சினிமாவும் இலக்கியமும் - சாஹித்ய அகாடெமி கருத்தரங்கு

"தமிழிலக்கியம் என்பதை சங்ககாலம் முதல் நவீன இலக்கியம் வரை எடுத்துக்கொள்ளலாம். தமிழிலக்கியம் தனிமனிதன் மீது எழுப்பிய தாக்கம், தமிழ் சங்கப்பாடல்கள் திரையில் தனி மனிதன் மீது ஏற்படுத்திய தாக்கம் என்ற இரண்டும் இருவகையில் வேறுபட்டது. தமிழ்த்திரையில் இலக்கியத்தோடு நெருங்கிய படைப்பாளி இல்லை. எழுத்தாளர்களுக்கு ஒரு வேண்டுகோள். திரைமொழியை நீங்கள் கற்கக் கூடாதா? குறை சொல்வதை நிறுத்தி விட்டு திரைக்கு வாருங்கள்.

எழுதப்பட்ட சங்க இலக்கியமாயினும் சரி , சிறுகதை, நாவல் ஆகிய வடிவங்களை உள்ளடக்கிய நவீன இலக்கியமாயினும் சரி. மலையாளத்தை ஒப்பிடும்போது, தமிழில் திரைக்கு வந்த இலக்கியம் குறைவு. இங்கு இலக்கியத்தை அஸ்திவாரமாகக் கருதவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.சினிமாவோடு பிணைத்துக் கொண்ட தமிழ்ப்படைப்பாளிகளும் குறைவே. கேரளத்திலும் , வங்கத்திலும் நாவல்கள் திரைப்படமாக நிறைய வந்துள்ளன. விளம்பர நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கும் போது பொழுதுபோக்கிற்காகப்படித்த விபூதிபூஷண் பந்தோபாத்யாய எழுதிய நாவல் ஈர்க்க, அதை இத்தாலிய நியோ-ரியலிசப் பாணியில் படமாக்கினார் சத்யஜித் ராய். "பல குறைபாடுகள் திரையாக்கியதில் உண்டு; எனது எழுத்தை மாற்றி விட்டார் ராய்." என்று சொன்னார் பந்தோபாத்யாய. எழுத்திலிருந்து சினிமாவுக்கு கதையை நகர்த்தும்போது ஆத்மா என்னவாக இருக்கிறது என்பதுதான் முக்கியம். எழுத்தாளனின் தமிழ் ஆளுமையோ, வாக்கிய அமைப்போ எனக்கு உதவாது. அவனது ஆத்மாவைத்தான் படமாக்குகிறேன்.ஆத்மாவுக்குப் பொருத்தமான படைப்பாளியாக இயங்குகிறேன். தேவைப்படுவதை எடுத்துக் கொண்டு, தேவையற்றதை விட்டுவிடுகிறேன்....ஆத்மா முற்பிறப்பில் சிறுகதையாக உள்ளது...அடுத்த பிறப்பில் படமாக இருக்கிறது என்று சொன்னால் புரியலாம்தான். குடும்பத்தங்க நகையான காசுமாலையை உருக்கி ஒட்டியாணமாக மாற்றுவது போல...பரம்பரை சிறுகதை என்றால், நவீன மோஸ்தர் திரைப்படமாகச் சொல்லலாம். இயக்குனர்கள் எழுத்தாளர்களிடமிருந்து மாறுபடுகிறார்கள். எதை மாற்றலாம் என்று யோசிக்கிறான் இயக்குனர்.வாக்கிய அமைப்புகளுக்குள் வடிவமைக்கப்பட்டிருக்கும் கதாபாத்திரம், கதைக்களம், கூட்டாக கோர்வையாக சொல்லவந்த சமாசாரம் திரையில் உருப்பெருவதுதான் ஆத்மா.
என்னுடைய திரைப்படப்பள்ளியில் நவீனத் தமிழிலக்கியம் ஒரு கட்டாயப்பாடம். மாணவன் ஒரு சிறுகதையை படித்தே ஆகவேண்டும். சுருக்கமாக திரைக்கதையாக அதைச் சொல்லவேண்டும் என்பது அங்கு நடைமுறை.சினிமா மொழியைக் கற்றுக் கொள்ளுங்கள்; அது தமிழ் மொழியை விட சுலபம்...குறைந்த இலக்கணமே கொண்டது...மீதி அவனது திறமை...அதாவது கற்பனைத்திறன்.

எழுத்து எப்படிச் செயல்படுகிறது? வார்த்தை அர்த்தத்துடன் வாக்கியம் பத்திகள் கொண்ட அழகான வடிவமாக ஆவது இலக்கியம். சினிமாவில் 'ஷாட்' என்பதுதான் அடிப்படை அலகு. இலக்கியத்தில் ஒரு வார்த்தைக்கு பல அர்த்தம் மாறுவது போல இயக்குனர் திரையில் ஒரு 'ஷாட்டுக்கு' பல அம்சங்களைக் கோர்க்கிறான்.

சங்க இலக்கியங்கள் 1000 ஆண்டுகள் முன்பே உச்சம் தொட்டவை. அழகியலுணர்வுடன் கலைகள், கட்டிடம்,இசை என்று பலவற்றில் அபாரமாகத் தேர்ந்தவர்கள் தமிழ்மக்கள். தமிழிலக்கியம்-தமிழ் சினிமாவின் மீது ஒருவழியாக, சாகித்திய அகாதெமி தனது பார்வையைத் திருப்பியுள்ளது ! இன்றும் பள்ளி,கல்லூரிகளில் சினிமா 'கெட்டவார்த்தை'யாகவே பார்க்கப்படுகிறது. சினிமாக் கலைஞனுக்கு வீடு கிடைக்காது...பொண்ணும் யாரும் கொடுக்க மாட்டான்!... பள்ளியில் சினிமா ரசனை ஒரு பாடமாக இல்லை! சினிமா மூலம் அரசுகட்டிலில் அமர்ந்தவர்கள் சினிமாவுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் விட்டுவிட்டார்கள் என்பது அவலம். எல்லோரும் சினிமா மொழியைக் கற்றுக் கொள்ளவேண்டும்" என்ற திரைப்பட இயக்குனர் பாலு மகேந்திரா மையக்கருத்துரை வழங்க அந்த அரங்கம் களைகட்டத் தொடங்கியது.

இந்திய சினிமா நூற்றாண்டு விழாவை திரை-அரசுப் பிரமுகர்கள் பங்கேற்புடன் சென்னை திரைப்படத் தயாரிப்பாளர்கள் கோலாகலமாக நடத்திக் கொண்டிருந்தபோது, சென்னை- எழும்பூர் இக்சா மையத்தில் சாகித்திய அகாதெமி அரவமில்லாமல் "தமிழ்த் திரைப்படத்தில் இலக்கியத்தின் தாக்கம்" என்பது குறித்த பல அமர்வுகள் கொண்ட விவாதஅரங்கு ஒன்றை இவ்வாறாக செப்டம்பர் 20, 21 இருநாட்கள் நடத்தி முடித்தது.
"வாழ்க்கை முறையில் சினிமா தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்டது. தமிழ் சினிமாவின் போக்கு பற்றிய புரிதல் தேவை. புராணங்களிலிருந்தும், இதிகாசங்களிலிருந்தும், இலக்கியத்திலிருந்தும் சினிமாவுக்குப் பயன்படுத்தியிருக்கிறோம்.சினிமா தனி ஊடகம். கலை இலக்கியத்தில் பல போக்குகள் உண்டு. கதைகளும் , நாடகங்களும் சினிமாவாக மாறியுள்ளன. ஷேக்ஸ்பியரின் ஜூலியஸ் சீசர், ஹேம்லட் அப்படியே படமாகின. விக்டர் ஹ்யூகோவின் படைப்பு அப்படியே "ஏழை படும் பாடு"என தமிழ்த்திரைப்படமாகியது. எழுதப்பட்ட அதே பாணியில் "தியாகபூமி" படம்வெளிவந்தது. குண்டலகேசியும் மனோன்மணியமும் நாடகத்திலிருந்து திரைப்படமாக மாறின. நாடகத்துக்கான வரையறை சினிமாவுக்கு இல்லை.

எழுத்தாளன் அவனது படைப்பை நாலு சுவற்றுக்குள்ளிருந்து எழுதி விடுகிறான். வாசகன் பற்றி, பிறகே சிந்திக்கிறான்...சினிமா அப்படியல்ல; சொல்லவேண்டியதை காட்சி வடிவத்தில் சொல்கிறது சினிமா. உலகத்தரம் வாய்ந்த படங்கள் அநேகம் வெளிவந்துள்ளன.
எழுத்தாளனின் மொழிப்புலமையும், வார்த்தை வளமும் கதை வளர்ப்புக்குத் தேவை. இந்திய சினிமா வரலாறு மலையாளத்தில் அடூர் கோபாலகிருஷ்ணன், வங்கத்தில் சத்யஜித் ராய் என சிறந்த இயக்குனர்களைப்பதிவு செய்துள்ளது. சேதுமாதவன், கிருஷ்ணன்-பஞ்சு ஆகிய இயக்குனர்கள் இலக்கியங்களைப்படமாக்கினர். சீர்திருத்தக் கருத்து முதல் சோஷலிசக் கருத்து வரை பிரதிபலித்து கலைத்தரத்துடன் பல படைப்புகளை சினிமா உருவாக்கியுள்ளது. ஆனால் பேசப்பட்டது எத்தனை என்ற கேள்வியும் எழுகிறது இலக்கியம் சினிமாவாக மாறும்போது உள்ள தாக்கம் வேறொரு தளத்தில் நிகழ்கிறது. 'அடாப்ஷன்' என்று ஆங்கிலத்தில் சொல்வதைத் தழுவல் என்கிறோம். தழுவப்படுவது தெரியாமல் அப்படியே எடுப்பதுதான் சினிமா! இலக்கியத்தால் சினிமா, சினிமாவால் இலக்கியம் இயக்குகின்றன. சினிமாவில் சுதந்திரம், விசாலமான வெளி இவை இருக்கின்றன. சுயவிமரிசனமாக இதைப் பார்க்கவேண்டும். வாழ்க்கையில் நாம் எங்கு நிற்கிறோம் என்ற தெளிவுடன் சினிமாவை அணுக வேண்டும். உலகப்படங்கள் தரமாக நிற்கின்றன" என்று தொடர்ந்தார் மூத்த தமிழ்ப்படைப்பாளர் நீல.பத்மநாபன்.

"சொல்லும் சுருளும்: படைப்பனுபவங்கள்" என்ற முதல் அமர்வில் தலைமை வகித்த மு.இராமசாமி "இலக்கிய வாசிப்பு படைப்பாளியை மெருகுபடுத்துகிறது . இலக்கியம் கைபிடித்து திரைப்படம் நடக்கிறது" என்று குறிப்பிட்டார்.

"ஊருக்கு நூறு பேர்" என்ற ஜெயகாந்தனின் நாவல் படமாகிய விதம் குறித்து இயக்குனர் லெனின் பேசும்போது ஜெயகாந்தன் அவரையே திரைக்கதையை எழுதிக்கொள்ள அனுமதித்தது பற்றிய உற்சாகத்தைப் பங்கிட்டுக் கொண்டார்.. சினிமா பற்றிய எந்தவித தொழில்நுட்பஞானம் இல்லாது திரைத்துறையில் நுழைந்த அவரிடம், புணே திரைப்படக்கல்லூரி மாணவர்கள் சினிமாபாடங்கள் எடுக்கும்போது புரியாதது அவரது பேச்சைக் கேட்கும்போது புரிந்ததாகச் சொன்னபோது புளகாங்கிதமடைந்ததைக் குறிப்பிட்டார் 'ஸ்க்ரிப்ட்' என்ற பிரதி அதிமுக்கியமானது. நாவலாசிரியர் எழுதியதை அப்படியே எடுத்தாலே 50 சதம் வெற்றி...எடிடிங் பண்ணுபவருக்கு இலக்கிய அறிவு தேவை என்று கூறி "நாக் -அவுட்" பட அனுபவங்களையும் தொட்டுப் பேசினார். எடிட்டராக இருந்த அவரை இயக்குனர் அந்தஸ்துக்கு தேசிய விருது பெற்ற ஊருக்கு நூறு பேர் உயர்த்தியது; ஆனாலும் படத்தை எத்தனை பேர் பார்த்தார்கள் என்பது பற்றிய தனது வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டார்.

தமிழகத்தில் திரையுலகம் இந்திய சினிமா நூற்றாண்டு கொண்டாடும் தருணத்தில், அதில் முக்கியப்பங்காற்றிய பிரமுகர்களுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.(இதன் எதிரொலியாக, கலைஞர் கருணாநிதிக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டு விட்டதாகத் தமிழ்த் திரையுலகம் அடுத்தநாள் தெரிவித்தது)

"2000 வருட இலக்கியத்தின் சாதனையை 100 ஆண்டில் திரைப்படம் சாதித்து விட்டது " என்ற முகமனுடன் கி.ரா.வின் "கிடை" கதையும், அது "ஒருத்தி" என்ற பெயரில் தன்னால் திரைப்படமானதையும் எழுத்தாளர் அம்ஷன் குமார் விவரித்தார். இலக்கியவாதி முன் திரைப்பட இயக்குனர் கைகட்டி நிற்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை குரோசாவாவும், சத்யஜித் ராயும் உலகளவில் நிரூபித்தனர். இலக்கியவாதியின் ஆன்மாவைத் தக்க வைப்பதுதான் திரைப்பட இயக்குனரின் கடமை. 800 முதல் 1200 பக்கங்கள் கொண்ட தாஸ்தொவ்ஸ்கி, தால்ஸ்தாய் எழுதிய படைப்புகளை, அவர்களின் ஆன்மாவைத் தக்கவைத்துக் கொண்டே, 2 அல்லது 3 மணி நேரத்துக்குள் படமாகக் கொண்டு வருவது எவ்வளவு கடினம்?... ஆங்கில எழுத்தாளர் சார்லஸ் லேம்ப் ஷேக்ஸ்பியரின் நாடகங்களைச் சுருக்கி சிறுகதைகளாக வடித்தார். அதில் ஷேக்ஸ்பிரின் ஆன்மா போய்விட்டதா என்ன? 'மழைக்குக் கூட பள்ளிக்கூடம் ஒதுங்காத' எழுத்தாளர் கி.ரா. அவரது கிடை கதையை மாற்றமுடன் செய்ய எனக்கு எழுத்துபூர்வமாக அனுமதி கொடுத்தார். கரிசல் மண்வாசனை கொண்ட அவரது கதையை உள்வாங்கிக்கொண்டு, சாதிப்பிரச்சினையை தலித் பெண் பார்வை மூலம் காட்டியிருக்கிறேன்.அவரது கதைக்களம் நிகழ்வு 1920 வாக்கில். நான் அதை 1880-பெண்டிங் பிரபு காலகட்டம் என்பதாக மாற்றினேன். "நான் வீடு கட்டினேன்...நீங்களோ வீடுமேல, மாடியே கட்டி விட்டீர்கள்" என்று பெருந்தன்மையாக இந்த மாற்றத்தை அங்கீகரித்தார் என்றார்.

தமிழ்ச்செல்வனின் சிறுகதையான "வெயிலோடு போய்" பூவாக மலர்ந்த கதையை திரைப்பட இயக்குனர் சசி பங்கிட்டுக் கொண்டார். எப்படி அந்தக் கதை தன்னை பாதித்தது என்பதை சக நண்பனிடம் சொல்லி அவனும் அதை அப்படியே உணர்ந்ததுதான் கதையின் வெற்றி என்று குறிப்பிட்டார்,..ருஷ்ய/கிர்கிசிய எழுத்தாளர் சிங்கீஸ் ஐஸ்மாத்தவ் படைப்பான முதல் ஆசிரியன் நாவலும் தனுஷ்கோடி ராமசாமியின் சிறுகதையும் ஏற்படுத்திய தாக்கத்தையும் பூ படத்தில் பல காட்சிகளில் இணைத்ததைப் பகிர்ந்து கொண்டார். சினிமா கேவலமல்ல; திரைக்கதை ஆசிரியர்கள் நிறைய உருவாகவேண்டும் என்ற வேண்டுகோளுடன் முத்தாய்ப்பு வைத்தார்.

ந.முத்துசாமியின் தலைமையில் சொல்லும் சுருளும்-இரண்டாம் அமர்வு தொடர்ந்தது. "எழுத்தாளர் தி.ஜானகிராமனின் மோகமுள் புதினமும் படமும்" என்ற தலைப்பில் தனது அனுபவத்தை இயக்குனர் ஞான.ராஜசேகரன் பகிர்ந்து கொண்டார். நாவல் சினிமாவாகப் பரிணமிக்கும்போது இயக்குனர் சந்திக்கும் பிரச்சினைகளை அடுக்கினார். தமிழில் தி.ஜா. காட்சிப்படுத்தும் அற்புதப்படைப்பாளி; வெற்றிகரமாக பிம்பத்தைக் கொண்டுவரும்திறன் அமையப்பெற்றவர். மோகமுள் படமாக்கும் போது நாவலின் சூக்குமமான விஷயங்கள் பற்றிய அபிப்பிராயங்களை அவருடன் பகிர்ந்து கொண்டதைக் குறிப்பிட்டார் .பாபு-யமுனா-ரங்கண்ணா என அத்தனை பாத்திரங்களும் கொண்ட அந்த நாவல் பல கதை-அடுக்குகள் கொண்டது.

இப்படத்தில் சம்பவங்கள் என்னவோ மிகக்குறைவு ஆனால் 22 இடங்களில் வரும் வசனங்களை 10 ஆகக் குறைத்தது சிரமமான காரியம் ...மிகவும் சிலாகித்த "வேண்டாம் பாபு வேண்டாம்" என்று வரும் வசனத்தைத் தொடர்ந்து "மூழ்கிற கப்பல் மாதிரி நான் இருக்க, நீ என்னுடன் ஒண்டிக்கிடக்க ஆசைப்படுகிறாயா?" என்று எழுத்தாளர் எழுதாத, தனது வசனம் கைதட்டல் வாங்கிக்கொடுத்ததைக் குறிப்பிட்டார். சினிமா துவங்கும்போதே ஓட்டம் தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் இலக்கியம் தனிமனித சிந்தனையைத் தூண்டுகிறது என்று முடித்தார்.

எழுத்தாளர் நீல.பத்மநாபனின் "தலைமுறைகள்" நாவல் "மகிழ்ச்சி" என்ற திரைப்படமான விதத்தை இளம் இயக்குனர் கௌதமன் சிலாகித்துச் சொன்னார். குமரி மாவட்டத்தின் இரணியல் ஊருக்குப்பலமுறை சென்று தலைமுறைகள் 'பாத்திரங்கள் வாழ்ந்த தெருக்களையும், வீடுகளையும் பார்த்து' அனுபவித்ததை உணர்ச்சிகரமாக வெளிப்படுத்தினார்.
இயக்குனர்கள் உரையாற்றும் முன்பாக ஒருத்தி, மோகமுள், மகிழ்ச்சி ஆகிய படங்களிலிருந்து சில தருணங்கள் திரையிடப்பட்டன.

அடுத்த அமர்வில் "இலக்கியப்பாத்திரங்கள் திரைப்படங்களால் சித்தரிக்கப்பட்டவிதம்" குறித்து தியோடர் பாஸ்கரன் உரையாற்றினார் இலக்கியமும், சினிமாவும் முற்றிலும் வேறுபட்ட இரு ஊடகங்கள்.நாவல் வாசகன் வாசித்துவிட்டு வேறு இடம் சென்று விட்டு அமர்ந்து, மீண்டும் தொடரலாம். ஆனால் சினிமாவில் இது முடியாது. வினாடிக்கு 24 பிரேம்கள் ஓடி 'காட்சிப்பிழை' என்பதாகிறது சினிமா. இலக்கியத்தில் வாசகர்கள் கதாபாத்திரங்களை தங்கள் மனதில் உருவாக்கி வைத்துக்கொள்ள முடியும். இரண்டுக்குமான அனுபவம் கூட தனித்தனி.

இயக்கத்தில் வாக்கியத்துக்கு வாக்கியம் திரைப்படுத்துவது ஒருவகை. வார்த்தைகள்,சொற்களை உத்திகள் மூலம் காட்சிப்படிமம் ஆக்குவது இன்னொருமுறை.

பிம்பத்தை எதிர்கொள்ள எழுத்தறிவு தேவை. கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்தல் மிக முக்கியமான அம்சம் என உலகப்படங்களையும், தமிழ்ப்படங்களையும் உதாரணம் காட்டிப்பேசினார்.

அடுத்தநாள் 21 செப்டம்பர் அன்று "மனிதர் எல்லாம் பாத்திரம்" என்ற அமர்வுக்கு எழுத்தாளர் ஜி.திலகவதி ஐ.பி.எஸ் தலைமை வகித்தார். உதிரிப்பூக்கள் அஸ்வினியின் பாத்திரம், தாகூரின் நாவல்கள் ராயினால் படமாக்கப்பட்டது, ஹேம்லெட் "த்ரோன் அப் ப்ளட்" ஆக ஜப்பானிய மண்வாசனையுடன் படமானது, எர்னஸ்ட் ஹெமிங்க்வேயின் நாவல்கள் படமாக்கப்பட்டது தமிழ் நாவல்கள் படமானது என்று அனைத்தையும் பருந்துப்பார்வையாக தனது தலைமை உரையில் பகிர்ந்து கொண்டார் இந்திரா பார்த்தசாரதியின் உச்சிவெயில் புதினப்பாத்திரப் படைப்பு பற்றி நடிகர் சிவகுமார், மோகமுள் புதினப்பாதிரப்படைப்பு பற்றி அபிஷேக் ஆகியோர் தமது சுவையான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

உணவு இடைவேளைக்குப்பின்,"காட்சிப்பிழைதானோ?- படமாகும்போது படைப்பிலக்கியம் சிதைக்கப்படுகிறதா?" என்ற அடுத்த அமர்வு எழுத்தாளர் பொன்னீலன் தலைமையில் நடைபெற்றது. படைப்பாளிகள் நாஞ்சில்நாடன், எஸ்.ராமகிருஷ்ணன், இயக்குனர்கள் பாக்கியராஜ், ஆர். சி.சக்தி ஆகியோர் தமது அனுபவங்களையும், நடைமுறை சாத்தியங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

நிறைவுப்பேருரையை எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி நிகழ்த்தினார். சாகித்திய அகாதெமியின் தமிழ் ஆலோசனைக்குழு உறுப்பினர் எழுத்தாளர் மாலன் அறிமுகவுரையாற்றி சினிமாவாக மாறிய தமிழ்ப்படைப்புகள் பற்றிப்பட்டியிலிட்டு அரிய விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். சாகித்திய அகாதெமி செயலாளர் கே.ஸ்ரீனிவாசராவ் அனைவரையும் வரவேற்றார், தமிழ் ஆலோசனைக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணசாமி நாச்சிமுத்து, பொதுக்குழு உறுப்பினர்கள் இரா. காமராசு, சம்பத் ஆகியோர் வாழ்த்துக்கூறிச் சிறப்பித்தனர். சாகித்திய அகாதெமி சென்னை அலுவலகப் பொறுப்பாளர் அ.சு.இளங்கோவன் ஒருங்கிணைத்துப்பேசி நன்றி கூறினார்.

உலகத் திரைப்பட விழா பார்த்துவிட்டு விவாதங்களில் பங்கேற்று விட்டுத்திரும்பிய சிறப்பான அனுபவ உணர்வைத் தந்தது.