குறும்பட இயக்குனர் ஜெயச்சந்திரன் ஹஸ்மியுடன் ஒரு நேர்காணல்...

தமிழ்நாட்டில் குறும்படம் என்பது அதன் சுயமிழந்து வரும் இவ்வேளையில், குறும்படங்களை திரமொழியோடு, நேர்த்தியாக உருவாக்க தெரிந்தவர்கள் அருகி வருகிறார்கள். ஆனால் இந்த ஆண்டு வெளியான மௌன மொழி குறும்படம் தமிழில் இந்த வருடம் வெளியான குறும்படங்களில் சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது. லொயலா கல்லூரியில் முதுகலை ஊடகக் கலைப் படிக்கும்போதே, எப்.எம் ரெயின்போ வில் நடைபெற்ற ஆர்.ஜே தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர் கு.ஜெயச்சந்திர ஹாஷ்மிஅதன் பிறகு குறும்படங்களில் தன் பார்வையை பதிக்க தொடங்கியுள்ளார். மௌனமொழி இயக்குனரோடு மௌனமான ஒரு நேர்காணல்.
1. ஹாஷ்மி என்ற பெயரை பற்றி?

நிறைய நண்பர்கள் கேட்டிருக்கிறார்கள், ஹாஷ்மி என்பது சாதிப்பெயரா என்று கூட. அது சாதிப் பெயராக இருந்திருந்தால் நிச்சயம் என் பெயரின் பின்னால் அது வந்திருக்காது. இது பிறப்பிலேயே வைக்கப்பட்ட பெயர்தான். நான் சேர்த்துக் கொண்ட பெயரெல்லாம் இல்லை. சப்தர் ஹாஷ்மி என்பவர் ஒரு கம்யூனிஸ்ட் வீதி நாடக கலைஞர், எழுத்தாளர், புரட்சியாளர். வீதி நாடகங்களுடன் தன்னை பலமாக ஈடுபடுத்திக் கொண்டு, தனது நாடகங்களின் மூலம் முதலாளிகளை எதிர்த்தும், முதலாளித்துவத்தை எதிர்த்தும், சுரண்டல்களை எதிர்த்தும் முழங்கியவர். இதே காரணத்தினால் முதலாளிகளின் கைக்கூலிகளால் நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே, அடித்துக் கொல்லப்பட்டவர். அவரது ஞாபகமாக எனக்கு வைக்கப்பட்டது தான் இந்த ஹாஷ்மி என்னும் பெயர்.

2. இந்த துறைக்கு வருவதற்கான உந்துதல் எது?

சரியாக சொல்ல முடியவில்லை. சிறு வயதில் இருந்தே அதைச் சார்ந்த சூழலில் தான் நான் வளர்ந்தேன். வீதி நாடகங்கள், கலை இரவுகள், கவிதைக் கூட்டங்கள், பேச்சுக்கள் போன்றவற்றை பார்த்து பார்த்து வளர்ந்தேன். இது போக சினிமா. சிறு வயதில் என்ன படம் என்றெல்லாம் தெரியாமல் எல்லா படங்களுக்கும் சென்றிருக்கிறேன். ஏழாம் வகுப்பு படிக்கும்போதே, ஸ்கூலுக்கு கட் அடித்து விட்டு படத்திற்கு சென்று, அடுத்த நாளே பள்ளியிலும் வீட்டிலும் மாட்டியிருக்கிறேன். சிறு வயதிலேயே நானும் அண்ணனும், ஒரு பழைய சேரை காமிராவாக நினைத்துக்கொண்டு அதை ஒருவர் கையாள, இன்னொருவர் ஏதாவது நடிக்க, ஆக்சன் கட் சொல்லி விளையாடியிருக்கிறோம். அது பொழுதுபோக்கு என்றுதான் அப்போது நினைத்தோம். பொழுதெல்லாம் அதே போக்கு தான் என்று இப்போதுதான் தெரிகிறது. இப்போது யோசித்துப் பார்த்தால் தான் அந்த விளையாட்டுக்கள் விளையாடியது ஆச்சர்யமாக உள்ளது.

இப்படி எல்லாரையும் போல் சினிமா வெறியாக ஆரம்பித்தது தான் இந்த ஆசை. மசாலா படங்களைப் பார்த்துதான் சிறு வயதில் சினிமா பிடித்தது. ஆனால் பிறகு சினிமாவை தேடித் தேடி படித்தபின், பார்த்தபின், என்ன வகையான சினிமாவை நோக்கிப் போக வேண்டும் என்ற தெளிவு ஏற்பட்டது. மனம் முதிர முதிர, மசாலாப் படங்களில் இருந்து, நல்ல சினிமாக்களுக்கு மனம் தாவியது.

3. இலக்கியங்கள் படிப்பது உண்டா? குறும்படம் எடுப்பதற்க்கு இலக்கியங்கள் படிப்பது அவசியம் என்று நினைக்கிறீர்களா?

நிச்சயமாக இலக்கியங்கள் படிப்பதுண்டு. நான் முன்பே சொன்னதுபோல, சிறு வயதிலேயே நானறியாமலேயே அப்படியொரு சூழலில் தான் வளர்ந்தேன். அப்போதே சுஜாதா போன்ற எழுத்தாளர்கள் பரிச்சயம்தான். இந்த வாசிப்பு பழக்கம் வளர வளர, வேறு சில சிறப்பான இலக்கியங்களையும் வாசித்தேன். கி.ரா, ஜெயகாந்தன் என சொல்ல்லாம். ஆனால் நான் குறிப்பாக இலக்கியம் படிக்க வேண்டும் என்று உட்காருவதில்லை. பரவலாக படிப்பதில்தான் எனக்கு ஆர்வம். திடீரென ஆங்கில த்ரில்லர் நாவல்கள், ராஜேஷ்குமார் நாவல்கள் படிப்பேன். திடீரென ஒரு நல்ல அரசியல் புத்தகம் படிப்பேன். சில நேரங்களில் கவிதைகள், சிறுகதைகள், குறுநாவல்கள் என சீரியஸ் லிட்டரேச்சர் வகைகள். இப்படி பரவலாக படிப்பதுதான் மிகுந்த புத்துணர்ச்சியையும் ஒரு பரந்த வாசிப்பு அனுபவத்தையும் தருகிறது.

குறும்படங்கள் எடுப்பதற்கு இலக்கிய அறிவும் வாசிப்பும் நிச்சயம் உதவும். அவசியமா என்றால் அது தெரியவில்லை. ஏனெனில் இலக்கியம் படிக்காத நிறைய இயக்குநர்கள் சிறப்பான படங்களை தந்துள்ளனர். ஆனால் இலக்கியம் உங்கள் சிந்தனை தளத்தை அது விரிவுபடுத்தும். பல புதிய விஷயங்களை நம்முள் புகுத்தும். நிறைய யோசிக்க வைக்கும். நிறைய யோசித்தால் எந்த துறைக்கும் நல்லதுதானே.
4. நீங்கள் கவிதைகள், சிறுகதைகள் எழுதுவீர்களா?

முதலில் நான் எழுத ஆரம்பித்ததே கவிதைகள் தான். பள்ளி நாட்களிலேயே கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். நான் சென்ற கூட்டங்களில் வாசிக்கப்படும் கவிதைகளை பார்த்து உண்டான ஆர்வம் அது. முக்கியமாக ஹைக்கூக்கள். அதை எழுதி எல்லாரிடமும் காட்டுவேன். கூட்டங்களில் வாசிப்பேன். சில புதுக்கவிதைகளும் எழுதியிருக்கிறேன். பத்திரிக்கைகளிலும் என் சிறுகவிதைகள் வந்திருக்கின்றன. சிறுகதைகள் எப்போதாவது எழுதுவேன். சிறுகதைகள் எழுதுவதற்கு பதில் திரைக்கதைகள் எழுதுவதே ரொம்ப பிடிக்கும். சிறுகதைகள் எழுதியிருக்கிறேன். ஆனால், விரைவில் அதையும் திரைக்கதைகளாக மாற்றி குறும்படமாக எடுத்து விட நினைப்பேன். எடுத்தும் இருக்கிறேன்.

பல வருடங்களுக்கு முன், நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது எழுதிய ஒரு கவிதை, இன்று வரை இந்நிலை மாறவில்லை. அது...

‘எங்கள் தெருவிளக்குகள்
மின்னலைப் போல
அவ்வப்போதுதான் எரியும்’

‘ஓட்டை சைக்கிளில் மூட்டை அரிசியை
ஏற்றிச்சென்றான் ஏழைச் சிறுவன்

வயிற்றில் பசியோடு’
5. பிடித்த எழுத்தாளர்கள் பற்றி?

நான் குறிப்பாக இந்த எழுத்தாளர்களை படிக்க வேண்டும் என்று உட்கார்ந்து படிக்க மாட்டேன். புத்தகங்களைத் தான் பார்த்து பார்த்து படிப்பேன். யார் எழுதியிருந்தாலும் சரி. படித்து விடுவேன். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால். ஜெயகாந்தன், கி.ரா, சுஜாதா, அஜயன் பாலா, ராஜீமுருகன், என பலபல. ஆங்கிலத்தில் சிட்னி ஷெல்டன் மற்றும் டான் ப்ரௌன் நாவல்கள் மிகவும் பிடிக்கும். அவர்களின் புத்தகங்களை படித்தால் திரைக்கதை எழுதுவதை நாமாக வேறுவேறு பரிமாணங்களில் யோசித்து நன்றாக கற்றுக்கொள்ள முடியும் என்பதென் எண்ணம்.

6. உலக சினிமாக்கள் பார்ப்பதுண்டா? அதன் அவசியம் என்ன?

நிறையவே பார்ப்பதுண்டு. கல்லூரி படிக்கும்போது, அங்கே உலக சினிமாக்கள் இருக்கும் ஒரு வீடியோ லைப்ரரி உண்டு. ஒரு நாளுக்கு ஒரு படத்திற்கு 5 ரூபாய். ஒரு படத்தை எடுத்து வந்து, வீட்டில் கம்ப்யூட்டரில் சேவ் பண்ணி வைத்துக்கொண்டு, அடுத்த நாள் 5 ரூபாயுடன் திருப்பிக் கொடுத்து விடுவேன். அந்த படங்களை நேரம் கிடைக்கையில் பார்த்துக்கொள்வேன். இப்படி அந்த காலத்தில் வாரத்திற்கு குறைந்தது மூன்று உலக சினிமாக்கள் பார்ப்பதுண்டு.

உலக சினிமாக்கள் வேறு வேறு கலாச்சாரத்தை நமக்கு அறிமுகப்படுத்துகின்றன. வேறு வேறு மக்களைப் பற்றி பேசுகின்றன. நாம் அறியாத ஒரு புது உலகிற்கு,. நாம் சந்திக்காத புது மனிதர்களை நமக்கு அறிமுகப்படுத்துகின்றன. அதுவே ஒரு அலாதியான அனுபவம். இதைத் தாண்டி, அவை வேறு ஒரு சினிமா வடிவத்தை நமக்கு காட்டுகின்றது. பாடல்களையும், நாயக பில்டப்களையும் க்ளைமேக்ஸ் சண்டைகளையுமே பெரும்பாலும் பார்த்த நமக்கு, வேறு வகையான ஒரு சினிமா அனுபவம் கிடைக்கின்றது. வேறு வகையான சினிமா வடிவம் புலப்படுகின்றது. சிறிய உணர்வுகள் படம் முழுதும் ஆக்கிரமிக்கின்றன. பலப்பல திரைக்கதை வடிவங்கள் தெளிவுபடுத்தப்படுகின்றன. இதுபோல நிறைய அவசியமான காரணங்கள் இருக்கின்றன. என்னைப் பொறுத்த வரையில் நிச்சயம் அனைவரும் உலக சினிமாக்கள் பார்க்க வேண்டும். அதில் இருந்து சினிமாவை, வடிவத்தை கற்றுக் கொண்டு நம் படங்களில் பயன்படுத்தலாம். தவறில்லை. ஆனால் அந்த கதைகளைத்தான் எடுத்துக் கொண்டு இங்கே பயன்படுத்தக்கூடாது. அப்படியே பயன்படுத்தினாலும் அதற்காக க்ரெடிட் கொடுக்க வேண்டும்.

இன்னொரு விஷயம் உலக சினிமா என்ற பதமே இங்கே பெரும்பாலும் தவறாகத்தான் புரிந்துகொள்ளப்படுகிறது. நாமும் உலக சினிமாவில்தான் இருக்கிறோம். உலக சினிமாதான் எடுத்துக்கொண்டு இருக்கிறோம். வேறு நாட்டாருக்கு நம் படங்கள்தான் உலக சினிமாக்கள். மற்றபடி உலக சினிமா என்றால் என்ன என்பதற்கு இயக்குனர் சீனு ராமாமி ஒரு விழாவில் சொன்னதை சொல்கிறேன். ‘உலக சினிமாக்கள் என்பது உள்ளூரில் நேர்த்தியாக எடுக்கப்ப்படும் சினிமாக்களே’.

7. பிடித்த இயக்குனர்கள் பற்றி?
புத்தகங்களைப் போலத்தான் படங்களும் எனக்கு. வெளிநாட்டுப் படங்களைப் பொறுத்தவரை, இயக்குநர்களில் பெயர்கள் மிக கம்மியாகத்தான் தெரியும். படங்களின் பெயர்தான் தெரியும். சில்ட்ரன் ஆஃப் ஹெவன், வொயிட் பலூன், பாரடைஸ் நௌ, சிட்டி ஆஃப் காட், லைப் இஸ் ப்யூட்டிஃபுல், காட்ஃபாதர், க்ளாடியேட்டர், பாரஸ்ட் கம்ப், எ ப்யூட்டிஃபுல் மைண்ட், சினிமா பாரடைஸோ என பலப்பல படங்கள் பிடிக்கும். அதனால் இந்தப் பட இயக்குனர்களும் பிடிக்கும். சிலரை குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், மஜீத் மஜீதி, மக்மல்பல்ஃப் என சிலரின் பெயர்கள் தான் ஞாபகத்தில் இருக்கிறது. சார்லி சாப்ளினை ரொம்ப பிடிக்கும். தி கிரேட் டிக்டேட்டர் படம் ஆல்டைம் ஃபேவரைட்.

தமிழில் பாலுமகேந்திரா, மகேந்திரன், பாலா, மணிரத்னம், செல்வராகவன், மிஷ்கின், வெற்றிமாறன், பாலச்சந்தர், பாரதிராஜா, வசந்த், அமீர், ராதாமோகன், பாலாஜி சக்திவேல் போன்றவர்களை மிகவும் பிடிக்கும்.
8. ஒரு கதையை எவ்வாறு தேர்ந்தெடுக்கிறீர்கள்? அந்தக்கதையை நண்பர்களோடு விவாதிப்பதுண்டா?

கதையை இப்படித்தான் தேர்ந்தெடுப்பேன் என்ற வழிகளெல்லாம் இல்லை. அடுத்த கதையை தேடிக்கொண்டே இருப்பேன். பல கதைகளை மனதிற்கு வந்து வந்து போகும். நான் கதை எழுத என்று தனியே உட்காரவே மாட்டேன். கதை தேடுதல் மனத்தில் ஆழத்தில் பதிந்து விடும். அப்படியே வேறு வேறு வேலைகளை செய்தபடி இருப்பேன். நண்பர்களுடன் வெளியே போவது, சினிமாக்கள், எஃப்.எம், புத்தகங்கள் என்று ஏதேதோ செய்து கொண்டிருப்பேன். மனம் நாம் செய்பனவற்றிலிருந்து கதையை தேடியபடியே இருக்கும். ஒரு விஷயத்தை ஆழ்ந்து நேசித்து விட்டால், நாம் பார்ப்பது எல்லாவற்றையுமே, அந்த விஷயத்துடன் இணைத்து தான் பார்க்கத் தோன்றும். எல்லாருக்கும் இப்படித்தான் என்று நினைக்கிறேன். அவ்வகையில் வேறு வேறு கதைகள் வந்துபோய்க் கொண்டிருக்கும். திடீரென ஒரு கதை பலமான தாக்கத்தை ஏற்படுத்தும். மனம் அதிலேயே நிற்கும். தோன்றும் போது, ஒரு சின்ன காட்சியாக, கருவாகத்தான் தோன்றும். ஆனால் மனம் அதை விட்டு நகராது. அப்போதே தெரிந்து விடும். இதைத்தான் அடுத்து எடுக்கப் போகிறோம் என்று. உடனே அதில் இறங்கி, அதை விரிவுபடுத்தி திரைக்கதையை ஆரம்பித்து விடுவேன். பல்வேறு கட்டங்கள் தாண்டி அந்தக் கதை முழுமையடையும் போது அதை படமாக எடுக்க கிளம்பிவிடுவோம்.

நண்பர்கள். நிச்சயமாக. கதை தோன்றிய நிமிடமே என் குழு நண்பர்களை அழைத்து அவர்களிடம் அதை சொல்லி விடுவேன். பின் அதை விரிவாக்கும் போது ஒவ்வொரு கட்டத்திலும் நண்பர்களுக்கு சொல்லிக் கொண்டே இருப்பேன். பின் முழுமை அடைந்ததும் அனைவரையும் அழைத்து, அந்த கதையை காட்சிக்கு காட்சி விவாதிப்போம். ஏதேனும் மாற்றங்கள், சிறப்பாக சேர்க்க வேண்டியது ஏதாவது உள்ளதா என்று நிறைய விவாதித்து செய்வோம்.

எனக்கு கதை சொல்வது ரொம்ப பிடிக்கும். அப்படி ஒரு முழு திரைக்கதையை நான் என் நண்பர்களிடம் சொல்லும்போது, அது அவர்களை முழுதாக கவர வேண்டும் என்று எதிர்பார்ப்பேன். அவர்கள் மனதில் ஒரு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி, அவர்களை அது முழுதுமாக வென்றிருக்க வேண்டும். அவர்களை திருப்திப்படுத்திய பிறகுதான் அந்தக் கதை அடுத்த கட்டத்திற்கு செல்லும். அந்த உணர்ச்சிகளை அவர்களிடம் பார்த்தபிறகு தான் நான் அடுத்த கட்டமாகிய படப்பிடிப்பிற்கே கிளம்புவேன்.
9. முதல் குறும்பட அனுபவம்?

முதல் குறும்படம் 2006 இல் கல்லூரி முதலாமாண்டில் எடுத்தேன். வழக்கம்போல் நண்பர்கள் தயாரிப்பில்தான். அப்போது குறும்படங்கள் பார்த்ததும் இல்லை. அதைப்பற்றிய நல்ல புரிதலும் அல்ல. ஏதோ ஒரு விழாவிற்காக எடுத்ததாய் ஞாபகம். திரைக்கதைக்கெல்லாம் மேலே சொன்னதைப் போல அவ்வளவு மெனக்கிடவில்லை. திரைக்கதையை எழுதினேனா என்றுகூட இப்போது யோசனையாக இருக்கிறது. நம்புவீர்களா என்று தெரியவில்லை, ஒரே நாளில் மூன்று குறும்படங்களை எடுத்தோம். இருக்கும் பணத்தில் எவ்வளவு வேகமாக வேலை செய்ய முடியுமோ அவ்வளவு வேலை செய்ய வேண்டும் என்று மிக மிக வேகமாக வேலை பார்த்தோம். மூன்று குறும்படங்கள் எடுத்துவிட வேண்டும் என்றுதான் இறங்கினோம். மூன்றையும் எடுத்துவிட்டோம். இதில் மூன்றுமே வேறு வேறு லொக்கேஷன்கள். ஒன்று வண்ணாரப்பேட்டையில், இன்னொன்ற திருவள்ளூர் அருகே நான் வசிக்கும் செவ்வாப்பேட்டையில். இன்னொன்று அங்கிருந்து 5, 6 கிலோ மீட்டர்கள் தள்ளி ஒரு வெட்டவெளி மைதானத்தில். அவ்வளவு வேகமாக வேலை பார்த்தோம். அருமையான ஒரு அனுபவம் அது. அதில் இரண்டு படங்களை எடிட் செய்து வைத்துள்ளேன். இன்னொன்றை எடிட் செய்ய முடியாமல் போய்விட்டது. அந்த இரண்டு படங்களுக்குக் கூட பெயரில்லை. என் பெயர் உள்ளிட்ட எந்த பெயரும் அந்த படத்தில் வராது. படமே பெயரில்லாத ஒரு படம். அதையெல்லாம் போடவேண்டும் என்று அப்போது தோன்றவேயில்லை. படம் எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். படம் மட்டும் எடுத்து விட்டேன்.

10. மௌனமொழி கதை உருவாக்கம் பற்றி சொல்லுங்கள்?

மௌன மொழிக்கு முன் ‘அந்த நொடியின் நுனியில்’ என்று ஒரு படம் எடுத்தோம். அதற்கும் பத்திரிக்கைகளில் நல்ல வரவேற்பு இருந்தது. அதற்கு அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்த போது, பல கதைகள் தோன்றியபடி இருந்தன. ஆனால் எதுவும் மனதில் நிற்கவில்லை. அப்படியே வேறு வேலைகள் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒருநாள் மௌன மொழியில் நாயகனாக நடித்திருக்கும் கார்த்தியை பார்க்க சென்று, ரயில் நிலையம் அருகே காத்துக்கொண்டிருந்தேன். அவன் வர தாமதமாகியபடியே இருந்தது. சரி, கால் செய்து கேக்கலாம் என்று நினைத்தால் மொபைலில் தேவையான பணம் இல்லை. பக்கத்தில் ஒரு கடையில் ஒரு ரூபாய் போட்டு பேசும் தொலைபேசி பாக்ஸ் இருந்தது. அதனருகே சென்றபோது, ஒருவர் அதில் பேசிக்கொண்டிருந்தார். அவர் ஒரு கட்டடத் தொழிலாளி என்று நினைக்கிறேன். இயல்பாக கள்ளம் கபடமின்றி வெகுளியாக பேசிக்கொண்டிருந்தார். நான் பின்னால் நின்றபடி கேட்டுக்கொண்டிருந்தேன். பின்னர் அவர் சென்று விட்டார். நானும் போன் செய்துமுடித்து சென்றுவிட்டேன். ஆனால் இந்த நிகழ்வு மனதிலேயே தங்கியிருக்கும் போல. ஒரு நாள் மதுரையில் இருந்தபோது திடீரென இந்த நிகழ்வு ஞாபகத்துக்கு வந்தது. இதில் போன் செய்து கொண்டிருப்பவன் யார், காத்துக்கொண்டிருப்பவன் யார் என்று அந்த நிகழ்வை விரித்துப்பார்த்ததில் தான் மௌன மொழி உருவானது. ஆரம்பத்தில் இந்த திரைக்கதையில் இரண்டு மூன்று காட்சிகள் தான் இருந்தது. பின் தோழர் அஜயன் பாலாவுடனான சில சந்திப்புகளின் போது, அவர் இதை இன்னும் எஸ்டாப்பிளிஷ் செய்தால் நன்றாக இருக்கும் என சில கருத்துக்களை சொன்னார். அதன்பின் அந்த திரைக்கதையை முழுமைப்படுத்தியது தான் இப்போது நீங்கள் பார்க்கும் படம்.

11. மௌனமொழியில் திடீரென நிகழும் ஒரு சம்பவம் மொத்த திரைக்கதையையே தன் பக்கம் திருப்பிக்கொள்வது சரிதானா?

அதுதான் இந்த படத்தின் திரைக்கதை உத்தி. அதுதான் மையப்புள்ளி. அந்த புள்ளியை நோக்கி தான் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. அதை நோக்கி தான் திரைக்கதை பயணப்படுகிறது. ஒருவனின் வாழ்வாக செல்லும் கதை, திடீரென இன்னொருவன் வாழ்வுக்கு தாவி, அவனது வாழ்வை சிறிது நேரம் பேசி பின் மறுபடி பழையவனின் வாழ்வுக்கே திரும்பி, இருவரையும் இணைக்கின்றது. இதுதான் இந்த திரைக்கதை அமைப்பு. இது வேண்டுமென்றே செய்ததுதான். இதில் என் கவனம் எல்லாம், அந்த இரண்டாவது கதாப்பாத்திரம் வந்தவுடன் முதல் பாத்திரத்தை எல்லாரும் தற்காலிகமாக மறந்து விட வேண்டும் என்று நினைத்தேன். அதேபோல் தான் படம் பார்த்த எல்லாரும் சொன்னார்கள். அதுவே ஒரு வகையான வெற்றி என்று நினைக்கிறேன். ஒருவகையான இரட்டைக் குழல் வகையில் திரைக்கதை அமைக்க வேண்டும் என்றுதான் அமைத்தேன். மேலும், திரைக்கதையில் இதுதான் சரி, தவறு என்றேதும் இல்லையே. அந்த கதை, வாழ்வு, பயணத்திற்கு ஏற்ற திரைக்கதைகள் எல்லாமே சரிதான். அதுபோல் இந்த நிகழ்வும் சரிதான்.

12. குறும்பட விழாக்களில் வரவேற்பு எவ்வாறு உள்ளது?

மிக உற்சாகமாக உத்வேகம் அளிப்பதாக உள்ளது. இந்த படம் முடியப்போகும் தருவாயில் தான் DBICA நடத்திய ‘உலகத் தமிழ் குறும்பட விழா 2012’ வந்தது. அவசர அவசரமாக வேலைகளை முடித்து படத்தை அங்கே ஒப்படைத்தோம். இயக்குநர் லெனின் உள்ளிட்ட பலர் நடுவர்களாக இருந்த அங்கே, மௌன மொழி முதல் பரிசை வென்றது. என்னதான் நாங்கள் எதிர்பார்த்து போனாலும், இறுதி நேர பதட்டத்திற்கு பின்புதான் அந்த மகிழ்ச்சியான தருணம் கிட்டியது. பல வருட பயணத்தில் முதல் பெரும் அங்கீகாரம். எங்கள் மொத்த குழுவினரும் ஏதோ ஒரு புது உணர்வில் ஆட்பட்டிருந்தோம். அதன்பின் நடந்த சில விழாக்களும் எங்கள் உழைப்பை அங்கீகரித்தன. தமிழ் ஸ்டூடியா, ‘சிறந்த திரைக்கதை 2012’ என்ற விருதைக் கொடுத்து கௌரவித்தது. நாகர்கோவிலில் நடைபெற்ற யூஜின் நினைவு குறும்படப் போட்டியில் முதல் பரிசு கிடைத்தது. மதுரை காமராசர் பல்கலைக்கழகம் ‘க்ரியேட்டிவ் எக்சலன்ஸ்’ என்ற விருதைக் கொடுத்தது. கேரளாவில் நடைபெற்ற லோகித்தாஸ் தேசிய குறும்படப் போட்டியில் மௌன மொழி, அஃபிஷியல் செலக்சனாக தேர்வு செய்யப்பட்டது. இப்போது, மதுரையில் நடைபெறும் 14 வது மதுரை இண்டர்நேஷனல் குறும்பட ஆவணப்பட விழாவிலும் தேர்வாகியுள்ளது. இந்த அனைத்து அங்கீகாரங்கள் தான், கடினமான இந்த துறையில் மேலும் மேலும் பயணிக்க ஒரு ஊக்கத்தைக் கொடுக்கின்றன.

13. எதிர் கொள்ளும் சவால்கள் என்னன்ன?

நிறைய நிறைய. முதலில் சமூகப் பார்வை. குறும்பட இயக்குனன் என்று சொன்னால் சமூகமே, புரியாமல், ‘ஓ, சரி என்ன வேலை பாக்குறீங்க?’ என்று கேட்கிறது. இதைத் தாண்டி சமூக அங்கீகாரம். என்ன படம் எடுத்து என்ன விருது பெற்றாலும் இவர்களுக்கு நான்கு இலக்கத்தில் பணம் சம்பாதித்தால்தான் வெற்றி பெற்றதாய் அர்த்தம். பணம் தான் என் வெற்றியை தீர்மானிக்கும் என்றால், அந்த போட்டியில் இருந்து நான் மகிழ்ச்சியாக விலகிக் கொள்வேன்.

முக்கியமாக பணத்தேவைகள். குறும்படம் எடுக்க பணம் புரட்டுவது மிக கடினம். சில மசாலா குறும்படங்களுக்குக் கூட தயாரிப்பாளர்கள் கிடைத்துவிடுகிறார்கள். அல்லது இயக்குநர்களே தயாரித்து விடுகிறார்கள். ஆனால் நல்ல குறும்படங்களுக்கு கிடைப்பதேயில்லை. எனக்கு வரமாக நண்பர்கள் இருக்கிறார்கள். மௌன மொழி வரை என்னை தோள்பிடித்து கூட்டி வந்தது அவர்கள் தான். கலங்கி நிற்கும் ஒவ்வொரு கட்டத்திலும், சிரிப்பு மூட்டி அடுத்த அடி எடுத்து வைக்கச் சொல்லும் என் நண்பர்கள். மௌன மொழியில் நீங்கள் பார்த்திருக்கலாம். தொழில்நுட்பக் கலைஞர்களில் பட்டியலை விட தயாரிப்பாளர்களின் பட்டியல் அதிகமாக இருக்கும். அத்தனை நண்பர்களின் நம்பிக்கையும் அதில் இருக்கிறது. நன்றி என்று சொன்னால் கோபித்துக் கொள்ளக் கூடியவர்கள் அவர்கள். அதனால் தான், ஒவ்வொரு படத்தில் ஆரம்பத்திலேயே போட்டுவிடுவேன், ‘நன்றியை விட பெரிய வார்த்தைகள் ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள், என் நண்பர்களுக்கு சொல்ல வேண்டும். ’

ஆனால் இதைத் தாண்டியும் பல சவால்கள் உள்ளது. குடும்ப ஒத்துழைப்பு. எனக்கு அது முழுக்க கிடைத்தது போல அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். படப்பிடிப்பின்போது வரும் காவல்துறை சிக்கல்கள், சில குறும்பட போட்டி அமைப்பாளர்கள் குறும்படத்தின் காட்சிகளை மாற்ற சொல்லும் கொடுமை என நிறைய சவால்கள் இருக்கின்றன. எதிர்கொண்டுதானே ஆக வேண்டும்.
14. குறும்படங்களை சந்தைப்படுத்துதல் எவ்வாறு உள்ளது? இதற்கு மாற்று உண்டா?

இப்போதைய நிலைமையில் சந்தைப்படுத்துதல் என்பது தமிழக அளவில் பூஜ்யமாகத்தான் இருக்கின்றது. எல்லாரும் தங்கள் குறும்படங்களை யூட்யூபில் ஏற்றிவிட்டு, அதை பார்ப்பதினால் வரும் ஹிட்சும் லைக் கமெண்ட்டுகளும் போதும் என்று நினைக்கிறார்களே. மேலும், குறும்படங்கள் என்பது தனி ஊடகம் என்று உணராமல், சினிமாவிற்கு போக ஒரு குறுக்கு வழி என்றுதான் எல்லாரும் நினைக்கிறார்கள். ஆரம்பத்தில் அப்படி நினைக்கலாம். அது தப்பில்லை. ஏனெனில் யாரும் குறும்படங்களைப் பார்த்து குறும்படங்கள் எடுப்பதில்லை. சினிமாக்களை பார்த்துதான் எடுக்கிறார்கள். ஆனால் அந்த கலையை நேசிக்க நேசிக்க அது ஒரு தனி ஊடகம் என்பதை அவர்கள் உணர வேண்டும்.

மாற்று நிச்சயம் உண்டு. எல்லா குறும்படங்களையும் வெளியீடு செய்து, குறுந்தகடுகளை வெளியிட்டால் நிச்சயம் குறும்படங்கள் சந்தைப்படுத்தப்படும். மௌன மொழி குறுந்தகடையும் நாங்கள் வெளியிடுகிறோம். ஆரம்பத்தில் ஆதரவு கம்மியாகத்தான் இருக்கும். ஆனால் இப்போது அதனை பொறுத்துக்கொண்டு முயன்றால் இன்னும் சில வருடங்களில் குறும்படங்கள் தனி ஊடகமாக, அதற்கென திரையரங்குகளுடன், நிச்சயம் சந்தைப்படுத்தப்பட்ட ஒரு ஊடகமாகத்தான் நிற்கும். ஆனால் அந்த பொறுமை எல்லாருக்கும் வேண்டுமே. பார்க்கலாம்.
15. தயாரிப்பாளர் கிடைக்கிறார்களா?

மிக கடினம். இயக்குனர்கள் தங்கள் சொந்தக் காசில் அல்லது நண்பர்களின் உதவியுடன் தான் குறும்படம் எடுக்கும் நிலைதான் இப்போது உள்ளது. ஆனால் இந்த நிலை இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறி வரும் நிலை ஏற்பட்டு வருகின்றது. சில குறும்படத் தயாரிப்பாளர்களும், அதனை ப்ரொமோட் செய்யும் நிறுவனங்களும் இப்போது இறங்கியுள்ளன. ஆனால் சின்ன ப்ரச்சினை என்னவென்றால், அவர்கள் இப்போது வணிக ரீதியான மசாலா குறும்படங்களுக்கே அதிக முன்னுரிமை தருகிறார்கள். ஆனால் பரவாயில்லை. இதில் தயாரிப்பாளர்கள் இறங்கியிருப்பதே ஆரோக்கியமான விஷயம் தான். இப்போது கூட என் நண்பர்கள் சிலர் தயாரிப்பாளர்கள் மூலமாக குறும்படங்கள் எடுத்து வருகின்றனர். இத்தயாரிப்பாளர்கள் விரைவில் நல்ல நல்ல குறும்படங்களைத் தயாரிக்கவும் முன்வருவார்கள் என நம்புகிறேன். என் அடுத்த குறும்படத்திற்கும் கூட தயாரிப்பாளர்களை எதிர்நோக்கியே உள்ளேன். முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் ஆரம்பத்து விடுவோம்.
16. இன்றைய குறும்பட துறை எவ்வாறு உள்ளது?

இப்படித்தான் இருக்கிறது என்று சொல்ல முடியாத அளவிற்கு எல்லாம் கலந்து இருக்கிறது. கிட்டத்தட்ட சினிமாத் துறை மாதிரி தான் இருக்கிறது. நல்ல தரமான, ஆழமான குறும்படங்களும் வருகின்றன. அதே நேரத்தில், வெறும் தொழில்நுட்பத்தை மட்டும் நம்பி, சரக் சரக் என்று எடிட்டிங் செய்து, பணத்தை கொட்டி, ஆடம்பரமாக எடுக்கப்படும், மசாலா குறும்படங்களும் வருகின்றன. சொல்லப்போனால் இவ்வகை குறும்படங்கள் தான் அதிகம் வருகின்றன. யூட்யூபில் இவ்வகை குறும்படங்களை எண்ணற்று பார்க்கலாம். அதற்கு வரும் பின்னூட்டங்கள் அதை விடக் கொடுமை. அற்புதம், பிரம்மாண்டம் என்றெல்லாம். அவர்களுக்கு ஒன்றே ஒன்றைதான் சொல்ல விரும்புகிறேன். உங்கள் நண்பர் எடுத்த படம் என்ற ஒரே காரணத்திற்காக அதை தூக்கி வைத்து பாராட்டாதீர்கள். ஏனெனில் இப்போது நீங்கள் பாராட்டி தூக்கி விடலாம். ஆனால் நாளை அவர் திரைப்படம் எடுக்கையில், பார்க்கும் மக்களும் அதே போல் நேசத்தில் விமர்சிக்க மாட்டார்கள். பிடிக்கவில்லையென்றால் உடனே நிராகரித்து விடுவார்கள். அதன் பின் உங்கள் நண்பர் மீண்டும் தலைதூக்க பல காலம் ஆகும். அவர் மீது உண்மையான அக்கறை இருந்தால் ஆக்கப்பூர்வமாக விமர்சனம் செய்யுங்கள். அதுவே அவருக்கு பெருமளவு உதவும். இவ்வகையில் நான் அதிர்ஷ்டக்காரன்.

ஆனால் முன்பை விட, குறும்படங்களைப் பற்றிய ஒரு தெளிவும் விழிப்புணர்வும் ஏற்பட்டுள்ளது. இது ஆரோக்கியமான விஷயம்தான்.
17. தமிழில் சர்வதேச தரத்தில் குறும்படங்கள் எடுக்கப்படுவதில்லையே?

சர்வதேசத்தில் இருப்பது போல் குறும்படங்களுக்கு இங்கு முக்கியத்துவேமே இல்லையே. ஒரு துறைக்கு சமூகத்தில் முக்கியத்துவம் இருந்தால்தான் அதில் நிறைய ஆர்வலர்கள் பங்கெடுப்பார்கள். பல படங்கள் வரும். அதில் சில படங்கள் மிகத் தரமாக இருக்கும். ஆனால் இங்கே குறும்படங்களுக்கான பார்வையாளர் வட்டமும் இல்லை, சமூக அங்கீகாரங்களும் இல்லை, சந்தையும் இல்லை. பின் எப்படி இதில் நாம் நிறைய பங்களிப்பையும் சிறப்பான குறும்படங்களையும் எதிர்பார்க்க முடியும். இது இந்த சமூகத்தின் தவறும் கூடத்தான். இது விரைவில் மாற வேண்டும். அப்போது உலகத்தரத்தை மிஞ்சும் குறும்படங்கள் நிச்சயம் வரும்.

ஆனால் தவறு, குறும்பட இயக்குநர்களிடமும் கூட இருக்கிறது. அவர்களுள் குறும்படத்தை காதலிப்பவர்கள் வெகு சிலரே. அவர்கள் தரமான படங்களை எடுத்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். மற்றவர்கள் சினிமா கனவுகளை இங்கே தூவிக் கொண்டும், பொழுதுபோக்கிற்காகவும் எடுக்கிறார்கள். அவர்களிடமிருந்து தரமான படங்களை எதிர்பார்க்க முடியாது.

நண்பன் ஒருவன் சொன்னான். ‘2000 த்தில் போரடித்தால் வாடா, வெளிய போய் கிரிக்கெட் விளையாடலாம் என்றார்கள். 2005 ல் போரடித்தால், வாடா வீட்டுக்குள்ள போய் வீடியோ கேம்ஸ் விளையாடலாம் என்றார்கள். ஆனால் இப்போது போரடித்தால், வாடா போய் ஷார்ட் ப்லிம் எடுக்கலாம் என்கிறார்கள்.’ இதுதான் பெரும்பான்மை நிலைமை.

இதற்கு மாற்றாக பெரும் தயாரிப்பாளர்கள் குறும்படம் எடுக்க முன்வரலாம். அப்போது தானாக, பார்வையாளர்கள், சந்தை, தரம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் நடக்கப்பெறும். மேலும், குறும்படங்கள் தனி ஊடகமாகவும் விளங்கும். இதில் சிறந்து விளங்கும் இயக்குநர்கள் விருப்ப பட்டால், அதே தயாரிப்பாளர் திரைப்படத்தையும் தயாரிக்கலாம். கிட்டத்தட்ட வெற்றி உறுதி. தயாரிப்பாளருக்கும் இயக்குனர் மேல் சந்தேகம் இல்லாமல் அவர் திறன் தெரிந்திருக்கும், வியாபார ரீதியாகவும் கவலை இல்லாமல் இருக்க முடியும். எதிர்வரும் காலங்களில் இதுவும் நடக்கும் என நம்புகிறேன்.

18. மாற்று சினிமாவின் அவசியம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இங்கு சினிமா நம் சமூகத்தில் திணித்து வைத்திருக்கும் அபத்தங்கள் ஏராளம் ஏராளம். நாயக வழிபாடு, பெண்களை கவர்ச்சிப் பொருளாக்குவது, குத்துப்பாட்டுகள் என்று நம்மை சிந்திக்க விடாமல் பண்ணும் விஷயங்கள் இங்கே தாராளம். இதிலிருந்து வெளியே வரவாவது மாற்று சினிமாக்கள் வேண்டும். ஒரு சினிமா என்பது வாழ்க்கையை பேச வேண்டும். உணர்வுகளை பேச வேண்டும். சமூக கருத்துக்களை கண்டிப்பாக கூற வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால், சினிமா மொழி நிச்சயம் அவசியம். சினிமா மொழியுடன் நல்ல விஷயங்களையும் புகுத்தாமல் காட்சி ரீதியாக உணர்த்த முடிந்தால் அதுதான் சினிமாவின் உச்சம். அந்த சினிமா மக்களுக்கு பல விஷயங்களை அளிக்க முடியும். ஒரு உணர்வு பயணத்தை, ஒரு அலாதி அனுபவத்தை, ஒரு புதிய பார்வையை, ஒரு அன்பின் ஸ்பரிசத்தை, ஒரு தேடலில் கடினத்தை, ஒரு உறவில் ஆழத்தை, ஒரு மனத்தின் அகலத்தை, ஒரு சமூக புரிதலை, ஒரு புரட்சிக்கான விதையை, ஒரு அழகிய உரையாடலை என்ற பலவற்றை மக்களுக்கு அளிக்க முடியும். அதுதான் நிஜ மாற்று சினிமா. அது வராமல் இங்கு மசாலாக்களையே தூவி வைத்திருப்பது இவர்களின் புத்திசாலித்தனம் இதிலிருந்து மீள, ஒரு உன்னதக் கலையை அதன் முழுத்தன்மையோடு உணர, மாற்று சினிமாக்கள் நிச்சயம் அவசியம்.

சந்தியா ராகம் திரைப்படத்தை சில மாதங்களுக்கு முன் கண்டேன். இன்று வரை அந்த படம் ஏதோ செய்துகொண்டே இருக்கிறது. அந்த திரைமொழி, பயன்படுத்தப்பட்ட இசை, அதன் பயணம் என அந்த படம் சொல்லவே முடியாத ஒரு திருப்தி உணர்வை ஒரு முழுமையை, ஒரு அற்புத அனுபவத்தை தந்தவண்ணம் இருக்கிறது. இது போன்ற படங்கள் மக்கள் மனதை ஆக்கிரமிக்கும் போது, சினிமா தன் நிஜ வேலையை செய்ய ஆரம்பிக்கும்.
19. தமிழில் மாற்று சினிமா சாத்தியமாகுமா? மாற்று சினிமா என்று சொல்லப்படும் படங்கள் வெற்றி பெறுவதில்லையே?

நிச்சயமாக சாத்தியம் தான். மாற்று சினிமாக்கள் பல வந்து மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறதே. சில படங்களின் தோல்விக்குக் காரணம், வியாபாரம். ப்ரொமோஷன் உள்ளிட்ட பல வியாபார உத்திகளை இல்லாததால் அந்த படங்கள் தோல்வியடைந்திருக்கின்றன. அதைத் தாண்டி ஒரு முக்கியக் காரணம், சினிமா ரசனை. மாற்று சினிமாக்கள் வெற்றி பெற வேண்டுமானால் மாற்று சினிமா குறித்த ரசனை மக்களிடத்தே வேண்டுமே. அது இங்கு மிக குறைவுதானே. விமர்சகர்களுக்குக் கூட சினிமா ரசனை இங்கே பெருமளவு இல்லையே. படம் பார்த்துவிட்டு வந்து யார் முதலில் வேகமாக எழுதுகிறார்களோ, அவர்கள் விமர்சகர்கள் என ஃபார்ம் ஆகி விடுகிறார்கள். அவர்கள், நாயகியின் இடுப்பை, பாடலை, வில்லனின் லுக்கை, கேமராவை, லொக்கேஷன்களை விமர்சிப்பதோடு நின்றும் விடுகிறார்கள். சில விதிவிலக்குகள் உண்டு. ஆனால் பெரும்பாலானோர் இப்படித்தான் இருக்கிறார்கள். முதலில் இவர்கள் அனைவருக்கும் நல்ல சினிமா ரசனை பெருக வேண்டும். அதன் பிறகு மாற்று சினிமா வளரும்.

ஒரு மாற்று சினிமா வரும் நேரத்தில் கிட்டத்தட்ட அனைத்து தியேட்டர்களையும் மறித்துக் கொண்டு ஒரு மசாலா படம், பெரிய ஹீரோ நடித்து, சுமாராகவும் இருந்து விட்டால், எல்லாரும் அதன்பின் தான் ஓடுவார்கள். ஏனென்றால் இதுவும் ஒரு வியாபாரம் தானே. அதனால் மக்களை கடைசிக் காட்சி வரை, கட்டிப்போட்டு, சுவாரசியமாக கதை சொல்லும், ரசிக்க கூடிய மாற்று சினிமாக்கள் வர வேண்டும். இங்கு மாற்று சினிமா என்று வரும் பல படங்கள் சினிமா மொழியில் இருந்து விலகி, அறுவை என்று மக்கள் முத்திரை குத்தும் படங்களாகவே இருக்கின்றன. அதனால் மாற்று சினிமாக்கள் மேலேயே மக்களுக்கு ஒரு வித அலுப்பு ஏற்பட்டுவிடும். இதனால் எது மாற்று சினிமா என்பதிலேயே கூட, படைப்பாளிகளுக்கும் பார்வையாளர்களுக்கும் தெளிவு வேண்டும். இப்போது சமீபத்தில் தமிழ்ச் சமூகத்திற்கு அவசியமான படம், மாற்று சினிமா என்ற பெயரில் வந்த ஒரு படம் ரசிகர்களை எந்த அளவுக்கு சோதித்தது என்பதை நாமறிவோம். உண்மையில் மாற்று சினிமாக்களை மாசு படுத்துவது, மசாலா படங்கள் அல்ல. மாற்று சினிமா போர்வையில் வரும், இது போன்ற சில தவறான படங்கள் தான்.
20. நீங்கள் மாற்று சினிமாவில் இயங்குவீர்களா வெகுஜன சினிமாவில் இயங்குவீர்களா?

நல்ல கேள்வி. என்னைப் பொறுத்த வரை, இதுவரை இந்த மாற்று சினிமாவிற்கும், வெகுசன சினிமாவிற்கும் ஒரு பெரும் இடைவெளி இருந்து கொண்டே இருக்கிறது. இது ரசிகர்கள் மற்றும் விமர்சனங்களின் மூலமே கூட நாம் புரிந்துகொள்ளக் கூடியது. விமர்சகர்கள் தூக்கி வைத்து பாராட்டித் தள்ளும் படங்கள், ரசிகர்களால் சீக்கிரம் நிராகரிக்கப் பட்டு விடுகின்றன. ரசிகர்கள் தூக்கி வைத்து கொண்டாடும் படங்கள் விமர்சகர்களால் தூற்றப்ப்படுகின்றன. இந்த இடைவெளி ஏன் ? மாற்று சினிமாவும் இந்த விமர்சனங்களும் ஏன் மக்களை விட்டு இவ்வளவு விலகி இருக்கின்றன? இந்த இரு துருவங்களும் இணையவே முடியாதா என்றால், நிச்சயம் முடியும். ஒரு வெகுசன சினிமா மக்களுக்கு தரும் அதே கொண்டாட்ட உணர்வை, ரசிப்புத்தளத்தை, கோலாகலத்தை, மாற்று சினிமாக்களும் நிச்சயம் தர முடியும். தர வேண்டும். இந்த இரண்டு எதிர் துருவங்களும் ஒரு புள்ளியில் நிச்சயம் இணையும். அந்த புள்ளியில் மாற்று சினிமாக்களும் வெகுசன சினிமாக்களாக அடையாளம் பெற்று மக்கள் வாழ்வில் கலக்கும்.

அந்த புள்ளியை நோக்கிதான் நான் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறேன். அதைத் தொடுவது அதி கடினம் என்பதையும் உணர்ந்தே இருக்கிறேன். ஆனால் அது தொட முடியாததல்ல. விமர்சகர்களும் உச்சி முகர்ந்து கொண்டாடும், ரசிகர்களும் தூக்கி வைத்து கொண்டாடும், பாக்ஸ் ஆபிஸ் எனப்படும் வணிகமும் கொண்டாடும், ஒரு படம் நிச்சயம் வர முடியும். சில திரைக்கதைகளால், படங்களால் இந்த இடைவெளியை நிச்சயம் நிரப்ப முடியும். அந்த திரைக்கதைகளை, படங்களைத்தான் எடுக்க விரும்புகிறேன். இந்த இடைவெளிகளை இணைக்கும் புள்ளியில் தான் இயங்க விரும்புகிறேன். இயங்குவேன். இயங்க முற்பட்டுள்ளேன். திரைக்கதைகளை எழுதிக் கொண்டிருக்கிறேன்.
21. எதிர்கால இலக்கு?

மக்களை விட்டு விலகாமல், மக்களுக்கான படங்களை, மக்கள கொண்டாடும் வகையில் எடுக்க வேண்டும். நிச்சயம் கலைச் சேவை மட்டும் செய்யாமல் களச் சேவையும் செய்ய வேண்டும். இப்போதுள்ள மொத்த கோபங்களையும் அழகான மொழியில், திரையில் மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும். அதற்கான தீர்வுகளை முன்னெடுத்து அதை நோக்கி உழைக்க வேண்டும்.