தமிழ் குறும்படங்கள் கர்ண மோட்சம் - கூத்துக் கலையின் அழகியல்

சாதகத்தகத்தகத் தகதகவென் றாடோமோ?-சிவ
சக்திசக்தி சக்தியென்று பாடோமோ?
- பாரதி

கர்ண மோட்சம் - சிறந்த குறும்படத்திற்கான தேசிய விருது உட்பட அறுபதுக்கும் மேற்பட்ட விருதுகளை வாரிக் குவித்திருக்கும் குறும்படம். எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் இதற்கு கதை மற்றும் வசனம் எழுதியுள்ளார். இசை இரா.ப்ரபாகர். திரைக்கதை மற்றும் இயக்கம் முரளி மனோகர். தயாரிப்பு - எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம்.

அழிந்து வரும் தமிழரின் பாரம்பரியக் கலையான கூத்தினை வாழ்வாதாரமாகக் கொண்டு இயங்கும் கூத்துக் கலைஞன் ஒருவனின் ஒரு நாள் வாழ்வுதான் இந்த கர்ண மோட்சம்.

உண்ணும் உணவிலிருந்து, விளையாட்டு வரை துரிதப்படுத்தியே பழக்கப்பட்டு விட்ட இந்தத் தலைமுறைக்கான மற்றும் ஒரு படைப்பாக்க பரிமாணமே குறும்படங்கள். சொல்ல வந்ததை சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதொரு அரிய கலை. அவ்வளவு எளிதாக அனைவருக்கும் வாய்ப்பதில்லை. ஆயிரம் வார்த்தைகளில் சொல்ல வேண்டியதை ஐம்பது வார்த்தைகளில் அடக்குவது அவ்வளவு எளிதா என்ன? நீட்டி முழக்குதல் சுலபம். வெட்டிச் சுருக்குதல் கடினம்.

இரண்டு நிமிடங்களிலிருந்து இருபது நிமிடங்கள் வரை இருக்கக் கூடிய ஒரு குறும்படத்தில் பார்வையாளனை ஈர்ப்பதற்கு இருப்பதென்னவோ சில நொடிப் பொழுதுகள் மட்டுமே. அந்த உத்தியில் அழகாய் வென்றிருக்கிறார் முரளி மனோகர். இவர் கையாண்ட அந்த உத்தி என்ன இங்கே? கூத்திற்கான இசை பின்னால் ஒலிக்க, பெயர் போட்டுவிட்டு சட்டென்று ஆரம்பிக்கிறது படம். சுடர் விடும் தலைக்கவசம், ஜொலிக்கும் வண்ண வண்ண உடை, அப்பி அடர்ந்த முகவொப்பனை, கம்பீர நடை, உற்சாக இசை, ஒட்டிய மீசை என்று கர்ண வேஷம் தரித்தவாறு ஒரு பரபரப்பான நகர தார்ச் சாலையின் பாத பாதையில் நடந்து வருகிறார் கோவிந்தன். கூடவே காக்கி டவுசர் அணிந்து கொண்டு புத்தகப் பை தூக்கியவாறு ஒரு சிறுவன்.

கூத்து ஒரு கிராமியக் கலை. பொதுவாக பங்குனி, ஆடி மாதங்களில் திருவிழா போன்ற ஜனம் திரளும் இடங்களில் சபை கூட்டி, வாக்கிய முழக்கங்களோடு நடத்தப் பெறும் ஒரு பொழுது போக்கு நிகழ்த்துக் கலை. அதிலும் இது ஒரு இரவு நேரக் கலை. இங்கே முதல் காட்சியில், பரபரப்பான நகரச் சாலையில், அதுவும் பகலில் முழு ஒப்பனையோடு தனியனாக வருகிறான் கூத்துக் கலைஞன் ஒருவன். இந்த " முரண் " தான் அந்த உத்தி இங்கே. வழக்கங்களிலேயே வாழ்ந்து பழகிய நமக்கு முரண்கள் எப்போதும் ஆச்சரியம் அளிக்கின்றன நீங்கள் நன்கு அவதானித்தால் பல நல்ல கவிதைகள் ஏதேனும் ஒரு முரணில் தளம் கொண்டே கட்டமைக்கப் பட்டிருக்கும். இப்படியொரு ஆச்சரிய முரணோடு முதல் ஒரு நிமிடத்திற்குள்ளேயே கதைக்குள் நம்மை இழுத்துவிடுகிறார் இயக்குனர்.
பள்ளிக் குழந்தைகளுக்கு கர்ண மோட்சம் நடத்திக் காட்டுவதற்காக வரவழைக்கப் பட்டிருக்கிறான் கோவிந்தன். ஆனால் வகுப்பறைகளில் இருள் கவிந்து கிடக்கிறது. பள்ளியே வெறிச்சோடிப் போயிருக்கிறது. குழப்பம் மேலெழ ஆங்கே மர நிழலில் அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ப்யூன் ஒருவனிடம் விசாரிக்கிறான். பள்ளியின் பேட்ரன் இறந்து விட்டதாகவும் அதனால் பள்ளிக்கு அன்று விடுப்பு விடப்பட்டுள்ளதாகவும் அவன் கூறுகிறான். தான் கர்ண வேஷம் காட்ட வந்திருப்பதாகவும், இதற்காக அதிகாலையில் புறப்பட்டு, வழியிலேயே வேஷமிட்டு வந்திருப்பதாக தன் நிலைமையை ப்யூனிடம் கூறுகின்றான் கோவிந்தன்.

ப்யூனோ, எதுவாக இருந்தாலும் பிரின்சிபாலிடம் பேசிக் கொள்ளுமாறு கூறுகிறான். பிரின்சிபாலை தொடர்பு கொண்டு தன் நிலைமையை எடுத்துரைக்கிறான் கோவிந்தன். அவர் தன்னை வீட்டில் வந்து சந்திக்குமாறு சொல்கிறார். ஆனால், தற்போது தான் முட்டுக்காட்டில் இருப்பதாகவும், வீடு வர இரவு ஏழு மணியாகக் கூடும் என்று கூறுகிறார். வேறு வழியின்றி இருந்து பார்த்துவிட்டே செல்வதாகக் கூறி போனைத் துண்டிக்கிறான் கோவிந்தன். இதற்கிடையில் தனக்கு வாங்கித் தருவதாய்க் கூறிய கிரிக்கெட் பேட் கிடைக்காதோ என்று வருத்தம் கொள்கிறான் கோவிந்தனின் மகன். மேலும் ஒருபடி போய், சொன்ன சொல் காப்பாற்றாத நீயெல்லாம் என்ன ஓய் கர்ண மகாராசா என்று தன் அப்பனையே ஏசுகிறான் மகன்.

நேரமோ காலை பத்துதான் ஆகிறது. இரவு ஏழு மணி வரை நேரம் கடத்த வேண்டியதை எண்ணி ஆசுவாசம் கொள்கிறான் கோவிந்தன். அருகில் உள்ள டீக் கடையில் டீ அருந்தச் செல்கிறான். அங்கு வாய் பேசவியலாத சிறுமி ஒருத்தி திட்டு வாங்கிக் கொண்டே எடுபிடி வேலைகள் செய்கிறாள். அவளுக்கு கோவிந்தனின் கர்ண வேஷம் ஒருவித ஈர்ப்பை ஏற்படுத்துகிறது. கூடுதலாக ஒரு டம்பளர் தண்ணி கூட தர யோசிக்கும் நகரத்தின் நிலையைக் கண்டு வருந்தியவாறு அங்கிருந்து அகன்று அருகிலுள்ள டேங்கில் தண்ணீர் குடித்துவிட்டு அமர்கிறான்.
அந்த வாய் பேசவியலாத சிறுமி அவன் அருகில் வந்து அவனுக்கு உண்பதற்கு இட்லிகள் தருகிறாள். கொடுத்தே சிவந்த கரத்தானின் உருவத்திலிருந்து கொண்டு பிச்சை யுண்ணும் நிலை கண்டு வருந்துகிறான். இருப்பினும் பசி யாரை விட்டது? உண்கிறான். உணவிற்குப் பதிலாக அந்தச் சிறுமிக்கு கூத்துக் கலையை கற்றுக் கொடுக்க விழைகிறான். அந்த நேரத்தில் அந்த டீக்கடைக்காரர் வந்து இவனை அவமானப் படுத்திவிட்டு, அந்தச் சிறுமியை இழுத்துச் சென்று அடிக்கிறார்.

இறுதியாக புறப்பட்டுச் செல்லும் போது அந்தச் சிறுமி ஓடி வந்து ஒரு ரூபாயை இவன் கையில் திணித்து, குரு வணக்கம் செய்துவிட்டு ஓடுகிறாள். அந்த ஒற்றை ரூபாயில் அவனுக்கு மீண்டும் அந்த கர்ண வேஷத்தின் கம்பீரமும், நேர்கோட்டில் நிற்கும் முதுகும், அகண்டகால் நடையும் வந்து சேர்ந்து உற்சாகம் தொற்றிக் கொள்கிறது. வழியில் எதிர்ப்படும் சிறுவர்களிடத்தே தான் கர்ண மகாராஜா என்று பெருமை பேசிக்கொண்டு, தன் கிரீடத்தைக் கழட்டி அவர்கள் கையில் தந்துவிட்டு நடந்து செல்கிறான் கோவிந்தன். மீண்டும் அதே கர்ண மோட்சப் பாடலோடு முடிகிறது இக்குறும்படம்.

எந்த ஒரு செவ்வியல் படைப்பும் அது முடியுமிடத்தில் தான் உண்மையில் தொடங்குகிறது. இங்கும் அப்படித்தான். தனது கிரீடத்தையே சிறுவர்களிடத்தே தந்து போகிறான் கோவிந்தன். இது உண்மையில் கர்ணனின் எழுச்சியா? வீழ்ச்சியா? அந்தச் சிறுமியைப் போன்ற சிலரின் ஆதரவினால் தன் கலை பிழைத்துக் கொள்ளும் என்ற நம்பிக்கையா? பொதுவாக டி.வி போன்ற பொழுதுபோக்கு தொழில் நுட்பங்கள் சாத்தியமாகாத அந்தக் காலங்களில் கோவிந்தனைப் போன்ற ஒரு கூத்துக் கலைஞனுக்கு கிடைத்த மரியாதையும், பெருமையுமே வேறு. இன்று ஒரு நாள் சோற்றுக்கு அவர்கள் படும் பாடு? அதுவுமில்லாமல் தன் பாரம்பரிய கலை குறித்து சிறிதும் அக்கறையில்லாத கோவிந்தனின் மகன் போன்ற அடுத்த சந்ததி. இந்த நிலையில் இது போன்ற கலைகள் எப்படி செழிக்கும்? எடுத்துத் தாங்கிப் பிடிப்பதற்கு யார் இருக்கிறார்கள்? - இவை போன்ற கேள்விகளை பார்வையாளனிடத்தே விதைக்கின்றது இக்குறும்படம். அதிகமில்லை ஐயா ! அடுத்த முறை ஒரு ஊர்க்கொடையின் போதோ, பேருந்துப் பயணத்திலோ, ஒரு உணவகத்தின் கடைசி இருக்கையிலோ கோவிந்தனைப் போன்ற ஒரு கூத்துக் கலைஞனைப் பார்க்க நேரிடும் பொழுது உங்கள் மனதில் ஒரு சிறு மரியாதை தோன்றுமானால் அதுதான் இக்குறும்படத்தின் மகத்தான வெற்றி.

நகர வீதியில் நடமாடும் கிராமியக் கலைஞன் என்ற முதல் காட்சியிலிருந்து, ஈயென்று வந்தார்க்கு இல்லையெனாது உடன்பிறந்த கவச குண்டலம் முதல் செய்த தருமத்தின் பலன் வரை அத்தனையும் ஈந்த கர்ண வேஷத்தில் நின்று பிச்சை உண்கிறான். கிரிக்கெட்டின் மீதும், டி.வியின் மீதும் பித்து கொண்டிருக்கிறது கிராமியக் கலையின் அடுத்த தலைமுறை. தன் உயிரையும் கொடுப்பான் கர்ணன் என்று கர்ணனைப் பற்றி அந்தச் சிறுமியிடம் புகழ்ந்து கூறிக் கொண்டிருக்கும் போது தெருவில் கிடக்கும் பொம்மை செல்போனை எடுத்து விளையாடுகிறான் அந்தச் சிறுவன். பள்ளியின் பிரின்ஸ்பாலின் அலைபேசியில் "வால மீனுக்கும்" பாடல் ஒலிக்கிறது. பொதுவாக பெண்களே இடம் பெறாத ஒரு நிகழ்த்து கலையை ஒரு சிறுமிக்கு கற்றுக் கொடுக்கிறான் கோவிந்தன். இப்படி முரண்களாலேயே திரைக்கதையை பின்னியிருக்கிறார் இயக்குனர்.

படத்தின் ஆரம்பத்திலிருந்து இருக்கும் ஒரு வெறுமை, ஒளிபதிவின் ஒவ்வொரு ப்ரேமிலும் பிரதிபலிக்கிறது. குறிப்பாக இருள் நிரம்பியிருக்கும் வகுப்பறையில் கோவிந்தன் நுழைந்து வெளியேறும் காட்சி அற்புதம். பொதுவாக கூத்துக் கலையில் உபயோகப்படுத்தப்படும் வாத்தியங்களான முகவீணை, கஞ்சிரா, மிருதங்கம், ஹார்மோனியம், தாள வாத்தியம் போன்றவற்றினாலேயே அமைக்கப்பட்டிருக்கும் இசை குறும்படத்தை இரத்தம் பாய்ச்சி உயிர்ப்பிக்கின்றது. ஏற்கனவே குறிப்பிட்டது போல் முரண்கள், பார்வையாளனுக்கு பார்த்ததும் விளங்கும்படி தெளிவாக தொகுக்கப்பட்டிருக்கிறது.
படத்தின் பாதிப் பழுவை தன் தலையில் வைக்கப்பட்ட கிரீடமாய் சுமந்திருக்கிறார் கர்ண வேஷம் கட்டிவரும் அந்த நடிகர். அடர்த்தியான முக ஒப்பனைகளையும் மீறி உணர்ச்சிகளை திறம்பட வெளிக்காட்டியிருக்கிறார். நிகழ்ச்சி ரத்தானதும், விளையாடிக் கொண்டிருக்கும் தன் மகனிடம் வெளிப் படுத்தும் கோபம், டீக் கடைக்காரன் அந்தப் பெண்ணை அடிக்கும் போது ஏதும் செய்யவியலாத ஆற்றாமை, கர்ணன் குறித்து உரையாடுமிடத்தில் கரை புரண்டோடும் உற்சாகம் என்று ஒரு கிராமியக் கலைஞனாகவே வாழ்ந்திருக்கிறார். மிகப் பொருத்தமான பாத்திரத் தேர்வு. இந்த நடிப்பின் முதிர்ச்சி வேறு எந்தக் கதாப்பாத்திரத்திலும் வெளிப்படாதது ஒரு குறை. ஆனாலும் அதை அழகாக மறக்கச் செய்கின்றது திரைக்கதையும் வசனமும்.

" இப்ப எங்க கூத்து நடக்குது.. எல்லாத்தையும் டி.வி பெட்டி முழுங்கிடுச்சு " இந்த ஒரே ஒரு வசனத்தில் மொத்தக் கதையும் உள்ளடங்கி விடுகின்றது. ஓரிடத்தில் கோவிந்தனின் மகன் தன்னுடன் படித்த மாணவன் பெயரைக் கூறுமிடத்தில் "சி.கணேஷ்" என்று சொல்லும் இடத்தில் லயிக்கிறது வசனத்தின் துல்லியம். அதே போல போனில் பிரின்சிபால் ஆங்கிலத்தில் பேச முடிவில் வைக்கும் போது " டேங்க்ஸ் " என்று சொல்லி வைப்பது. இதில் படித்தவர்கள் முன்னே தனக்கும் நாலு வார்த்தை ஆங்கிலம் தெரியும் என்பதை வெளிக்காட்டிக் கொள்ள முற்படும் ஒரு எளிய கிராமத்தானின் உள்ளத் துணிபு அழகாக வெளிப்பட்டிருக்கும். அதே நேரத்தில் ஒரு டீக்கடையைக் காட்டும் போது வரும் " என்னப்பா டீ சுடுதண்ணி மாதிரி இருக்கு " போன்ற கிளிஷே வசனத்தைத் தவிர்த்திருக்கலாம். விவேக் போன்றவர்களின் காமெடியில் பார்த்தே அலுத்துவிட்டது.

கிராமியக் கலைஞனை நல்லவனாகக் காட்டுவதெல்லாம் சரி ஆனால் அதே நேரத்தில் சாப்பிட்டுக் கொண்டே அசட்டையாக பதில் சொல்லும் பள்ளிக்கூட ப்யூன், ஒரு டம்பளர் தண்ணீர் தர மறுக்கும், வாய் பேசவியலாத சிறுமியை கம்பால் அடிக்கும் டீ கடைக்காரன், பேட்ரன் இறந்த அன்று முட்டுக்காட்டிலிருக்கும் பிரின்சிபால் என்று நகரத்து மனிதர்களை மனிதாபிமானம் அற்றவர்களாகவே காட்டியிருப்பது ஏனோ? தன் பையனுடன் நகரத்திற்கு வருகிறான் கோவிந்தன். என்னதான் பசியாக இருந்தாலும், தனக்குக் கொடுக்கப்பட்ட உணவை கொஞ்சமாவது மகனுக்கு எடுத்து வைக்காமல் தான் மட்டும் உண்ணும் அந்தக் காட்சிதான் என்னை அதிகமாக உறுத்தியது. அதிகம் துருத்தித் தெரியாத இது போன்ற சிறு குறைகளைத் தவிர, இது ஒரு அற்புதமான குறும்படம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

பரசுராமரின் சாபம், குந்தியின் வரம், இந்திரனின் வன்மம், சல்லியனின் துரோகம், கிருஷ்ணனின் தந்திரம் என இத்தனையும் தேவைப்பட்டது அந்தக் கர்ணனை வீழ்த்த. இந்தக் கர்ணனுக்கு அவ்வளவெல்லாம் தேவையில்லை. விலையில்லா வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி ஒன்று போதும்.
* * *

இந்த குறும்படத்தைப் பார்க்க: http://www.youtube.com/watch?v=qrW7s0DcRMA