்பட விழா நமக்கு அளிப்பதில்லை. கலை என்பது மனிதனின் இயல்பிருப்பைத் தேடிச்செல்ல உதவும் ஒரு ஞாபகப்பாதை உண்மையும் நேயமும் அடர்ந்திருக்கிற அவ்விருப்பை அடையாளம் கண்டடையும் களத்தின் ஒரு பகுதியாகவே அவ்விழாவின் படைப்புக்களை நாம் இனம்காண முடியும்.

எளிமை கலையாத சாராம்சத்துடன் மிகத்தெளிவான முந்திட்டமிடலுடன் 2004- டிசம்பர் இரண்டாம் வாரம் திருவனந்தபுரத்தில் தொடங்கின. விழா எட்டுநாட்கள் நடைபெற்றது. முப்பது நாடுகளிலிருந்து 200 படங்கள் பங்கேற்றன. அவைகளில் ஈரான், லெபனான், செனிகல் ஹாங்காங், ஜப்பான்., சீனா, தைவான், பிரான்ஸ், ஆகிய நாடுகள் உள்ளடங்கும் விருதுப் போட்டிக்கான படங்கள் சமகால உலகத்திரைப்படங்கள், திரையாளுமைகளின் அனைத்துப் படங்கள், அஞ்சலி அர்ப்பணிப்பு எனும் வகையிலான படங்கள், சமவருட மலையாளப் படங்கள் என பல பிரிவுகளில் படங்கள் திரையிடப்பட்டன. ஆசிய மூன்றாம் உலக லத்தீன் அமெரிக்கத் திரைப்பட தேசத்தினரை பரவசப்படுத்தும்படியான சில படங்கள் ஒரே நேரத்தில் திரையிடப்பட்டதில் ஏதேனுமொன்றை இழக்க ஆனது இயல்பான ஒரு விஷயமாக இருந்தது. நான் பார்க்க வாய்த்த சில திரைப்படங்களில் முக்கியமானவற்றைப் பற்றிப் பேச விழைவுகொள்கிறேன்.

விழாவின் முதல்நாள் மாலையில் திரையிடப்பட்ட துவக்கப்படமே அனைவரின் எதிர்பார்ப்பையும் ஒருமுனைப் படுத்தியிருந்த ஹாங்காங் இயக்குநரான வோங்கார் வேயினது சமீபத்திய படமான 2046, இப்படத்திற்காக கார் வேய் மூன்று வருடங்கள் உழைத்திர்க்கிறார். எதிர்காலத்திலும் கடந்தகாலத்திலும் நிகழ்வான புதியவிதத்திலமைந்த கதையுத்தியை அணுகியிருந்தார். கடந்தகாலத்தின் பிணைப்புணர்வில் அமிழ்ந்துபோன காதல் கவிந்த மனப்பிரதி எதிர்கால நினைவடுக்களில் தோற்றம் காண்பதான ஒரு கதையாடலை கார்வேய் பதியப்படுத்தியிருந்தார். 2046 அவரது வழக்கமான திரைப்பட அணுகுமுறையிலிருந்து அடுத்தகட்ட நகர்வு என்று தோன்றுகிறது. கார்வேயின் ஆஸ்தான நடிகரான டோனி லியாங் சியு வேய் தான் இப்படத்திலும் பிரதானப் பாத்திரம் ஏற்பவர். கார்வேயின் முந்தைய படமான காதலுக்கான மனோநிலை (in the mood for love) திரைப்படத்தின் மூலம் டோனி லியாங் மனதை வசியப்படுத்தும் தனது மகத்தான நடிப்பிற்காக அவ்வருட கான் படவிழாவில் சிறந்த நடிகருக்கான உயர்ந்த விருதைப்பெற்றவர். டோனி லியாங்கின் தேர்ந்த நடிப்பின் தொடர்களமான 2046 படத்தில், புகழ்பெற்ற சீன நடிகை கோங்க்லீ சிறப்புத் தோற்றம் தந்திருக்கிறார். சீன இயக்குநர்கள் சென் கைகே மற்றும் சாங்க் இமூ ஆகியோரது படங்களில் ஏற்ற கதாபாத்திரங்களின்மூலம் கோங்லீ பிரசித்திபெற்றவர். காதலுக்கான மனோநிலை படத்தில் பிரதான பெண் கதாபாத்திரமேற்ற மாக்கி சியாங் இப்படத்தில் ஒருசில காட்சிகளில் வந்துபோகிறார். இவர் இவ்வருட்த்திற்கான சிறந்த நடிகைக்கான கான்விருதை ஃபிரஞ்ச் இயக்குநர் ஆலிவர் அஸ்ஸேயஸின் சுத்தம் (clean) படத்தில் நடித்ததன்மூலம் பெற்றவர். இருகாலகட்டங்களில் ஞாபக அலைவரிசையில் கதைநிகழும் 2046 படத்தில், பலபெண்கள் தமது காதல்வயப்பட்ட துயரங்களோடும் இழப்புக்களோடும் வந்துசெல்கிறார்கள். காதலும் காமமும் அதன் சுக துக்கங்களோடு பின்னிக் கிடப்பதே இயக்குநர் கார்வேயினது திரைப்படங்களின் மையக்கதையாடலாக அனுபவத்தின் மனோவயத்துடன் காட்சிப்படுத்த முனைந்துள்ளனர். விழாவிற்கு வருகை தந்திருந்த இந்தியத் திரைப்பட இயக்குநர் ஷியாம் பெனகல் , ‘இப்படம் சிறப்பான படம் எனும்நிலையில் புரிந்துகொள்ள கடினமானது.’ என்று குறிப்பிட்டார். உண்மைதான் புரிந்து கொள்வதற்கு கடினமான ‘கலைத்தல்’ (non linear) கதைபாணியிலமைந்த இப்படம் கார்வேயின் நூதனச் சொல்லாடலின் துணை கொண்டு மனதை ஆட்கொள்ளும் விதத்தில் வடிவப்பட்டிருந்தது. கார்வேயின் மற்றபடங்கள் அனைத்தும் புரிதல் திறனுடையவை. ஹாங்காங் நகரின் இயந்திர மயமடைந்த வாழ்வின் தனிமையை மனத்தேக்கத்தை துயரத்தை கூறமுயல்பவை. 2046 படத்திலும் அவ்வனுபவங்களே இடம்பெற்றிருக்கிற போதிலும், அதன் தனித்த காட்சியாடலால் முக்கியத்துவம் பெற்றுவிடுகிறது. எனினும், அவரது முந்தைய படமான காதலுக்கான மனோநிலையின் தொடர்படமாகவே 2046 தன்னை இருத்திக்கொள்கிறது. காதலுக்கான மனோநிலை படம் காண வாய்ப்பு கொண்டவர்களுக்கு 2046- அதன் கதைமையம் சார்ந்து வலுவான புரிதலைத் தரக்கூடும்,.

விருதுப்போட்டியில், இடம் கண்டிருந்த படங்களில் லெபனான் நாட்டிலிருந்து வந்திருந்த தீயின் வளையம் (Ring of Fire) அனைவரின் ஏகோபித்த கவனத்தையும் கவர்ந்திருந்தது. படம் லெபனானின் போர்ச்சூழல் சார்ந்த அரசியல் காலகட்டத்தை யதார்த்தமாகச் சித்தரிப்பது என்பது மாத்திரமல்ல அவ்வரவேற்பிக்கான காரணம். அத்துடன் தேர்ந்த தொழில்நுட்பத்தையும் திரைக் கதையோட்டத்தையும் கொண்டிருந்த படம் எனும் வகையிலும் தீயின் வளையம் மூன்றாம் உலக சினிமா வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க படமாகவே கருதப்படும் கதையின் காலகட்டம் 1980., களின் மத்தியில் நிகழ்வது பத்துவருடங்களாக நீளும் போரின் தொடர்வன்முறைகளின் மீதெழுந்த இடிபாடுகளால் அதிர்வுற்றிருக்கும் பெய்ரூட் நகரிலிருக்கும் ஒர் கல்லூரியொன்றில் பணிபுரியும் சாஃபிக் எனும் இலக்கியப் பேராசிரியரைப் பற்றியது படத்தின் கதைமையம். அவர் போர்ச்சிதைவால் உறவுகளற்ற தனிமையும், தாமவயதில் நேரும் காதலுணர்வும் சூழ வாழ்கிறார். ஃபிரஞ்ச் நாவலாசிரியரான ஆல்பெர்ட் காம்யூவின் ‘கொள்ளை நோய்’,(The plaque) நாவலை பாடமெடுத்துக் கொண்டிருக்கும் ஓர்வேளையில் கல்லூரியருகே வெடிகுண்டுத் தாக்குதல் நிகழ்த்தப்படுகிறது. பதறியோடும் மாணவர்களோடு சாஃபிக்கும் கல்லூரியின் பதுங்கு அறையொன்றிற்கு தப்பியோடுகிறார். அங்கே இருளில் முகமறிந்து கொள்ளமுடியாத பெண்ணொருத்தியுடன் காமவயப்படுகிறார். வெடிகுண்டுத் தாக்குதல் முடிவுற்று அனைத்து மாணவர்களும் வெளியேறிவிட தான் கட்டியணைத்து காமமுற்ற பெண் யாரென அடையாளம் காணமுடியாமல் சாஃபிக் திண்டாடுகிறார். அப்பெண் வெளியேறும்போது அவர்ருகே அவளது நோட்டுப் புத்தகமொன்றை விட்டுச் செல்கிறாள். அப்புத்தகத்தை வைத்துக்கொண்டு சாஃபிக் அவளை முகம்கண்டடைய பலவழிகளில் முயல்கிறார். இயலாமல் இறுதியில் குழப்பமடைந்து மனக்கிலேசம் வெகுண்ட நிலைக்குத் தள்ளப்படுகிறார். அதன் உச்சகட்ட கொந்தளிப்பாக , அவர் அதுவரை தான் பிணைக்கப்பட்டிருந்தாலும், அனைத்து அரசியல் வன்முறைகளாலும் போர் வலைவிரிக்கும் கொடூரங்களிலாமும் கோபமடைந்து போராட்டக் குரலொன்று அவருள்ளிருந்து வெடிக்கிறது. அப்போராட்டக் குரல் மீண்டும் வெறுமைக்கும் தனிமைக்கும் உள்ளாகிவிட்ட அவரது இருத்தலிலிருந்து எழுகிறது.

நுட்பமான காட்சி நேர்த்தியுடன் வடிவப்பட்டிருக்கும் இப்படம், வெவ்வேறு துருவங்களென ஆகிவிட்ட தனிமனித உணர்வு வெளியும் (வன்முறையில் மையம் கொண்ட) அரசியல் வெளியும் பிளவுற்றுவிட்ட வாழ்வியல் வியாபகத்தில், அவ்வரசியல்வெளியின் மேலாதிக்கம் எவ்விதம் தனிமனித இருப்பை காயப்படுத்தி மனம்பிறழச் செய்கிறது என்பதன் சலன வெளிப்பாட்டினை பார்வையாளர்களுக்கு அளித்து விடுகிறது. படத்தில் நம்மை வெகுவாக ஆட்கொள்வது எண்பதுகளின் மத்தியில் பெய்ரூட் நகரம் சார்ந்த போர்க்கால சித்தரிப்பு. படத்தின் தீவிரத்தன்மைக்கு ஆதாரமாக இருப்பது மையக் கதாபாத்திரம் ஏற்ற நடிகரான நீடாவாகிம் தந்த ஈடுபாடு மிக்க பங்களிப்பு லெபனான் மற்றும் பிரான்ஸ் நாட்டின் கூட்டுத் தயாரிப்பில் உருவான இப்படம் திரைப்படவிழாவில் best debut award. சிறந்த படத்திற்கான சர்வேதச விமர்சகர்கள் விருதையும் (FIPRESCI Award) பெற்றது. விழாவில் பங்கேற்க இப்படத்தின் இயக்குநர் பாகிஜ் ஹொஜேஜ் “எமது மக்களின் மன உணர்வுகளில் போரின் ஞாபகங்கள் இன்னும் நிலைத்திருக்கின்றன. அவை எளிதில் அழித்துவிட முடியாதவை.” என்றார். மேலும், “லெபமானில் வருடத்திற்கு மூன்று அல்லது நான்கு படங்களே தயாரிக்கப்படுகின்றன. அரசாங்கரீதியாக தீவிர சினிமாவிற்கு ஆதரவு கிடைப்பதில்லை. அதிகமான தருணங்களில் நாங்கள் பிரான்சின் உதவியையே நாட வேண்டியிருக்கிறது.” என்று சமகால லெபனானிய சினிமாவின் நலிவுற்றிருக்கும் நிலைகுறித்து தனது உரையில் குறிப்பிட்டார்.”

சிரியாவும் இஸ்ரேலும் லெபானின் சில பிரதேசங்களை தமது ஆக்கிரமிப்பின் கீழ் வைத்துள்ளது. போர் நிகழப்போகும் அபாயம் எப்பொழுதும் கொடும் பயக்கனவாக சூழ்ந்திருக்கும் லெபனான் போன்ற மூன்றாம் உலக நாடுகளிலிருந்து தமது காயப்பட்ட வரலாற்றின் யாதார்த்தக் குரலை உலகெங்கிலும் பதிவுபடுத்தும் திரைப்படங்கள் குறிப்பிடத்தக்க அரசியல் நிகழ்வாகவும் தமது கலையிருப்பை அர்த்தப்படுத்திக் கொள்கின்றன என்பதற்கு தீயின் வளையம் ஒரு காட்சிப்பூர்வமான உதாரணம். பாகிஜ் உரையாடலின்போது தனது போர்க்குரலில் கூறினார். “அநீதியை எதிர்த்து எப்பொழுதும் சினிமா குரலெழுப்ப வேண்டும்.”.

2

எப்பொழுதும் ஆச்சரியமான எண்ணம் ஒன்று என்னுள் அலைபாய்வதுண்டு எப்படி ஈரானிய சினிமாவில் மாத்திரம் மிக எளிமையான கதைகளை தீர்க்கம் குறையாமல் திரைப்பட இயக்குநர்களால் சுவாரசியத்துடன் கூறமுடிகிறது.? திரைமேதை அப்பாஸ் கியாரஸ்தமி துவங்கி இன்றைய இளையதலைமுறை இயக்குநர்கள் வரையிலும் எளிமையிலான கதையம்சங்களை அரசியல் – சமூக முரண்களுடனான நுட்பத்துடன் பிரதியாக்கும் வல்லமை உலக சினிமாவில் ஈரானிய இயக்குநர்களுக்கே உரியது. அதிலும் அவர்களது படங்களில் தொனிக்கும் நம்பிக்கைப்பிரவாகம் பார்வையாளரின் கலையார்வத்தை உரமேற்றக் கூடியது. பொருளடர்ந்த எளிய கவிதையின் மகிழ்வையும் துக்கத்தையும் பகிர்ந்து கொள்வது ஈரானிய சினிமா விழாவில் திரையிடப்பட்ட ஆல்பம் (ALBUM) எனது இவ்வெண்ணத்தை மேலும் நம்பகத்திற்கு இட்டுச்சென்ற படமாகும்.

வறுமைக்கோட்டிற்கு கீழ்பட்டிருக்கும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 13 வயதுச் சிறுவன் அமீர் ததாஷி ஹமேதான் நகரிலிருக்கும் பள்ளியில் படிக்கும் மாணவன், இயல்பிலேயே கொஞ்சம் முரட்டுசுபாவமும் அலட்சியமும் மூளும் குணமும் வாய்ந்தவன். மற்ற சிறுவர்கள் இவனுக்கு அரிபணிந்தவர்களாக இருக்கிறார்கள். இச்சூழலில் அவனது வகுப்பில் பூர்யா என்ற சிறுவன் சேர்க்கப்படுகிறான். அவன் பொறியாளர் இராவனி எனும் செல்வந்தரின் மகன். ஏழ்மையான நடுவர்க்கத்தையும் சார்ந்த (அமீர் உட்பட ) பல மாணவர்கள் பூர்யாவோடு பழக எண்ணமில்லாமல் அவனை அந்நியமாகவே பாவிக்கின்றனர். இந்நிலையில் தனது பிறந்த நாளை முன்னிட்டு பூர்யா சக மாணவர்களை விருந்திற்கு அழைக்கிறான். தனது நாள்பட்ட உடைகளில் ஓரளவு புதிய சாயலுடன் இருக்கும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அணிந்து கொண்டு அந்த விருந்திற்குச் செல்கிறான். பூர்யாவின் அலங்காரப்பொருட்கள் நிறைந்த மாளிகை வீடு பிரமிப்பைத் தருகிறது. பூர்யா அப்பொழுது அவர்களது குடும்ப ஆல்பங்களை எடுத்துவந்து காட்டுகிறான். ஆலபங்களினுள் அவனது பிறப்பிலிருந்து ஒவ்வொரு நிகழ்வும் புகைப்படங்களாக உறைந்திருக்கின்றன. அவனது தாத்தா, பாட்டி , தந்தை, தாய் மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட மூன்று தலைமுறை வாழ்வனுபவமும் புகைப்படங்களாக நிலைத்திருக்கின்றன. அமீர் இந்த ஆல்பங்களின் சந்திப்பில் பெரும் தாக்கமடைகிறான். தன்னுடைய குடும்பம் சார்ந்த ஆல்பத்தை அவன் வீடு திரும்பினபின் ஆர்வத்தோடு தேடுகிறான். பரணில் தேங்கிப்போன தூசி மண்டிப்போன ஒரு ஆல்பம் கிடைக்கிறது. அதில் ஒரு சில பழுதடைந்த புகைப்படங்களே இருக்கின்றன அதனால் ஏமாற்றமடைகின்றான்.

ஒரு விஷயத்தில் ஆர்வப்பட்டால் அதில் தீவிரமாக ஈடுபடும் பிடிவாதம் அமீரிடம் இயல்பாகவே அமைந்துவிட்ட மனோபாவம், எனவே, தனது குடும்பம் சார்ந்த புதிய ஆல்பமொன்றைத் தயாரிக்கத் தலைப்படுகிறான். முதல்கட்டமாக, ஆல்பம் வாங்குவதற்கான பணம் சேர்க்கும் படலம் துவங்குகிறது. தனது மாமா ஆபரேட்டராக வேலை பார்க்கும் திரையரங்கின் பின்வழியில் தனது சக மாணவர்களை யாருமறியாமல் திருட்டுத்தனமாக அனுமதித்து அவர்களிடம் ‘ டிக்கெட்’ பணம் வசூல் செய்கிறான். திரையரங்கு காவலாளி சந்தேகப்பட்டு அறிந்த் விடாதவண்ணம், மாணவர்களை திரையரங்கிற்குள் நுழையச் செய்வதற்காக அவன் மேற்கொள்ளும் சாதுர்யமும் சமாளிப்பும் சிரிப்பைத் தூண்டும் சுவாரசியமுடையது. தொடர்ந்து சில ‘ஷோ’ க்களில் திரட்டின பணத்தை வைத்துக்கொண்டு தனக்குப் பிடித்தமான நிறமுடைய ஆல்பமொன்றை வாங்குகின்றான். பின்பு உறவினர் வீடுகளுக்குச் சென்று புகைப்படங்களைப் பார்வையிடும் சாக்கில் திருடத் துவங்குகின்றான். பிடிபட்டு தந்தையால் அடி உதைக்கு உள்ளாகின்றான். ஆல்பம் கிழித்தெரியப்படுகிறது. எனினும் திடம் தளராமல் ஆல்பத்தின் பக்கங்களை சேகரித்து ஒட்டி புதிய புகைப்படங்களை திரட்ட முனைகிறான். ஒருமுறை திரையரங்கத்திற்கு மாமாவைப் பார்க்கச் செல்லும்போது அங்கு வீணாக்கப்பட்டு இரைந்து கிடக்கும் ஹாலிவுட் படங்களின் காட்சிப் புகைப்படங்களை அவரிடம் கேட்டுப் பெற்று தனடு ஆல்பத்தின் பரப்பிற்கேற்ப வெட்டி ஒட்டுகின்றான்.

அவனது புதிய ‘உறவினர்’ ஆல்பம் தயாரகின்றது. பின்பு பள்ளிக்கு எடுத்துச்சென்று நண்பர்களிடம் ஹாலிவுட் நடிகர்களின் வயதிற்கும் தோற்றத்திற்கும் ஏற்ப, தாத்தா, பாட்டி, மாமா என தன் உறவினர் அறிமுகத்தை மேற்கொள்கின்றான். இதை ஆசிரியர் பார்க்க அவனது குட்டு வெளிப்படுகிறது. தந்தை வரவழைக்கப்பட்டு மீண்டும் அடி, உதை. பள்ளி வராந்தாவில் தந்தை வீசியெறியும் கிழிக்கப்பட்ட ஆல்பத்தின் பக்கங்கள் வளாகம் முழுக்க கலைந்து கிடக்கின்றன. அமீர் அழுகையினூடாக மீண்டும் பக்கங்களை சேகரிக்கத்துவங்குகின்றான்.

இறுதிக்காட்சியில் திரைப்பரப்பின் மத்தியில் அமீரின் புகைப்படம் தோன்றுகிறது. அவனைத் தொடர்ந்து அவனது தந்தை, தாய், தாத்தா, பாட்டி என உண்மையான அவனது பந்தங்களின் புகைப்படங்கள் அவனைச் சுற்றி எழுகின்றன. இது அமீரின் நிஜமான குடும்ப ஆல்பம். கடினமுயற்சியில் அவன் சேகரித்தது, அவனது உறவினர்களது படங்கள் முழுக்கச் சூழ திரைப்படம் புகைப்படமாக உறைவடைகிறது. மறக்கப்பட்டிருக்கும் முந்தைய தலைமுறைக்கும் தனது தலைமுறைக்குமான உறவின் தொடர்ச்சியை புகைப்படப்பதிவுகளின் வழி நிச்சயப்படுத்திக்கொள்ளும் நபராக வரும் அமீரது திரைப்பிரவேசம் தமது வேரை மறந்துவிட்டிருக்கும் நமது சுய வரலாற்று மறதியை விமர்சிக்கும் காரணியாகவே நான் மதிப்பீடு செய்கிறேன். நமது முன்னோரின் வாழ்வுப் பதிவை ஞாபக மீட்பு செய்யத்தூண்டும் செய்தியை ஆல்பம் திரைப்படம் நம்மிடம் விட்டுச்செல்கிறது. விழாவின் பார்வையாளர் விருதை (Audience award) இப்படம் வென்றது. இவ்வகை கதை முயற்சிகள் தமிழில் மேற்கொள்ளப்பட நேருமாயின் உலக அரங்கில் தமிழ் சினிமா தனக்கென ஒரு கவனப்படும் தளத்தை நிறுவிக்கொள்வது எளியதும் நிச்சயமானதுமாகும் என்பது மறுதலிக்க முடியாத உண்மையாக நிலைபெறும்.

3
கேரளாவைப் பொறுத்தவரை ஒவ்வொரு திரைவிழாவிலும் ஏதேனும் ஒரு படம் என்னைத் தொடர்ந்துவரும், மிகவும் நெருக்கடிமிக்க கணங்களில் அல்லது ஆயாசமான பொழுதுகளில் எனது மனதிலாழ்ந்துவிட்ட அப்படங்களின் சில வலிமையான காட்சிகள் புகைப்படக்கருவியின் கணநேரத்தில் வெளிச்சப்படிமங்களாக நினைவுள் அலையடித்துச் செல்லும். வாழ்வின் பல்வேறு நகர்வுகளினூடாக உருண்டோடிச் செல்லும் இத்தகைய படங்களை சினிமா என்ற கலைச் சட்டகத்தையும் தாண்டிய நிகழ்வனுபவக் கூறுகளாகவே நான் பாவிக்கின்றேன். அதுவரையிலிருக்கும் எனது அறியாமை மற்றும் வன்மப்பிழை ஆகியவற்றின் மீது பாதிப்பு நிகழ்த்தி தன்மாற்றங்களை கோரும் அக்காட்சிகள், தனது அனுபவக்களத்துள் கை பிடித்து அழைத்துச்செல்லும் பாதைகள் ஏராளம், இம்முறை அப்பாதைகளின் தூரத்தை நீட்சிப்படுத்தின படமாக விழாவில் பங்கேற்றது அபயம்(protection) எனும் செனிகல் நாட்டுப்படம்.

ஆப்ரிக்க சினிமாவின் மூத்த அரசியல் திரைப்பட மேதையாக போற்றப்படும் செம்பேன் உஸ்மேன் இயக்கிய சமீபத்திய திரைப்படம் அபயம். தனிப்பட்ட கதாபாத்திரங்களையும் அவர்களது உணர்ச்சிகளையும் மாத்திரமே சித்தரிப்பதோடு எல்லைப்பட்டுவிடாமல் ஒரு ஆப்பிரிக்க குறுங்கிராமத்தின் சமூக நடைமுறை, சடங்குகள், மக்களது வாழ்வுப்பாங்கு, அவர்கள் மீது செலுத்தப்படும் மத அதிகாரம், ஆதிக்க மேலாண்மை, பொருளியல் வறுமை என பெரும்பரப்பினூடாக சிக்குண்டு நிற்கும் பெண்களின் மனவெழுச்சியை பதிவுபடுத்துவது.

படத்துவக்கத்தில் 6 பெண்கள் “தூய்மையாக்குதல்” எனும் மூடப்பழமையான மதச்சடங்கிலிருந்து தப்பியோடி வந்து அக்கிராமத்தில் வசிக்கும் கொல்லே என்ற பெண்ணிடம் தஞ்சமடைகின்றனர். கொல்லே என்ற பெண் தான் கிராமத்தின் புரட்சிக்குரல். அவள் கணவனுக்கு வெவ்வேறு வயது வித்தியாசங்களுடன் கொல்லேயும் சேர்த்து நான்கு மனைவிகள். இவள் இரண்டாமவள். கொல்லேவிற்கும் திருமண வயதில் ஒரு பெண் இருக்கிறாள். அவளை தூய்மையாக்குதல் சடங்கில் ஈடுபடுத்தாமல் இதுவரை பாதுகாப்புடனே வளர்த்து வந்திருக்கிறாள். அதன் பொருட்டு பலவகைகளில் எதிர்ப்புகளை சந்தித்த வண்ணம் வாழ்கிறாள்.

‘தூய்மையாக்குதல்’ எனும் மதச்சடங்கு ஆப்பிரிக்காவில் காலங்காலமாக தொடர்ந்து வரும் மூடப்பழமையான வழக்கம். அச்சடங்கின்போது சிறுமியாக இருக்கும்போதே அவளது பிறப்புருப்பிலுள்ள சுமரி(clitoris) எனும் பால்கிளர்வுப் பகுதியை நீக்கிவிடும் குரூரம் நிகழ்த்தப்படுகிறது. பன்மைக்காலமாக அரங்கேறிவரும் இந்த கொடுஞ்செயல் மதச்சடங்காக பின்பற்றப்படினும் உண்மையில் இஸ்லாம் மதம் இதனை ஆதரிக்கவில்லை. அரசாங்கமும் இதற்கெதிரான பிரச்சாரத்தை நடத்துகிறது. எனினும் ஆப்பிரிக்க கிராமங்களில் இச்செயல் மரபார்ந்த நிலைப்பாடாகவே தொடர்கிறது. கிராமத்தை தனது ஆதிக்கத்திற்குள் வைத்திருக்கும் இமாம்கள் இதனை ஒரு கட்டாயப்போக்காகவே நடத்துகின்றனர். அதற்காக சந்நியாசிகள் போன்ற உடைத்தோற்றத்தினை கொண்ட ஒரு பெண்குழுவும் இயங்குகிறது. சிறுமிகளை ‘தூய்மையாக்க’ தினந்தோறும் மக்களிடம் சென்று ‘விழிப்புணர்வு’ வழங்கும் பணியை அடக்கு முறையின் வாயிலாக செய்து வருகிறார்கள்.

ஏறக்குறைய கொல்லேவின் பெண்ணையும் தப்பிவந்த ஆறு பெண்களையும் தவிர்த்து பெரும்பாலான சிறுமிகள் உடலின் பாகம் குரூரமான முறையில் கத்தியால் அறுத்தெரியப்படும் சடங்கில் நோய்வாய்ப்பட்டு இறந்துவிடுகின்றனர். எஞ்சியிருப்பது சிலரே, அவர்களில் கொல்லேயுவும் ஒரு பெண். தன்மீது ஏவப்பட்ட வாதையால் காயமும் விழிப்பும் அடைந்திருப்பவள் அவள். தனது வலி தன் சந்ததிக்கு சென்றுவிடக்கூடாது என்பதில் பிடிவாதமாக இருக்கும் நேசம்மிக்க அன்னையாக இருக்கிறாள். எனவே மத அதிகாரிகளுக்கு எதிராகவும்., உள்ளூர் ஆன் வர்க்கத்தினருக்கு எதிராகவும் தனது சடங்கு மறுப்புப் போராட்டத்தினை துவக்குகிறாள். அவளது கிளர்ச்சியை ஒடுக்கும் நோக்கத்தில் இமாம்களும் துறவிப் பெண்குழுவும் தீவிரம் கொள்கின்றனர். அவளது கணவன் மூலமாகவும் அவள் மீது வன்முறை ஏவப்படுகிறது. எனினும் கொல்லே மனம்தளராமல் இறுதிவரை போராடுகிறாள். அதற்கு ஈடாக தன்னை பலி கொடுக்கவும் தயாராகிறாள். இவளது மனவெழுச்சியை கண்டு அக்கிராமத்திலிருக்கும் பெண்களனைவரும் மனத்தடையை உதறிவிட்டு அவளது போராட்டத்தில் இணைகின்றனர். அவர்களது உண்மை சுடும் கலகக்குரல்களால் மத அதிகாரிகள் செயலற்றுப்போய் பின்வாங்குகின்றார்கள். பலியிடப்பட்ட ஆப்பிரிக்கப் பெண்களின் ஒட்டுமொத்த ஓலம் சேர்ந்தாற்போல கொல்லேவினது அவளோடு இணைந்து நிற்கும் பெண்ணினது ஆவேசம் திரைமுழுக்கப் பரவுகிறது.

ஆப்பிரிக்க மதமேலாண்மையாலும் ஆணாதிக்க வன்முறையாலும் மனமொடுங்காத பெண்போராளிகள் சமூகத்தில் நிலவவே செய்கிறார்கள் என்பதை கொல்லேவினது கதாபாத்திரத்தின் வழி செம்பேன் மறுசலனம் செய்கிறார். கொல்லேவைப் போன்றவர்கள் கடந்தகாலத்தை அறுத்தெரிபவர்கள். நிகழ்காலத்தை தமதாக்கிக்கொண்டு எதிர்காலத்தின் சிறகுகளோடு பயணிப்பவர்கள் . பழமைவாத ஆதிக்கவெறியின் நுகத்தடியில் அடிமைப்பட்டு வதைபடும் சாமான்ய மக்களின் தன்னுணர்வு சார்ந்த விடுவிப்பை தொடுக்கும் செம்பேனின் படங்களில் , அபயம் படைப்புச் சிந்தனையின் அனைத்து வீச்சையும் சாத்தியப்படுத்தின. ஒரு திரையெழுச்சி என்றே நான் அவதானிக்கிறேன். இப்படம் உருவாகி வெளியான சென்ற வருடம் (2004) செம்பேன் உஸ்மேனுக்கு 82 வயது பூர்த்தியடைகிறது. அவரது மூண்டெழும் கலகக்குரல் பலத்த வீர்யத்துடன் திரையதிர்கிறது. அவ்வரசியல் கலைஞன் வாழும் நமது சமகாலம் பெருமைக்குரியது.

எனது அனுபவத்தில் இந்திய சினிமாவில் அரசியல் தன்மையிலான பார்வையை திரையில் பேசமுற்பட்ட ஒரே பெண் இயக்குநராக அபர்ணா சென் மாத்திரமே காணக்கிடைக்கிறார். அயல்நாடுகளில் வாழும் மற்ற இரு பெண் இயக்குநர்களான மீராநாயரும் தீபா மேத்தாவும் தமது பெண் நிலைவாதப் பார்வைகளை வேரற்றுப் போன தீவிரவாதத்துடன் முன்வைத்தார்கள். அவர்களது படங்களில் பெரும்பான்மையானவை நூதனம் செறிந்த வணிகநோக்கில் அமைந்தவை. பாலியல் சார்ந்த அவரகளது சித்தரிப்புக்களும் ‘புரட்சிகளும்’ விமர்சனத்திற்குரியவை. பெண்ணெழுச்சை நோக்கிலான வாதங்களை மூலதனமாக கொண்டு [லாபக் கண்ணோட்டத்தில்] பார்வையாளர் மீது காமம் சொறிபவை. இப்போக்கிலிருந்து முற்றிலும் மாறுபட்டு பாசாங்கற்ற சமூக கண்ணோட்டத்துடன் கூடிய தடத்திலிருந்து குரலெழுப்பும் அபர்ணா சென்னின் தடத்தின் திரைநீட்சியாக நான் உணர்வது அம்மு படத்தின்மூலம் அறிமுகமாகியுள்ள சோனாலி போஸ் எனும் இயக்குநரைத்தான்.

அம்மு இந்தத் திரைவிழாவில் தான் முதல் அரங்கம் காண்கிறது. என்பது விழாவின் அடிப்படை நோக்கத்தில் பெருமைப்படத்தக்க ஒரு நிகழ்வு. முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தி படுகொலையின் போது டெல்லியில் ஏவப்பட்ட சீக்கியர் மீதான தாக்குதல்களின் பின்னணியில் மையம்பெறும் படம் அம்மு. படத்தின் துவக்கத்தில் அமெரிக்காவில் குடியேறிவிட்ட ஒர் இந்தியப்பெண் தனது உறவினரைக் காணும் பொருட்டு தாய்நாடு திரும்புகிறாள். அப்பொழுது டெல்லியில் அவள் காணும் பல இடங்கள் அவளது ஞாபகத்தில் முன்னமே பார்த்து பழகின பிரதேசங்களாகத் தோன்றுகின்றன. தான் அந்த வாழ்விடங்களுக்கு மிகவும் அண்மைப்பட்டிருந்த நபராக உணர்கிறாள். அவளது பிறப்பு மீது சந்தேகம் கொண்டு தன்னை திரும்ப அழைத்துச்செல்லும் பொருட்டு அமெரிக்காவிலிருந்து வரும் தாயிடம் கேள்வியெழுப்புகிறாள். ஒரு புள்ளியில் வேறு வழியில்லாமல் அம்முவின் பிறப்பு சார்ந்த உண்மைகளை கூறுகிறாள்.

அம்மு ஒரு சீக்கிய குடும்பத்தில் பிறந்தவள். இந்திரா காந்தி படுகொலையின் போது நடந்த தாக்குதலில் தனது பெற்றோரை இழந்தவள். சமூக சேவையில் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட ஒரு பெண் (இப்போதைய தாய்) அம்முவை தனது மகளாகவே எண்ணி வளர்க்கிறாள். இந்த உண்மைகளை அறிந்துகொண்ட நிலையில் அம்மு தனது பெற்றோர்களுக்கு நிகழ்ந்த கொடுமைகள் குறித்து அறிய முற்படுகிறாள். தாக்குதலுக்குள்ளான வீதிகளில் இன்னும் மீதமிருக்கும் பல குடும்பத்தாரோடு உரையாடுகிறாள். அம்மக்களது குரல்களின் வாயிலாக சீக்கியர் மீதான படுகொலைக்களம் நமக்கு காட்சிகளாக நினைவூட்டப்படுகின்றன. தன்னுடைய உறவிழப்பின் பின்புலத்தில் அரசியல் மூர்க்கம் அரங்கேறியிருப்பதை எண்ணி அம்மு செயலற்றுப்போகிறாள். அவள் உண்மைகளை அறிந்து கொண்ட வேதனையோடு டெல்லியில் தனது தந்தை பலிகொள்ளப்பட்ட ரயில்வே தண்டவாளத்திற்கு அருகே தனது நண்பனோடு நடந்துசெல்லும் இறுதிக்காட்சியில், அருகே கடையொன்றில் தொலைக்காட்சி செய்தி ‘கோத்ரா ரயிலெரிப்பு சம்பவம்’ நிகழ்ந்திருப்பதாக அறிவிக்கிறது. இழப்புக்களைத் தாங்கிக் கொண்டு அம்மு சாமான்ய மக்களோடு கலந்துவிடுகிறாள். படம் முடிவடைகிறது. ஆனால், வெண்ணிறமடையும் திரையில் கோத்ரா ரயிலெரிப்பு சம்பவத்திற்கு பின்னால் நடக்கப்போகும் இஸ்லாமியர் மீதான இன அழிப்புத் தாக்குதலின் தொடர்வன்முறை காத்திருப்பதை எண்ணி கவலைபடர்ந்து வெளியேறும் நமது உள்ளத்தில் மீதமிருப்பது கோரப்பல் காட்டும் மதம்/ அரசியலின் அகந்தை மீதான திகைப்பும், திகைப்பைத் தொடரும் ஆவேசமான மனவெழுச்சியும்.

தணிக்கைத்துறை 5 காட்சிகளின் சப்தத்தை (sound track) வெட்டியிருக்கிறது. அவையனத்தும் அரசியல் ரீதியான விமர்சங்கள். படத்தில் வன்முறையை சித்தரிக்கும்படியான காட்சிகள் இல்லை. படுக்கையறைக் காட்சிகளும் இல்லை. ஆயினும், படத்திற்கு தணிக்கைத்துறை ‘A’ தரச் சான்றுதழ் அளித்திருக்கிறது. சோனாலி எதிர்த்து கேள்வியெழுப்பியிருக்கிறார். அங்கிருந்த தணிக்கைக்குழு உறுப்பினர் ஒருவர். பதிலளித்திருக்கிறார் : “ஆழப் புதைக்கப்பட்டதும், மறைக்கப்பட்டதுமான ஒரு வரலாற்று சம்பவத்தை ஏன் தட்டியெழுப்பு ஞாபகத்திற்கு கொண்டுவருகிறீர்கள்?”

சாண்டியாகோவின் நாட்கள் (days of Santiago) லத்தின் அமெரிக்காவிலுள்ள பெரு நாட்டிலிருந்து வந்திருந்த படம், சாண்டியாகோ என்ற இளைஞனது குடும்பத்திலிருந்து தனிமைப்பட்டுப் போன வெற்றுணர்வும், சமூகம் சார்ந்த அவநம்பிக்கையும் பற்றியது. சாண்டியாகோ தீவிரவாதமும் போதைப் பொருள் கடத்தலும் மையமிட்டிருக்கும் லிமா எனும் நகரத்தில் வசிக்கிறான். எந்த தேவையையுமே இச்சமூகத்தில் போராடினால்தான் அடையமுடியும் என்ற எண்ணம் படைத்தவன். எனவே மன அழுத்தமும் குணத்தில் உன்மத்தக் கூறுகளும் அவனிடம் ஒட்டிக்கொள்கின்றன. வேலைவாய்ப்பு அரிதாகிவிட்ட நாட்டின் சூழலில், சாண்டியாகோ ஒரு வாடகை வாகன ஓட்டியாக தன்னை இருத்திக் கொள்கிறான். எனினும் இந்நிலை அவனது வாழ்வின் தவிர்க்க இயலாத ஒரு சமாதானமும் கூட. குடும்ப வாழ்விலும் ஏக பிரச்சினைகள். சாண்டியா கோவின் அண்ணன் குடிகாரன். மனைவியை அடிக்கும் வழக்கமுள்ளவன். சாண்டியா கோவின் தந்தை தனது கடைசி மகளான சிறுமியை புணர்ச்சி கொள்ளும் மனக்கோணல் ஆசாமி. சாண்டியாகோ தனது அண்ணியை நேசிப்பவனாக இருக்கிறான். அவளை தன்னுடன் வந்துவிடும்படி வற்புறுத்துபவனாக இருக்கிறான். (இதே விஷயத்தை அலெஸாந்த்ரா கொன்சலஸ் இனாரிடுவினது அர்ஜெண்டினப் படமான அமரோஸ் பெரோஸ் படத்தில் நாம் காணலாம். அப்படத்தில் வரும் ஆக்டேவியோ கதாபாத்திரம் தனது அண்ணியை விரும்புவனாகவும் தன்னுடன் ஓடிவந்து விடும்படி நிர்பந்திப்பவனாகவும் இருக்கிறான். ) படம் முழுக்க சாண்டியாகோவின் இறுக்கமும் மனக்கூச்சலும் hand held camera- வினது கதாபாத்திர பிந்தொடர்தலின் மூலம் நம்மைச் சூழ்கிறது. சாண்டியாகோவின் அகவெறுமை பெருவிற்கோ அல்லது லத்தின் அமெரிக்க சமூகத்திற்கோ மாத்திரமே உரித்தானது என்று கருதமுடியாது. அது மூன்றாமுலக நாடுகளின் விதிவயப்பட்ட யதார்த்தமும் ஆகும். கூட்டுக் குடும்ப மனச்சிதைவும், வேலை வாய்ப்பற்ற சமூக நிலையோட்டமும் படத்தின் துன்ப ஆன்மாக்களாக வளைய வருகின்றன. நடிப்பும் (pietro Sibille), ஒளிப்பதிவும் (Juan Duran), தொகுப்பும் (Roberto Benavides Espino), படத்தின் சுவாரசிய வேகத்திற்கு மிகவும் பக்கபலமாயிருக்கின்றன. இப்படத்திற்கே விழாவின் மிகச்சிறந்த விருதான ‘சுவர்ண சகோரம்’ வழங்கப்பட்டது.

எனினும், நான் லெபனானிய படமான தீயின் வளையம் படத்திற்கே அவ்விருது வழங்கப்படும் என அனுமானித்திருந்தேன். அமெரிக்கத் திரைப்படங்களிலிருந்து கதையம்சத்திலோ சொல்முறையிலோ மீறி எவ்வித புதிய அணுகலையும் கொண்டிருக்காத படம். சாண்டியாகோ சமூகத்திலிருந்தும் தனது உறவுச் சூழலிருந்தும் விலக்கமடைந்தவனாக இருப்பதைப் போலவே தான் தீயின் வளையம் படத்தின் மையப்பாத்திரமான சாஃபிக் உழல்கிறார். இருவரது வாழ்வும் வெவ்வேறு நிலப்பரப்புகளில் இயங்கினாலும் ஒரே விதமான பிரச்சனைகள் சார்ந்தவைகளே. எனும் நிலையிலும், சாஃபிக்கின் வாழ்வு மேலும் பாதுகாப்பற்றதாகவும் அபாயமுடையதாகவும் இருக்கிறது. அப்படத்தின் கதையாடலும் சொல்முறையும் எளிமையான அபாரம் நிரம்பினது. அப்படத்திற்கே ‘சுவர்ண சகோரம்’ அளிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது எனது கருத்து.
விருது தேர்வுக் குழுவின் நடுவராக இருந்தவர் பால் லெடக் எனும் லத்தின் அமெரிக்காவிலுள்ள மெக்ஸிகோ நாட்டு புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் ஆவார். லத்தின் அமெரிக்க யதார்த்தம் அவருக்கு நிச்சயமாக பரிட்சயப்பட்ட ஒன்றுதான். பால் லெடக்கின் தேர்ந்தெடுப்பை தவறென நான் கூறவில்லை. ஆனால் லெபனான் போன்ற போர்ச்சூழல் நெருக்கடியுள்ள நாடுகளின் யதார்த்தத்தை விட பிரதானமாக அண்மைப்படும் வாய்ப்பிருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை. எனவே பெரு நாட்டிலிருந்து ஒரு திரைப்படத்தை எளிதாக அவரால் தேர்ந்தெடுத்து விருது வழங்கமுடிகிறது.

என் அபிப்ராயத்தில், தேர்வில் பங்குபெறும் நாடுகளைச் சார்ந்த நடுவர்க்குழு தேர்ந்தெடுக்கப்படக் கூடாது. தேர்வில் பங்கு கொள்ளாத நாட்டிலிருந்தே அழைக்கப்பட வேண்டும். அக்குழுவே நேர்மையான தேர்வைத் தரமுடியும். அப்படி தேர்ந்தெடுத்திருந்தால் இவ்விழாவில் தீயின் வளையம் படத்திற்கே முதல்பரிசு கிடைத்திருக்கும்.
திரைப்படங்களை விடுத்து விழாவின் மற்றொரு சிறப்பம்சம் திறந்த விவாதங்களும் உரையாடல்களும் மேற்கொள்ளப்படும் களம். பொதுவாக இதற்கு முந்தைய அனைத்து திரைப்பட விழாக்களிலும் கூட வெகு தீவிரமான விவாதங்கள் கேரளப் பார்வையாளர்களால் எழுப்பட்டிருக்கின்றன. அவைகள் விழாவின் செயலிருப்பை கேள்விக்குட்படுத்துபவையாக இருப்பினும் ஆக்கப்பூர்வமானதும் தேவையானதும் ஆகும். இவ்விழாவிலும் அகண்ட நோக்கிலான விவாதங்கள் சர்ச்சிக்கப்பட்டன.
முக்கியமாக ஒரு கேரளப்பார்வையாளர் ‘ஒவ்வொரு வருடமும் நடக்கும் திரைப்பட விழாக்களில் ஏற்கனவே சினிமா தளத்தில் கோலோச்சிக் கொண்டுள்ள அதே இயக்குநர்கள் மாத்திரமே இடம்பெறுவதாகவும், அவர்களே பேசப்படுவதாகவும், இளைய தலைமுறைக்கான திரைவெளி இதுவரை திறந்துவிடப்படவில்லை’ எனவும்’ தமது புகழிருப்பை மெச்சிக் கொள்ளவே விழாவை அவர்கள் பயன்படுத்துகிறார்கள்’ எனவும் குற்றம் சாட்டினர். “ ஒரு வறிய மனிதனால் இங்கு திரைப்படங்கள் எடுக்க இயலாது. அனைத்து இந்திய இயக்குநர்களும் பூர்சுவாக்களே” என்று எழும்பின அவரது பேச்சு பார்வையாளர்கள் மத்தியில் யோசிக்கத்தக்க அமைதியை வரவழைத்தது. மேடையில் இருந்த ஒருங்கிணைப்பாளர் அசட்டுத்தனமாக கோபித்துக்கொண்டார். ”பிரச்னை ஏற்படும் என்பதால் விவாத அரங்கிற்கு தான் வர விரும்பவில்லை.” என்றும் ”விழா அமைப்பாளர்கள் வலியுறுத்திய காரணத்தால் மாத்திரமே தான் கலந்து கொண்டதாகவும்” பின் வாங்கிப் பேசினார். எனக்கு சிறிது அதிர்ச்சியாக இருந்தது. அவ்விவாத அரங்கைப் பொறுத்தவரையில் அவர் ஒரு ஒருங்கிணைப்பாளர் மாத்திரம்தான். அந்நிலையில், இளைய தலைமுறையினர் திரைப்படங்கள் எடுப்பதற்கான கோப்பில் அவர் கையொப்பமிடத் தயங்குவது போல் அவர் பாவித்தது நெருடலாக இருந்தது. விவாதத்தின் அனைத்துக் குரல்களையும் ஒன்றிணைத்து விழா அமைப்பினருக்கு தரவேண்டியது மட்டுமே அவரது வேலை. அதைவிடுத்து அவர் கேள்வியெழுப்பின பார்வையாளர்களோடு பகைகுணத்துடன் நடந்து கொண்டார். விவாத அரங்கம் என்பது விழாவின் ஒரு சடங்கு மாத்திரம்தானா என்ற கேள்வி என்னுள் குடைந்தது.

தனிமனித உணர்வை மதிக்க கோரும் நல்ல திரைப்படங்களை திரையிடுவது மாத்திரமே திரைப்பட விழாவின் உயர்ந்த பட்ச இலக்காக இருக்க முடியாது. திரைப்பட விழாவின் மற்ற நிகழ்வுகளிலும் அந்த குணம் பாதுகாக்கப்பட வேண்டும். திரை விழாவில் பங்கேற்கும் ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு விதத்தில் படைப்பாளராகவே இருக்கக்கூடியவர்கள். அவர்களது எண்ணங்களும் மதிக்கப்பட வேண்டும் புதிய படைப்பாளர்கள் தான் காணக்கிடைக்காதிருக்கும் மேலுமான வாழ்வைப் பேசத்தகுதியுடையவர்கள். சினிமாவைப் பொறுத்தமட்டில் இளைய தலைமுறையினருக்கான கலைப்பாதை மிகவும் குறுகலானது என்பதே மனம் சுடும் உண்மை. நல்ல சினிமா என்பது ரு குறிப்பிட்ட கலைஞரிடமிருந்து மட்டுமே வர இயலும் என்றிருக்கிற நிலையில் அந்தப் படைப்பாளி தன்னையறியாமலேயே மக்களின் மீது கருணையை வழங்கும் ஆதிக்கக் குறியீடாகவும் தோற்றம் பெற்றுவிடுகிறார். கலையுணர்வு வாய்க்கப்பெற்ற ஒரு பார்வையாளர் தனது சிந்தனையைப் பகிர்ந்து கொள்ளும்விதமாக எளிதாக சினிமாவை கையிலெடுக்கும் வாய்ப்புகள் கிடைக்கப்பெறும் சூழலில் தான் நல்ல சினிமா ஒற்றை நபர் பரப்பிலிருந்து விடுபட்டு எளிய மனிதர்கள் அடர்ந்திருக்கும் சமூகத்தில் அதன் முழுமையடைந்த உண்மையோடும் அர்ப்பணிப்போடும் காலுன்றமுடியும். இனிவரும் காலத்திலாவது கேரளத் திரைபட விழா மேலும் ஜனநாயகத் தன்மையுடன் தன்னை உருவமைத்துக் கொள்ளும் என்று நம்பிக்கை கொள்கிறேன்.

விழாவின் Retrospective பகுதியில் திரையிடப்பட்ட படங்களின் இயக்குநர்களில் ஒருவரான தைவானிய இயக்குநர் சாய் மிங் லியாங் வருகை தந்த விழாவை முக்கியத்துவப் படுத்தினார். சாய் தைவானிய திரையுலகின் மதிக்கத்தக்க சமகால இயக்குநர். உலகில் பிரபலமான சிறந்த திரைப்பட இயக்குநர். பலர் இருப்பினும், தனித்த பாணியும் துணிந்த அணுகுமுறையும் கொண்ட சுயத்தன்மை (Originality) உள்ளவர்கள் மிக குறைவே. அவ்வரிசையில் ஆந்த்ரே தார்கோவ்ஸ்கி, அப்பாஸ் கிரியாஸ்தமி போல சாய் தனக்கென ஒரு சினிமா பாணியை உருவாக்கிக் கொண்ட அசல் படைப்பாளராவார். ஹாலிவுட் சினிமாவின் தாக்கத்தை முற்றிலுமாக தவிர்த்திருக்கும் அவரது படங்கள் அனைத்தும் நீளமானதாகவும் மெதுவாக நகரும் காட்சிகளுடையதாகவும் இருப்பவை. ஒருவிதத்தில் ஹாலிவுட் சினிமாவிற்கு எதிரான போக்கை கடைபிடிப்பது. சுவாரசியத்தையும் பழகிப்போன பழைய ரசனையுணர்வையும் கேள்விக்குட் படுத்தும் இந்த எதிர் – சினிமா பாணியை தவிர்த்து, ‘மக்களுக்கு மகிழ்வளிக்கும் படியாக, சாராம்சம் உள்ளடங்கியதாக, ‘அர்த்தமுள்ள’ ஹாலிவுட் சினிமாவைப் போல படங்களை இயக்கும்படியாக ‘ அவருக்கு தைவானிய அரசாங்கம் நெருக்கடி தருவதாக அவரது நேர்முக உரையாடலின் பொழுது கூறினார். பேச்சினூடே அவரது குரலோசையிலிருந்த சாந்த தன்மையும் தியான இனிமையும் என்னை வெகுவாக வசீகரித்தது. இந்திய மக்களில் பெரும்பாலானோர் ஹாலிவுட் சாயலையொத்த பாலிவுட் திரைப்படங்களைக் காண்பது குறித்து கவலையும் அவரது குரலில் வெளிப்பட்டது. ‘தைவானிலும் இத்தகைய பார்வையாளர்களே இருக்கிறார்கள். அவர்களுக்குப் பிடித்தது ஜாக்கிசானின் படங்கள் தான்.’ என தனது நாட்டின் பார்வையாளர்கள் குறித்தும் வருத்தம் தெரிவித்தார். “பெரும்பான்மையான இயக்குநர்களுக்கு படங்கள் என்பது வியாபாரம் மாத்திரமே. அதே போல பார்வையாளர்களுக்கு படங்கள் என்பது பொழுதுபோக்கு மாத்திரமே.” என்ற அவரது கூற்றில் இருந்த தவிர்க்க இயலாத யதார்த்தம் என்னுள் கல்தாக்கின நீர்வட்டம் எழுப்பியது.

பாங்காங் திரைப்பட விழாவினது நிர்வாக இயக்குநர் விக்டர் சிலாகோங், பாங்காங் திரைப்பட விழா வளர்ச்சி பெற்று வரும் ஆக்கப்பூர்வமான போக்கு குறித்து உரை நிகழ்த்தினார். உரையின் மத்தியில் குறும்படத்திற்கான முக்கியத்துவம் குறித்துப் பேசும்போது VHS வடிவில் குறும்படம் எடுக்கப்படினும், பாங்காங் திரைப்பட விழாவிற்கு அனுப்பி வைக்கலாம். எனவும் , யாராக இருப்பினும் அடிப்படைத் தகுதியை அப்படம் பெற்றிருப்பின் விழாவில் திரையிடப்பட்டு கவனமெழுப்பப்படும் என்று கூறி அங்கு கூடியிருந்த இந்திய அளவிலான குறும்பட, ஆவணப்பட இயக்குநர்களுக்கு நம்பிக்கையூட்டினார். சினிமாவைப் பொறுத்தவரை, டிஜிட்டல் யுகம் ஒளிவீசத் துவங்கிவிட்டது. பொருளீட்டுச்சுமை கணிசமாக குறைந்திருக்கிறது. குறும்பட , ஆவணப்பட இயக்கம் இந்திய மண்ணிலெங்கும் புத்துயிர் பெற்று வரும் சூழலில், விக்டர் சிலாகோங்கின் பேச்சு உற்சாகமூட்டும்படியானது. முதல் பார்வையிலேயே கண்டு பிடித்துவிடக் கூடிய அவரது எளிமையும், அடித்தள உணர்விலிருந்து எழும் கரிசனமும் மற்ற திரைப்பட விழா நிர்வாக இயக்குநர்களும் பெறும் பட்சத்தில், கடைமட்டத்திலிருந்து போராடி மேலெழும் கலைஞனுக்கும் உலக அரங்கில் தனது குரலை பறைசாற்றும் வாய்ப்பு கிடைப்பது திண்ணம்.

அரவிந்தன் நினைவு உரை ஆற்றும்பொருட்டு ஈரானிலிருந்து அப்பாஸ் கியாரஸ்தமி வந்திருந்தார். டிஜிட்டல் சினிமா குறித்த அவருடைய உரையாடல் டிஜிட்டல் சினிமாவின் சாத்தியமாகிக்கொண்டிருக்கும் வளர்ச்சியும் எதிர்காலத்தில் தன்னிருப்பைப் பெறப்போகும் அதன் முக்கியத்துவம் பற்றியதாக அமைந்தது. உரைக்கு சமீபத்திய படமான ஐந்து (Five) திரையிடப்பட்டது. டிஜிட்டல் வீடியோவில் எடுக்கப்பட்டிருந்த அப்படம் மொத்தமே ஐந்து நீளமான காட்சிகளைக் கொண்டது. படத்தை ஜப்பானியத் திரைப்பட இயக்குநர் யசுஜிரோ ஓசுவிற்கு (அவரது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு) சமர்பித்திருக்கிறார். கடலும், கடல் சார்ந்த நிலக்காட்சியும் இடம்பெற்றிருந்த கதைக்களனற்ற அப்படம், தெளிவான நேர்த்தியிலமைந்த ஓசுவினது படங்களின் அன்பு ததும்பும் ஆன்மீக மென்மையைக் கொண்டிருந்தது மனதை லயிக்க வைத்தது. ஓசுவிற்கான அர்ப்பணிப்புணர்வில் அகம் நெகிழத் தக்க கவிதையை நமக்குப் பரிசளிக்கிறது ஐந்து திரைப்படம்.

இந்த ஒன்பதாவது சர்வதேச திரைப்பட விழாவின் திட்டமிட்ட ஒழுங்கும் செயல்நேர்த்தியும் அடுத்த விழாவிற்கும் தொடரவேண்டும், ஆசிய, மூன்றாமுலக சினிமா விற்கான முக்கியத்துவம் மேலும் சீரடைய வேண்டும். டிஜிட்டல் மூலம் எடுக்கப்படும் குறும்படங்களும் ஆவணப் படங்களும் புத்திருப்பு கண்டிருக்கும் சமகாலச்சூழலில், அப்படங்களுக்கு விருது வழங்கும் நடைமுறையையும் செயல்படுத்தப்படவேண்டும். அதன்படி, எளிய தலைமுறையினரிடமிருந்து ஊற்றெடுக்கும் ‘சாமான்ய சினிமா’ வளப்பட ஒரு வாய்ப்பாக இருக்கும். இத்தனை எதிர்பார்ப்புகளோடும், அடுத்த விழாவிற்கான காத்திருப்பும் ஆர்வமும் இப்பொழுதே என்னுள் விதை தூவின. செடியின் முதல் பசும் இலையாக துளிர்விட்டிருக்கிறது. மலரின் வசிய தோற்றம் காண, இன்னும் பத்து மாதங்கள் காத்திருக்க வேண்டும்.