தமிழ் ஆவணப்படங்கள் கல் மனிதர்கள் - குட்டி ரேவதி

உலகத்தில் கல் இல்லாத இடத்தை நம்மால் பார்க்கவே முடியாது. அவ்வளவு ஏன், ஒருவர் மிகவும் கடினமான மனம் படைத்தவராக இருந்தால், ‘அவனுக்கு கல் நெஞ்சம்பா’ என்று சொல்வதுதான் வழக்கம். ஆனால் கல் உடைக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கை அதை விட கடினமாக இருக்கிறது என்று இங்கு நம் எத்தனை பேருக்கும் தெரியும். கல்லுடைக்கும் தொழிலாளர்களின் வாழ்வை, அவர்கள் சந்திக்கும் அத்தனை சவால்களையும் அவலங்களையும் தோலுரித்துக் காட்டுகிறது, குட்டி ரேவதி இயக்கத்தில் வந்திருக்கும் ‘கல் மனிதர்கள்’ ஆவணப்படம்.

ஆவணப்படம் எடுப்பது அவ்வளவு எளிதல்ல. நடப்பவற்றை கேமிராவில் படம் பிடித்து விட்டு வந்தால் அது ஆவணப்படமாகி விடாது. அதற்கு ஆழமான தேடுதலும், ரிசர்ச் எனப்படும் ஆய்வும், மிக அவசியம். அதையும் அப்படியே யாரையாவது பேச விட்டால் மட்டும் போதாது. அதனை கோர்வையாக, ஒரு வகையான திரை மொழியுடன் சொல்ல வேண்டும். அப்போதுதான் அந்த ஆவணப்படம் அதன் தேவையை பூர்த்தி செய்வதுடன், சொல்ல வந்த விஷயத்தையும் மக்களிடம் முழுமையாக்க கொண்டு போய் சேர்க்க முடியும். இந்த இரண்டும் இணைந்து வரும் ஆவணப்படங்கள் தமிழில் எப்போதாவது தான் வருவதுண்டு. அப்படிப்பட்ட ஒரு படமாக வந்திருக்கிறது இந்த ‘கல் மனிதர்கள்’.
ஒரு கல்லுடைக்கும் தொழிலாளியின் வேலையில் ஆரம்பிக்கிறது படம். அவர் வார்த்தைகளூடே உடைக்கப்படும் மலைகளும் வெடிக்கப்படும் பாறைகளும் காட்டப்படுகின்றது. இங்கு தொடங்கி இறுதிவரை அந்த மனிதர்களின் வாழ்வில் உள்ள பல பரிமாணத்து பிரச்சினைகளை அவர்களுக்கு மிக அருகில் இருந்து சொல்கிறது படம்.

நாம் வாழும் வாழ்வில், நாம் பார்க்கும் மனிதர்களை வைத்தே சமூகத்தையும் உலகத்தையும் எடைபோடும் மனப்பான்மைதான் இங்கே அதிகம். அந்த வகையில் இது போன்ற மனிதர்களை பார்க்கும்போதே, ஒரு வித அதிர்ச்சி ஏற்படுகின்றது. அவர்களின் உழைக்கும் திறன், அதனாலேயே அவர்கள் சுரண்டப்படுவது, சாதி ஆதிக்கங்கள், பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள், அரசு, அதிகாரிகள் மற்றும் குத்தகைதாரர்களின் கூட்டு சதி, கொத்தடிமைத்தனம், இம்மக்கள் அனுபவிக்கும் தொழில் ரீதியான, குடும்ப ரீதியான, வாழ்வியல் ரீதியான, இருப்பு ரீதியான, அமைப்பு ரீதியான அத்தனை பிரச்சினைகளின் கோர முகத்துடன் அம்பலப்படுத்துகிறது.

ஆவணப்படம் பார்ப்பது நிறைய பேருக்கு அலுப்பூட்டும் ஒரு விஷயமாக தோன்றும். ஏனெனில் அதில் ஒரு கதை இருக்காது, கற்பனை இருக்காது, சுவாரசியம் இருக்காது என பல காரணங்களை கூறுவர். இது பல ஆவணப்படங்களைப் பொறுத்த வரை உண்மையும் கூட. ஆனால் இந்த ஆவணப்படத்தை பொறுத்த வரை, இக்குற்றச்சாட்டுகள் பொறுந்தாது எனதான் கூறுவேன். ஏனெனில் மொத்த ஆவணப்படமும், தொழிலாளர்களின் கதையைத் தான் சொல்கிறது. ஆனால் வெவ்வேற வடிவங்களில், வெவ்வேறு பரிமாணங்களில், வெவ்வேறு மனிதர்களின் மூலமாக. ஆழமாக பார்த்தால் இதை ஒரு கல்லுடைக்கும் தொழிலாளியின் பன்முகப் பிரச்சினையை அலசும் படமாகவும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அந்த பன்முகப் பிரச்சினையின் ஒவ்வோர் முகமும் ஒவ்வொருவரின் மூலம் வெளிப்படுகிறது. ஆண்கள், பெண்கள், முதியோர், குழந்தைகள், இவர்களுக்கு உதவும் அமைப்புகள் என ஒவ்வொருவரும் இந்த பிரச்சினையின் ஒவ்வொரு முகத்தை பற்றியும் சொல்கிறார்கள். இதுதான் இந்த ஆவணப்படத்தின் கதை சொல்லும் உத்தி.

சில ஆவணப்படங்களில், சிலர் பேசுகையில் அவர்களின் அலுவலகங்களிலோ அல்லது வீட்டுத்தோட்டத்திலோ அமர்ந்துகொண்டு பேசுவர். அது அந்த படத்திற்கு அந்நியமாய் தெரியும். ஆனால் இந்த படத்தில் தனது கருத்துக்களை கூறும் எவரும், அது ஆதரவு கருத்தோ, எதிர்கருத்தோ, அதை இந்த படம் பேசும் களத்தில் இருந்தபடியே பேசுகிறார்கள். இது மிகச்சிறப்பான ஒரு உத்தி. கல் உடைக்கும் இடத்தில், அது வெடிக்கப்படும் இடத்தில், மலை முற்றத்தில் என ஒவ்வொன்றும் கல் உடைப்போடு நெருங்கியிருக்கும் இடங்கள் தான். இது இந்த படத்தின் நம்பகத்தன்மையை அதிகரிக்க பெரிதும் உதவுகின்றது.
நான் பார்த்தவரை, கிராமத்து மனிதர்களிடம் கேமரா பற்றிய ஒரு ஆர்வமும் அச்சமும் ஒருசேர இருந்தாலும், அவர்களது பிரச்சினையை பேசும் போது அவை அனைத்தையும் களைந்து, தைரியமாக குரல் கொடுக்க முன்வருவர். சில வருடங்களுக்கு முன்பு ஒரு சர்வே விஷயமாக தென்னக கிராமங்களுக்கு கேமிராவுடன் சென்றபோது, அங்கே ரேஷன் கடைகளில் புழு ஊறும் அரிசி எப்படி சப்ளை செய்யப்படுகிறது என்றும் அதற்கு அந்த எம்.எல்.ஏ வே எப்படி ஆதரவு என்றும் சத்தமாக வெளிப்படுத்தினர். நகர்ப்புற மக்களிடம் இதுபோன்ற ஒரு போக்கு இருக்காது. அப்படியே சொன்னாலும் முகம் காட்டாமல், என் பெயரை போடாதீங்க என்ற கண்டிஷனுடன் தான் துவங்குவர்.

கல் மனிதர்களில், தங்கள் பிரச்சினைகளை பேசி இருக்கும் அத்தனை பேரும், அவ்வளவு சத்தமாக அதை வெளிப்படுத்தியுள்ளனர். இத்தனைக்கும் அவர்கள் கைநீட்டுவது குவாரி ஓனர்களை, அதிகாரிகளை, அரசாங்கத்தை. இந்த தைரியத்திற்கான காரணம் அதில் பேசும் ஒரு பெரியவரின் வார்த்தைகள் மூலம் உணரலாம். ‘நாங்க திருடல, யாரையும் ஏமாத்தல. உண்மையா உழைச்சு, நேர்மையா, ரத்தம் சிந்தி, ஒரு வாய் கஞ்சி குடிக்கிறோம். நாங்க எவனுக்கும் பயப்படத் தேவையில்லை’ எனக்கு எப்போதும் ஒரு ஆச்சரியமான கேள்வி தொக்கி நிற்கும். இதன் விடை அறிந்தாலும் இந்த கேள்வி எழந்து கொண்டேதான் இருக்கிறது. அடக்குபவர்களை விட, அடக்கப்படுபவர்களுக்குத் தான் கோபமும் வீரமும் அதிகம். இந்த கோபத்தை அப்படியே அடக்கும் வர்க்கம் மீது திருப்பினால் அது சிதைந்து தூள் தூளாகி விடாதா‘? ஆனால் அதற்கு வழி கொடுக்காமல் வைத்திருப்பதில்தான் இந்த ஆளும் வர்க்கத்தின் புத்திசாலித்தனமும், வெற்றியும் இருக்கிறது. இருந்தாலும் மீண்டும் அந்த ஒரு ஆசை எழுவதைத் தடுக்க முடியவில்லை. இதற்கான இன்னொரு முக்கியக் காரணம் அமைப்பு ரீதியான ஒருங்கிணைதல். அதனையும் இந்த படம் அலசியுள்ளது.

ஆதி ஆயுதம் கல் தான் என்று கல்லின் வரலாறு கூறி ஆரம்பிக்கும் படம், கல் இல்லாத இடமே இல்லை என்று கூறி, ஆனால் கல்லுடைக்கும் தொழிலாளர்கள் இருக்கும் இடங்கள் எப்படி இருக்கிறது பாருங்கள் என்று வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது. அவர்களின் இருத்தலுக்கான அடையாளங்களைக் கூடத் தராமல் அவர்களை எப்போதும் நாடோடிகளாகவே வைத்திருப்பதும் இந்த அதிகார வர்க்கத்தின் உத்திதான். சொந்தமாக வீடில்லை, பணமில்லை, வாங்குவதும் அட்வான்ஸ் பணம், அதையே காரணம் காட்டி வேறு எங்கும் வேலைக்கு போக முடியாமல் தடுக்கும் அடக்குமுறை என அவர்கள் வாழ்வில் ஏற்படும் பல திசைப் பிரச்சினைகளுக்கும் இப்படம் காது கொடுத்திருக்கிறது.

இப்படத்தின் இன்னொரு வெற்றி என்று நான் நினைத்தது, ஒரு குவாரி குத்தகைக்காரரையே பேச வைத்திருப்பதுதான். அவர் இந்த ஆவணப்படத்தின் நோக்கம் தெரிந்தும் பேசினாரா என்று தெரியவில்லை. ஆனால் அவரை பேச வைத்திருப்பது இயக்குநரின் புத்திசாலித்தனம். இது இரண்டு வகைகளில் உதவியிருக்கிறது. ஒன்று, முதலாளிகளின் கருத்துக்கும் நாம் செவி சாய்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது. அதை நிறைவேற்றியிருக்கிறது. இரண்டு, அவர் கருத்துக்களுக்கு ஒரு தொழிலாளியே காத்திரமான பதிலடி தரும்போது, பார்ப்போர் அனைவருக்கும் நியாயம் எது என்று அவர்களே புரிந்துகொள்ளக் கூடிய வெளியையும் உருவாக்கித் தந்திருக்கிறது. இப்படத்தின் சிறப்பம்சங்களில் இதுவும் ஒன்று.

ஆனால், அந்த முதலாளியே கூட, ‘எங்க குண்டு வெடிச்சாலும் இங்க வந்து எங்க லேபர புடிச்சுட்டு போயிடுறாங்க’ என்று சொல்லும்போதும், தொழிலாளிப் பெண் ஒருவர், குண்டு தயார் செய்யவும், பொருட்கள் வாங்கவும் எவ்வளவு பயந்து, மறைமுகமாக வேலை செய்ய வேண்டும் என்றும் சொல்லும் போதும், அதிகார வர்க்கமும், காவல்துறையும், எப்போதும் இருப்பவனிடத்தில் பம்மியும், இல்லாதவன் மீது காரணமின்றி பாய்ந்தும் வருகிறது என்பது வெட்டவெளிச்சமாகிறது.

இதுபோன்ற சூழ்நிலைகளில் வேலை செய்யும் பெண்களின் நிலைமை மிகவும் கொடூரம். அதையும் இந்தப்படம் மிகத் தெளிவாக பதிவு செய்திருக்கிறது. ஒரு பெண் பல வருடங்களாக பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டும் அதை வெளியே சொல்லாமல் அமைதி காத்திருப்பது தான் அந்த குவாரிக்காரர்களின் வெற்றி. அங்கிருக்கும் பெண்களின் அவல நிலை. இவ்விஷயம் வெளியே வந்து பிரச்சினை ஆகும் போது, அந்த குவாரிக்காரன் சொல்லும் பதில், ‘பல்லு கூட வௌக்க மாட்டா..அவ கூட யாராவது படுப்பாங்களா???’. ஆனால் உண்மையில் அவன் அந்த பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது உண்மைதான் என்று தெரிய வரும்போது, பெண் என்பவள் எப்படி மோகத்திற்கான பொருளாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறாள் என்பதும், ஆண்களின் வக்கிரபுத்தியின் உச்சமும் வெளிப்படுகின்றது.
சில குழந்தைகள் சுத்தியல் பிடித்து கல்லுடைக்கும் போது மனமும் வலிக்கின்றது. நிறைமாத கர்ப்பிணி கூட கல்லுடைத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பது முகத்தில் அறையும் அவலம். மேலும் அந்த குழந்தைகள் ஏன் தொடர்ச்சியாக படிக்க முடியவில்லை என்பதற்கு அந்த தொழிலாளர்கள் சொல்லும் பூகோள ரீதியான காரணங்களும், அதன் பின்னணியும், அவர்கள் விட்டு வெளியே வர முடியாத ஒரு அவலத்தின் கூக்குரல். ஆனாலும், இந்த நிலையிலும் சில பெண்கள் மேல்நிலைப்பள்ளி வரை நன்றாக படித்து, மேலும் படிக்க வேண்டும் என்ற ஆசையுடன், விளையாட்டிலும் சிறந்து விளங்குவது, அடுத்த தலைமுறை நிச்சயம் நிமிர்ந்துவிடும் என்பதற்கான ஒரு பிறந்த குழந்தையின் அழுகைச் சத்தம் தான்.

பொதுவாக உழைப்பாளிகள் என்றால் அவர்களுக்கு ஏற்படும் சுரண்டல்களைப் பற்றியும், அவர்கள் சுரண்டப்படுவதைப் பற்றியும் முழுதாக அறியாமல், அப்பாவிகளாக, அறியாமையிலும் தான் இருப்பார்கள் என்பது பொதுப்புத்தி. இந்த மக்களும் அப்பாவிகள் தான். ஆனால் இவர்கள் தாங்கள் சுரண்டப்படுவதை, குறிப்பாக யாரால் சுரண்டப்படுகிறோம், எப்படி சுரண்டப்படுகிறோம் என்பதையும் மிகத்தெளிவாக உணர்ந்தே இருக்கிறார்கள். ஆனால், அதிலிருந்து வெளியே வரும் வழி தெரியாமல் தான் தவித்தபடி இருக்கிறார்கள். கூலி, இடம், வறுமை என அவர்களை இதை எதிர்த்து போராடாமல் செய்பவை ஏராளம். இருந்தும், அவர்கள் இதையெல்லாம் தெரிந்து வைத்திருப்பதே போராடுவதற்கான ஒரு அடித்தளம் தான். அதைத் தாண்டி இவர்கள் அடுத்த கட்டத்திற்கும் சென்றிருக்கிறார்கள். அது, அமைப்பு ரீதியான ஒருங்கிணைப்பு.
இதுபோன்று ஒடுக்கப்படும் தொழிலாளர்களின் வாழ்வில் ஒரு ஒருங்கிணைத்த அமைப்பு முறையும், ஒற்றுமையாக ஒரு குடையின் கீழ் குவிந்து நின்று போராட வேண்டிய அவசியத்தையும், அதன் மூலம் கிடைக்கும் நன்மைகளையும் இந்த படம் தெளிவாக பட்டியல் போடுகிறது. தொழிலாளி பிரிந்திருக்கும் வரை முதலாளிக்கு கொண்டாட்டம் தான். தொழிலாளி இணைந்தால், அதுவும் ஒரு காரணத்திற்காக இணைந்தால், அதுவும் தான் சுரண்டப்படுவதை அறிந்து இணைந்தால், அதுவும் முதலாளியை எதிர்த்து இணைந்தால் முதலாளியின் பாடு திண்டாட்டம் தான். அவனும் அவன் முதலாளித்துவமும் தூளாவதைத் தவிர வேறு வழியில்லை. இதனால்தான் உலகெங்கும் முதலாளித்துவ அமைப்புகள், தொழிலாளர்கள் ஒன்றுபடும் அத்தனை வழிகளையும் அடைக்கப் பார்க்கின்றன. அந்த வகையில் இந்த தொழிலாளர்கள் ஒருங்கிணைப்பு அவர்கள் வாழ்வியல் போராட்டத்தில் எவ்வளவு அத்தியாவசியமானது என்று சொல்லவும் இந்த படம் தவறவில்லை. ‘சங்கம் வந்த பிறகு தான் முதலாளிகள் தொழிலாளிகளை அடித்து வேலை வாங்குவது நின்னுருக்கு’ என்ற ஒரு தொழிலாளியின் வாக்குமூலம் போதும். தொழிலாளர்களின் அவல நிலையை விவரிப்பதற்கும், அமைப்பு ரீதியான ஒருங்கிணைப்பு அவர்களுக்கு தந்திருக்கும் பாதுகாப்பிற்கும்.

சங்கம் மற்றும் வேறு சில கட்சிகள் எப்படி இந்த தொழிலாளர்களுக்கு அரணாக இருக்கின்றன என்றும் இந்த ஆவணப்படம் தெளிவுபடுத்துகிறது. அதே நேரத்தில், அந்த பகுதியை சுற்றியுள்ள ஊடகங்கள் இந்த பிரச்சினையை எந்தளவு முன்னெடுத்து இருக்கின்றன, அங்குள்ள அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் எந்தளவு உள்ளன, அரசும் அதிகாரிகளும் இந்த பிரச்சினை குறித்து என்ன சொல்கிறார்கள், போன்ற வேறு சில பரிமாணங்களையும் காட்டியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். மேலும், தொழிலாளர்கள் பேசும் போது, தொடர்ந்து ஒரே வகையான கல்லுடைக்கும் காட்சிகள், சில நீளமான காட்சிகள் தவிர்க்கப்பட்டிருந்தால் இப்படத்தின் சிறப்புத்தன்மை இன்னும் பலப்பட்டிருக்கும்.

பார்க்கும் பார்வையாளர்களை, ஒரு ஆவணப்படம் பார்ப்பதுபோல் அல்லாமல், நேரே அவர்கள் வாழ்க்கைக்குள் நுழைந்து பார்க்கும் ஒரு அனுபவத்தையும் உணர்வையும் தந்ததே ஒளிப்பதிவாளரின் வெற்றி. மேலும், ஆவணப்படத்திலும் இசை இரைச்சல் அதிகம் பயன்படுத்தப்பட்டு வரும் நேரத்தில், இசை என்று தனியாக எதுவுமே இல்லாமல். கல் உடைக்கப்படும் சத்தம், உளி சத்தம், பெண்கள் பாடும் பாட்டு, இறுதியில் அந்த தொழிலாளர்களைப் பற்றிய பாடல் இவற்றின் மூலமே காட்சிகளை நகர்த்திச் சென்றிருப்பது சுவாரசியமான ஒரு உத்தி.

பேசப்படாத மனிதர்களின் வாழ்வை, சொல்லப்படாத மனிதர்களின் கதையை, மறைக்கப்படும் வரலாறுகளை, புதைக்கப்படும் அடக்குமுறைகளை, மூடப்படும் கதறல்களை, அதிகாரவர்க்கங்களின் கோரமுகத்தை அப்படியே நேர்மையாக தோலுரித்துக் காட்டுவது தான் ஒரு கலைப்படைப்பின் உன்னத நிலை. அந்த உன்னத நிலையை இப்படம் நிச்சயம் எட்டியிருக்கின்றது. இப்படத்தின் இறுதியில் சூரிய ஒளியில் போடப்படும் வாசகங்கள், ‘இனி முன்போல், நாங்கள் வாழவும் முடியாது, நீங்கள் ஆளவும் முடியாது’. இது அனைத்து தொழிலாளர்களின் வாழ்விலும் நிஜமாகட்டும்

மொத்தக் குழுவினர்க்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும் !!!
* * *

இந்த ஆவணப்படத்தைப் பார்க்க: http://thamizhstudio.com/shortfilms_kalmanidhargal.php