தமிழில் சினிமா சஞ்சிகைகள்

பேசாப்படங்கள்., தமிழ் நாட்டில் 1897 ஆம் ஆண்டு தொடங்கி, 1932 வரை திரையிடப்பட்டன. முதலில் சென்னை பிறகு திருச்சி, பின்னர் மதுரையை தொடர்ந்து கோவை என்று பெருநகரங்களில் மட்டுமே அத்தகைய திரையிடல்கள் நடைபெற்றன. பின்னர் சாமிக்கண்ணு வின்செண்ட் என்பவரின் முயற்சியால் சின்னச் சின்ன ஊர்களில் கூட ‘டெண்ட்’ கொட்டகைகள் என்றழைக்கப்பட்ட தற்காலிகத் திரையரங்குகள் பரவலாக நிறுவப்பட்டதால், தென்னிந்தியா முழுவதும், திரையிடல்கள் பரவியதுடன், பேசாப்படத் தயாரிப்பும் பல ஊர்களிலும் நடந்தது என்பது வரலாறு.

சலனப்படங்கள் என்ற புத்தம் புதிய அறிவியல் விந்தையை, மேல்தட்டு மக்களும், மத்திய தரப்புத் தமிழர்களும், இலக்கிய கர்த்தாக்களும் வரவேற்கவில்லை. சினிமாவை பாமர, கீழ்த்தட்டு மக்களின் பொழுதுபோக்கு என்றே படித்தவர்களும் கருதினர்.

திரையரங்குகள்தான் தமிழ்நாட்டின் முதலாவது ‘சமத்துவப்புரங்கள்’ எனலாம். சாதி, மத, மொழி பேதமின்றி, ஒளிகுறைந்த அரங்கினுள் அருகருகே அமர்ந்து கீழ்த்தட்டு மக்கள் ரசித்தனர். அதை மேல்தட்டு மக்கள் உதாசீனப்படுத்தினர்.
அப்படியே, அக்கால கட்டத்தைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்களும், எழுத்தாளர்களும் கூட, சலனப்படங்களின் வரவைக் கண்டு, கொள்ளாததால் பேசாப்படங்களைக் குறித்த செய்திகளை அவர்கள் அதிகமாக எழுதவில்லை அதனால்தான் பேசாப்படங்களைக் குறித்த முழுமையான தகவல்கள் இன்றளவும் நமக்கு கிடைக்கவில்லை.

”ஹிந்து”, “மெட்ராஸ் மெயில்” போன்ற ஆங்கில தினசரிகளில் கூட மேலைநாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்டு, திரையிடப்பட்ட சில பேசாப்படங்களைப் பற்றிய சில தகவல்கள் வெளிவந்தனவே தவிர, தென்னிந்தியாவில் உருவாக்கப்பட்ட நூற்றுக்கும் அதிகமான பேசாப்படங்களைக் குறித்த செய்திகள் அரிதாகவே வெளியிடப்பட்டன.
அன்றைய தமிழ் நாளிதழ்களிலும், ஒரு சில மாத இதழ்களிலும், இசை, நடனம், நாடகம் ஆகிய கலைகளைப் பற்றியும் அத்தகைய நிகழ்வுகளைக் குறித்தும் தான் செய்திகளும் விமர்சனங்களும் எழுதப்பட்டனவே தவிர, பேசாப்படங்கள் அலட்சியப்படுத்தப்பட்டன.

இந்தப் பின்னணியில் பேசாப்பட காலத்தில் சென்னையில் தோன்றிய முதல் இதழ் “மூவி மிர்ரர்” (Movie mirror) என்ற ஆங்கில சஞ்சிகைதான்! கல்கத்தாவில் ஒரு திரைப்படத்தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த எஸ்.கே.வாசகம் என்பவர் 1927- 28ல் அந்த மாத இதழைக் கொண்டு வந்தார்.

மூன்றாண்டுகளுக்குப் பிறகு 1931ல் அவரே “அம்யூஸ்மெண்ட் வீக்லி” (Amusement weekly) என்ற ஒரு வார இதழை ஆங்கிலம் – தமிழ் இரு மொழிகளிலும் வெளிக்கொணர்ந்தார். பேசும்படங்கள் வரத்தொடங்கிய பிறகும் சில ஆண்டுகள் அந்த வார இதழ் வந்து கொண்டிருந்தது. 1931 முதல் 1936க்குள் “Stage and screen”, “Flash” , “Talk – A- Tone”, “Kine – sports” ஆகிய ஆங்கில இதழ்கள் வரத் தொடங்கின.
”Sound and Shadow” என்ற இதழானது லண்டனிலிருந்து வந்து கொண்டிருந்த “Sound and Light” என்ற ஆங்கில சினிமா சஞ்சிகையின் பாணியிலேயே அமைந்திருந்தது. அதன் ஆசிரியராக இருந்தவர். “முருகதாசா” என்று புனை பெயர் வைத்துக்கொண்ட முத்துச்சாமி ஐயர் ஆகும். அந்த இதழில் ஓவியங்கள் வரைந்ததுடன், புகைப்படங்களையும் சேர்த்து “லே- அவுட்” எனப்படும் வடிவமைப்பைச் செய்ததும் ஏ.கே.சேகர் அந்த இதழைப் படித்து வந்த கே.ராம்நாத் என்பவர் தான் எடுத்த சில புகைப்படங்களையும் கொண்டு வந்து கொடுத்தார். அவையும் அந்த சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்டன. மூவரும் நெருங்கிய நண்பர்களாயினர்.

”சவுண்ட் அண்ட் ஷேடோ” இதழ் அன்றைய பம்பாய் நகரிலும் விற்பனையானது. அந்நகரத் திரையுலகப் பிரமுகர்கள் பலரும் அந்த சஞ்சிகையால் கவரப்பட்டார்கள். மேதை வி.சாந்தாராமும் அவர்களுள் ஒருவர்.
1933- ல் சாந்தாராம் “சீதா கல்யாணம்” என்ற படத்தை மராத்தி, இந்தி, தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் தயாரிக்கத் தீர்மானித்தார். தமிழ்நாட்டில் அவருக்குத் தெரிந்திருந்த மூன்று தமிழர்களின் பெயர்கள் முருகதாசா, ராம்நாத், சேகர். அவர்கள் மூவரையும், தான் தயாரிக்க இருந்த “சீதா கல்யாணம்” தமிழ்ப்பதிப்பில் பணியாற்ற கோலாப்பூர் வரமுடியுமா என்று கேட்டுக் கடிதம் எழுதினார் சாந்தாராம்.

மூவரும் உடனே கோலாப்பூருக்கு விரைந்தனர். அங்கு படத்திற்கான தமிழ், வசனங்களை எழுதியதுடன், இயக்கத்திலும் உதவியாளராகப் பணியாற்றினர் முருகதாசா. ஒளிப்பதிவில் உதவி செய்தார் ராம்நாத். “ஆர்ட் டைரக்‌ஷன்” உதவியாளரானார் ஏ.கே.சேகர் !. இப்படித்தான் பத்திரிகையாளர்களாக இருந்த அந்த மூவரும் திரைப்படத்துறையில் நுழைந்தனர். கோலாப்பூரில் சாந்தாராமின் பிரபாத் ஸ்டுடியோவில் திரைப்பட உருவாக்க நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு மூவரும் மதராஸ் பட்டணத்திற்கு திரும்பினர்.
இங்கு தமிழ்ப் படங்களைத் தயாரிக்கும் திட்டத்துடன் “வேல்பிக்சர்ஸ்” என்ற நிறுவனத்தைத் தொடங்கினர். முருகதாசா பல படங்களை இயக்கினார். கே.ராம்நாத் பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து “ஒளிப்பதிவு மேதை” என்று புகழ் பெற்றார். ஏ.கே.சேகர் (”சந்திரலேகா” படத்தின் ”முரசு நடனம்” உள்பட) ஏராளமான படங்களில் கலை இயக்குனராகப் பணியாற்றி முத்திரை பதித்தார்.
ஆனால், துணை விளைவாக அவர்களது சஞ்சிகையான “சவுண்ட் அண்ட் ஷேடோ” நின்றுபோனது.
1935ல் பி.எஸ். செட்டியார் என்பவர் “சினிமா உலகம்” என்ற முதல் முழுத் தமிழ்ச்சினிமா இதழைத் தொடங்கினார்.

பேசாப்பட யுகத்திலும், பேசும் படங்கள் வரத் தொடங்கி சில ஆண்டுகள் வரையிலும், நடிக நடிகையர்க்கு அவ்வளவாக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. நட்சத்திர- அந்தஸ்தும் அவர்களுக்கு இல்லை. அவர்களெல்லாம் மாதச்சம்பளம் வாங்கிக்கொண்டுதான் அக்காலப் படங்களில் நடித்தனர். ஆகவே, திரைப்படங்களில் நடித்தவர்களை விட படங்களின் நேர்த்தி அல்லது நேர்த்தியின்மை ஆகியவை பற்றியே அன்று அதிகமாக எழுதப்பட்டது. அன்றைய சினிமா விமர்சனங்கள் கூட இன்றைய விமர்சனங்களை விட அதிக அளவில் கலை ரீதியாக சினிமாவின் இயல்புகள் பற்றியும் நேர்த்தி பற்றியுமே சுட்டிக்காட்டி விமர்சித்தன.
உதாரணத்துக்கு இரண்டு விமரிசனங்களைப் பார்க்கலாம்:-

ஒரு லட்சம் ரூபாயை முதன் முதலாகப் பெற்றுக்கொண்டு கே.பி.சுந்தராம்பாள், “நந்தனார்” பாத்திரத்தில் நடித்த “பக்த நந்தனார்” படம் 1935ல் வெளிவந்தது. 11 – 8 – 1935 தேதியிட்ட “சினிமா உலகம்” இதழில் வந்த விமரிசனம் :-

”பகவான், நந்தனின் கனவில் வந்து, “நாற்பது வேலி நிலங்களும் பயிர் செய்தாகி விட்டது” என்றவுடன், நந்தன் எழுந்து பார்க்கும்போது, வயல்களில் செழித்து வளர்ந்திருந்த நெற்கதிர்கள் ஒன்றோடொன்று முத்தமிடுவது போல, ஐந்தாறு “டிஸ்ஸால்வுகள்” (Dissolves) காண்பிக்கப்பட்டிருப்பது, இப்படத்தை டைரக்ட் செய்தவருடைய அனுபவத்தையும், படம்பிடிப்பவருடைய திறமையையும் தெள்ளென விளக்கிக் காட்டுகிறது...”

அதே படத்திற்கு அன்றைய காலகட்டத்தில் “ஆனந்த விகடன்” இதழின் ஆசிரியராக இருந்த ’கல்கி’, அவர்கள் எழுதிய விமரிசனம் இப்படி இருந்தது:-

... “நந்தனார் படத்தில் பனைமரம், எருமைக்கடா, வெள்ளாடு ஆகியவை நன்றாக நடித்திருந்தன....”
”தினமணி” நாளிதழில் வெளிவந்த விமரிசனத்தில்... “பெண்கள் ஆண் வேஷத்திலும், ஆண்கள் பெண் வேஷத்திலும் நடிக்கிற கேலிக்கூத்துகள் நாடகமேடையோடு ஒழியட்டும், சினிமாவுக்கு வேண்டாம்” என்று எழுதினார், ”தினமணி”, ஆசிரியர் ராமரத்னம்.!
தமிழில் வெளிவந்த முதல் பேசும் படம் என்று அறியப்படும் “காளிதாஸ்” 31 – 10 – 1931 அன்று சென்னையில் ‘கினிமா செண்ட்ரல்’ (சினிமா அல்ல) என்ற திரையிரங்கில் வெளியிடப்பட்டது. முன்னதாகவே அப்படம் பத்திரிகையாளர்களுக்கு திரையிடப்பட்டது. அதனால் அன்றைய “சுதேசமித்திரன்” நாளேடு 29 – 10 – 1931 அன்றே ஒரு விளம்பரத்தையும் விமரிசனத்தையும் வெளியிட்டது. அது கீழ்க்கண்டவாறு இருந்தது.

சென்னை படக்காட்சிகள்
மிஸ்.டி.பி.ராஜலட்சுமி நடிக்கும்
”காளிதாஸ்” கினிமா செண்ட்ரல்

”தென்னிந்திய நாடகமேடையில் கீர்த்தி வாய்ந்து சிறந்து விளங்கும் மிஸ்.டி.பி.ராஜலட்சுமி முதன்முறையாக சினிமாவில் தோன்றுவதை, இவளை நாடக மேடையில் கண்ணுற்ற அனைவரும் பார்க்க இது சமயமாகும்! தமிழ் தெலுங்கு பாஷையில் தயாரிக்கப்பட்டுள்ள இப்பேசும் படம் சில வாரங்கள் இங்கு செல்லும் என்று எளிதில் கூறலாம்...... டி.பி.ராஜலட்சுமி (நான்கு பாடல்களை) இனிய குரலுடன் பாடுகிறாள். வார்த்தைகள் தெளிவாக இருப்பது படத்தின் மேன்மையை அதிகரிக்கிறது. மிஸ் ஜான்சிபாயும், மிஸ்டர் ஆர்.டி.யும் செய்த கொரத்தி நடனமும் இதில் அடங்கியிருப்பது அவசியம் காணத்தக்கது.

இப்படத்திற்கு “கல்கி” அவர்களும் 1931 ஆம் ஆண்டு “ஆனந்த விகடன்” இதழில் விமரிசனம் எழுதியிருந்தார்.

இதிலிருந்து, தமிழில் பேசும் படங்கள் வரத் தொடங்கியவுடனேயே ஒரு நாளிதழில் விமரிசனமும் எழுதப்பட்டிருக்கிறது என்பது தெளிவாகிறது. பின்னர் “ஆனந்த விகடன்”, “கல்கி” போன்ற வார இதழ்களும் திரைப்பட விமரிசனங்களை பிரசரித்தன. பேராசிரியர் என்றறியப்பட்ட “கல்கி” அந்த இரு இதழ்களிலும் சினிமா விமரிசனங்களை எழுதிய முன்னோடியாகத் திகழ்ந்திருக்கிறார். (”கர்நாடகம்” என்பதுஅவரது புனைப்பெயர்)
”மணிக்கொடி” கால எழுத்தாளரான “சிட்டி” சுந்தர்ராஜன் , 1936ஆம் ஆண்டு “சில்வர்ஸ்க்ரீன்” என்ற இதழில் திரைப்பட விமர்சனத்தைப் பற்றிக் கூறும்போது “தமிழ் டாக்கிகளைப் பற்றி எழுதுவதென்றால், கசப்பான மருந்து சாப்பிடுவது போல இருக்கிறது. “ என்று எழுதியிருக்கிறார்.

இதிலிருந்து அன்றைய பிரபலமான எழுத்தாளர்களும், இதழாசிரியர்களும், இலக்கிய விமரிசனப் பார்வையுடனேயே திரைப்பட விமரிசனத்தையும் எழுதியிருக்கின்றனர் என்று புரிந்துகொள்ளலாம். அதே நேரத்தில், இலக்கிய இதழ்கள் கூட திரைப்படங்களையும், திரைப்பட விமர்சனங்களையும் தவிர்க்கவில்லை என்பதும் தெரிய வருகிறது.

ஆக பேசும் திரைப்படங்கள், தொடர்பான செய்திகளையும், விமர்சனங்களையும் வெளியிட்ட சஞ்சிகைகளை கீழ்க்கண்டவாறு புரிந்துகொள்ளலாம்.

1. தின இதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள், என்ற மூன்று வகை இதழ்களிலும் திரைப்படங்கள் குறித்த செய்திகளும், விமர்சனங்களும் இடம் பெற்றிருக்கின்றன.

2. முழுக்க முழுக்க திரைப்படங்களுக்காகவே வெளியிடப்பட்ட இதழ்களுடன் இலக்கியப் பத்திரிகைகளிலும் சில பக்கங்கள் திரைப்படங்களுக்காக (1930 – 1940 களிலேயே) ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

3. அரசியல், மற்றும் இதர செய்திகளை முக்கிய செய்திகளாக வெளியிட்ட தினசரி, வார இதழ்களிலும், திரைப்படங்களைப் புறக்கணிக்காமல் சினிமா செய்திகளும் விமரிசனங்களும் வந்துள்ளன.
4. “இந்து நேசன்” போன்ற மஞ்சள் பத்திரிகைகள் 1940 களிலேயே திரைப்படக் கலைஞர்களைக் குறித்து ஆபாசமாக, கேவலமாக எழுதி “பிளாக் மெயில்” செய்துள்ளன. (இன்றளவும் “கிசு கிசு” என்ற பெயரில் அந்த வழக்கம் தொடருகிறது என்பது கண்டிக்கத்தக்கது.)

5. “குண்டூசி”, “பேசும்படம்”, “பொம்மை” போன்ற மாத இதழ்கள் “கிசுகிசு”க்களையும், வம்புகளையும் தவிர்த்துவிட்டு, கவர்ச்சிப் படங்களை நம்பாமல், வர்த்தக நோக்குடன் என்றாலும், வரம்பு மீறாமல் சினிமா செய்திகளைத் தாங்கி வெளிவந்தன.

1935லிருந்து இன்று வரையிலான திரைப்பட இதழ்களின் பட்டியல் (இப்பட்டியல் முழுமையானதல்ல)

மாத இதழ்கள்:

1. “சினிமா உலகம்” – 1935 - பி.எஸ். செட்டியார்

2. ”ஆடல் பாடல் “ - 1936 – வீரராகவன்
3. “கலை”
4. “கலைச்செல்வி”
5. “குண்டூசி” - - கோபால்
6. ”பேசும்படம்” - - T.V.ராம்நாத்
7. “பொம்மை” - 1966 – 1996 – விஸ்வநாத ரெட்டி
8. “தமிழ்ப்படம்”
9. “பித்தன்”
10. “சினிமா ரசிகன்”
11. “தென்றல் திரை” - 1954 - கே.ஆர். பாலன்
12. “சினிமா செய்தி “ - 1960 - ஏ.வி.பி. ஆசைத்தம்பி
13. “பிக்சர் நியூஸ்” - 1966 - வி.நாராயணன் – எஸ்.மல்லிகார்ஜீனன்.
14. “புரட்சிக்கொடி” - 1970 - மின்னல்காந்தன்
15. ”மதி ஒளி” (TABLOID) - சண்முகம்
16. “இதயக்கனி” - வினுயன்
17. ”திரையுலகம்” - துரைராஜ்
18. “கலைப்பூங்கா” - ராவணன்
19. ”சினிமா மெயில்” - ஏ.கே.சதீஷ்
20. “சிலுக்கு சினிமா” - சங்கர் கணேஷ்
21. “திரைநீதி” - செல்வம்
22. “சினிமா ராணி” - 1971 - கலையமுதன் பூமிநாதன்
23. “காந்தம்” - 1971 - செல்வம்
24. “காட்டன்” - 1974 - ஏ.வி.சங்கர்
25. ”திரைச்சித்ரா” - 1977 - எம்.பி.மணி
26. ”கலைச்சங்கு” - 1977 - ஏ.வி.சங்கர்
27. “நாரதம்” 1940- 1950 - சீனிவாசராவ், ஆனந்தவிகடன் குழுமம்
28. “திரை” லீனா மணிமேகலை
29. “சினிமா”
30. ”பொக்கிஷம்” - மேஜர் தாசன்
31. ”காட்சிப்பிழை – திரை” - ஆசிரியர் சுபகுணராஜன்

இருவார இதழ்கள்

1. மின்னொளி

2. சினிமா எக்ஸ்பிரஸ் - ராமமூர்த்தி (இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம்)
3. “பிலிமாலயா” - எம்.ஜி.வல்லபன்
வார இதழ்கள்

1. “அம்யூஸ்மெண்ட் வீக்லி” (Amusement weekly) (ஆங்கிலம் - தமிழ்)

2. “தமிழ்சினிமா” - கரீம்
3. “சித்ராலயா” - ஸ்ரீதர்
4. “ஜெமினி சினிமா”
(குறிப்பு: “பின்” அடிக்காமல் TABLOID என்ற முறையில் வெளிவந்தவை “தமிழ்சினிமா”, “சித்ராலயா” மற்றும் “மதி ஒளி”)

இரு மாத இதழ்கள்

1. ”சலனம்” - 1990 - 1993 - கல்யாணராமன்
2. “நிழல்” - 2001 முதல் இன்றுவரை., ஆசிரியர் ’அரசு’ (ப.திருநாவுக்கரசு)
(52 இதழ்கள் வந்துள்ளன)
3. ”படப்பெட்டி” - சிவ.செந்தில்நாதன்

சில குறிப்புகள்:

1. பல இலக்கியப் பத்திரிகைகளும், திரைப்படங்கள் குறித்த செய்திகளுக்கும், நேர்மையான விமர்சனங்களுக்கும் இடமளித்தன. அவை:-
1. மணிக்கொடி
2. சரஸ்வதி
3. எழுத்து
4. கசடதபற
5. பிரக்ஞை
6. இனி
7. சுபமங்களா
8. புதியபார்வை
9. அம்ருதா
10. தினமணி கதிர்
11. தீராநதி

2. வர்த்தக வார இதழ்களான “ஆனந்தவிகடன்”, “கல்கி” , ”குமுதம்”, “ குங்குமம்”, “தினமணி”, “கதிர்”, “சாவி” போன்றவற்றிலும் திரைப்படங்கள் தொடர்பான செய்திகளும், விமர்சனங்களும் முக்கிய இடம் பிடித்தன.

3. பாரம்பரிய இலக்கிய மாத இதழ்களான “கலைமகள்”, “அமுதசுரபி” இரண்டும், அண்மைக்காலம் வரை “சினிமா” என்றாலே தவிர்த்து வந்தவை; ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இந்த இரண்டு இதழ்களிலும் ஆழமான விமரிசனங்களும், ஆய்வுக்கட்டுரைகளும் இடம்பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

4. வர்த்தக சினிமா இதழ்களில் 1940களிலிருந்து சுமார் ஐம்பதாண்டுகள் தொடர்ந்து வெளிவந்த “பேசும்படம்” திரையுலகைச் சார்ந்தவர்களால் பெரிதும் மதிக்கப்பட்டதாகும். ஒவ்வோராண்டும் அதன் ஏப்ரல் மாத இதழில் அதற்கு முந்தைய ஆண்டு 12 மாதங்களிலும் வெளியான தமிழ்ப்படங்களின் பெயர்ப்பட்டியலையும் இதர விவரங்களையும் தெளிவாகக் குறிப்பிட்டு அந்தப் படங்களிலிருந்து சிறந்த படம், சிறந்த கதை, சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், நடிகை, மற்ற தொழில் நுட்பாளர்கள் ஆகியோரைப் பாரபட்சமின்றித் தேர்ந்தெடுத்து பாராட்டியதலையும் பிரசுரிப்பார்கள். இந்த வகையில் முன்னோடியாகத் திகழ்ந்தது “பேசும்படம்”!
5. முன்னதாக, “கோபால் “ என்பவர் ஆசிரியராக இருந்து வெளியிட்டு வந்த “குண்டூசி” மாத இதழும் திரையுலகைச் சார்ந்தவர்களிடமும், வாசகர்களிடமும் மிகவும் பிரபலமாகத் திகழ்ந்ததுடன், அக்கால கட்டத் தகவல்களுக்கான ஒரு “களஞ்சியம்” ஆகவும் இன்றளவும் நாடப்படுவதாகும்.
6. பி.நாகிரெட்டி அவர்களின் முயற்சியால் பதிநான்கு மொழிகளில் வெளிவந்த “அம்புலிமாமா” மாத இதழ் குடும்பத்தை சேர்ந்த “பொம்மை” மாத இதழ் நேர்த்தியான காகிதம், தரமான அச்சடிப்பு, வண்ண வண்ணப் புகைப்படங்கள், ஆழமான கட்டுரைகள் ஆகியவற்றால் மிகவும் பிரபலமாவதுடன், வர்த்தக ரீதியில் 1966 முதல் 1996 வரை முப்பதாண்டுகள் முதலிடத்தில் இருந்தது. நாகிரெட்டியாரின் புதல்வர்களில் ஒருவரான விஸ்வநாத ரெட்டி “பொம்மை”யின் ஆசிரியராவார்.
7. “இந்தியன் எக்ஸ்பிரஸ் – தினமணி” குழுமத்தினரால் 1980ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு இன்றுவரை தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் இரு வார இதழ் “சினிமா எக்ஸ்பிரஸ்” அதன் முதலாவது ஆசிரியராகப் பணியாற்றியவர் மூத்த பத்திரிக்கையாளரான ராம மூர்த்தி, பாரபட்சமின்றி சினிமா செய்திகளையும் விமர்சனங்களையும் வெளியிட்டு ஒரு நல்ல மரபை உருவாக்கினார் அவர். திரையுலகைச் சேர்ந்தவர்களிடம் “சினிமா எக்ஸ்பிரஸ்” இதழ் மீது மதிப்பும், மரியாதையும் இருந்து வருகிறது. சில காலம் முன்பு, “சிறந்த தமிழ்ப்படம்” “சிறந்த கதாசிரியர்”, “சிறந்த நடிக, நடிகையர்”சிறந்த இயக்குனர்” போன்ற விருதுகளையும் பல ஆண்டுகள் பரிசளிப்பு விழாக்கள் நடத்தி வழங்கி வந்தது. (அந்த வகையில் ஃபிலிம்ஃபேர் ஆங்கில இதழ் நீண்ட காலமாக வழங்கி வரும் திரைப்பட விருதுகளை “சினிமா எக்ஸ்பிரஸ்” விருதுகளுக்கு முன்னோடி என்று சொல்லலாம்.) அண்மைக்காலங்களில் அந்த இதழில் இடம்பெறும் திரைப்பட விமரிசனங்கள், நடிக – நடிகையருக்கு ஜால்ரா தட்டாமல், பாரபட்சமின்றி, ஆக்கபூர்வமான விமரிசனங்களாக அமைந்துள்ளன.
8. வர்த்தக சினிமா இதழ்களான “குண்டூசி”. “பேசும்படம்”, “பொம்மை”, “சினிமா எக்ஸ்பிரஸ்”, “ஜெமினி சினிமா”போன்றவை, மாற்று சினிமா முயற்சிகளையோ ஆவணப்படங்களையோ கண்டுகொள்ளவில்லை!
9. கரீம் என்பவர் ஆசிரியராக இருந்து நடத்திவந்த “தமிழ்சினிமா” என்ற வார இதழ் (TABLOID முறையில் வந்துகொண்டிருந்தது.) 1950களில் பெரும் பரபரப்பை உண்டாக்கி வந்தது. “கருடப்பார்வை” என்ற தலைப்பில் ஒவ்வொரு இதழிலும் ஆசிரியரே எழுதி வந்த திரை விமரிசனங்கள் மிகவும் கடுமையானதாகவும், கண்டிப்புடனும் இருந்த காரணத்தினால், தமிழ்படத் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும், “தமிழ்சினிமா”வின் விமரிசனங்களைப் பயத்துடனேயே எதிர்நோக்கி இருந்தனர். திரையுலகினரின் ஆதரவு இல்லாததால், விளம்பரங்கள் என்ற போஷாக்கும் கிடைக்காமல் அந்த இதழ் நிறுத்தப்பட்டது.
10. முத்திரை பதித்த வித்தகரான இயக்குனர் ஸ்ரீதர் வர்த்தக சினிமாவின் முகத்தையும் முகவரியையும் மாற்றி அமைத்தவராகும். அவர் தமது படத்தயாரிப்பு நிறுவனத்தின் பெயராலேயே “சித்ராலயா” என்ற வார இதழைத் தொடங்கி சில ஆண்டுகள் வெளியிட்டு வந்தார். ஸ்ரீதரது வலது கரமாகத் திகழ்ந்த “சித்ராலயா கோபு”தான் அந்த TABLOID இதழின் ஆசிரியராவார். தொழில்நுட்ப உத்திகள் குறித்த கட்டுரைகள் அந்த இதழின் சிறப்பம்சமாகத் திகழ்ந்தது.
11. ”ஜெமினி ஃபிலிம் சர்க்யூட்” என்ற பட விநியோக நிறுவனத்தின் சார்பாக பழனியப்பன் ராமசாமி என்பவர் தொடங்கி நடத்திய ‘”ஜெமினி சினிமா “ என்ற வார இதழ் வண்ணப்புகைப்படங்களுடன் வணிகரீதியாகப் பல ஆண்டுகள் வந்துகொண்டிருந்தது. ஜெமினி சினிமா , ராமச்சந்திரன் என்பவர் பொறுப்பாசிரியராகப் பணியாற்றினார்.
12. எம்.ஜி.வல்லபன் என்ற எழுத்தாளர், பாடலசிரியர், வசனகர்த்தா, “ஃபிலிமாலயா” என்ற இதழைத் தொடங்கியதுடன் அதன் ஆசிரியராகப் பல ஆண்டுகள் பணியாற்றினார். வணிக ரீதியானது தான் என்றாலும், தமிழ்த்திரையுலகை ஒரு விமரிசனப் பார்வையுடன் அணுகியது ஃபிலிமாலயா! வல்லபனின் மறைவுக்குப் பிறகு அந்த இதழும் நிறுத்தப்பட்டது.
13. “ இதயக்கனி” என்ற மாத இதழ் நடிகர் எம்.ஜி.ராமச்சந்திரனின் புகழ்பாடும் ஒரு “விசிறி” சஞ்சிகையாகவே இன்றளவும் கொண்டு வரப்படுகிறது. அதன் ஆசிரியர் : விஜயன்! “இதயக்கனி” போல ஏராளமான “விசிறி” இதழ்கள் அவ்வப்போது தோன்றுவதும் மறைவதுமாக இருந்து வருகின்றன.
14. ”வண்ணத்திரை”, “சினிக்கூத்து”, “டைம்பாஸ்” போன்ற இதழ்கள் மிகக்கேவலமாக, நடிகைகளின் சதைக் கவர்ச்சியை மட்டுமே காசாக்கிக் கொண்டு ஆபாசப் பிழைப்பு பிழைத்து வருகின்றன.

இனி மாறுபட்ட சில சினிமா சஞ்சிகைகள் குறித்துப் பார்க்கலாம். :-

1. “திரை” – “கனவுப்பட்டறை” என்ற ஓர் அமைப்பு பல திரையுலகம் தொடர்பான நூல்களையும், பிறவகை நூல்களையும் வெளியிட்டு வந்தது. ஆவணப்பட இயக்குனர் லீனா மணிமேகலை, ஜெரால்டு இருவரும் இணைந்து அப்பணிகளை மேற்கொண்டு வந்தனர். அவர்கள் 2005ஆம் ஆண்டு “திரை” என்ற மாத இதழைத் தொடங்கினர். லீனா மணிமேகலையே ஆசிரியராகப் பணியாற்றினார். அந்த இதழ் “சிறு பத்திரிக்கை” என்றும் இல்லாமல் “பொம்மை” “சினிமா எக்ஸ்பிரஸ்” போன்ற வணிக இதழ்கள் போலவும் இல்லாமல், இரண்டு வித அம்சங்களையும் கொண்டிருந்தது. பதினைந்து ரூபாய் விலையில், அச்சுப்பிழை அதிகமில்லாது, நேர்த்தியான வடிவமைப்புடன் மேலட்டை, பல வண்ணங்களுடனும், உள்ளே கருப்பு – வெள்ளைப் புகைப்படங்களுடனும் வெளியிடப்பட்டது.

முதல் இரண்டு இதழ்களில் தொடர்ந்து லீனா மணிமேகலை – பாலுமகேந்திரா (நீண்ட நேர்காணல் இடம்பெற்றது) பிரபஞ்சன், ட்ராஸ்ட்கி மருது, அ.ராமசாமி, அருண்மொழி, யுகபாரதி, எம்.சிவக்குமார், வசந்தகுமார், தியடோர் பாஸ்கரன், அறந்தை மணியன் ஆகியோரின் ஆய்வுப்பூர்வமான, ஆழமான கட்டுரைகளும் தொடர்கட்டுரைகளும் அடுத்தடுத்து அச்சேறின.

இயக்குனர் கே.ராஜேஷ்வர் “திரைக்கதை எழுதுவது எப்படி” என்ற தலைப்பில் தொடர்கட்டுரை ஒன்றை நேர்த்தியாக எழுதி வந்தார். 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தொடங்கப்பட்ட “திரை” மாத இதழ் 2006ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் நிறுத்தப்பட்டது. நிறைய நஷ்டப்பட்டுவிட்டதாக காரணம் சொன்னார் லீனாமணிமேகலை.

2. “சலனம்”

திரைப்பட சஞ்சிகைகளில் முதலாவது “சிற்றிதழ்” என்று “சலனம்” இருமாத
இதழைக் குறிப்பிடலாம். அத்துடன் ஒரு திரைப்பட சங்கம் வெளிக்கொணர்ந்த முதலாவது தமிழ் இதழ் என்றும் அதைக் குறிப்பிடலாம். (பல திரைப்பட சங்கங்கள் ஆங்கிலத்தில் தான் சஞ்சிகைகளை நட்த்தி வந்தன)

1980களின் தொடக்கத்தில் சென்னை நகரில் பத்துக்கும் மேலான திரைப்பட சங்கங்கள் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக இயங்கி வந்தன. அவற்றில் ஒன்றாக, திரைப்பட இயக்குனர் கே.ஹரிஹரன் தலைவராக இருக்க எம்.சிவக்குமார், யூகி சேது, ஜோஸஃபின், போன்ற திரைப்படங்களை நன்கு பயின்று புரிந்து கொண்டவர்கள் செயற்குழுவில் பணியாற்ற மறைந்த ஒளிப்பதிவாளர், இயக்குனர் நிமாய்கோஷ் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. ”சென்னை ஃபிலிம் சொஸைட்டி”. தொடங்கி பத்தாண்டுகளுக்குப் பிறகு அத்திரைப்பட சங்கம், ஒரு சினிமா – சிற்றிதழை வெளியிட வேண்டுமென முடிவெடுத்த காரணத்தால் உருவெடுத்ததுதான் “சலனம்” இரு மாத இதழ். ஐந்து ரூபாய் விலையில் பளபளப்பு ஏதுமின்றி, சாணித்தாள் என்று சொல்லக்கூடிய காகிதத்தில் அச்சிட்டு வெளிவந்தது. 1991ஆம் ஆண்டு ஆகஸ்ட் செப்டம்பரில் முதல் இதழின் பொறுப்பாசிரியராக அன்றைய “சென்னை ஃபிலிம் சொஸைட்டி”யின் செயலாளராக இருந்த கல்யாணராமன், பொறுப்பேற்று 1994ஆம் ஆண்டு பிப்ரவரி – மார்ச் இதழ் வரை “சலனம்” இதழைக் கொண்டு வந்தார். மாற்று சினிமா ஆர்வலர்களிடமும் திரைப்பட சங்க உறுப்பினர்களிடமும் மிகவும் பிரபலமடைந்தது. “சலனம்”. ஆசிரியர் குழுவில் இருந்த ஆவணப்பட இயக்குனர் அம்ஷன் குமார், வெ.ஸ்ரீராம், எம்.பாலசுப்ரமணியன் ஆகியோர் பல நேரடிக்கட்டுரைகளை எழுதியதுடன், மொழிபெயர்ப்புகளையும் செய்து கொடுத்தனர். “உலக சினிமா சாதனையாளர்கள்” என்ற தலைப்பில் பதினாறு பேர்கள் குறித்த நீண்ட ஆய்வுக்கட்டுரைகளை “தேசிய திரைப்பட ஆவணக்காப்பகத்”,தின் இயக்குனராக இருந்த பி.கே.நாயர் அவர்கள் அனுப்பி வைக்க, அவற்றை அறந்தை மணியன் தமிழில் மொழியாக்கம் செய்து கொடுத்தார்.

3. ”நிழல்”

“இது வெறும் இதழில்லை – ஓர் இயக்கம்” என்ற சொற்றொடருக்குச் சரியான எடுத்துக்காட்டாக விளங்கும் சஞ்சிகை “நிழல்” என்பதில் ஐயமில்லை. தொடக்கம் முதலே “வர்த்தக” இதழ்களுக்கும் “சிற்றிதழ்களுக்கும்”இடைப்பட்ட நிலைப்பாட்டை எடுத்துக்கொண்டு இன்றுவரை அதைத் தொடர்ந்து பின்பற்றி வரும் “நிழல்” 2001ஆம் ஆண்டு ஆகஸ்டு, செப்டம்பரில் உருவெடுத்தது. முன்னதாக 1995ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட “நிழல் நடமாடும் திரைப்பட இயக்கத்” தின் நீட்சியே இதழ் வெளியீடும், நூல்கள் பதிப்பிப்பதும் ! வணிகப் படங்கள் , குறும்படங்கள், ஆவணப்படங்கள் ஆகியவற்றைப் பெருநகரங்களில் மட்டுமல்லாது சிற்றூர்களிலும் திரையிட்டுக்காட்டுவதற்காகவே தோன்றிய அந்த இயக்கம் முதல் பத்தாண்டுகளுக்குள்ளாகவே, ஏறத்தாழ ஐநூறு திரையிடல்களை நிகழ்த்தியது. இதற்காக ஐம்பது படங்களை முன்கூட்டியே சேகரித்து வைத்த பிறகுதான் கிராமங்களை நோக்கி, நகரும் புரொஜக்டர்கள்” என்ற வகையில் திரையிடும் கருவிகளை சுமந்துகொண்டு தமது பயணத்தைத் தொடங்கினார், “ப.தி.அரசு” என்றும் “ப.திருநாவுக்கரசு” என்றும் “ப.சோழநாடன்”என்றும் தம்மை அழைத்துக்கொண்ட இளைஞர். சென்னை கலைஞர் கருணாநிதி நகரின் அருகே உள்ள ராணி அண்ணா நகர்தான் அவருடைய தலைமையகம்.

ஏற்கனவே அவர் பத்திரிக்கையாளராகவும், நூலாசிரியராகவும், “தாமரைச் செல்வி” பதிப்பக உரிமையாளராகவும் இருந்த படியால், திரைப்பட சஞ்சிகை தொடங்குவது அவருக்கு எளிதாகவே இருந்தது. (”நிழல்” இதழைத் தொடங்கவதற்கு முன்பாகவே பதினாறு நூல்களைப் பதிப்பித்திருந்த அனுபவம் அவருக்கிருந்தது.)

”தி.சு.சதாசிவம்”, அம்ஷன்குமார், அருண்மொழி, மா. பாலசுப்ரமணியம், அமரந்தா, விஸ்வாமித்ரன், இசக்கியப்பன் ஆகியோரை “ஆசிரியர் குழு”என்று அருகருகே வைத்துக்கொண்டு, இரு மாத இதழாக பதினைந்து ரூபாய் விலையில் கருப்பு, வெள்ளைப் புகைப்படங்களுடன் முதல் இதழைக் கொண்டுவந்தார் அரசு. (அதில் தன்னை ’ஆசிரியர்’ என்று அச்சிட்டுக்கொள்ளவில்லை)
பின்னர், இதழை முறையாகப் பதிவு செய்த பிறகுதான் தம்மை, ‘ஆசிரியர்’ என்றும் மற்றவர்களை ‘ஆசிரியர் குழு’ அன்றும் அச்சிட்டார்.

முதலாம் ஆண்டு நிறைவதற்குள்ளாகவே இதழை வண்ணமயமாக்கினார். ஆழ்ந்த ஆய்வுக்கட்டுரைகள், நீண்ட நேர்காணல்கள், விமரிசனங்கள், மற்றும் திரைப்பட விழாக்கள் குறித்த செய்திகள் என்று தொடக்க ஆண்டுகளில் கவனம் செலுத்தியவர் பின்னர் மாற்று சினிமாவுக்கான களமாக “நிழல்” இதழை மெல்ல மெல்ல உருமாற்றம் செய்தார். இன்று ஆவணப்படங்களுக்காகவும் குறும்படங்களுக்குமான முக்கிய தொடர்புச் சாதனமாக விளங்கும் ஒரே இதழ் “நிழல்” எனச்சொல்லலாம்.

பின்னர் “நிழல் வெளியீடு” என்ற பெயரிலேயே நூல்களை வெளியிட்ட அரசு “குறும்படப் பயிற்சிப் பட்டறை” நடத்தும் எண்ணத்தை செயல்படுத்தினார். அந்த வகையில் “பதியம்”, “தமிழ்நாடு குறும்பட ஆவணப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்” ஆகிய அமைப்புகளுடன் கூட்டாக இதுவரை 32 ஊர்களில் பயிற்சிப்பட்டறைகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளார். ஐந்து நாட்கள் நடைபெறும் அந்தப் பயிற்சி பட்டறைகளில் உள்ளூர், மற்றும் வெளியூர் ஆர்வலர்கள் என்ற வகையில் ஐயாயிரத்து இருநூறுக்கும் அதிகமான பங்கேற்பாளர்கள், ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, படத்தொகுப்பு, கதையெழுதுதல், இயக்கம், படமாக்கம், ஆகிய துறைகளில் பயிற்சிபெற்று ஏராளமான குறும்படங்களையும் ஆவணப்படங்களையும் உருவாக்கியுள்ளனர். ’டிஜிட்டல் காமிரா’க்களில் படம் பிடித்து கணினிகளில் படத்தொகுப்பு செய்து, யார் வேண்டுமானாலும் படம் எடுக்க முடியும் என்ற செய்தியை உலகுக்கு அறிவித்து வருவது “நிழல்” இதழும் அந்த இயக்கமும் தான்.

இன்றுவரை அநேகமாக ஐம்பது இதழ்கள் வெளிவந்துள்ளன. இன்று அதன் விலை முப்பது ரூபாய் ! ஏராளமான வண்ணப்படங்களுடன் நீண்ட நேர்காணல்கள், ஆய்வுக்கட்டுரைகள் குறும்படங்களைக் குறித்த செய்திகளுடன் ஆரோக்கியமாக வந்துகொண்டிருக்கிறது. “நிழல்” இருமாத இதழ்.

4. ”படப்பெட்டி”

தீவிர சினிமா ஆர்வலர்களுக்கான இதழாக வெளிவந்துகொண்டிருக்கும் முக்கியமான இதழ் இது. இன்னமும் பதிவு செய்யப்படாமலே வெளிவந்து கொண்டிருக்கும் இந்த இதழ் இதுவரை ஒன்பது இதழ்கள் வந்திருக்கின்றன. (மாத இதழ் இருமாத இதழ் என்றில்லாமல் அவ்வப்போது வருகிறது) “பரிசல்” புத்தக விற்பனை நிலையத்தை நடத்தி வரும் சிவ. செந்தில்நாதனின் தீவிர உழைப்பால்தான் “படப்பெட்டி” வரமுடிகிறது. இவரது ஆசிரியர் குழுவில் மா. பாலசுப்ரமணியன், சோமிதரன், இரா.குமரகுருபரன் போன்றோரும், ஆலோசகர்களாக ட்ராஸ்ட்கி மருது, ஷாஜி, ஆர்.ஆர்.சீனிவாசன், அமுதன், செழியன், மாமல்லன் கார்த்தி ஆகியோரும் இருக்கிறார்கள்.

சைக்கிளிலேயே சென்னை நகரைச் சுற்றி வந்து தான் வெளியிடும் நூல்களையும் கூடவே “படப்பெட்டி” இதழையும் வாசகர்களிடம் கொண்டு சேர்க்கிறார் செந்தில்நாதன். (இந்த வகையில் இவரை மற்றொரு சி.சு.செல்லப்பா எனலாம்.)

வர்த்தகரீதியான வெளியீடு இல்லை என்பதால் ஒவ்வொரு இதழையும் ஒரு சிறப்பு மலர் போலவே., ஒரு குறிப்பிட்ட “தலைப்பு (Topic)” உடன் கொண்டு வருகிறார். ஒன்பதாவது இதழ் “எழுத்தும் சினிமாவும்” என்ற தலைப்பில் தியடோர் பாஸ்கரன், சொர்ணவேல், யமுனா ராஜேந்திரன் ஆகியோர் எழுதிய கட்டுரைகள் இடம்பெற்றிருக்கின்றன. நாற்பது ரூபாய் விலையில் தொடங்கப்பட்ட “படப்பெட்டி”யின் ஒன்பதாவது இதழ் நூறு ரூபாய்.!

இதுவரை விவரிக்கப்பட்டுள்ள இதழ்களைத்தவிர “கோணம்” “அகவிழி” “இடரல்” “செவ்வகம்” ஆகிய இதழ்களும் வந்துகொண்டிருந்தன. ஆனால், அவையெல்லாம் பிற சிற்றிதழ்களைப் போலவே, வணிகப்போட்டியாலும், விளம்பரம் கிடைக்காமையும், விலைவாசி உயர்வின் காரணமாகவும் நின்று போயின.

”காட்சிப்பிழை – திரை” என்ற மாத இதழ் வணிக சினிமாவின் குறை – நிறைகளைப் பற்றி மட்டுமே அக்கறை காட்டுகிறது. மாற்று சினிமாத் துறையையும், சர்வதேசப் படங்களையும் அது அலட்சியப்படுத்துகிறது.

(இந்த கட்டுரையில் ஏதாவது சில இதழ்கள் விடுபட்டிருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் “பேசாமொழி” இதழுக்கு முழுவிபரங்களையும் அனுப்பி வைக்கலாம். )

இறுதியாக சில வார்த்தைகள்.......

திரைப்பட விமரிசகர்களுக்கு மட்டுமல்லாது திரைப்பட இதழ்களை நடத்துபவர்களுக்கும் கூட, அத்துறையின் நுணுக்கங்களும் வரலாறும் நன்கு தெரிந்திருக்க வேண்டும். அவற்றை அவ்வப்போது வாசகர்களுக்கு எடுத்துக்கூறும் அக்கறை வேண்டும். இதனால் ஏற்படும் நல்ல விளைவாக, விமரிசகர்கள், இதழ்களில் எழுதுவோர் ஆகியோர் மூலமாகத் தெரிந்து கொள்ளும் ரசிகர்களின் திரைப்பட ரசனை மேம்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ளும் திரைப்படப் படைப்பாளிகள் மாறுபட்ட தரமுள்ள திரைப்படங்களை உருவாக்குவதற்கு வேண்டிய உற்சாகத்தைப் பெறுவார்கள். திரைப்படங்களும் மேம்படும்!