தமிழில் அரசியல் சினிமா

தமிழ் அரசியல் சினிமா வரலாற்றில் இந்திய தேசபக்தியை மறுபடி முன்வைத்து, திரைப்படத்தின் அழகியல் சாத்தியங்களையும் ஸ்வீகரித்துக் கொண்டு, தமிழ் சினிமாவுக்குள் பிரவேசம் செய்தவர் என இயக்குனர் மணிரத்தினத்தை நாம் குறிப்பிடலாம். திராவிட இயக்க சினிமாக்கள் சித்திரித்த இனம், மதம், சாதியம் போன்றவற்றைச் சுற்றின பிரச்சினைகளை அகண்ட இந்திய தேசியம் எனும் பினனணியில் மணிரத்தினத்தின் படங்கள் சித்தரித்தன. மணிரத்தினத்தின் திரைப்படங்களான பம்பாய், ரோஜா, உயிரே, கன்னத்தை முத்தமிட்டால் மற்றும் குரு போன்ற திரைப்படங்கள் இந்திய தேசபக்தி நிலைபாட்டிலிருந்து இனத் தேசியம், இந்து-முஸ்லீம் பிரச்சினை போன்றவற்றைச் சித்தரிக்கின்றன. இவர் கதையமைப்பில் உருவான இவரது துணைவியான சுஹாஸினியின் சாதியம் பற்றிய, ராஜீவ்காந்தியின் மகள் பிரியங்காவை ஞாபகப்படுத்தும் இந்திராவையும் இந்த வரிசையில் நாம் சேர்த்துக் கொள்ளவே வேண்டும்.
இடதுசாரிகளும் வெகுஜன அளவில் அல்லாவிட்டாலும் தீவிர சினிமா பார்வையாளர்களிடம் குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். நிமாய் கோஷின் பாதை தெரியுது பார் துவங்கி ஹரிஹரனின் ஏழாவது மனிதன் ஈராக கோமல். சுவாமிநாதனின் அனல் காற்று வரை மார்க்சிய மரபிலான தமிழ் திரைப் படங்களை அவர்கள் முயன்றிருக்கிறார்கள். நாலாசிரியர் டி.செல்வராஜின் தேநீர் நாவல் ஊமை ஜனங்கள் எனவும் மாதலரங்கராவின் வெகுஜன அளவில் வெற்றி பெற்ற இரு தெலுங்குபடங்கள் தமிழில் சிவப்பு மல்லி எனவும் கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவரான தா.பாண்டியனின் வசனத்தில் சங்கநாதம் எனவும் வெளியாகியது. ஒரு இந்தியக் கனவு, தண்ணீர் தண்ணீர் என்கிற கோமல். சுவாமிநாதனின் இரு நாடகங்கள் திரைப்படமாகின. தஞ்சை மண்ணின் கம்யூனிஸ்ட் போராளியான வாட்டாக்குடி இரணியன் வாழ்வு இயக்குனர் செல்வாவின் இயக்கத்தில் ஜனரஞ்ஜகப் படமாக ஆனது.
அடித்தட்டு மக்களின் பாலான மார்க்சியர்களின் அணுகுமுறை ஒரு வகைகளில் உன்னைப் போல் ஒருவன், யாருக்காக அழுதான் போன்ற ஜெயகாந்தனது திரைப்படங்களில் செயல்பட்டது என நாம் குறிப்படலாம். காங்கிரஸ் கட்சியினருக்கும் திராவிடப் பாரம்பர்யத்தினருக்கும் இருந்த பொருள்வயமான மற்றும் தந்திரோபாயம் சார்ந்த கண்ணோட்டங்கள் எவையும் திட்டமிட்டமான வகையில் இடதுசாரிகளிடம் இல்லாததாலும், திரைப்படத்தை தீவிரமான சமூக வெளிப்பாட்டு வகையினமாக அவர்கள் கருதாததாலும் திரைப்பட வெளியில் அவர்களால் தொடர்ந்து செயலாற்ற முடியவில்லை.

தமிழ் திரைப்பட வரலாறு ஆயினும், தமிழக அரசியல் வரலாறு ஆயினும் திரைப்படத்தையும் அதனது வலிமையையம் விலக்கிவிட்டு இரண்டின் வரலாற்றையும் எவரும் எழுதவியலாது. காந்திய சிந்தனையாளரான கர்மவீரர் கு.காமராஜ் சினிமாவை இகழ்ச்சியாகப் பார்த்திருக்கிறார். திராவிட முன்னேற்றக் கழகத்தவரை அவர் கூத்தாடிகள் எனவும் விளித்திருக்கிறார். திராவிட இயக்க முன்னோடிச் சிந்தனையாளரான தந்தை ஈ.வே.ரா.பெரியார் மதத்தின் அளவு மூடநம்பிக்கையைப் பரப்புவதாக, மக்களை முட்டாள்களாக்குவதாக திரைப்படத்தை எதிர்மறையாகப் பாரத்திருக்கிறார். யதார்த்த வாழ்வின் முரண்களையும் தேவைகளையும் அன்றைய திரைப்படங்கள் உள்ளபடி சித்தரிக்காததால் திரைப்படத்தின் மீதான தந்தை பெரியாரின் விமர்சனத்தைப் புரிந்து கொள்வதில் எவருக்கும் சிரமம் இருக்க முடியாது.

மேட்டுக் குடிக் கலைகளுக்கு மாற்றான இழிந்த கலையாகவே தமிழ் சமூகத்தின் மேல்தட்டு வர்க்கத்தவரால் ஆரம்பகாலத் தமிழ் திரைப்பட வடிவம் பார்க்கப்பட்டு வந்திருக்கிறது. இந்திய தேசியம் என்பது புனிதமாகக் கட்டமைக்கப்பட்ட ஒரு சூழலில், ஆண், பெண் வேடமிட்ட மரபு கொண்ட தமிழ் திரைப்படச் சூழலில், இனமும் மொழியும் சார்ந்த பண்பாட்டை முன்னிறுத்துவதும் ஆண்பெண்களின் இணைந்த களியாட்டங்கள் கொண்டதுமான திராவிட இயக்கப்படங்கள் கர்மவீரர் காமராஜ் உள்ளிட்ட காங்கிரஸாரிடம் வெறுப்பைத் தூண்டியதும் இயல்பானவையே என்பதனைப் புரிந்து கொள்வதிலும் எவருக்கும் சிரமமிருக்க நியாயமில்லை. வரலாற்றின் வெஞ்சினமே போல பெரியார் மற்றும் காமராஜ் குறித்த பிற்காலத்திய திரைப்படங்களின் மூலம்தான் இந்த இரண்டு ஆளுமைகளும் பின்வரும் தமிழகத் தலைமுறையின் வெகுஜன தளத்திலான தேடலில் இடம்பெற்றார்கள் என்பது அவர்களை முன்னிறுத்தி நிகழ்ந்ததொரு வரலாற்றுச் சோகமாகும்.

தமிழக சினிமாக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் நடிகர்கள் என எல்லாமட்டத்திலும் வெளிப்படையாகவே திமுக அண்ணா திமுக எனப் பிரிந்து கிடக்கிறார்கள். கலாச்சார அரசியல் எனும் அளவில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் அரசியல் மரபைப் பிரதிநிதித்தவப் படுத்துபவர்களும் (எடுத்துக்காட்டுக்களாக மணிரத்தினம் மற்றும் சேரன், குறிப்பாக சேரனின் தேசியகீதம் திரைப்படம் ) சிறிய அளவிலேனும் தமிழ் சினிமாவில் இயங்குகிறார்கள். அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ராமச்சந்திரன், வி.என்.ஜானகி மற்றும் ஜெயலலிதா என ஐந்து முன்னாள் நடிகர்களும் நடிகையரும் தமிழகத்தின் முதலமைச்சர்களாக இருந்திருக்கிறார்கள்.

தி.மு.க.பிளவுபட்டபோது எம்.ஜி.ராமச்சந்திரனுக்கு எதிராக கலைஞர் கருணாநிதியின் புதல்வர் மு.க.முத்து எம.ஜி.ஆருக்குகு எதிராக உருவாக்கப்பட்டதும் தமிழ் சினிமா வரலாற்றின் அங்கம். கடந்த காலம் போக எதிர்கால தனிக்கட்சிப் பெரும்பான்மை முதலமைச்சர் கனவுகளைக் காவித்திரிபவர்களாக நடிகர்கள் விஜயகாந்த்தும் சரத்குமாரும் உருவாகி நிற்கிறார்கள். நடிகர்களான விஜய்யையும் ரஜினகாந்த்தையும் தமிழக அரசியலுக்கு வழிகாட்டும் நட்சத்திரங்களாகக் கருதுகிற அவர்களது கோடானு கோடி ரசிகப் பெருமக்களும் தமிழகத்தில் இருக்கிறார்கள்.

அரசியல்வாதிகளிடம் நட்பு கொண்டிருப்பது என்பது திரைப்பட உலக அதிகாரத்திற்கான முன்நிபந்தனையாக தமிழகத்தில் இருக்கிறது. அரசியலுக்கு அப்பாலான, அரசியல் அதிகாரம் கொண்டவர்களாக இவ்வகையில் சினிமாத் துறையினர் ஆகியிருக்கிறார்கள். திரைப்படத்துறையில் முக்கியத்துவம் குறைந்து போகிறபோது, சின்னித் திரைப் பக்கம் ஓதுங்குகிற மாதரி திரைத்துறையினர் தேர்ந்தெடுக்கிற வருமானம் தருகிற பிறிதொரு தொழில் துறையாகத் தற்போது தமிழக அரசியல் ஆகியிருக்கிறது. விஜயகாந்த், சரத்குமார் போன்ற நடிகர்கள் கட்சியின் தலைவர்களாக, ‘தமது கட்சியினரில் வற்புறுத்தலினால்’ நடிகர்களது மனைவியர்கள் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களாக ஆகிறார்கள். இத்தகைய அவலம் தமிழைத் தலை மொழியாகக் கொண்ட அனைத்து திராவிட மொழி மாநிலங்களிலும் இருக்கிறது. இந்தித் திரைப்பட உலகில் அபரமிதமான இத்தகைய அரசியல் அபிலாஷைகளை நாம் காணவியலாது என்பது போல, சமூகக் கடப்பாடு கொண்ட நந்திதா போஸ், ஷபானா ஆஷ்மி போன்ற கலைஞர்களையும் தமிழ்த் திரைப்பட உலகில் நாம் காண முடியாது.

அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி எம்.ஜி.ராமச்சந்திரன் போன்றவர்களுக்கு நீண்ட கால அரசியல் பின்னணி இருந்தது. அவர்களுக்கென அரசியல் சமூகக் கலை இலக்கியப் பார்வை இருந்தது. இன்றைய சூப்பர் ஸ்டார்களுக்கும், சுப்ரீம் ஸ்டார்களுக்கும், லிட்டில் ஸ்டார்களுக்கும், தளபதிகளுக்கும் மிகக் குறுகலான திரைப்படப் பின்னணி தவிர அரசியல் அதிகாரத்தைப் பெறுவதற்கான எந்தத் தகுதிகளும் இல்லை.

அறிஞர் அண்ணா துவக்கி வைத்த மரபில் அரசியல் அதிகாரத்திற்கான கலைஞர்களின் சமூகக் கடப்பாடு என்பது முக்கிய அம்சமாக இருந்தது. சனாதன மத எதிர்ப்பு, பகுத்தறிவு, சமதர்மம், நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகளின் மீதான கடுமையான விமர்சனம் போன்றன இம்மரபு வழிவந்த கலைஞர்களிடம் இருந்தது. .ஆர்.ராமசாமி,என்.எஸ்.கிருஷ்ணன்,எம்.ஆர்.ராதா மற்றும் எம்.ஜி.ராமச்சந்திரன் போன்றவர்களது திரைப்படங்கள் தமிழக சமூகத்தில் அதுவரை பேசப்படாத சமூகத்தின் விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வைப் பேசுவதாக அமைந்தன.

இலட்சியவாதம் இருந்த அளவில், நாடக மேடைப் பிரச்சார வசனங்கள் இருந்த அளவில் இந்தத் திரைப்படங்களில் யதார்த்த வாழ்வு என்பது இருக்கவில்லை. மனிதர்களுக்கிடையிலான, ஆண் பெண்களின் உறவுச் சிக்கல்களுக்கிடையிலான பரிமாணங்களை இவர்களது படங்கள் கொண்டிருக்கவில்லை. கதாநாயகன்-வில்லன் மரபையும், கதாநாயகி-வில்லி மரபையும் திராவிட இயக்கத்தவர்களின் படங்கள் இறுக்கமாக முன்வைத்தன. பெண்களின் உடலைப் பண்டமாக்கியதில், பெண்களை உச்சத்தில் கற்புக்கரசி அதில் தவறினால் வேசி எனச் சித்தரித்தவையாக பிற்கால திராவிட இயக்கப் படங்கள் இருந்தன. கலைஞர் கருணாநிதியின் மனோகரா பட வசனத்தில் உருவான ‘வசந்தசேனை’ எனும் பாத்திரமும், அவளது அரசியல் சக்தியும் இன்று வரையிலும் திராவிட இயக்கத்தவரைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கும் திரைப்பூதமாக இருந்துகொண்டிருக்கிறது.

பெண்களை ஆடலரசிகளாக, சாகசக்காரிகளாகச் சித்திரித்ததில் திராவிட மரபு சார்ந்த திரைப்படங்களே முன்னணியில் நின்றன. நிலப்பரபுத்துவ மதிப்பீடுகளை விமர்சனம் செய்யப் புறப்பட்ட திராவிட இயக்கப் படங்கள்தான், அதே நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகளை பெண்கள் மீது கடுமையாகச் சுமத்திய படங்களாக அமைந்தன. முரசொலி மாறன் கதை வசனம் எழுதிய எங்கள் தங்கம் முதல் எம்.ஜி.ராமச்சந்திரனின் விவசாயி வரையிலான திரைச்சான்றுகள் இதற்கான ஆதாரங்களாக இருக்கிறது.

உலக அளவிலான யதார்த்தவாதக் கொடுமுடிப் படங்கள் புரட்சியை விளைந்த சமூகக் கடப்பாடுடைய கலைஞர்களிடமிருந்தே வந்தன. ரஸ்யாவின் செர்ஜி ஜஸன்ஸ்டைன், ஈரானின் அப்பாஸ் கியரோஸ்தாமி, கியூபாவின் தாமஸ் கிதராஸ் அலியா போன்றவர்கள் வாழ்வின் யதார்த்தங்களில் இருந்து, குறிப்பிட்ட வரலாறு, குறிப்பிட்ட புவிப்பரப்பு, குறிப்பிட்ட பாத்திரங்கள் என்பதாக தமது திரைப்படங்களை உருவாக்கினார்கள். அவர்களது திரைப்படங்களில் கெட்ட வில்லன்-யோக்கியமான கதாநாயகன் என்கிற ஒழுக்க பிம்மபங்கள் என்பது இல்லை. அதைப் போலவே தூய பெண்மைகள்-ஒழுக்கங் கெட்ட பெண்கள் என்கிற எதிர்மறைகளும் இல்லை. திராவிட இயக்கத்தவரின் படங்களில் இந்தக் குறிப்பிட்ட பண்புகள் எதுவுமே இருந்தில்லை.

தமிழக வரலாற்றை எடுத்துக் கொண்டால் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி போன்ற மகத்தான திராவிட இயக்க ஆளுமைகள் இருந்திருக்கிறார்கள். ஆய்வுக் கண்ணோட்டம் கொண்ட, வரலாற்று ஆவணக் கண்ணோட்டம் கொண்ட, விருப்புவெறுப்பற்ற மகத்தான வரலாற்றுத் திரைப்படங்கள் இவர்களது வாழ்வை முன்வைத்து எடுக்கப்பட்டிருக்க முடியும். யதார்த்த வாழ்வு சார்ந்த, புனிதப் பிம்பக் கட்டமைப்பு தவிர்ந்த இத்தகைய கலை படைப்புக்களை உருவாக்கக் கூடிய தூரதரிசனமோ திரைக் கலை சார்ந்த மேதமையோ திராவிட மரபினரிடம் இருக்கவில்லை.

இந்தி எதிர்ப்பு போராட்டம் என்பது தமிழக சரித்திரத்தையே மாற்றிய ஒரு அரசியல் நிகழ்வு. வரலாற்று ரீதியான ஆய்வுடன், அன்றைய சாகச மனிதர்கள் பற்றிய திரைக்காவியங்களை உருவாக்கக் கூடிய வாழ்பனுபவங்கள் அன்றைய நடவடிக்கையாளர்களிடம் இருந்தது. அத்தகைய யதார்த்தத் திரைப்படங்களை உருவாக்கக் கூடிய கருத்தியல் நேர்மையோ திரைக் கலை சார்ந்த மேதமையோ திராவிட இயக்கத்தவர்களிடம் இருக்கவில்லை. மாறாக முக்கரை வேட்டிக்காரன் வில்லன். இரு கரைவேட்டிக்காரன் புனிதன். கணவனுக்கு அடங்கிய மனைவி. வீட்டுக்கு வெளியிலான வேசி என்பதாகவே இவர்களது பிற்காலத்திய பாத்திரக் கட்டமைப்புக்கள் அமைந்தன. இதனால் தமிழில் உருப்படியான அரசியல் சினிமாவை உருவாகியிருக்கக் கூடிய வாய்ப்பை திராவிட இயக்கத்தினர் தவறவிட்டனர்.

திராவிட இயக்கத்தினரோடு ஒப்பிட தர்மபுரி நக்ஸலைட் பிரச்சினையை முன்வைத்து ஒரு யதார்த்தவாதப் படத்தினை அனல்காற்று எனும் பெயரில் கோமல் சுவாமிநாதன் கொடுத்தார். வெண்மணி பிரச்சினையை முன்வைத்து கண்சிவந்தால் மண் சிவக்கும் எனும் திரைப்படத்தை சிறிதர்ராஜன் கொடுத்தார். சூழலியல் மாசுக்கேட்டை முன்வைத்து ஹரிஹரன் ஏழாவது மனிதன் எனும் யதார்த்தப் படத்தைக் கொடுத்தார். ஆனால் மனோரதியமான கலாச்சார நிலைபாட்டைக் கொண்ட திராவிட இயக்கதவரிடமிருந்து எந்த விதமான யதார்த்தத் திரைப்படமும் உருவாகவில்லை. ஆனால் உலகத் திரைப்பட வரலாற்றில் கொண்டாடப்படுகிற அனைத்துத் திரைப்பட உன்னதங்களும் யதார்த்தவாதத்தை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்கள்தான்.

அநேகமாக காங்கிரஸ் கட்சியின் இந்திய தேசிய இலட்சியவாத சினிமா என்பதும் திராவிட இயக்கத்தவரின் தமிழ் இனமேன்மை இலட்சியவாத சினிமா என்பதும் கால வழக்கொழிந்ததாக ஆகிவிட்டது. திராவிட முன்னேற்றக் கழகம் தேசியக் கட்சி ஆகிவிட்டதும், அந்த இயக்கத்தவர்கள் இழப்பதற்கு நெடிது நிமிர்ந்து நிற்கும் சொத்துக்களும் பாராளுமன்ற அமைச்சர் பதவிகளும் இருப்பதால் அவர்கள் பேசிவந்த மொழி மற்றும் இனப் பெருமிதம் என்பது ஒரு குறியீடாக அல்லது நகல்போலி பிம்பமாக மட்டுமே எஞ்சி நிற்கிறது. ஈழத்தமிழர் பிரச்சினையில் தமிழினக் காவலராக கலைஞர் கருணாநிதி, காங்கிரஸ் கட்சியுடனான தேர்தல் கூட்டு கருதி, அவர் அமைத்திருக்கும் ‘இலங்கைத் தமிழர் உரிமைப் பேரவை’ ஒன்று மட்டுமே இதற்கான சாட்சியாதாரமாகப் போதுமானதாகும். இந்த அமைப்பு எந்த எதிர்ப்பியக்க உள்ளீடுமற்ற ஒரு வெற்று பிம்பமாகவும் குறியீடாகவும் மட்டுமே எஞ்சி நிற்கிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் மத்திய அரசு அதிகாரம் நோக்கிய அபிலாஷை மட்டுமே இந்தக் குறியீடாக எஞ்சி நின்றிருக்கிறது.

இந்து முஸ்லீம் பிரச்சினை முதல் சாதியப் பிரச்சினை ஈராக இந்திய அணுசக்தி வரையிலான தேசியக் கொள்கைகளில் காங்கிரஸ் கட்சிக்கென இறையாண்மை கொண்ட கடப்பாடுடைய இலட்சியவாத நிலைபாடுகள் என எதுவம் இன்று இல்லை. பாப்ரிமஜீத் தகர்ப்பு காங்கிரஸின் ஆட்சிக் காலத்தில்தான் நடந்தேறியது. குஜராத் பிரச்சினையில் காங்கிரசுக்குத் தெளிவில்லை. சாதியப் பிரச்சினையில் பிஜேபிக்கும் காங்கிரசுக்கும் நடைமுறையில் பெரிய வித்தியாசங்கள் இல்லை. தேசிய இனப் பிரச்சினை, உலக மயமாதலுக்கு எதிரான நக்ஸலைட்டுகளின் எழுச்சி, பழங்குடி மக்களின் கோரிக்கைகள் போன்ற ஜனநாயக இயக்கங்கள் பற்றிய நாடு தழுவிய பார்வை காங்கிரஸ் கட்சியிடம் இல்லை. ஆகவே திரைத் துறையில் இயங்குகிற இந்த மரபாளர்களிடம் வெறுமனே இந்திய தேசியப் பெருமிதம் தான் இருக்கிறதேயொழிய, பிரச்சினைகளின் யதார்தத்தத்தைச் சிந்திக்கிற சமூகவயமான பார்வை தேசியசார்பு இயக்குனர்களிடம் இல்லை.

இன்று இந்திய அளவில் மட்டுமல்ல, உலக அளவில் வாழும் இந்தியர்களிடமும் தமிழ் சினிமாவை உலக அளவுக்கு நிமிர்ததுகிற இயக்குனர்கள் எனப் பெயர் பெற்றவர்கள் இருவர். ஒருவர் மணிரத்தினம் மற்றவர் சங்கர். இந்தியாவைப் பாதிக்கிற சகல சமகாலப் பிரச்சினைகள் குறித்தும் வெற்றிகரமான வெகுஜனப் படங்களை இவர்கள் இருவரும்தான் எடுக்கிறார்கள் என்று ஒரு நம்பிக்கை பரவலாக இருக்கிறது.மணிரத்தினத்தின் ரோஜாவில் காஷ்மீர் பிரச்சினையைப் பேசினார். பம்பாய் படத்தில் இந்து-முஸ்லீம் பிரச்சினையைப் பேசினார். உயிரே திரைப்படத்தில் அஸாம் இனப் பிரச்சினை பற்றிப் பேசினார். கன்னத்தை முத்தமிட்டால் படத்தில் ஈழ இனப் பிரச்சினை பற்றிப் பேசினார். குரு திரைப்படத்தில் சுதந்திர வர்த்தக வலயம் குறித்த பிரச்சினையை அம்பானியின் வாழ்வை முன்வைத்துப் பேசினார். மணிரத்தினத்தின் தேசியம் குறித்த ரோஜா-உயிரே-கன்னத்தை முத்தமிட்டால் என மூன்று படங்களிலும் வரலாறு என்பது கதைக்கான பின்னணியாக மட்டுமே இயங்குகிறது. வரலாறு கதைக்குள் இடம்பெறவில்லை. ரோஜாவும் உயிரேயும் காதல் படங்கள். கன்னத்தை முத்தமிட்டால் தத்துப் பிரச்சினை பற்றிய படம்.

பொதுவாக தேசி இனப் பிரச்சினை குறித்த படங்கள் என்பது அரசியல் ஜனநாயகமும், மனிதப் பேரழிவும், கருத்தியல் முரண்பாடுகளும் குறித்த திரைப்படங்களாகவே இருக்க முடியும். உலக அளவில் அயர்லாந்து பற்றிய நீல் ஜோர்டன் இயக்கிய மைக்கேல் கோலின்ஸ் படத்தையோ அல்லது ஸ்பானிய உள்நாட்டுப் பிரச்சினை பற்றிய கென் லோச்சின் லேன்ட் அன்ட பிரீடம் படத்தையோ பார்க்கிற எவரும் இதனை உணர முடியும். மணிரத்தினம் படங்களில் மையமான பிரச்சினை ஓரங்கட்டபட்டு காதல் சிக்கல் அல்லது பாசச் சிக்கல் மையத்திற்கு வந்துவிடுகிறது. பம்பாய் படத்தில் பிரச்சினை குறிப்பான வரலாற்றுத் தரவுகளின்படி இடம்பெறுவதில்லை. நசுருதின் ஷா-ஸரிகா நடித்த குஜராத் படுகொலை பற்றிய பர்ஸானியா திரைப்படம் மணிரத்தினம் பாணிக்கு முற்றிலும் நேர்மாறான உலக அளவில் முக்கியமான இந்தியப் படம். குறிப்பான வரலாற்றுத் தரவுகளின் அடிப்படையில் அந்தப் படம் உருவாக்கப்பட்டது. வெறும் நல்லெண்ணத்தின் அடிப்படையில் ஒரு வரலாற்றுப் படத்தையோ அரசியல் யதார்த்தத் திரைப்படத்தையோ உருவாக்கி விட முடியாது. மணிரத்தினத்திடம் கருத்தியல் தேர்வுகளும் குறிப்பான வரலாற்றுத் தரவுகளும் தவறுவதால் அவரது திரைப்படங்கள் முக்கியமான அரசியல் திரைப்படங்கள் எனும் தகுதியைப் பெறுவதில்லை.

சங்கர், ஜென்டில்மேன் படத்தில் இட ஒதுக்கீடு, முதல்வன் படத்தில் அதிகாரவர்க்கம், இந்தியன் படத்தில் ஊழல், மற்றும் தேசபக்தி பற்றிப் பேசினார். இந்திய வல்லரசுக் கனவு அவரது படங்களில் இடம்பெறும் பொதுவான பிரச்சினையாக இருக்கிறது. சங்கரின் திறமையே அவரது படத் தொகுப்பு முறைதான். சங்கர் திரும்பத் திரும்ப அவ்வப்போதைய திரைப்படத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஒரே கதையைத் தான் சொல்லிக் கொண்டிருக்கிறார். இந்தியாவைத் திருத்தி அதனை வல்லரசாக உருவாக்கிவிட நினைக்கிற ஒரு அதிஉன்னத மனிதன், நீட்ஷேவின் பாஷையில் அதிமனிதன், அதற்குத் தடையாக இருக்கிற அனைத்து தேசவிரோதிகளையும் அழித்தொழிக்கிறான். ஜென்டில்மேன் துவங்கி சிவாஜி வரைக்கும் இதுதான் கதை. இடையில் வெளிநாட்டுக் கட்டிடங்களும் அழகிய பெண்களும் அவரது படங்களில் இடம்பெறுவார்கள். சங்கரின் பெண்கள் எந்தவிதமான சுயமான ஆளுமையுமற்ற சதைப் பிண்டங்கள். மணிரத்தினம் சங்கர் படங்களின் பெண் சித்தரிப்பிலிருந்து இவ்வகையில் கறாராக முரண்படுகிறார். மணிரத்தினத்தின் பெண்கள் சுயமரியாதையுள்ள, தனித்த ஆளுமை கொண்ட நடுத்தர வர்க்கத்துப் பெண்கள். மணிரத்தினத்தின் பங்களிப்பு என்பது ஆளுமையும் உளப்பாங்கும் கெண்டவர்களாக அவர் உருவாக்கிய பெண் பாத்திரங்கள்தான். இருவர், அஞ்சலி, கன்னத்தை முத்தமிட்டால் படங்களின் பெண் பாத்திரங்கள் என இவ்வகையில் நாம் குறிப்பிட்டுச் சொல்ல முடியும்.
குறிப்பிட்ட வரலாறும் பிரச்சினைகளும் தவிர்ந்த வகையில் மணிரத்தினமும் சங்கரும் உருவாக்குகிற படங்கள் படங்கள் காதல் ஜிகினா அரசியல் படங்கள் தவிரவும் பிறிதில்லை. பிறிதொரு வகை தேசபக்திப் படங்கள் இருக்கிறது. போலீஸ் அதிகாரி அல்லது ராணுவ அதிகாரி, இந்தியாவைக் குலைக்க எல்லைதாண்டி வரும் இஸ்லாமியர்களை நையப்புடைத்து துவம்சம் செய்யும் திரைப்படங்கள். அர்ஜூன் விஜயகாந்த் போன்றவர்கள் தாமே தயாரித்து நடிக்கும் திரைப்படங்கள் இவ்வகையிலான படங்கள். சென்னையின் பேட்டை ரவுடிகள் என்கவுன்டர் போலீஸ்காரர்கள் என்று அடிக்கடி இதனது பார்முலாவை மாற்றிக் கொண்டாலும் பிரச்சினையில்லை. அஜீத், சூர்யா, விக்ரம் என்று முண்டாவை முறுக்கிக் கொண்டு, காக்க காக்க என்றும் சாமி என்றும் ஆஞ்சநேயா என்றும் வருவார்கள். விஜயகாந்தும் அர்ஜூனும் இந்திய அளவில் வல்லரசு அல்லது ஜெய்ஹிந்த் எனும் பெயரில் வருவார்கள். முதலில் உள்ளுர் ரவுடி, பிற்பாடு காஷ்மீர் வில்லன், அப்புறமாக பாகிஸ்தான் வில்லன். கதாநாயகன் தேசியக் கொடிக்கு ஸல்யூட் அடிக்கும் தமிழன். வரலாற்றுணர்வோ யதார்த்தாம் பற்றின பிரக்ஞையோ இல்லாத, திகிலடைய வைக்கும் பாலியல் வல்லுறவுக் காட்சிகள் கொண்டதாக இவர்களது தேசபக்தப் படங்கள் இருக்கும்.

லியாகத் அலிகான் வசனம் எழுதுகிற படங்கள், ஆர்.கே.செல்வமணியின் படங்கள், பாரதிராஜாவிடமிருந்து வந்த என்னுயிர்த் தோழன் மற்றும் செந்தமிழ்ச்செல்வன் போன்ற படங்கள் என இவை அனைத்துமே திமுக-அதிமுக-மதிமுக அரசியல் கலாச்சாரத்தை விமர்சிக்கும் படங்கள்தான். இந்தப் படங்கள் எதுவுமே, குறிப்பாக எந்த வரலாற்றுச் சூழலில் இருந்த எந்த அரசியல் கட்சியைச் சித்தரிக்கிறோம் என்கிற எந்தக் குறிப்பீடும் இருக்காது. இவர்கள் எல்லோரது படங்களிலும் இரட்டைக் கரை வேட்டி, தோளில் தவழும் துண்டுகள், செந்தமிழ் மேடைப் பேச்சுக்கள், லஞ்சம் ஊழல் எல்லாமும் பற்றி வீராவேசமான நக்கலகள் இடம்பெறும். ஆயினும் ஒன்றில் கூட குறிப்பான அரசியல் கட்சி அல்லது தலைமை குறித்த விமர்சனங்கள் இருக்காது. மேலும் அவலமானது யாதெனில் இதே இயக்குனர்கள் திராவிட இயக்கக் கட்சிகளின் தலைவர்கள் சார்பாகவும் பேசுவார்கள். அந்தக் கட்சிகளின் சார்பாளர்களாகவும் இருப்பார்கள். பார்வையாளனைக் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டபடி இவர்கள் அரசியல் அதிகாரம் நோக்கிப் போய்க் கொண்டிருப்பார்கள். டி.ராஜேந்திருக்கு ஒரு கட்சி. பாக்யராஜுக்கு ஒரு கட்சி. ஆர.எம்.வீக்கு ஒரு கட்சி. திராவிட இயக்க மரபு தோற்றுவித்தது போல, திரைப்படத்தை மையம் கொண்ட, அதிகாரப் பேராசை கொண்ட கட்சிகள் உலகில் எங்கும் தோன்றியதில்லை என நாம் திட்டவட்டமாகச் சொல்ல முடியும்.

இந்திய அளவில் அல்லது தமிழக அளவில் கொந்தளிப்பான அரசியல் பிரச்சினைகளாக எவையெவை இருக்கின்றன என சிந்தித்துப் பார்ப்போமெனில், இந்து முஸ்லீம் பிரச்சினை அதில் பிரதான இடம் பெறுவதை நாம் அவதானிக்க இயலும். கோவைக் குண்டுவெடிப்பும் அதைத் தொடர்ந்த அனுபவங்களும் தமிழக மட்டத்தில் நம்முன் இருக்கிறது. அடுத்ததாக சாதியப் பிரச்சினை இருக்கிறது. தாமிரபரணிப் படுகொலைகள் ( ஆர்ஆர்.சீனிவாசன் இது பற்றி நதியின் மரணம் எனும் பெயரில் அற்புதமானதொரு ஆவணப்படம் எடுததிருக்கிறார்), தின்னியம் கொடுமைகள், உத்தப்புரம் சாதியச்சுவர்ப் போராட்டம் என நிறைய வரலாற்றுச் சம்பவங்கள் இருக்கின்றன. தேசிய இனப் பிரச்சினை எனும் அளவில் இலங்கைத் தமிழர் பிரச்சினை தமிழகத்தில் முக்கியமான பிரச்சினையாக இருக்கிறது. அகதி முகாம்கள் தமிழகமெங்கும் பரந்துகிடக்கிறது. அதனது வரலாற்றை நம் அறிந்திருக்கிறோம். இயக்கங்களுக்கு இடையிலான மோதல் நமக்கு முன் இருக்கிறது. அவசரநிலைக் காலத் தமிழக அனுபவங்கள் இருக்கிறது. இந்தி எதிர்ப்புப் போராட்ட அனுபவங்கள் இருக்கிறது. வெண்மணி ( பாரதி கிருஷ்ணகுமார் வரலாற்று ரீதியான தரவுகளுடன் வெண்மணி என ஒரு ஆவணப்படம் எடுத்திருக்கிறார்), தர்மபுரி அனுபவங்கள் இருக்கிறது. வீரப்பனது வாழ்வு குற்றத்தன்மைக்கும் காவல்துறை எனும் அதிகார அமைப்புக்கும் இடையிலான உறவை ஆழந்து விசாரிக்கும் வகையில் வரலாறாக நம்முன் இருக்கிறது. பா.ஜீவானந்தம், அண்ணா, கு.காமராஜ், பெரியார், பாரதியார், வள்ளலார் போன்ற ஆளுமைகள் தமிழக வரலாற்றில் நெடிது நிமிர்ந்து நிற்கிறார்கள். இந்த வரலாறு வெறும் புராணக் கதைகள் இல்லை. ஆறாவதற்கும் அடுத்த தமிழ்ப் புனைகதைக் காப்பியங்களும் இல்லை. இவை நமது சமகால வரலாறு. ஐம்பதாண்டு கால தமிழக வரலாறு.

நமது கண்களுக்கு முன்பாக இருபத்தி ஐந்து ஆண்டுகளாக நிகழ்ந்து கொண்டிருக்கிற, தமிழக மக்களின் வாழ்வோடு கலந்த அனுபவங்கள் தோய்ந்த ஒரு பிரச்சினை இலங்கைத் தமிழர் பிரச்சினை. இப்பிரச்சினையைப் புரிந்துகொள்ள வரலாற்று நூல்களைப் புரட்ட வேண்டிய அவசியமும் கூட இல்லை. நடந்து வந்திருக்கிற சம்பவங்களை ஞாபகமூட்டிக் கொண்டாலே போதும். இப்பிரச்சினை குறித்த அற்புதமான அரசியல் திரைப்படங்களை தமிழக இயக்குனர்கள் உருவாக்கி இருக்க முடியும். ஆனால் நிகழ்ந்தது என்ன? மணிரத்தினத்தின் கன்னத்தை முத்தமிட்டால் ஈழப் பிரச்சினையை தத்தெடுக்கும் பிரச்சினையாக அணுகியது. ஆர.கே.செல்வமணியின் குற்றப் பத்திரிக்கை அபத்தமான தமிழ் சினிமா வில்லன்கள் கதாநாயக நண்பர்கள் என்பதாக இப்பிரச்சினையை அணுகியது. புகழேந்தியின் காற்றுக்கென்ன வேலியில் சந்தித்துக் கொள்ளும் இந்திய அமைதிப் படை அதிகாரியும் ஈழப் போராளிப் பெண்ணும் உரையாடல் அற்ற அந்தகவெளியில் சந்திக்கிறார்கள். ராமேஸ்வரம் மறுபடியொரு வித்தியாசக் காதல் கதையாக ஈழ அகதிகளின் பிரச்சினையை அணுகியது. தெனாலியில் கமல்ஹாஸன் சாதிக் கலவரம், மதக்கலவரம் என்பதற்குப் பிரதியாக ஈழப் பிரச்சினையை முன்வைத்தார். தமிழ் மொழிமாற்றம் செய்யப்பட்ட ஓரளவு அரசியல் தன்மை கொண்ட கன்னடப்படமான ரமேஷின் ஸயனைட் தமிழில் குப்பி ஆகியது. திரில்லர் பட அனுபவமே இப்படத்தின் பிரதான சுவையாக ஆகியிருந்து. இந்த படங்கள் எவையும் எந்த வகையிலும் குறிப்பான ஈழஅரசியல், கருத்தியல் முரண்பாடுகள், வரலாற்றுச் சம்பவங்கள், அந்த மக்கள் எதிர்கொண்ட பேரவலங்கள் என்பவற்றை அடிப்படையாக் கொண்டதாக உருவாகவேயில்லை. ஜான்மகேந்திரன் ஈழ நிலப்பரப்பிலேயே உருவாக்கிய ஆணிவேர் படம் கூட தமிழக-ஈழக் காதலர்களுக்கிடையில் ஈழப் பின்னணி எனும் வழக்கமான தமிழ் சினிமா பார்முலாவே செயல்பட்டது. ராஜீவ் காந்தி படுகொலைப் பிரச்சினையை காலம்-இடம்-அரசியல் நீக்கப்பெற்ற அறம்சார்ந்த பிரச்சினையாகத் தனது டெரரிஸ்ட் திரைப்படத்தில் உருமாற்றியிருந்தார் சந்தோஷ் சிவன்.

உணர்ச்சிவசமான மனோரதியமான இலட்சியவயமான கதை சொல்லலையே இந்திய தேசிய மற்றும் திராவிட இன மரபுத் தமிழ் சினிமா நமக்கு முன்பாக உருவாக்கி விட்டிருக்கிறது. கலைஞர் கருணாநிதி தனது வசனங்களின் மூலம் உருவாக்கி வைத்த உணர்ச்சிவசமான சினிமா நமக்கு முன் இருக்கிறது. மணிரத்தினமும் சங்கரும் உருவாக்கி வைத்த அடர்ந்த நிறங்களிலான கனவுமயமான பிம்பங்களின் புகை மண்டலம் நமக்கு முன் இருக்கிறது. வரலாறும் யதார்த்த மனிதர்களும் எழுந்து நடக்கும் அரசியல் ரீதியான வரலாற்றுணர்வு கொண்ட திரைப்பட மரபு எமக்கு இல்லை.

ரித்விக் கடக், சத்யஜித் ரே, மிருணாள்சென் என அந்த மரபு வங்காளத்தில் இருக்கிறது. தோப்பில் பாஸி, அரவிந்தன், ஜான் ஆப்ரஹாம், அடூர் கோபாலகிருஷ்ணன், லெனின் ராஜேந்திரன் என அந்த மரபு நமது அண்டை மாநிலமான கேரளத்தில் இருக்கிறது. தமிழகத்திலும் அத்தகைய சினிமாவை முயன்று பாரத்தவர்கள் என ஹரிஹரனும், கோமல் சுவாமிநாதனும், ஜான் ஆப்ரஹாமும், ருத்ரைய்யாவும், அருண்மொழியும் நமக்கு முன் இருந்திருக்கிறார்கள். எனினும் இந்த ஐம்பதாண்டு கால வரலாறு மற்றும் திரைப்பட அழகியலைச் சுவீகரித்துக் கொண்ட வகையில் காத்திரமான அரசியல் திரைப்படங்களை தமிழில் நாம் உருவாக்கியிருக்கிறோமா? ஐஸன்ஸ்டீனின் பேட்டல்ஷிப் போதம்கின் அல்லது கிதராஸ் அலியாவின் மெமரீஸ் ஆப் அன்டர் டெவலப்மென்ட் போன்ற உலக அளவிலான அரசியல் திரைப்படங்களோடு ஒப்பிடக் கூடிய வகையிலான திரைப்படங்களை நாம் உருவாக்கி இருக்கிறோமா? அல்லது லெனின், ஒமர் முக்தார், ஜின்னா போன்ற ஆளுமைகள் பற்றிய திரைப்படங்களோடு ஒப்பிடுமாறான தமிழக ஆளுமைகள் குறித்த திரைப்படங்களை நாம் உருவாக்கி இருக்கிறோமா? வேண்டாம் பிற இந்திய மொழிகளில் உருவாகி இருக்கிற அரசியல் திரைப்படங்கள் போன்ற, ஆளுமைகள் குறித்த திரைப்படங்கள் போன்று நாம் உருவாக்கி இருக்கிறோமா? வங்காளத்தில் நக்ஸலைட் பிரச்சினை பற்றி கோவிந்த நிஹ்லானி ஸவ்ராஸ் கி மா என உருவாக்கியபோன்று ஒரு திரைப்படம் தமிழில் இருக்கிறதா? ஜாபர் பட்டேல் உருவாக்கிய அம்பேத்கர் திரைப்படத்தின் வரலாற்றுணர்லுடன், கருத்தியல் தோய்வுடன் எமது பெரியார் படத்தினை நாம் ஒப்பிட்டுப் பேச முடியுமா?

தமிழகம் மகத்தான அரசியல் நிகழ்வுகளையும், சமூக உற்பவங்களையும் தனக்குள் கொண்டிருக்கிறது. இவ்வரலாற்றில் நேர்ந்த மனித அவலங்களை, உறவுச் சிக்கல்களை தனக்குள் கொண்டிருக்கிறது. இவற்றைத் திரைவெளியில் சொல்லக் சுடிய வராற்று உணர்வோ அல்லது யதார்த்தத் திரைப்படக் கலை சார்ந்த மேதமைகளோ எம்மிடம் இல்லை. உணர்ச்சிவசமான கதையாடல்கள், கனவுமயமான புனைவுலகுகள் போன்றவற்றைத் தாண்டி, வரலாற்று ரீதியிலும் குறிப்பாகவும் யதார்த்தமான தமிழ்வாழ்வை என்று எமது இயக்குனர்கள் சிந்திக்கத் தலைப்படுகிறார்களோ, அன்றுதான் தமிழில் காத்திரமான அரசியல் சினிமா தோற்றம் பெறும். அதனது உயர்ந்தபட்ச வரலாற்று மற்றும் காட்சிரூப அழகியல் அர்த்தத்தில் இன்று தமிழில் அரசியல் சினிமா என்பது துப்பரவாக இல்லை.