சினிமாவும் இலக்கியமும் - சு. தியடோர் பாஸ்கரன்

சினிமாவுக்கும் இலக்கியத்திற்கும் இருக்கும் ஊடாட்டம் குறித்து பல இடங்களில் ஒரு சொல்லாடல் உருவாகி இருக்கிறது. நாவலை திரைப்படமாக எடுப்பது எப்படி என்ற பொருளைப் பற்றி நாம் சிந்திக்கும் முன், ஒரு விஷயத்தை மனதில் கொள்ள வேண்டும், இரண்டும் முற்றிலும் வேறுபாடான ஊடகம். ஆகவே இதை ஓப்பிடுவதே தவறு என்று நினைக்கிறேன். நாவலை தழுவி எடுத்த ஒரு திரைப்படத்தைப் பார்த்து விட்டு, புத்தகம் நன்றாக இருந்தது என்று சொல்லுவது அர்த்தமே இல்லை. எப்படி என்பதை இரண்டுக்குமிடையில் இருக்கும் அனுபவ ரீதியான வேறுபாட்டைப் புரிந்துக் கொண்டால் தெரியும். ஒரு நாவலை படிக்கும் போது, அந்த நாவலை சிறிது நேரம் மூடி வைத்து விட்டு யோசிக்கலாம், தேநீர் குடித்து வீட்டு மறுபடியும் நாவலை தொடரலாம் அல்லது அடுத்த நாள் அதே நாவலை தொடரலாம். ஆனால் ஒரு திரைப்படம் பார்க்கும் போது, அந்த திரைப்படத்தின் நகர்தல் உங்கள் கையில் இல்லை, விநாடிக்கு 24 ஃப்ரேம் என்ற வேகத்தில் அது போய்க்கொண்டே இருக்கும். இதை சார்ந்து இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், நாவலை படிக்கும் போது உஙகள் மனதில் ஒரு வகையான மொழிபெயர்ப்பு நடந்துக்கொண்டிருக்கும். மொழியில் பேசும் போது நமது மனதிற்குள் ஒரு மொழிப்பெயர்ப்பு நடந்து கொண்டே இருக்கும். பிம்பம், மொழி அறிவை தாண்டி ஒருவரை சேருக்கின்றது. அது தான் சினிமாவின் பலம். மொழி அறிவை தாண்டி நமது புலங்களை, உணர்வை தொடும் சக்தி பிம்பங்களுக்கு உண்டு. இது வரைக்கும் வந்த ஊடகங்களிலும் உத்திகளிலும் மனித உணர்வை பிரதிபலிக்க கூடிய ஒரு உபகரனம் சினிமாவின் கேமரா என்று சொல்லுகின்றார்கள். அதிலும் முழுமையாக பிரதிபலிக்க முடியாது, முடிந்தவரை ஒரு உபகரனம் இப்போது பிரதிபலிக்க முடியும் என்றால், அது சினிமா கேமரா தான்.
பேசும் மற்றும் எழுதும் மொழியின் மூலம் நமது உணர்வுகளின் 20 விழுக்காடு மட்டுமே வெளிப்படுத்த முடியும் என வல்லுநர்கள் கூறுகிறார்கள். இதனால் தான் சினிமா, தியேட்டர், ஓவியம் போன்ற பல கலைகள் தேவை படுகின்றன. ஓவியங்கள் / பிமபங்கள் உணர்வை பிரதிபலிக்க முடியுமென்பதை ஓவியர்கள் உணர்ந்திருக்கிறார்கள். இரண்டாவதாக இன்னொரு வித்தியாசம், ஒரு நாவலை படிக்கும் போது நாம் ஒரு உலகத்தை உருவாக்கி கொள்கிறோம். என்னுடைய பள்ளி காலத்தில் இராபின்சன் குறுசோ நாவலின் தமிழ் மொழிப்பெயர்ப்பை படித்தேன். அந்த நாவலை படித்து நானே ஒரு தீவை உருவாக்கி கொண்ட்டேன். நானே ஒரு இராபின்சன் குறுசோ உருவாக்கி கொண்டேன். அந்த நாவலை நான் கையில் எடுக்கும் போதெல்லாம், நான் உருவாக்கிய அந்த தீவுக்குள் சென்றுவிடுவேன். ஆனால் திரைப்படத்தில், உங்களுக்காக இயக்குநர், கதாப்பாத்திரங்களையும் கதைகளத்தையும் உருவாக்கிறார். தில்லானா மோகனம்மாள் என்றால் பத்மினி ஏற்று நடித்த அந்த பாத்திரமும் தியாகராஜனாக சிவாஜி ஏற்று நடித்த அந்த பாத்திரமுமே நினைவுக்கு வரும். கதாபாத்திரங்களையும் கதைக்களத்தையும் உருவாக்கி, இயக்குநர் உங்களுக்காக ஒரு உலகத்தை உருவாக்கிறார். இதில் வாசிப்பவரின் குறுக்கீடும் பார்பவரின் குறுக்கீட்டிற்கும் இடமே கிடையாது. இது தான் முக்கியமான இரு வேறுபாடுகள்.
ஒருவர் நாவலை படமாக்கும் போது, இரண்டு அணுகுமுறைகள் இருக்கிறது. இரண்டு அணுகுமுறைகளையும் சேர்த்து பலவிதமான முறைகளிலும் படமாக்கலாம். பொதுவாக இரண்டு அணுகுமுறை என்று எடுத்துக்கொண்டால், ஒரு அணுகுமுறை வார்த்தைக்கு வார்த்தை அப்படியே அந்த நாவலை படமாக்குவது. இம்முறையில் படமாக்கி மிக சிறந்த படங்கள் வந்திருக்கின்றன. , லாரன்ஸ் ஆஃப் அரேபியா , டாக்டர் ஷிவாகோ & டேவிட் லீன் எடுத்த தி டேல் ஆஃப் டூ சிட்டிஸ். நாவலின் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் அப்படியே படமாக்கி விடுவார்கள். தமிழில் பார்த்திபன் கனவை எடுத்துக்காட்டாக சொல்லாம். அவ்வளவு சிறப்பான படமல்ல அது, வரலாற்று ரீதியாக எடுக்கப்படவில்லை, நாவலை அப்படியே எடுத்ததற்கு உதாரணம். இதற்கு மாறாக கதையை அடிப்படையாக வைத்துக்கொண்டு ஒரு புதிய கலை படைப்பை உருவாக்குகின்றார் இயக்குநர். , ஏற்கனவே ஒரு அருமையான படைப்பு அவர் கையில் இருப்பது அவருக்கு சாதகமான சூழ்நிலையாகும். இதை தான் அவர் பிம்பமாக உருவாக்க போகிறார். வார்த்தைகளிலிருந்து பிம்பத்திற்கு, அச்சில் இருந்து திரைக்கு, இந்த மாற்றத்தை அவர் செய்ய வேண்டும். அப்படி செய்யும் போது, சினிமா ஊடகத்தின் தனிப்பட்ட இயல்புகளை, சாத்தியகூறுகளை அவர் பயன்படுத்தியிருக்க வேண்டும். அப்போது ஒரு சிறந்த கலை படைப்பு உருவாகி விடும். சினிமா வரலாற்றிலிருந்து நிறைய எடுத்துக்காட்டுகள் இதற்கு கூறலாம். தமிழ் சினிமாவில் ஏழை படும் பாடு திரைப்படம், விக்டர் யுகோ எழுதிய லே மிஸ்ரபெல் என்ற பிரஞ்சு நாவலை தழுவி எடுத்த படம். பிரஞ்சு மூலத்திலிருந்து தமிழிற்கு சுத்தானந்த பாரதியார் மொழிப்பெயர்த்தார். அதை கே.இராம்நாத் என்ற உன்னதமான கலைஞர் தமிழில் ஏழை படும் பாடு என்று படமாகினார். பிரஞ்சு மூலக்கதை பிரஞ்சு புரட்சியின் பின்னனியில் நடந்தது, இவர் அதை இந்திய சுந்ததிர போராட்ட பின்னனியாக மாற்றினார். எல்லா கதாபாத்திரங்களின் பெயரையும் மாற்றினார், ஆனால் ஜாவர் என்ற பெயரை மட்டும் அப்படியே வைத்துவிட்டார். ஏனென்றால், அவ்வளவு அழுத்தமான பாத்திரம், அதன் பெயரை மாற்றுவதற்கு அவருக்கு மனதில்லை. இந்த படம் பல விதங்களில் சிறப்பான இலக்கிய தழுவல்களுக்கு எடுத்துக்காட்டாகும்.
கதையிலிருந்து திரைக்கு கொண்டுவருவது, வார்த்தைகளை பிம்பமாக மாற்றுவது, இதற்கிடையில் இருக்கும் ஒரு முக்கியமான உத்தி, திரைக்கதை. உலகில் உன்னத திரைப்படங்களை எடுக்கும் இயக்குநர்கள், நல்ல இலக்கிய படைப்பை எடுத்துக்கொண்டடு, திரைக்கதை எழுதுவதற்கு யார் வைப்பது என்று தேடுவார்கள். தமிழ் சினிமாவில் அன்மை காலம் வரை, திரைக்கதை என்ற கருதுகோளே இல்லை. நான் எனது முதல் புத்தகத்திற்காக சென்சார் அலுவலகம் சென்றிருந்தேன். சென்சார் பிரதி கொடுக்கும் போது அங்கு வசன பிரதி ஒன்றையும் கொடுக்க வேண்டும், அதை அவர்கள் பத்திரமாக வைத்து இருக்கிறார்கள், நான் பார்த்த போது அந்த வசன புத்தகத்தில் எல்லாம் திரைக்கதை என எழுதியிருக்கிறார்கள். வசனம் வேறு, திரைக்கதை வேறு. ஓர் உதாரணம் சொல்லுகிறேன். பிரஞ்சு லெபிட்டினட் வுமன் என்கிற கதை, ஜான் ஃபவுல்ஸ் எழுதிய நாவல், 19ஆம் நூற்றாண்டில் சாரா என்கிற பெண்ணுக்கும் மைக்கேலுக்கிடையேயான காதலை பற்றியது. இந்த திரைக்கதையை எழுதுவதற்கு நோபல் பரிசு பெற்ற நாடக ஆசிரியரான ஹரால்ட் பின்டரை அழைத்து எழுத சொன்னார்கள். அவர் இந்த கதையில் இரு புதிய கதாபாத்திரங்களை உருவாக்கினார், அந்த இரு புதிய கதாபாத்திரங்கள் இன்றைய ஹாலிவுட் நடிகர்கள் (கதாபாத்திரங்கள்). அந்த இரண்டு ஹாலிவுட் நடிகர்களும் இங்கிலாந்துக்கு பிரஞ்சு லெபிடினட் வுமன் படத்தை படமாக்க போகிறார்கள். அங்கே அவர்களின் சொந்த வாழ்வில் என்ன நடக்கிறது அதே சமயத்தில் பிரெஞ்சு லெபிடினட் வுமன் திரைப்படமும் போய்கொண்டிருக்கிறது. அந்த படம் இலக்கிய தழுவலுக்காக ஆஸ்கர் பரிசு பெற்றது. அதே போல விஜய் ஆனந்த் ஆர்.கே.நாராயணனின் கையிட் என்ற நாவலை திரைப்படமாக்கினார். அதற்கு திரைக்கதை எழுத பிரசித்த பெற்ற பேர்ல் பக் அவர்களை அழைத்தார். அந்த திரைப்படம் ஆர்.கே.நாராயணனுக்கு பிடிக்கவில்லை.
தமிழ் சினிமாவை பொருத்தவரை வெகு அரிதாக இத்தகைய சீறிய இலக்கிய தழுவல்கள், நாவலை திரைப்படமாக்க வேண்டும் போன்ற முயற்சிகள் வந்திருக்கின்றன. சில படங்களை மட்டும் குறிப்பிடுகிறேன். ஒரு முக்கியமான படம், யாருக்காக அழுதான். ஜெயகாந்தன் அவர்களுடைய நாவல், அவரே இயக்கிய படம். உலகத்தில் ஒரு நாவலாசிரியரே தன்னுடைய படத்தை இயக்குவது மிக அரிதான ஒன்று. இந்தியாவில் எடுத்துக்கொண்டால், எம்.டி.வாசுதேவன் நாயர் நிர்மாலயம் படத்தை இயக்கியிருக்கிறார். வங்காள பட இயக்குநர் புத்த தேவ் தாஸ் குப்தா அவருடைய நாவலையே படமாக இயக்கியிருக்கிறார். நார்மென் மெயிலர் என்ற அமெரிக்க நாவலாசிரியர் அவருடைய நாவலை அவரே படமாக எடுத்துள்ளார். யாருக்காக அழுதான் சிறந்த படமாக இருந்ததற்கு ஒரு முக்கியமான காரணம், நிமாய் கோஷ் என்ற ஒளிப்பதிவாளர் அந்த படத்தை படமாக்கியது தான். ஒளியூட்டுவதன் மூலம் ஒவ்வொரு பிம்பத்துக்கும் உணர்வுகளை சேர்த்திருக்கிறார்.

தமிழ் சினிமா வரலாற்றில் இலக்கியத்திற்கும் சினிமாவிற்கும் ஊடாட்டம் எப்படி ஆரம்பித்தது என்றால், மெளன பட காலத்திலே நாவலை படமாக்குவது ஆரம்பித்து விட்டது. வை.மு.கோதைநாயகி அம்மாள், அநாதை பெண் என்ற நாவலை எழுதினார். அதை இராஜா சான்டோ மெளன படமாக தயாரித்தார். அப்போதே இந்த ஊடாடம் ஆரம்பித்து விட்டது. 1936-1937இல் ஆனந்த விகடன் போன்ற வணிக பத்திரிக்கைகள் மக்களிடையே பரவ ஆரம்பித்த காலம். அப்போது இந்த தொடர்கதை என்ற ஒரு புதிய உத்தி வர ஆரம்பித்தது. இந்த தொடர்கதை மக்களிடையே வரவேற்பை பெற்றதை பார்த்த கே.சுப்பிரமணியம், கதை இவ்வளவு பிரபலாமாக இருக்க்கிறதே, இதை திரைப்படமாக எடுக்கலாம் என்று சேவாசதன் என்ற படத்தை எடுத்தார். அதற்கு பிறகு பல தொடர் கதைகளின் வரவேற்பை பார்த்து அவை திரைப்படமாக எடுக்கப்பட்டது. தியாக பூமி, கள்வனின் காதலி, தில்லான மோகனாம்பாள் போன்ற சில படங்கள் முதலில் தொடர்கதையாக வந்தவை.
ஒரு நாவல் திரைப்படமாக்கும் போது, அது ஒரு நல்ல கலைப்படைப்பாக தயாரிக்க படவேண்டும் என்றால், அந்த படத்தை எடுக்கும் இயக்குநருக்கு இலக்கிய பரிச்சயமும் வேண்டும், திரைப்படத்தைப் பற்றிய பரிச்சயமும் வேண்டும். இந்த இரண்டிலும் ஒரு தேர்ச்சி இருக்க வேண்டும், அப்போது தான் அவர்கள் நல்ல படத்தை எடுக்க முடியும். பாலு மகேந்திரா அடிக்கடி இதை சொல்லுவார், ஏனென்றால், ஓர் இலக்கியத்தை பிம்பகளாக மாற்றுவதற்கு சினிமாவின் சாத்தியகூறுகள் நன்கு தெரிந்திருக்க வேண்டும். ஒரு உதாரணம் சொல்லுகிறேன். உதிரி பூக்கள் படத்தில் அன்பில்லாத ஒரு மன வாழ்க்கைக்குள் இருக்கிறாள் ஒரு பெண், அப்போது அவள் கணவன் இன்று சினிமாவிற்கு போகலாம் என்று பூ கொடுத்தனுப்புகிறான், அந்த பூவை அவள் கையில் வாங்கி கொண்டு, வானத்தைப் பார்கிறாள், அங்கே சூழ் கொண்ட ஒரு கருமேகம் காண்பிக்க படுகின்றது. புதுமைப்பித்தன் தனது கதைகளில் மேகத்தைப் பற்றி எழுதவே இல்லை. ஆனால் இது இயக்குநரின் கற்பனை வளத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு. எப்படி இயக்குநர் குறியீடுகள் மூலம் தான் சொல்ல வந்த கதைக்கு செறிவூட்ட முடியும் என்பதாகும். பாலு மகேந்திரா ஒரு உதாரணம் சொல்லுவார், ஒரு வரி இலக்கியத்தை எப்படி சினிமா ஆக்குகிறார்கள். ஒரு பாட்டி வடை சுட்டுக்கொண்டிருக்கிறார். இதை நீங்க காட்சியாக்க வேண்டும். அந்த பாட்டி மரத்தடியில் உட்காருகிறாரா அல்லது குடிசைக்கு முன்பு உட்காருகிறாரா, இதை இருக்கும் ஒளியிலேயே எடுக்கலாமா அல்லது வேறு ஒளி தேவையா. பாட்டி வெள்ளை புடவை கட்டியிருப்பாங்களா, பாட்டி இரவிக்கை போட்டிருப்பாங்களா, இரவிக்கை போடவில்லையென்றால் பச்சை குத்த வேண்டுமா, முதல் ஷாட் முன்பு இருக்க வேண்டுமா அல்லது வேறு மாதிரி இருக்க வேண்டுமா என்று பல முடிவுகளை எடுக்க வேண்டும். அந்த ஒவ்வொரு முடிவும் தொழில்நுட்பம் சார்ந்தது, அதே சமயத்தில் அழகியல் சார்ந்த முடிவுமாகும். சினிமாவின் சாத்தியகூறுகள் இயக்குநருக்கு தெரிந்திருக்க வேண்டும், இல்லையென்றால் பாத்திர பேச்சால் கதையை சொல்லி சினிமாவை சிரழித்துவிடுவார்கள். என்னுடைய தாத்தாவுக்கு ஒரு யானை செல்ல பிரானியாக இருந்தது என்று ஒரு கதாபாத்திரம் சொல்வதற்கும், ஒரு தாத்தாவை யானையுடன் காண்பிப்பதற்குமான வித்தியாசத்தை நினைத்து பாருங்கள். எந்த இடத்தில் பாத்திர பேச்சு வரவேண்டும், எந்த இடத்தில் பிம்பங்கள் வர வேண்டும், எந்த இடத்தில் பாத்திர பேச்சு குறைக்க வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும்.
பிரபலமான இந்திய இயக்குநர்களை பார்த்தீர்களானால் அவர்கள் அதிகமாக இலக்கிய படங்களை சார்ந்தே தங்கள் படங்களை எடுத்திருக்கிறார்கள். சத்யஜித் ரேயின் எல்லா படைப்பகளுமே இலக்கியம் சார்ந்தது, சத்யஜித் ரே போன்ற இயக்குநர்கள் அந்த நாவலை திரைப்படத்திற்கு ஏற்றவாரு மாற்றுவார்கள். தமிழ் சினிமாவில் பல உதாரணங்கள் உண்டு. கி.ராஜ நாராயணின் கிடை கதையை ஒருத்தி படமாக எடுத்த அம்ஷன் குமார், அதில் சில முக்கியமான மாற்றங்களை செய்திருக்கிறார். சத்யஜித் ரே, சத்தரஞ் கே கில்லாடியில் இரண்டு சதுரங்க வீரர்கள் படத்தின் இறுதியில் விளையாட்டை தொடர்கின்றனர். நாவலில் இறுதியில் ஒருவருக்கு ஒருவர் குத்திக்கொன்று இறந்து போய்விடுவார்கள். இது போல பல மாற்றங்கள் இயக்குநர் கொண்டுவருவார்கள். அந்த மாற்றங்கள் கொண்டு வரும் போது, பிம்பங்களின் முக்கியத்துவத்தை அவர் உணர்ந்திருக்க வேண்டும். ஏன் காட்சி படிமங்களை பற்றி சொல்லுகிறேன் என்றால், ஒரு சினிமாவின் அடிப்படையான உணர்வு அது தான். காட்சிகள் / பிம்பங்களின் பலம் மொழி அறிவை தாண்டி இருக்கின்றது. நாம் கனவு காண்பது காட்சி பிம்பங்கள். ஒரு குழந்தை பேசுவதற்கு முன் பார்க்க துவங்கிவிடும். ஆதிகால மனிதர் மொழி எழுதுவதற்கு முன் ஓவியங்களை தீட்ட ஆரம்பித்துவிட்டார். ஆகவே இந்த காட்சி பிம்பம் என்பது, எழுத்து அறிவை தாண்டி, மொழி அறிவை தாண்டி நேரடியாக உணர்வுகளை தொடுகின்றது. திரைப்பட இயக்குநர் எப்படி அந்த பிம்பங்களை உருவாக்குகிறார், எந்த இடத்தில் கேமராவை வைக்கிறார் என்று அவர் முடிவு செய்யும் போதே அந்த பிம்பங்கள் உருவாகி விடுகின்றன. பல எண்ணங்களையும் நாம் பிம்பத்தில் தான் காண்போம். பிம்பங்கள் என்பது சினிமாவின் அடிப்படை. அதை ஒரு நல்ல இயக்குநர் பல விதமான உத்திகள் மூலம் செறிவானதாக்குவார். ஒருத்தி திரைப்படத்தின் கடைசி காட்சியில் ஒரு இறகு பேனா காற்றில் அடித்துக் கொண்டு வரும், அதை தலித் ஆடும் மேய்க்கும் பெண் பிடித்து, அவளுக்கு படிக்க வேண்டுமென்ற ஆசை, அவளுடைய ஆசை நிறைவேறும் என அந்த நம்பிக்கைக்கு ஒரு குறியீடாக இறகு பேனாவை இயக்குநர் காட்டியிருப்பர். அது கிடை என்ற கி.ராஜ நாராயணின் கதையில் இல்லாத ஒன்றாகும்.
நம் நாட்டில் நாவல்களை படமாக்குவதில் இன்னொரு பிரச்சனை இருக்கிறது. ஒரு நல்ல இருக்கமான கதை சொல்லலில் பாடல்கள் குறுக்கீடாக இருக்கிறது, நாம் எல்லாரும் சினிமா பாடல்களை இரசிக்கின்றோம், நானும் சினிமா பாடல்களை கேட்பவன் தான். அது ஒரு தனிப்பட்ட பொழுது போக்கு அம்சமாக வந்துவிட்டது. சினிமா வெளிவருவதற்கு முன் பட பாடல்கள் வெளிவருகின்றன. ஆனால் தமிழ் சினிமாவை பொழுது போக்கு தளத்தில் நிறுத்துவது இந்த பாடல்கள் தான். நாம் சினிமா பார்க்க போகிறோம், சினிமா கேட்க போகவில்லை. இன்று காலையில் எம்.கே.தியாக இராஜா பாகவதர் பாடல்கள் கேட்டுக்கொண்டிருந்தேன், அவருடைய சிறப்பம்சம் என்ன, சிறப்பாக பாடியிருந்தார், மறக்க முடியாத பாடல்களையெல்லாம் பாடியுள்ளார். சினிமாவில் அதன் இடம் என்ன என்ற கேள்வியை நாம் கேட்க வேண்டும். பல தமிழ் சினிமாக்களில் இந்த பாடல்கள் கதையுடன் இணைந்து வருகின்றன, இணைந்து வந்தால் பிரச்சனை கிடையாது. சம்பூரண இராமாயணம் என்ற படத்தில் தாடகையின் கதையை ஒரு பாட்டில் முடித்து விடுகிறார்கள், ஏனென்றால் சம்பூர்ண இராமாயணம் பெரிய கதை, அதை சுருக்குவதற்காக ஒரு பாடலை பயன்படுத்தியுள்ளனர். ரித்திவிக் கட்டக்கின் படங்களில் பாடல்கள் கதையுடன் இணைந்து வரும், குரு தத்தின் பியாசா திரைப்படத்திலும் பாடல்கள் கதையுடன் இணைந்து வரும். ஆனால் பொதுவாக, பாடல்கள் குறுக்கீடாகவே வருகின்றன. இதுவரைக்கும் இரண்டு தமிழ் படங்கள் தேசிய விருது பெற்றிருக்கின்றது. ஒன்று மறுபக்கம், இன்னொன்று கஞ்சிவரம், இரண்டு படங்களிலும் பாடல்கள் கிடையாது. ஏனென்றால் பாடல்கள் பொதுவாக குறுக்கீடாகவே வருகின்றன. படத்தின் ஒருங்கினைந்த பகுதியாக பாடல்கள் வரலாம். ஒர் உதாரணம், மோக முள். மோக முள்ளில் கதாநாயகன் ஒரு பாடகன், ஆகவே அங்கு பாடல் மிகவும் தேவையான ஒன்று.

நாவலை படமாக்கும் போது ஒரு இயக்குநர் தன்னை பேசும் மொழியின் தலையிலிருந்து விடுவித்துக் கொள்ள வேண்டும். ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் படமாக்க பட்டது. நாவலில் கதாபாத்திரங்கள் என்ன பேசினார்களோ அதே வார்த்தைகளை திரையில் பேசினார்கள். பேச கூடாதா என்று கேட்கலாம், ஆனால் பல இடங்களில் அது தேவையில்லை. நீங்கள் பிம்பங்களாக காட்டலாம். சில நேரங்கள் சில மனிதர்கள், வல வலவென பேசிக்கொண்டிருக்கும் ஒரு படமாக போய்விட்டது. இப்போது வரும் பல படங்களில் இளைய இயக்குநர்கள் பிம்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். வழக்கு எண் திரைப்படத்தில் பாடல்கள் என தனியாக கிடையாது, வளத்தை உணர்ந்த பிம்பங்களே உருவாக்கியிருக்கிறார். பிம்பங்களை உருவாக்குவதில் முக்கியமானது கேஸ்டிங். அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ற அந்த உரு கொண்ட ஒருவரை நடிக்கராக போட வேண்டும். காதல் படத்தில் இதை சிறப்பாக பார்க்க முடியும். இதில் ஒரு பிரச்சனை என்னவென்றால், தமிழில் சினிமாவை பற்றி விவாதிப்பதற்கு நாம் இன்னும் சொற்கள் உருவாக்கவில்லை. கேஸ்டிங் என்பதற்கு என்ன தமிழ் வார்த்தை, சினிமா என்பதற்கு என்ன தமிழ் வார்த்தை. ஒரு நண்பர் தமிழ் திரை என்று சொல்லலாம் என்றார், அது சரியானதாக தெரியவில்லை. திரைப்ப்டம் வேறு, திரை வேறு. கட், ஷாட், லாங் ஷாட், இதற்கெல்லாம் என்ன தமிழ் வார்த்தை. இதெல்லாம் முக்கியமான பதங்கள், இந்த பதங்களுக்கு நாம் ஒரு கலைச்சொற்கள் உருவாக்காமல் எப்படி நாம் சினிமாவை பற்றி விவாதிக்க முடியும். ஆகவே ஆங்கில பதங்களை பயன்படுத்திக்கொள்ளலாம். நாவலை சினிமாவாக்குவதில் கேஸ்டிங் மிக முக்கியமான ஒன்று. ஏழை படும் பாட்டில் அந்த மாதிரியான ஒரு கதாபாத்திரம், கந்தன், அவனுக்கு நாகையா சரியான தேர்வு. அன்மையில் இரண்டு வருடங்களுக்கு முன்பு வந்த லெ மிஸ்ரபில் திரைப்படத்தில் ஜெராடு டிபார்டியு என்ற சிறந்த உலக கலைஞன் அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். ஆகவே சரியான ஆட்களை எடுத்து நாவலை திரைப்படமாக்கப்பட வேண்டும். அதே சமயத்தில் வார்த்தைகளில் இருந்து முடிந்த வரைக்கு விடுவித்துக்கொள்ள வேண்டும்.
தமிழ் சினிமாவில் நாவலில் சினிமாவாக்கப்பட்ட பல படங்களில், நாவலில் இருந்த புரட்சிகரமான கருத்துகள் சினிமாவில் மாற்ற பட்டுள்ளது. ஒரு உதாரணம் சொல்லுகிறேன். ரங்கூன் ராதா, அண்ணா எழுதிய கதை. அதில் கதாநாயகிக்கு பேய் பிடித்து இருக்கிறது என கதாநாயகன் கெளப்பி விடுவான், பேயோட்ட வரும் பூசாரியுடன் அவள் தொடர்பு கொண்டு அவளுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது. அது தான் பின் ரங்கூன்னில் போய் அவள் குழந்தை பெறுகிறாள் என்று வரும். அது சினிமாவாகும் போது, மிகவும் தூயவளான இவளுக்கு, இவள் ஒரு தொடர்பு கொண்டாள் என்ற கலங்கம் மட்டுமே கற்பிக்க படுகிறது. ஏன் இப்படி மாற்றுகிறார்கள் என்றால், ஒன்று, அந்த படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் புரட்சிகர கருத்துகள் என பயந்து, ஒருவேளை தகராறு வந்துவிடோமென எண்ணுவதாகும். அனந்த மூர்த்தியின் சம்ஸ்காராவை பலர் எதிர்த்தனர், கிராமத்து அத்தியாத்தை எதிர்த்தனர், இட ஒதுக்கீட்டிற்கு எதிரான ஒரே ஒரு கிராமத்தில் திரைப்படம் வெளிவர சிரமமாக இருந்தது, இறுதியில் உச்ச நீதி மன்றம் சொல்லி தான் அப்படம் வெளியானது. படத்தயாரிப்பாளர்கள் அந்த படத்தின் சர்ச்சை கருத்துக்களால் படத்தின் வெற்றி பாதிக்க கூடாது என அஞ்சுகிறார்கள். இரண்டாவது காரணம், ஒரு சராசரி திரைப்பட இரசிகன், கருத்துக்களை புரிந்து கொள்வதில் ஒரு இலக்கிய வாசகனை விட கீழ் நிலையில் இருப்பான் என்ற ஒரு நம்பிக்கை. ஆகவே பல முற்போக்கு கருத்துக்களை கலைந்து விட்டு படமாக்குகிறார்கள். நான் சொல்லும் இந்த மாதிரியான பழக்கங்கள் தான் இப்போது மாறிக்கொண்டு வருகிறது. அது ஒரு நல்ல வரவேற்க்க வேண்டிய மாறுதலாகும். ஒரு வெற்றிகரமான ஒர் இலக்கிய படைப்பு, அது உன்னதமான திரைப்படமாகும் என்று நாம் சொல்ல முடியாது. அதே போல ஒரு மாபெரும் எழுத்தாளராக இருப்பதால் அவர் ஒரு சிறந்த திரைக்கதை ஆசிரியரராகி வெற்றி பெற முடியும் என்று சொல்ல முடியாது. இரண்டு விஷயங்களையும் தீர்மானிப்பது, திரைப்பட மொழியின் இலக்கணம், காட்சி ஒருங்கினைப்பு, இதன் மீதான புலமை தான். ஒரு சின்ன கதையை கூறி இந்த இரு ஊடகங்களுக்கான வித்தயாசத்தை தெளிவு படுத்த விரும்புகிறேன். பாரம்பரியமான ஒரு குடும்பத்தில் திருமணம் நடக்கிறது, தேன் நிலவிற்கு சென்ற இடத்தில் ஒரு விடுதியில் தங்கியிருந்தார்கள், முதல் இரவுக்கு பின் காலை எழுந்து பார்க்கிறாள், அவன் கட்டிலுக்கு பக்கத்தில் சோகமாக உட்கார்ந்திருக்கிறான். என்னாயிற்று, நீங்கள் என்ஜாய் செய்யவில்லையா என்றாள். நேற்றிரவு நன்றாக தான் இருந்தது, ஆனால் படித்த புத்தகம் அதை விட நன்றாக இருந்தது என்று சொன்னான்.
---------------------------------------------------------------------------------------

பனுவல் புத்தக நிலையத்தில் திரைப்பட ஆய்வாளர், தியடோர் பாஸ்கரன் பங்கேற்று இலக்கியமும், சினிமாவும் என்கிற தலைப்பில் பேசினார். அதனை நண்பர் யுகேந்திரன் ஒலிப்பதிவு செய்து, எழுத்து வடிவத்திற்கு மாற்றிக்கொடுத்திருக்கிறார்.

நன்றி: பரிசல் சிவ.செந்தில்நாதன் & பனுவல்.