தணிக்கை வாரிய அலுவலகத்தில் இடைத்தரகர்கள் ஏன் தழைத்தோங்குகிறார்கள்!

அதிர்ஷ்டவசமாக திரைப்பட விழாக்களில் திரைப்படத்தை திரையிட தணிக்கை சான்றிதழ் தேவையில்லை. ஆனால் சர்வதேச இந்திய திரைப்பட திருவிழாவின் இந்தியன் பனோரமாவிற்கு அல்லது தேசிய விருதுக்கு உங்கள் திரைப்படத்தை சமர்ப்பிக்க விரும்பினால், தணிக்கை சான்றிதழை நீங்கள் பெற வேண்டும். தணிக்கை சான்றிதழ் தேதியே திரைப்படம் முடிக்கப்பட்ட தேதியாக கருதப்படும். பல சுயாதீன திரைப்படைப்பாளிகள் மிகச் சரியாக இந்த காரணத்திற்காகவே சான்றிதழுக்கு சமர்ப்பிக்கின்றனர். சான்றிதழை எப்போதும் பயன்படுத்த போவதில்லை, ஏனென்றால் தங்கள் திரைப்படங்கள் வணிகரீதியான காரணத்திற்காக காட்சிபடுத்த போவதில்லை என நன்றாக தெரிந்திருந்தும் சமர்ப்பிக்கின்றனர்.
அரசு நடத்தும் திரைப்பட விழாவில் பங்கேற்க இயலும் என்று காரணத்திற்காக மட்டுமே 2011'இல் எனது குறும்படத்திற்கு சான்றிதழ் பெற விண்ணப்பித்திருந்தேன். என்னை போன்ற திரைப்பட படைப்பாளிகளுக்கு செயல்முறையில் எந்த தொந்தரவுமில்லாமல் குறிப்பிட்ட கட்டணத்திற்கு வேலையை முடித்து தர தரகர்கள் இருக்கிறார்கள் என தெரியும். ஆனால் இந்த அமைப்பு எப்படி பணி செய்கிறது என புரிந்துக்கொள்ள நேரடியாக விண்ணப்பிக்க முடிவு செய்தேன்.

அந்த நேரத்தில் dearcinema.com வலைத்தளம், தணிக்கை வாரிய செயல்முறையை இணையவழி ஆன்லைன் வசதி மூலம் செய்யலாம் என்ற செய்தியை வெளியிட்டிருந்தது. நான் மகிழ்ச்சியாக தணிக்கை வாரிய வலைத்தளத்தில் பதிவு செய்து வைத்து வார கணக்கில் காத்திருந்தேன், ஆனால் என் கணக்கு குறித்து எந்த ஒரு உறுதிப்படுத்தல் செய்தியும் வரவில்லை.

நான் மனம் தளரவில்லை, விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்தேன். தணிக்கை வாரிய வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டிருந்த விவரங்களை பயன்படுத்தி என் படத்திற்கு செலுத்த வேண்டிய தொகையை கணக்கிட்டு, அந்த தொகைக்கு பரிந்துரைக்கப்பட்ட பெயருக்கு கேட்பு வரைவோலை எடுத்துக்கொண்டு மலபார் ஹில்ஸில் உள்ள தணிக்கை வாரிய அலுவலகத்திற்கு சென்றேன்.

நான் என்னை சரியாக தயார் படுத்திக்கொண்டேன், வலைத்தளத்தில் இருந்த கேள்வி-பதில் பகுதியை படித்திருந்தேன், டிவிடி ஸ்கிரீனர்கள் ஆயுத்தமாக வைத்து இருந்தேன், கதைச்சுருக்கத்தின் அச்சு பிரதி, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், மிக முக்கியமாக தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் ஊதியம் மற்றும் கணக்கு அலுவலரின் பெயரில் கேட்பு வரைவோலை என தேவையானவற்றை வைத்திருந்தேன்.

இருந்தபோதிலும், எனது முதல் முயற்சியில் தோல்வியடைந்தேன். புதிய விண்ணப்பங்கள் நாளின் முதல் பாதியில் மட்டுமே பெறப்படும் என வரவேற்பு மேசைக்கு பின்னிருந்த பெண் தெரிவித்தார். வலைத்தளத்தில் எங்கும் அப்படி குறிப்பிடவில்லை என கூறினேன்; அது வலைத்தளத்தின் பிரச்சனை, எல்லோருக்கும் நேரம் தெரியும் என அவர் சகிப்புணர்வோடு தெரிவித்தார்.

அடுத்த நாள், நான் மீண்டும் அங்கு சென்றேன், நான் அதிர்ஷ்டம் உடையவன், இந்த முறை எனது ஆவணங்களை அவர் பெற்றுக்கொண்டார். ஆனால் ஆவணங்களை மேலோட்டமாக ஒரு முறை பார்த்த பின், இது தவறான படிவம் என கூறி சரியான படிவத்தை என்னிடம் கொடுத்தார். நான் இரண்டு படிவங்களையும் பொருத்த முயற்சி செய்து, இவ்விரண்டுக்குமான ஒரே வித்தயாசம் நான் பூர்த்தி செய்த படிவம் தணிக்கை வாரியத்தினால் அச்சடிக்கபடவில்லை, அவர்களது வலைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டது என தெரிந்துக்கொண்டேன்.

வெளிப்படையான விதிகளை விட, வழக்கு முறையே விதிமுறைகளை அங்கு வழிநடத்துகிறது என இப்போது தெரிந்துக்கொண்டேன்.

படிவத்தை பூர்த்திச் செய்யும் போதே, தணிக்கை வாரியம் காலத்தில் பின்னோக்கி உள்ளது என நான் உணர்ந்தேன். படிவத்தின் படி, ஒரு படம் செல்லுலாயிடில் படப்பிடிப்பு செய்த ஒன்று அல்லது வீடியோ கேஸட்டுகளில் பதிவு செய்யப்பட்ட வீடியோ ஷாட். இவற்றுக்கு இடைப்பட்ட பகுதிக்கு இடமில்லை. டிஜிட்டல் சினிமா குறித்து எந்த பிரிவுமில்லை. எனது படத்தை ஹெச்.டி. கேமராவில் படப்பிடிப்பு செய்தேன், திரையரங்க வெளியீட்டிற்காக 2K DCP செய்திருந்தேன். ஆனால் எனக்கு அதை வீடியோ என அறிவித்து அதற்கு ஒரு கேஸட்டு மட்டுமே உள்ளது என்று சொல்வதை தவிர வேறு விருப்பத்தேர்வு இல்லை.

அவர்களின் ஆலோசனையின் பேரில் நான் செய்ய வேண்டியிருந்த இரண்டாவது திருத்தம், எனது படத்தை "இசை" என அறிவிப்பதாகும். விசித்திரமாக உள்ளதா, ஆனால் அந்த ஒரு வழி மட்டுமே இருந்தது. படிவத்தில் படத்தின் மொழியை ஒரு பகுதியில் பூர்த்திச் செய்ய வேண்டும். எனது படத்தில் வசனங்களே இல்லை. அந்த பெண் குழப்பமடைந்தார். சிறிது யோசனைக்கு பின் படத்தில் இசை உள்ளதா என கேட்டார். இந்த படம் நடன கலைஞர் பற்றியது, ஒரு காட்சியில் அவன் ஆடுவான் டிரம்மர்ஸ் டிரம்ஸ் அடிப்பார்கள் என சொன்னேன், உடனே அவர் "இசை" என்று அந்த பகுதியில் பூர்த்திச் செய்துவிட்டார். பேசும் வார்த்தைகள் இல்லாததை படம் என அறிவிக்க எந்த வாய்ப்பும் இல்லை. தணிக்கை வாரியத்தில் பணிபுரிபவர்கள் பட உருவாக்கத்திலிருந்து எவ்வளவு தூரம் விலகியிருக்கிறார்கள் என இது விளக்குகிறது. எனது படம் ஏதும் இல்லை, அது "இசை".
படிவத்தை மீண்டும் முழுவதுமாக பூர்த்திச் செய்வது எரிச்சலூட்டுவதாக இருந்தது, ஆனால் அடுத்து நடந்தது பெரிய அதிர்ச்சியாக இருந்தது. வலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்த பெயரில் எடுத்த கேட்பு வரைவோலைய பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார், புதிய கேட்பு வரைவோலை எடுக்க வேண்டும் என்றார். வலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்த பெயரில் சரியாக தானே எடுத்துள்ளேன் என கூறினேன். அவரது பதில் எளிமையானது, அது வலைத்தளத்தின் பிரச்சனை. நான் வாதிட முயற்சித்தேன். மண்டல அலுவலரை சந்தித்து வலைத்தளத்தில் உள்ள பிழைகள் குறித்த புகாரை தெரிவிக்குமாறு ஆலோசனை தெரிவித்தார்.

அடுத்த கட்டம், தணிக்கை வாரியத்தில் இருந்த அழைப்பு வருவதற்காக வார கணக்கில் காத்திருப்பது, அழைப்பு வரவே இல்லை. நான் தொடர்ந்து அழைத்து நிலையை அறிந்து கொள்ள முயற்சி செய்தேன், ஒரு மாதத்திற்கு பின், என் படத்தை ஆய்வு அதிகாரி பார்த்துவிட்டார் என்ற தகவலை தெரிவித்து என்னை சந்தோஷத்தில் ஆழ்த்தினர்.

எனது கோப்புகள், குறுவட்டுடன், மூடப்பட்ட உறையில் சமர்பித்து சான்றிதழ் பெற அடுத்த அழைப்பிற்காக காத்திருப்பதே அடுத்த கட்டம்.

எனவே, அவர்களிடம் சமர்பித்த குறுவட்டை கண்டுபிடிப்பதே எனது முதல் சவால். அலுவலக வேலையாட்கள் மற்றும் எழுத்தர்கள் என்னை ஒரு நாள் முழுவதும் காத்திருக்க வைத்தார்கள். அவர்களால் குறுவட்டு கண்டுபிடிக்க முடியாத காரணத்தால் அடுத்த நாள் வர சொன்னார்கள். என இரண்டாவது வருகையில், அரை நாள் வேறு வழியில்லாமல் காத்திருந்த பின்னர், ஒரு கணவான் என் மீது தயவு காட்டி திரையிடல் அறை போல இருந்த ஒரு அறையினுள் என்னை அழைத்து சென்றார். எனது குறுவட்டை என்னையே தேட சொல்லி எனக்கு அறிவுரை கூறினார். மிகப்பெரிய கட்டணம் செலுத்திய பின் என்ன ஒரு பாக்கியம். அங்கு மேஜையில் இருந்த குறுவட்டு குவியலில் எனது குறுவட்டை நான் தேடினேன். மிகுதியாக அவருக்கு நன்றி தெரிவித்தேன், அவர் புன்னகைத்து அவரது அழைப்பு அட்டையை எனக்கு கொடுத்தார். என்னை போன்று சான்றிதழ் பெற கஷ்டப்படுபவர்களை காப்பாற்றும் தணிக்கை வாரிய அலுவலகத்தில் இருக்கும் ஒரு தரகர் அவர்.

எனது குறுவட்டை கண்டுபிடித்த பின்பு, எனது போரில் பாதி வெற்றி மட்டுமே அடைந்துள்ளேன். போரின் அடுத்த பகுதி எனது கோப்புகளை தேடி கண்டுபிடிப்பதாகும். ஆம், எனது கோப்பும் எங்கும் இல்லை. அங்கிருப்பவர்கள் எப்போதுமே மோசமாக இல்லை என்பதை நான் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். இன்னொரு நாள் காத்திருந்த பிறகு, ஆய்வு அதிகாரி திரு.P.B.பன்சோடே அவர்களின் அலுவலகத்தினுள் சென்று எனது முழு கதையையும் தெரிவித்தேன். தணிக்கை வாரிய அலுவலகத்தின் அனைத்து பகுதிக்கும் என்னை அழைத்து சென்று எனது கோப்புகளை தேடுவதற்கு எனக்கு கனிவாக உதவி செய்தார். இறுதியாக, கோப்புகளின் குவியலுக்கு அடியில் அதை கண்டுபிடித்தோம்.

ஆய்வு கட்டணம் செலுத்தி இருந்த போதிலும் விண்ணப்பதாரரே பாதி வேலைகளை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கபடுவது தணிக்கை வாரிய செயல்முறையில் மற்றொரு பேசப்படாத விதிமுறை. யார் எங்கு அமர்கிறார்கள், தணிக்கை சான்றிதழ் பெற எது எங்கு வைக்கப்பட்டுள்ளது என தெரிந்து வைத்திருக்க வேண்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் மற்றும் தரகர்களுக்கு தணிக்கை வாரிய அலுவலகம் அளிக்கும் இலவச வாய்ப்பு நம்ப முடியாதது. திரையிடல் அறையில் கிடக்கும் வேறொருவரின் குறுவட்டை நான் எடுத்து வந்திருந்தால் யாரேனும் பார்த்திருப்பார்களா என்பது சந்தேகமே.

திரு.பன்சோடே மிகவும் நல்லவர், அடுத்த நாள் மாலை என்னை அழைத்து எனது தணிக்கை சான்றிதழை அளித்தார். வெற்றி பெற்றது போல் உணர்ந்தேன். என்னிடம் அந்த சான்றிதழ் இன்றும் உள்ளது, அரசு நடத்தும் விழாக்கள் தவிர வேறு யாரும் அதை கேட்டதில்லை.

ஓராண்டிற்கு பிறகு நான் இன்னொரு குறும்படம் எடுத்தேன், தொலைந்த குறுவட்டை தணிக்கை வாரிய அலுவலகத்தில் கண்டுபிடிக்க உதவிய அந்த கணவானின் (தொழில்ரீதியாக அவர் ஒரு தரகர்) சேவையை எடுத்துக்கொண்டேன்.

எனது குறும்படத்தை தணிக்கையில்லாமல் திரைப்பட விழாக்களில் திரையிட முடியும் மற்றும் வணிகரீதியான வெளியீட்டிற்கு எந்த சாத்தியமும் இல்லாத போது எனது குறும்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் ஏன் தேவை என நான் எப்போதும் யோசித்ததுண்டு.

கூட்டம் நிறைந்த தணிக்கை வாரிய அலுவலகத்தில் ஊழல் வளர்கின்றது, ஏனெனில் அது செயல் திறனற்றது, நீண்ட மற்றும் அதிக செயல்முறை கொண்டது. புதிய தொழில்நுட்பங்களின் வரவினால் திரைப்பட தயாரிப்பு ஜனநாயகப்பட்டுள்ள போது, தணிக்கை வாரியத்தின் தேவையை அரசு மறு மதிப்பீடு செய்ய வேண்டாமா ?. அது இருக்க வேண்டுமெனில், வெளிப்படையான ஒன்றாகவும் படைப்பாளிகள் எளிதில் அணுகக் கூடிய ஒன்றாக மாற்ற வேண்டாமா?.
----------------------------------------------------------------------------------------------------------
dearcinema.com (ஆகஸ்ட் 2014) இதழில் வெளியான கட்டுரையின் தமிழ் வடிவம்.