கேரளத் திரைப்பட விழா - அனுபவங்கள்

திரைப்படங்கள் என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமே என்பது ஒரு பொதுவான கருத்து. மக்களின் அன்றாட இறுக்கமான வாழ்க்கைக்கு நடுவில் திரைப்படங்கள் அவர்களின் சோர்வையும், சலிப்பையும் போக்கும் ஒரு மருந்தாகவே பார்க்கப்படுகிறது. அதுவும் ஒரு விதத்தில் உண்மைதான். இரண்டரை மணி நேரம் படத்தை பார்த்தோமா, சிரித்து மகிழ்ந்தோமா என்பதே அவற்றை எதிகொள்ளும் முறையாக நாம் பழக்கப்படுத்திக் கொண்டுள்ளோம். இதனால் நம்மூரில் எடுக்கப்படும் திரைப்படங்களிலும் அவ்விதியே கையாளுப்படுகின்றன. திரையரங்கில் படம் பார்ப்பவர்களை குதூகலப்படுத்த வேண்டும் என்பதே பெரும்பாலான திரைப்படங்களின் நோக்கமாக இருந்து வருகிறது. ஆனால் தற்போதைய நிலையில், திரையரங்குகளையும் தாண்டி ஒரு கைப்பேசிக்குள் வைத்து திரைப்படங்களை பார்க்கும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது.
இப்படியிருக்க திரைப்படங்கள் வெறும் பொழுதுபோக்கல்ல, அவை அதையும் தாண்டி நம் வாழ்வோடு ஒன்றும் ஓர் அனுபவம் என்று எண்ணக்கூடிய ஒரு வகை பார்வையாளர்கள் நம்மிடையே இருந்து வருகிறார்கள். வெறும் ஆடல், பாடல், நகைச்சுவை போன்றது மட்டுமல்ல திரைப்படம், அவை நம் ரசனையை மேம்படுத்தி, நம்மை வேறொரு நிலைக்குக் கொண்டு செல்லும் ஒரு தியானம் போன்றது என்பது அவ்வகையான பார்வையாளர்களின் பொதுவான கருத்து. அவர்கள், உலகின் வெவ்வேறு நாட்டின் மனிதர்களையும், அவர்களின் அன்றாட வாழ்க்கை முறையையும், அரசியலையும் நமக்கு எடுத்துக்காட்டும் வகையிலான திரைப்படைங்களை தேடித்தேடிக் காணும் ஒரு ரசனை உடையவர்கள். எத்தனை ஆண்டுகள் கழித்துப் பார்த்தாலும் நமக்களித்த உணர்வை அதே அளவு மீண்டும் நம்முள் தரக்கூடிய தாக்கம் கொண்டது அந்த படங்கள். அவ்வகையான திரைப்படங்களைத்தான் உலகசினிமா என குறிப்பிடப்படுகின்றன.

அவ்வகையான படங்களைப்பார்க்க அதன் ரசிகர்களுக்கு இருக்கும் ஒரே வழி இணையதளம். இணையத்தில் நேரடியாகவோ, அல்லது தரவிறக்கம் செய்தோ அவ்வகையான படங்களை முன்பை சுலபமாகவே இப்போதெல்லாம் பார்க்க முடிகிறது. இவற்றை பார்ப்பது மட்டுமல்லாமல் தன் நண்பர்களுக்கும், மற்றவர்களுக்கும் இவர்களால் பகிரப்படுவதால், இவ்வகையான படங்களுக்கும் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர். எளிமையான கதையோடும், உயிரோட்டமான திரைக்கதை, கதாப்பாத்திரங்கள் என அனைத்தும் இருக்கும் இவ்வகையான படங்களை பார்க்கையில், அதுவரை தான் பார்த்து வந்த பொழுதுபோக்குக்கான திரைப்படங்கள் எவ்வளவு பின்தங்கி இருக்கிறது, இவ்வகையான படங்கள் தங்கள் ரசனையை எந்த அளவு மேம்படுத்துகிறது என்பதை அவர்களால் உணரமுடிகிறது.

சரி. இப்படியிருக்க, பொழுதுபோக்குக்கான திரைப்படங்களை எப்போதும் திரையரங்குகளில் நம்மால் பார்க்கமுடிகிறபோது, இவ்வகையான உலகசினிமாக்களையும் திரையரங்குகளில் பார்க்கக் அந்த குறிப்பிட்ட ரசிகர்களுக்கும் ஆர்வம் இருக்குமல்லவா? அப்படியானால் அம்மாதிரியான படங்களை வெண்திரையில் பார்க்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் எப்படி இருக்கும்? தனக்கு பிடித்த இயக்குனர்களின் படங்களை, தான் விரும்பிப்பார்க்கும் குறிப்பிட்ட அயல்நாட்டுப் படங்களை திரையரங்கில் அவர்களைப்போன்ற ஏராளமான ரசிகர்களுடன் பார்க்கும்படியாக அமைந்தால் எவ்வளவு உற்சாகமாக இருக்கும்? அதற்க்காகத்தான் நடத்தப்படுகிறது சர்வதேச திரைப்படவிழாக்கள்.

முன்பெல்லாம் திரைப்பட விழாக்கள் சில முக்கிய நகரங்களில் மட்டுமே நடத்தப்பட்டு வந்தது. ஆனால் இன்றைய நிலையில், எப்படி உலகசினிமாக்களுக்கு ரசிகர்கள் அதிகரிக்கிறார்களோ, அதுபோல அவர்களுக்காக நடத்தப்படும் திரைப்படவிழாக்களும் அதிகரித்து வருகின்றன. பெருநகரம் மட்டுமல்லாது, ஒவ்வொரு ஊர்களிலும் நடத்தப்படும் நிலை அதிகரித்து வருகின்றன. அவ்வகையில், என் தனிப்பட்ட விருப்பமாக நான் பரிந்துரைப்பது திருவனந்தபுரத்தில் 19 வருடங்களாக நடத்தப்பட்டு வரும் சர்வதேச கேரளத் திரைப்படவிழா (IFFK - International Film Festival of Kerala).

சென்ற வருடம் 18வது சர்வதேச கேரளத் திரைப்பட விழாதான் (IFFK - International Film Festival of Kerala) எனக்கு திரைப்பட விழாவிற்கான முதல் அனுபவம். அதற்கு முன் கோவையில் சர்வதேச ஐரோப்பிய திரைப்பட விழா எந்த பெரிதான ஆடம்பரமும் இல்லாமல் KCT குமரகுரு பொறியியல் கல்லூரியில் நடந்தது. அதில் ஒரு நாள் இரண்டு படங்கள் என்ற கணக்கில், ஏழு நாட்கள் 14 படங்களை பார்க்கும் அருமையான சந்தர்ப்பம் அமைந்தது. அதில் தொற்றிக்கொண்ட ஆர்வம்தான் எந்த அறிமுகமும் இல்லாமல் என்னை கேரளத் திரைப்பட விழாவில் கலந்துகொள்ள திருவனந்தபுரம் வரை தனியே இழுத்துச் சென்றது.

யாரையுமே தெரியாத திருவனந்தபுரத்தில் என்னை ஒவ்வொரு வருடமும் வரவேற்பது IFFK என்ற பெரிய பேனர்தான். அதுவே என்னை அங்கிருந்த ஏழு நாட்களும் வழிநடத்தியது என்றே சொல்வேன். தங்குவதற்கு தியேட்டரின் அருகிலேயே அறைகளை நம்மால் புக் செய்துகொள்ள முடிகிறது. திரைப்படவிழா நடத்தப்படும் அனைத்து திரையரங்குகளும் ஒன்றுக்கொன்று அருகில், நடக்கும் தூரத்தில் தான் அமைந்திருக்கிறது.

கேரளத் திரைப்பட விழாவிற்கான குறிப்பிடத்தக்க சிறப்பு என்னவென்றால் கேரள அரசாங்கமே இதை எடுத்து நடத்துவதுதான். இதனால் ஒவ்வொரு ஆண்டும் அதற்கான போதுமான பொருட்செலவில் சிறப்பான முறையில் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம், முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் தொடங்கும் இத்திரைப்படவிழா, தொடர்ந்து 8 நாட்கள் நடைபெருகின்றன. சர்வதேச அளவில் கிட்டத்தட்ட 180 படங்களை தேர்வு செய்து திரையிடுகிறார்கள். இதற்காகவே பிரத்யேகமாக 11 சொகுசுத் திரையங்குகளை தேர்ந்தெடுத்து, ஒரு நாளைக்கு 5 காட்சிகள் என்ற கணக்கில் 11 திரையரங்கங்களிலும் 8 நாட்கள் ஐந்தைந்து காட்சிகளில் திரையிடப்படுகின்றன.

ஒரு திரைப்பட ரசிகனுக்கு திகட்ட, திகட்ட திரையனுபவம் கிடைக்குமேயானால் அது திரைப்பட விழாவில்தான். வழக்கம்போல இந்த ஆண்டும் சிறப்பாக நடைபெற்ற கேரள திரைப்படவிழாவில் என்னால் 27 படங்களை பார்க்க முடிந்தது. எதை பார்ப்பது, எதை விடுவது என்று பல நேரங்களில் குழம்பவைக்கும் அளவுக்கு அத்தனை அருமையான திரைப்படங்கள்.

World Cinema பிரிவில் இந்த ஆண்டு வெளியான உலக சினிமாக்களையும், Country Focus பிரிவில் துருக்கி (Turkey) நாட்டின் முக்கியமான படங்களையும், French Connection பிரிவில் இந்த ஆண்டு வெளியான பிரெஞ்சு படங்களும், Chinese Films பிரிவில் இந்த ஆண்டு வெளியான சீனப் படங்களும், International Competition Films என்ற பிரிவில் அந்த ஆண்டில் போட்டியிடும் சர்வதேச திரைப்படங்களும், Contemperary Masters in Focus என்ற பிரிவில் வெவ்வேறு நாட்டின் முக்கிய மூன்று இயக்குனர்களின் படங்களும், Retrospective பிரிவில் இரண்டு பெரும் திரைப்பட மேதைகளின் படங்களும், LTA Film (Life Time Achievement) பிரிவில் அந்த ஆண்டு IFFK-வால் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்படும் ஒரு முக்கிய இயக்குனரின் படமும், Jury Films பிரிவில் அந்த ஆண்டின் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் சில முக்கிய இயக்குனர்களின் படமும், Indian Cinema Now என்ற பிரிவில் இந்த ஆண்டில் வெளியான குறிப்பிடத்தக்க சில இந்தியப் படங்களும், Malayalam Cinema Today என்ற பிரிவில் இந்த ஆண்டில் வெளியான குறிப்பிடத்தக்க மலையாளப் படங்களும், என்று மொத்தமாக 11 பிரிவின் கீழ் ஏறக்குறைய 180 படங்களை திரையிட்டனர்.
எனக்கு பிடித்த இயக்குனர்களின் புதிய படங்கள், கேன்ஸ், டொரண்டொ என்று பல பிரபல சர்வதேச திரைப்பட விழாக்களில் அங்கீகரிக்கப்பட்ட படங்கள் என்று பட்டியல் கொட்டிக்கிடந்தது. தேர்ந்தெடுத்துப் பார்த்த 27 படங்களில், இரண்டு படங்கள் மட்டுமே எதிர்பார்த்த அளவு இல்லாமல் ஏமாற்றம் அளித்தது. மற்ற 25 படங்களும் ஒவ்வொரு விதத்தில் உற்சாகப்படுத்தியது.

திரைப்பட விழாவைப் பொருத்தவரையில் ஆஸ்கார் விருதுகள் என்பதை விட, கேன்ஸ், டொராண்டோ போன்ற திரைப்பட விழாக்கள், அவற்றின் விருதுகள் என்பதற்கு கூடுதல் மதிப்புண்டு என்று சொல்லலாம். அதுவும் கேரள விழாவில் அதை முழுமையாக நம்மால் உணரமுடியும். அந்த வகையில் கேன்ஸ்ஸின் உயரிய விருதை பெற்ற தி விண்டர் ஸ்லீப் (The Winter Sleep) படத்திற்கு இம்முறை கூட்டம் அலைமோதியது. இதனால் 11.30 மணி காட்சிக்கு 9 மணிக்கெல்லாம் க்யூவில் நிற்க ஆரம்பித்துவிட்டனர். நானும் ஒரு 9.30 போல நின்றுவிட்டேன். படத்தில் நீளமோ 3.15 மணி நேரம். க்யூவில் நிற்கும் நேரத்தையும் சேர்த்துக்கொண்டால் அந்த படத்திற்கு மட்டும் சுமார் ஐந்தரை முதல் ஆறு மணி நேரத்தை செழவழிக்க வேண்டியிருந்தது. இதனால் காலை 9 மணிக்கு பார்க்க வேண்டிய படத்தையும், மதியம் 2 மணிக்கு பார்க்க வேண்டிய படத்தையும் தவறவிட வேண்டியிருந்தது. ஆனால் அவ்வளவு அழகான ஒரு ஓவியம் போன்ற திரைப்படத்தை வெண்திரையில் பார்க்க இரண்டு படங்களை தவறவிடுவதில் தவறே இல்லை என்று சொல்வேன். இன்னும் மறக்க முடியாத ஒரு உன்னதமான அனுபவம் அது.

கூடுதல் சிறப்பாக படத்தின் இயக்குனர் நியூரி பில்கே ஷிலான் (Nuri Bilge Ceylan) அவர்களையும் நேரில் காண முடிந்தது. அவருக்கு இந்தியா வருகை இதுவே முதன்முறை. கேரளத் திரைப்பட விழாவில் அவர் படத்தை அறிமுகப்படுத்தவே அழைப்பை ஏற்று துருக்கியிலிருந்து வந்திருப்பதாக அறிவித்தனர். எப்பேற்பட்ட பாக்கியவான்கள் நாங்கள் என்று உள்ளுக்குள் பூரித்துக்கொண்டேன். அவரும் எங்களுடன் சேர்ந்து ஒரு மணிநேரம் படத்தைப் பார்த்துவிட்டுச் சென்றார்.

அதைத்தவிர முக்கியமான படங்களாக ரஷ்ய இயக்குனர் Andrey Zvyagintsev-ன் Leviathan (2014), Godard-ன் Goodbye to Language 3D (2014), Xavier Dolan-ன் Mommy (2014), Mohsen Makhmalbaf-ன் The President (2014), திரைப்பட மேதை Buster Keaton-ன் Seven Chances (2014), மற்றும் பல நாடுகளின் திரைப்படங்களை வெவ்வேறு பிரிவில் தேர்ந்தெடுத்து பார்த்தேன். போன வருடத்தை விட இந்த வருடம் திரையிடப்பட்ட படங்களின் தேர்வு தரமாக இருந்ததாக என்னால் உணர முடிந்தது. அங்கு நான் கலந்துரையாடிய சில வருகையாளர்களும் அதையே உணர்வதாகக் கூறினர்.

போன வருட விழாவில் சில விஷயங்கள் என்னை ஆச்சர்யப் படுத்தியது. அதில் ஒன்று, பங்கேற்பாளர்களுக்கு இலவச ஆட்டோ. திருவனந்தபுரத்தைத் தாண்டி வெளியூரில் இருந்து வருபவர்களுக்கு திரையரங்குகளை தேடியலையும் சிரமம் இல்லாதவாறு இலவச ஆட்டோக்களை ஏற்பாடு செய்திருந்தனர். இதனால் அலைச்சல் மட்டுமின்றி நடக்கும் தூரமும், நேரமும் மிச்சமானது. இன்னொரு சிறப்பம்சம் SMS Alert. திரைப்படங்களை திரையிடுவதில் எதாவது மாற்றம் ஏற்பட்டாலோ, அல்லது எந்த திரைப்படத்திற்காவது திரையிடல் கணக்கை அதிகரித்தாலோ நமக்கு SMS குறுஞ்செய்தி மூலம் உடனே தெரியப்படுத்துவர். இதனாலும் அலைச்சலும், நேரமும் மிச்சமானது.

இதை இங்கு சொல்வதற்கான காரணம், இந்த முறை அந்த இரண்டு வசதிகளும் இல்லை. போன வருடமே எல்லா முக்கிய திரையரங்குகளுக்கும் போகும் வழி தெரிந்துவிட்டதால், என்னால் ஓரளவு சமாளிக்க முடிந்தது. ஆனால் முதன்முறை பங்கேற்ப்பவர்களுக்கு இவ்வகையான மாற்றங்கள் கண்டிப்பாக அலைச்சலை ஏற்படுத்தியிருக்கும் என்றே தோன்றுகிறது. அதுமட்டுமின்றி, இந்த முறை SMS அலெர்ட்டும் இல்லாததால் எத்தனை படங்களுக்கு காட்சிகள் அதிகப்படுத்தினார்கள், அல்லது எத்தனை படங்களுக்கு திரையரங்குகள் மாற்றப்பட்டன என்பதும் என்னால் தெரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் நான் பார்த்த அனைத்து படங்களும் சரியான நேரத்தில் எந்த மாற்றமுமின்றி திரையிடப்பட்டது.

கடைசி நாளன்று முக்கிய திரையரங்குகளில் ஒன்றான கைரளி தியேட்டரில் வரிசை கட்டி நின்றிருந்தனர். அட்டவணையை (Schedule Sheet) பொறுத்த வரையில் கடைசி நாளென்பதால் கைரளியில் இரண்டு காட்சி மட்டுமே. என்னவென்று விசாரித்ததில், தி ப்ரெசிடெண்ட் (The President) படத்திற்கு கடைசியாக ஒரு காட்சியை அதிகரித்திருப்பதாகக் கூறினர். இதுபோன்ற சில மாற்றங்களை SMS Alert இல்லாததால் எளிதில் அறிந்துகொள்ள முடியவில்லை.



ஆனால் இதையும் தாண்டி இந்த ஆண்டின் திரைப்பட விழாவை என்னால் முழுமையாகக் கொண்டாட முடிந்தது. பல படங்கள் வாழ்க்கையின் பிரதிபலிப்பாக இருக்கையில், சில படங்கள் அந்நாட்டின் அரசியலையும், கலாச்சாரத்தையும், ஒடுக்குமுறைகளையும் பகிரங்கமாக திரையிட்டுக் காட்டியது. குறிப்பாக Makhmalbaf-ன் 'தி ப்ரெசிடெண்ட்'-ல், ஒரு சர்வாதிகார ஆட்சிபுரிந்த தலைவனின் பதவிக்காலம் முடிந்த அடுத்த நாள், தன் பேரனுடன் அவனுக்கு ஏற்படும் ஒரு எதிர்பாராத அனுபவமாக திரைக்கதை சித்தரிக்கப்பட்டிருந்தன. குறிப்பிட்ட அந்நாட்டின் தலைவர் என்றில்லாமல், கொடுங்கோல் ஆட்சிபுரிந்த நாமறிந்த பல சர்வாதிகாரிகள் நம் நினைவுக்கு வந்துபோகும் விதம் அட்டகாசமாக அரசியலை பேசியது அத்திரைப்படம்.

அதேபோல் Abderrahmane Sissako-வின் மௌரீஷியப் படமான Timbuktu-வில், மதத்தை பின்பற்றி, ஒழுங்குமுறையை கடைபிடிக்க வேண்டும் என்ற நோக்கோடு திரியும் மதவாதிகளையும், அவர்களால் ஒடுக்கப்படும் மக்களின் அன்றாட வாழ்வையும் பொட்டில் அறைந்தாற்போல் சித்தரிக்கபட்டிருந்தது. புகை பிடிப்பது, மது அருந்துவது என்று தொடங்கி, இசை, பாடல், விளையாட்டு என எல்லாமே அம்மதத்திற்கு எதிரானது என்றும், அதை மீறினால் கடுமையாக தண்டிக்கப்படுவீர் என்றும் தினசரி வீதிகளில் தவறாமல் பிரச்சாரம் செய்யும் அளவுக்கு அம்மக்கள் மீது காட்டப்படும் ஒடுக்குமுறையை அசலாக பதிவு செய்திருந்தார் இயக்குனர் சிஸாக்கோ.


இதுபோல் பல படங்கள் அந்நாட்டின் வழக்கங்களையும், வாழ்க்கையையும் அருமையாக சித்தரித்திருந்தது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் மறக்க முடியாத அனுபவமாகவே அமைந்தது. இதனாலேயே இந்த ஆண்டின் திரைப்படவிழா போன வருடத்தை விட சிறப்பாக இருந்ததென்று என்னால் சொல்லமுடியும்.

கடைசி நாளன்று திரையிட்ட படங்களில் இருந்து தேர்வு செய்து விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த மலையாளப் படம் (Best Malayalam Film), சிறந்த ஆசியப் படம் (Best Asian Film), சிறந்த சர்வதேசப் படம் (Best International Film), பார்வையாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த படம் (The Audience Poll Award), சிறந்த அறிமுக இயக்குனர் (RajathaChakoram Award for The Best Debut Director), சிறந்த இயக்குனர் (RajathaChakoram Award for The Best Director), சிறந்த படம் (SuwarnaChakoram Award for The Best Film) என்ற பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன.

சிறந்த வாழ்நாள் சாதனையாளர் விருது (Life Time Achievement Award) முக்கிய இத்தாலிய இயக்குனரான Marco Bellocchio-வுக்கு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. இதற்கு முந்தைய ஆண்டுகளில் இவ்விருது ஸ்பானிஷ் இயக்குனரான Carlos Saura, ஜெர்மனிய இயக்குனரான Werner Herzog, நம் முக்கிய வங்காள இயக்குனரான Mrinal Sen போன்ற மாமேதைகளுக்கு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது. இவ்விருதிற்காகவே இவர்களை திருவனந்தபுரத்திற்கு அழைத்து வந்து கௌரவிக்கப்படுவது கேரளத் திரைப்பட விழாவிற்கான கூடுதல் சிறப்பாகும்.


இப்படியாக இந்த ஆண்டின் எனது திரைப்பட விழா அனுபவம் சிறப்பாக நிறைவுற்றது. முடித்து கிளம்பும்போது எதையோ விட்டு செல்வதைப் போல உள்ளுக்குள் உறுத்தியது. இன்னும் ஒரு இரண்டு நாட்கள் சேர்த்து விழாவை நடத்தக் கூடாதா என்று ஒரு குழந்தை போல் உள்ளுக்குள் மனம் ஏங்கியது. திரைப்படங்களை பார்ப்பதே வாழ்வின் ஒரு முக்கிய பங்காக என்னும் என்னைப்போன்ற ரசிகர்களுக்கு நிச்சயம் அவ்வுணர்வு இருந்திருக்கும். அந்த ஏக்கத்துடனே அடுத்த ஆண்டிற்கான திரைப்பட விழாவிற்காக என்னை தயார் படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் எண்ணிக்கொண்டேன். அதுவும் அடுத்த ஆண்டு IFFK 20வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதால், விழா இன்னும் சிறப்பாகவும், பிரம்மாண்டமாகவும் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திரைப்படங்களின் தேர்வும், இயக்குனர்களின் தேர்வும் இந்த ஆண்டை விட கூடுதல் சிறப்பாகவே அடுத்த ஆண்டு இருக்கும் என தோன்றுகிறது. பொருத்திருந்து பார்ப்போம்.

ஒரு திரைப்பட ரசிகனாக, நல்ல திரைப்படங்களை பார்ப்பதே முக்கியம் என்பவராக நீங்கள் இருந்தால் கண்டிப்பாக வாழ்வில் ஒரு முறையாவது திரைப்பட விழா என்ற சூழழை அனுபவிக்க வேண்டும். அதிலும் கேரளத் திரைப்பட விழா என் தனிப்பட்ட பரிந்துரை. நமக்கான திரைப்படங்களை, நம் வாழ்வின் பிரதிபலிப்பை, நம்மைப் போன்ற ஆயிரக்கானவர்களுடன் சேர்ந்து ரசித்துப் பார்க்க ஓர் அழகான அனுபவத்தை விட என்ன வேண்டும் நம் வாழ்வில்.