தமிழ் ஸ்டுடியோ ஆறாம் ஆண்டு தொடக்க விழா!!!

எவ்வித முன்னேற்பாடுகளுமின்றி, எளிமையாகவும், இணக்கமான நண்பர்களோடும், நல்ல சினிமாவை தமிழ்ச்சினிமாவிலும் கொண்டுவந்துவிட முடியும் என்று நம்பிக்கையோடு போராடி வருகின்ற இயக்குனர்களின் தலைமையிலும் தமிழ் ஸ்டூடியோ தன் பிறந்த நாளைக் கொண்டாடியது.

தமிழ் ஸ்டூடியோவின் நிகழ்ச்சிகளில் தன் இருப்பினை உணர்த்தி வருகின்ற சினிமா ரசனை மிக்கவரான அம்ஷன் குமார் முதலில் பேசும்பொழுது, இவ்வமைப்பின் செயல்கள் ஒவ்வொன்றையும் பட்டியலிட்டு, நடைமுறை வாழ்வில் அதன் அத்தியாவசியங்களைக் குறித்தும் பேசினார்.
திரைப்படங்களுக்கான இயக்கங்களும், அமைப்புகளும் எண்ணிக்கையில் அதிகமாக உள்ளன. ஆனால் குறும்படங்களுக்காவும் ஒரு இயக்கத்தை நடத்திவருவது தமிழ் ஸ்டூடியோ மட்டும்தான். சினிமாவில் இயக்குனராக வரவேண்டுமென்ற ஆசையில் வருகின்ற இளைஞர்களுக்காக, படிமை என்றோர் பிரிவும் தமிழ்ஸ்டூடியோவில் உள்ளது. இதில் கவிதை, கதை, ஓவியம், கூத்து என்று தனித்தனியாக அவர்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர். சினிமாவில் இயக்குனர்களாக வருவதற்கு முன்னர், சினிமாவை முழுமையாக கற்றுக்கொண்டுதான் வரவேண்டும் என்பதனை அடித்தளமாக வைத்துள்ளனர்.

அருண் எவரையும் விமர்சிக்க தயங்குவதில்லை. இங்கு நிலவிவருகின்ற சூழலில் எந்தவொரு படத்தையும் விமர்சிப்பவர்கள், சம்பந்தப்பட்டவர்களால் எதிரிகளாக பாவிக்கப்படுகின்றனர். ஆனால், அப்படியான சிக்கல்கள் எதுவும் இவர்களுக்கு அதிகமாகயில்லை. காரணம், இவ்வமைப்பினது கருத்து முரணோடு இருப்பவர்களும் இவர்கள் நடத்திவருகின்ற அடுத்தடுத்த நிகழ்ச்சிகளுக்கு வந்துகொண்டுதான் இருக்கின்றனர். உதாரணமாக உச்சபட்ச ரசனையோடு தமிழ்ஸ்டூடியோ நடத்திவருகின்ற பெளர்ணமி இரவினைக் குறிப்பிடலாம். நிலா வெளிச்சத்தில் உலக சினிமாவினைப் பார்க்கும் வாய்ப்பினை எத்தனை பேர் அனுபவித்திருக்கின்றார்கள்.

தமிழ்ஸ்டூடியோவின் நிகழ்ச்சிகளெல்லாமே தகுந்த திறனோடு செய்துகாட்டப்படுகின்றன. இந்நிகழ்ச்சிகளை ஊக்கமாக வைத்துக்கொண்டு பல இளைஞர்கள் கலைத்துறையில் நல்ல சினிமாக்களை எடுக்க முன்வருவார்கள் என்று நம்பலாம். ஆனால், படமும், நடிகர்களும், கேமிராவும் நம் கைகளிலிருந்தாலும், விநியோகிக்கும் உரிமையும், திறமையும் நம்மிடமில்லை. கூடிய விரைவில், திரையரங்குகளை தேர்ந்தெடுத்து, படங்களை எவர் தலையீடும் இல்லாமல் படைப்பாளிகளே வெளியிடும் உரிமையும் நம் கைகளில் வரவேண்டும், அதற்கான செயல்பாடுகள் இன்றோ, நாளையோ நடந்துவிட வேண்டும் என்று நினைக்காமல், தொடர்ந்து போராடினால் ஒரு நாளில் இது சாத்தியம் என்று நம்புவோம்.

இயக்குனர் ராம்:

அண்மைக்காலமாகத்தான் நான் முகநூலில் இருந்துவருகின்றேன், அருணுடன் அதிகமான பரிட்சயம் ஏற்பட்டது இந்த அண்மைக்காலங்களில்தான். இவருடன் பழக்கமில்லாத காலங்களில் சினிமாவிலிருந்த என் நண்பர்களெல்லாமே, அருணை கெட்டவர், திமிர் பிடித்தவர் என்றுதான் சொல்லி வந்தனர். அப்பொழுதே நான் ஒரு முடிவிற்கு வந்துவிட்டேன். ஏனெனில் எல்லோரும் ஒருவரை குறிவைத்து கெட்டவர் என்று சொன்னார்களென்றால் அவர் நல்லவராகத்தான் இருக்கமுடியும் என்று உறுதியானேன். அருண் காதல் திருமணம்தான் செய்திருக்கின்றார், என்று கேள்விப்பட்டவும் இந்த முடிவு இன்னும் ஊர்ஜிதமாகியது.
ஆறுவருடமாக ஒரு நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்துவதென்பது ஒரு பெண்ணை காதலிப்பதை விட சவாலான விஷயம். இத்தோடு நின்றுவிடாமல் ”பேசாமொழி”, என்றோர் இணைய இதழையும் செயல்படுத்திக்காண்பிக்கின்றார். எக்காலத்திலும் புத்தகங்களுக்கும், சினிமாவிற்கும் நிறைய சம்பந்தம் உண்டு.

என்னுடைய இளமைப்பருவமானது வைதேகி பொறந்தாச்சு, இதயம் போன்ற படங்கள் வெளியான காலகட்டம் என்பதனால் நாங்களும் கல்லூரி படிக்கின்றபொழுது ஆளுக்கொரு ரோஜாவோடு வலம் வந்துகொண்டிருப்போம். காதலில் ’மெளன ராகங்கள்’, சந்திரமெளலிதான் எங்களது இலக்கு. பல கஷ்டங்களிலும் உலன்றுகொண்டிருக்கின்ற மனிதர்களை நேரடியாக ஈர்ப்பது சினிமாதான்.

சினிமா மிகப்பெரிய சூதாட்டம், இதனை முதலில் உணர்ந்துகொள்ள வேண்டும். சினிமாவில் ஜெயிப்பவனாக வரலாம், வராமலும் போகலாம். சினிமாவில் வருகின்றவர்களுக்கு இன்னொரு ஆதர்சனம் நிறைய பேரைச் சந்திக்கலாம் என்ற மோகம்தான்.

நாங்கள் சினிமாவிற்குள் நுழைகின்ற காலகட்டத்தில் கல்லூரிப்படிப்பை முடித்தவர்களை உதவியாளராக சேர்த்துக்கொள்ளவே மாட்டார்கள், மதிக்கவும் மாட்டார்கள். ’சந்தித்தவேளை’, படத்தில் வேலை செய்துகொண்டிருக்கின்ற சமயத்திலெல்லாம் பொழுது போகாமலிருக்கின்ற சமயத்தில் படிக்கலாமென்று புத்தகம் கொண்டு சென்றால் அப்பழக்கம் மற்றவர்களுக்கு பிடிக்காது, சில இயக்குனர்கள் முகம்கொடுத்து பேசமாட்டார்கள். ஆனால் இப்படியான எவ்வித கட்டுப்பாடுகளுமில்லாமல் ஹிந்தி சினிமாக்கள் இருந்தன. ஆனால், இன்னொரு பிரச்சனையாக அங்கு வட இந்தியன், தென்னிந்தியன் என்று தரம்பிரிப்பார்கள்.

படங்களில் நாம் கற்றுக்கொள்கின்ற தொழில்நுட்ப விஷயங்களெல்லாமே, கதைக்கும், திரைக்கதைக்கும் அடுத்த அணியில் நிற்பவைகள்தான். ஒரு சிறுகதை எழுதுவதுபோல்தான் சினிமா. கேமிராவின் முன்பாக நிகழும் சாத்தியங்களைக்காட்டிலும், கேமிராவின் பின்பாக நிகழக்கூடிய உழைப்புதான் ஒரு படத்தினுடைய வெற்றிக்கு காரணம்.

ஒரு கேமிராவும், படத்தொகுப்பு மென்பொருளும் மட்டும் ஒரு படத்தினை எடுத்துவிடாது. இந்த தொழில்நுட்பங்களெல்லாம் 24 லிருந்து 48 மணிநேரங்களில் கற்றுக்கொள்ளக்கூடிய விஷயங்கள்தான். பாலுமகேந்திரா குறிப்பிடுவது போல காமசூத்ரா புத்தகத்தை படிப்பது வேறு, படுக்கையில் இருப்பது என்பதுவேறு.

இயக்குனரென்பவருக்கு முக்கியமான விஷயம், அனைத்து தொழில்நுட்பங்களையும் கற்றுக்கொள்வது மட்டுமல்லாமல், மற்றவர்களின் வாழ்க்கையை கவனிக்க வேண்டும், கதைகள் மனிதர்களிடமிருந்து உருவாக வேண்டும். உங்களை நிஜவாழ்க்கையில் பாதித்த விஷயங்களெல்லாமே படமெடுக்க தகுதியான கதைகள்தான். என்னோடு சினிமாவிற்கு வந்தவர்களில் நிறைய பேர் இதுவரையிலும் படமெடுத்ததாக தெரியவில்லை. இப்பொழுதைய நவீன அறிவியல் காலத்தில், பிறக்கின்ற குழந்தைகளுக்கு கூட காட்சியமைப்புகள் இயல்பாக மூளையில் பதிவாகின்றது.

அன்றன்று படம்பிடிக்கின்ற காட்சிகளை அன்றன்றைக்கே படத்தொகுப்பு செய்து பார்த்துக்கொள்ளுதல் வரையில் படமெடுப்பதை எளிதாக்குகின்ற கருவிகள் வந்துள்ளன. இந்தக் கருவிகள் எல்லாமே இயக்குனருக்கான நண்பர்கள்தான், எனினும் இதனாலெல்லாம் இயக்குனருக்கான பொறுப்புகள் அதிகரிக்கின்றன என்பதனையும் மறுக்கமுடியாது, அல்லது கூடாது.

இப்பொழுதெல்லாம் சினிமா எடுப்பதென்பது பெரிய அதிசயமெல்லாம் இல்லை, இதுவும் மற்ற வேலைகளைப்போல சாதாரணமான செயல்தான். நாவலில் யாரும் லாஜிக் பார்ப்பதில்லை. ஆனால் சினிமாவில் மட்டும் முதல்பாதி சரியாகயில்லை, பின்பாதி நன்றாகயிருக்கின்றது, என்று சொல்லத்தயாராகயிருக்கின்றனர். ஏனெனில் நாவலை விமர்சிக்க அடிப்படையாக சில தகவல்கள் இருக்கவேண்டும். சினிமாவை பொழுதுபோக்காகவே நம் ஆட்கள் வைத்திருப்பதால் எவரும் விமர்சிக்கத்தக்கதாக உள்ளது. முகநூலில் இது கணக்கிலடங்காமல் பெருகிவருகின்றது.

நல்ல விமர்சகர்கள் இருந்தால்தான் நல்ல படங்கள் வெளிவரும் என்பதனை ஒத்துக்கொள்ளலாம், ஆனால், விமர்சனம் என்கின்ற பெயரில் நிகழ்த்துகின்ற தனிநபர் தாக்குதலை எப்படி கண்டுகொள்ளாமல் விடுவது. செல்வராகவன் எடுத்த “இரண்டாம் உலகம்” படம் நன்றாக ஓடவில்லை என்றால், அப்படத்தை விமர்சிக்கலாம், ஆனால் அவ்வியக்குனரை ஒரு பைத்தியக்காரன் என்று சொல்வதை எவ்வகையான விமர்சனத்தில் சேர்த்துக்கொள்வது?. நம் தமிழ்சினிமாவில் ஒரு ஃபேண்டஸி படம் பண்ணுவதற்கு வாய்ப்பேயில்லை, ஆனால், செல்வராகவன் அதனை முயன்றிருக்கின்றார், இதற்காகவே அவரை பாராட்டலாம்.

தமிழ்ச்சினிமாவிற்கான மொழி வரவர அலுத்துப்போகக்கூடியதாக இருக்கின்றது, இச்சமயங்களில் நாவலிலிருந்து கதைகள் எடுக்கப்படலாம். ஆனால் நாவலும், சினிமாவும் எதிரெதிர் துருவங்களாகயிருந்தாலும், இரண்டிற்கும் சம்பந்தம் உண்டு.

இலக்கியத்தில் குறிப்பிடுகின்ற விஷயங்கள் எல்லாவற்றையும் நீங்கள் சினிமாவாக காட்டமுடியாது. நாவலில் ”அடி மனது குளிர்ந்தது”, என்ற ஓர் வார்த்தை இடம்பெறுகிறதென்றால் அதனை நீங்கள் எப்படி படமாக எடுப்பீர்கள்?. இதற்குத்தான் கேமிராவிற்கு பின்பான மெனக்கெடல்கள் அவசியமாக தேவைப்படுகின்றது.

ஒரு இயக்குனராக இருக்கின்றவன் திரையரங்கத்தின் ஒலியமைப்பைக்கூட கவனிக்க வேண்டும். ஒவ்வொரு திரையரங்கமும் ஒவ்வொரு பாணியிலான ஒலியளவைக் கொண்டிருக்கின்றன. நீங்கள் சத்யம் தியேட்டரில் படம் பார்ப்பவனுக்கும், ஊருக்கு வெளிப்புறமாக இருக்கின்ற தியேட்டரில் படம்பார்க்கின்ற பார்க்கின்ற பார்வையாளனுக்கும் சேர்த்துதான் படமெடுக்கின்றீர்கள், ஆனால் ஒலியமைப்பினால் அவர்களுக்கு கிடைக்கின்ற அனுபவங்கள் வேறுவேறானதாக இருக்கின்றன.

முதலில் மல்டிபிளக்ஸ் காலத்தில் தியேட்டர்களெல்லாமே நம் கையை விட்டு போய்விட்டது. மல்டிபிளக்ஸ் தியேட்டர்களின் உதவியினால் அதிகமாக பிரிண்டிற்கு ஆகின்ற செலவு மிச்சப்படுகின்றது என்பது உண்மையாக இருந்தாலும், அதற்கும் சேர்த்து படத்தை மக்களுக்கு தெரியப்படுத்த விளம்பரம் செய்ய வேண்டியதாயுள்ளது. நம் படத்தை எந்தக் காட்சியில் திரையிட வேண்டுமென்பதற்கு கூட அவர்களிடம் சண்டையிட வேண்டியதாக இருக்கின்றது.

இந்நிலைமையில் ஒருவன் 75லட்சத்தில் படம் எடுக்க வேண்டும், அல்லது 25 கோடியில் படம் எடுக்க வேண்டும், அப்போதுதான் அப்படம் நஷ்டக்கணக்கு காட்டாமல் வெளிவரும். ஆனால், இவ்விரண்டு நிலைகளுக்கிடையில் படம் பண்ணுகின்றவர்களின் பாடுதான் பரிதாபகரமானதாகயிருக்கின்றது. இவர்களால் 10 கோடியில் விளம்பரம் செய்யவும் முடியாது, விளம்பரம் செய்யாமலும் இருக்க முடியாது. தொடர்ந்து வருகின்ற ஆரோக்கியமான மாற்றங்களால்தான் இந்நிலைமையை மாற்றமுடியும்,

அம்ஷன் குமார் குறிப்பிட்டது போல விமர்சனம் செய்பவன் தான் அதிகமாக தாக்குதலுக்கு உள்ளாகின்றான். தான் நினைக்கின்ற கருத்துக்களை தைரியமாக பொதுவெளியில் பேசமுடிவதில்லை. விமர்சனம் செய்வதே தகாத செயலாக மாற்றப்பட்டிருக்கின்றது. ஆனால், நான் படத்தின் மீதான பார்வையை மட்டுமே பதிவு செய்வதை என்றுமே ஆதரிக்கின்றேன். இதேபோல்தான் பிரெஞ்சிலும், ஜெர்மனியிலும் வெளியாகின்ற படங்களை விமர்சிப்பதற்காக ஒரு கூட்டம் செயல்பட்டுவந்தது. அவர்களும் இவ்வாறான ஏச்சுக்களுக்கும் பேச்சுக்களும் ஆளாகினார்கள். ஒரு கட்டத்தில் இவர்களே நியூ வேவ்ஸ் (புதிய அலை), மற்றும் நியோ ரியலிசம் என்ற அமைப்பிலிருந்து வரிசையாக அவர்கள் விரும்பிய படங்களை அவர்களே எடுத்துக் குவித்தனர். இன்றுவரையிலும் நீங்கள் உலகப்படங்கள் என்று வாயைப்பிளந்து பார்க்கின்ற படங்களுக்கான ஆதாரம் இவ்வமைப்புகளிலிருந்து உருவானவைகள்தான். இதேபோன்றதொரு தருணத்தினை தமிழ்ஸ்டூடியோவும் ஒரு நாள் அடையும் என்று தமிழ் ஸ்டூடியோ அருண் தெரிவித்ததோடு வந்திருந்து சிறப்பித்த திரு.அம்ஷன் குமாருக்கும், இயக்குனர் ராமிற்கும் நன்றிகளை உரித்தாக்கிக்கொண்டார்.